February 28, 2007

வழி வழியாய்

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.
ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.



வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெ ற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள். முன்னோர்களின் விஷய ஞானம் படித்து அறிந்து கொள்வது விட செவி வழி அதுவும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.



பெற்றவள் அறிவு பூர்வமாக சொல்லித்தருகையில் பாட்டி
கதைகள் சொல்லி பேரக்குழந்தைகளை ஒரு கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்... குழந்தைகள் புதிதாக கற்பனை வளத்தைப் பெறுகிறார்கள். மரம் வந்து பேசுமாம் ,கிளி வந்து பேசுமாம், ஏழு மலைகளும் ஏழு கடல்களுக்கும் அப்பால் இருக்கும் அபாயம் மிகுந்த பகுதிக்குக் கூடப் போய் வரும் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய் குழந்தைகளுக்கு தைரியம் வருகிறது.



இப்புனைவு கதைகளில் குணநலம் கூட கற்றுத் தரப்படுகிறது. கடும் பயணத்தில் கதாப்பாத்திரத்தால் முன்பு உதவி பெற்ற எறும்பும் , மீனும் வந்து உதவும்.
முன்பு கடுமையாய் நடந்து கொண்ட கதாப்பாத்திரத்துக்கோ ஆபத்துகளில் மீள இப்படி உதவி எதுவும் கிடைக்காது. நட்பும் உதவியும் ஆபத்தில் உதவும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இயற்கையை நேசிப்பதற்கு இயற்கையோடு ஒன்றிப் போவதற்கு கற்றுத்தந்தார்கள். வீட்டுத்தோட்டமும் பிறஉயிர் பேணுதலும் இயற்கையாய் பழகித் தந்தார்கள்.


உடல் நலத்திற்கு வழிவழியாய் வந்த அனுபவத்தில் இந்த உணவு இதற்கு நல்லது , இந்த கால நிலைக்கு உகந்தது இது என்று அறிந்து கடுக்காயிலிருந்து கஷாயம் வரை உபயோகிப்பது அறிந்திருப்பார்கள் பெண்கள்.



நான் நன்கறிந்த முதல் பெண் என் தாய்.
நான் என் தாய் வழி கற்றவை ஏராளம். சாந்தமும் நேர்மையும் அவர்களின் குணநலன். யாருக்கும் தீங்கு நினைத்தலும் நமக்கு கெடுதல் என்று சொல்வார்கள்.
ஆன்மீகமும் அறிவியலும் பொதுஅறிவும் விளையாட்டாய்
போதித்தார்கள்.



வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை.


மனிதன் மனிதத்தின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத்
துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேஎண்டுமென்று மன்மார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனும் மகரிஷியின் தத்துவங்களில் அவர்களுடைய ஈடுபாடும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்னை வியக்கவைக்கும். நேற்று பேச ஆரம்பித்திருக்கும் மழலையிடமிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் சமமாய் கொள்ளும் நட்பின் சாயல் தாய் வழியாய் எனக்கும் என்வழி மகளுக்கும்.


அன்பும் ,கருணையும், பெண்கள் கற்ற கல்வியும் அவளுக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும்.. அக்குடும்பத்து நபர்களால் சமூகத்திற்கும் வழிவழியாய் சென்றடையட்டும்.

February 27, 2007

புறாக்கூடு

தில்லி வந்த புதிதில் புறாக்கள் புதிய அனுபவம். எங்கள் ஊரில் கோயில்களில் மசூதிகளில் சர்ச்சுகளில் தான் அதிகம் இருக்கும் .ஊரில் காக்கைகளுக்கு உணவு வைப்பது வழக்கம் தான். குருவிகள் அத்தனை வராது. இங்கே தில்லியில் எல்லாரும் ஒரு மண்பாத்திரத்தில் உணவும் இன்னொரு மண்பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து புறா மற்றும் குருவிகளுக்கு என்று வெளியில் வைத்திருக்கிறார்கள். நானும் வைத்தேன். தில்லி போன்ற நகரத்தில் குருவிகளை ரசிக்க முடிகிறதே என்று தோன்றியது.




இங்கே வீடுகளின் சன்னல்களில் கூட கூடு கட்டி வாழ்கின்றன். எங்கள் குளியறை சன்னலில் சல்லடைக் கதவுக்கு வெளியே கண்ணாடிக் கதவு சாய்ந்த வாக்கில் இருக்கும் .இடையில் குளிருக்கும் வெயிலுக்கும் வாகாக கூடுகட்டும். வருடத்தில் பாதி நாட்கள் 'குகூ' குகூ' எனும் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கும்.




கூடு கட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவது என்று எல்லா காட்சிகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தேன். சமயத்தில் அதனுடன் பேசுவேன். அந்த அறையின் சத்தத்திற்கு அடைகாக்க ஆரம்பித்த காலத்தில் புறா பயப்பட்டு நடுங்கும். "இல்லை எதுக்கு பயப்படற நான் என்ன செய்தேன் உன்னை" கொஞ்ச நாளுக்கப்புறம் பழகியது போல் நம்மை கண்டுகொள்ளாமல் இருக்கும்.



சில வருடங்களுக்கு பிறகு வேறு வீடு வாங்கிய பின் இந்த
இனிய அனுபவம் ஒரு சோக அனுபவமாக மாறிவிட்டது.
அங்கே கூலருக்கு மேலே கூடு கட்டிக் கொண்டு இருந்தன புறாக்கள் இரண்டு . குஞ்சு பொரிக்கும் காலம் வரும் வரை கண்ணில் படாத பூனையார் வந்து அம்மா அப்பா குஞ்சுகள் என்று கபளீகரம் செய்துவிட்டார். துர்நாற்றம் , ரத்தம் என்று மனதை கலக்க வைத்தது புறாக்களின் மிச்சம்.




மீண்டும் ஒருமுறை கட்டியது அதே இடத்தில். கலைக்கலாம் என்றால் வயிற்றில் பிள்ளையோடு இருக்கிறாய் கலைக்காதே என்றார்கள் அம்மா. ஆனால் புறா அது உயிரோடு இருக்காதே என்று ஒரே கவலை. சரி என்று உயரத்தில் ஒரு ஆணியை அடித்து ஒட்டை பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றை மாட்டி அதில் மணல் இட்டு நிரப்பி கூட்டைக் கலைக்காமல் அதில் போட்டு வைத்தோம்.




இந்த முறையும் குஞ்சு பொரிக்கும் வரை ஒன்றும் இல்லை. குஞ்சு பொரித்து சில நாட்களில் வந்தார் பூனையார் எங்கிருந்து எப்படித்தான் தாவியதோ தெரியவில்லை . புறாவின் குடும்பத்தில் இறகுகள் தான் மிச்சம். எல்லோரும் பூனைக்கு உணவு புறா நீ ஏன் வருத்தப்படுகிறாய் ? என்று சமாதானப் படுத்தினார்கள்.
ஆனால் வீட்டினருகில் வசித்த ஒரு குடும்பத்தை அல்லவா இழந்துவிட்டேன் மனம் சமாதானம் அடையவில்லை.




அதற்கு பிறகு அடிக்கடி கட்டுகிறது. அது கட்ட முயற்சிக்க
நான் கலைத்துப் போட இது அடிக்கடி நடக்கிறது. ஒரு இடத்தில் கட்டும் பின்னர் கலைத்து விட்டு அதனுடன் பேசுவேன் வேண்டாம் போய் விடு . அது மீண்டும் பக்கத்தில் வேறு இடத்தில் கட்டும். குறைந்தது மூன்று முறை கட்டி கட்டி பிரித்துப் பால்கனியின் கட்டைச் சுவற்றில் வைத்து எடுத்துப் போ என்பேன். அதற்கு பிறகு தான் அது போகும்.




இப்போது என் மகனும் வந்து 'காக்கா' (புறாதான் அவன் பாஷையில்) 'நோ நோ' 'டோண்ட் டோண்ட்' (செய்யாதே )
என்கிறான். மகளோ "எனக்கு புறா பாஷை தெரிந்தால் அதுகூட பேசி இங்க கட்டினா பூனை வந்து சாப்பிட்டுடும் என்று சொல்லித் தருவேன்" ., என்கிறாள்.

February 26, 2007

கேள்விகளோடு ஒரு திரைப்படம்

கார்டூன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்
எப்போது முடியும் எப்போது முடியும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். "அப்படி என்ன படம் தான் பார்க்கப் போற. 9 மணிக்கு முடியும் தந்துடறேன் கண்டிப்பா" . எப்போவும் நல்ல படம் டிவில வருவதாக இருந்தால் ஒன்று நேரம் மறந்து வேறு வேலையில் மூழ்கிப் பார்க்க தவறிப் போய் விடும் , இல்லை அப்போது தான் யாராவது வீட்டிற்கு வந்து இருப்பார்கள்.


தி பியானிஸ்ட் படத்திற்காக வேலை எல்லாம் முடித்து விட்டு காத்திருக்கிறேனே அது தான் காரணம். ஆனந்த விகடனில் அதன் விமர்சனம் படித்தது தான் இப்போது மீண்டும் புத்தகத்தை தேடி எடுத்துப் படிக்க மனநிலை இல்லை. சரி இன்னமும் கார்டூன் திரைப்படம் முடியவில்லையே இணையத்தில் தேடலாம் . தமிழில் தேடி விட்டு கிடைக்கவில்லை என்றால் ஆங்கிலத்தில் தேடுவோம் என்று இருந்தேன்.

தமிழில் பாஸ்டன் பாலாவின் தளம் வந்து கூகிளில் விழுந்தது. அவருடைய விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும் படித்தேன் . கதையின் களஅடிப்படை புரிந்தது, நல்ல விமர்சனம் . 'உன் படம் ஆரம்பிக்கப்போகுது வா' பெண் அழைத்தாள். அவளுக்கும் ஆர்வம் என்னதான் அம்மா பார்க்கப் போகிறாள் என்று . கதையைப் பற்றி சின்னதாக விளக்கம் சொன்ன போதும் இத்தனைக் கஷ்டத்துக்கு நடுவில் கதாநாயகன் எப்படி சிறுவயதில் இருந்து இவ்வளவு வளர்ந்தான்? என்று பெண்ணின் கேள்வி. அவள் கோணத்தில் அவனுடைய சிறு வயதுகாலம் தான் கவலை தந்திருக்கிறது.



குண்டுகளுக்கு நடுவில் பியானோவைத் தொடர்ந்து வாசிக்கும்போதே கதாநாயகனுக்கு இசையில் எத்தனை ஈடுபாடு என்று புரிந்தது . மற்ற படங்களைப் போல சாகசங்கள் நிகழ்த்தாமல் ஓடி ஒளியும் கதாநாயகன். நம்மைப்போல ஒருத்தன் என்று தோன்றுகிறது.
"இவர்கள் வேறு நாட்டுக்கு ஓடிப்போக முடியவில்லையா?" அடுத்தக் கேள்வி.



தனி இடம் பிரித்து யூதர்களை வைத்த பின் அந்தபக்கத்துக்கு போய் வரும் ஒரு சிறுவனை சுவற்றின் துளைக்கு அந்த பக்கத்தில் இருந்து நாஜிக்களில் ஒருவன்
இழுக்க இந்தப்பக்கம் இவன் இழுக்க கடைசியில் அந்த சிறுவன் இறந்து இந்தபக்கம் வரும்போது தன்னால் முடியவில்லையே என்று அப்படியே அந்த உடலை விட்டுப் போகும் போது "அம்மா அவன் செத்து விட்டானா "- பெண். "ம்''.



