August 29, 2007

நிகழ்தகவின் படி என்றேனும்

நிகழ்தகவின் படி என்றேனும்
நடந்தே ஆகவேண்டியது தானே!!
சுழற்றி அடிக்காத ஒரு சின்னத்தூரல் மழை நேரத்தில்
மலைச்சாலையின் வளைவில்
தேநீருக்கு இறங்கிய இடத்தில்
எதிர்பாராமல் நடக்கவேண்டும் அந்த சந்திப்பு
இல்லையெனில்,
ஓய்வாக அமர்ந்த படி
அலைகளின் எண்ணிக்கையை எண்ணியப்டி
இருக்கையில்
சாயலை உணர்ந்து
திரும்பி வந்து
உற்றுப்பார்த்து
எப்படியேனும் நடக்கவேண்டும் அந்த சந்திப்பு.
திட்டமிடாமல் நடக்கும் என்று
எதிர் பார்த்திருக்கும் மனம்.
சின்ன சிரிப்போடு தொடங்குமா ?
துளி கண்ணீரோடு தொடங்குமா?
அனிச்சையாய் கை பிடித்து
நலம் கேட்டு தொடங்கிடுமா?
கேள்விகளின் வரிசை
நான் முந்தி நீ முந்தி என போட்டியிட்டு ஓடிவர
அத்தனையும் பின் தள்ளி
மவுனம் ஜெயிக்குமா?

August 27, 2007

சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு

நேற்றைப்போல ஏன் இல்லை
எந்த பக்கமும் இக்கேள்வி
எழாதவரை எல்லாம் சுகமே!

.
வாதங்கள் செய் ஆனால் வார்த்தையால் வருடிக்கொடு.
உறவின் விதி விலக்கி தோல்வியில்லா தோழமை கொடு.

சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு.
ஆராவாரமில்லாத அன்பைக்கொடு.
முரண்படு ஆனால் முத்தங்களில் முடித்துவிடு.

இப்படியாக ஒரு கனவின் கதறல்களை எழுத்தாய் உருவேற்றி இருந்தாள்.


மலரின் கவிதை வாரப்பத்திரிக்கையில் வந்துருக்கு...உயிர்ப்பான கவிதைகளைத் தொடர்ந்து அனுப்பும்படி ஆசிரியரின் கடித்ததுடன் ஒரு பதிப்பு இலவசமாக அனுப்பி இருக்கிறார்கள். முகிலனிடம் சொன்னால் என்னை திட்டி தானே கொஞ்ச நாளா எழுதற என்று கேட்பான்.


மலர் நேற்றே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் முகிலனைப் பார்க்கவே முடியவில்லை பள்ளி முடிந்து வந்தால் களைப்போடு வீட்டு வேலைகளும் இரவு உணவுக்கான வேலைகளும் அவளை கட்டிப்போட்டிருந்தன. அவனாக வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள். எப்போதும் முகிலன் இரவில் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான். அப்பாவோடு தொழிலைப் பற்றி பேசுவது போல நிலைப்படியில் அமர்ந்து கொஞ்ச நேரம் பொழுதுபோக்குவான். இல்லையென்றால் சின்ன அண்ணனோடு சினிமா பத்தி பேசிக்கொண்டிருப்பான்.


யோசித்துக்கொண்டிருக்கும் போதே உலை கொதித்து வழிந்து அடுப்பை அணைத்தது.. "ஏந்த மலரு என்ன கனவு" என்ற படி சின்ன அண்ணன் வரவும் நினைப்பை அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டையா முடியும் போதே சேர்த்து முடிந்தாள். நேற்றிரவுக்கான குழம்பை சுண்ட வைத்து எடுத்து சுட்ட அப்பளத்தோடு அவள் இன்று சின்னதாய் சமையலை முடித்ததே ஒரு எட்டு முகிலன் வீடு வரை போவதற்குத்தான்.

