December 21, 2006

முகவரியைத் தொலைத்தவர்கள்

படித்ததில் பிடித்தது.

முகவரியைத் தொலைத்தவர்கள்
--அப்துல் ரகுமான்


மனிதனின் உண்மையான முகவரி எது?
பெயரில் அவன் இருக்கிறானா? இல்லை.
பெயரென்பது வெறும் சப்த அடையாளம்.
இடுகுறி.
எந்த மனிதனும் அவன் பெயருக்குள் இல்லை.
இந்த உலகம் கதவு எண்ணை முகவரியாகச்
சொல்லுகிறது.
மனிதன் கதவு எண்ணிலா இருக்கிறான்?
இல்லை.
கதவு எண் மனிதனின் முகவரி அல்ல.
இந்த உலகம் வசிக்கும் வீட்டை முகவரியாக சொல்கிறது.
வீடு மனிதனின் முகவர் அல்ல.வீடு
உடலுக்கு ஒரு சத்திரம்.அவ்வளவுதான்.
சிலர் முகவர்ச் சீட்டில் தங்கள் தொழிலைக்
குறிப்பிடுகிறார்கள்.
மனிதன் அவன் பார்க்கும் தொழிலிலா
இருக்கிறான்? இல்லை.
தொழில் என்பது வயிற்றுத் தீயைத்
தணிப்பதற்கான தண்ணீர், அவ்வளவுதான்.
தெருவோ, ஊரோ, நாமோ ஏன் உலகமோ
கூட மனிதனின் முகவரி இல்லை.
இவை மனிதனின் முகவரி என்றால் சில
நேரங்களில் அவன் இவற்றையெல்லாம்
விட்டு விட்டு வெளியேற நினைக்கிறானே ஏன்?
மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்
இருக்கிறது.
வாழ்க்கை என்பது இந்த முகவரியைத்
தேடும் முயற்சிதான்.
ஆனால், வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்
மனிதன் தன் முகவரியைத் தொலைத்துவிடுகிறான்.
மனிதனுடைய துயரம் இதுதான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முகவரியையே
தேடி அலைய வேண்டியிருக்கிறது.
கவிஞர் ராஹி கூறுகிறார்:-
ராஹிக்கு என்ன ஆகிவிட்டது.
நண்பர்களே?
தயவு செய்து சொல்லுங்கள்
அவன் தன் தெருவிலேயே
தன் முகவரியை
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.

December 20, 2006

அட அவரா நீலமணி

அது ஒரு தீபாவளி நாளின் காலைப் பொழுது. தெருவெங்கும் சரவெடிகளின் சிகப்பு வெள்ளைக் காகிதங்களின் குப்பை.குளிர் காற்றில் வெடி மருந்துகளின் நெடி. வீட்டில் சாமி கும்பிடும் நல்ல நேரம் அது ஆகையால் தெருவில் நடமாட்டமும் வெடிச்சத்தமும் குறைந்தே இருந்தது.

காலனியின் நடுவில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் எப்போதும் சத்தமிட்டு கொண்டிருக்கும் இளைஞர் கூட்டமும் கூட அன்று பண்டிகையில் மூழ்கி இருந்தார்கள். மதியத்துக்கு மேல் வருவார்களாக இருக்கும்.
பால் பூத் மாரியப்பன் மட்டும் நீல டப்பாக்களை அடுக்கும் வேலையில் இருந்தான்.

முக்குவீட்டில் மட்டும் காலையில் ஊரிலிருந்து வந்திருந்த கதிருடைய காரில் சின்னக் குழந்தைகள் ஏறி பஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்பொது தான் அவன் சத்தமிட்டு கொண்டே ஓடி வந்தான். அவன் சட்டையெல்லாம் ரத்தம். இடது கையால் வலது தோள்பட்டையை பிடித்தவண்ணம் ஓடிவந்தான்.
அங்கே தான் காயம் பட்டிருக்க வேண்டும்.

