August 30, 2009

புதிய தலைமுறை - இதழ்

சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை இதழில் என்னவெல்லாம் நமக்குப் பிடித்தமானது , எவையிருந்தால் ஒரு பத்திரிக்கையை தரமென்று ஒத்துக்கொள்வோம், எவை தேவையில்லாத பகுதிகள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். கூடவே வாங்கிப்படிகின்ற பத்திரிக்கையின் பெயரையும் கேட்டிருந்தார்கள். நான் வாங்கிப்படிக்கும் பத்திரிக்கையின் பெயர் அங்கே குடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் அதனை தனியாகக் குறிப்பிடவேண்டிய கட்டத்தில் இட்டு நிரப்பினேன். நான் தற்போது வாங்கிப்படிக்கும் ஒரே புத்தகம் தில்லியில் வெளியாகும் வடக்குவாசல் மட்டுமே..

முன்பு விகடன் மட்டும் வாங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் , கதைகளை கிழித்து புத்தகமாக பைண்ட் செய்துகொள்வது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக அப்படி சேமிக்கத் தக்கதாக எனக்கு ஒன்றும் தோணவில்லை. அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... மேலும் இங்கே வலைப்பூக்களும் மற்றும் வாசிப்புக்களுக்குமே எனது பகுதி நேரம் செலவாகியதும் ஒரு காரணம். கருத்துக்கணிப்பில் என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.

புதிய தலைமுறையின் மாதிரி இதழை அனுப்பி வைத்திருந்தார் மாலன். அட்டைப்படம் இளைஞர்களுக்கானது என்று காட்டுவது போல இருந்தது. நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா? அங்கே தான் உருப்பட என்கிற தலைப்பில் புத்தக அறிமுகப் பகுதி இருந்தது. எங்கே போனது என் அல்வாத்துண்டு புத்தத்தின் விமர்சனம் வெளிவந்திருந்தது. நிச்சயம் உருப்படத்தேவையான புத்தகமே என்பதால் தொடர்ந்து அது போன்ற நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் வருமென்றும் உருப்படியான இதழாக புதிய தலைமுறை இருக்குமென்றே ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் விழுந்தது. .
இதற்கு முன் புதிய தலைமுறையை படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்து வெற்றி வெற்றி எனக்கூறிக்கொண்ட முதல் கட்டுரையை ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனாக எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள்.

அடுத்த பகுதியான கணினிப்பகுதியில் ஈகலப்பைப் பற்றி எல்லாமே ஓசி என்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஈகலப்பை சிலநாட்களாக சரியாக பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் எல்லாரும் NHM க்கு மாறிவிட்டோமே என்று தோன்றியது. ஆனால் கேள்வி பதில் முறையில் நன்றாகவே தமிழ் எழுதிக்கு அறிமுகமாக இருந்தது.
எல்லாமே தலைகீழ் முறையில் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது நினைவிருக்கட்டும்.. :)

மறுகூட்டலுக்குப் பின் மாநிலத்தில் முதலிடத்தை தான் நூலிழையில் தவறவிட்ட செய்தியறிந்த மாணவனின் சோகக்கதை,நிறைவான கதையாக அருணா அவர்களின் ‘நிறைவு ‘ சிறுகதை, கோடம்பாக்கத்து சுனாமிகளான புது இயக்குனர்களின் கதை எல்லாமே எனக்குப் பிடித்தது. நடுவில் டைம் பாஸ் என்கிற குமுதம் ஆறுவித்தியாசம் போன்ற ஒன்று இருந்தது. என்னால் விடை காணவே முடியலை டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கண்ணைப் பரிசோதனை செய்யனும் போல.. :)

நடுப்பக்கத்து குடும்ப மரம் அழகு.. நேரு குடும்பத்துக்கப்பறம் நம்ம தமிழ்நாட்டுக்குடும்பம் தான் பெரிய ஆலமரம்.பைக் வாங்குவது எப்படி ? தல சொல்லறது நல்லவே இருக்கு. எனக்கு, நோய் அதன் அறிகுறிகளை எல்லாம் படித்து படித்து இப்பல்லாம் எதுவந்தாலும் அதுவா இருக்குமோ என்று பயப்படுகின்ற நோய் வந்துவிட்டது அதனால் சர்க்கரை இந்திய இளைஞர்களைத் தின்கிறது என்ற கட்டுரையை தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் கட்டுரைக்கு சென்று விட்டேன்.ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருந்தாக வேண்டியதில்லை என்கிற வாதம் அருமையா இருந்தது.கவுன்சிலிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க அதிஷா & லக்கி எளிமையாப் புரியுது. உதவிக்காத்திருக்கு என்கிறபகுதி நன்றாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்.

இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..

August 26, 2009

அன்புக்கதை

குழந்தைகள் சில விசயங்களை திரும்பத் திரும்ப செய்வார்கள் அவர்களுக்கு அலுப்பே இருப்பதில்லை. குழந்தைகளை உற்று கவனித்திருந்தால் நீங்கள் இதனை அறிந்திருக்க வாய்ப்புண்டு . அதிகபட்சமாக 24 முறைவரை செய்யக்கூடும் என்று சொல்கிறார்கள். பிறகே சற்றே அலுப்புதட்டி மற்ற ஒரு செயலுக்கு நகர்வார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் கவனம் கவர்வதற்காக செய்வார்கள் சிலநேரம் அவர்களின் உண்மையான ஆர்வத்தின் காரணமாகவும் செய்வார்கள். அவைபோலவே அவர்கள் கேள்விக்கணைகளும் தொடுப்பது வழக்கம்.
இது என்ன?
ஏன் இப்படி இருக்கிறது?
ஏன் அப்படி இல்லை?
இன்னும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அவை வருவதுண்டு.

அவ்வாறான கேள்விகளை எதிர்ப்படும் நேரங்களில் ஒவ்வொருவரின் வெளிப்பாடும் வேறுபடுவதுண்டு. நாம் நம் குழந்தைகள் என்கிற அன்பு மிகுதியினால் அவர்களின் கேள்விகள் அவர்களை வளர்க்கின்றன என்று உணர்ந்து கொண்டு பதிலளிக்கவும் கூடும். சிலர் பொறுமையுடன் சிலமுறைகள் பதில் அளிப்பதும் நேரம் செல்லச் செல்ல பொறுமை இழப்பதும் அதன் பின் ’சற்று நேரம் அமைதியாக இருக்ககூடாதா’வென்று பொறுமை இழந்தோ அல்லது கோபத்தின் உச்சத்தில் சென்று இரைந்து கத்தியோ இருக்கலாம்.

ஆனால் வயதான காலத்தில் பெற்றோர்கள் பேச்சுத் துணைக்கென ஏங்கி நிற்கிற போது மறுதலித்து ஒதுங்கி இருத்தல் என்பது போன்ற கடுமையான செயல் வேறெதுவுமில்லை. ஒருகாலத்தில் கண்ணின் மணி போல காத்து இருந்த பெற்றோரிடம் சற்றே அமர்ந்து பேசி இருக்கத்தான் எத்தனையோ தடங்கல்கள்.

க்ரேக்க இயக்குனர் Constantin Pilavios இன் இந்த குறும்படத்தை நீங்கள் ஏற்கனவே பாத்திருக்கலாம். இல்லையென்றால் என்னைப்போல முதல் முறை பார்ப்பவராக இருக்கலாம். குறும்படங்கள் என்று குறிப்பிடுகின்றோமே தவிர நீள நீள கதை வசனக்காட்சிகள் கூட நமக்குள் இவைபோன்றதொரு தாக்கமேற்படுத்த முடியாது. மெல்லிய தாலாட்டைப் போன்ற ஒலியுடன் தொடங்கி ஒரு வீட்டின் முன்பகுதியின் அழகை துளித்துளியாக துல்லியமாக காட்டுகின்றது கேமிரா. இசையின் குழைவில் ஆயிரம் அன்புக்கதை மீதமிருக்கிறது. சில நிமிடங்கள் கள்ளமற்ற குழந்தையாகவும் வீட்டிற்குள் சென்று திரும்பிய சில நிமிடங்கள் கம்பீரமான தந்தையாக உருமாறும் போது தந்தை கதாபாத்திரம் வியக்கவைக்கிறார். நாட்குறிப்பில் இருப்பதை மகன் வாசிக்கையில் அவர் பெருமூச்சிடும் பொழுது காலங்களின் தொலைவில் அவர் கொண்ட அன்பின் பாரம் நம்மையும் ஒரு சேர அழுத்துகிறது.