எதிர் வீட்டிற்குள் நுழைந்து சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் கைகளை மேலே தூக்கியபடி அழைத்து சென்று வெளியே ஓடவிட்டு கொல்வதும் , எழமுடியாத சக்கர நாற்காலி கிழவனை பால்கனி வழியே தூக்கி எறிவதும் "அம்மா இப்போ எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கிறே" நல்லப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று அதனால் தான். நிஜத்தில் இன்னும் இது போல் உலகத்தில் நடக்கின்ற இடங்கள் இருக்கிறது . பாவமில்லையா ?அவர்கள்.



எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டதற்கு நெற்றியில் சுடப்பட்டு இறக்கும் பெண் , கிளிக்கூண்டை கையில் வைத்துக் கொண்டு தனியே அழும் குழந்தை, கணவனைத் தேடும் வயதான கிழவி ஒரு மிட்டாயை கையிலிருக்கும் கடைசி டாலர் பணம் குடுத்து வாங்கி
நகவெட்டியின் கத்தியால் ஐந்தாக வெட்டி உண்பது ,
அவ்வப்போது குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி அழைத்து கொல்லப்படும் மக்கள் ஒவ்வொன்றும் தாங்க முடியாமல் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருந்தாள் பெண். குழந்தைகளும் இருக்கிறார்களே? போய் தூங்கு வேண்டாம் என்றாலும் அவள் மனம் கேட்கவில்லை. எனக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை.




ஓடி குண்டடி பட்டு மடிந்து விழுந்து கிடக்கும் பெண்ணருகில் கடந்து போகும் படையினருக்கு அஞ்சி இறந்தவன் போல் படுத்துக்கிடக்கும் காட்சியில் என் மனதுக்கு தோன்றியதை மகள் வெளிப்படையாக சொன்னாள். "சொல்லமுடியாது செத்துப் போனவன் மேலேயும் சுட்டுவிட்டும் போகலாம் இவர்கள் இல்லையா அம்மா".




தனியாக ஒரு வீட்டில் ஒளிந்திருக்க நேரும் போது பியானோ அருகில் இருக்க [வாசித்தால் மாட்டிக்கொள்வானே ] வாசிக்க இயலாமல் போய்
அதன் மூடியை திறக்கும் காட்சியில் அம்மா வாசித்து விடுவானோ இத்தனை கஷ்டமும் பியானோ வாசிக்கத்தானே ? அதற்குத்தானே உயிரே வாழ்கிறான்.
ஒரு நல்ல நாஜிப் படை வீரன் வந்து உதவும் வரை அவளுக்கு மனதே இல்லை . இவன் நல்லவனோ காட்டி குடுக்க மாட்டானே? நான் தான் பியானிஸ்ட் கடைசி வரை உயிரோடு இருப்பான் கவலைப்படாதே என்று சமாதானம் சொல்லி வைத்திருந்தேன். நீ உயிர் பிழைத்து என்ன செய்வாய்?.

நாஜியின் கேள்விக்கு பியானோ வாசிப்பேன் - அவன் பதில் . வாசித்துக் காட்டும் பொழுது நாஜியின் முகமாற்றம் இசையின் அழுத்தத்தால் அவன் இளகும் மனநிலை அருமையான நிகழ்வு.
இசையினை கேட்டபடி படத்தைப் பற்றி அறிய படத்தின் தளம்.


இதுபோல் இன்னமும் இலங்கையில் இராக்கில் குண்டுகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நம்மைப் போல நிம்மதி கிடைப்பது எப்போது ? என்று தெரியவில்லை.

இனிப்புடன் துவங்குகிறேன்

வளர் பிறை சுபமூகூர்த்தம். நல்ல நாளில் ஒரு இனிப்புடன் "சாப்பிட வாங்க" தளத்தில் எழுதத் தொடங்குகிறேன். முன்பே சொல்லிக்கொள்கிறேன் , நான் சமையலில் நிபுணி அல்ல , தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.


பாதாம் முந்திரி பர்பி [சரியாக வரவில்லை என்றால் பாதாம் முந்திரி அல்வா]எளிமையானதும் சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லாததுமானவற்றை மட்டுமே நான் முயற்சிப்பது .ஆகவே எந்த பண்டிகையானாலும் இதுவே எங்கள் வீட்டுசிறப்பு இனிப்பு.

மேலும் படிக்க இங்கே கிளிக்கவும்

February 23, 2007

மிடி,மேக்ஸி, ஜீன்ஸ் குர்தா

அப்போல்லாம் கவுனு,மிடி, மேக்ஸியும் தான் ஃபேஷன்.
மாமா அவங்க பேண்ட் ஐ மிடியாக்கி தச்சு தருவாங்க.அதுக்கு மேலே போட ஆம்பளைங்க போல முழுக்கை வச்ச கட்டம் போட்ட சட்டை. கீழே உள்ளது கருப்போ சிவப்போ கொஞ்சம் நிறம் அடர்த்தியா மேலே உள்ளது வெள்ளையில் மிடியின் நிறத்தில் கோடு போட்டதாக இருக்கும்.




மேக்ஸி போட்டா இந்த பூந்தளிர்
பைகோ கிளாசிக் ல் படித்த ஷேக்ஸ்பியர் அப்புறம் சார்லஸ் கதையில் வரும் இங்கிலாந்து , ரஷ்ய பேரரசிகள் போல தோற்றமளிப்பதாக தோன்றும். பாதம் வரை வரும் அடுக்குகளும் முழுக்கை மூடிய பஞ்சு போன்ற ஆடை .மேக்ஸியில் ரெட்டை சடையை முன்னால் போட்டால் ரெபக்கா . சிறுமியா இருக்கும் போது இது எல்லாம்.



கொஞ்சநாள் அப்புறமா சுடிதார் வழக்கம் வந்த போது ஆச்சி பேத்திகளை இல்லை இல்லை தாவணி தான் போடணும் என்றார்கள் . வீட்டில் கல்யாணம் வந்தால் வாங்கும் பட்டு பாவாடை தாவணி தவிரவும் மாமா முறை ஆச்சி முறைக்கு வரும் தாவணி தவிர வேறு வாங்கவே இல்லை . நன்றாகத்தான் இருக்கும் கட்டினால் ஆனால் யார் அதைப்போட்டு கொண்டு பஸ் ஏறி மற்றவர் கண் பார்வையில் விழாமல் போவது.




நைட்டியா என்னவொரு அங்கி என்று ஒன்றை சுற்றிக்கொண்டு என்பார்கள். ஊருக்கு போனால் பெரியவர்களின் பாட்டுக்களை கண்டும் காணாமல் போய்விடுவது தான். அதே ஆச்சி வயசுக்காலத்தில் தில்லிக்கு வந்துட்டு என் மருமகளுக்கு நைட்டி ரெண்டு வாங்கித்தா, பேத்திகளுக்கு சுடிதார் வாங்கித்தா வந்ததுக்கு நியாபகமா அவங்களுக்கு எதாச்சும் வாங்கிப்போனும்
என்ற போது நாங்கள்ளாம் அந்த காலத்துல வாங்கின
பாட்டு நியாபகம் வந்தது, தவிர்க்க முடியாமல்.




ஜீன்ஸ் போடனுங்கறது ஒரு கனவு. ஒருமுறை கல்லூரி சுற்றுலாவில் தோழியின் ஜீன்ஸ் போட்டு புகைப்படம் எடுத்தோம் . அது எதோ குளறுபடியாகி சரியாக வரவில்லை. அம்மாவுக்கு தான் சந்தோஷம் . நல்லவேளை விழலை.இதெல்லாம் கல்யாணம் ஆகி அந்த வீட்டில் வச்சுக்கோ. ஹ்ம். என்ன ஒரு பயம் பாருங்க.




ஏதோ பரவாயில்லை. கல்யாணத்துக்கு பெட்டிபெட்டியா
குடுத்த புடவை எல்லாம் ரிடன் ஃகிப்டா அம்மாவுக்கும் மாமியாருக்கும் போயாச்சு. இங்க சுடிதார் தான்.
தலைவர் நம்ம நாலரை அடிக்கு அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. ஜீன்ஸ் கனவும் நிறைவேறிடிச்சு. ஜீன்ஸ்ஸும் குர்தாவும் சீருடை ஆகிவிட்டது.
இப்போது அம்மா மூச் ...பேச முடியுமா என்ன.




காலம் மாற மாற உடைகளும் நாகரீகமும் மாறுகிறது.
அன்று கூடாது என்றது இன்று வழக்கமாகிவிட்டது. இன்று
நான் படித்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லாம் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள். என்ன எளிதாக சைக்கிள் ஓட்டி போகிறார்கள். பொறாமையாகத்தான் இருக்கிறது.
மாற்றங்களின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இப்படி தோன்றுவது சகஜம் தானே.

முறிந்த உடன்படிக்கை

சாலை ஓர தவம் கலைத்து,
பின்பொரு புன்னகை.
மெளனமொழி பேசி முடித்து,
பின்பொரு உடன்படிக்கை.

தவங்களும், மௌனமொழிகளும்
உணர்த்தின காதல்.
நாட்காட்டி முழுதும்,
வர்ணஜாலம்.
முகம் பார்த்த நாட்கள்.


தவங்கள் குறைந்தது,
நிஜமொழி பேசினோம்.
காணாமல் போனது காதல்.
நாட்காட்டி முழுதும்
கருப்பு புள்ளிகள்.
போர்க்கள நாட்கள்.
ஓரோர் நியாயம்.
முறிந்த உடன்படிக்கை.

கால ஓட்டத்தில் ஓடி களைத்து,
ஓர் நாள்.
எதிர்பட்டோம்.

என் கையில் உன் செல்வம் .
உன் கையில் என் செல்வம்.
நிஜமொழி சொன்னது-
நீ நலமா? நலம்.
நீ நலமா? நலம்.
மௌனமொழி சொன்னது-
நலம் கேட்கும் நிலையானதே.

உடன்படிக்கையோ ,
நிஜமொழியோ இல்லாதிருந்தால்
நன்றாயிருந்திருக்கும்.

February 21, 2007

தையலில் இருந்து தமிழ்மணம் வரை

பள்ளியில் படிக்கும் போது அம்மா சொன்னாங்களே என்று
தையல் வகுப்பில் சேர்ந்தேன். கர்ச்சீப் தைக்கறதுக்குள்ள மேடத்தை ஒருவழியாக்கினேன். அம்மாவுக்கு சட்டை தைத்து தந்தேன். மேடத்துக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும் அது என்னா என் கிட்ட ஒக்காந்து வெட்டும் போது மட்டும் சரியாதானே வருது நீயா வெட்டினா ஏன் தப்பு செய்யறன்னு.. நீங்க இருக்கற தைரியம் தான் அப்படின்னு சொல்லி எப்படியோ நாலஞ்சு டிசைன் தச்சாச்சு. தையல்ன்னா என்ன தெரிஞ்சுகிட்டாச்சு. போதும்ன்னு விட்டாச்சு.


அப்புறம் கல்லூரி படிக்கும் போது ஹிந்தி. அப்ப தெரியாதுங்க இப்படி டில்லியில் வந்து மாட்டுவேன்னு ,
ஏதோ அப்படி ஒரு ஆசை. அங்க போய் படிக்கறத விட அரட்டை தான் நிறைய..இருந்தும் மூணு தேர்வு முடிச்சாச்சு. அவ்வளவு தான் இதுக்குமேல தேர்வெழுத நமக்காகாது .ஹிந்தி புரிஞ்சுடுச்சு .ஹிந்தி வகுப்ப விட்டாச்சு.



