May 21, 2010

விரும்பியதும் கிடைத்ததும்

ரொம்ப பயம்மா இருந்தது. ஊசிக்கு பயமில்லை. ஆனா வாய்க்குள்ள ஊசியா? அது எப்படி இருக்கும்? என்னால் முடியாத ஒன்றுக்காக மகளை மட்டும் எப்படி அழைத்துப்போனேன்? (அவளுக்கு பல்லை உள்புறமாக அமைப்பதற்கு நான்கு பற்களை எடுத்திருக்கிறோம்.) பயந்த அளவு இல்லை.. முதல் ஊசிக்கு கொஞ்சம் வலி இருந்தது. அடுத்த ஊசிகள் இறங்குவதே தெரியவில்லை. பல் எடுத்தபின்னும் தெரியவில்லை. எடுத்துவிட்டீர்களா என்ற என் ஆச்சரியத்தைப் பார்த்து மருத்துவருக்கு சிரிப்பு.

மரத்துப் போகவைத்து நமக்கு தேவையில்லாதவற்றை எடுப்பது என்பது எவ்வளவு வசதி. நம் மனதுகுள் இருந்து ரணமாக்கும் விசயங்களைக் கூட மரத்துப் போகவைக்க ஏதும் ஊசி உண்டா? வலியில்லாமல் எடுத்து எறிய...
உணர்வு வரும்போது இழப்பின் இடம் காலியாக இருக்கிறது. இரண்டு நாள் பெப்சியும் , ஐஸ்கிரீமும் வலியை மறக்க செய்தது.

அம்பிகா ஒரு தொடர்பதிவு எழுதச்சொன்னார்கள். ஆசைகள் கனவுகள் ..நான் என்ன படிக்க ஆசைப்பட்டேன்? பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இருந்தேன். மற்றதெல்லாம் என்னை குழப்பியது. போராடவேண்டி இருந்தது. ஓம் டாலர் டீச்சர் வகுப்பெடுக்கும் போது தூங்கும் தோழியை கிள்ளி எழுப்பிவிட்டேன்.’ எவ்வளவு நல்லா சொல்லித்தராங்க தூங்காதேடி’. நல்ல கல்லூரியில் படிக்கனும் என்பது கனவா இருந்தது. திருச்சியில் சீதாலக்‌ஷ்மியில் படிக்க ஆசைப்பட்டேன். எப்படியோ விண்ணப்பமெல்லாம் பூர்த்தி செய்து அனுப்பியாயிற்று.இடம் இருக்கிறது. ஆனால் தங்குமிடம் மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உறவினர் வீட்டிலிருந்தபடி போக வேண்டாம் என அட்மிசன் கிடைத்தபின் அம்மா திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.

கணினி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என் தோழிகள் சிலர் கணினி எடுத்த போதும் நான் கெமிஸ்ட்ரியைத் தேர்ந்தெடுத்தேன். மேலே படிக்கமுடியவில்லை. வேறுஎன்ன டொனேசன் தான் அங்கே எல்லாம் .. இல்லைன்னா நல்ல மார்காவது வாங்கி இருக்கனும். நான் எந்த மெடலுமே வாங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்று கல்லூரி போட்டியில் கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் .

அதற்கு பிறகும் ஆசை விட்டதா? பேஷன் டிசைன் படித்து தொழிலதிபர் ஆகனும் என்று கனவு . கல்லூரி முடித்தவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்குமென அறிந்து ஒரு தோழியின் உறவினரிடம் விசாரித்து வைத்திருந்தேன். சென்னை கோத்தாரி அகடமியில் விண்ணம் போட்டு , கிடைத்து ,அட்மிசனுக்கு வரச் சொல்லி இருந்தார்கள் . இம்முறை உறவினர் வீட்டில், சென்னையில், பெண் தனியாக சென்று வர இவ்வூர் வசதிப்படாது(!!!) என்றும்சொல்லிவிட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் வெளியிலும் தங்குமிடங்கள் இருப்பது தெரியாது. சிறிது வருடங்களுக்குப் பிறகு என் உறவுப்பெண்களே வெளியில் தங்குமிடத்தில் தங்கி வேலை , படிப்பு எல்லாம் செய்த போது தான் தெரிந்து கொண்டேன்.

