October 30, 2007

திருப்புகழ் ராகத்துடன் கற்க..

எங்க தாத்தா அப்பா எல்லாம் முறையா தேவாரம் திருப்புகழ் பாடுவார்கள் என்றாலும் நான் முறையாகக் கற்றுக்கொ ள்ளவில்லை. இப்போ அதுக்கு ஒரு நேரம் கிடைச்சிருக்கு.
இங்கே தில்லியிலும்(பம்பாய் , சென்னை, கல்கத்தா இன்னும் நிறைய இடங்களில் இதன் கிளைகள் விரிந்து வருகிறது.)திருப்புகழ் அன்பர்கள் என்று ஒருகுழு
இருக்கிறது. குருஜி என அழைக்கப்படும் திரு ஏ.எஸ்.ராகவன் அவர்களின் உழைப்பில் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.

அன்பையும் அவிரோதத்தையும் தெய்வீக நெறியையும்
இசையோடு இலவசமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.நீங்களும் கேட்டு மகிழலாம் .

October 26, 2007

நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து

நேசித்த நிறங்களெல்லாம்
பிடிக்காமல் போன அந்த கணத்தில்,
மனிதர்கள் எல்லாருமே நிறம் மாறிகள்
என்றாகி
நான் சிவந்தேன்.
மயக்கும் மொழிகளெல்லாம்
நெஞ்சம் மறந்த அந்த கணத்தில்,
வார்த்தைகள் எல்லாமே போலிகள்
என்றாகி
விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்
சிதறிய அறையில்
தனிமை தியானத்திற்குப் பிறகான ஒர் கணத்தில்
தேடியபடியிருக்கிறேன்,
நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து
வெளிவர எனக்கிருக்கும்
ஒரே சாவியான சில சொற்களை-

அ ச
ன் மா
பு தா
ம் ..........

October 15, 2007

அமிர்தசரஸ் -3 ஜாலியன்வாலாபாக்

ஜாலியன் வாலாபாக் பற்றி படிக்காதவர்கள் இல்லை தான். ஆனால் அங்கே சென்று வந்தால் உங்கள் மனநிலை படிப்பதைக்காட்டிலும் அதிகமான வேதனைக்குள்ளாகும். அந்த இடம் மதில்களால் சூழப்பட்ட மிகப்பெரிய மைதானம். உள்ளே செல்லும் வாயிலோ ஒரு மாருதி கார் நுழையக்கூட சிரமமான இடம் மட்டுமே .

மனிதர்களின் உரிமையை மறுக்கும் ரவுலட் சட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட கூட்டம் அது என்கிறார்கள். பைசாகி
( நம் பொங்கல் போன்ற விவசாயத்திருநாள் ) கூட்டம் என்கிறார்கள். எதுவானால் என்ன அங்கே கூடிய கூட்டம் அதிகம் ஏதுமறியாதவர்களால் குழந்தைகளால் வ்யதானவர்களால் நிரம்பி இருந்தது மட்டும் உண்மை.

ஜெனரல் டயர் இந்திய வீரர்கள் கை கொண்டே இந்த கொலைக்கட்டத்தை நடத்தி இருக்கிறான். வாசலை மறித்தபடி நின்று கொண்டு சுடுங்கள் என்று உத்தரவிட்டபின் முதலில் நடுவில் சுட்டனராம். மக்கள் சிதறி வலமும் இடமுமாக ஓட .. அடுத்ததாக வலமாகவும் இடமாகவும் சுட்டனராம். மக்கள் தரையோடு தரையாக விழுந்து உயிர் காக்க போராட தரையில் அடுத்ததாக சுட்டனராம்.

மதில்களில் ஏறி கடந்துவிடமுடியாது எனினும் அத்தனை பெரிய மதிலில் ஏறி உயிர் தப்ப நினைத்த பேருக்கும் குண்டு இருந்தது . இன்றும் அந்த மதில்கள் குண்டு துளைத்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது.
இன்று அந்த மைதானம் ஒரு நினைவுச்சின்ன பூங்காவாகப் பராமரிக்கப்படுகிறது.


அணையாத ஒரு விளக்கு எரிகிறது.

