January 31, 2011

மீனவர்களுக்காக டிவிட்டர் #tnfisherman


50 சொச்சங்களில் மட்டுமே டிவிட்டிவிட்டு , சரிவரவில்லை என அதை மறந்தே போயிருந்தேன் . இந்த தொடர் முயற்சியில் கலந்துகொள்ளவே டிவிட்டர் பற்றி மீண்டும் புரிந்துகொண்டு தொடர்ந்து 1000 டிவிட்டுக்களை அடித்துள்ளேன்.  தொடரும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள். 


TN politicians, see  as a human rights issue not ur election issue
மேலும் போராட்டத்தின் விவரம் அறிய ஆல் இன் ஆல் ப்ளாகில் பதியப்பட்ட பதிவின் மீள்பதிவு இங்கே.


 இதுவரை சென்று சேராத எவரேனும் இதை வாசித்து கையெழுத்திட , செய்திகளை அனுப்ப வாய்ப்பாக இங்கே பதியப்படுகிறது.  
----------------------------------------------------------------------------------------------------


1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.


நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

http://www.petitiononline.com/TNfisher/petition.html

January 27, 2011

வானவில் இற்றைகள் - ஜனவரி 2011

இற்றைகள்* - அப்டேட்ஸ்

அந்தந்த நாட்களின் என் அனுபவங்களில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவற்றை குழந்தைகளிடமும் பேசுவது வழக்கம். டிவிட்டரில் தமிழ்நாடு மீனவர்களுக்காக அனைவரும் #tnfisherman  என குறிப்பின் கீழ் இணைந்து ஊடகத்தால் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்வதையும் ஆனால் தொலைக்காட்சி ஊடகத்தில் அவை வராதது பற்றியும் நானும் மகளும் பேசிக்கொண்டிருந்தோம்.
அதிரடியாக அவள் சொன்னாள்.

”டீவிக்காரங்களுக்கு யாராச்சும் லவ் செய்து தற்கொலை செய்துகொண்ட பையனைப்பற்றிப் பேசவே நேரம் போதாது. அவங்க எங்க உருப்படியா வேலை செய்யப்போறாங்க.. அவங்க பொலிட்டிக்கல் ஆளுங்களோட சேர்ந்துட்டாங்கம்மா “ 

இந்த வாரம் தான் நொய்டாவில் ஒரு ஷாப்பிங்மாலின்  நான்காவது மாடியிலிருந்து ஒரு பையன் கீழே விழுந்து இறந்துவிட்டான். அவளுடைய தோழிகள் எல்லாம் அதுபற்றியே பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற ”நடந்தது என்ன?” எனும் மிரட்டும் பிண்ணனியோடு வரும் நிகழ்வுகளையே அவர்கள் விரும்பிப் பார்ப்பதாகவும் சொல்லிக்கொண்டிருந்தாள்.



------------------
பீம்சிங் ஜோஷி இறந்துவிட்டார் என்ற செய்தியைப்பற்றிப் பேசிக்கொண்டே இணையத்தில் அவர் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். தலையைத் திருப்பி சின்னவர் பார்த்தார். மீண்டும் காண்பிக்கச்சொல்லிப் பார்த்துவிட்டு. ..
வயசாகி நாமளும் செத்துப்போவோமா?
ஆமா
அப்பறம் திரும்பி பிறப்போமா?
ஆமா
அப்பன்னா நான் திரும்பி பிறக்கறதுக்கு முன்னயே நீங்களும் அப்பாவும் பிறந்துடுவீங்கன்னான்..
ஏண்டா அப்படி ?
அப்பறம் தான் நான் பிறப்பேன்.

அடுத்த ஜென்மத்துலயும் எங்களுக்கே மகனாக பிறக்க ஆசைப்படுகிறானே என்ன பேறு பெற்றோம்.


---------------------------
எங்கள் பகுதியில் குடியரசு தினவிழாக்கொண்டாட்டத்தில் மகன் லெமன் ஸ்பூனில் 3 வது பரிசும்
மகள் ம்யூசிக்கல் சேர் ல் 2 வது பரிசு.