பின்னால் ஒருவன் பெரிய அறுவாள் சுழட்டிய வண்ணம் "நில்லுடா" என்று கத்தியவாறு துரத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தான். குழந்தைகளில் பெரியவள் அதை பார்த்ததும் பயந்து " வாங்க எல்லாரும் வீட்டுக்குள்ள போயிடுவோம் " சொல்லிக் கொண்டே ஓடினாள்.

வீட்டில் பெரியவங்க எல்லாம்" என்ன என்ன" என்று எட்டி பார்த்து கொஞ்சம் புரிந்ததும் கதவை வெகுவேகமாக அடைத்து, "பிள்ளைங்களா என்ன பார்க்கறீங்க போங்க" என்று விரட்டி விட்டார்கள்.சன்னலை எல்லாம் கூட மூடிவிடுவது தான் நல்லது என்று வீட்டு பெண்கள் சொல்ல அதுவும் மூடப்பட்டது . கொஞ்சம் திறந்து நடப்பதை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

மாரியப்பன் எங்கே போனான் எப்படி தெரியவில்லை பயந்து ஒளிந்து கொண்டிருப்பான் போலும்.
மற்ற வீட்டினரும் இதை தான் செய்து விட்டிருந்தனர்.
அவனோ நேராக முக்கு வீட்டிற்கு தான் வந்தான்.அங்கே தானே குழந்தைகள் வாசல் கேட்டை பூட்டாமல் பயத்தில் ஓடிவந்திருந்தார்கள். வந்தவன் வாசல் கதவுகளையும் சன்னலையும் தட்டி "காப்பத்துங்க காப்பத்துங்க" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். "முடியாதப்பா போய்டு இங்கருந்து" உள்ளிருந்து ஒரு குரல்.சில நொடிகளில் அவன் தன் நிலை உணர்ந்து மீண்டும் ஓடத்துவங்கினான்.

சிறிது நேரத்தில் அத்தனை வீட்டிலிருந்தும் ஓரிருவர் வெளியே வந்து நடந்தது என்ன என்று கூடி பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்." பாவம்பா அந்த ஆள்", யாரோ .
"நான் உள்ளே இருந்தேன் இல்லைன்னா" இது இன்னொருத்தர். "சரி சரி பார்த்தேன் வச்சேன்னு சொல்லாதீங்க வெளியே அப்புறம் யார் மாட்டிகிட்டு கேஸு கோர்டுன்னு அலையறது" இப்படியே கலைந்தனர்.

பின் வழக்கம் போல் எல்லாரும் வெடி வெடித்து புத்தாடை உடுத்தி அக்கம் பக்கத்தில் பட்சணம் பரிமாறிக்கொண்டு ..
என்ன ஒரு வித்தியாசம் , அன்று எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை அவனை பற்றி பேசிக் கொண்டார்கள்.

காலையில் பேப்பரில் என்ன வந்திருக்கும் யார் அவன் எல்லாரும் ஆவலாய் காத்திருந்தனர். "முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் இதோ மூன்றாம் பக்கம் போட்டிருக்கானே . கோவையில் நேற்று காலை சமூக சேவகர் வெட்டிக் கொலை"

"என்ன அவர் ஒரு சமூக சேவகரா?? என்ன போட்டிருக்கான் படிங்க சத்தமாய்" . " நீலமணி என்னும் அவர் அப்பகுதியில் நடக்கும் சாராயக்கடையின் மூடுவிழாவுக்கு காரணமாக இருந்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்" . "அட இவரா நீலமணி!!.. நம்ம பகுதி சாராயக்கடையை மூடச் சொல்லி மனு குடுத்து ஒன்னும் நடக்கலையேன்னு கவலைப்பட்டு கொண்டு இருந்தோமே நமக்காக கஷ்டப்பட்டவர காப்பத்தாம விட்டுட்டோமே .

என்னங்க பண்றது அவர் நேரம் அப்படி. நீலமணியை எளிதாக மறந்துவிடலாம். இனி என்ன ? இரவுகளில் பெண்கள் தனியாக வரலாம். அடிதடி கலவரம் இல்லை ,பயமில்லை .இனி அடுத்த பிரச்சினை வரும் வரை நீலமணி போன்றோர் நியாபகம் வருவதற்கு இல்லை.

