October 20, 2010

நிலவொளியோடும் தீப ஒளியோடும் கங்கை

நீல்கண்டிலிருந்து திரும்ப லக்ஷ்மண் ஜூலாவில் வந்து இறங்கினோம். நடந்தே ராம் ஜூலாவிற்கு சென்று விடலாம் என்று அக்கரையிலேயே நடந்தோம்.. மிக நீண்ட தூரம் என்பது நடக்க நடக்கத்தான் தெரிந்தது.ஆனால் அதே போல் வெளிநாட்டினர் பலர் பேக்பேக் போட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.. மதிய உணவை ஒரு சிறு தாபாவில் முடித்துக்கொண்டு நாங்கள் ராம் ஜூலாவை அடையும் போது அங்கே ஒரு ரிஷிகேஷ் புகழ் உணவு விடுதி அதன் பெயர் சோட்டிவாலா (இந்த சைட் ல் ரெசிபி கூட இருக்காம்) அருகருகே இரண்டு இருந்தது எது ஒரிஜனல் என்று தெரியவில்லை. சாப்பிடச்செல்ல எங்களுக்கு நேரமில்லை.. வெளியே சோட்டியும் (குடுமி) தொந்தியுமாக இரண்டு கடைகளிலும் ஆளுக்கொரு மனிதரை மேக்கப் செய்து விளம்பரத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
புகைப்படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும் மிக பந்தாவாக அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

ரிஷிகேஷ் ஆரத்தி நடப்பது பரமார்த்த ஆசிரமத்தில் என்பதால் அங்கு சென்றோம். கங்கைக்கரையில் படித்துறைக்கு எதிரில் நீருக்குள் ஒரு மேடை அமைத்து அதில் பெரிய சிவன் தவமியற்றும் காட்சி..
மாலை நேரத்திற்கு பிறகு சிவனின் முடியில் இருந்து கங்கை விழுகிறாள். குறிப்பிட்ட நேரம் வரை அந்த படித்துறைக்கு செல்ல முடியாது என காவலுக்கு இருந்தவர் சொன்னதால் அதற்கு எதிர்புறமிருந்த பரமார்த்த ஆசிரமப் பூங்காவில் அமர்ந்திருந்தோம். பூங்கா மிக அழகாக பரமாரிக்கப்படுகிறது. ஆங்காங்கே சில சிலைகள் கதை சொல்கின்றன. தினமும் சத்சங்கம் உண்டு போல.. நாங்கள் சென்றபோது தான் அது முடிந்தது. சத்சங்கம் செய்ய பெரிய ஹால் இருக்கிறது. பாலாஜி மற்றும் சில சாமி சன்னதிகள் பார்த்த நினைவு. 

படித்துறைக்கு நுழைய அனுமதி கிடைத்ததும் நாங்கள் படிகளுக்கு பிறகு இருந்த சமதளத்தில் அமர்ந்திருந்தோம். கூட்டம் வரத் தொடங்கும் முன் எங்களைப் போலவே காத்திருந்த இன்னோரு குடும்பத்தினரை அழைத்து கங்கைக்கு பூஜை செய்யத்தொடங்கினார் ஒரு காவி உடையணிந்த குரு ஒருவர். அக்குடும்பத்தினர் எங்களையும் அழைக்கவே நானும் குழந்தைகளும் அதில் கலந்து கொண்டோம். அவர் மந்திரங்களைச் சொல்லி நம் கைகளில் மலர் கொடுத்து பூஜை செய்யும்படி பணித்தார்.



ஒரு வெளிநாட்டுப்பெண் சிவனுக்கு முன்பு படித்துறை கடைசிப்படியில் அமர்ந்து சிறிதுநேரம் த்யானம் செய்தாள்.

பிறகு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத்தொடங்கியது . வானில் இருள் கவியத்தொடங்கியது கூடவே குளிரும் வந்துவிட்டது .. கங்கைபூஜை செய்த குருவின் மேற்பார்வையில் காவி உடையணிந்து வந்த சிறுவர்கள் சமதளத்தில் வரிசையாக உட்காரவைக்கப்பட்டார்கள்.



அப்போது பூஜ்யஸ்வாமி ஒருவர் வந்தார் .. இவர்களை எல்லாம் ஆஸ்தா போன்ற தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம்.. பிறகு பாடல்கள் பாடினார்கள்.. கங்கா ஆரத்தியின் (போட்டோ கேலரி பரமார்த் தளம்)போது சிறு சிறு தட்டுகளில் தீபம் வந்தது.
அதைகொண்டு மக்களும் ஆரத்தி எடுக்கலாம். நாம் எடுத்துவிட்டு அருகிலிருப்பவருக்கும் அதை கொடுத்து அவர்களை ஆரத்தி எடுக்க செய்யலாம். 



ப்ரதம சிஷ்யை வெளிநாட்டுக்காரங்க போல பாட்டும் ஆரத்தியும் பக்தியுமா இருந்தாங்க..