வாசல் தட்டியைத் தாண்டும் போது அப்பாவின் இருமல் அழைத்தது. "அப்பா இந்தா சுசீலாக்கா வீடு வரை தான் "
" ம்...இருட்டி என்ன வேலையோ போ..." "மன்னார்குடி பெரிய மாமா வீட்டுல இருந்து இன்னிக்கும் போன் வந்துச்ச்சாம் சுசீலாக்கா க்கிட்டவே அப்ப விசயத்தை கேட்டுக்கோ என்கிட்ட பேச எங்க உனக்கு நேரம் " இருமலோடே முடித்தார்.

சுசீலாக்கா வாசலிலேயே டாமியோட உட்கார்ந்து இருந்தது. அக்கா முகிலன் ஊரில் இல்லயாக்கா ....

உன்னைப் பாக்கவரலியா தேடிக்கிட்டு வந்தயா இதே வேலை உங்களுக்கு என்ன சண்டை இப்ப?

அக்கா நீங்க வேற நான் என்னைக்கு சண்டை போட்டேன் அதுவா வரும் கோச்சுக்கும் திட்டும் பின்னால நான் தான் எதுக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். இப்ப என்னவோ..."

"ஆமா பெரியமாமா வீட்டுல இருந்து இன்னிக்கும் போன் வந்துச்சு அப்பா சொல்லலையா வீட்டுக்கு மருமகள்னு வந்தா படிக்க வச்சு பாத்துக்கறேன்னு சொல்றாங்க. நீயானா இதும் பின்னால சுத்திட்டு இருக்கற இது ஒன் வேலையை தூக்கி எறிஞ்சிட்டு வீட்டுல சோறு சமைச்சிக்கிட்டு வெளியே போனா இவன் பின்னாடி குனிஞ்ச தலை நிமிராம போனாலும் எதாயாச்சும் கேட்டு சண்டை போடுவான்."
உனக்கு என்னிக்குத்தான் அறிவு வரப்போதோ!"

பேசிக்கொண்டே இருக்கும் போதே நாதனோடு சைக்கிளில் வந்து இறங்கிய வேகத்தில் முகிலன் வீட்டுக்குள் கண்டுக்கொள்ளாதவனாக புகுந்தது மலரை கவலைப்படவைத்தது. நாதன் "அண்ணி வரட்டா" என்ற படி நகரப்பார்த்தான். என்ன வாம் உங்கண்ணனுக்கு என்ற போது அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை..சங்கடத்தில். "இல்லண்ணி நேத்து உங்க பள்ளிடத்துல எல்லாரும் சினிமாக்கு போனிங்களாமே அவனுக்கு நீங்க சொல்லலையாம். அது எப்படி போகலான்னு கேட்டுட்டு ஒரே புலம்பல். சரி நான் வரேன். நின்னா அடிக்கவருவான்."

"ம்..இந்தா சொல்லிட்டேன் இவனை எல்லாம் ஒருத்தன்னு நீ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறயே போ போய் கெஞ்சு...
நீ ...அங்க போனா சொல்லனும் ....இங்க போனா சொல்லனும்ன்னு.. சே போபோ ...நீ மட்டும் என்ன சொன்னா கேக்கப்போறியா என்ன? நான் படுக்கறன்பா...அங்க முகிலன் அம்மா சோறு எடுத்துவச்சிட்டு தூங்க போயிட்டு ...நீயே போட்டுட்டு சமாதானம் செய்." கோபமும் நிறைய வருத்தமுமாக சுசீலாக்கா சொல்லிவிட்டு உள்ளே போனாள்.


தட்டு முன்னாடி கைலியும் பனியனுமாக உக்காந்திருந்த முகிலன் இவளுக்காகத்தான் காத்திருந்தான். வருவா சாப்பாடு போடன்னு. ரிமோட் டை கோபத்தில் அழுத்திய அழுத்தலில் ஒரு ஒரு சேனலும் அடிச்சு புரண்டு மாறிக்கொண்டிருந்தது.