பாட்டு கத்துக்கணும்ன்னு ஆசை ..என் குரலுக்கு அவ்வளவு ஆசை கூடாது தான். ஆனா அப்போ யாரும் பக்கத்துல சொல்லித் தரவங்க இல்லாததால வயலின் கத்துக்கிட்டேன். இரண்டு வருசம் பாட்டெல்லாம் வாசிக்க தொடங்கினதும் வீடு மாறிட்டோம் . தப்பிச்சார் வாத்தியார்.


போன வீட்டு பக்கத்துல ஒரு பாட்டு டீச்சர் இருந்தாங்க . சரிதான் ஆசைப்பட்டது நிறைவேத்திக்க வேண்டியது தான்னு பாட்டு கத்துக்க போய் அடிப்படை அறிவு வளர்த்துக்கிட்டு இருக்கும் போதே , கல்யாணம் ,அப்புறம் டில்லி பயணம்.


கணவரோட லேப்டாப் மகிமையால வீட்டுலயே அடுத்த பொழுதுபோக்கு ,எக்சல், வேர்டு, பவர் பாயிண்ட் எல்லாம் புத்தகமும் லேப்டாப்புமா நானே .


கொஞ்சம் வருஷம் குடும்பம் குழந்தை .அப்புறம் குழந்தை தூங்கினதும் க்ளாஸ் போக கிடைத்த சனி ஞாயிறு மதியத்து பொழுதுகள் மல்டிமீடியா போட்டோ ஷாப்புமா
கழிச்சாச்சு. கம்ப்யூட்டர் வந்தது. நெட் வந்தது. சொந்தங்கள் நட்புகள் என்று மெயில் களும் சாட்டுகளும் பின்னர் வலை போட்டு , பிடித்த தளங்களை மேய்வதுமாய் பொழுதுகள் ஓடியது.

குழந்தை வளர்ப்பும் , குழந்தைகளுக்கான தளங்களும் என்று பொழுதுகள் ஓடியது. அடுத்த கட்டம் நம்ம பொழுதுபோக்கு பென்சில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் சொல்லித்தரும் தளங்கள் பார்த்து  வரைந்து பார்த்தாச்சு.


இப்போ அடுத்த படி தமிழ்மணம் தேன்கூடு வலைப்பதிவு . எப்ப இது போரடிக்கப் போகுது தெரியலை. ஆங்காங்கே இருப்பது என்
பென்சில் டிராயிங்ஸ் . ஒன்று என் பெண்ணை மாடலாக வைத்து நான் வரைந்தது . அப்புறம் செடி போல் இருப்பது நெகடிவ் டிராயிங்க் வகையை சார்ந்தது.

February 20, 2007

சில கேள்விகளும் பதில்களும்

என் மதமே சிறந்தது என்பது சரியா?

கொள்கை வெறி நல்லதல்ல. எனது மதம் ஒன்றே சரியானது மற்ற மதங்கள் தவறு என்பது நல்லதல்ல.எல்லாரும் கடவுளைத்தான் வழிபடுகிறார்கள். இனிப்பு ரொட்டியை நேராக சாப்பிட்டாலும் சரி, குறுக்காக சாப்பிட்டாலும் சரி இனிப்பாகவே இருக்கும்.

கடவுள் உருவம் ,அருவம் எது சரி?


ஒன்றில் நம்பிக்கை இருந்தால் சரி. உருவமில்லாதவர் கடவுள் என்றால் அது ஒன்றுதான் உண்மை என்ற எண்ணத்திற்கு இடம் தராதீர்கள். உருவமும் உண்மை என்பதை நினைவில் வைக்கவேண்டும். ஆனால் உங்களுக்கு எது நம்பிக்கையோ அப்படி கும்பிடுங்கள் .

கெட்டவர்களிலும் இறைவனே இருக்கிறான் அவர்களிடம்
எப்படி நடப்பது?

கடவுள் எல்லா உயிரிலும் இருக்கிறார். ஆனால் நல்லவர்களுடன் பழகலாம். கெட்டவர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் கடவுள்
இருக்கிறார். அதற்காக புலியைக் கட்டித் தழுவிக்கொள்ள முடியாது. புலியும் கடவுளே, புலி வருகிறது ஓடு என்பவனும் கடவுளே அவனுடைய வார்த்தையை ஏன் கேட்கக் கூடாது.

கெட்டவர்கள் கெடுதல் செய்ய வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?
பாம்பு ஒன்றின் கதை மூலம் சொல்கிறார், தீமை செய்ய வரும்போது அவர்கள் துன்பம் தந்துவிடாமல் இருக்க சீறலாம் பயமுறுத்தலாம் . ஆனால் பதிலுக்கு விஷத்தைச் செலுத்திவிடாமல் இருக்க வேண்டும் .

இன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாள். கஷ்டமான தத்துவங்கள் அவர் கூறும் எளிமையான கதைமூலம் யாரும் புரிந்துகொள்ளும்படி இருக்கும். எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்று மத நல்லிணக்கம் கூறிய அவருடைய கருத்துக்கள் நிறைந்த அமுதமொழிகள் புத்தகத்திலிருந்து எடுத்தது.

February 19, 2007

மிதியடியின் உதவியில் எடுத்த ஃபோட்டோ

மெழுகுவத்தி உதவியில் எடுத்தப் படத்தை என் மற்றொரு பதிவில் பார்த்திருப்பீர்கள்.. லைட்டிங்கில் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாகி விட்டது. இரவில் எடுப்பதில் இரண்டு பிரச்சனை. ஒன்று வீட்டில் எல்லாரும் இருப்பது. மற்றொன்று காமிரா முழு இருட்டா எடுக்குது.



சந்தை நாளை எதிர்பார்த்திருந்தேன். புது காய்களை வாங்க.
போகும் போதே ஒரு எண்ணம் வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் நல்லா , அழகா, இந்த பச்சைக் கலரில் காம்பு வைத்த தக்காளி எல்லாம் போடுவாங்க நமக்கு எங்க கிடைக்கும்ன்னு . ஆனா பாருங்க என்னைக்கும் இல்லா திருநாளா அதே மாதிரி தக்காளி பத்து ரூபாய்க்கே கிடைக்குது.


ஆனா வெங்காயம் தான் விலை அதிகம் அன்னைக்கு நான் எப்போதும் சின்ன சின்ன அளவு வெங்காயம் தான் வாங்கறது. போட்டோ எடுக்க பெரிய அளவு ல இருக்கறதா தேர்ந்தெடுத்து வாங்கியாச்சு.



அடுத்த நாள் காலையில் கணவரை ஆபிசுக்கும்,
பெண்ணைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு , பையனை தூங்க செய்து முதலில் வீட்டை அமைதியாக்கியாச்சு. அப்புறம்
காயை எல்லாம் எடுத்து நல்லா கழுவி வச்சுக்கிட்டு யோசிச்சேன் யோசிச்சேன். யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.எப்படி லைட்டிங் குடுக்கலாம்.மெழுகுவத்திய எடம் மாத்தி வித்தியாசம் காட்டலாம். இந்த சூரியன் என் பேச்சு கேட்குமா??


சூரியன்ன உடன ஒரு நியாபகம் வந்தது. ஒரு முறை சூரிய கிரகணம் வந்த போது ஆச்சி வீட்டுல நேரா சூரியனப் பாக்கக்கூடாதுன்னு சொன்னதால கண்ணாப்பை (ஓட்ட ஓட்ட கரண்டி) வச்சு சூரிய வெளிச்சத்த தரையில் பார்த்தா
சின்னச் சின்ன பிறை நிலா மாதிரி தெரிஞ்சதப் பார்த்தோம். இப்ப வெங்காயம் தக்காளி தெரியற அளவு பெரிய கண்ணாப்பைக்கு எங்க போக. அப்பத்தான் கண்ணுல பட்டது இந்த மிதியடி.

பால்கனி தண்ணியா இருக்கும்ன்னு ரப்பர் ல போட்டு இருக்கும் மிதியடி ஓட்டை ஓட்டையா இருந்தது. எடுத்து வச்சு பக்கெட்ட முட்டு குடுத்து நிக்க வச்சுப் பார்த்தா அழகா வட்ட வட்டமா வெளிச்சப் புள்ளிகள். காயை எல்லாம் அடுக்கி வச்சு அழகு பாத்துட்டு இருந்தேன் அம்மா வா வா ன்னு பையன்..அதுக்குள்ள ஏண்டா எந்திரிச்சான் இவன்.. சரி என்ன பண்ணன்னு மடியில வச்சுக்கிட்டு தொடர்ந்தேன்.

அவன் "அம்மா அம்மா", "மம்மம்' , "கிளிக் கிளிக்" இப்படி வர்ணனை செய்துகிட்டே சில சமயம் கையை நடுவில் கொண்டுவந்து வைப்பான். இதற்கிடையில் தக்காளி ஒன்று அவன் கைக்குப் போயிருக்கும். சரி இத்தனை இருக்கு ஒன்னு கொறைன்ஞ்சா என்ன ? ஆமான்டா மம்மம் தான் போட்டோ தான் எடுக்கறேன்னு பதில் சொல்லிக்கிட்டே கொஞ்சம் வரிசைகளை மாற்றி வைத்து அப்படி இப்படி மிதியடியின் நிலைகளை( பொஷிஸன்) மாற்றி எடுத்துத்
தள்ளினேன்.


பள்ளியில் இருந்து வந்த பெண், என்ன மிதியடி வச்சு போட்டோ எடுத்தயா , சீ. சீ. என்றாள் . என்ன மிதியடி மேலயா வச்சேன். அது லைட்டிங் தானே தந்தது. மூன்று நாளா மூடி இருந்த வானம் அன்னைக்கு சூரியன வெளிய விட்டதே எனக்கு புகைப்படம் எடுக்க வசதியாகத் தானே. இது தாங்க நான் த.வெ.உ புகைப்படப் போட்டிக்காக புகைப்படக் கலைஞர் ஆன கதை.

பன்னிரண்டு வருசம் முன்னாடி தம்பிய மெழுகுவத்தி கிட்ட வச்சு ஒரு போட்டோ எடுத்தேன். அட அந்த 1000 ரூ கோனிகா கேமிரா ஃப்ளாஷ் இல்லாம எடுக்காது ன்னு தெரியாது. அதனால் நல்ல வெளிச்சமா ஒரு வித்தியாசமும் இல்லாம வந்தது. கண்ணாடி முன்னாடி நிக்க வச்சு தோழிய எடுக்க முயற்சி செய்து அதுவும் ஃப்ளாஷ் கண்ணாடியில் பட்டு நம்ம திறமையை சோதிச்சுருக்கு.




முதல் முதலா இப்படி படைப்பு ஒன்று
மீடியாவில வந்துருக்கு. நன்றி திரு சர்வேசன்.

NOT ONE LESS

நான் ரசித்த படங்களின் வரிசையில் இது சீனத்திரைப்படம். எத்தனையோ விருதுகளைப் பெற்ற படம். சீனாவின் ஒதுக்குபுறமான ஒரு மலைப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்
விடுமுறையில் செல்ல நினைக்கும்போது அதுவரை பள்ளியை நடத்த அவருக்கு ஒரு 13 வயது சிறுமிதான் கிடைக்கிறாள். வறுமையும் பணத்தேவையும் காரணமாக
வேலைக்கு வரும் அவளை ஒரு குழந்தை குறைந்தாலும் அவளுக்கு கிடைக்க இருக்கும் பணம் குறையும் என்று
சொல்லி விட்டு போகிறார்.

அவளும் தனக்கு தெரிந்தவற்றை வைத்து குழந்தைகளுடன் குழந்தையாக வகுப்பு நடத்துகிறாள்.
ஒரு மாணவன் வறுமையால் படிப்பை விட்டு வெளியூர் சென்று வேலை செய்யப் போய் விடுவான். அவனை திருப்பி எடுக்க அவள் செய்யும் முயற்சியே கதை.

