February 28, 2007

வழி வழியாய்

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.
ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.



வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெ ற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள். முன்னோர்களின் விஷய ஞானம் படித்து அறிந்து கொள்வது விட செவி வழி அதுவும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.



பெற்றவள் அறிவு பூர்வமாக சொல்லித்தருகையில் பாட்டி
கதைகள் சொல்லி பேரக்குழந்தைகளை ஒரு கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்... குழந்தைகள் புதிதாக கற்பனை வளத்தைப் பெறுகிறார்கள். மரம் வந்து பேசுமாம் ,கிளி வந்து பேசுமாம், ஏழு மலைகளும் ஏழு கடல்களுக்கும் அப்பால் இருக்கும் அபாயம் மிகுந்த பகுதிக்குக் கூடப் போய் வரும் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய் குழந்தைகளுக்கு தைரியம் வருகிறது.



இப்புனைவு கதைகளில் குணநலம் கூட கற்றுத் தரப்படுகிறது. கடும் பயணத்தில் கதாப்பாத்திரத்தால் முன்பு உதவி பெற்ற எறும்பும் , மீனும் வந்து உதவும்.
முன்பு கடுமையாய் நடந்து கொண்ட கதாப்பாத்திரத்துக்கோ ஆபத்துகளில் மீள இப்படி உதவி எதுவும் கிடைக்காது. நட்பும் உதவியும் ஆபத்தில் உதவும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இயற்கையை நேசிப்பதற்கு இயற்கையோடு ஒன்றிப் போவதற்கு கற்றுத்தந்தார்கள். வீட்டுத்தோட்டமும் பிறஉயிர் பேணுதலும் இயற்கையாய் பழகித் தந்தார்கள்.


உடல் நலத்திற்கு வழிவழியாய் வந்த அனுபவத்தில் இந்த உணவு இதற்கு நல்லது , இந்த கால நிலைக்கு உகந்தது இது என்று அறிந்து கடுக்காயிலிருந்து கஷாயம் வரை உபயோகிப்பது அறிந்திருப்பார்கள் பெண்கள்.



நான் நன்கறிந்த முதல் பெண் என் தாய்.
நான் என் தாய் வழி கற்றவை ஏராளம். சாந்தமும் நேர்மையும் அவர்களின் குணநலன். யாருக்கும் தீங்கு நினைத்தலும் நமக்கு கெடுதல் என்று சொல்வார்கள்.
ஆன்மீகமும் அறிவியலும் பொதுஅறிவும் விளையாட்டாய்
போதித்தார்கள்.



வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை.


மனிதன் மனிதத்தின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத்
துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேஎண்டுமென்று மன்மார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனும் மகரிஷியின் தத்துவங்களில் அவர்களுடைய ஈடுபாடும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்னை வியக்கவைக்கும். நேற்று பேச ஆரம்பித்திருக்கும் மழலையிடமிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் சமமாய் கொள்ளும் நட்பின் சாயல் தாய் வழியாய் எனக்கும் என்வழி மகளுக்கும்.


அன்பும் ,கருணையும், பெண்கள் கற்ற கல்வியும் அவளுக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும்.. அக்குடும்பத்து நபர்களால் சமூகத்திற்கும் வழிவழியாய் சென்றடையட்டும்.

February 27, 2007

புறாக்கூடு

தில்லி வந்த புதிதில் புறாக்கள் புதிய அனுபவம். எங்கள் ஊரில் கோயில்களில் மசூதிகளில் சர்ச்சுகளில் தான் அதிகம் இருக்கும் .ஊரில் காக்கைகளுக்கு உணவு வைப்பது வழக்கம் தான். குருவிகள் அத்தனை வராது. இங்கே தில்லியில் எல்லாரும் ஒரு மண்பாத்திரத்தில் உணவும் இன்னொரு மண்பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து புறா மற்றும் குருவிகளுக்கு என்று வெளியில் வைத்திருக்கிறார்கள். நானும் வைத்தேன். தில்லி போன்ற நகரத்தில் குருவிகளை ரசிக்க முடிகிறதே என்று தோன்றியது.




இங்கே வீடுகளின் சன்னல்களில் கூட கூடு கட்டி வாழ்கின்றன். எங்கள் குளியறை சன்னலில் சல்லடைக் கதவுக்கு வெளியே கண்ணாடிக் கதவு சாய்ந்த வாக்கில் இருக்கும் .இடையில் குளிருக்கும் வெயிலுக்கும் வாகாக கூடுகட்டும். வருடத்தில் பாதி நாட்கள் 'குகூ' குகூ' எனும் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கும்.