தனியாக அக்காவும் தம்பியும் சென்றார்கள், வென்றார்கள், வெங்கலம் மற்றும் வெள்ளிமெடல்களுடன், வந்தார்கள்.
---------------------
ஆங்கிலமற்றும் கணித பயிற்சி ஏடுகளில் மூன்று நட்சத்திரம் எப்போதும் கிடைத்துவிடுகிறதாம்.
ஹிந்தியில் மட்டும் இரண்டு தான் என்று வருத்தப்படுவான். சின்னதாக ஒரு விசயம் நாம் மாற்றினாலும்
“ அய்யோ அந்த டீச்சர் அடிக்கடி கோவப்படுவாங்க இப்படி எதும் செய்யாதீங்க “ என்று பயப்படுவான்.

உன்னை இதுவரை திட்டியதில்லையே அப்பறம் ஏன்? என்றாலும் ஒரு குழப்பமான முகபாவம் தான் .
பள்ளியின் ஆசிரியர் சந்திப்பு தினத்தில் ஹிந்தி ஆசிரியை வேறு ஒரு தளத்தில் இருப்பதால் உங்களுக்கு எதுவும் பேச வேண்டுமானால் சென்று சந்திக்கலாம் என்று சொன்னார்கள்.
புத்தகக்கண்காட்சி ( பள்ளியில் ஆசிரியரை சந்திக்கும் தினத்தில் வைப்பார்கள் வியாபார உத்தி) செல்லும் ஆவலுடன் கூட,ஆசிரியையை சந்திக்கும் பயமும் சேர்ந்து கொள்ளவோ என்னவோ
”நான் தான் ஹிந்தி நல்லா படிக்கிறேனே எதுக்கு பார்க்கனும்.”
:)
------------------
புத்தகக்கண்காட்சியில் ஆக்டிவிட்டி செய்கிற புக் வேண்டாம் அதுபோல நிறைய வீட்டில் இருக்கிறது என்று நான் மறுத்ததற்கு ..
நான் கந்தி (கெட்ட) அம்மா ஆகிவிட்டேன்..

டிஸ்னியின் தி ஜங்கல் புக் வாங்கினான். அக்கா அடிக்கடி புத்தகம் வாங்கினாலும் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள் என்பதால் அவளைக்காட்டி நீ புத்தகம் வாங்கக்கூடாது. இனி இந்த புத்தகத்தை முழுதாக வாசித்துக் காண்பி அதற்குப் பிறகு தான் அடுத்த புத்தகம் என்று வேறு சொல்லிவிட்டேன். கொஞ்சம் ஆதங்கம் தான் .
------------------------
சபரியின் தளம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடைய நடனநிகழ்ச்சியின் காணொளி இற்றைப்படுத்தப்பட்டிருக்கிறது.

January 18, 2011

போகி அன்றைக்கே பொங்கல்



thai.mp3
 போகி அன்றைக்கே பொங்கி இருக்கோம் ல வானொலியில்


கானா ப்ரபா தொகுத்து வழங்கும் தித்திக்கும் வெள்ளி எனும் ஆஸ்த்ரேலிய வானொலி நிகழ்ச்சியின் போது பொங்கல் நினைவுகளைப் பகிரும் படி அழைத்திருந்தார். ஆனால் தொலைபேசி இணைப்பு கிடைத்த நொடி (அது நேரலை) தமிழ்நாட்டு பொங்கலைப்பற்றி என்று ஆரம்பித்தார். எனக்கு என்றைக்கும் என்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிக்கும் பழக்கமெல்லாம் இல்லை :( நான் எதாவது ஒன்றை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதைதவிர எல்லாவற்றையும் அவுட் ஆஃப் ஃபோகஸில் வைத்திருப்பேன் சிலவற்றை மறந்தே போயிருப்பேன்.