தங்குமிடம் வேண்டும் என்பதை முதலிலேயே தேர்வு செய்யாமல் விட்டதற்கு இம்முறை என்னைத்தான் குறை கூறவேண்டும். அதற்காக அழுத கண்ணீரை கணக்கில் எடுக்கமுடியாது. அடுத்தவருடமும் முயற்சி செய்தேன். ஆனால் ஃப்ரஷர்ஷ்களைத்தான் எடுப்பார்களாக இருக்கும்.

எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) . என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம். ஒரு கட்டத்தில் நான் படிப்பு வேலை பற்றிய
கனவு காண்பதையே விட்டுவிட்டேன். வாழ்க்கை என்பது அது பாட்டிலும் போய்க்கொண்டிருக்கிறது.

 தற்போது சில நண்பர்களின் உதவியால் இந்த ப்ளாக் உலகின் உதவியால் பல புதிய விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். இணையத்தை சுற்றிவருவது எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அந்த பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்யச்சொன்னால் சிரமம் இல்லையே.. இணையதளங்களுக்கு எழுதித்தருகிற வேலை சில சமயம் செய்கிறேன். ஆல் இஸ் வெல் (? !)

May 19, 2010

திண்ணை எனும் கனவு

வாசலில் திண்ணை வைக்கும் வீட்டைக் கட்ட பலகாலம் ஆகலாம். இருந்தாலும் பால்கனியில் திண்ணை . பழைய பால்கனி சதுரமாக இருக்கும். அதில் ஒரு அறை எடுத்து விட்டு , தூண்கள் போட்டு கட்டிய புது பால்கனியில் திண்ணை வந்திருக்கிறது.  




இப்படி வெளியே வந்து இடதுபக்கத்தில் திண்ணை . புதியபால்கனி ‘ட’ வடிவத்தில் உள்ளது.



ஓரமாய் செம்பருத்தி.

ட வின் மறுபக்கம் திரும்பினால் மற்ற நண்பர்களும் இருக்கிறார்கள்.

மேல்வீடு கீழ் வீடு இவர்களிடம் பேசி தீர்த்து மத்தளத்துக்கு இரண்டு பகக்ம் இடியாக இரண்டரை மாதங்கள் பாடாய் பட்டு அக்கடாவென டீ குடிக்க உக்கார திண்ணை ரெடி. காலையில் சற்றே இதமான காற்று .. மாலையில் அது ஒரு தோசைக்கல். வெயில் 44 டிகிரி என்கிறார்கள். வருடா வருடம் போன மூன்று ஆண்டுகளில் அல்லது ஐந்து ஆண்டுகளில் ரெக்கார்ட் என்று போடுகிறார்கள். உண்மையா பொய்யா என்று அந்த ஆதவனுக்கே வெளிச்சம்.

May 12, 2010

மாற்றி யோசிப்போம் அல்லது முறையாக யோசிப்போம்

பொதுவாக நாம் அனைவருமே ஆடம்பரமாக எதையும் செய்வதில்லை என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. காந்தி குறைந்த அளவு ஆடைகளை வைத்துக்கொள்ளுங்கள் என்றார். நான்கா வைத்திருக்கிறோம் ? நாற்பது வைத்திருந்தும் போதவில்லை புதியதாய் எடுக்கிறோம். புதிய வீட்டில், கூட ஒரு அறை இருந்தால் போதுமெனத்தோன்றி 8 வருடம் போகவில்லை இன்னும் ஒரு அறை இருந்தால் என்று யோசிக்கிறது மனம். அழகாய் இருக்குமே சேண்டிலியர் தொங்கவிடலாமே என்கிறார் காண்ட்ராக்டர். அவசியப்படாத ஒரு விளக்கும் எரியாத வீட்டில் நாலு விளக்கு ஒரே நேரத்திலா ? என்ன நடக்கிற காரியமா? ஐயா தொலைச்சுவிடுவார்கள் என்று நழுவிக்கொண்டோம்.