கூடு கட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவது என்று எல்லா காட்சிகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தேன். சமயத்தில் அதனுடன் பேசுவேன். அந்த அறையின் சத்தத்திற்கு அடைகாக்க ஆரம்பித்த காலத்தில் புறா பயப்பட்டு நடுங்கும். "இல்லை எதுக்கு பயப்படற நான் என்ன செய்தேன் உன்னை" கொஞ்ச நாளுக்கப்புறம் பழகியது போல் நம்மை கண்டுகொள்ளாமல் இருக்கும்.



சில வருடங்களுக்கு பிறகு வேறு வீடு வாங்கிய பின் இந்த
இனிய அனுபவம் ஒரு சோக அனுபவமாக மாறிவிட்டது.
அங்கே கூலருக்கு மேலே கூடு கட்டிக் கொண்டு இருந்தன புறாக்கள் இரண்டு . குஞ்சு பொரிக்கும் காலம் வரும் வரை கண்ணில் படாத பூனையார் வந்து அம்மா அப்பா குஞ்சுகள் என்று கபளீகரம் செய்துவிட்டார். துர்நாற்றம் , ரத்தம் என்று மனதை கலக்க வைத்தது புறாக்களின் மிச்சம்.




மீண்டும் ஒருமுறை கட்டியது அதே இடத்தில். கலைக்கலாம் என்றால் வயிற்றில் பிள்ளையோடு இருக்கிறாய் கலைக்காதே என்றார்கள் அம்மா. ஆனால் புறா அது உயிரோடு இருக்காதே என்று ஒரே கவலை. சரி என்று உயரத்தில் ஒரு ஆணியை அடித்து ஒட்டை பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றை மாட்டி அதில் மணல் இட்டு நிரப்பி கூட்டைக் கலைக்காமல் அதில் போட்டு வைத்தோம்.




இந்த முறையும் குஞ்சு பொரிக்கும் வரை ஒன்றும் இல்லை. குஞ்சு பொரித்து சில நாட்களில் வந்தார் பூனையார் எங்கிருந்து எப்படித்தான் தாவியதோ தெரியவில்லை . புறாவின் குடும்பத்தில் இறகுகள் தான் மிச்சம். எல்லோரும் பூனைக்கு உணவு புறா நீ ஏன் வருத்தப்படுகிறாய் ? என்று சமாதானப் படுத்தினார்கள்.
ஆனால் வீட்டினருகில் வசித்த ஒரு குடும்பத்தை அல்லவா இழந்துவிட்டேன் மனம் சமாதானம் அடையவில்லை.




அதற்கு பிறகு அடிக்கடி கட்டுகிறது. அது கட்ட முயற்சிக்க
நான் கலைத்துப் போட இது அடிக்கடி நடக்கிறது. ஒரு இடத்தில் கட்டும் பின்னர் கலைத்து விட்டு அதனுடன் பேசுவேன் வேண்டாம் போய் விடு . அது மீண்டும் பக்கத்தில் வேறு இடத்தில் கட்டும். குறைந்தது மூன்று முறை கட்டி கட்டி பிரித்துப் பால்கனியின் கட்டைச் சுவற்றில் வைத்து எடுத்துப் போ என்பேன். அதற்கு பிறகு தான் அது போகும்.




இப்போது என் மகனும் வந்து 'காக்கா' (புறாதான் அவன் பாஷையில்) 'நோ நோ' 'டோண்ட் டோண்ட்' (செய்யாதே )
என்கிறான். மகளோ "எனக்கு புறா பாஷை தெரிந்தால் அதுகூட பேசி இங்க கட்டினா பூனை வந்து சாப்பிட்டுடும் என்று சொல்லித் தருவேன்" ., என்கிறாள்.

February 26, 2007

கேள்விகளோடு ஒரு திரைப்படம்

கார்டூன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்
எப்போது முடியும் எப்போது முடியும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். "அப்படி என்ன படம் தான் பார்க்கப் போற. 9 மணிக்கு முடியும் தந்துடறேன் கண்டிப்பா" . எப்போவும் நல்ல படம் டிவில வருவதாக இருந்தால் ஒன்று நேரம் மறந்து வேறு வேலையில் மூழ்கிப் பார்க்க தவறிப் போய் விடும் , இல்லை அப்போது தான் யாராவது வீட்டிற்கு வந்து இருப்பார்கள்.


தி பியானிஸ்ட் படத்திற்காக வேலை எல்லாம் முடித்து விட்டு காத்திருக்கிறேனே அது தான் காரணம். ஆனந்த விகடனில் அதன் விமர்சனம் படித்தது தான் இப்போது மீண்டும் புத்தகத்தை தேடி எடுத்துப் படிக்க மனநிலை இல்லை. சரி இன்னமும் கார்டூன் திரைப்படம் முடியவில்லையே இணையத்தில் தேடலாம் . தமிழில் தேடி விட்டு கிடைக்கவில்லை என்றால் ஆங்கிலத்தில் தேடுவோம் என்று இருந்தேன்.

