June 29, 2007

பெயரிட்டு அழைக்காதே!



நான் நிரம்பி இருக்கிறேன்.
இனி இடமில்லாமல்.
உன் அன்பால், உன் நினைவால்.
என்ன வேண்டும் இனி.
நேசத்தால் நிறைந்த நெஞ்சம் ,
பெயர் சொல்லி அழைத்தாலே,
நிரம்பிய பாத்திரமென தளும்புகிறது.
கண்ணின் ஓரத்தில் சில துளிகள்.
போதும்
போதுமென்று தோன்றுகிறது.
பெயரிட்டு அழைக்காதே.
நான் நிரம்பி இருக்கிறேன் ,
இனி இடமில்லாமல்.






----------------------------------






அருகாமை உறுதிப்படுத்துவதில்லை
என்னுரிமை என்று.
அருகில் என்றா சொன்னேன்.
இல்லை ,
இட்டு நிரப்பிட முடியாத
பல வருடங்களின்
நீண்ட .....
இடைவெளி இருக்கிறது ,
கண்ணுக்குத் தெரியாமல்.
நீ நீயாகவும் இல்லை
நான் நானாகவும் இல்லை.
இருந்தாலும் இல்லாமல் போனதாக
சொல்லிக்கொள்ளலாம்.










நான் இயக்குனரான கதை

அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

என் கவிதை வரிகள்:


பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.





நடுவர் நிலாவின் கருத்து:





இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு: "பூங்கா"
காட்சிச் சுவை நன்று. குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்ததைத் தவிர்த்திருக்கலாம். சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம். கவிதையைக் காட்சியில் எழுதியதால் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் போகிறது சில வேளைகளில். இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு பருவத்தின்உணர்வுளையும் க்ளோஸப்பில் ஓரிரு ஃப்ரேம்களாவது வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்






அன்புடனில் வெளிவந்த புகாரியின் கடிதம்:
(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்பின் முத்துலட்சுமி,
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி திறந்தவெளியில் பொழுதெல்லாம் இனிதாக்கிச் சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
நறுக்கென்று ஒரு நல்ல கருத்து. அதை மிக எளிமையாய்ச் சொல்லிச் செல்லும் உங்கள் கவிதையும் காட்சிகளும்.
மரங்களை வெட்டிவிட்டு மாளிகைகள் கட்டும் முட்டாள் மனிதர்களுக்கு நல்லதோர் உபதேசம்.
கட்டிடங்களுக்கு இடமே இல்லாத நியூயார்க் நகரின் நடுவிலும் பெரியதொரு பூங்கா இருக்கும் "சென்ட்ரல் பார்க்" அது இல்லாவிட்டால் நியூயார்க்கும் ஒரு மயானம்தான்.
மீண்டும் மீண்டும் வரும் அதே காட்சிகள் அலுப்பைத்தருவது உண்மைதான் என்றாலும் நல்ல படைப்பு
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, காட்சியாய் அமைத்து தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி




அன்புடன் குழுவிற்கு நான் எழுதிய கடிதம்:


வெற்றி பெற்ற செய்திமுதலில் சகபதிவர் மங்கை மூலம் அறிந்தேன் , அப்போதே மகிழ்ச்சி அளவிட முடியாமல் இருந்தது. குடும்பத்தில் எல்லோரும் பாராட்டினார்கள். மெயில் தமிழில் படிக்க காலதாமதம் ஆகியது நல்லதொரு நெட் சென்டரில் விண்டோஸ் எக்ஸ்பி என்றால் படிக்கலாம் என்று பொன்ஸ் சொன்னதின் பேரில் பொள்ளாச்சியில் இருக்கும் நான் இப்போது மெயில் மற்றும் அன்புடன் பக்கங்களை தமிழில் படித்து பார்க்க முடிந்தது. சேதுக்கரசி hi கோபி யின் தகடூரை உபயோகித்துத் தமிழ் தட்டச்சும் வழி சொன்னது மிக எளிதாக இருக்கிறது. நன்றி கோபி.