பள்ளியில் பாடம் எடுப்பதை கவனிக்கும் ஒருவர் ஆகா முன்பிருந்த ஆசிரியரை விட இவள் நன்றாக எடுக்கிறாளே
என்று நினைத்துப் போவார். காரணம் என்னவென்றால் அவள் எப்போதும் கணிதமே எடுப்பாள். ஒவ்வொரு மாணவனும் எத்தனை கையிருப்பில் வைத்து இருக்கிறான் அதனை சேர்த்தால் எவ்வளவு வரும் மொத்தம்? நகரத்துக்கு செல்ல டிக்கெட் எவ்வளவு? அதற்கு இன்னும் எவ்வளவு தேவை.இப்படி.


அனைவருமே செல்லவேண்டுமானால் பஸ் டிக்கெட்டுக்கு ஆகும் செலவு என்ன? அதற்கு எப்படி சம்பாதிக்கலாம் ? என்று எப்போதும் கணிதம் தான் அதற்கப்புறம் வகுப்பில்.

அருகில் இருக்கும் ஒரு செங்கல் சூளையில் செங்கல் அடுக்கி பணம் சம்பாதிப்பார்கள்.எத்தனை அடுக்கினால் எத்தனை கிடைக்கும் என்று கணக்கிடுவார்கள். அவர்கள்
முயற்சித்ததில் உடைந்தவற்றுக்கு போக முதலாளி தருவது போதாது. மீண்டும் மீண்டும் பணம் சேர்ப்பார்கள்.


ஒரு முறை எல்லாரும் கடைக்கு சென்று கோலா வாங்குவார்கள். அவர்களிடம் இருப்பதில் ஒன்று தான் வாங்கலாம். வாங்கி அனைவரும் அந்த கேனை பகிர்ந்து குடிப்பார்கள் மிக அருமையான காட்சி. இதில் ஒன்றுமே இல்லையே இதற்கா இத்தனை என்று பேசிக்கொள்வார்கள்.

கடைசியில் அதிகம் பணம் சேர்க்க முடியாது ,அவள் மட்டும் போய் தேடுவதே சரி என்று தனியாக புறப்பட்டு தேடி அலைவாள்.கண்டுபிடித்தும் விடுகிறாள். அவளால் அந்த பள்ளிக்கும் நன்மை ஏற்படுகிறது.


யாருமே இதற்கு முன் நடிக்காதவர்களாம் அதனாலேயே நன்றாக இருக்கிறது போல் தெரிந்தது. இயல்பாக தோன்றியது. சீனாவின் இயற்கை , மக்களின் ஏழ்மையை காட்டும் விதம் ,குழந்தைகள் என்று படத்தை பார்க்கவைக்க நிறைய காரணிகள் .கதை மற்றும் படத்தைப் பற்றி இன்னும் விரிவாக இங்கே இருக்கிறது.

February 16, 2007

பெண் உரிமை பற்றி பேசுவது தேவையா?

கட்டி குடுத்த சோறும் சொல்லிக்குடுத்த சொல்லும்
வழித்துணைக்காகாதுன்னு சொல்லுவாங்க,பேசி வரப்போவது இல்லை பெண்விடுதலை. அன்பு, கருணை ,பொறுமை இப்படி சிலதெல்லாம் ஒரு ஆணுக்குள் இருந்தால் தானாகவே பெண்ணைப் புரிந்து கொண்டு மதித்து நடக்க ஆரம்பிப்பார்கள். அப்படி நடக்கத்தொடங்கி இருக்கும் ஆண்களுக்கு நன்றி. மற்றவர்களும் மாற முயற்சிக்கட்டும்.




சாதி மதம் இதிலெல்லாம் பின் தங்கி இருப்பவர்கள் பாதிக்கப்படுவது போல் ஆண், பெண் இருபாலரில் வந்த பாதிப்பு தான் பெண்ணியம் வரக்காரணம். பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் இருவிதமாக போராடுவார்கள். மிதவாதிகள் , தீவிரவாதிகள். இது எங்குமே இருக்கும் போக்குதான். தீவிரமான பெண்ணியவாதிகள் சொல்லும் கருத்தை எடுத்துக்கொண்டு மிதவாத பெண்ணியவாதிகளை எதிர்க்கக் கூடாது.





நான் பெண்ணியவாதி என சொல்லும் ஆண்கள் பெண்ணை உயர்த்துவதாக நினைத்துக் கொண்டு செய்கின்ற செயல் கூட சில சமயம் பெண்ணுக்கு எதிரானதாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அந்த பெண் எதை விரும்புகிறாள் என தெரிந்து கொள்ளாமல் அவளுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பெண்ணுக்கு எதிரானதே.





பெண்ணே! பேதை என்றழைத்து,
உன்னை சிறுமை படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பாலூட்டும் தாய்க்கது , கடமையாம்,
கனிவான மனைவியவள் அடிமையாம்.

பெண்ணே! தெய்வம் என்றழைத்து,
உன்னை பெருமை(?) படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பெற்றெடுத்து பேணுவது உன் கருணையாம்
போற்றி துணை செய்யும் நீ மங்கையரில் மாணிக்கமாம்

இரண்டில் எதில் மயங்கினாலும்
பெண்ணே! நீ வீழ்வதென்னவோ உண்மை.




இது கல்லூரி படிக்கும் போது எழுதியது. பார்க்கும் குடும்பங்களில் எல்லாம் கணவரின் கையிலோ தந்தையின் கையிலோ தங்கள் எதிர்காலத்தை குடுத்துவிட்டு அன்பையோ அல்லது வெறுப்பையோ கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து போகும் பெண்களையே பார்த்துப் பார்த்து எதிலும் படிக்காமலே பெண்உரிமைப் பற்றி தோன்றியது.





சாதி பேதங்களின் காரணமாக மனித கழிவுகளை எடுக்க வைத்தார்கள் ஒரு சாராரை எத்தனை கொடுமை. என்று எல்லாரும் பேசுகிறார்கள்... பெண்களை அப்படித்தான் வைத்திருக்கிறது இன்னமும் சமூகம். குழந்தைகளை பெற்று வளர்க்கும் சிலருக்கு இது புரியும். அம்மா சொல்வார்கள் கடவுள் தாயை சோதிப்பாராம். எத்தனை
பொறுமையானவள் எத்தனை அன்பானவள் இவள் என்று.
எப்படி தெரியுமா?





எல்லா குழந்தையும்(3 வயதுக்குள் இருக்கும் போது ) பொதுவாக தாய் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் தான் காலைக்கடனை செய்யும். அவள் உணவுக்கு நடுவில் அசுத்தம் செய்த குழந்தையை கோபிக்காமல்
சுத்தம் செய்து விளையாடச் செய்து விட்டு மீண்டும் தன் உணவை தொடருவாள்.





உடனே சிலர் சொல்லலாம் என் குடும்பத்தில் என் அண்ணா ஒருத்தர் இல்லையென்றால் சித்தப்பா ஒருத்தர் அவர்தான் தன் குழந்தையை இப்படிபட்ட நேரத்தில் பார்த்துக் கொள்வார் என்று. சொல்பவர்கள் யோசிக்கவேண்டும். எங்கோ ஒரு குழந்தை இரண்டு இதயத்தினுடன் பிறந்தது என்று சொல்வதற்கு ஒப்பானது இந்த வாதம். ஆண்கள் பொதுவாக அய்யோ குழந்தை என்மேல் அசிங்கம் செய்து விட்டான் என கோபப்படுவது தான் சகஜம்.






தாயும் தந்தையும் படிக்க வைத்து முன்னேற்றி வாழ்க்கையில் சாதிக்க வைக்க வேண்டும் என்று தங்கள் பிள்ளையை வளர்ப்பார்கள். ஆண் சாதித்துக் காட்ட சந்தர்ப்பங்கள் அமையும். பெண் ஒரு காலகட்டத்தில் குடும்பத்திற்காக தன்னை திசை திருப்பிக் கொள்கிறாள்.






சில வீடுகளில் மாறி வருகிறது சூழ்நிலை . ஒரு நாள் நீ ஒரு நாள் நான் என்று குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்கள். இன்னமும் தீண்டாமை இருக்கிறது என்பதை எப்படி ஒத்துக்கொள்கிறோமோ அப்படி இன்னும் பெண்ணடிமை இருக்கிறது . அதற்காக பேசித்தானே ஆகவேண்டி இருக்கிறது. சிலர் மாறினால் போதாது.





அந்த காலத்திலேயே வேலைக்கு போன பெண்கள் இருக்கிரார்கள் ஆனால் தன் விடுமுறைக்கும் கை காசுக்கும் கூட ஆண்களை கேட்டு தான் முடிவெடுக்கும் நிலைமையில் இருந்தார்கள்.
பொருளாதாரத் தேவைகளுக்கு வேலைக்கு செல்வது வேறு. தன் திறமையை காண்பித்து,தன் மனத்துக்கு நிறைவு கிடைக்க வாழ்க்கையில் உயர்வது வேறு.





பெண் என்பதற்காக சில தாக்குதல் வரும். ஆனால் அதற்காக புலம்பினாலோ , பார் இதற்கு தானே சொன்னோம் உன் இடத்தில் இரு என்று சொல்லிக்காட்டுவார்கள். பெண் ஆண் யாராயிருந்தாலும்
எதிர்ப்புகளும் பாதிப்புகளும் எப்போதும் வரக்கூடியது தான்.




ஆண் தனக்கு வரும் பாதிப்புகளை தனக்கானதாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் பெரும்பாலும். ஆனால்
பெண் தனக்கு நேரும் பாதிப்புகளின் காரணமாக தன் குடும்பமோ தன்னைச் சுற்றிலும் இருப்பாரோ பாதிப்படைய கூடாது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.





பார் எப்படி அடங்காதவளாக வளர்த்தாய் அதன் பரிசு என்பார்கள். குடும்பத்தில் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க போல ,என்று எல்லாமே குடும்பத்தைத் தான் தாக்கும்.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் துயரங்களினால் அடுத்தவர் பாதிக்கப்படக்கூடாது என்று அடங்கி போய் இருப்பார்கள்.





பெண்ணடிமைக்கு காரணம் பெண்ணா ஆணா என்பதல்ல முக்கியம். நாம் ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் பெண்ணை ஆணுக்கு சமமாய் பாவிக்க எப்போது தொடங்கப்போகிறோம் . இதற்கும் எதற்கு சமமாய் பாவிக்கணும் கடவுளே வேறாகத் தானே படைத்திருக்கிறான் என்று கேட்பார்கள் புரிந்துகொள்ள
விருப்பமில்லாதவர்கள்.




ஒரு குழந்தை அதுவும் பெண்ணோ ஆணோ போதும் எனும் நிலை வந்து விட்ட சூழ்நிலையில் ...இந்த பெண்ணடிமை ஒய்ந்துவிடும். வேறு வழியில்லை. எல்லா வசதி வாய்ப்புகளையும் ஒன்று போலவே அனுபவித்து வளரும் இருபாலரும் ஒன்று போலவே போட்டியிட்டு , வாழப் பழகிவிடுவார்கள்.




ஓசை செல்லா இப்போ பாலா பெண்கள் பற்றி பதிவு போட்டு இருக்காங்க.பெண்களைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இது முதல் படி. நியாயம் இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் பெண்கள் வேஸ்டா அடிமையாத்தான் இருக்கணுமான்னு முடிவெடுங்க.(உடனே ஆண்கள் அடிமையா இருக்கற குடும்பத்தை உதாரணம் சொல்லிக்கிட்டு ஓடிவராதீங்க)



பெண்களை நட்பா நடத்துங்க. பகிர்ந்து வேலைகளை செய்து முன்னேற வழிவிடுங்க.