கண்ணீரோடு அவள் பரிமாற அவன் சொல்லிட்டுப் போறதுக்கென்னா அவனவன் உன் பொண்டாட்டிய தியேட்டர்ல பாத்தேன்னு கிண்டல் பண்றான் ... நான் இல்லாம் பள்ளிடம் தவிர எங்கயும் போகதன்னு சொன்னா கேக்கறயா மனுசன் மானம் போகுது.

காதல் பண்ணிய தவறை கண்ணீரில் கழுவியபடி.. சோற்றை தட்டிலிட்டு குழம்பு ஊற்றும் போது அவன் ஆரம்பித்தான்
"சரி சரி போய் சேரு வீட்டுக்கு... இருட்டுல தனியா அனுப்பி இருக்கான் பாரு உங்கப்பன்.... "


வர வர எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க இவன் வேணான்னு ...நீ பண்ணற அலும்பும் தாங்காமத்தான் போயிட்டு இருக்கு காதல ஒத்துக்கிட்ட பாவத்துக்கே பொண்டாட்டின்னு படுத்தற..
போனவாரம் என்கிட்ட சொல்லிக்கிட்டா நாலு பசங்களோட சேந்துகிட்டு பாண்டிக்கு போன. .. அப்பாக்கிட்ட பெரியமாமா பையனைக் கட்டிக்க சம்மதம்ன்னு சொல்லிடறேன்..அடுத்த வாரமும் பாண்டிக்குப் போய் பொண்டாட்டி ஓடிப்போயீட்டான்னு குடிச்சுட்டு அழு. மலர் கையில் கொண்டுபோன பத்திரிக்கையை அவன் மீது விசிறி விட்டு வந்தாள் படிச்சிட்டு நாளைக்கு சொல்லு உ ன் முடிவை என்றபடி வெளியேறினாள்.

August 17, 2007

கணக்கா கணக்குன்னா என்னாப்பா!

வழக்கமாய் போகும் பாதைதான். யாரோ யாரையோ ஏதோ ஒரு அடுக்குமாடியின் காலியான அறையில் சத்தமாய் திட்டுவது போன்ற ஒலி கேட்டது. காகம் கூட கரைய யோசிக்கும் அந்த அமைதியான மதிய நேரத்தில் நேரத்தில் சாமான்கள் இல்லாத அறையின் சுவர்களில் பட்டு எதிரொலிக்கும் குரல் திடுக்கென்று தூக்கிவாரி போட்டது. ஏற்கனவே அதையும் இதையும் போட்டு குழப்பிக்கொண்டிருந்த மனது திடுக்கென்ற உணர்வால் இன்னமும் துணுக்குற்று சாலையோரத்தில் போய்க்கொண்டிருந்தவனை கவனமின்றி
சைக்கிள் காரன் மேல் மோத விட்டது.

"என்னாண்ணே யோசனை" என்று அவன் பதமாக கேட்டது கொஞ்சம் நிதானத்துக்குக் கொண்டுவந்தது. இப்படி நண்பணும் நிதானமாக பேசி இருந்தால்
எனக்கு ஏன் இத்தனை யோசனை என்று அவனுக்குள் எண்ணம் ஓடியது.இதுவரை உதவி என்று யாரிடமும் கேட்டது இல்லை. இவன் செய்திருக்கிறான் கேக்கும் முன்னரே மற்றவர்களுக்கு . ஆனால் இவனுக்கு ஒரு நிலை இப்படி என்று வந்த போது ..ம்...யாரையும் சொல்லி குற்றமில்லை...வெயில் கூட உறைக்காமல் யோசிக்க யோசிக்க தலைக்குள் ஒரு கொதிகலன் குமிழியிட்டு கொண்டிருந்தது.



