February 28, 2012

உலகபுத்தகக்கண்காட்சி- எஸ்.ரா

உலகபுத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று பதிவர்கள் புத்தகம் வாங்கும் சாக்கிலாவது சந்திக்கலாம் என்று இருந்தோம். சிலரால் வர இயலவில்லை. ஆதி ,வெங்கட்,ரோஷிணி, ஆச்சி, கலாநேசன், லாவண்யா அனைவரும் சந்தித்துக்கொண்டோம்..எங்களுக்கு முன்பு இராணுவத்தினர் சிலர் புத்தகங்களை முற்றுகையிட்டிருந்தார்கள். சந்தியா, பாரதி,கிழக்கு மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தார் வந்திருந்தார்கள்.

 நண்பர்கள் சேர்ந்தால் பேச்சுக்கு குறையில்லை கிண்டல் கேலியோடு புத்தகங்கள் தேர்வு செய்து வாங்கினோம். மாலையில் எஸ்.ரா அவர்களின் உரை தமிழ்சங்கத்தில் இருந்தது. வீடு சென்று திரும்புவதைக்காட்டிலும் அங்கிருந்தே சங்கம் செல்லலாமே என்று ஷாஜகான் மனைவி குடுத்த யோசனைக்கு அடுத்து ஆதி வெங்கட் அவர்கள் வீட்டுக்குஅழைத்தார்கள்.. ரோஷ்ணி அதற்கு பின் மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையைப்பிடித்தபடி பேசத்தொடங்கிவிட்டாள். அப்பாவும் அம்மாவும் என்னிடம் பேசுவதை அவள் கவனித்ததாகவேக் காட்டிக்கொள்ளவில்லை. நானும் அஷ்டாவதானி போல அவர்கள் பேச்சையும் காதில் வாங்கி ஆனால் இவளுக்குமட்டும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். வீட்டிலும் தனக்கு வாங்கிய புது பல்துலக்கும் ப்ரஷிலிருந்து தான் வரைந்த ஓவியங்கள் வரைக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

ஆதியின் சுவையான தேநீரொடு ஒரு அரட்டை கச்சேரிக்கு பின் தமிழ்சங்கம் சென்றோம். சுசீலாம்மாவும் தேவராஜ் விட்டலனும் அங்கே இருந்தார்கள். சுசீலாம்மா உள்ளே நுழையும்போதெ முத்து! முன்பே வந்திருக்கலாமே நாங்கள் நல்ல ஒரு கலந்துரையாடல் செய்தோம் என்று சொன்னவுடன் எனக்குள் இதுவரை பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சி குறைந்தது போல ஒரு உணர்வு.

சிறிய அரங்கில் பேசி இருந்தால் அதிக நேரம் பேசி இருப்பாரா இருக்கலாம். பெரிய அரங்கில் அன்று மௌனகுரு திரைப்படம் மூன்று காட்சி இருந்தது எனவே அதற்கு இடைபட்ட நேரத்தில் நிகழ்வு அமைந்தது. அது ஒரு வகையில் நல்லது தான். புதிய சிலருக்கு அவருடைய பேச்சைக்கேட்க வாய்ப்பாக இருந்திருக்கும். சினிமாவிற்கு தாமதமானாலும் அதிக சலசலப்பை ஏற்படுத்தாமல் கவனித்துக்கேட்டார்கள். எளிமையாக அடுத்தவீட்டு குழந்தையிடம் கதைக்கேட்டதிலிருந்து தான் வாசித்த கதை வரை ஒரு கதை சொல்லியாக எல்லாரும் ரசிக்கும் படி பேசினார். ஒவ்வொருவரும் பல கதைகளை வைத்திருக்கிறோம் பகிராமல் விட்டுவிடாதீர்கள் என்றும் நம்மைச்சுற்றி இருப்பவர்களின் அருமை , வார்த்தைகளின் முக்கியத்துவம் என்பதாக அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

அன்று தமிழ்சங்கத்தில் இன்னொரு புதிய தில்லி பதிவரை சந்திக்க முடிந்தது.. அவருடைய தளம் http://hemgan.wordpress.com/author/hemgan/

திங்கள் மாலை எஸ்.ரா அவர்கள் புத்தகக் கண்காட்சியில் இருக்கும் நேரத்தில் ஷாஜகான் அவர்களுடன் சென்று சந்திக்க முடிந்தது. அவருடன் சில இளைஞர்கள் உணவுக்கூடத்தில் இருந்தார்கள். இணையத்தில் அவருடைய தளத்தின் மூலம் பகிர்ந்துகொள்வது பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா எழுத்துக்களையும் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக்க வேண்டும் என்று இல்லாமல் இணையத்திலேயே நேராக சிலவற்றை பகிர்வது விருப்பம் என்றார் அது தானே எங்களுக்கும் வேண்டும். பெருமிதமான ஒரு தந்தையாக அவருடைய குழந்தைகள் இருவரைப்பற்றியும் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நேரமேலாண்மைப் பற்றியும், எழுத்து முறைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

அதிகாலைப்பனி நலம்விசாரித்ததாகச் சொல்லச்சொன்னார்கள். எஸ்.ரா அவர்களிடம் அச்செய்தியைத் தெரிவித்தேன். அவர் ஒரு கதை சொல்லியாச்சே கதை இல்லாமலா . தான் ஏறும் பஸ் எண் மட்டும் தன் தெருவில் தன் வீடு மட்டும் தெரியும் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளவ ஒருவனின் கதையைக் கேட்டோம். சுசீலாம்மா போன்றவர்களுடன் நேற்று நடந்த கலந்துரையாடல் சமயத்தில் இருக்கமுடியாமல் போனாலும் அவரே சொன்னது போல ரோஷ்ணியோடு பேசிக்கொண்டிருந்ததும் வெகு நாட்களாக அவர்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்த நண்பர்களுடனும் தான் பொழுதுபோனது என்பது உரைக்குபின் தோன்றியதாகச்சொன்னேன். நேற்றைய பேச்சின் சாரத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறீர்கள் சரிதானே என்று அவரும் ஆமோதித்தார். நேற்று ப்ளாக்கர்ஸ் மீட் நடந்ததைக் கேள்விப்பட்டேன், தெரிந்திருந்தால் கலந்துகொண்டிருப்பேன் என்றார்.

வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட் இங்கே பகிரவில்லை.. படித்து முடித்தபின் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறேன்..