தமிழில் பாஸ்டன் பாலாவின் தளம் வந்து கூகிளில் விழுந்தது. அவருடைய விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும் படித்தேன் . கதையின் களஅடிப்படை புரிந்தது, நல்ல விமர்சனம் . 'உன் படம் ஆரம்பிக்கப்போகுது வா' பெண் அழைத்தாள். அவளுக்கும் ஆர்வம் என்னதான் அம்மா பார்க்கப் போகிறாள் என்று . கதையைப் பற்றி சின்னதாக விளக்கம் சொன்ன போதும் இத்தனைக் கஷ்டத்துக்கு நடுவில் கதாநாயகன் எப்படி சிறுவயதில் இருந்து இவ்வளவு வளர்ந்தான்? என்று பெண்ணின் கேள்வி. அவள் கோணத்தில் அவனுடைய சிறு வயதுகாலம் தான் கவலை தந்திருக்கிறது.



குண்டுகளுக்கு நடுவில் பியானோவைத் தொடர்ந்து வாசிக்கும்போதே கதாநாயகனுக்கு இசையில் எத்தனை ஈடுபாடு என்று புரிந்தது . மற்ற படங்களைப் போல சாகசங்கள் நிகழ்த்தாமல் ஓடி ஒளியும் கதாநாயகன். நம்மைப்போல ஒருத்தன் என்று தோன்றுகிறது.
"இவர்கள் வேறு நாட்டுக்கு ஓடிப்போக முடியவில்லையா?" அடுத்தக் கேள்வி.



தனி இடம் பிரித்து யூதர்களை வைத்த பின் அந்தபக்கத்துக்கு போய் வரும் ஒரு சிறுவனை சுவற்றின் துளைக்கு அந்த பக்கத்தில் இருந்து நாஜிக்களில் ஒருவன்
இழுக்க இந்தப்பக்கம் இவன் இழுக்க கடைசியில் அந்த சிறுவன் இறந்து இந்தபக்கம் வரும்போது தன்னால் முடியவில்லையே என்று அப்படியே அந்த உடலை விட்டுப் போகும் போது "அம்மா அவன் செத்து விட்டானா "- பெண். "ம்''.



எதிர் வீட்டிற்குள் நுழைந்து சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் கைகளை மேலே தூக்கியபடி அழைத்து சென்று வெளியே ஓடவிட்டு கொல்வதும் , எழமுடியாத சக்கர நாற்காலி கிழவனை பால்கனி வழியே தூக்கி எறிவதும் "அம்மா இப்போ எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கிறே" நல்லப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று அதனால் தான். நிஜத்தில் இன்னும் இது போல் உலகத்தில் நடக்கின்ற இடங்கள் இருக்கிறது . பாவமில்லையா ?அவர்கள்.



எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டதற்கு நெற்றியில் சுடப்பட்டு இறக்கும் பெண் , கிளிக்கூண்டை கையில் வைத்துக் கொண்டு தனியே அழும் குழந்தை, கணவனைத் தேடும் வயதான கிழவி ஒரு மிட்டாயை கையிலிருக்கும் கடைசி டாலர் பணம் குடுத்து வாங்கி
நகவெட்டியின் கத்தியால் ஐந்தாக வெட்டி உண்பது ,
அவ்வப்போது குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி அழைத்து கொல்லப்படும் மக்கள் ஒவ்வொன்றும் தாங்க முடியாமல் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருந்தாள் பெண். குழந்தைகளும் இருக்கிறார்களே? போய் தூங்கு வேண்டாம் என்றாலும் அவள் மனம் கேட்கவில்லை. எனக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை.




ஓடி குண்டடி பட்டு மடிந்து விழுந்து கிடக்கும் பெண்ணருகில் கடந்து போகும் படையினருக்கு அஞ்சி இறந்தவன் போல் படுத்துக்கிடக்கும் காட்சியில் என் மனதுக்கு தோன்றியதை மகள் வெளிப்படையாக சொன்னாள். "சொல்லமுடியாது செத்துப் போனவன் மேலேயும் சுட்டுவிட்டும் போகலாம் இவர்கள் இல்லையா அம்மா".




தனியாக ஒரு வீட்டில் ஒளிந்திருக்க நேரும் போது பியானோ அருகில் இருக்க [வாசித்தால் மாட்டிக்கொள்வானே ] வாசிக்க இயலாமல் போய்
அதன் மூடியை திறக்கும் காட்சியில் அம்மா வாசித்து விடுவானோ இத்தனை கஷ்டமும் பியானோ வாசிக்கத்தானே ? அதற்குத்தானே உயிரே வாழ்கிறான்.
ஒரு நல்ல நாஜிப் படை வீரன் வந்து உதவும் வரை அவளுக்கு மனதே இல்லை . இவன் நல்லவனோ காட்டி குடுக்க மாட்டானே? நான் தான் பியானிஸ்ட் கடைசி வரை உயிரோடு இருப்பான் கவலைப்படாதே என்று சமாதானம் சொல்லி வைத்திருந்தேன். நீ உயிர் பிழைத்து என்ன செய்வாய்?.