"கடை போட்டு கடன் வாங்காம லாபமாத்தான் போனது எங்க தப்பு செய்தேன். நாலு பேருக்கு நல்லது செய்தது தப்பா.. யாரும் எதுவும் சொல்வது க்கு முன்னால அவங்களுக்கு உதவின்னு போய் நிப்பேனே...இன்னிக்கு நண்பன்னு வந்து இத்தனை நாள் என் பாசமான குடும்பத்துல ஒருத்தனா நடிச்சு வாழ்க்கையில்
கஷ்டப்படறேன்னு சொன்னப்போ என்கூடவே வச்சி தொழில் கத்துக்குடுத்ததும் எல்லா பணத்தையும் அவன் பேருக்காக்கி என்னை நடுத்தெருவில் இப்படி புலம்ப வச்சிட்டானே!" ஆராத மனது ஆறாக புலம்ப அவன் வீட்டையே அவனுக்கு அடையாளம் தெரியாதவனாகத் தாண்டிப்போய் பின்னர் உணர்ந்து தலையை உலுக்கியபடி திரும்பி நடந்தான்.



நண்பனின்?? குரல் இதய அறைகளில் பட்டு எதிரொலித்தபடியே இருந்தது "இதப்பாரு உன்கிட்ட பார்டனரா சேரும் போதே சொன்னது தான் இப்பவும்.. எனக்கு சீக்கிரம் பணம் பண்ணனும் முதல்முழுசாப் போடமுடியாம தான் உங்கூட சேர்ந்தேன்.. இன்னிக்கு என் உழைப்புல பெரிசாக்கினேன் இப்ப லாபத்தை இருமடங்காக்கினப்புறம் நான் தான் அனுபவிப்பேன் நான் பாவம் புண்ணியம் உன்னை மாதிரி பார்ப்பதில்லை..."


இவன் இதயத்தை போலவே திறந்தே கிடந்த வீட்டின் வாசலில் காலனியைக் கழட்டியதுமே ஓடி வந்துக் காலைக்கட்டிக் கொண்டது அவன் மழலை. "அப்பா நீ நேத்து வாங்கியாந்தீல்ல பலூன் கவர் அதுல நான் அஞ்சு என்று விரல்களில் நான்கைக் காண்பித்து ( அவனுக்கு எண்ணிக்கையே தெரியாது சொல்ல த்தெரிந்த ஒரே எண் அஞ்சு தான் ) நம்ம பக்கத்துவீட்டு பாப்பா க்கு குடுத்தேன்பா "


"இல்லடா கண்ணா இனிமே ஒண்ணு குடு யாருக்கும் . அதுலயே பத்து தானே இருந்தது கணக்கா இருக்கனுண்டா என்னமாத்ரி அள்ளிக்குடுக்காதடா "

"கணக்கா! கணக்குன்னா என்னாப்பா !"

August 15, 2007

எண்ணுவான் செய்த கொடுமை

நம்ம பக்கத்துக்கு எத்தனை பேர் வந்து படிச்சிருப்பாங்க ன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் எண்ணுவான் கவுண்ட்டர் வச்சிருக்கறதே பதிவு எழுத ஆரம்பித்து கொஞ்ச் நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது சரி நாமளும் வைப்போம் பின்னூட்டம் போடாமல் எத்தனை பேர் படிப்பாங்கன்னு நானும் ஆர்வமா பாக்கறதுக்காக...ஒரு எண்ணுவதுக்கு உதவி செய்யற கவுண்ட்டர் வைத்தேன்....


ஒவ்வொருவரும் வேற வேற மாதிரி வைத்திருக்காங்களேன்னு அதையெல்லாம் போய் பார்ப்பதும் வழக்கம்..இப்படி ஒரு நாள் தமிழ்நதியின் எண்ணுவானை ப்பார்த்து அந்த தளத்தில் பதிந்து கொண்டு நானும் ஒரு கவுண்ட்டர் வைத்தேன்..


அப்பத்தான் கிளிக்கிளிக் தளமும் ஆரம்பித்தேன்..அதில் படத்தை போட்டதும் சர்வேசன் எதோ பாப் அப் வருது உங்க தளத்துக்கு என்று சொன்னாங்க.. என்னப்பா அப்படியான்னு ரெண்டுபேரு கிட்ட கேட்டேன் இல்லையே எங்களுக்கு வரலியேன்னதும் சரி வேற விண்டோ எதும் ஓப்பன் செய்ததில் வ்ந்திருக்கும் தவறா நினைத்துவிட்டாங்களோன்னு விட்டுட்டேன்..