February 15, 2007

ஊக்கமளித்தவர்கள்

வலைப்பூக்கள் எனும் ஒரு சுட்டி வெப்தமிழன் தளத்தில்
கிடைத்தது. சுற்றி சுற்றி வந்ததில் வெட்டிப்பயல் அவர்களின் கதை ஒன்று படித்தேன். ஆஹா இது உன்கதை தானே என்று எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். அவரோ சுற்றிலும் இருப்பவர்களை கவனித்து எழுதுவதே என்று மறுத்துக்
கொண்டிருந்தார். நாமும் தான் கண்டுறுக்கோம் கேட்டும் இருக்கோம் . இப்படி கதை எழுதி பார்க்கணும்ன்னு நினைச்சாலும் யார் போடுவா நம்மளோட எழுத்தை எல்லாம்ன்னு முன்பெப்போதும் முயற்சிக்கவே இல்லை.


சித்திரமும் கை பழக்கம் , எழுத எழுத , படிக்க படிக்க
எல்லாம் வரும்ன்னாலும் படிக்க கருத்து சொல்ல (திட்ட)
யாராச்சும் நாலு பேர் வேண்டாமா? இப்படி யோசிச்சுட்டு விட்டாச்சு. கவிதைங்கர பேருல சிலத கிறுக்கி நோட்டுல
சேமிக்கறது. படிச்சதுல பிடிச்சதா நாலு விஷயத்த பின்னால திருப்பிப் பார்க்கன்னு ஒரு டைரியில சேமிக்கரதுன்னு இருந்துட்டேன்.

நம்மளே அடுத்த ஆள் (அப்படி எல்லாம் பிரிச்சு பேசக்கூடாது தான் ) சம்பாத்தியத்துல சாப்பிடறோம். காசைக் கரியாக்கக் கூடாதுன்னு சும்மா இருந்தேன். தமிழ்மணம் வந்து பார்த்தா எல்லாம் இலவசமாம்.ப்ளாக் இலவசம். படிச்சு நல்லதாவோ, இப்படி இல்ல அப்படின்னு கருத்து சொல்லவோ கூட ஆள் இலவசமா கிடைக்கறாங்க ன்னு தெரிஞ்சுது.


கணினியோ இருக்கு.கணவர் வேலைக்கென்று வீட்டு உபயோகத்துக்கும் முழு நேரம் இணைப்பு இருக்கு. அப்புறம் என்ன களத்தில் இறங்கி சோதிச்சுப் பார்த்துடுவோம் நம்ம திறமையை என்று எழுத ஆரம்பிச்சுட்டேன். படிக்கறவங்களை சோதிக்கறமோன்னு யோசிச்சா நாம தொடர்ந்து எழுத முடியாது அதனால அப்படி யோசிப்பதை மறந்தாயிற்று. கணவரும் பெண்ணும் படிக்கலன்னாலும் (அதனால தானோ??) முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள்.

முதலில் ஆரம்பித்த வலைப்பதிவு சரியாக வேலை செய்யவில்லை. அதில் முதலில் வாழ்த்தியது சிவஞானம்ஜி. பிறகு பாடாய்பட்டு இந்த பதிவு ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த உடன் சேதுக்கரசி வந்து வாழ்த்தி வரவேற்றாங்க.மறுமொழி திரட்டப்பட்டால் தான் கவனிக்கப்படும் அப்படிங்கறது விளக்கிட்டு போனாங்க. பாலபாரதி வந்து விரைவு படுத்தியே ஆகனும்ன்னு சொல்லிட்டு போனாங்க. இதுல இருக்கற ஆபத்து அப்ப விளங்கல. பொன்ஸ் கிட்ட சில சந்தேகம் கேட்டுகிட்டேன். எப்படியோ முட்டி மோதி அதையும் செஞ்சாச்சு.



மேம்பாலம் பத்தி எழுதியபோது அனுபவம் மிக்க பதிவர்கள் வந்து பின்னூட்டம் போட்டதுல கவனம் பெற்று விட்டொம்ன்னு மகிழ்ச்சி கிடைத்தது. பூங்காவில் நம்மோடது வருமான்னு யோசிச்சதுண்டு.அப்புறம் வந்தது . வந்ததும் அடுத்து சின்ன பிள்ளையாட்டம் அட்டையில பெயர் வரல்லையேன்னு தோன்றியது . அப்புறம் பூங்காவில் அட்டையிலும் வந்தது ஒரு பதிவு. இது ஒரு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது .இன்னும் நன்றாக எழுதத் தூண்டுகிறது.

வலைப் பதிவு சந்திப்புகள் பற்றி படித்து அதில் ஒரு ஆசை. நாமும் எழுத வந்தாச்சு ரோல் மாடல் இருக்கணுமே, துளசியோட பதிவுகள் படிக்கும் போது அப்படி தோன்றியது. அவங்க இந்தியா வந்ததும் பார்க்கணும்னு முயற்சி செய்தேன். பொன்ஸ் உதவியால முடிந்தது. பொன்ஸ், துளசி, மதுமிதா, அருணா, நிர்மலா மற்றும் மீனா எல்லாரும் சந்தித்தோம். எழுதுங்க என்று உற்சாகப் படுத்தினார்கள்.



சிலர் தங்களது பக்கத்தில் படிக்கிற சிலவற்றை சேமித்துவைப்பது பார்த்திருக்கிறேன். அடுத்து இப்படி நம்மளோடத யாராச்சும் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படறமாதிரி என்னைக்காச்சும் எழுதனும் என்று ஆசைப்பட்டாச்சு. ஆசைப் பட என்ன அளவு ?? ஆக
அதுவும் நிறைவேறிப் போச்சு. மதி கந்தசாமி அவங்க பதிவுல என் பெயரைப் பார்த்தேன். நன்றி மதி.
பாஸ்டன் பாலா அவர்கள் சேமித்து வைக்கும் தளத்தில்
என்னுடைய பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். சங்கத்தில் ஒருமுறை என் பதிவு பரிந்துரைக்கப்பட்டது. நன்றி பாலா,
நன்றி இளா.


பின்னூட்டங்கள் இட ஆரம்பம் முதலே ஒரு சிறு தயக்கம்
இருந்தது .ஒரே ஒரு முறை தவறுதலாக பின்னூட்டமிட்டு
விட்டேன். இருந்த போதிலும் சில விஷயங்களில் மற்றவர்களின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்கள் கவர்ந்தது என்று பாராட்டியவர்கள் தந்த ஊக்கத்திற்கும் நன்றி. பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டம் அளித்து இதுவரை கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

பெற்றோரும் கணவர் வீட்டாரும் மற்றும் நட்பு வட்டமும் கூட ஊக்கமளிக்கவே தொடர்கிறது பதிவுகள்.

காதலில் காத்திருத்தல்

நான் -
உனைக் காணும் முன்
மழையை ரசித்ததுண்டு.
இன்றோ உன்னுடன் மழையில்
கை கோர்த்து நடக்க நினைக்கிறேன்.
ஏன் வரவில்லை நேற்று நீ?

நீ -
மழை பெய்ததே!



---------------------------------------
என் மெளனம் அன்று உனக்கும்,
சம்மதிக்கும் முன்.
உன் தாமதம் இன்று எனக்கும்,
சம்மதித்த பின்.
வலி தான்.

-----------------------------------------

நேற்று இன்றைய நினைவுகளாய்,
நாளை இன்றைய கனவுகளாய்,
நாட்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய்,
காத்திருப்பதில்
காதலும் தண்டனை தான்.

மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,
தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,
வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,
காத்திருப்பதில்
அன்பும் துன்பம் தான்.
-----------------------------------------------------------

February 13, 2007

த.வெ.உ புகைப்பட போட்டி ரன்னர்ஸ்அப்

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு புகைப்படப் போட்டியின் ரன்னர் அப் புகைப்படங்கள் இங்கே .இப்போதானே வாக்கெடுப்பே தொடங்கியிருக்கு என்று யோசிக்கிறீர்களா? எப்போதும் உலக அழகிப் போட்டிக்கு உள்ளூர், குப்பம் இப்படி சில போட்டிகள் வைத்து அப்புறம் தானே போட்டிக்கு போவாங்க. அப்படி
எங்க வீட்டில் நடந்த போட்டியில் ரன்னர் அப் ஆக வந்த புகைப்படங்கள் இங்கே.













போட்டிக்கு பெயர் குடுத்த நாளே வீட்டில் இருந்த வெங்காயம் , தக்காளி வைத்து இரவே எடுத்தது .
அதற்காக அன்று இரவு சமையலுக்கு விடுமுறை வாங்கிக் கொண்டு (தொலைபேசி டோர் டெலிவரி உணவு) வேலையை ஆரம்பித்தேன்.
வீடியோ எடுக்கும் பெட்டி புகைப்படம் எடுக்க அத்தனை
சிறந்தது இல்லை. மேலும் இருட்டில் எடுக்க இது சரியல்ல எனும் தீர்மானத்திற்கு வருவதற்குள், ஒரு முழு மெழுகுவர்த்தி தீர்ந்து விட்டது.


அதற்குள் சின்னவரின் சேட்டையை சமாளிக்க தடுமாறிய கணவரை ரிலீவ் செய்ய வேண்டியும் பகலில் எடுக்கணும் என்று முடிவெடுத்தும் ஒத்திப் போட்டேன். இங்கு இருப்பது முதல் சுற்று . அடுத்தசுற்று புகைப்படங்களை இப்போது
போட்டால் போட்டியில் எது என் படம் என்று தெரிந்து விடும். போட்டி விதிகளுக்காக 20 தேதி அவற்றை பதிவிடுவேன்.



நீங்கள் உங்கள் வாக்குகளை சேர்த்துவிட்டீர்களா?
சர்வேசன் புகைப்பட வித்தகர் போட்டிக்கு இங்கே கிளிக்குங்கள்.

February 12, 2007

கலக்கற சந்துரு

வார இறுதியில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் டி.வி. வரதராஜன் அவர்களின் யுனைடட் நாடகக்குழு இரு நாடகங்கள் போட்டார்கள். முதல் நாள் நடந்த வாஸ்து வாசு பார்க்க போக இயலவில்லை. அடுத்த நாள் நடந்த
கலக்கற சந்துரு பார்க்கப் போனோம்.


லாஜிக் பார்க்காமல், பெண்களை கிண்டல் செய்கிறாரே என நினைக்காமல் அந்தந்த நேரம் மட்டுமே நினைவில் இருக்கும் நகைச்சுவைகளை ரசித்துப் பார்ப்பது என்று முடிவு எடுத்ததால் நாடகம் ஓகே.கதை வெங்கட்.
ஏற்கனவே சினிமாவில் எடுத்த பிரம்மச்சாரி ஒரு மனைவியை வாடகைக்கு எடுத்தால் எனும் கதை தான்.


அவர் தான் சஹானால வரவர் சண்டை போட்டுட்டே இருப்பாரே , லூட்டியில் வர ஆண்ட்டிமா பாட்டு பாடி எல்லாரையும் விரட்டுவாங்களே .


பின்னி ராமச்சந்திரன் அவர்தான் நாடகத்தின் கதாநாயகனோ எனும் படி அந்த வயதிலும் கீழே விழுந்து எல்லாம் நடித்தார். நடு நடுவில் எஸ். வி.சேகர் குரல் கலக்கற சந்துரு பிரமாதம் , அட நீங்களுமா கலக்கறீங்களே ன்னு ஒலிக்கிறது.