அன்றாட வாழ்க்கையிலேயே ஆடம்பரங்கள் சூழ்ந்துவிட்டது. கல்யாணத்தில் எப்படி ?என் தோழி ஒருத்தி ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு வருடந்தோறும் 10000 உதவிக்கொண்டிருப்பதாக அறிந்தேன். நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு அது அசாத்தியமான செயலாகப்பட்டது. எத்தனை பெண்கள் வரதட்சணையால் பாதிக்கப்படுகிறார்கள். தவிர்க்க இயலாத காரணத்தால் இன்னமும் சமூகத்துக்கு இப்படிப்பட்ட உதவிகள் தேவைபடுகிறது.

மொய் வேண்டாம் என்கிற அழைப்பிதழ்களை இன்று பல இடங்களில் காண்கிறோம். ”யாரோ வருவார்கள் கட்டாயத்திற்காக மொய் வைப்பார்கள் அதை நான் வெறுக்கிறேன்” என்று சொல்வார் ஒரு தோழி. வாழ்த்தி அளிக்கும் விதம் போய், சடங்கோடு சடங்காக மொய்சடங்கும் ஆகிவிட்டது. பல அழைப்பிதழ்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றன. நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ’மை ப்ரண்ட் அனு ’ தானாகவே தயாரித்த ஒரு வாழ்த்து மடல் ஒன்றை அழைப்பிதழில் இணைத்திருந்தார்.

அய்யனார் கவிதையால் நிரப்பி இருந்தார் தன் அழைப்பிதழை...
குசும்பனும் காயத்ரியும் இன்று ராமும் தமிழ் பாடல்களை அழைப்பிதழில் இட்டு பலருக்கு தமிழ் மேல் ஆர்வத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .







நேற்றைய பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போதே தமிழ்பிரியனிடம் அதைப்பற்றி விவரித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் அருகில் நடக்கும் நன்மையொன்றை கவனிக்கத்தவறியதை உணர்ந்தேன். அவருடைய திருமணப் பத்திரிக்கையைப் பாருங்கள். 12 வருடங்களாக வரதட்சணை வாங்கும்\கொடுக்கும் திருமணங்களுக்கு செல்வதில்லையாம். வாயிலில் வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு அழைப்பிதழே தரவேண்டாம் என்று கூட எழுதி வைத்திருக்கிறார்களாம். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இருந்தால் அதனையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்லதொரு மாற்றத்திற்கு நன்மையை பலமுறை பல இடங்களில் சொல்வது தவறே இல்லை.

ஆனால் ஆடம்பரங்கள் என்று இன்று சொல்லும் வருத்தப்படும் எவரும் நாளை தங்கள் வீட்டில் ஆடம்பரங்களை நிகழ்த்தாமல் இருப்போமோ என்பது முத்துலிங்கம் அவர்கள் சொன்னது போல ஐயம் தானே? பதிந்து வைப்போம். முயன்று பார்க்கலாம். இயன்றவர்கள் செய்யலாம்.

May 11, 2010

தில்லியில் திடீர் அரண்மனைகள்






கார் போய்க்கொண்டே இருந்தது. கையில் இருந்த வரைபடத்தில் குறிப்பிட்டு கேட்கவேண்டி இருந்த இடம் வந்தபாடில்லை. இப்படியே போனால் புதிய சண்டி துளசி இருக்கும் சண்டிகருக்கே சென்றுவிடுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அடுத்த ஊரில் நடக்கும் திருமணத்துக்கு அழைத்துக்கொண்டுவந்துவிட்டீர்களே என்றோம். ரோகினி எங்கே ? என்று ஒரு தலைக்கவசம் விற்பவரைக் கேட்டோம். அவளை எனக்குத் தெரியாது என்று சொல்வாரென்று எதிர்பார்த்தேன் . அவர் எனக்குத்தெரியாது என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார். இவர்களைப்போல தொழில் செய்பவர்கள் ஊரூராய் நாடோடிகள் போல நகர்பவர்களாக இருக்கும்.