அப்பறம் திருப்பியும் வருதுன்னு இன்னொருத்தர் சொன்னதும் தீபா மேடத்துக்கிட்ட கேக்கறேன்னேன்...அவங்களும் பாத்துட்டு கண்ட்ரோல் எஃப் போடுங்க பாப் ன்னு அடிச்சு பாருங்க எதாச்சும் வருதா உங்க டெம்ளேட்டுல என்றாங்க..பார்த்தேன் ஒன்னும் வரலை..என்ன லிங்க் என்று சொல்லுங்கன்னு கேட்டதுக்கு பாப் அப் வந்தவங்களே அனுப்பினப்பறம் தான் எனக்கு பிரச்சனையின் தீவரம் புரிந்தது... அய்யோ இத்தனை நாளா இல்லாம எப்படி இப்பன்னு சந்தேகத்துல மோட்டிகோ கவுண்ட்டரு மேல தான் சந்தேகம் வலுத்து எடுத்துட்டேன்..


தீபா ஆன்லைனில் வந்ததும் மேடம் மேடம் சொல்லுங்க மேடம் தப்பான சைட்டுக்கு பாப் அப் வந்தா படிக்க வரவங்க என்ன நினைப்பாங்க...என்றதும் மோட்டிகோ பத்தி கொஞ்சம் கூகிளிட்டு சொன்னாங்க அவங்க பாலிஸியே அதாங்க..உங்களுக்கு இலவசமா செய்துட்டு அவங்க பாப் அப் போட்டு தான் சம்பாதிக்கறாங்க போலன்னு...


அப்பறம் பார்த்தா இப்படி ஒருத்தர் பதிவு போட்டுருக்கார்...
நான் இது போல நம்ம பதிவர்கள் வைத்திருக்கிறார்களே அப்ப நல்லதாத்தான் இருக்குமாக்கும்ன்னு நினைச்சு பாலிஸி கொள்கை எதையும் கண்டுக்காம அப்படியே கோடை காபி பேஸ்ட் பண்ணிட்டேன்..மக்களே பார்த்து செய்யுங்க..

கோரஸில் பாடிட்டேன்

சர்வேசன் எத்தனையோ விளம்பரம் போட்டும் 60 பேர் பாடவே இல்லை.... சரி என்னால் ஆனது இந்த ஜனகனமனகோரஸ் . என் பொண்ணு அவளோட ப்ரண்ட்ஸ் ஒரு ரெண்டு பேர் இப்படி 3 பேரை சேர்த்து இந்த கோரஸில் நானும் பாடி இருப்பதால் 4 பேர் அவரோட லிஸ்ட்ல சேர்ந்ததா கணக்குப் போட்டுக்கட்டும்.



தனியாப் பாட பயந்துகிட்டு கோரஸில் பாடிட்டேன். :)


Get this widget Share Track details

August 11, 2007

எப்போதும் கோபமாவே இருப்பாங்க போல

தில்லியில் அதிகம் பஸ் மற்றும் பொது வண்டிகளில் பயணம் போவதில்லை எனவேதான் இங்கே நடக்கும் சண்டை பற்றி எழுத வில்லை..(இந்த டிஸ்கி முதல்லயே போட்டுவிட்டேன்.)விடுமுறைக்கு வரும் போது ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மூலையில் என்பதால் பஸ்களில் இரயில்களில் பயணிக்கவேண்டிய கட்டாயம்.