உஷா வீட்டுக்கு வீடு லூட்டியில் நடித்தமாதிரியே பாடி ஆடி நடித்தார். பார்த்து பேசிவிட்டு வரலாம் என்றால் எங்கே கதாப்பாத்திரத்தின் தாக்கத்தில் ஏமண்டி லகலகலக என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்து பேசாமலே வந்துவிட்டோம்.

அடாது மழை பெய்தாலும் ஆதரவு அளிப்போம் என்று மழை காற்று ஊ ஊ என்று அடிக்க குளிரிலும் கூட
தில்லி மக்கள் அரங்கு நிறைந்த காட்சி நடைபெற செய்தது
குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாடகங்களை இன்றும் ஆதரவு அளிக்கும் மக்களுக்கு மேடையில் பலமுறை நன்றி சொன்னார்கள். அடுத்து சில நாட்களில் நடக்க இருக்கும் நாடகத்திற்கும் ஆதரவு அளித்து நாடகக் கலைஞர்களை ஆதரியுங்கள் என்றார் வரதராஜன்.


எல்லாரும் பேங்கிலும் எல்.ஐ.சியிலும் வேலை பார்த்துக் கொண்டோ இல்லை என்றால் இந்த கலை தாகத்தால் விருப்ப ஓய்வு வாங்கியவர்கள் என்று அறிமுகப்படுத்தினார் வரதராஜன்.
இளைஞர்கள் மேடை நாடகத்துக்கு வருவது குறைந்துள்ளது என வருத்தப்பட்டார்.


முன்பெப்போதும் விட தற்போது அதிகமாக நிகழ்ச்சி நடப்பதாய் தோன்றுகிறது. இதுபோன்ற நாடகங்களை தமிழ் நாட்டில் இருந்தால் போய் பார்ப்போமா தெரியவில்லை. இங்கே இது ஒரு வாடிக்கையாகி விட்டது.

February 10, 2007

அர்த்தமில்லா காத்திருப்பு

தூரிகைக்கு ஓய்வில்லை,
வண்ணங்கள் காத்திருக்கின்றன.
மையிட்ட கண்களுடன்
மங்கையவள் காத்திருப்பாள் .
அர்த்தமில்லா காத்திருப்பு.
ஓவியத்தில் மூழ்கி,
தன் முகமே மறந்தவனிடம்,
அசையாமல் நின்றுவிட்டு,
மனதைக் குறையாகிப் போன
ஓவியத்தைத் தள்ளுவதுபோல்,
ஒதுக்கித் தள்ளிவிட்டு
முணுமுணுப்பாய் ,
மொடமொடத்தக் காகிதத்தை
எண்ணியபடி அவள்.

February 9, 2007

தனி உலகம்

குழந்தைகளைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். அவர்கள் உலகமே தனி. அவர்களைச் சுற்றி இருக்கும் சின்னஞ்சிறு உலகத்தில் தான் எத்தனை இனிமை. மாலையில் என் தோழி வீட்டுக்கு சென்ற போது
அவள் தன் குழந்தைகளுக்கு படிக்க உதவிக் கொண்டிருந்தாள். இப்போது தான் ஹிந்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கற்றுக்கொள்கிறான் அவள் மகன் .

ஒரு புது எழுத்தை வகுப்பில் சொல்லிக் குடுக்குமுன் தான்
அம்மாவிடம் கற்றுக் கொண்டுவிட்டானாம். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. "அம்மா, அம்மா, எனக்கும் உனக்கும் மட்டும் தான் தெரியும் இந்த எழுத்து இல்ல". தோழி சொன்னா அப்படி இல்லப்பா . உடனே அவன் ஓ அப்ப என் டீச்சருக்கு தெரியுமா? ன்னு கேட்டான். ஆமான்னவுடனே.
''பரவால்ல மத்த பசங்களுக்கு தெரியாதே '' அப்படின்னு அவனே சமாதானப் படுத்திக்கிட்டான். மகிழ்ச்சியை அவர்களே எப்படி எல்லாம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.


நல்ல வார்த்தையே பேசிப் பழகு என்று சொல்லிக்குடுக்க வேண்டி யவர்கள் ஆசிரியர்கள். என் பெண் படிக்கும் பள்ளியில் ஒரு மாணவனை ஆசிரியர் ஒருவர் கெட்ட
வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். அவனால் தாங்கவே முடியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறான். பாருங்கள் அவனுடைய தனி உலகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவமானம், மற்றும் அதிர்ச்சி .
என்னை ஏண்டா அப்படி செய்தேன்னு கேட்டு பனிஷ்மண்ட் தரலாம் ஆனால் அவர் ஏன் அப்படி திட்டினார் என்பதே அவன் அதிர்ச்சி.

தலைமை ஆசிரியர் அழைத்த போது குழந்தைகள் உண்மையே சொன்னார்களாம். பொய்களையும் , கெட்ட வார்த்தைகளையும் எங்கிருந்து கற்கிறார்கள். இந்த பெரியவர்கள் உலகத்தில் இருந்து தானே..


இன்று சர்வ சாதாரண மாக பெரியவர்களாகிய நம் வலைப் பதிவர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கும் நிலையைப் பார்க்கிறோம். குழந்தைகளின் தனி உலகில் மூழ்கி இன்பம் இன்பம் எங்கும் இன்பம் எனும் அவர்களின்
கொள்கையைக் கொஞ்சம் கற்றுக் கொள்ளவேண்டும்.

February 8, 2007

மாறித்தான் ஆகவேண்டும்

அமைதி எல்லாரும் விரும்பும் மதிப்புடைய செல்வம்.
நாம் காண்பதோ கோபம் ,அச்சம் , பகை , போர் . தனி மனிதரிடம் , சமுதாயத்திடம், உலக நாடுகளுக்கு இடையே என்று அமைதியின்மை பெருகிக் கொண்டே போகிறது.


இந்த நிலைமை நீடிக்கலாமா? மாறித்தான் ஆக வேண்டும்.

வேதாத்திரி மகரிஷி யின் நாள் ஒரு நற்சிந்தனை புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்கள்.

இயற்கை நியதியை _ ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம் , சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும்.


தற்சோதனை செய்வதால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி அதிகப்படும். பிறரோடு ஒத்து வாழும் நிலையும் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptablility) உண்டாகும். தன்னலம் கருதாத தகைமையுணர்வும் (Magnanimity) மேலோங்கும்.


இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை ,ஆக்கச் செயலில் மட்டுமே ஈடும்படக்கூடிய தெளிவு தானே உண்டாகிவிடும்.


ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவுண்டு. ஒவ்வொருவரும் தனக்கோ , பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ , உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேரா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.

February 7, 2007

எல்லாமே என்னோடது

பருப்புகட பருப்புகட(இல்லன்னா கீரகடகீரகட)
அரிசி பருப்பு சாதம் நெய்யு
எல்லாம் போட்டு பிசைஞ்சு
பாப்பாக்கு ஒரு வாய், அக்காக்கு ஒரு வாய்
தாத்தாவுக்கு ஒரு வாய், ஆச்சிக்கு ஒரு வாய்
காக்காவுக்கு ஒரு வாய் குடுத்துட்டு ,
கழுவி கழுவி கவுத்திட்டு
நண்டு வருது நரி வருது கிசு கிசு."

இப்படி சின்னதா இருக்கும் போதே விளையாட்டோட காக்காவுக்கும் குருவிக்கும் வீட்டில் உள்ளவங்களுக்கும்
பகிர்ந்து குடுத்து சாப்பிடச் சொல்லிக்குடுத்தாங்க அந்த
காலத்துல. ஆனா இந்த ஓட்ட சாட்டமான வாழ்க்கையில் இப்படி யாருக்கும் விளையாட நேரம் இருக்கா தெரியல.
ஒத்தப்புள்ளயயே ஒழுங்கா வளக்கறது கஷ்டம்ன்னு இருந்துடறதால பகிர்ந்துக்கற பழக்கமே இல்லாம இருக்காங்க குழந்தைகள்.



குழந்தையோட ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாங்க ஒரு நண்பர் . அந்த பையன் வந்ததும்
சைக்கிள், பொம்மை எல்லாம் என்னோடது என்னோடதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான். போகும் போதும் சிலத எடுத்துட்டும் போவேன்னு ஒரே அடம்.
அவனுக்கு தெரியாமத்தான் கடைசியில வச்சிட்டு போனாங்க அவங்க அம்மா.




சொல்றாங்க எங்க வீட்டுலயும் 'எல்லாமே என்னுடையது'ன்னு தான் சொல்லுவான். அம்மா லேப்டாப் அப்பா லேப்டாப் எல்லாமே அவனோடதாம். காரில் அவன்
சாவியப் போட்டு ஸ்டார்ட் பண்ணித்தந்தா தான் அப்பா ஆபீஸ் போலாமாம். பெருமை அதில அவங்களுக்கு.



இதுனால பள்ளிக்கூடத்திலும் பிரச்சனை . பகிர்தலே தெரியல அவனுக்கு. வீட்டிலே ஒருத்தனாப் போயிட்டதாலதான் இப்படின்னு காரணம் சொல்லறாங்க .
அப்பா அம்மாவே விளையாட்டு தோழர்களா இருந்து பகிர்தல சொல்லிக்குடுக்கலாமே.. இப்ப நான் ஓட்டுவேனாம்...இப்ப உன் டர்ன், இப்படி. கொஞ்ச நேரம் எனக்கு அந்த பேட்(bat) தாயேன் ப்ளீஸ். இப்படி நாமும் சின்னக் குழந்தையா மாறிப் போய் அவங்க உலகத்துல என்ன என்ன அவங்களுக்கு கத்துக்கணுமோ அதுகள சொல்லிக் குடுக்கலாமே..


குழந்தைகளோடு பகிர்ந்துக்கறது மட்டுமில்லாமல் வீட்டுல
இருக்கற (இல்லன்னா எப்பவாவது வருகிற) தாத்தா பாட்டிக்கும் பகிர்ந்துக்கறத நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தரணும். ஏன்னா ஒரு வயசுக்கப்புறம் வயசானவங்க கூட குழந்தைகள் போலத்தான். அவங்க
காலத்துல இப்ப நம்ம குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்,
வேஃபி போன்றவை இருந்திருக்காது இல்லன்னா அவங்களுக்கு சாப்பிடவோ வாங்கவோ சந்தர்ப்பமே
அமைந்திருக்காது... பார்க்கும் போது அவங்களுக்கும் ஆசையிருக்கலாம்... கேட்க தயக்கமா இருக்கலாம்.


எத சாப்பிட எடுத்தாலும் மற்றவங்களுக்கு வேணுமான்னு
கேட்டுட்டு சாப்பிடுன்னு சொல்லிப் பழக்கணும். இதே போலவே , உன்னைப் போல சின்னக் குழந்தைங்க சிலர் அம்மா அப்பா இல்லாம இருக்கிறவங்க ,கஷ்டப் படறவங்க ,இருக்காங்கன்னு அவங்களுக்கு தெரியப்படுத்தணும். சில வேண்டாத செலவுகளை குறைக்கவும் அதை அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கணும் அப்படிங்கற குணம் அவங்களுக்கு
தானாவே வரும்படி ( நாம வலுக்கட்டாயமா செய்ய வைக்காம) செய்யணும்.

February 5, 2007

பெயர் மாற்றம்

நானொன்றும் பெரிதாய் பதிவுகள் இட்டுவிடவில்லை .
ஏதோ 30 பதிவு தாண்டி போய் கொண்டிருக்கிறது அவ்வளவே. இது வரை லட்சுமி எனும் பெயரில் எழுதிவந்தேன். (என்னத்த பெரிசா? ) புதிதாய் லக்ஷ்மி என்று மற்றொரு பதிவர் வந்து விட்டார்..குழப்பத்தைத் தவிர்க்கவே மாற்றம்.