புகைப்படங்கள் காட்சிக்குவைக்கப்பட்டுள்ள சின்ன அறையின் உள்ளே நுழைபவர்க்ளின் கண்களைக்கலங்க வைக்கும் அந்த மனித உடல்களின் குவியல்களின் ஓவியம் அந்த காட்சியை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத்தருகிறது.

டயரை க் கொன்ற உத்தம்சிங் பற்றி படிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட என் மனதில் நின்றது ரத்தன் தேவியின் கலங்கவைக்கும் கதை தான்.

ரத்தன் தேவி சொல்கிறார்... "" நான் அந்த நிகழ்ச்சி நடக்கும் போது வீட்டில் இருந்தேன். என் கணவர் அங்கே சென்றிருந்தார் . துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும் நான் இரு பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன்.. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் யாருக்கும் வெளியே வர பயம். கூட வந்த
பெண்களை திருப்பி அனுப்பிவிட்டு இரத்தவெள்ளத்தில் குவியல் குவியலாக கிடந்தவர்களில் நான் என்கணவரைத் தேடினேன்.

உறவினரைத்தேடி வந்த ஒருவரின் உதவியோடு என் கணவரை நகர்த்தி வைத்தேன். அவர் தோள்களில் உறவினரின் உடலை எடுத்து சென்றார் . என் வீட்டிலிருந்து யாரையாவது கட்டில் கொண்டு வரும்படி பணித்தேன் . யாரும் வரவில்லை. இரவெல்லாம் ஒரு மூங்கில் குச்சி கொண்டு நாய்களிடம் இருந்து என் கணவர் உடலை க் காப்பாற்ற முயற்சித்தேன்.ஒருவர் அவர் காலை எடுத்துவிடும்படி கூறினார். இரத்த வெள்ளத்தில் இருந்த அவருடைய ஆடையை தூக்கி காலை சரி செய்தேன்.

அருகில் 16 வயது சிறுவன் ஒருவன் முனகினான். நான் அருகில் சென்றதும் குளிர்கிறதா என்று கேட்டேன் . அவன் இல்லை எனக்கு தண்ணீர் வேண்டும் என்றான் அந்த மைதானத்தில் தண்ணீருக்கு எங்கே போவேன். என்னை விட்டு போகாதீர்கள் என்றான். நானும் என் கணவர் உடலை எடுத்து செல்லாதவரை எங்கேயும் செல்லமுடியாது இங்கேயே இருப்பேன் என்று சொன்னேன்.
எங்கேயும் முனகல்கள்.. இரத்தத்தின் வாடை. இருட்டு .நான் மட்டும் தனியே உட்கார்ந்து இருந்தேன். அந்த இரவினைப்பற்றி
எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அதை விளக்க வார்த்தைகள் இல்லை.. ""
படிக்கும்போதே கண்கலங்கியது. எத்தனை கொடூரம் அந்த இரவு.

சொந்த கச்சேரியில் தேவ் நிறைய படம் போட்டிருக்கார்.
அந்த கிணறு குண்டுகளுக்கு பயந்து குழந்தைகளை இடுப்பில் இடுக்கியபடி குதித்த பெண்கள் .. ஆண்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் உயிரைக்குடித்த கிணறு.
கொஞ்சம் கற்பனை கலந்தது தான் திரைப்படங்கள் என்றாலும் இந்த காட்சியை முடிந்தால் பாருங்கள்.

October 7, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)

அமிர்தசரஸ் செல்லுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது ஷானே பஞ்சாப் ரயில் , வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. குளிரூட்டப்பட்ட அறையின் பழுப்பு நிறக்கண்ணாடி வழியே இதமாகவே தெரிந்தது சுட்டெரிக்கும் வெயிலும். தாமதமாக கிளம்பிய ரயில் வண்டி அரைமணி நேரம் தாமதமாகவே சென்றடைந்தது. இறங்கிய உடனே யே சாமான்களோடே வண்டி பேசினோம் வாஹா பார்டர் செல்வதற்கு. ஆட்டோ என்றால் 250 கார் என்றால் 400, 450 என்று பேரம் பேசி செல்லலாம். 28 கிலோமீட்டர்ஸ்.

வாஹா பார்டரில் 4.30 மணிக்கு அனுமதி அளிப்பார்கள்.
வெளியே மூவர்ணத்தில் ஐஸ் செய்து விற்கிறார் ஒருவர். சிறு சிறு பையன்கள் மூவர்ணக்கொடிகளும் மூவர்ணத்தில் அமைந்த வெயிலுக்கான நெற்றி ம்றைக்கும் தொப்பிகளும் விற்கின்றன்ர் .


