March 10, 2008

வண்ணத்தமிழ் வளரப்படி

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானியம் வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து.
இந்த ஒரு பாட்டு தான் நான் படித்து எனக்கு நினைவுக்கு வருவது..

----------------------------------------------------------------------------
ஆத்திச்சூடி - ஔவையார்
அறஞ்செய விரும்பு --------------- Enjoy giving alms
ஆறுவது சினம்------------------------ Anger is to be controlled
இயல்வது கரவேல்------------------Never stop learning
ஈவது விலக்கேல்--------------------Dont prevent charity
உடையது விளம்பேல்------------Don't proclaim what you possess
ஊக்கமது கைவிடேல்-------------Dont give up persevering
எண்ணெழுத்து இகழேல்---------Dont despise learning
ஏற்பது இகழ்ச்சி-----------------------Accepting alms is despicable
ஐயமிட்டு உண்------------------------Eat after donating
ஒப்புர வொழுகு-----------------------Act virtousuly
ஓதுவது ஒழியேல்------------------Dont give up prayers
ஔவியம் பேசேல்-----------------Dont carry tales
வாய்ப்பாடு ஒப்பிப்பது போல இதனை ஒப்பித்த நியாபகம் கொஞ்சம் வருது.:)

-----------------------------------------------------
தாய் மொழி

----------------
தாயின் மொழி
தமிழைப் படி
யாரும் இதை
அறியப்படி
இன்பத்தமிழ்
இதனைப்படி
வண்ணத்தமிழ்
வளரப்படி.. - கவிஞர் செல்வகணபதி
இந்த பாடல் என் மகளுக்கு அவங்க ஆச்சி வாங்கிவந்த புத்தகத்தில் இருந்தது .

------------------------------------------------------------
இப்ப என்பையன் ஹிந்தியில் பாடறான்

"மச்சிலி ஜல் கி ராணி ஹை
ஜீவன் உஸ்கா பாணி ஹை
ஹாத் லகாவோ டர் ஜாயேஹி
பாஹர் நிக்காலோ மர் ஜாயேஹி"
அதாவது

மீனு தண்ணிக்கு ராணி
அதுக்கு உயிரு தண்ணி
கைவச்சா பயந்துபோகும்
வெளியே எடுத்தா செத்துப்போகும்.
நடிப்போட கண்ணவிரிச்சு பாடினா அழகு தான் இல்ல..
கீழே பையன் பாடினதை போட்டிருக்கேன்.. கொஞ்சம் க்ளிக் செய்து கேட்டுப்பாருங்க பயந்துடாதீங்க ..



-----------------------------------------
யாரைக்கூப்பிடறது...
1.அருட்பெருங்கோ( ஜனனிகிட்ட கேட்டு போட்டுருப்பா தெரியலன்னா)
2.வின்சென்ட் ( எதாச்சும் இயற்கை பத்தின பாட்டு தானே போடுவீங்க)
3.கோபி (மார்ச் பதிவு போட்டாச்சா )
ரூல்ஸ் கண்மணி டீச்சர் என்ன சொல்றாங்கன்னா நீங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது படிச்ச பாட்டு கொஞ்சம் நியாபகம் செய்து அதைப் பதிவு போடனும் அவ்வளவு தான்..

March 5, 2008

காட்சி மாற்றம்



சுழல்காற்றில் சுற்றியடித்த
நினைவுகளின் பிடியில் சுற்றி
சோர்ந்து விழும் மனம்.
ரகசியங்கள் தொலைத்துவிட,
தொலைந்துவிட
சந்தர்ப்பங்கள் தேடி அழும் மனம்.
மறதி வரம் கேட்டு
மன்றாடி மயங்கி நிற்கும் மனம்.
இரவு மறைந்து விடியல் போல
காட்சி மாறும்...
நினைவடுக்கை தூசிதட்டி
துளிர்க்குமதே மனம்.
ரகசியங்கள் குவித்து வைத்து
ரசித்திருக்குமதே மனம்.
நினைவலையில் கால் நனைத்து
மகிழ்ந்தபடி மயங்குமதே மனம்.
மீண்டும்
காட்சிகள் மாறும்
இரவு வரும் விடியல் வரும்
சோர்ந்துவிழும் துளிர்த்து எழும்.

March 4, 2008

தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.
மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,
மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலம் தேவாரப்பாடல் பெறாவிட்டாலும்- வைப்புத்தலமாகக் குறிக்கப்படாவிட்டாலும், சிறப்புடைய தலமாகும்.சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன.ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீசர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.1008 சிவத்
தலங்கள் பற்றிய பட்டியலில் பாரிஜாதவனேசுரம் என்ற பெயரில் சில தலங்கள் உள்ளன். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாகும்.மேலும் இத்தலம்
பாடல்பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களைப் பெற்றுள்ளது.

திருக்கோயில் அமைப்பு:
கோயிலுள் நுழையுமுன் ஐந்து நிலைக்கோபுரம் அமைந்துள்ளது. நேராகப் பலி
பீடமும்,உயரிய கொடிமரமும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையுள் புனுகீசப்பெருமான் எழுந்தருளியுள்ளார். சாந்தநாயகியம்மை
தெற்கு நோக்கி யவாறு உள்ளார்.அம்மனுக்குத்தனியான உள் பிரகாரம் சிறிதாக அமைந்துள்ளது.கொடிமரத்தின் வலப்புரம் அலங்கார மண்டபமும்,அதன்
அருகில் பள்ளியறையும் உள்ளன.

வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில்
விநாயகப்பெருமான் உள்ளார்.அருகில் சகஸ்ரலிங்கம், சனீஸ்வரர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது
வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் யாகசாலையும்,தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும் அமைந்துள்ளன.கீழ்ப்பகுதியில் நந்தவனம்
அமைந்துள்ளது.

உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன.
வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான்,இலக்குமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.தெற்கு நோக்கி ஆடல்வல்லானின் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு உள்பிரகாரத்தில் தலவிருட்சமான பவள
மல்லிகை அமைந்துள்ளது. கருவறையின் வடக்குமாடங்களில் துர்க்கை, பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.அதனருகில் சண்டேசர்
சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர்,சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. அதனை அடுத்து மேற்கு நோக்கியவாறு கீழக்குமரர்சந்நிதி
உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார்.

உள்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியிலும்,தெற்கிலும் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது.ஆலமர்கடவுள்(தட்சிணாமூர்த்தி) தெற்கு நோக்கி
அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர்,பிள்ளையார் உருவங்கள் உள்ளன.
புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்துமூவரின் செப்புச்சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் திருவவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும்
அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய
நேசநாயனாரின் சந்நிதி உள்ளது.சிவனடியார்களுக்கு ஆடைகள் ஈந்த தொண்டினை இவர் செய்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது. (தொடரும்)

(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
புனுகீஸ்வரர்கோயில் சில நினைவுகள்