என் வலையில் நானே மாட்டிக் கொண்டேன்..புரியலையா
மேலே சிறுமுயற்சி என்பதற்கு கீழே பாருங்க "மாற்றுங்கள் குழப்பத்தை தெளிவாக, " இப்போ புரிகிறதா? :))


அட அடுத்து முத்துலெட்சுமி என்று ஒருத்தர் வந்தால் என்கிறீர்களா? இன்னும் இருக்கு என் பெயர் இது பாதி தான் .அப்ப பார்த்துக்கலாம். எனவே இனி லட்சுமி முத்துலெட்சுமி ஆகிவிட்டாள்.

மதங்களும் நட்புணர்வும்

"புனிதத்தன்மை,தூய்மை, இரக்கம் முதலானவை உலகத்தில் எந்த மதத்தினுடைய தனியுரிமைகள் அல்ல. ஒவ்வொரு மதமும் மிகவுயர்ந்த பண்பார்ந்த ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்துள்ளது."
என்றார் விவேகானந்தர்.

பரம்பொருள் ஒன்றேயாகும். பல சமயத்தாரும் பல்வாறு பெயரிட்டழைக்க மாறுபடுதலைப் போலச் சரயு நீர்ப் பெருக்கு முதலில் ஒன்றேயாக இருந்து பிறகு ஏரி, தடாகம் என்று பெயர்களை அடைந்தது என்கிறார் கம்பர்.


"எம்மத நிலையும் நின்னருந் நிலையில்
இயங்குதல் அறிந்தனன் எல்லாஞ்
சம்மத மாக்கிக் கொள்கிறேன் " என்றார் இராமலிங்க சுவாமிகள்.

"ஓர் ஆற்றில் குளிக்கும் துறைகள் பல இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில் ஒன்றாகும். உன்னுடையது உயர்ந்தது மற்றவை தாழ்ந்தவை என்று சொல்லாதே" என்றார்
ஸ்ரீஇராமகிருஷ்ணர்.




படிக்கும் காலத்தில் உயிர்த்தோழி ஒரு முஸ்லீம். நாங்கள் சைவம் . மதியவேளை அவள் மீன் கொண்டுவந்தால் அருகருகேயே அமர்ந்து சாப்பிடுவோம். சிலர் ஓடிவிடுவார்கள்.
அவளை விட்டுவிட்டு சாப்பிட மனமில்லாததால் சேர்ந்தே உண்பது வழக்கம். அவளும் எப்போதாவது தான் கொண்டுவருவாள். எங்களுக்காக அவள் மீன் எடுத்துவருவதைக் குறைத்திருந்தாள். ஒரு நாளும் என் கடவுள் பெரிது என்று நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை. படித்தது கிரிஸ்துவ பள்ளி. சில சமயம் பரிட்சைக்கு முன் அழைத்து ப் போய்
வணங்கும் பழக்கமும் இருந்தது.

ஆனால் அவற்றை விருப்பமுடனே செய்தோம். குடும்பச் சுற்றுலா என்றால் இந்துக் கோயிலின் கூடவே வேளாங்கண்ணியில் சிறிதே மண்டியிட்டு வணங்குதலும், நாகூரில் ஒரு வேண்டுதலுமாக செல்லும் பழக்கம்.

அக்கம் பக்கத்தில் அவரவர் பண்டிகை பலகாரம் பகிர்ந்து கொண்டாடினோம். பொங்கலுக்கு பொங்கல் பானை, கிரிஸ்மஸுக்கு கிர்ஸ்மஸ் தாத்தா வும் கோலத்தில் சிரிக்கும். வெஜ் பிரியாணி தனியே வரும் பாய் வீட்டிலிருந்து.


முன்பே விமலா பற்றிய பதிவில் எழுதிய படி மதத்தில் தீவரமானவர்கள் ஆகிவிட்டால் நட்பு கெடுகிறது .
என் மதம் தவிர வேறெதில் இருப்பவரையும் நான் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்பதோ, அவர் வீட்டு உணவுகளை உண்பது அவர் வீட்டுக்கு செல்வது தவறு ,என் கொள்கை தான் சிறந்தது என்பதோ நல்லிணக்கத்தை கெடுத்து நட்பாக இருந்தவர்களை எதிரியாக்கும் என்பதை கண்முன்னே காட்டுகிறது.

இன்று என் குழந்தைக்கு பள்ளியில் எல்லா மதங்கள் பற்றியும் பண்டிகைகள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாம் இந்து மதமா ? ஏன் ? என்று குழந்தை கேட்கும்போது, நம் வீட்டில் தாத்தா பாட்டி அந்த மதம். எனவே நாமும் பின்பற்றி அதுவே ஆனோம். எந்த மதமானாலும் ஒரே கடவுள் தான் . வழி தான் வேறு என்று சொல்லிக்கொடுக்கும் போது இப்படி இருந்துவிட்டால் எங்கே வரும் வெறுப்பு என்று தோன்றும்.

பஹாய் மதம் என்று ஒரு மதம் உள்ளது. அதன் கோயில் தான் தில்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் . அங்கே எந்த மதச் சின்னமும் கிடையாது... ஒரு தியான மண்டபம் போன்ற அமைப்பு... தாமரை போன்ற அந்த கோயிலின் ஒவ்வொரு மடலும் ஒரு மதத்தைக் குறிக்கின்றன. எல்லாம் கடவுளை நோக்கிக் குவிகின்றது. இந்த சிறு முயற்சி தளத்தில் இருக்கும் படம் அந்த லோட்டஸ் டெம்பிள் தான்.

பஹாய் மதக் கோட்பாட்டின் படி 16 வயது வரை குழந்தைகள் தங்கள் தாயோ தந்தையோ சொல்லும் கடவுளை பின்பற்றிக் கொள்ளலாம். பின் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் எந்த ஒரு கடவுளையும் அந்த மதத்தின் வழியையும் பின்பற்றிக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் கூட வேறுவேறான மதத்தவராக இருக்கலாம்.

அனைவரும் கூடும் இரவு உணவு மேடையில் அவரவர் விருப்பமான கடவுளின் ஜெபத்தைக் கூறவேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும்
அன்பு ஒன்றே இணைந்திருக்கச் செய்யும்.

February 4, 2007

பள்ளிக்கூடம்

"பள்ளிக்கூடம் " எப்போது இப்படி சொல்வதை விட்டு மாறினேன் .நினைவில்லை. எல்லாரும் ஸ்கூல் என்று தானே சொல்ல ஆரம்பித்து விட்டோம். பள்ளிக்கூடம் என்றால் ஸ்கூலா ஏன் நாம அப்படி வீட்டில் சொல்வது இல்லைன்னு பொண்ணு கேட்கும் போது யோசித்ததில் எப்போது மாறிப் போனதுன்னு தெரியாம சில பழக்கம் ஒட்டிக்கிட்டு இருந்து இருக்கு.

சின்னதுல நாங்க இருந்தது ஒரு கிராமம்.
எங்க அப்பா கல்லூரியில் ஆசிரியர் . கல்லூரி என்றாலே காட்டுக்குள் தானே , நகரத்தை விட்டு வெளியே . கல்லூரிக்கு அருகில் என்பதால் கிராம வாழ்க்கை . அங்க நேராக ஒண்ணாம் வகுப்பு தான் .




இருந்த ஓரிரண்டு மாடி வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு, நாங்கள். கம்பி கிராதிகள் வழியாக பள்ளி செல்லும் சிறுவர்களை பார்ப்பது என் வாடிக்கை. இன்னும் சில மாதங்கள் இருக்கிறது என்ற போதும் நானும் பள்ளிக்கு போவேன் என்று தினம் தினம் அழுகை .
சரி என்று ஒரு 6 மாதம் வயதைக் கூட்டி போட்டு சேர்த்து விட்டார்கள்.



நல்ல நாளும் கிழமையும் பார்த்து கை நிறைய மிட்டாய் குடுத்து எல்லாருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு என்று
எழுது பலகையோடு பள்ளிக்கூடத்தில் கொண்டு விட்டார்கள் அப்பா. வராண்டாவே கொஞ்சம் களை இல்லாமல் தான் இருந்தது. "சரி அம்மா ,அது தான் உன் வகுப்பு போய் உட்கார்" என்று சொன்னார் தலைமை ஆசிரியர்.



பள்ளிக்கூடம் அந்தக் கால கட்டிடம் .கோயிலை சேர்ந்தது . அதுவும் என் வகுப்பறை இருட்டாக சுவற்றில்
செங்கல் எல்லாம் தெரிய ஒரு மாதிரி பயமுறுத்துவதாய்
இருந்தது. சின்ன சன்னல் ஒன்றும் இருந்தது ஆனால் அதன் வழி வெளிச்சம் வரவில்லை. வெளிச்சத்துக்கு கூரை மேலே ஒரு சதுரக் கண்ணாடி . ஏதோ பி.சி.ஸ்ரீராம் படம் மாதிரி ஒரு வெளிச்சத்தூண் இருட்டு வகுப்புக்கு நடுவில் .



எனக்கு ஒண்ணுமே புரியலை. பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் கொஞ்சம் உத்து பார்த்தாதான் தெரியறாங்க .. (அப்பமே கண்ணு கோளாறு இருந்து இருக்குமோ என்னமோ) . இதுல சுவத்தில இருந்த ஒரு பல்லி மட்டும் சரியா தெரிஞ்சிருச்சு. அஞ்சு நிமிடத்திலேயே இடம் நமக்கு கற்பனை செய்த மாதிரி இல்லையேன்னு ,அழுது கிட்டே
வெளியே ஓடி, நாலு வீடு தாண்டிப் போன அப்பாகிட்ட ,
நான் வீட்டுக்கே வரேன்னு சொல்லியாச்சு.




அப்புறம் சமாதனப்படுத்தி.. கீழ்வீட்டுப் பொண்ணு , விளையாட்டு தோழி சாலா அதே வகுப்பு தானாம். அவ பக்கத்துல உட்கார வச்சுட்டு போனாங்க...அதுக்கப்புறம் எப்படியோ ரெண்டு வருசம் அதே பள்ளிக்கூடத்தில் படிச்சு
ஒப்பேத்தியாச்சு.



இது என் முதல் நாள் பள்ளி அனுபவம்.என் பொண்ணோடது, கதையே வேற. வீட்டில் நானும் அவளுமே விளையாண்டு படித்து போரடிச்சு போயிருந்த அவளை 3 வயதில் ப்ளே ஸ்கூல் சேர்க்கப்போனோம். அதுக்கு இண்டர்வ்யூவாம்... வீட்டுல எப்போதும் தமிழ் தான். இது தில்லியாச்சே.. பேச்சுவழக்கு ஹிந்தியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. போகும் போதே போட்டிருக்கும் வளையல் ,உடையில் இருந்த பொம்மை எல்லாத்துக்கும் சொல்லிக் குடுத்துக் கூட்டிப் போயிருந்தோம்.