முழு நிகழ்ச்சிகளின் வீடியோ 20 30 ரூபாய்க்களுக்கு கிடைக்கிறது . நல்ல தரமானது . 30 ரூபாய்க்கு வாங்கினால் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட எல்லாமே காட்டுகிறான் அதில் . நியாபகத்துக்கு எல்லாருமே வாங்கிச் செல்லலாம். வெளி வாயிலிலிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அதற்கும் இம்முறை ரிக்ஷா கிடைக்கிறது. சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். வழியில் மின்சாரம் செலுத்தப்பட்ட தடுப்புகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம்.



ஸ்வர்ண ஜெயந்தி வாயிலின் முன் இரு கைகள் குலுக்குவதை ப்போன்ற சிற்பம்.
எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதா தோன்றுகிறது. வாஹா அருகில் பெரிய ஊரான சுற்றுலா ஊர் அமிர்தசரஸ் இருப்பதால் அப்படி இருக்க்லாம் என்று நினைக்கிறேன். இம்முறை எங்கெங்கும் தலைகள் தான்.






நேரடி யான பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் சிறு துண்டு காட்சி தான் கீழே. கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் அவர்களின் வர்ணனைகளோடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு ஜவான் பெண்குரலில் லதா மங்கேஷ்கரின் பாடலை பாடினார் என் கண்களில் இருந்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது.. அந்த பாடலை(ம்யூசிக் இண்டியா ஆன்லைன் by anuradha ) எப்போது கேட்டாலும் இப்படித்தான்.. லதா எப்படித்தான் முழுதாக அந்த பாடலைப் பாடினாரோ ...துக்கம் தொண்டை அடைக்கும்.






இந்த முறை நம் மக்களின் அட்டகாசம் தாங்க வில்லை.. அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் காலரியில் நன்றாக வே தெரியும்..ஆனால் எழுந்து எழுந்து நின்று சரியாகவே பார்க்க விடவில்லை. ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்து கதைவை மூடிக்கொண்டு வருவதும் தான் பார்க்க வேண்டிய விசயம். கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.

மக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி கேட்டுக்கொண்டனர் மைக்கில். இல்லையென்றால் உணர்ச்சி பெருக்கில் இவர்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போடுவார்கள். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் எழுந்து ஆடுவதும் நடந்தது. இறங்கி காவலர்களின் அனுமதியோடு நடுவிலும் ஆடினார்கள் சிலர்.

பாகிஸ்தானியர் கூட்டம் குறைவென்பதால் வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். ஒரு வர் முழுவதும் அவர்களின் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருந்தார்.. அடிக்கடி சிலர் அப்படி கொடியோடு கதவு வரை ஓடி வருவதும் போவதுமாய் இருந்தனர். நம் மக்களின் நாட்டுப்பற்று இது போன்ற நேரங்களில் நன்றாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை அதை எடுத்துபோகாதே இதை எடுத்துப்போகாதே என்று.. அமிர்தசரஸில்.அதுவே பெரிய விசயமாக இருக்கிறது . லாகூரிலிருந்து பஸ் வருகிறது இல்லையா வருபவர்களை வரவேற்கும் பலகை.

6.30 வரை ஆகிறது வெளியே வரும்போது.

October 3, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்- 1(லஸ்ஸி,குல்ச்சா,தாபா)

போனவாரக்கடைசியில் அமிர்தரஸில் இருந்தேன். கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோன்றாமல் இருந்தேன்.. போகும் முன்னரே நண்பர்கள் அப்ப உங்களுக்கு எழுத விசயம் கிடைச்சிடுச்சு என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அதான் வந்தவுடன் ஒரு பதிவு போடறேன்.