December 19, 2006

பிறைநிலா எனும் காதலி

காதலனை ,
கண்டால் பரவசமும்,
பிரிந்தால் சோகமும்,
காதலில் இயல்பு.




மேகம் விலகியபின்
பிரகாசமாய்,
நாணத்தில் தலைகுனிந்து,
பௌர்ணமி வரை பூரிப்பாய்,





மேகத்தில் முகம்மறைத்து
சோகமாய்,
தலை கவிழ்ந்து,
அமாவாசை வரை மெலிவாய்,

நிலவும் நேசத்தில் சிக்கியுள்ளதோ?
நிலவின் நேசம் யாரிடத்தில்
உங்களுக்கு தெரியுமா?

December 18, 2006

பெண்களே அதிகம் சிறுநீரகம் தானம் செய்கிறார்கள்

இன்று நாட்பத்திரிக்கையை திறந்ததுமே, முதல் செய்தி, அதிகபட்சமாக சிறுநீரகம் தானம் அளிப்பவர்களாக பெண்கள் . 90%கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மனைவி தருபவர்.

ஹர்ஷ் என்னும் மருத்துவர் சொல்கிறார்,அவருடைய வேலைக்காலத்தில் இதுவரை மொத்தம் ஆறே ஆறு கணவர்கள் தான் மனைவிக்கு சிறுநீரகம் தந்திருக்கிறார்களாம். பொதுவாக பெண்கள் அறுவைசிகிச்சைக்கு பதிலாக டயாலிசிஸ் முறையை தேர்ந்தெடுக்கிறார்களாம்.

2 அல்லது 3 லட்சங்கள் ஒருமுறை செலவழிப்பதை காட்டிலும் மாதம் 10,000 அல்லது20,000 டயாலிசிஸ் கு
செலவழிப்பது அதிகம் தான்..ஆனால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பெண்களுக்கு சிறுநீரகம் கிடைப்பது இல்லை.

கணவன் கொடுக்க தயாராக இருந்தால் அவர்களின் குடும்பம் அதனை எதிர்க்கும்.மற்றும் உழைப்பவன் அவன் ஒருவனே என்பதால் சாத்தியக் கூறு மிகவும் குறைவு.

50% அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்தப்படும் பெண்நோயாளிகள் மீண்டும் மருத்துவரிடம் வராமலே போய்விடுகின்றனராம். கல்யாணமாகாத பெண் நோயாளிகள் வரும்போது கேட்கப்படும் மிக முக்கியக் கேள்வி "என் பெண்ணுக்கு திருமணம் நடக்குமா?" என்பதாகும். ஆனால் கல்யாணமாகாத ஆண்கள் வரும் போது இத்தகைய கேள்விகள் எழுவதே இல்லையாம்.

படித்ததும் நினைவு வந்தது ஒரு கதை.
அறிஞர் அண்ணா பொற்பதக்க முதல்பரிசு பெற்ற கதை.
விலை அதன் தலைப்பு.கணவன் உயிருக்கு ஆபத்து சிறுநீரகம் தேவை.மனைவிக்கும் அதே ஏபி நெகடிவ்.கணவனும் மாமியாரும் உயிரையும் தருவதாக சொன்னதெல்லாம் பொய் என சந்தேகம் கொள்ளும் போது அவள் சொல்கிறாள். என் தந்தை நீங்கள் கேட்ட வரதட்சணைக்காக தலையை அடமானம் வைப்பதற்கு பதில் நான் என் சிறுநீரகத்தை விற்று விட்டேன். அதுதான் உங்கள் கையில் வைரமோதிரமாக செயினாக இருக்கிறது.

இப்பொது கூட என்னுடைய சிறுநீரகம் தருவதாக தான்
மருத்துவரிடம் கூறினேன். அவர் மறுத்துவிட்டார்.இருவரில்
ஒருவர் தான் உயிர் வாழலாம் என்கிற நிலைவந்தால், அது நீங்களாக இருக்கட்டும் .எடுத்துக் கொள்ளுங்கள் .