ஈரம் மிச்சமிருக்கும் இதயங்கள் கண்டால் நிச்சயம் கண்கள் குளமாகலாம் .அன்பில் இதயம் கனக்கலாம். அர்த்தமுள்ள நல்லமாற்றம் ஒன்றை விதைக்கும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.





Directed by: Constantin Pilavios
Written by: Nikos & Constantin Pilavios
Director of photgraphy: Zoe Manta
Music by: Christos Triantafillou
Sound by: Teo Babouris
Mixed by: Kostas Varibobiotis
Produced by: MovieTeller films

(ஈழநேசன் இணைய தளத்திற்காக எழுதியது)

இந்த குறும்படத்தை நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் என்றாலும் இதனுடைய எழுத்துவடிவம் பலநாட்களாக மின் மடலாக பலருடைய பார்வைக்கும் வந்திருப்பதாகத் தெரிகிறது. எப்பொழுதுமே எழுத்துவடிவத்தில் நாம் முதலில் பார்த்த விசயத்தை காட்சிவடிவமாக நம் மனதில் ஒரு விதமாக உருவகப்படுத்தி இருப்போம். அதனால் அது நமக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புண்டு. மகன் செயற்கையாக நடிப்பது போல தெரிகிறது என்று ஒரு நண்பனுக்கு தோன்றியதாம். ஒருவருடைய குணம் ஒரு நிகழ்வினால் உடனே மாறிவிடாது.அந்நேரத்து குற்ற உணர்ச்சியால் அவன் அப்படி மட்டுமே செயற்கையாக இருக்கலாம் என்று தோன்றியது. எனக்கு எப்படித்தெரியுமா? எனக்கும் வந்ததே குற்ற உணர்ச்சி.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் அம்மாவுடன் வாய்ஸ் சேட்டில் பகிர்ந்து கொள்ள நினைத்தபோது நான் பாதிக்கதைக்கு மேல் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க அழுதுவிட்டேன். ஒருநாளில் அன்புமயமாக மாற இயலாது. ஆனால் இன்னும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் தோன்றியிருக்கிறது .

August 24, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

ஞாயிறு காலையில் கானா ப்ரபாவின் ஸ்டேட்டஸில் நேரலை பதிவர் சந்திப்பின் தொடுப்பினைக் கண்டதும் லைவ் ஸ்ட்ரீமில் நுழைந்தேன். வெகுநேரமாக நடந்து கொண்டிருந்த சந்திப்பின் முடிவில் ஒன்றரை மணி நேரம் நானும் கலந்துகொண்டேன். அறுபது எழுபது பேருக்கு மேற்பட்ட கூட்டத்தில் ஒன்பது பெண்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. யாரும் நடுத்தர வயதுப் பெண்களாகத் தெரியவில்லை. இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்கள் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

காணொளியில் கூட்டத்தினரின் உரைகளை கேட்டுக்கொண்டிருக்கையிலே அருகிலிருந்த அரட்டைப் பெட்டியில் இணைய விருந்தினர்கள் வேகமான தட்டச்சிக்கொண்டிருந்தார்கள் . கானாவிடம் நாங்களும் அங்கே தட்டச்சலாமா என்று கேட்டுவிட்டு பின் புனைப்பெயராக முத்துலெட்சுமியையே தேர்ந்தெடுத்து நேரலை பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பெண்களை பேசவிடுங்கப்பா.. அவரைப் பேசியது போதுமென்று உக்கார சொல்லுங்கப்பா, முதுகு காட்டறவர் யாரப்பா? என்று அங்கே அவ்வப்போது நடந்த தட்டச்சு உரையாடல் களேபரங்கள் கல்லூரியை நினைவு படுத்தியது. குட்டிப்பதிவர் ஒருவர் வந்திருந்தார் .. 6 ம் வகுப்பு படிக்கிறாராம். நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ பேச்சு நடந்து கொண்டிருந்தது. பின் வந்தவர்கள் எல்லாருடைய பேச்சிலும் அது அடிபட்டது.