193 வருசமா இருக்காம்நாங்க லஸ்ஸிவாங்கி குடிச்ச ஞான்சந்த் ஹலுவாயி கடை .. (93 ஐ தான் ஆட்டோக்காரர் சொல்லி இருப்பாரோ நம்ம இந்தி அறிவுக்கு அப்படி கேட்டிருக்குமோன்னும் ஒரு சந்தேகம்.) சின்ன எவர்சில்வர் பானையில் மோர் கடையற மிசின் பொருத்தி இருக்காங்க.. தட்டு தட்டா அலமாரியில் தயிர் அடுக்கி வச்சிருக்காங்க.தயிரோட மேல் ஆடையை தனியா எடுத்து வச்சிட்டு தயிரை உள்ள போட்டு ஐஸ்கட்டி போட்டு கடைஞ்சு பைப் பைத் திறந்துவிட்டு பெரிய்ய்ய்ய டம்ளரில் ஊத்திவைக்கிறான் சின்ன பையன்.

கடை ஓனர் ஒரு கிண்ணத்துல இருந்து வெண்ணை ஒரு உருண்டையும் தயிர் ஆடை கொஞ்சமும் போட்டு "கேவ்டா எசென்ஸ்" ( அது வாசனைக்காம் என்ன எஸென்ஸென்று தெரியல) ஊத்தி கொடுத்தார். முழு டம்ளரும் அந்த ஊருக்காரங்க அனாயாசமா குடிக்கறாங்க.

இது காலையில் இருந்து காலியான தயிர் தட்டுக்கள் மதியத்துக்குள். இன்னமும் அலமாரியில் ஒரு தட்டுக்கும் இன்னோரு தட்டுக்கும் நடுவில் இரண்டு கட்டை வைத்து (ஒட்டிக்காமல் இருக்க) அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருந்தார்கள்.
தயிரும் ஒரு கிண்ணம் நிறைக்க வாங்கி சாப்பிடறாங்க.நல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊரு காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.



அப்பறம் குல்ச்சாஹட் ராணி பாக் தெரு. இதுவும் ஒரு பேமஸான கடையாம். சின்ன கடை தான்.
இதுல சப்பாத்திக்குள்ள உருளைக்கிழங்கை வச்சு தந்தூரி அடுப்பில் போட்டு எடுக்கறாங்க. ஒரு பட்டர் சதுரத்தை மேலே வச்சுத்தராங்க வித் சென்னா மசாலா. எதோ இண்டியன் பிட்ஸா மாத்ரி இருக்கு.



கேசர்க்கா தாபா இந்த ஹோட்டல் 1916 ல் இருந்து இருக்காம். அந்த ரோட்டுக்குள்ள மத்த நாளில் கால் வைக்க இடம் இருக்காதாம். ஞாயிறு சாயங்காலம் என்பதால் பரவாயில்லை என்றார் ஆட்டோக்காரர். ஆனால் அதுவே ஒரு திரில்லிங் அனுபவம் தான் மிக சின்ன சின்ன சந்துபொந்துகளில் திறமையாக ஓட்டும் திறனிருந்தால் மட்டுமே முடியும். ஒலிப்பான் உபயோகிக்காமல் யாரும் ஓட்டுவதே இல்லை . அதிவேகம் , இடித்தாலும் யாரும் சண்டை போட்டு பார்க்கவில்லை நாங்கள். காற்றில் மாசு அதிகம்.
கடையின் சமையலறை தரையைப் பார்த்தால் சிலர் சாப்பிட மறுக்கக்கூடும்.
தரை முழுதும் ஈரம் சதசத என்றிருக்கிறது. ரொட்டி செய்பவர்கள் பெரிய மேடைகள் அமைத்து அதன் மேல் அமர்ந்து செய்கிறார்கள் அதனால் பரவாயில்லை. சின்ன சின்ன கவர்களில் தால் விற்கிறார்கள்.. வீட்டில் ரொட்டி செய்து கொண்டு தால் கடையில் வாங்கிக் கொள்வார்கள் போல. எங்கெங்கிருந்தோ இந்த கடையின் பெயரை விசாரித்து வருகிறார்கள்.



பராத்தா , ஸ்டஃப்டு பராத்தா
கொஞ்சம் தயிரில் பூந்தி போட்ட ராய்தா , முழூஉளுந்து போட்ட குழம்பு (தால் மக்கனி) சென்னா மசாலா வெங்காயம் ம் ஷாகி பனீர் இது நாங்கள் டேஸ்ட் செய்த ஐயிட்டங்கள். வீடியோ எடுக்க சமையலறை உள்ளே போன எங்களுக்கு ஒரே மரியாதை நல்லா போஸ் கொடுத்தாங்க எல்லாரும்.