December 17, 2006

காதலுக்கு பலியான தோழிகள்

கல்லூரியில் இதுதான் என் வட்டம் என்று இல்லாமல் எல்லாரையும் என்னுயிர் தோழியராய் பார்த்தவள் நான். யாரிடமும் உன் வட்டத்தில் எத்தனை பேர் என்றால் எல்லாருடைய வட்டத்திலும் என் பெயரிருக்கும். நாங்கள் கல்லூரி முடித்ததும் வருடத்திற்கு ஒருமுறை எல்லாரும் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் சில தோழிகள் இன்று நம்முடன் இல்லை என்பது மீண்டும் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

பருவத்தில் காதல் வரும். ஆனால் அது வாழ்க்கையை புரட்டி போடும் என்று சிலருக்கு தெரியாது. அவள் அதிர்ந்து பேசி யாரும் பார்த்தது இல்லை. கல்லூரியின் கடைசி நாள். யாரிடமும் சொல்லாமல் அவள் கிளம்பிய போது ஏதோ பிரியும் சங்கடம் என்று நினைத்தோம். ஆனால் அவள் அன்றே தன் காதலனை திருமணம் முடிக்க எண்ணி இருந்திருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. காதலுக்கு துணை போகும் எவரும் கல்யாணத்துக்கு தைரியம் தரமாட்டார்கள் என்று எண்ணி இருப்பாள். உண்மை தான் ..யாரும் துணை போயிருக்கமாட்டோம். சம்மதத்திற்கு காத்திருக்க சொல்லி இருப்போம், என்று அவளறிவாள்.


கல்யாணத்திற்கு பின் காதல், முன்பிருப்பது போல் நல்லவற்றை மட்டும் காட்டுவதில்லை. குடிபழக்கம் உடையவனாக இருந்திருக்கிறான். தன்னையே கதி என்று வந்தவள் சொல்வதை ஏன் கேட்க போகிறான் அவன். இவளும் தான் தற்கொலை செய்து கொள்வதாய் பலமுறை மிரட்டி இருக்கிறாள்.. பலனேதும் இல்லாத போது மனம் உடைந்து ஒரு நாள் தன் மீதே எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவள் எரிய, காப்பற்ற முயற்சித்த அவன் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டான்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் காத்திருந்து தன் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமோ அப்போதெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்தாள்.

தானே முடிவெடுத்து செய்து கொண்டோமே யாரிடம் சொல்லி தேற்றிக்கொள்வது என்று தன்னையே நொந்து கொண்டு போய்விட்டாள்.

காதலில் வெற்றி, கல்யாணத்தில் முடிந்தது.ஆனால் வாழ்க்கையில் தோல்வி.
யாராவது ஒரு பக்கத்து மனிதர்கள் துணையாவது இருந்தால் அவளுக்கு இப்படி நேர்ந்திருக்குமா?

காதலென்னும் வெறும் வார்த்தையினால் வாழ்க்கையிழந்தவரும் இருக்கிறார்கள். நட்புக்கும் காதலுக்கும் வேற்றுமை அறியாத பெற்றோரின் கேள்விக்கணைக்கு வெட்கப்பட்டு
வாழ்வதையே விரும்பாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் இன்னும் இருவர்..


பள்ளியிலோ கல்லூரியிலோ ஆண்களுடன் படிக்க விடுவதாலேயே நட்புடன் பழகுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்க முடிவதில்லை. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க பயந்தோ, இனி எப்படி இவர்கள் முகத்தில் விழிப்பது என்று வெட்கப்பட்டோ தன்னையே மாய்த்துக்கொண்டார்கள். மென்மையான குணம்கொண்ட அவர்கள் எப்படி இப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்தார்கள் என்று இன்றும் எனக்கு புரியவில்லை.

காதலை தவறு என்றும், அது அவர்கள் பெற்றோருக்கு செய்த துரோகமென்றும் சமூகம் நினைக்கும் வரை இவர்களைப் போல் இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்கவேண்டும் நாம்?