ஒருபோது தான் தன் எழுத்தினால் விசாரிக்கப்பட நேர்ந்தது என்றும் ஆனால் அதுவே எல்லாருக்கும் ஏற்படாது என்று சொல்லிவிட்டு உண்மைபெயரைக் கொண்டே எல்லாரும் எழுதவேண்டும் அப்போது தான் பொறுப்புணர்வோடு எழுதத்தலைப்படுவோம் என்று ஒரு பதிவர் சொல்லிக்கொண்டிருந்தார். ஆங்கிலம் கற்றால் தான் வாழ்க்கை என்று சொல்லப்படும் காலத்தில் இருப்பதால் தங்களுக்கு தமிழின் கடினமான சொற்கள் புரிவதில்லை என்றார் ஒரு பெண்பதிவர். அவர் ஒருவர்தான் எழுந்து பேசிய பெண் என்று கேள்விபட்டேன்.

சிங்கை நாதனைப்பற்றிய குறிப்பு மற்றும் உதவி செய்ய விரும்புவர்கள் கோவிகண்ணன் பதிவைப் பார்க்குமாறு அறிவுறுத்தபட்டார்கள்.

முடிவில் “இருக்கிறம்” என்கிற ஒரு இதழ் எல்லாருக்கும் வழங்கப்பட்டது. இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்கள் ( 40) ”நாங்களும் இருக்கிறம்” என்று சொன்னப்போதிலும் எங்களுக்கு கிட்டவில்லை. ஊரோடி தன் மடிகணினி மூலமாக நிகழ்வை இணையத்தில் காட்டிக்கொண்டிருந்தார். முடிவில் அனைவரும் முகம் காட்டிவிட்டு செல்லும்படி சொல்ல அதற்கு பதில் ஒரு நல்ல யுக்தி செய்தார் . வாயில்படியருகே நின்று கொண்டு எல்லாரையும் காட்டிக்கொண்டிருந்தார்.

இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும்பலரின் பதிவர் சந்திப்பினைப்பற்றிய பதிவுகளுக்கும் தொடுப்புகளுக்கும்.
.

And , Now... நீலப்பேனாவும் சிகப்பு டைரியும்

என்னிடம் ஒரு மை சிந்தும்
நீலப் பேனாவும்
அதை மாட்டியே வைத்திருக்கும்
சிகப்பு டைரியும் இருந்தது
இரண்டும் எப்படியோ
தொலைந்து போனது ஒருநாளில்
அதனோடு என் கிறுக்கல்களும்.

பி.கு இப்போதுதான் பதிவும் e kalappaiயும், NHM எழுதிகளும் கிடைத்துவிட்டதே தொடர்கின்றது கிறுக்கல்கள்..

முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. மற்றவர்களெல்லாம் அந்த கவிதைக்கு வெறும் எதிர்பதிவு மட்டுமே போட்டார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

August 21, 2009

பரிச்சயங்கள்



photo : thanks to layoutsparks.com

ஒளிகளை நிறுத்தி
ஒலிகளையும் சேமித்திருக்கும்
வனம் சொன்ன உறுதிமொழி
நம்பத்தகுந்ததென கூடு சமைத்தேன்
எப்போதாவது நிகழும் பெருந்தீயினையும்
வனமே
பெருமழை துணையோடு தணித்து
தஞ்சமென்றது
இருளோடு கலந்து
நிசப்தங்களே பழகிக்கொண்டிருக்க
தன்னையே பதம் பார்க்கும்
உளியின் ஓசையோடு கொண்ட பேராசை
வனத்துக்கு வெளியே ஈர்த்தபடியே இருக்கிறது.