என் ஊரைக்கூட முழுமையாகத் தெரிந்ததாகச் சொல்லமுடியாது. தற்போது மாயவரத்துக்காரர்கள் பலர் இங்கிருக்கிறார்கள்.. மாயவரத்துப் பொங்கல் இப்படி மட்டுமா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள். நான் கொண்டாடியதைத்தானே நான் சொல்லமுடியும். வீடு இருந்த இடத்தில் மாடு கன்னு வளர்த்தவர்கள் இல்லை. பொங்கலுக்கு எந்த விவசாய நிலம் வைத்த தோழிகள் வீட்டுக்கும் போனதில்லை. அதனால் என் வீட்டு பொங்கல் , என் நினைவில் தங்கி இருக்கும் பொங்கல் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் புகுந்து எதோ கேள்வி கேட்க முயன்றிருக்கிறார் கானா :) நல்லதொரு நேயர் ப்ரண்ட்லி ஆள் கானா . நம்மை பேசும்போது இன்னும் பேசவைப்பது போன்ற வார்த்தைகளை இடையில் சொல்லி வைப்பார்.

அவருடைய நிகழ்ச்சியில் பலர் தண்ணி குடிச்சு குடிச்சு பேசுவாங்க . ஆனாலும் தொடர்ந்து பேச வாய்ப்பளிப்பார். ஏனென்று கேட்டபோது.

 தமிழ்பேச அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு  வாய்ப்பென்று சொல்லுவார் கானா.. எனக்கும் பழைய நினைவுகளை நினைத்துப்பார்க்க வாய்ப்பளித்தார் நன்றி.

--------------

தில்லியில் இவ்வருடம் குளிர்காற்றில் உறைந்து கொண்டிருந்தோம். ஆனால் போன வருடங்களைப்போல இல்லாமல் பொங்கலன்று கனிவோடு சூரியன் அழகாக முகம் காட்டினார். பொங்கல் பானையை திடீரென உதித்த யோசனையோடு கணவர் வெளியில் வை கும்பிடலாம் என்றார்கள். அவசரக்கோலமொன்று போட்டு பால்கனியில் வைத்து கும்பிட்டோம். கரும்பு காய்கறிகளோடு சாமியறையில் பொங்கல் வைத்தபோது படமெடுக்க மறந்துவிட்டது.

பொங்கல் பொங்கி சாமி கும்பிட்டு விட்டு மலைமந்திர் சென்று முருகனை வழிபட்டுவந்தோம். மதியம் நல்ல சுகமான வெயில் .
                                பால்கனியில் லஞ்ச் 
பொங்கிய பொங்கலுக்கு தேங்காய்துவையலும் ,அப்பளம் வத்தலோடு பல காய் சாம்பாரும் , நெஸ்லே தயிரும் ... பிறகு கரும்பும் என பொங்கல் இனித்தது.

சக்கரைப்பொங்கலுக்கு அடிமையான பையர் ப்ரவுன் பொங்கல் தா தா என்று நாலு வேளையும் பொங்கலே சாப்பிட்டார்.

January 17, 2011

பொங்கல் பரிசாய் தமிழ்மண விருது - நன்றி

சிறுவயதிலிருந்தே நான் அதிகமாக போட்டிகளில் கலந்து வழக்கமில்லை. மூன்றாம் வகுப்பிலிருக்கும் போது ஒருமுறை பாட்டுப்பாடி ஒரு பென்சில் வைக்கிற டப்பா பரிசு வாங்கியதை அடிக்கடி அப்பா அம்மா சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது நீலநிறமும் வெள்ளை மூடியுமா இருந்ததோ.. சரியாக நினைவில்லை.

அதற்கு பிறகு படித்த பள்ளிகளில் எதும் போட்டிகள் பரபரப்பாக நடந்ததுமில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை பாட்டுப்போட்டிக்கு வகுப்பாசிரியையே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தார்கள். ரோட்டரி க்ளப் போட்டி. (பரிசு கிடைத்திருந்தால் தான் சொல்லி இருப்பேனே ? என்னன்னு யாரு கேட்பது) அத்தோடு சரி. கல்லூரியில் வயலினில் கோல்ட் மெடல் வாங்கிய கதை தான் முன்பே எழுதி இருக்கிறேனெ..