நாஜியின் கேள்விக்கு பியானோ வாசிப்பேன் - அவன் பதில் . வாசித்துக் காட்டும் பொழுது நாஜியின் முகமாற்றம் இசையின் அழுத்தத்தால் அவன் இளகும் மனநிலை அருமையான நிகழ்வு.
இசையினை கேட்டபடி படத்தைப் பற்றி அறிய படத்தின் தளம்.


இதுபோல் இன்னமும் இலங்கையில் இராக்கில் குண்டுகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நம்மைப் போல நிம்மதி கிடைப்பது எப்போது ? என்று தெரியவில்லை.

இனிப்புடன் துவங்குகிறேன்

வளர் பிறை சுபமூகூர்த்தம். நல்ல நாளில் ஒரு இனிப்புடன் "சாப்பிட வாங்க" தளத்தில் எழுதத் தொடங்குகிறேன். முன்பே சொல்லிக்கொள்கிறேன் , நான் சமையலில் நிபுணி அல்ல , தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.


பாதாம் முந்திரி பர்பி [சரியாக வரவில்லை என்றால் பாதாம் முந்திரி அல்வா]எளிமையானதும் சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லாததுமானவற்றை மட்டுமே நான் முயற்சிப்பது .ஆகவே எந்த பண்டிகையானாலும் இதுவே எங்கள் வீட்டுசிறப்பு இனிப்பு.

மேலும் படிக்க இங்கே கிளிக்கவும்

February 23, 2007

மிடி,மேக்ஸி, ஜீன்ஸ் குர்தா

அப்போல்லாம் கவுனு,மிடி, மேக்ஸியும் தான் ஃபேஷன்.
மாமா அவங்க பேண்ட் ஐ மிடியாக்கி தச்சு தருவாங்க.அதுக்கு மேலே போட ஆம்பளைங்க போல முழுக்கை வச்ச கட்டம் போட்ட சட்டை. கீழே உள்ளது கருப்போ சிவப்போ கொஞ்சம் நிறம் அடர்த்தியா மேலே உள்ளது வெள்ளையில் மிடியின் நிறத்தில் கோடு போட்டதாக இருக்கும்.




மேக்ஸி போட்டா இந்த பூந்தளிர்
பைகோ கிளாசிக் ல் படித்த ஷேக்ஸ்பியர் அப்புறம் சார்லஸ் கதையில் வரும் இங்கிலாந்து , ரஷ்ய பேரரசிகள் போல தோற்றமளிப்பதாக தோன்றும். பாதம் வரை வரும் அடுக்குகளும் முழுக்கை மூடிய பஞ்சு போன்ற ஆடை .மேக்ஸியில் ரெட்டை சடையை முன்னால் போட்டால் ரெபக்கா . சிறுமியா இருக்கும் போது இது எல்லாம்.



கொஞ்சநாள் அப்புறமா சுடிதார் வழக்கம் வந்த போது ஆச்சி பேத்திகளை இல்லை இல்லை தாவணி தான் போடணும் என்றார்கள் . வீட்டில் கல்யாணம் வந்தால் வாங்கும் பட்டு பாவாடை தாவணி தவிரவும் மாமா முறை ஆச்சி முறைக்கு வரும் தாவணி தவிர வேறு வாங்கவே இல்லை . நன்றாகத்தான் இருக்கும் கட்டினால் ஆனால் யார் அதைப்போட்டு கொண்டு பஸ் ஏறி மற்றவர் கண் பார்வையில் விழாமல் போவது.




நைட்டியா என்னவொரு அங்கி என்று ஒன்றை சுற்றிக்கொண்டு என்பார்கள். ஊருக்கு போனால் பெரியவர்களின் பாட்டுக்களை கண்டும் காணாமல் போய்விடுவது தான். அதே ஆச்சி வயசுக்காலத்தில் தில்லிக்கு வந்துட்டு என் மருமகளுக்கு நைட்டி ரெண்டு வாங்கித்தா, பேத்திகளுக்கு சுடிதார் வாங்கித்தா வந்ததுக்கு நியாபகமா அவங்களுக்கு எதாச்சும் வாங்கிப்போனும்
என்ற போது நாங்கள்ளாம் அந்த காலத்துல வாங்கின
பாட்டு நியாபகம் வந்தது, தவிர்க்க முடியாமல்.