December 15, 2006

கோவர்த்தன கிரிவலம் [2]


கிரிராஜ்மகாராஜ் கோயில் .இது மானஸிகங்கா என்னும் குளத்தின் கரையில் இருக்கிறது.அங்கே குளிப்பதை மிகவும் புனிதமாக கருதுவதால் ,சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரினை ஒரு குழாய் மூலம் செலுத்துகிறார்கள்.அதன் பக்கங்களில் உள்ள பல துளைகள் மூலம் பலரும் குளிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பாறையின் பகுதியே கிருஷ்ணனாக வணங்கப்படுக்கிறார்.நாமே பால் அபிஷேகம் செய்யலாம்.




அடுத்ததாக கிரிராஜ் கோயில் என்னும் மற்றொரு கோயில் கோவர்த்தனத்தின் பேருந்து நிலைய வரிசையில் இருக்கிறது..அதன் முகப்பே கிருஷ்ணன் மலையை ஏந்தி நிற்கும் காட்சியுடன் இருக்கிறது.அங்கே தினமும் பல வகையான உணவு பண்டங்களை மலை போல வைத்து நிவேதனம் செய்கிறார்கள்.

கிரிவலம் வரும் வழியெங்கிலும் கோயில்களும் குளங்களும் தான்.

ராதாராணியின் பாதத்தடம்.

மக்கள் பொதுவாக

எல்லா நாட்களும்வலம் வருகிறார்கள்.முழுநிலவு அன்று அதிக எண்ணிக்கையில் வருகிறார்களாம்.

ஒரு கல்லை கூப்பியகைகளில் வைத்துகொண்டு சாலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அந்த கல்லை அடையாளமாக வைத்து கொள்கிறார்கள்.பின் அந்த இடத்திலிருந்து மீண்டும் விழுகிறார்கள்.இப்படி சுற்று வரமட்டும் மாதக்கணக்காகும்.
சாதாரணமாக கிரிவலம் 23 கிமீ.சுற்றிவர5 லிருந்து 6 மணிகள் ஆகும்.மீண்டும் ராதாகுளத்தினருகில் முடிக்கவேண்டும்.
மிகவும் சிறிய கிராமம் தங்கும் வசதியோ மற்றும் உணவு என்று பார்த்தால் கிடைப்பது அரிது.வெளி மாநிலத்து பயணிகள் பொதுவாக பிருந்தாவனத்தில் தங்கி அங்கிருந்துதான் கோவர்த்தன், வர்சானா போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

December 14, 2006

கோவர்த்தன கிரிவலம் [1]

குடையாக பிடித்த கோவர்த்தன மலையை பார்க்கவேண்டும் என்று வெகுநாட்களாகவே ஆசையாக இருந்தது.உறவினர் ஒருவர் முழுநிலவு நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது போல் இங்கும் கோவர்த்தன கிரிவலம் வருவதை அறிந்து மேலும் ஆர்வம் மிகுந்தது.





கோவர்த்தனம் தில்லியிலிருந்து ஆக்ரா போகும் வழியில் பிருந்தாவனம் செல்ல இருக்கும் பாதையின் எதிர்ப்புறம் பிரிகிறது.அந்த பாதை ராதாகுளம் ஷ்யாமா குளம் என்னும் இடத்திற்கு அருகில் செல்கிறது.அங்கிருந்து தான் பரிகிரமா என்னும் கிரிவலம் துவங்கப்படுகிறது.மிக நெருக்கடியான தெரு.இரு குளங்களும் பக்தர்கள் மலர்மாலைகளையும் மற்ற பூஜைப் பொருட்களை அங்கே போடுவதால் அசுத்தமடைந்து இருக்கிறது. வெகுநாட்களாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை போலும். வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தாரும் வரும் இங்கே கைடுகளின் தொல்லையும் பண்டிட்களின் தொந்திரவும் இருக்கவே இருக்கிறது.