August 18, 2009

படிநிலைகள்


கனவு வந்து
கலைத்துப் போட்ட பத்திகளை
முன்பின்னாக அடுக்கி
ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன்
நிலைப்படிகளான
நிலைகள் முன்னாலும்
நிலைப்படிகளோடு
நிலைகள் பின்னாலுமாக


----------------------------------------



வரிகளாய் வளர்ந்தவை
துண்டங்களாய்
உடைந்து உடைந்து
உதிர்ந்த வழிகளில
மிச்சமாய்
மறிக்கிறது முற்றுப்புள்ளி.

August 17, 2009

கண்ணன் பிறந்தநாள் விழா - குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை

போன வருடங்களின் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் எப்படி அடுத்தவர் செங்கல்லோடும் மணலோடும் கொண்டாடப்பட்டுவந்தது நாங்க எடுத்த உறுதிமொழிகள் என்ன என்பதெல்லாம் பழைய பதிவில் இருக்கிறது.

சில நாட்கள் முன்னமே என்ன செய்வது எந்த குழுவோடு இணைவது என்று மகளின் திட்டங்கள் தொடங்கிவிட்டது. அவளின் நெருங்கிய தோழி ஒரு பெரிய குழுவோடு இணையப்போவதா செய்திருந்த திட்டம் இவளை முழுக்க சோகமக்கிவிட்டது. நானோ அவள் அக்குழுவோடு இணைவதை விரும்பவில்லை. போன முறையே செங்கல் மணல் திருட்டை மேற்கொண்ட குழு என்பதும் அல்லாமல் முதலீடான பூந்திகளுக்கு என்ற பங்குப் பணம் என் மகளிடமும் அவள் தோழியிடமும் மட்டும் அதிகமாக கேட்ட பெரிய குழந்தைகளாயிற்றே! ..

இரண்டொரு நாளில் அவள் தோழியின் அம்மாவும் அவளை அக்குழுவோடு இணைய வேண்டாமென்ற நல்ல செய்தி கேட்டதும் மீண்டும் மகிழ்வோடு தயாராகிக் கொண்டிருந்தாள். செங்கல்லுக்கு பதிலா பழைய நோட்டு அட்டைகளை ஏழு செமீ அகலத்துக்கு பட்டைகளாக வெட்டிக்கொண்டோம். முதலில் அத்திட்டத்துக்கு மறுத்தவள் மாதிரியை படமாக வரைந்து காட்டியதும் ஒத்துக்கொண்டாள். பிறகு அவற்றை அவளே குறிப்பிட்ட நீளத்திற்கு ஸ்டேபிள் செய்து வைத்தாள்.. நான்கு விதமான பட்டைகளாக தயார் செய்து வைத்தபின் தெர்மக்கோல் நுழைவாயில் தோரணத்திற்கு எடுத்துக்கொண்டாள்.

இம்முறை எதிர்வீட்டுச் சிறுவனும் இணைந்து கொள்ள மகளும் அவள் தோழியும் அவரவர் தம்பிகளுடன் நால்வரோடு ஐவரானோம் என்றபடி அவரவர் வீட்டு கிருஷ்ணர் பொம்மைகளுடனும் ஏனைய கடவுள்களுடனும் கிளம்பினார்கள். பூந்திக்கு பதில் இம்முறை மெதுவான லட்டு வாங்கி பிரித்து வைத்தார்கள். அட்டைகளை அங்கே கொண்டு சென்று சதுரமாக அமைத்து ஓரங்களை நான் இணைத்துக் கொடுத்தேன். அவை நேராக நிற்க ஒரு அட்டையை மடித்து வைத்து |_ ஸ்டேபிள் செய்த பின் அதன் கீழ் பகுதியில் ஒரு கடவுள் பொம்மையை வைத்ததும் அது அந்த சுவற்றை நேராக நிக்க உதவியது.



இவ்வாறாக ஆங்காங்கே |_ இப்படி ஒட்டுக்கொடுத்து அதன் மேல் பொம்மைகளை வைத்து , மணலுக்கு பதிலாக இலைகளாள் தரை பாவி நடுவில் யானைகளின் ஊர்வலம் அமைத்து , வாசலில் வண்ணக்கோலமிட்டு , ஆங்காங்கே சிறு மரங்களைப்போல சிறு கொம்புகளையும், கூடையை கவிழ்த்து அமைத்து சிறு மலைமேல் துர்க்கையுமாக இடம் தயாரானது.