கவிதை உருவானகதை மிகப் பெரியது. போட்டியில் இந்த பகுதி காட்சிக்கவிதை புதுமையாக இருந்தது. இப்படி ஒரு முயற்சி செய்ய வெகுநாளாகவே ஆசையிருந்தது. இப்போட்டி அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கவிதை ஒரு நாள் காலை கண்விழித்ததும் சிறு பொறியாக தோன்றியது. உடனே அதன் சுருக்கத்தை எழுதி வைத்தேன். பின் சமையலுக்கு நடுநடுவே அதன் விரிவாக்கமும்... வீடியோவுக்கான ஸ்டோரிபோர்டுக்கான வேலையும் குறிப்பெடுத்தேன்.






உடனேயே காட்சியை எடுக்க ஆசை அளவிட முடியாமல் போனது. ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னால் சிந்தாநதி அவர்களின் ஒரு விவாதக்களப்போட்டியில் பரிசாக எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. நான் பதேர்பாஞ்சாலியின் நாவலின் மொழிபெயர்ப்பு புத்தகம் கேட்டிருந்தேன். எழுத்தாளரின் பெயர் குறிப்பிட தவறி இருந்தேன் அதனால் அவர்கள் பதேர்பாஞ்சாலி படத்தினைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார்கள். அதுவும் ஒரு நல்ல புத்தகமே. இளைய இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாடபுத்தகம் அது.



அதில்குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விசயம். சத்யஜித்ரே ஒரு காட்சியை மூங்கில் புதர்களில் எடுத்தாராம். பணம் குறைந்ததால் மீதி காட்சி தொடர நாள் ஆகியதாம் அதற்குள் புதர் காடாகிவிட்டதாம். அதே காட்சி தொடர அவர் ஒரு ஆறு மாதம் காத்திருந்தாராம் காட்சியமைப்பில் அத்தனை ஒரு கவனம். அட யாரையெல்லாம் உவமை சொல்றான்னு நினைக்காதீங்க. முயற்சி செய்யும் போதே பெரியதாக கனவு காணனும் இல்லையா. அதனால் காத்திருந்து ஒரு 10 நாட்களாக காட்சிகளை எடுத்து பின் எடிட் செய்தேன். பின் அதனை ஒரு வடிவத்துக்கு கொண்டுவர மேலும் ஒரு வாரம் ஆனது எனக்கு ஏனென்றால் முதல் முயற்சி , கணினி தொழிட்நுட்பத்தில் தடுமாற்றம்.






நடுவர் நிலாவுக்கு நன்றி. அவர் குறிப்பிட்ட சில விசயங்கள் பாடலாக அதை பிண்ணனியில் ஒலிக்க செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது அதற்கும் முயற்சி செய்தேன் அப்போது எனக்கு பாடலை பதிவு செய்ய ஒரு நல்லதொரு சாப்ட்வேர் தெரியவில்லை. நிழல் படிந்தது போல் சில இடம் என்றது எனக்கு தெரிந்தே இருந்தது. அது மிக த்தொலைவில் விளையாண்ட குழந்தைகளின் காட்சி , எடுத்தபின் தான் தெரிந்தது நிழல் விழுந்தது. காட்சி திரும்ப கிடைக்காது என்பதால் அதை இணைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் வந்தது அது எல்லா காட்சியை இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட வீடியோ சாப்ட்வேர் அப்படித்தான் இருமுறை காட்சிகளை காண்பிக்கிறது எப்போதுமே.. கவிதை எழுத்தாக வருவதால் காட்சிகளை மறுமுறை பார்க்க வசதியாக இருக்கட்டுமே என்று அப்படியே விட்டுவிட்டேன்.