முழுநிலா இரவில் ராம் ஜூலாவில் நடந்து கங்கையை கடந்தது அருமையான அனுபவம் . ஷேர் ஆட்டோ பிடித்துக்கொண்டு கோவிலூர் மடம் வந்து சேர்ந்தோம். டீவி இல்லாத புதுவருடப்பிறப்பின் இரவு. அங்கே ஏற்கனவே சொல்லியிருந்தேனே நம்ம சாய் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் பான் ஃபயர் செய்ய தயாரிப்பில் இருந்தார்கள். இன்னோரு பக்கம் புதுவருட பிறப்புக்கான சத்சங்க் ஒன்றும் ஒரு அறையில் ஏற்பாடாகி இருந்தது. இரவெல்லாம் முழித்திருக்கப்போவதால் இரவு உணவு தாமதமாக தயார் செய்ய திட்டம் போலும். நாங்களும் காத்திருந்து உணவு மணி அடித்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். 12 மணிக்கு வெடிச்சத்தமும் தொலைபேசி அழைப்புகளும் புத்தாண்டு வாழ்த்துகளை வழங்கியது. . (தொடரும்)

(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கலாம்)
பிற்சேர்க்கை: கங்கையில் வெள்ளப்பெருக்கு நேர்ந்த போது சிவ்ஜி அடித்து செல்லப்பட்டது நான் அறியாதது. குழந்தைகள் கொடுக்கின்ற கொஞ்ச நேரத்தில் நியூஸ் பார்க்கும்போது ஆரத்தி நடந்த இடமும் சிவனும் வெள்ளத்தில் பாதி மூழ்கியது தெரியும்.. இப்போது பின்னூட்டத்தில் ஸ்வாமி ஓம்கார் சொன்னபின் தான் தேடியதில் இந்த வீடியோ கிடைத்தது..



October 18, 2010

வானவில் இற்றைகள் *

(இற்றைகள்* = அப்டேட்ஸ்)

தூங்குவதற்கு முன்பு சில நாள் கலந்துரையாடல் நடக்கும். அப்போது குட்டிபையனுக்கு விதவிதமான கேள்விகள் தோன்றும்.. பெரியவளுக்கு விதவிதமான கதைகள் கேட்பதில் விருப்பமிருந்தது ஒருகாலத்தில்.

கேள்வி: அம்மா நீ பூடி(வயதானவள்) ஆனதும் கூட சமைச்சுத்தருவியா எனக்கு ?

ம் ஆமாடா ஏன்?
கேள்வி : அக்காவும் சமைப்பாளா?
ஏண்டா அவள் சமைக்கனும்.. என்று கேட்டுவிட்டு பின், சரிதான் அவளுக்கும் உனக்கும் சேர்த்தே தான் சொல்லித்தருவேன் சமைக்க.. ஒருநாள் நீ ஒருநாள் அவள் சரியா?

கேள்வி: அப்ப நாம மூணுபேரும் சமைக்க அப்பா மட்டும் சாப்பிடுவாங்களா?
அட அவங்களுக்கும் சிலதெல்லாம் சமைக்கத்தெரியுமே அதெல்லாம் அவங்களை செய்ய சொல்லலாமேடா..
கேள்வி: அப்ப நாம நாலு பேருமே சமைச்சா யாரு சாப்பிடுவது..

நாம தான் ..மாத்தி மாத்தி சாப்பிட்டுக்கலாம் வேணா யாரையாச்சும் கூப்பிட்டு சாப்பாடு குடுக்கலாம்..

ம் சரி..கொர் கொர்
-----------------------
கேள்வி: அம்மா ராத்திரி பல் தேய்க்கும் போது மூக்கில் தண்ணி ஏறிடுச்சு ..அந்த தண்ணி எங்க போகும்?
ம் தொண்டை கிட்ட சாப்பாடு போற பைப் கூட ஒரு கனெக்சன் இருக்கு அது வயிற்றுக்குள்ள போயிடும்..
கேள்வி: அய்யோ வாஷ்பேசின் தண்ணி அழுக்குத்தண்ணி அதை குடிக்கக்கூடாதுன்னியே? இப்ப என்ன ஆகும் ? :(

அதெல்லாம் ஒன்னும் ஆகாது ..இன்னிக்குத்தான் பால் , சாப்பாடு எல்லாம் நல்லா சாப்பிட்டியே அதனால் உள்ள ரத்தத்துல இருக்கிற ஃபைட்டர் செல் எல்லாம் சண்டைபோட்டு கிருமிய கொன்னுடும்

ஓ அப்ப சரி கொர் கொர்..
-------------------------
டைக்வாண்டோவில் சேர்ந்து ஒருவருடத்திற்குள் மஞ்சள் மற்றும் பச்சை பெல்ட் கள் வாங்கி விட்டார்.. ஒயிட் பெல்ட் ஆரம்பநிலைக்கானது.

கேள்வி: அம்மா அக்காக்கும் ஆசையா இருக்காம் டைக்வாண்டோ..அப்ப அவ ஒயிட் பெல்ட் ஆகிடுவாளா?

ஆமா ஒயிட் பெல்ட் இப்பத்தானே சேரப்போகிறா..