அதற்கு பிறகு காட்சிக்கவிதை பரிசு 500 ரூ புத்தகப் பரிசு அன்புடன் குழுமத்தின் ஆண்டுவிழாவில் கிடைத்தது. இணையம் தான் தன்னம்பிக்கை அளித்திருக்கிறது. போனவருடத்தின் தமிழ்மணப்போட்டியில் இருத்தலின் அடையாளமாக பதிவை சேர்த்திருந்தேன். பரிசு ஒன்றும் கிடைக்கவில்லை. மேலும் இந்த வருடம் அனுப்புவதற்கு என்னிடம் ஒன்று நல்ல பதிவு இருப்பதாக நான் நினைத்திருக்கவில்லை. நன்றாக எழுதியபதிவுகள் என நான் நினைப்பவற்றை நான் வேறு ஒரு தளத்துக்கு அளித்து பின் அவர்கள் வெளியிட்டபின் தான் என் பதிவில் இணைத்திருந்தேன். அதனால் அது தமிழ்மண விதிகளுக்குள் அடங்காது.

யோசித்தபடியே இருந்தபின் கடைசியாக பெண்கள் பிரிவில் மட்டும் வியல் விருதுகள் பதிவை இணைத்தேன். அது முழுக்க முழுக்க பெண்களை பேட்டிகண்டு எழுதிய பதிவு மற்றும் ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல அழைத்து அவர்களுக்கு வழங்குவதற்கான விருதை கூகிள் ஸ்கெட்சப் மூலமாக தயார் செய்து பின் நகர்படமாக மாற்றி பதிவிட்டதுமாகும். அப்பதிவின் உட்கருத்து , அனைவரிடமும் கருத்தினைப் பெற்று ஒருங்கிணைத்த முயற்சி, மேலும் வியல்விருதின் வடிவமைப்பு போன்றவற்றிற்காக அதனை போட்டியில் சமர்பிக்க தைரியம் பெற்றேன்.

என் பதிவின் 5 ம் வருட துவக்கத்திற்காக அப்பதிவினை எழுதத்தூண்டிய கோபிநாத் க்கு என் நன்றிகள். மேலும் தொடர்ந்து பதிவில் எழுதி வர ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் இணைய நட்புகளுக்கும்.. என் குடும்பத்தினருக்கும் நன்றி.

வியல் விருது பதிவினை இரண்டு சுற்றுக்களிலும் தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கும் மூன்றாம் சுற்றில் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் நடுவர்களுக்கும் நன்றி நன்றி.
வியல் விருதுக்கு இரண்டாம் பரிசு.

January 12, 2011

13 வது நாடகத்திருவிழா - மிருக விதூஷகம்





நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா பெயர் பலகையை பலமுறை வாசித்துக்கொண்டே
உள்ளே என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டே கடந்து போவோம். அதனைப்பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் வாசித்துக்கொண்டே எப்படித்தான் அவை நடக்கும் என்று பார்க்கவில்லையே இதுவரை என்று உள்ளூர எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

லிவிங் ஸ்மைல் வித்யா,  தான் பங்கேற்கும் நாடகம், இயக்குனர் முருக பூபதியின் ‘மிருகவிதூஷகம்*அங்கே திறந்தவெளி அரங்கில் 11ம் தேதி இரவு நடக்குமென்று தொலைபேசியில் செய்தி அனுப்பினார். நானொரு கிறுக்கியைப்போல ‘குளிருமே’ என்று மறுசெய்தி அனுப்பிவிட்டு
யோசித்துக்கொண்டிருந்தேன். அன்றோ துணைக்கு அழைத்தால் வீட்டில் ஒருவருக்கும் வரும் வகையுமில்லை . மெட்ரோ துணையிருக்க , பெண்கள் பெட்டியும் இருக்க என்ன குறை.

திறந்தவெளி அரங்கின் வழி விசாரித்து நெருங்கிய போது நாடகத்தின் முதல்
காட்சியாகத்தான் இருக்கவேண்டும். விழுதுகள் தொங்கும் ஆலமரத்தின் மேடை முழுதும்
மணல் நிரப்பப்பட்டிருந்தது. வித்தியாசமான ஒளி அமைப்புகளும் மெல்லிய ஒலியாக குழுவினர் இசைப்பதும் அழகாக இருந்தது. அமர நாற்காலிகள் இருந்தும் வசதியானபடிக்கு நின்று கொண்டே தான் அந்த ஒன்றரை மணி நேர நாடகத்தை பலரும் பார்த்தோம். நாடகத்தில் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றி இயக்குனர் குறிப்பிட்டபடி இன்று பயன்பாட்டில் இல்லாத முறம், கோழிக்கூடைகள் ,சாக்கு போன்றவற்றையைக் கொண்டு அவர்கள் நாடகம் செய்கின்றதும் புல்லாங்குழல் மற்றும் மேளங்களின் ஒலியும் வேறு ஒரு வித்தியாசமான சூழலாக இருந்தது.