ஜீன்ஸ் போடனுங்கறது ஒரு கனவு. ஒருமுறை கல்லூரி சுற்றுலாவில் தோழியின் ஜீன்ஸ் போட்டு புகைப்படம் எடுத்தோம் . அது எதோ குளறுபடியாகி சரியாக வரவில்லை. அம்மாவுக்கு தான் சந்தோஷம் . நல்லவேளை விழலை.இதெல்லாம் கல்யாணம் ஆகி அந்த வீட்டில் வச்சுக்கோ. ஹ்ம். என்ன ஒரு பயம் பாருங்க.




ஏதோ பரவாயில்லை. கல்யாணத்துக்கு பெட்டிபெட்டியா
குடுத்த புடவை எல்லாம் ரிடன் ஃகிப்டா அம்மாவுக்கும் மாமியாருக்கும் போயாச்சு. இங்க சுடிதார் தான்.
தலைவர் நம்ம நாலரை அடிக்கு அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. ஜீன்ஸ் கனவும் நிறைவேறிடிச்சு. ஜீன்ஸ்ஸும் குர்தாவும் சீருடை ஆகிவிட்டது.
இப்போது அம்மா மூச் ...பேச முடியுமா என்ன.




காலம் மாற மாற உடைகளும் நாகரீகமும் மாறுகிறது.
அன்று கூடாது என்றது இன்று வழக்கமாகிவிட்டது. இன்று
நான் படித்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லாம் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள். என்ன எளிதாக சைக்கிள் ஓட்டி போகிறார்கள். பொறாமையாகத்தான் இருக்கிறது.
மாற்றங்களின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இப்படி தோன்றுவது சகஜம் தானே.

முறிந்த உடன்படிக்கை

சாலை ஓர தவம் கலைத்து,
பின்பொரு புன்னகை.
மெளனமொழி பேசி முடித்து,
பின்பொரு உடன்படிக்கை.

தவங்களும், மௌனமொழிகளும்
உணர்த்தின காதல்.
நாட்காட்டி முழுதும்,
வர்ணஜாலம்.
முகம் பார்த்த நாட்கள்.


தவங்கள் குறைந்தது,
நிஜமொழி பேசினோம்.
காணாமல் போனது காதல்.
நாட்காட்டி முழுதும்
கருப்பு புள்ளிகள்.
போர்க்கள நாட்கள்.
ஓரோர் நியாயம்.
முறிந்த உடன்படிக்கை.

கால ஓட்டத்தில் ஓடி களைத்து,
ஓர் நாள்.
எதிர்பட்டோம்.

என் கையில் உன் செல்வம் .
உன் கையில் என் செல்வம்.
நிஜமொழி சொன்னது-
நீ நலமா? நலம்.
நீ நலமா? நலம்.
மௌனமொழி சொன்னது-
நலம் கேட்கும் நிலையானதே.

உடன்படிக்கையோ ,
நிஜமொழியோ இல்லாதிருந்தால்
நன்றாயிருந்திருக்கும்.

February 21, 2007

தையலில் இருந்து தமிழ்மணம் வரை

பள்ளியில் படிக்கும் போது அம்மா சொன்னாங்களே என்று
தையல் வகுப்பில் சேர்ந்தேன். கர்ச்சீப் தைக்கறதுக்குள்ள மேடத்தை ஒருவழியாக்கினேன். அம்மாவுக்கு சட்டை தைத்து தந்தேன். மேடத்துக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும் அது என்னா என் கிட்ட ஒக்காந்து வெட்டும் போது மட்டும் சரியாதானே வருது நீயா வெட்டினா ஏன் தப்பு செய்யறன்னு.. நீங்க இருக்கற தைரியம் தான் அப்படின்னு சொல்லி எப்படியோ நாலஞ்சு டிசைன் தச்சாச்சு. தையல்ன்னா என்ன தெரிஞ்சுகிட்டாச்சு. போதும்ன்னு விட்டாச்சு.


அப்புறம் கல்லூரி படிக்கும் போது ஹிந்தி. அப்ப தெரியாதுங்க இப்படி டில்லியில் வந்து மாட்டுவேன்னு ,
ஏதோ அப்படி ஒரு ஆசை. அங்க போய் படிக்கறத விட அரட்டை தான் நிறைய..இருந்தும் மூணு தேர்வு முடிச்சாச்சு. அவ்வளவு தான் இதுக்குமேல தேர்வெழுத நமக்காகாது .ஹிந்தி புரிஞ்சுடுச்சு .ஹிந்தி வகுப்ப விட்டாச்சு.



பாட்டு கத்துக்கணும்ன்னு ஆசை ..என் குரலுக்கு அவ்வளவு ஆசை கூடாது தான். ஆனா அப்போ யாரும் பக்கத்துல சொல்லித் தரவங்க இல்லாததால வயலின் கத்துக்கிட்டேன். இரண்டு வருசம் பாட்டெல்லாம் வாசிக்க தொடங்கினதும் வீடு மாறிட்டோம் . தப்பிச்சார் வாத்தியார்.