நீலக்காகித்தால் ஆன நதி தயாரானதும் வசுதேவர் கண்ணனைத் தூக்கியபடி ஆற்றில் இறங்கினார். சிறு மரம்போன்ற கொம்புகளுக்கிடையில் கண்ணனும் ராதையும் ஊஞ்சலாடினார்கள். மாடு கன்றுகள் அருகில் யாசோதை பானை தயிற்றில் வெண்ணெய் எடுக்க கண்ணன் அதை எடுக்க ... வெக்கை எங்களை படுத்த என நேரம் சென்றது.



தீபங்கள் ஏற்றி அழகு செய்த நேரத்தில் மக்கள் பார்ப்பதற்கு வர ஆரம்பித்தார்கள். செங்கல்லுக்கு பதிலான என் அட்டைத்திட்டம் பாராட்டுப் பெற்றது. செய்வதற்கும் எளிதும் .. முடித்தபின் அடுத்தவர்களுக்கு தொல்லையும் இல்லை . உடனே கலைத்து எடுத்துச் சென்றுவிடலாம் என்பதெல்லாம் அதன் நன்மைகள். அலங்காரங்களும் யானை அணிவகுப்பும் எல்லாருக்கும் மிகப்பிடித்திருந்ததால் குழந்தைகள் பாராட்டுப் பெற்றார்கள். பெருமிதமாய் அவர்கள் பிரசாதம் வழங்க வந்தவர்கள் தட்டில் பணங்களைப் போட்டபடி வணங்கிச் சென்றார்கள். பிறகு அது அக்காக்களுக்கும் தம்பிகளுக்குமாய் பங்கு போடப்பட்டு அவர்களின் சிறு சேமிப்புக்குச் சென்று சேர்ந்துவிட்டது.




கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..

August 14, 2009

சிறகு பெற்ற மனது

இன்று
சிட்டுக்குருவியினையொத்த
சிறகுபெற்ற என் மனது
உன் இருப்பிடம் தேடி
வீட்டின் முற்றத்தில் இறங்கி
உதட்டிலிருந்து சிதறிய சொற்களை
கடவுளின் பிரசாதமென
கொணர்ந்து சேர்க்கிறது

நாளை மீண்டும் ஒரு
வண்ணத்துப்பூச்சியென
ஜன்னலின் ஊடாக நுழைந்திருக்கும்
என்னிடமல்லாமல் வேறு யாரோடும்
பேசும் ஒவ்வோர் வார்த்தைகளையும் கூட
வேதமென எழுதி வைக்கிறது

மறுநாளும் அதற்கப்புறமும்
வழிதவறியதாகச் சொல்லிக்கொண்டு
வாசல் நுழையும் வண்டென
திரைச்சீலைத் தள்ளி தைரியமாய்
எட்டிப்பார்க்கும் தென்றலென
நித்தம் பல உருமாறி
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.


பி.கு : மீள்பதிவு

August 7, 2009

இனிது ! இனிது! தமிழினிது!

தில்லி நகரில் வடக்கு வாசல் இதழுக்காக நடைபெறும் இசைவிழாக்கள் என்றாலே தமிழிசையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கத் தொடங்குவது வழக்கம். இம்முறை பக்தி இசைவிழா என்று மூன்று நாட்கள் அறிவிப்பு கிடைத்தது. எதிர்பாராதவிதமாக திருமதி பட்டம்மாளின் இழப்பினால் நித்யஸ்ரீ அவர்களின் கச்சேரி இருந்த தினம் மட்டும் விழா நடைபெறவில்லை.

முதல் நாள் விழாவை கேட்க இயாலதபடி வேலை வந்தது. இரண்டாம்நாள் சஞ்சய் சுப்ரமணியத்தின் கச்சேரிக்கு அரை மணி முன்னதாகவே போய் இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம். அது என்ன மாயமோ? இசைக்கச்சேரிகளில் 80 விழுக்காட்டிற்கும் மேல் வயதான தாத்தாவும் பாட்டியுமாகவே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் ரசிப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இளையவர்களும் நடுவயதினரும் சம பங்காக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஆசை தான்.