கணவரின் கூட வேலை செய்வர் தன் சகோதரியின் திருமணத்துக்கு அழைத்திருந்தார். விசாரித்து விசாரித்து ஒருவழியாய் அரண்மனையை அடைந்தோம். தில்லியில் திடீர் திடீர் அரண்மனைகள் முளைக்கும். இன்று மாலை இருக்கும் கோட்டை அடுத்த நாள் காலையில் இருக்காது. ஈட்டிகளோடு வாயிற்காப்போனும் மலர் சொறிதலும் கூட சில சமயம் உண்டு.

சக்தி டெண்ட் காரர்கள் உபயத்தில் ஒரு பூங்கா அரண்மனையாக உருமாறி இருந்தது. பரிசிலும் கிடைத்தது. நுழைந்துகொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் 21 ரூ கவரில் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் கிட்டியது. மகளே வாங்கிக்கொள் என்று பெரியவர் கொடுத்தார். அவர் மணமகளின் தந்தையாக இருக்கலாம். இதுவேறு செலவா?

புதியதொரு கார் . மாப்பிள்ளைக்குத் தான். வாயிலின் மறுபக்கத்தில் கட்டில் மெத்தையிலிருந்து அதில் மாற்றி மாற்றி இட 7 போர்வைகளும் , துவைத்தல் சமைத்தலுக்கு எல்லா எல். ஜி தயாரிப்புகளும் , கேஸ் சிலிண்டரும் பாத்திரங்களூம் என ஒரு வீட்டிற்கு தேவையானவையும் அதற்கு அதிகமானவையும் இருந்தது. மொத்தமாக செலவுக்கணக்குக் கூடிக்கொண்டே போகிறதே!!

எங்கெங்கு காணிலும் ஆண்கள் ஆண்களே.. ஆங்காங்கே நீள் மெத்தை இருக்கைகள் .நடுவில் மேசையுடன். பெரிய பெரிய பூஞ்சாடிகள் என்று மயன்மாளிகை அலங்காரங்கள் , உப்பரிக்கைகள். மிக மிகத் தொலைவில் மேடை. பன்னீர் தெளிக்கும் காத்தாடிகள். பேல்பூரி , பானிபூரி , ஐஸ்கீர்ம் , உருளை போண்டா , நூடுல்ஸ் , ரொட்டிகள் என கடைகண்ணிகள் அது ஒரு சிற்றூரின் கடைத்தெருவைப்போல இருந்தது . என்னையும் மகளையும் தவிர ஒரே ஒரு பெண் தெரிந்தார். மற்றபடி பெண்களெல்லாம் மாயமாய் மறைந்திருந்தனர். அது இஸ்லாமியத் திருமணமாகிற்றே.

வாயிலில் சற்றே பரபரப்பு . மணமகன் தலையிலிருந்து கால் வரை ரோஜாக்களால் மறைத்து மூடிய முகமூடியோடு மெதுவாக மிக மெதுவாக.. வந்தார். . பெண்கள் பகுதிக்கு நகரத்தொடங்கினோம் நானும் மகளும்.

நுழைவாயில் அருகேயே பெண்களுக்கு என தனிவாயில் இருந்திருக்கிறது. பெண்கள் பகுதிக்கு நுழைந்ததும் எங்களுக்கு பகீரென்றது. அது மிகச்சிறியதும் அலங்காரங்களிலும் ஆண்கள் பகுதிக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். என்ன அநியாயம். ஆனால் ஆண்கள் பகுதியில் வெறும் வெள்ளை சந்தன நிற ஷெர்வானியோ அல்லது சாதா குர்தாவோ பார்த்து விட்டு இங்கே நுழைந்தால் கண் கூசுகிறது. பெண்கள் ஜரி என்னும் அலங்கார வேலைப்பாடுகள் செய்த உடைகளாலும் கைகளிலும் கால்களிலும் பளபளப்பான வளையல் காலணி என ஜொலித்தார்கள். நானும் மகளும் மட்டும் தனித்தே தெரிந்திருப்போம்.