போன வீட்டு பக்கத்துல ஒரு பாட்டு டீச்சர் இருந்தாங்க . சரிதான் ஆசைப்பட்டது நிறைவேத்திக்க வேண்டியது தான்னு பாட்டு கத்துக்க போய் அடிப்படை அறிவு வளர்த்துக்கிட்டு இருக்கும் போதே , கல்யாணம் ,அப்புறம் டில்லி பயணம்.


கணவரோட லேப்டாப் மகிமையால வீட்டுலயே அடுத்த பொழுதுபோக்கு ,எக்சல், வேர்டு, பவர் பாயிண்ட் எல்லாம் புத்தகமும் லேப்டாப்புமா நானே .


கொஞ்சம் வருஷம் குடும்பம் குழந்தை .அப்புறம் குழந்தை தூங்கினதும் க்ளாஸ் போக கிடைத்த சனி ஞாயிறு மதியத்து பொழுதுகள் மல்டிமீடியா போட்டோ ஷாப்புமா
கழிச்சாச்சு. கம்ப்யூட்டர் வந்தது. நெட் வந்தது. சொந்தங்கள் நட்புகள் என்று மெயில் களும் சாட்டுகளும் பின்னர் வலை போட்டு , பிடித்த தளங்களை மேய்வதுமாய் பொழுதுகள் ஓடியது.

குழந்தை வளர்ப்பும் , குழந்தைகளுக்கான தளங்களும் என்று பொழுதுகள் ஓடியது. அடுத்த கட்டம் நம்ம பொழுதுபோக்கு பென்சில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் சொல்லித்தரும் தளங்கள் பார்த்து விதவிதமாய் வரைந்து தள்ளியாச்சு.


இப்போ அடுத்த படி தமிழ்மணம் தேன்கூடு வலைப்பதிவு . எப்ப இது போரடிக்கப் போகுது தெரியலை. ஆங்காங்கே இருப்பது என்
பென்சில் டிராயிங்ஸ் . ஒன்று என் பெண்ணை மாடலாக வைத்து நான் வரைந்தது . அப்புறம் செடி போல் இருப்பது நெகடிவ் டிராயிங்க் வகையை சார்ந்தது.

February 20, 2007

சில கேள்விகளும் பதில்களும்

என் மதமே சிறந்தது என்பது சரியா?

கொள்கை வெறி நல்லதல்ல. எனது மதம் ஒன்றே சரியானது மற்ற மதங்கள் தவறு என்பது நல்லதல்ல.எல்லாரும் கடவுளைத்தான் வழிபடுகிறார்கள். இனிப்பு ரொட்டியை நேராக சாப்பிட்டாலும் சரி, குறுக்காக சாப்பிட்டாலும் சரி இனிப்பாகவே இருக்கும்.

கடவுள் உருவம் ,அருவம் எது சரி?


ஒன்றில் நம்பிக்கை இருந்தால் சரி. உருவமில்லாதவர் கடவுள் என்றால் அது ஒன்றுதான் உண்மை என்ற எண்ணத்திற்கு இடம் தராதீர்கள். உருவமும் உண்மை என்பதை நினைவில் வைக்கவேண்டும். ஆனால் உங்களுக்கு எது நம்பிக்கையோ அப்படி கும்பிடுங்கள் .

கெட்டவர்களிலும் இறைவனே இருக்கிறான் அவர்களிடம்
எப்படி நடப்பது?

கடவுள் எல்லா உயிரிலும் இருக்கிறார். ஆனால் நல்லவர்களுடன் பழகலாம். கெட்டவர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் கடவுள்
இருக்கிறார். அதற்காக புலியைக் கட்டித் தழுவிக்கொள்ள முடியாது. புலியும் கடவுளே, புலி வருகிறது ஓடு என்பவனும் கடவுளே அவனுடைய வார்த்தையை ஏன் கேட்கக் கூடாது.

கெட்டவர்கள் கெடுதல் செய்ய வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?
பாம்பு ஒன்றின் கதை மூலம் சொல்கிறார், தீமை செய்ய வரும்போது அவர்கள் துன்பம் தந்துவிடாமல் இருக்க சீறலாம் பயமுறுத்தலாம் . ஆனால் பதிலுக்கு விஷத்தைச் செலுத்திவிடாமல் இருக்க வேண்டும் .

இன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாள். கஷ்டமான தத்துவங்கள் அவர் கூறும் எளிமையான கதைமூலம் யாரும் புரிந்துகொள்ளும்படி இருக்கும். எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்று மத நல்லிணக்கம் கூறிய அவருடைய கருத்துக்கள் நிறைந்த அமுதமொழிகள் புத்தகத்திலிருந்து எடுத்தது.