’ என்ன புண்ணியம் செய்தாயோ’ என்று சஞ்சய் பாடியபோது இது போன்ற தமிழிசைக் கச்சேரிகளைக் கேட்க நிச்சயம் புண்ணியம் தான் செய்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்குமான இடைவேளையில் ஒரு சின்ன துண்டுச் சீட்டு வந்தது. சரிதான் யாரோ பாட்டு கேட்டிருப்பார்களோ அது என்ன பாட்டாக இருக்கும் இப்படி ஆவலோடு (ரசிகர்கள் எல்லாரும் தான்) இருந்தோம். சஞ்சய் ஒருநிமிடம் அமைதியாக அதை வாசித்துவிட்டு சிரித்தபடி ” ஒரு வண்டி ரோடை ப்ளாக் செய்து நிற்கிறதாம் நம்பர் -----” என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பென்னேஸ்வரன் அவர்கள் இதைத் தனியாக வேறு யாரையும் கொண்டு அறிவித்திருக்கலாமே என்று சொல்ல ஓடினார் என்று நினைக்கிறேன். சிச்சுவேசன் சாங் ஐ போல ”யாருக்கும் அடங்காத நீலி” என்று சஞ்சய் ஆரம்பித்ததும் எல்லாரும் சிரிக்கத்தொடங்கினார்கள்.

ஷண்முகப்பிரியாவில் பார்வதி நாயகனே! கண்டேன் கலி தீர்ந்தேன் , மாலனை மன்றாடி மைந்தனை ,பூத்தவளே புவனம் பதினாங்கையும் .. என அவர் தொடர்ந்து இசை மழையாய் பொழிய.. உற்சாகமாய் பாடிக்கொண்டே தானும் ரசித்து மற்றோரையும் ரசிக்க செய்து கொண்டிருந்தார். பக்கவாத்தியங்களும் வயலினில் எஸ்.வரதராஜனும் நெய்வேலி வெங்கடேஷ் மிருதங்கத்திலுமாக களை கட்டி இருந்தது. பாடுவது நமக்காக இல்லாமல் தானும் ரசித்து அவர் பாடும் போது ரசிகர்களுக்கும் அவருக்குமான ஒரு மகிழ்ச்சி அங்கே சமன்பாட்டில் இருந்தது.




” குழலினிது யாழினிது” குறளின் ஈரடிகளை வைத்துக்கொண்டு ஓர் அற்புதமே நிகழ்த்தினார். ( இது பெஹாக் என்கிற ராகம் என்று தலைவாசல் கட்டுரையைப் படித்து அறிந்துகொண்டேன் ) என்னதான் மகளோடு இசை வகுப்பில் போய் அமர்ந்தும் அங்கே இங்கே கேட்டும் வந்திருக்கிற கீர்த்தனை , கிருதி என்கிற கேள்வி ஞானம் கொஞ்சம் இருந்தாலும் தமிழில் பாட்டைக் கேட்டு ரசிப்பதன் இன்பம் தனிவிதம் தான். சில ராகங்களை மட்டும் உடனே கண்டுபிடித்துவிடுவேன் அதில் சகானா முதலிடம். சஞ்சய் சஹானாவில் ஒரு பாட்டு பாடிய போது மகிழ்ச்சியாக இருந்தது.( அன்றைக்கு அவர் சஹானாவில் பாடவே இல்லைன்னு மட்டும் யாரும் சொல்லிடாதீங்க)

சஞ்சய் சுப்ரமணியம் பாடியதைக் கேட்டதிலிருந்து வீட்டுக்குட்டிப்பையன் ராகம் பாட ஆரம்பித்திருக்கிறான். மேடையில் இருப்பது சபரி என்று அவனே சொல்லிகொண்டான் (மைக் ஆசை வந்துவிட்டதோ?). விழா நடந்த வாரத்திலேயே எழுதி இருந்தால் அழகாக சொல்லி இருக்கலாம்.. இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்

’வடக்குவாசல்’ பென்னேஸ்வரன் அவர்கள் தமிழிசையை அனைவருக்கும் கொண்டுசேர்ப்பதற்காய் பற்பல நன்றிகள்.