ஆரம்பக்கட்டங்களில் மிருகங்களாகவே மாறிவிட்டனரோ எனும்படி அவர்களின் ஒலியும் அசைவுகளும் இருந்தது. மிகச்சிரமப்பட்டுத்தான் நடிக்கின்றனர். விழுவதென்றால் நிஜமாக விழுகிறார்கள். இன்றைய நகரமயமாக்கலால் பாதிக்கப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் வரும் மக்களை அவர்களின் துயரங்களை பேசுகிறதாக அமைந்திருக்கும் நாடகத்தின் முதல் பகுதிகள். பின் இலவசங்களால் விளம்பரங்களால் தொழில்நுட்பத்தால் மதிக்கப்படாமல் மாறிவிட்ட மனிதர்களின் வாழ்நிலையைக் காட்டும் பகுதிகள். திறந்த வெளி தான் அந்நாடகத்துக்கும் நல்ல பொருத்தம்.
வித்யா நன்றாக செய்திருந்தார். டம் டம் என்ற ஓசையோடு அவர் ஆடிவருகின்ற காட்சி மிரட்டியது .

தொலைபேசியோடு  பேசிக்கொண்டே  அலையும் நகரக்காட்சியில்  தமிழ் புரிந்தவர்கள் சிரித்து ரசித்தனர். என்ன இருந்தாலும் உரையாடல் சட்டென்று புரிபடுகிறதே. மற்ற பகுதிகள் புதிரான ஒரு நவீன பாணி இருப்பதும் அவசியமானதானாலும் எங்களுக்கு உரையாடல் பகுதிகள் எளிதாகப் புரிந்தது.

“எங்கள் பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் தான் சினிமாவில் செயித்திருக்கிறார்கள்.”

அனைவருக்கும் வழங்கப்படும் இலவச சுருக்கு கயிறு ,
“எனக்கும் கயிறுதான் குடுத்திருக்கிறார்கள்”
“எனக்கு இலவசம் வேண்டாம் சார் ப்ளீஸ் ப்ளீஸ்”
“குழாயடி சண்டையைப் படம் பிடித்து அனுப்பினால்” போன்ற பகுதிகளில் கூட்டத்தினர் ரசித்து சிரித்தனர்.



கதை சொல்லிகளும் உண்மைகளைச் சொல்லும் கோமாளிகளும் இல்லாது போன காலகட்டத்தில் அல்லது ஒழிக்கப்பட்டுவிட்ட காலத்தில் “ நல்ல கதை உண்மைக்கதை வேண்டாண்டா” என்று அவற்றை சொல்லவரும் இன்னோருவரை அடக்க நினைக்கிற இடங்கள் நன்று.

அழிக்கப்பட்ட அபூர்வ சிறு பூச்சிக்காகவும் குருவிகளுக்காகவும் மிருகங்களுக்காவும் கூட குரல் கொடுத்த விசயம் எல்லா ஊடகம் மூலமாகவும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய விசயம் தான்.




 காமெடி வகை நாடகங்களிலிருந்து நாட்டிய நாடகம் , இந்த நவீன நாடகம் வரை எது ஆனாலும் அதனதன் நிலையில் என்னை ரசிக்கவைக்கின்றன. துணுக்குத் தோரண காமெடி நாடகங்களைக்கூட எனக்கு வெறுக்கமுடியாது.

இன்னும் அந்த பிண்ணனி ஒலிகள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்தி நினைவுப்பரிசை இயக்குனருக்கு வழங்கும்போது நடிகர்கள் அனைவரும் குலவையிட்டனர். அழைப்பனுப்பிய லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி. அவர்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.