அதன் பின்னர் அங்கிருந்து குசும சரோவர் என்னும் இடம் இந்த ஏரிக்கரையிலொரு கட்டிடம் இருக்கிறது. 1764 ல் பரத்ப்புர அரசர் ஜவாஹிர்சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.கட்டடக்கலை கண்ணை கவர்ந்தது. குசும என்றால் மலர்கள் என்றும் சரோவர் என்றால் ஏரி என்றும் பொருள்.முன்பு இந்த் ஏரியை சுற்றிலும் புஷ்பவனம் இருந்ததாம்.
ராதா மற்றும் தோழியரோடு பூப்பறித்து விளையாடும் இடமாக இருந்ததாம்.
அதனுள்ளே ஓவியங்கள் இருப்பதாக படித்திருந்தோம் நேரமின்மையால் பார்க்க முடியவைல்லை எங்களால்.


December 13, 2006

பஜ்ஜி விளையாட்டு

குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது இந்த பஜ்ஜி பஜ்ஜின்னு ஒன்னு இருக்குமே அதைக் கொஞ்சம் கண்ணுல காட்டறதுன்னு கணவர் கேட்கும் போதுதான் சரி செய்வோமேன்னு தோணும். சமைப்பது முழுநேரப் பொழுது போக்காகி விட்ட இப்போது பஜ்ஜி செய்யணும் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை.

ஆனால் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது [மத்தவங்க என்னைவிட சின்னவங்க] எல்லாரும் கூட்டாஞ்சாதம் செய்து விளையாடுவார்களே அது போல பஜ்ஜி செய்தோம் நாங்கள்.. காலனியில் இருந்த குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணியில், [ அதிகமில்லை பத்திலிருந்து இருபத்தைந்து பைசா ]
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்க ஆரம்பித்தோம்.

கொஞ்சம் சேர்த்ததும்...ரெண்டு பேர் போய் கடையிலிருந்து பொறிக்க கொஞ்சம் எண்ணெய், கடலைமாவு வாங்கி வந்தாங்க. வெங்காயம் மட்டும் வீட்டில் எடுத்து வந்தாள் ஒருத்தி. மொட்டை மாடியில் கொஞ்சம் கல் வைத்து, மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி , எரிக்க தென்னை ஓலை . ஆம்பள பசங்க நாங்க தான் சமைப்போம்ன்னு ஒரே அடம்வேற. ஒரு வழியா பஜ்ஜி சுட்டோம் பெரிய சாதனை மாதிரி.

நாங்கள் சாப்பிட்டது போக வீட்டுக்கு ஒன்று என்று சுவை பார்க்க கொண்டு போனோம். ஆமா உன்னவிட சின்னவ எதிர் வீட்டு பலகாரகடைகாரங்க பொண்ணு கடை பாத்திரமெல்லாம் அண்டா அண்டாவா கழுவி சமையலுக்கும் உதவி செய்யுறா. ஆனா நல்லாதான் இருக்கு பஜ்ஜின்னு சொன்னாங்க அம்மா. பின்ன சாப்பிட மட்டும் தானே எட்டி பார்ப்பேன் சமையல்கட்டில்.

December 9, 2006

நன்றி

களிமண்ணாய் வந்து விழுந்தேன்
உன் முன்னால்,
பதமாய் ஆக்கினாய்
வணங்கும் மண் பொம்மையாய்.
விதையாய் வந்து விழுந்தேன்
உன் முன்னால்,
நேசமாய் வளர்த்தாய்
உதவும் கனிமரமாய்.
எழுதுக்களாய் வந்து விழுந்தேன்
உன் முன்னால்,
கவனமாய் சேர்த்தாய்
மதிக்கும் பொன் மொழியாய்.

இந்த கவிதை[??!!] என் ஆசிரியையை நினைத்து எழுதியது.பெற்றோருக்கும் கூட இது பொருந்துவதாக நினைக்கிறேன்.

December 8, 2006

மேம்பாலம் போகலாமா?

எங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும் விட்டா வேற பொழுதுபோக்கு இல்லை. மேம்பாலம் போகலாமா ன்னு அப்பா கேட்டா குதிச்சுகிட்டு கிளம்பிடுவோம் நானும் தம்பியும். மேம்பாலம் ஊரோட ஆரம்பம். ரயில் பார்க்கறதுன்னா எப்போதும் சின்னவங்க பெரியவங்க எல்லாருக்கும் ஆசை தான்.


அப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.மேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.


மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.

பாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா? அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.

தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது. இப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.

இப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.

முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.

December 4, 2006

வர்சானா குசல் பிகாரி கோயில் [2]

அரண்மனை போன்றதோர் வாயிலில் சென்று முடிந்தது அந்த பாதை. முன்பே இரு வண்டிகள் அங்கே இருந்தது மனதுக்கு நிம்மதி அளித்தது. பாதையின் ஆரம்பம் எங்களுக்கு அத்தனை சந்தேகத்தினை ஏற்படுத்தி இருந்தது.

'கோயில் நான்கு மணிக்கு திறப்பார்கள் அதுவரை சுற்றுசுவரில் நிறைய ஓவியங்கள் இருக்கின்றன அவற்றை பாருங்கள்' என்றார் கோயிலில் வேலை செய்பவர்
அருமையான ஓவியங்கள் எல்லாம் என் பெண் நான் தான் எடுப்பேன் என்று எடுத்த புகைப்படங்கள்.


அருமையான துளசிமாடம் .கோயிலுக்கேற்ற கலைநயத்துடன்.

கோயிலில் வேலைசெய்பவரிடம் எப்படி இந்த பாதையில் எதிரில் கார் வந்தால் என்ன செய்வார்கள் என்று சந்தேகத்தினை கேட்டால் அது என்ன பிரமாதம்..இங்கே கிளம்பி ஒலிப்பானை அடித்தால் நடுவில் வரும் வளைவில் அவர்கள் நிற்பார்கள் என்றார்.நாங்கள் என்னவோ மேலும் கீழும் தொடர்பு இருக்குமோ, ஒரு வண்டி அனுப்பினால் மற்றவரை காத்திருக்க செய்வார்களோ என்று எண்ணி இருந்தோம்.



கோயில் திறந்ததும் உள்ளே சென்றோம். பண்டிட் ஏதோ கதை சொன்னார்..நம்ம இந்திக்கு புரிந்தது குசல் பிகாரி என்ற ஜெய்ப்பூர் அரசர் ராதாராணி கோயில் கட்ட நினைத்திருக்கிறார்.கனவில் வந்த ராதாராணி நான் ஏற்கனவே இருக்கும் இடத்தை விட்டு வரமுடியாது நீ கிருஷ்ணன் கோயில் கட்டு என்றாராம்.

ராதாராணியின் கதை சொன்னார், எல்லா ஊரிலும் இருக்கும் சிறுதெய்வம் போல தான் ராதாராணியும் என்று ஆனால் அந்த ஊரின் நடையுடைய இந்தி சரியாக புரியவில்லை.



வரும்போது கவனமாக வளைவுகளில் ஒலிப்பானை நாங்கள் உபயோகித்தும்..அடிவாரத்தை அடையும் நேரம் ஒரு அம்பாசிடர் எதிரில்..நல்ல வேளை அவர்கள் ஆரம்பத்தில் இருந்ததால் பின்னால் போய் எங்களுக்கு வழிவிட்டார்கள்.
அதில் இருந்தோர் முகங்கள் ஆகா பெரிய கார் போய் வந்து இருக்குப்பா அப்பறம் என்ன பயமில்லாமல் போகலாம் என்று யோசிப்பது போல் இருந்தது. வேறு வண்டி ஏதும் வருகிறதா பின்னால் என்று கேட்டு கொண்டனர்..நமக்கு இப்படி நேராததே மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டோம்.

December 3, 2006

வர்சானா குசல் பிகாரி கோயில்[1]

தில்லியிலிருந்து ஆக்ரா போகும் வழியில் இருக்கிறது வர்சானா.பர்சானா என்றும் சொல்கிறார்கள்.இது ராதாராணி பிறந்த இடம்.போவது என்று முடிவு செய்த இடம் கோவர்த்தனம்.நேரம் கிடைத்தால் வரும் வழியில் பார்ப்பதாக எண்ணி விவரமாக வர்சானா ப் பற்றி படித்து செல்லவில்லை.