February 19, 2007

மிதியடியின் உதவியில் எடுத்த ஃபோட்டோ

மெழுகுவத்தி உதவியில் எடுத்தப் படத்தை என் மற்றொரு பதிவில் பார்த்திருப்பீர்கள்.. லைட்டிங்கில் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாகி விட்டது. இரவில் எடுப்பதில் இரண்டு பிரச்சனை. ஒன்று வீட்டில் எல்லாரும் இருப்பது. மற்றொன்று காமிரா முழு இருட்டா எடுக்குது.



சந்தை நாளை எதிர்பார்த்திருந்தேன். புது காய்களை வாங்க.
போகும் போதே ஒரு எண்ணம் வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் நல்லா , அழகா, இந்த பச்சைக் கலரில் காம்பு வைத்த தக்காளி எல்லாம் போடுவாங்க நமக்கு எங்க கிடைக்கும்ன்னு . ஆனா பாருங்க என்னைக்கும் இல்லா திருநாளா அதே மாதிரி தக்காளி பத்து ரூபாய்க்கே கிடைக்குது.


ஆனா வெங்காயம் தான் விலை அதிகம் அன்னைக்கு நான் எப்போதும் சின்ன சின்ன அளவு வெங்காயம் தான் வாங்கறது. போட்டோ எடுக்க பெரிய அளவு ல இருக்கறதா தேர்ந்தெடுத்து வாங்கியாச்சு.



அடுத்த நாள் காலையில் கணவரை ஆபிசுக்கும்,
பெண்ணைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு , பையனை தூங்க செய்து முதலில் வீட்டை அமைதியாக்கியாச்சு. அப்புறம்
காயை எல்லாம் எடுத்து நல்லா கழுவி வச்சுக்கிட்டு யோசிச்சேன் யோசிச்சேன். யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.எப்படி லைட்டிங் குடுக்கலாம்.மெழுகுவத்திய எடம் மாத்தி வித்தியாசம் காட்டலாம். இந்த சூரியன் என் பேச்சு கேட்குமா??


சூரியன்ன உடன ஒரு நியாபகம் வந்தது. ஒரு முறை சூரிய கிரகணம் வந்த போது ஆச்சி வீட்டுல நேரா சூரியனப் பாக்கக்கூடாதுன்னு சொன்னதால கண்ணாப்பை (ஓட்ட ஓட்ட கரண்டி) வச்சு சூரிய வெளிச்சத்த தரையில் பார்த்தா
சின்னச் சின்ன பிறை நிலா மாதிரி தெரிஞ்சதப் பார்த்தோம். இப்ப வெங்காயம் தக்காளி தெரியற அளவு பெரிய கண்ணாப்பைக்கு எங்க போக. அப்பத்தான் கண்ணுல பட்டது இந்த மிதியடி.

பால்கனி தண்ணியா இருக்கும்ன்னு ரப்பர் ல போட்டு இருக்கும் மிதியடி ஓட்டை ஓட்டையா இருந்தது. எடுத்து வச்சு பக்கெட்ட முட்டு குடுத்து நிக்க வச்சுப் பார்த்தா அழகா வட்ட வட்டமா வெளிச்சப் புள்ளிகள். காயை எல்லாம் அடுக்கி வச்சு அழகு பாத்துட்டு இருந்தேன் அம்மா வா வா ன்னு பையன்..அதுக்குள்ள ஏண்டா எந்திரிச்சான் இவன்.. சரி என்ன பண்ணன்னு மடியில வச்சுக்கிட்டு தொடர்ந்தேன்.

அவன் "அம்மா அம்மா", "மம்மம்' , "கிளிக் கிளிக்" இப்படி வர்ணனை செய்துகிட்டே சில சமயம் கையை நடுவில் கொண்டுவந்து வைப்பான். இதற்கிடையில் தக்காளி ஒன்று அவன் கைக்குப் போயிருக்கும். சரி இத்தனை இருக்கு ஒன்னு கொறைன்ஞ்சா என்ன ? ஆமான்டா மம்மம் தான் போட்டோ தான் எடுக்கறேன்னு பதில் சொல்லிக்கிட்டே கொஞ்சம் வரிசைகளை மாற்றி வைத்து அப்படி இப்படி மிதியடியின் நிலைகளை( பொஷிஸன்) மாற்றி எடுத்துத்
தள்ளினேன்.


பள்ளியில் இருந்து வந்த பெண், என்ன மிதியடி வச்சு போட்டோ எடுத்தயா , சீ. சீ. என்றாள் . என்ன மிதியடி மேலயா வச்சேன். அது லைட்டிங் தானே தந்தது. மூன்று நாளா மூடி இருந்த வானம் அன்னைக்கு சூரியன வெளிய விட்டதே எனக்கு புகைப்படம் எடுக்க வசதியாகத் தானே. இது தாங்க நான் த.வெ.உ புகைப்படப் போட்டிக்காக புகைப்படக் கலைஞர் ஆன கதை.