போனதும் மிட்டாய் குடுத்து , உட்கார சேர் போட்டதும் தேங்க்ஸ் சொல்லிட்டா. (தண்ணி குடுத்தா கூட எனக்கே சொல்லுவா.) மத்த கேள்விக்கு எல்லாம் வளையல், முயல்ன்னு ஒரே தமிழ் தான் . என்ன இது எப்படி கம்யூனிகேட் செய்வான்னு கேட்ட மேடத்தைப் பார்த்து , என்னங்க பெரிய ஸ்கூல் இண்ட்ர்வ்யூக்கு தயார் செய்யவும் படிக்கவும் தானே இங்க சேர்க்கிறோம் நீங்க தான் பார்த்து தயார் செய்யணும் அப்படின்னு போட்டாச்சு ஒரு போடு..பின்ன வீட்டிலும் வேற மொழின்னா அப்பறம் எப்படி தமிழ் வரும்.(ஆமா நாம ஆங்கிலம் சொல்லிக் குடுத்து குட்டி ச் சுவர் ஆக்காம இருக்கறதுக்கு ஒரு சாக்கு )



முத நாள் கொண்டு போய் விட்டா என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு பை கூட சொல்லாம மேடத்தை ப் பார்த்து குட்மார்னிங் சொல்லிட்டு உள்ளே போயே போய்ட்டா :(( எனக்கு தான் அழுகை.வீட்டுக்கு போய் தனியா உட்கார்ந்து ஒரே கவலை. கூப்பிடப்போனப்போ என்னம்மா அம்மாவுக்கு ஒரு பை கூட சொல்லாம போயிட்டயேன்னு கேட்டா...ஓ அப்படியா நீ சொல்லவே இல்லையே..மேடத்துக்கு குட்மார்னிங்க் சொல்லச் சொன்னே சொல்லிட்டேன் அப்படிங்கறா.


அம்மா அவங்க எனக்கு தெரிஞ்சதா சொல்லித்தராங்கம்மா. நீ சொல்லிக்குடுத்த பாட்டு(rhymes) எல்லாம் வேகமா பாடினேன். அவங்க நீ கேட்டுக்கிட்டு இரு இவங்களுக்கு சொல்லிக் குடுத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்களாம். பெருமை தான். தமிழ் பேசினாங்களாம் கிளாஸ் மேடம்.



அடுத்த நாள் கொண்டு விடும் போது மேடம் குட்மார்னிங்க் சொன்னதும் கண்டுக்காம திரும்பி , "அம்மா பை "ன்னு சொல்லிட்டு அப்புறமா அவங்களுக்கு விஷ் பண்ண அழகை என்ன சொல்றது போங்க.

February 2, 2007

கணவனாக காதலியாக தோழனாக

yentl இது நான் ரசித்த ஒரு படத்தோட பேர். கதாநாயகி எல்லாருக்கும் தெரிஞ்ச பார்பரா. அப்பாகிட்ட யாருக்கும் தெரியாம பாடம் கத்துக்கிற, படிக்கணுங்கிற ஆர்வம் நிறைய இருக்கிற பொண்ணு. அவங்க இருந்தது பொண்ணுங்க படிக்கக் கூடாது இதெல்லாம்ன்னு சொல்லி வச்சிருந்த காலத்துல.
பெரிய பெரிய நைந்து போன எழுத்துக்களை எல்லாம் படித்து அப்பாகிட்ட விளக்கம் கேட்டு நச்சரிக்கும் அன்பு குழந்தையாவே காலத்தை ஓட்டிவிட்டவள். எனக்கு பின்னால் என்ன செய்வே என்று கேட்டு அங்கலாய்க்கும் தந்தைக்கு பதில் சொல்லத்தெரியாமல் படிப்பு ஒன்றையே நினைக்கும் பெண்.
அந்த ஒரே பிடிப்பான தந்தை இறந்தபோது, இனி தனக்கு படிப்புதான் எல்லாம் என்று ஆண் வேடமிட்டு ஊரைவிட்டு புறப்படுகிறாள்.வேடம் போடும் போது யாரும் நம்மை நம்புவார்களா என்ற எண்ணம் இருந்தாலும் , வேறு வழியில்லை...படிக்க வேண்டுமானால் ஆணாய் இருந்தால் தான் படிக்க முடியும் என்று முடிவெடுக்கிறாள்.
கல்லூரியில் கிடைக்கும் நண்பனுக்கு ஒரு இனிய தோழனையாய் மாறி கல்வியுடன் நட்பும் கிடைக்க மகிழ்ந்திருக்கிறாள். அவன் மேல் ஏற்படும் அன்பினைக்கூட படிப்பிற்காக அவள் புறந்தள்ளி விட்டுவிடுகிறாள்.
கதாநாயகனுக்கும் தோழனை பிரிந்தே இருக்கமுடியாத
அன்பு .
இடையில் கதாநாயகனுக்கு ஒரு பெண்ணை மணமுடிக்க ஆசையேற்படுகிறது.ஆனால் அவர்கள் மதக்காரணங்களால் அவன் மணக்க முடியாமல் ஆகிறது.
அப்போது அவன் தோழனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். நீ அவளை மணந்து பின் பிரிந்து விட்டால் நாங்கள் மணந்து கொள்ள தடையிருக்காது.( என்ன வழக்கமோ) ...ஆனால் மறுத்தால் நட்பினை விலக்கிவிடுவானோ என்று yentl அந்தப் பெண்ணை ஆணாக இருந்து மணந்து கொள்கிறாள்.
சிறிது சிறிதாக தன்னை மணந்தவரிடம் அந்த பெண்ணும் ,எத்தனை தன்மையாக இருக்கிறார்..பெண்ணை படிக்க சொல்கிறாரே எத்தனை நல்லவர் என்று மனமாற்றம் கொள்வதை மென்மையான காட்சிகளில் காட்டுகிறார்கள். பிரியும் கட்டத்தில்" நீங்கள் வரும்முன் நான் நீங்கள் சொன்னது போல் படித்து உங்களுக்கு பிடித்தமான மனைவியாக மாறி இருப்பேன்" என்று yentl லிடம் சொல்லும்போது இவ்வளவு அன்பாக இருக்கிறாளே என்று வருந்தும் காட்சியும் அருமையாக இருக்கிறது.



தோழனிடம் அவள் என்னை விரும்பத் தொடங்குகிறாள் என்று தெரிகிறது என்னால் மேலும் நடிக்க இயலாது என்று சொல்லி yentl பிரிகிறாள். அப்போது நான் ஒரு பெண் , உன் மேல் எனக்கும் அன்பிருந்தது என்று சொல்லி ,அவர்கள் திருமணம் புரிந்து நன்றாக இருப்பதையே தான் விரும்புவதாக கூறி விடை பெறுகிறாள்.
ஒரே பெண் கணவனாக, தோழனாக ,காதலியாக .
படிப்பின் மேல் இருந்த காதலால் தன் பெண்மையை மறைக்க நேர்ந்ததையும், தன் அன்புக்குரியவனை இழக்க நேர்ந்ததையும் அவள் தனிமையில் அழுது தீர்க்கிறாள்.
அது என்னமோ உணர்வு பூர்வமான படங்கள் தான் அதிகம் பிடிக்கிறது . இதெல்லாம் ஒரு படமான்னு சிலருக்கு தோணலாம். ஆனா நெகிழ்ச்சியான ,மனதை தொடும் கதையாக எனக்கு பட்டது.பார்த்தது இந்தியாவிற்கு என்று தணிக்கை செய்யபட்ட பதிப்பு.
directed by Barbara stresisand அவங்களே கதாநாயகி பாடி நடித்து இருக்காங்க.papa , can u hear me கேட்க உருக்கும் பாட்டு.

February 1, 2007

உங்களுக்கு எந்த ஊரு?

"உங்களுக்கு எந்த ஊரு?" இது எங்க மாமா பார்க்கிறவங்க கிட்ட கேட்கற முதல் கேள்வி.பேசியே வேலை வாங்குகிற
அரசாங்க வேலையில இருந்ததால பேச்சுதிறமை அதிகம்.
அத்தை சொல்வாங்க, அவங்க ஊரையே விலை பேசிட்டு வந்துடுவாங்கன்னு.

அந்த கேள்விக்கு துத்துக்குடின்னு சொன்னா அதான் எங்க ஊரும் நான் அங்க தான் பிறந்ததுன்னு சேந்துக்குவாங்க.
இல்லயா அவங்க திருநெல்வேலின்னு சொல்லிட்டா அப்படியா நம்ம பக்கமா நான் வளர்ந்த இடம் ன்னு சொல்லி பேச்ச வளர்த்துவாங்க.

கோவை, உடுமலை இல்லை பொள்ளாச்சி அப்படின்னாலும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ...ஐயா அப்படி இப்படின்னு ஓரோர் ஊரிலும் ஒன்பது இல்லன்னா பத்து வருஷம் வேலை பார்த்திருக்கிறேன் . எல்லாம் நம்ம ஊரு தான்னு , இப்படி சளைக்காம யாதும் ஊரே யாவரும் கேளீர் ன்னு நட்பாக்கிக்குவாங்க.

இங்க டெல்லி வந்து போனா ஹிந்தி தெரியாதுன்னாலும்
அங்க இங்க சுத்தி, "தமிழா நானும் தமிழ் தான்". அப்ப தமிழ்நாடுன்னு சொல்லிக்கிட்டு ஊர்ப்பாசம் வந்திடும்.

சிங்கப்பூரையும் விடல;மக வீட்டுக்கு போய் இரண்டே வாரத்தில் ஹிந்தி , தெலுங்கு எல்லாரும் நண்பர்களாகி "அவங்க மகளா நீங்க" ன்னு கேட்டு அவளுக்கு வீட்டுக்கு வந்து ஹாய் சொல்லிட்டு போவாங்க.ஆமா இப்ப இந்தியாவில் இருந்து வந்தவங்க என்பதே போதுமே.

இந்த ஊர்ப்பாசம் எங்க வீட்டுல சிலசமயம் சின்ன செல்லச்சண்டைகள் வரக் காரணமா இருக்கும். யாராச்சும் பெரிய பாடகரோ இசை அமைப்பாளரோ அவங்க பேட்டி இல்லாட்டி இசை நிகழ்ச்சி பாக்கும்போது "பார்த்தியா எங்காள" என்று ஒருத்தர் ஆரம்பிச்சா அடுத்த ஆள் "அது என்ன அவர் உங்க சொந்தமா , எனக்கும் தான் அவங்க படைப்புகள் பிடிக்கும் , உங்க கட்சிக்கு எப்படி சேர்க்கலாம்" என்று கொஞ்சம் வாதம் பண்ணிக்குவோம்.

கல்யாணம் ஆன பெண்களுக்கு சொல்லவே வேணாம் வளர்ந்த ஊர் வாழ்கிற ஊருன்னு ரெண்டு. எங்க ஊருன்னு அம்மா வீட்டுல இருக்கும் போது பேசினா வாழ்கிற ஊரையும், வாழ்கிற ஊரில் சொன்னால் அம்மா ஊரையும் சொல்றதா அர்த்தம் ஆகிடும்.

எப்படியும் நமக்கு இந்த ஊர்ப்பாசம் வாழ்ந்த ஓரோரிடத்தில் இருந்தும் கொஞ்சம் ஒட்டிக் கொள்கிறது.
அந்த ஊரைப் பற்றி நல்லதா யாராவது சொன்னால் ஆகா ஏதோ நம்மளயே ஒருத்தர் சொன்னது போல பூரிச்சு போறோமே.

ஆமா, எழுதற எனக்கு எதெல்லாம் சொந்த ஊரு, மாமா மெச்சும் மருமகள் .பாருங்க நம்ம லிஸ்ட் இதுதான்,
மதுரை ,திருநெல்வேலி, கோவை, பொள்ளாச்சி,நாகை மாவட்டம், தஞ்சை மாவட்டம் இப்போது தில்லி.

வரைபடத்தில் இந்த இடங்களின் சில பல கி.மீ தொலைவில் இருக்கும் மற்ற இடங்களையும் , அதெல்லாம் கொஞ்சம் தூரம் தானே ஏன் அதை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லி அதெல்லாம் கூட சேர்த்துக்குவேன் அப்பப்போ.