அன்புடனின் இக்கவிதைப்போட்டி மிகசிறப்பான ஒன்று. நன்றாக நடந்தது. எல்லாருக்கும் அறிவிப்பு சென்று சேர்க்க எடுத்த முயற்சி ஆகட்டும் , அடிக்கடி மெயில் செய்து தகவல்களை தெரிவிப்பதில் ஆகட்டும் மிக சிறப்பான செயல்பாடுகள். மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். அதற்கான ஆலோசனை தரும் அளவு யோசனை என்னிடம் இல்லை. என்னைப்போன்ற முயற்சி செய்போர்களுக்கு இது ஒரு நல்லதொரு வாய்ப்பளித்தது. அன்புடன் குழுமேல்மேலும் வளர ....வாழ்க வளமுடன். நன்றி
முத்துலெட்சுமி

June 28, 2007

மாயவரத்தில் பாசக்காரகுடும்பம்

அபி அப்பா தான் முதலில் நீங்க மாயவரம் போறீங்களா நானும் அந்த சமயம் வந்தாலும் வருவேன் பாக்கலாம் என்றார். கோபிநாத் மெயில் செய்து நானும் வரேன் அக்கா என்றார். கோவை பட்டறைக்கு சொல்லிக்காம் தில்லியிலிருந்து கிளம்பி வந்த சென்ஷி அங்கேயே டேரா போட்டிருந்ததால் அவரும் வருவார் என்று தெரிந்தது .அதுக்கப்புறம் பார்த்தா இம்சை (அதாங்க பேசாம உட்கார்ந்து இம்சை பண்ணாங்களே) , பாலைத்திணை காயத்ரி , மூத்தபதிவர் ராயல் ராம் , ஜி எல்லாரும் வராங்கன்னாங்க சரிதான் கச்சேரி களைகட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்...சந்திப்புக்கு முதல் நாள் தான் சொர்ணாக்கா (கண்மணி) வந்தாலும் வருவாங்க அப்படின்னு ஒரு செய்தி..



நான் உள்ள போன போது இம்சை குளிக்க போயிருந்ததால் காயத்ரியை காயத்ரி என்றும் அவர்கள் அம்மாவை அவர்கள் அம்மா என்றும் ஜி யை கோபி என்றும் கோபி யை ஜி என்றும் அறிமுகப்படுத்தினார்கள்.. ராயல் ராம் சின்ன கைப்புள்ளை என்ற அடைமொழியோடு அறிமுகப்படுத்தினார்கள். சின்ன வயசுல குளிக்கப்போன இம்சை கொஞ்சம் பெரிய பொண்ணா வெளிய வந்தாங்க. .
குளிக்கப்போன ராயல் ராம் இம்சையை விட அதிக நேரம் ஆக்கிட்டார் இதுக்கிடையில் வந்த சென்ஷிக்கான அறிமுகப்படலத்தில் இம்சையை காயத்ரி என்று குழப்பி சொன்னவுடன் ஏ ..மாத்தி சொல்றாங்கப்பான்னேன்.அட உங்களுக்கு ஜி யாரு கோபி யாருன்னே தெரியாது நீங்க சொல்ல வந்திட்டீங்களான்னாங்க



தலைவி என்ற ஒரு கெட்டப்போடு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் ...எத்தனை மணிக்கு வருவார்கள் என்று தெரியாது என்று கண்மணியின் வ்ருகை எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் எல்லாரும் காலைஉணவு சாப்பிட்டாங்க. காயத்ரி எல்லாத்துக்கும் என்னப்பா இது நான் கேட்டனா அப்படின்னு சிரிச்சுக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தாங்க .அவங்க அம்மா ஒரு புத்தகத்தோடு மூழ்கி எப்பவாவது அவங்க பொண்ண கலாய்ச்சா கொஞ்சமா கண்ணெடுத்து பார்த்துகிட்டாங்க.
காயத்ரி யின் அருமை பெருமையெல்லாம் அங்க போய் தான் தெரிஞ்சுகிட்டேன்