மதுரைபஸ் ஸ்டாண்டில் புளியங்குடி பஸ்ஸில் ஏறுவதற்கு பெட்டியெல்லாம் கொண்டு வைத்ததும் கண்டக்டர் இத்தனை லக்கேஜெல்லாம் ஏத்தாதீங்கய்யா நிக்க இடம் இருக்காது என்று வள்ளென்று விழுந்தார்..அய்யா நாங்க யார் காலையும் இடறாமல் எங்க காலுக்கடியில் வைத்துக்கொள்கிறோம் என்றபடி டிரைவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அத்தனையையும் போட்டுவிட்டு காலைத்தூக்கி அதன் மேல் வைத்து உட்கார்ந்து கொண்டோம்.


கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் ஏறிக்கொண்டே போனது...டிரைவர் ஏத்தாததைய்யா ஏத்தாதையா என்று பாடிக்கொண்டே வந்தார்..சிலர் இன்ஜின் மேல் கூட உட்கார்ந்து வந்தார்கள். அய்யா வண்டி பழசு கூட்டம் ஏறி அது நின்று போனா எனக்கு தெரியாது என்றார் டிரைவர். பஸ்ஸுக்குள்ள ரெண்டு அக்காங்க பேசிக்கிட்டாங்க..
''ஆமாக்கா அன்னிக்கு மாதிரி நின்னா எங்க போக டெப்போ என்ன இங்கன கிட்டத்துலயா இருக்கு.."
ஆமாக்கா அவர் சொல்றாரு ஆனா நம்ம ஆளுக கேக்கவா செய்யும்"


ஒரு நிறுத்தத்தில் இன் ஜின் சீட் காலியாக அடுத்து ஏறிய அம்மா பக்கத்துல உட்கார்ந்து இருந்த அத்தையை பாத்து அம்மா அப்படி தள்ளி உக்காருங்க என்றதும் அத்தை அம்மா நாங்களே நாலு பேர் மூணு பேர் சீட்டுல அந்தா அங்க போய் உக்காருங்களேன் என்று கண்ணாடிக்கு பக்கத்தில் இருந்த டப்பாவை க்காட்ட அந்த அம்மாவுக்கு கோபம் பொசுக்கென்று ஏறியதில்.
"எங்க இன் ஜின் ல யா உக்கார சொல்லுதிய ___ பழுக்கவா ? ஏன் நீங்க உக்காருறது தானே?"

எனக்கு கோபம் " அம்மா உங்கள யாரும் அதில உக்கார சொல்லல..டப்பா இருக்கே முன்னால் அதுல தான் உக்கார சொன்னாங்க...இத்தனை நேரம் எத்தனையோ பேர் இன் ஜின் மேல கூட உக்காரத்தான் செஞ்சாங்க.."

கொஞ்ச நேரத்தில் அடுத்த ஸ்டாப்பில் இன்னும் ஆள் ... கோபப்பட்டு பேசின அம்மாவை யாரோ தள்ளி விட...
" அக்கா தள்ளாதீங்க இங்கன ஏக்கனவே திட்டராக நீங்க வேற தள்ளாதீக சாஞ்சாலும் திட்டுவாகலோ என்னமோ.."
எங்களத்தான் நக்கலடிக்கிராங்க..
பஸ் ஹாரன் எங்க காதுவலிக்க அடிச்சும் வழி விடாமல் போன பையனை பஸ்ஸை நிறுத்தி "ஏலே என்ன " திட்ட ஆரம்பிக்க அவனும் விடல .....இறங்கி வாய்யா பேசிக்கலாம்"

"டிரைவர்..அண்ணே கோச்சுக்காதீங்க நேரமாச்சு வீட்டுல போய் கஞ்சி குடிக்கணும்" என்று விரட்டும் அக்காவுக்காக டிரைவர் சமாதானாமாகி "இவனையெல்லாம் விடக்கூடாது இறங்கி நாலு சாத்தனும்" என்று கோபமாகவே பஸ்ஸை உறும விட்டார் .....