கோவர்த்தனத்தில் இருந்து குறுக்கு வழியை தேர்ந்து எடுத்தோம்.முதலில் நன்றாக இருந்தது பாதை. வயல்வெளிகளை ரசித்து கொண்டே வந்தோம். பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு சிறு டெம்போ போன்ற ஆட்டோ எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தது.என் பெண்ணிடம் பார் எங்கிருந்தோ பள்ளி க்கு இப்படி ஒரு வண்டியில் சாமான்களை போல உட்கார்ந்து போகிறார்கள் கிராமத்து குழந்தைகள் என்று சொல்லிக்கொண்டே நாங்கள் அவர்களை கடந்தோம்.அந்த குழந்தைகள் எங்களை கவனித்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.


சற்று நேரத்தில் படுமோசமான பாதை வரத்தொடங்கியது. கணவர் சிறு கவலையுடனே ஓட்டி வந்தார்கள்.
இப்போது நாங்கள் முந்தி வந்த டிராக்டர் மற்றும் குழந்தைகளின் ஆட்டோ எங்களை முந்திக்கொண்டார்கள்..ஆனால் அக்குழந்தைகள் முகத்தில் இப்போது புன்னகை . அலுவலத்து வண்டி இருக்கும் போதே இப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்....என்று எண்ணிக் கொண்டாலும்...குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்துப்போவதால் நின்றுபோனால் கூப்பிடு தொலைவில் ஒரு வீடுகூட தெரியவில்லை என்பது பயமாக இருந்தது.


எதிர்பக்கம் இன்னுமொரு பெரியகாரை கண்டதும் தான் நிம்மதி..{அடடா நம்மளப் போல் சிலர் இருக்காங்க}வர்சானா வந்ததும் ஒரு கோயில் மலை மேல் தெரிந்தது....வழியில் ஒருவரிடம் அய்யா கோயிலுக்கு எப்படி போகணும் என்றோம்..காரில் போனும் என்றால் பின்னால் ஒரு பாதை இருக்கிறது என்றார்.பக்கத்தில் இருந்தவர் என்ன காரிலா என்று சந்தேகமாக வழி சொன்னவரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.






அந்த வழி மிக சிறியதாக இருந்தது இரு புறமும் வீடுகள். மாடுகள் வேறு கட்டி இருந்தனர் வழியில்.


பெரிய கார் என்பதால் இதில் போகுமா முடியவில்லை என்றால் திருப்ப இடம் இருக்குமா என்று கவலைப் பட்டு வந்தவழி திரும்பலாமா என்ற எங்களை கடந்த ஒரு சிறுவன் கோயிலுக்கா என் பின்னால் வாருங்கள் என்றான்.அட சின்ன கிருஷ்ணன் .பின்னாலேயே போனால் அங்கே ஒருவன் பத்து ரூபாய் கார் கட்டணம் வசூலித்து இது தான் பாதை என்று வருக முகப்பு வளைவுவை காண்பித்தான்.




அது பழனி கோயில் யானைப் பாதை போன்று இருந்தது.ஆனால் மிகவும் செங்குத்து வயதானவர்களுக்குரிய கவலையுடன் மாமனார் முடியுமாப்பா இல்லையென்றால் போய்விடலாம் என்கிறார்கள்...ஒரே குப்பை கூளமாக இருந்தது யாரும் உபயோகிக்கிறார்களா என்றே சந்தேகமாக இருந்தது ஆரம்ப பாதை..ஆனால் கிருஷ்ணனே வழிகாட்டிய பின்னர் போகாமல் இருப்பதா?
பின்னர் பாதை நன்றாக இருந்தது .வீடுகள் அருகில் இருந்ததால் குப்பை அங்கே கொட்டி இருப்பார்கள் போல.இதில் கொண்டைஊசி வளைவு போல் வேறு ஆனால் இந்த பயத்தில் நாங்கள் ஒரு விசயம் யோசிக்கவே இல்லை....ஒரு வண்டி தான் அந்த பாதையில் போகலாம்..அதற்கே கஷ்டம் தான்.மேலே போனபின் தான் இறங்கும் போது ஏதும் வண்டி எதிரில் வந்தால் என்று யோசித்தோம்...ஆனால் கோயில் அருமையானது.