அஜெண்டா உண்டான்னு கேட்டேன் ..இது பதிவர் சந்திப்பு இல்லை ..நாமெல்லாம் ஒரு குடும்பம் . அப்படின்னாங்க...இம்சை எதாச்சும் பேசுங்க ...நீங்க பேசவே மாட்டிங்களான்னு கேட்டா...ஏன் ஏன் பேசுவேனே அப்படின்னு சொல்லிட்டு புல்ஸ்டாப் வச்சிட்டாங்க...ஏங்க இப்படி டப்புன்னு முடிச்சிட்டா எப்படிங்க பேச்சு வளரும்..அதான் வேற வழி இல்லாம் நானே பேச வேண்டிய தா இருந்தது..அப்படியும் ஒவ்வொருத்தரையும் ஜி நீங்க எப்படி எழுத வந்தீங்க..கோபி எப்படி எழுத வந்தீங்கன்னு கேள்வி கேட்டு பேச வச்சதும் நாந்தான். ..
ராயல் ராம் கிட்ட மூத்த பதிவரா நீங்க என்ன சொல்ல விரும்பரீங்கன்னு கேட்டதும் அவர் வெட்கப்பட்டுகிட்டே தன் அனுபவங்கள் சொல்ல ஆரம்பித்தார்.ஆனா குறுக்க வேறயாராவது பேசினா ட்ப்புன்னு டாபிக்க் மாறிப்போயிடும்.தமிழ் மணத்தோட புது மாற்றங்கள் பற்றி சந்தோஷமா பேசிக்கிட்டோம்.



கண்மணி வந்ததும் நானே யாராருன்னு கண்டுபிடிக்கிறேன்னு சொன்னாங்க..அசத்தலா கண்டும்பிடிச்சாங்க...ஆனா ஆஜானுபகவா ஒரு ஆள நினைச்சேன் இப்படி இருக்கீங்களேன்னு கொஞ்ச நேரத்துக்கு புலம்பிக்கிட்டே இருந்தாங்க என்னைப்பார்த்து. சரவெடியை கொளுத்திப்போட்ட மாதிரி படபடன்னு இருந்தது அவங்க பேச்சு..ரொம்ப வெளிப்படையா தனக்கு ஜூனியரான அபி அப்பாவின் காமெடி பதிவுகள் பார்த்து அவங்க பொறாமைப்பட்டதையும் அப்புறம் நட்பானதையும் சொன்னபோது உயர்ந்துட்டாங்க அப்படியே.
எனக்கு ராத்திரி ரயிலுக்கு போகவேண்டியதால சாப்பாடு எத்தனைமணிக்கு போடுவீங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன்..அப்படியும் அபி அப்பா 3 மணிக்கு த்தான் போட்டார். நல்லவேளை அவங்க அக்கா வந்து கொஞ்சம் உதவி எல்லாம் செஞ்சாங்க இல்லன்னா அவருக்கென்ன பொறுப்பாவது ஒன்னாவது.
சும்மா உட்காராமா சுத்தி வேலை செய்யர மாதிரி ஆக்ட் விட்டார்.
அபி அவள் அப்பாவின் வண்டவாளங்களை தண்டவாளங்கள் ஏற்றினாள்..



சாப்பிட்டவுடன் காலையில் வெளியே போன ஆண்கள் சிறிது நேரம் பிறகு வ்ந்தார்கள்..இதற்கிடையில் மங்கை போன் செய்து ஏன் நீங்க போலயான்னு கேட்டாங்க ...எனக்கு பழக்கமில்லைங்கன்னு சொன்னேன்.பிறகு எல்லாருடனும் அவங்க டில்லியிலிருந்தே அறிமுகம் செய்து கொண்டார்கள்.
நான் பேசவே ஆரம்பிக்கவில்லை என்று சென்ஷி சொன்னதும் பாவம் அவங்களுக்கு நெஞ்சு வலியே வந்திருச்சு. அப்புறம் இல்லையில்லை கொஞ்சமா பேசிகிட்டு இருக்கேன்னு கண்ணாடியை கழட்டிகிட்டே சினிமா டாக்டராட்டம் சொல்லி மங்கையை அபாயக்
கட்டத்திலிருந்து சென்ஷியே காப்பாத்திட்டார்.


குடும்பத்தில் ஒருத்தராக தன்னை இணைத்துக்கொண்ட அய்யனாரின் சில கவிதைகள் புரியாமலும் சில வார்த்தை பிரயோகங்கள் எங்களுக்கு பிடிக்காமலும் இருப்பதை பேசிக்கொண்டோம்.. இனிமே எல்லாரும் அப்பப்பவாச்சும் எதாச்சும் உருப்படியா எழுதுங்கன்னு கேட்டு கிட்டேன். எனக்கும் சேர்த்துத்தான் இது .