இன்னொரு நாள் கோவையில் உக்கடத்தில் இறங்கறோம் ...பின்னாடி இறங்கும் ஒரு அம்மா இன்னொருத்தரை "வெரசா இறங்கினா என்ன மத்தவங்க இறங்க வேணாமா " அவ்வளவுதான் " அம்மனீ உனக்கு மேனர்ஸ் இருக்கா ஆ ...இங்க முன்னாடி இறங்கினாத்தான ...அவுங்களை தள்ளிவிட்டுட்டா இறங்க சொல்லுற்ற நீயு"

"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு" என்று அந்த ஒரு பிடி பிடிக்க சண்டை ஆரம்பித்தது..அவங்க
சண்டை ஆரம்பித்ததும் என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வந்தோமே ஒன்னும் சண்டையே காணுமேன்னு ..எப்போதும் எல்லாரும் கோபமாவே இருப்பாங்க போல...."

August 8, 2007

கைப்பேசியின் அழைப்பு


மின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்
நொடிகளைக்கூறும் முட்களின் ஒலியும்
ஓங்கி ஒலித்து
தனிமையின் இருப்பை உறுதி செய்கிறது.
கோபத்தில் தலையணைக்கடியில்
கைபேசி.
அழைக்கவே இல்லாத அது
இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?
நேற்றுவரை கூட இருந்தவன்
குறைவில்லா அன்பினை தந்தவன்
பள்ளிக்கு போய் விட்டான்.
அவன் குரலைக் கேட்பதற்காகவேணும்
யாராவது என் கைபேசி எண்ணை
தொடர்புகொள்ளக்கூடாதா ?
கைப்பேசி அழைப்பது அவன் குரலில் தானே!
ஞானி ஞானி யெஸ்பாப்பா!

August 1, 2007

வெற்றிபெற வாழ்த்துக்கள்

ப்ளாக்கர் சேவைகள் ஆங்கிலத்தில் தொடங்கி பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துகொண்டு இருப்பதாக விக்கிதளத்தில் சொல்லப்படுகிறது.பல நாடுகளில் பல மொழிகளில் எழுத ஆரம்பித்து மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த ப்ளாக் வலைப்பதிவு என்கிற ஒன்று தமிழில் தொடங்கிய பின் வளர்ச்சி இருக்கிறது தான் என்கிற போதும் எத்தனையோ கோடி மக்களுக்கு என்று பார்க்கும் போது எண்ணிக்கை அளவில் குறைவுதான்.


ரேடியோ டிவியைப்போன்று இணையதளம் இல்லாத வீடுகள் இனி இருக்காது என்கிற அளவுக்கு இப்போது நடுத்தர குடும்பங்களிலும் இணைய சேவை நுழையத்தொடங்கி இருக்கிறது. தங்கள் படிப்பிற்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் என்று தொடங்கி இருக்கும் இந்த தொழிட்நுட்ப வாசலை இன்னும் விரியத்திறந்து இணையத்தில் உலவும் மக்கள் இப்படி வலைப்பதிவுகளை வாசிக்கவும் அதன் பயனைப்பெறவும் இன்னும் சிறப்புற வலைப்பதிவுகள் உண்டாவதற்கும் வழி செய்யவேண்டும் என்ற ஆவலில் பட்டறை என்ற ஒன்று சென்னையில் (ஆகஸ்டு 5, 2007 ஞாயிற்றுக் கிழமை 09:30 - 05:30 சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் Marina Campus ) நடத்தப்பட இருக்கிறது.பட்டறை என்ற வார்த்தையின் லிங்கில் நீங்கள் பட்டறை பற்றிய மேல் விவரங்கள் அறியலாம்.


அவர்களின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். முதற்கட்டமாக அவர்கள் மாணவர்களை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தோடு இணைந்து செய்கிறார்கள். இதனால் மாணவர்கள் கவனம் இதில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பதிலிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதற்கான எல்லா வழிமுறைகளையும் திரட்டி சேவை வசதிகள் பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் நடத்த இருக்கிறார்கள். இதன் வெற்றிக்கு பின்னர் இது போன்ற பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்படலாம் . இது ஒரு பட்டறைக்கான விளம்பரப்பதிவு.