ஆனால் அங்கே சில ஆண்கள் இருக்கத்தான் இருந்தார்கள். அதுவும் நான்கு சிறுவயது ரோமியோக்கள் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். உட்கார இடமே இல்லை. இருந்த இடங்களில் எல்லாம் பெண்கள் குழுமி இருந்தார்கள். எல்லாரும் சிக்கனும் மட்டனும் வெளுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாருடைய அனார்கலி சுடிதார்களை நோட்டமிட்டு கொண்டே அப்படியே கொண்டையலங்காரங்களை பற்றி அலசி விட்டு நூடுல்ஸ் எடுத்துக்கொண்டோம். பின் ஒரு ஓரமாக கிடைத்த மேஜையில் நின்று கொண்டே ரொட்டியும் சென்னாவும் சாப்பிட்டோம். அப்போது அங்கே ஒரு பெண் முக்காடு இட்டு வந்து அமர்ந்தார்.

அமர்ந்ததிலிருந்து எண்ணையில் போட்ட கடுகு போல பொறிந்து தள்ளினார். அங்கே உக்காராதே இங்கே உக்காராதே எனச் சொல்லுகிறார்கள். பார்! போன கல்யாணத்தில் அங்கே உக்கார்ந்தேன். அங்கே பசங்க வருவாங்க என்று திட்டினார்கள் . ஊரார் என்ன சொல்வார்கள் என்றார்கள். இதோ இங்கே உக்கார்ந்திருக்கிறேன். வந்ததும் ஏன் இங்கே விற்பனையாளர்கள் ஆண்களில்லையா என்பார்கள் கேள்! மூலையை ஏன் தேர்ந்தெடுத்தாய் எனவும் சொல்வார்கள்.. அவர்கள் இவர்கள் எல்லாரும் என்ன சொல்வார்கள் என்று திட்டுவார்கள் பார்! , என்றாள் ,. அதுவே நடந்தது.

எங்களைப்பார்த்து நீங்கள் என்ன வெறும் ரொட்டி சாப்பிடுகிறீர்கள் இதெல்லாம் டேஸ்ட் செய்வதில்லையா என்று கேட்டார்கள். வெஜ் என்று சொன்னதும் ”பாவம்” என்று முடித்துக்கொண்டார்கள். நாங்கள் இருந்தவரையிலும் மணப்பெண் வரவே இல்லை. ஆனால் நாங்கள் முக்காடிட்டு அமர்ந்திருக்கிற நாலைந்து பெண்களை அதுதான் மணமகளோ என நினைக்கும்படி இருந்ததால் இது தபுசமா என்று விசாரித்துக்கொண்டிருந்தோம். எங்களை விநோதமாகப் பார்த்தார்கள். அது சரி அலங்காரம் அப்படி இருந்தால் எங்கள் மேல் என்ன தவறு.

முதல் முதலாக கணவனும் மனைவியும் பிரிந்து இருக்கும் திருமணம் இல்லையா என்று கேட்டார் நண்பர். ஆமாம் இப்படித்தான் இருக்குமென்று எதிர்ப்பார்த்தேன். என் பள்ளித்தோழி கல்யாணத்தில் ஆண்களும் பெண்களூம் தனியாக இருப்பதை நம் ஊரிலும் பார்த்திருக்கிறேன். அப்போது வெஜ் பிரியாணி இருந்தும் கூட வந்திருந்த மற்றொரு தோழியின் கட்டாயத்தால் உணவருந்தாமலே பஸ் ஏறினோம்.

வீட்டுக்கல்யாணங்களில் பேதமின்றி அனைவரும் வட்டமேஜை மாநாடு போட்டு மாமாக்களும் சித்தப்பாக்களும் அத்தைகளும் என கொண்டாடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. கடுகு பொறிந்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். மொத்த கல்யாணமும் 30 லட்சம் செலவாம்...


இத்தனையும் உங்களூக்கு அந்த அரண்மனையைக் காட்டத்தான். என்ன ஒரு கடவுளின் சித்தம் பாருங்கள் படத்தில் பெண்களின் மேடையலங்காரம் தான் அழகாக வந்திருக்கிறது. ராயலாக.. :) ஆனால் கோட்டையின் சுற்று அலங்காரம் என்ன சொல்லுங்கள் ஆண்கள் பகுதிதான். பெண்கள் பகுதியில் சுற்று அலங்காரமே இல்லை. ..