நான் க்ரீன் பெல்ட(பெருமையுடன்)..சொல்லித்தருவேன் அக்காக்கு..



எதிர்வீட்டில் போய் ஆச்சி தாத்தா ப்ரண்ட் துருவ் எல்லாருக்கும் எங்கக்கா ஒயிட் பெல்ட் நான் க்ரீன் என்று காலையில் பந்தாவாக சொல்லிவிட்டு வந்தான்.

அக்காவைப்பார்த்து தம்பி பாடவும் ஆடவும் விரும்பியது போக ..தம்பியைப்பார்த்து அக்காவுக்கு இந்த ஆசையோ அல்லது அடிவிழும் வேகம் பார்த்து தன்னை தற்காத்துக்கொள்ளவோ :)

------------------------------
பள்ளியில் விட்டுவந்த நோட்காக ஒரே அழுகை..அதில் ஹிந்தி வீட்டுப்பாடம் இருந்ததாம்..டீச்சர் மேல் ஓவர் மரியாதையும் பயமும் அழுகைக்கு காரணம்.. அவன் அழுவதை சகிக்காத போது இத்தனை ஒழுக்கமாக இருக்கனுமா என்று வருந்தினேன்.
----------------------------
பக்கத்துவீட்டு தோழன் துருவ், இவன் வாங்கிய பொம்மையைக் காட்டி அவன் ஒன்று வாங்கி இருப்பான். அதைக்காட்டி நம்மை வாங்கித்தர சொல்லி இவன்... (டீலிங்க் நல்லா இருக்கே..)

பொம்மையிலிருந்து இப்ப சினிமாவிற்கும் இடம்பெயர்ந்துவிட்டது இந்த டீலிங்க்..
ரோபோ எந்திரன் குட்டிப்பையன் பார்த்தான்.
பதிலுக்கு தோழன் இராமாயன் போகிறான். மீண்டும் கண்ணீர் விட்டு அழுகை.. ஓ இந்த பட்ஜெட் கட்டுபடியாகாதப்பா..:)

October 13, 2010

சங்கச்சுடரில் அறிமுகம்





தில்லித் தமிழ்ச் சங்கத்தின் "சங்கச்சுடர்" ஆகஸ்ட் 2010 இதழில் என் சிறுமுயற்சி பற்றி ஒரு அறிமுகம். தலைநகர் வலைப்பூக்கள் என்கிற தலைப்பில் பெரியோர்களுடன் என் வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது.
சுடர் குழுவினருக்கு நன்றி.


October 9, 2010

கதையூர் போயிருக்கீங்களா..?

வாங்க இது எங்க வீட்டு கொலு..முழுக்க முழுக்க படி அடுக்கியது மகளும் அவள் தோழியும் தான்.. சுண்டல் செய்தது நான். சுண்டல் எடுத்துங்கோங்க.. பச்சை பயறு பிடிச்சவங்க பச்சை பயறு இல்லன்னா கடலைப்பருப்பு சுண்டல் உங்க விருப்பம்.
From golu 2010


இதுதாங்க கதையூர் (ஸ்டோரி லேண்ட்) இது ஒரு டீம் ஒர்க் . மகள் அவளுடைய தோழி மற்றும் நான்.
பொம்மைகள் உதவி : குட்டிப்பையன்.

From golu 2010


கதைபுத்தகத்திலிருந்து காட்சிகள் :
ஷெர்க் , கோட்டை , ஜேக் அண்ட் தெ பீன்ஸ்டாக் ,மோக்ளி ஜங்கிள் புக் ,ஜிஞ்சர் ப்ரெட் மேனும் அவனைதுரத்தும் மாடு ,குதிரை சாப்பிடக்காத்திருக்கும் நரி, கிணத்துக்குள் விழுந்த சிங்கம், ஸ்லீப்பிங்க் ப்யூட்டி,

From golu 2010




From golu 2010

 ஐஸ் ஏஜ் அணில், மெர்மெய்ட் , சிந்துபாத்தோட கப்பல் (சிந்துபாத் காணோம் )

From golu 2010

கார்டூன் கேரக்டர்கள்:
ஜன்னல் வரிசையில் முதலில், கார்ஸ் (அனிமேசன் பட ஹீரோ) ,பவர்பஃப் கேர்ள், பிக்காச்சோ, பென் டென் , பாப்தெ பில்டர் , ஸ்பைடர் மேன், பவர் ரேஞ்சர்ஸ்..

பிக்காசா ஆல்பத்தில் ( http://picasaweb.google.co.in/muthuletchumi/Golu2010?feat=directlink )

கடைசிபடத்தில் பெரியவங்களுக்கு கைக்குட்டை டவல் குழந்தைகளுக்கு தலைக்கு வைக்க க்ளிப்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க.. மஞ்சள் குங்குமமும் வெத்தலைபாக்கும் போட்டுத்தர மகள் கையால் செய்த நியூஸ் பேப்பர் கவர்கள் கூடவே இருக்கு..
From golu 2010

நவராத்திரிக்கு வந்ததற்கு நன்றி நன்றி நன்றி.