தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர்
குட்டிப்பையனுக்கு தமிழில் சில பாடல்கள் மற்றும் திருக்குறள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அவன் இப்போது அதிகம் தமிழ்சொற்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டான். எப்போதும் எனக்கு சாஹியே என்பதும் கூட ’எனக்கு வேண்டும்’எனமாறிவிட்டது. வேணும் என்பது கூட இல்லை ’வேண்டும்’ என்று தூயதமிழில் சொல்கிறான்.அவன் அக்கா தமிழிசைப் போட்டிக்காக ’எனக்குவேண்டும் வரங்களை இசைப்பாய்’ என்ற பாரதியார் பாடலை பாடிக்கொண்டிருந்த காரணம் தான் இந்த ”வேண்டும்”.
சரி பாடல்களை இங்கே போய் கேளுங்கள்.
----------------------------------------
பாடல்களை பதிவேற்ற எம்பெட் செய்ய வேறு சிறந்த தளம் இருக்கிறதா என்பதை அறியப்படுத்துங்கள். தற்போது ஈஸ்னிப்ஸ் மற்றும் இமெம் பயன்படுத்தி வருகிறேன்.
-----------------------------------------
கோவையருகே இருக்கும் ஈச்சனாரி கோவில் சென்றிருந்தபோது புத்தகங்கள் விற்பனை நிலையத்தில் ஒரு பார்வை விட்டுக்கொண்டிருந்தேன். பாரதிதாசன் கவிதைகள் புத்தகத்தை எடுத்த உடன் கடைக்காரர் பார்த்தார் . இவங்க எதோ கவிதைபிரியை என்று மடமட வென கலீல் ஜிப்ரான் பற்றிய இரண்டு சிறுபுத்தகங்கள், ஒரு தாகூர்கதைகள் புத்தகம் என என் பட்டியலை உயர்த்தினார். ரெண்டு நாளில் வாங்க தாகூர் கவிதைகள் எடுத்துவைக்கிறேன் என்றார். ஜிப்ரானுடைய கடிதங்கள் இருந்த புத்தகமும் தாகூர் கதைகளும் நன்றாகவே இருந்தன.
ரயில்பயணத்தில் தாகூர் கதைகள் தான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊருல ஒரு ராஜான்னு ஆரம்பிப்பது பற்றி எழுதி இருந்தார் . எந்த குழந்தைக்கும் அது எந்த ஊர் ராஜா அவர் பெயர் என்னவாக இருக்கும் என்று கேட்க தோன்றாது கதை தானே முக்கியம். அந்த கதையில் பாட்டி தானாக வாய்க்கு வந்தபடி இட்டு கட்டிய கதையில் கதை கேட்கும் சிறுவனுக்காக முடிவை மாற்றிச்சொல்வதை அழகாக எழுதி இருந்தார். உண்மையில் தாகூருக்கு நன்றாக இட்டுகட்ட வந்திருக்கிறது (இதெல்லாம் நான் சொல்லலாமா ஓவரா இருக்கே)..பசி கொண்ட பளிங்குமாளிகை என்ற கதையில் யாரோ இட்டுக்கட்டி சொன்ன கதை என்று ஒரு பிசாசு மாளிகையைப் பற்றி செமத்தியாக சுற்றிவிட்டிருந்தார். கடைசியில் முடிவே சொல்லவில்லை. அதான் கதையை சொல்லிக்கொண்டிருந்தவர் ரயில்பயணத்தின் நடுவில் வேறு பெட்டிக்கு மாறிவிட்டாராமே.. தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர். :)
கனம் கோர்ட்டார் அவர்களே என்ற கதை அந்த காலத்து சிவாஜி படம் போல இருந்தது. காபுலிவாலா என்ற கதை மனதை கனக்கவைத்தது. ஒரு குழந்தைக்கும் தன் குழந்தையை வெளியூரில் விட்டுவந்த ஒரு வியாபாரியான தந்தைக்கும் இருந்த நட்பைப் பற்றிய கதை அது.
இருந்தும் இல்லாமல் என்று ஒரு கதை கண்கள் என்று ஒரு கதை . அந்த இரண்டையும் மட்டும் நம்ம ஊர் சீரியல்காரர்கள் கண்ணில் படவிடக்கூடாது. ஏற்கனவே பெண்களை தியாக பிம்பங்களாக காட்டி அழுகாச்சி குடுப்பவர்களுக்கு நல்ல ஒரு விசயம்.இருந்தும் இல்லாமலில் இறந்து விட்டதாக நினைத்த பெண் தான் உயிரோடு இருப்பதை இறந்து நிரூபித்த கதை. ( என்ன தலை சுத்துத்தா?) கண்களில் அரைவைத்தியரான கணவர் மனைவியின் கண்ணை குருடாக்கிய கதை.
நீங்களும் படித்துப்பாருங்கள் . நயஞ்சோர் சீமான்கள் , மன்னவன் நீயே என்ற இரண்டு கதைகளிலும் நல்ல நையாண்டியோடு வெற்று ஜம்பம் அடிக்கும் இருவரைப்பற்றி சுவாரசியமாக எழுத் இருந்தார். புத்தகத்தை வாங்கச் சொன்ன கடைக்காரருக்கும்.. எதாவது புத்தகம் வாங்கிக்கோயென் என்று கடைக்கு முன்னால் நிறுத்திய கணவருக்கும் நன்றி.