ஜி மற்றும் இம்சை ரொம்ப அமைதியானவங்க மாதிரி தெரிஞ்சாலும் உண்மையில் ரொம்ப ஆர்பாட்டமான ஆளுங்க...எழுத்துல யும் அவங்க ரொம்ப க்ளோஸான வட்டத்துலயும் ரொம்ப ஜாலியா இருக்காங்க..
கோபி அதிகம் பேசவே இல்லை...நான் தான் அடிக்கடி என்ன சொல்றீங்க ன்னு கேட்டு கேட்டு பேச வேண்டி இருந்தது..சென்ஷி க்கிட்ட முத்துலெட்சுமி இப்படி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலன்னாராம் என்கிட்ட இல்ல சொல்லி இருக்கணும்..இப்படியே அமைதியா இருந்து நல்லபிள்ளை பட்டம் வாங்கியவர் கோபி ஒருவர் தான்.


பேசிய விஷயத்தில் நிறைய குடும்ப ரகசியம் அதனால அதெல்லாம் எழுதல.கல்யாணத்தில் நீங்கள்ளாம் சேரை வட்டமா இழுத்துப்போட்டு அரட்டை அடிப்பீங்களா அந்த மாதிரி ஒரு அழகான அனுபவம். தெரு முக்குக்கு கேட்டுச்சாம் சிரிப்பு சத்தம். அபி தம்பிக்கு நன்றி.

ஒரு விஷயம் மறந்து போய் சேர்க்கிறேன்..வராத மீத ஃபர்ஸ்ட் தங்கச்சிய எல்லாரும் சந்திப்பின் போது நினைச்சிக்கிட்டோம்.