பன்னிரண்டு வருசம் முன்னாடி தம்பிய மெழுகுவத்தி கிட்ட வச்சு ஒரு போட்டோ எடுத்தேன். அட அந்த 1000 ரூ கோனிகா கேமிரா ஃப்ளாஷ் இல்லாம எடுக்காது ன்னு தெரியாது. அதனால் நல்ல வெளிச்சமா ஒரு வித்தியாசமும் இல்லாம வந்தது. கண்ணாடி முன்னாடி நிக்க வச்சு தோழிய எடுக்க முயற்சி செய்து அதுவும் ஃப்ளாஷ் கண்ணாடியில் பட்டு நம்ம திறமையை சோதிச்சுருக்கு.




முதல் முதலா இப்படி படைப்பு ஒன்று
மீடியாவில வந்துருக்கு. நன்றி திரு சர்வேசன்.

NOT ONE LESS

நான் ரசித்த படங்களின் வரிசையில் இது சீனத்திரைப்படம். எத்தனையோ விருதுகளைப் பெற்ற படம். சீனாவின் ஒதுக்குபுறமான ஒரு மலைப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்
விடுமுறையில் செல்ல நினைக்கும்போது அதுவரை பள்ளியை நடத்த அவருக்கு ஒரு 13 வயது சிறுமிதான் கிடைக்கிறாள். வறுமையும் பணத்தேவையும் காரணமாக
வேலைக்கு வரும் அவளை ஒரு குழந்தை குறைந்தாலும் அவளுக்கு கிடைக்க இருக்கும் பணம் குறையும் என்று
சொல்லி விட்டு போகிறார்.

அவளும் தனக்கு தெரிந்தவற்றை வைத்து குழந்தைகளுடன் குழந்தையாக வகுப்பு நடத்துகிறாள்.
ஒரு மாணவன் வறுமையால் படிப்பை விட்டு வெளியூர் சென்று வேலை செய்யப் போய் விடுவான். அவனை திருப்பி எடுக்க அவள் செய்யும் முயற்சியே கதை.

பள்ளியில் பாடம் எடுப்பதை கவனிக்கும் ஒருவர் ஆகா முன்பிருந்த ஆசிரியரை விட இவள் நன்றாக எடுக்கிறாளே
என்று நினைத்துப் போவார். காரணம் என்னவென்றால் அவள் எப்போதும் கணிதமே எடுப்பாள். ஒவ்வொரு மாணவனும் எத்தனை கையிருப்பில் வைத்து இருக்கிறான் அதனை சேர்த்தால் எவ்வளவு வரும் மொத்தம்? நகரத்துக்கு செல்ல டிக்கெட் எவ்வளவு? அதற்கு இன்னும் எவ்வளவு தேவை.இப்படி.


அனைவருமே செல்லவேண்டுமானால் பஸ் டிக்கெட்டுக்கு ஆகும் செலவு என்ன? அதற்கு எப்படி சம்பாதிக்கலாம் ? என்று எப்போதும் கணிதம் தான் அதற்கப்புறம் வகுப்பில்.

அருகில் இருக்கும் ஒரு செங்கல் சூளையில் செங்கல் அடுக்கி பணம் சம்பாதிப்பார்கள்.எத்தனை அடுக்கினால் எத்தனை கிடைக்கும் என்று கணக்கிடுவார்கள். அவர்கள்
முயற்சித்ததில் உடைந்தவற்றுக்கு போக முதலாளி தருவது போதாது. மீண்டும் மீண்டும் பணம் சேர்ப்பார்கள்.


ஒரு முறை எல்லாரும் கடைக்கு சென்று கோலா வாங்குவார்கள். அவர்களிடம் இருப்பதில் ஒன்று தான் வாங்கலாம். வாங்கி அனைவரும் அந்த கேனை பகிர்ந்து குடிப்பார்கள் மிக அருமையான காட்சி. இதில் ஒன்றுமே இல்லையே இதற்கா இத்தனை என்று பேசிக்கொள்வார்கள்.

கடைசியில் அதிகம் பணம் சேர்க்க முடியாது ,அவள் மட்டும் போய் தேடுவதே சரி என்று தனியாக புறப்பட்டு தேடி அலைவாள்.கண்டுபிடித்தும் விடுகிறாள். அவளால் அந்த பள்ளிக்கும் நன்மை ஏற்படுகிறது.


யாருமே இதற்கு முன் நடிக்காதவர்களாம் அதனாலேயே நன்றாக இருக்கிறது போல் தெரிந்தது. இயல்பாக தோன்றியது. சீனாவின் இயற்கை , மக்களின் ஏழ்மையை காட்டும் விதம் ,குழந்தைகள் என்று படத்தை பார்க்கவைக்க நிறைய காரணிகள் .கதை மற்றும் படத்தைப் பற்றி இன்னும் விரிவாக இங்கே இருக்கிறது.