June 27, 2007

சென்னை சந்திப்பு

மொக்கை போட வாங்க என்று சொல்லிவிட்டு பதிவர் பட்டறை பற்றிய விவாத நேரமாக மாற்றிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள பயமாகிவிட்டது .தமிழ்நதி, சோமி, பாலபாரதி இப்படி கொஞ்சம் பேர் மெதுவா ஆரம்பிச்சோம் பொன்ஸ் உஸ் உஸ் என்று வேறு சத்தம்போட்டா பயப்படாம என்ன செய்யறது? அப்புறம் கொடுக்கப்பட்ட நேரம் தவிர பேசாம நல்ல பிள்ளைகளா விவாதம் முடிந்ததும் கொஞ்சம் பேசிக்கிட்டோம். இருந்தும் சரியாக பேசமுடியாத வருத்தம் இருக்கு.
-----
போன முறை சந்திக்க விட்டுப்போன தமிழ்நதியை சந்தித்தாலும் அதிகம் பேசமுடியவில்லை. இருந்தும் பார்த்ததே மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. எனக்கு தனியாக அடுத்த முறை ஒரு நாள் ஒதுக்கும் படி கேட்டுக்கொண்டு அவர்களிடம் பேச ஆசை.
------
என்னுடைய முதல் பதிவில் முதல் பின்னூட்டமிட்ட சிவஞானம்ஜியிடம் நன்றி சொன்னேன். வெட்டிபயல் பாலாஜியிடம் உங்க பதிவு தாங்க எனக்கு பதிவெழுதக் காரணம் என்றதும் பக்கத்திலிருந்த கப்பிபயல் போச்சுடா இதே மாதிரி எல்லாரும் சொல்லறாங்க என்று கொஞ்சம் பொறாமையா??(சும்மா) சொன்னார். இந்த நாய் வளர்க்கறது பத்தி எழுதணுது நீங்க தானேன்னு கப்பி கிட்ட கேட்டேன் நல்லாருந்ததுன்னா நான் தான்னு
வச்சுக்கோங்கங்கறார் அவர் பதிவு நிறைய படிச்சிருந்தும் சட்டுன்னு ஒன்னு நியாபகம் வரலை. பேசாம அருட்பெருங்கோகிட்ட நீங்க எழுத ற எல்லாக்கவிதையும் நல்லாருக்குன்னு சொன்னமாதிரி சொல்லி இருக்கலாம்.
விக்கி கிட்ட ஒலிப்பதிவு ஒன்னு போட்டிங்களே நல்லாருந்ததுன்னு சொன்னேன். (அதான் மூச்சு விடாம பேசிக்கிட்டே இருந்தாரே..).
-------
விக்கி , கப்பிப்பயல், அருட்பெருங்கோ ,பாலராஜன் கீதா இவர்களிடம் சில நிமிடங்கள் பேசினேன்.
மா.சிவக்குமாரிடம் பேசியது மகிழ்ச்சி . பதிவர் பட்டறைக்கு யோசனை சொல்ல எனக்கு எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் நான் பேசிய விஷயத்தைப் பற்றி என்னவோ சொல்ல வந்தார் வழக்கம் போல நான் குறிக்கிட்டுபேசிவிட்டேன் என நினைக்கிறேன் . அவரின் மலைநாடன் உடனான ஒலிப்பதிவு பற்றி பாராட்டினேன். என் மகன் மாமா என்றழைத்து விளையாண்டு கொண்டிருந்தான் அவரிடம்.
-----
அருள்குமார் ஒரேகல்லூரி என்பதால் கல்லூரியைப்பற்றி
பேசிவிட்டு அதிகம் எழுதாமல் இருப்பதற்கு காரணம் கேட்டுக்கொண்டேன். மாசிவக்குமார் அருள்குமாரைப் பாராட்டினார் நல்ல திறமையானவர் என்று.
பிரியன் எங்கே அன்புடனின் பரிசுக்கு எந்த புத்தகம் வேண்டும் என்று கடிதம் எழுதவில்லையே என்றார் ...நான் நீங்க அன்புடன் ஆளா என்று ஒரு கேள்வியைக் கேட்டு அவரை நோகடித்தேன்...அட நான் தாங்க அதிகம் அன்புடனில் இருந்து உங்களைத் தொடர்பு கொண்டது என்றார்.
---
ஐகராஸ் பிரகாஷிடம் பேச நினைத்தேன் மிஸ் பண்ணிவிட்டேன். அபிஅப்பாவும் சென்ஷியும் தொலைபேசியில் அழைத்து மற்றவர்களிடம் பேசிவிட்டு என்னிடம் கொஞ்சம் வாங்கி கட்டிக் கொண்டார்கள். வராமால் ஏமாற்றி விட்டார்கள். என்ன தான் இருந்தாலும் நம்ம மாயவர மீட்டிங் போல வராது என்று அப்புறம் எஸ்டிடீ போட்டு தனியா சமாதானப்படுத்திட்டேன்.
அதைப்பற்றி நிதானமா எழுதறேன்.
--
சோமியை நீங்கள் சொதி சோமி தானே என்று கேட்டு நிச்சயித்துக் கொண்டேன். உங்க பதிவு படிக்கிறேன் பின்னூட்டமிட நேரமில்லை என்று கொஞ்சம் பந்தா விட்டார்...என்ன என்றதும் பிபிசி க்கு என்னென்னவோ வேலை செய்கிறேன் என்று அடுக்கினார். என்ன செய்து என்ன... சொதி எழுதியது போல வருமா என்றேன் பாவம்.!!
அகிலன் அறிமுகப்படுத்திக்கொண்டார்.போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருக்கும்போது பாலபாரதி அக்கா இதையெல்லாம் பதிவுல போடமாட்டிங்களேன்னார் . அதெல்லாம் சந்திப்புக்கு வராத மங்கைக்காக நான் எடுத்துட்டு வந்தேனாக்கும்.
---
எல்லாவற்றுக்கும் நடுவில் என் மகன் பிரியனிடம் அவருடைய கேமாராவை வாங்கிக்கொண்டு நன்றாக விளையாண்டு கொண்டிருந்தான்.
டீ வருவதற்கு முன் யானைப்பசியில் பொன்ஸ் பேனாவை கடித்துக்கொண்டிருக்க நான் என்ன பசியா என்றதும் நகம் கடிக்க ஆரம்பித்தார். என் பையனுக்கு கொடுத்த பிஸ்கட்டில் ஒன்று எப்படி அவர்கைக்குப் போனது என்று தெரியும் முன் வயிற்றுக்குள்ளும் அனுப்பிவிட்டார். மொத்தத்தில் நிறைய பேரை நேரில் காணமுடிந்தது சந்திப்பின் சிறப்பு.