March 19, 2012

தேவைகள்

மதிப்பீடு

புரிகின்ற கேள்விகளுக்கு
அடித்தல் அழித்தல் போக
இருப்பதும்
கணக்குகளை சிதறடிக்க
தயாரிக்கப்பட்ட
சில புரியாத பதில்கள்
அவற்றிலும்
எழுதாத பதில்களுக்கே
முதலிடம்

--------------------------------------------

தேவைகள்


அந்தரத்தில்
இழுத்துக்கட்டப்பட்ட கயிற்றில்
முன்னேறவும்
நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும்
சில சாய்வுகள்

சிக்கலில் முடிச்சுகள்
தேடியவேகத்தில்
இறுகிக்கொண்டிருக்கிறது
என்றானபின்
சில நிதானங்கள்

தற்செயலாக நடந்துவிடும்
தவறுகளுக்கு
சில மன்னிப்புகள்.

March 16, 2012

உன் நியாயம்

உன் நியாயம் 
---------------------

சாய்ந்தமர்ந்து 
புன்சிரிப்புடன் உலகாள்கிறாய்
நானல்ல 
துன்பத்திற்கு காரணம்
அவரவரே என்கிறாய்
கவனங்களை ஒருமுகமாக்கி
பின் சிதறடிக்கிறாய்
தேடுபவன் கண்டுகொள்வான் 
என்றபடி 
ஒளிந்துகொள்ளாமல் 
விண்ணுக்கு வளர்ந்து நிற்கிறாய்
கீதை சொல்லி
உணர் என்கிறாய்
கீழ்படிதலை வெறுக்கிறாய்
இருக்கிறாயா? இல்லையா?
ஆராய்ந்து கொண்டிருப்பவனின் 
கண்களுக்குள் 
முரண்படுகிறாய்.
-----------------------------------------------------------------------
                                                 முன் தடயமற்ற பாதை
                                                      ------------------------------
                                                 பனி வெடித்து சரிந்து
                                                 துடைத்தாற்போல்
                                                 சீராகிறது 
                                                 நினைவுகளற்ற வெளியாய்
                                                 நடக்கத்தூண்டியபடியே இருந்தது
                                                 நிச்சயமற்ற ஒரு நொடியில்
                                                 மீள் நிகழ்த்துகிறது 

March 13, 2012

நேரிட்டே சொல்லித் தீர்




உண்டி சுருக்கி
உணர்வு சுருக்கியும்
போதாமல்
பேயுரு பெற
அம்மையில்லை
அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க 
இன்று பேயுமில்லை
நேரிட்டே சொல்லித் தீர்
------------------------------   






காற்றை கிழித்து
சரியான நோக்கில்
வீச வீச 
திசைகள் பழக்கப்பட்டு 
மீண்டும் வாகாக
திரும்பிக்கொண்டிருந்தவரை
விளையாட்டு

திரும்பாமல் தாக்கிய
தினத்தில்
தொடங்குகிறது போர்

--------------------------




நிறுவிக்கொள்ளவென்று
முகமூடியிட்டபின்
முயன்றாலும் 
முடியப்போவதில்லை
இளைப்பாறுதல்
-----------------------------------

March 8, 2012

விடுதலை

அறைந்து கதவை சாத்தி வெளியே இருந்து தாழிடும் ஓசைக் கேட்கிறது. அப்பா வெளியே கிளம்பிவிட்டார். காலையிலேயே 5 மணிக்கே விழித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் விழித்துக்கொண்டாலும் சிந்திப்பது மட்டும் இல்லை. வீட்டு வெளிக்கதவை அறைந்து சாத்தி தாழிடும் ஓசைக் கேட்டால் மட்டுமே சிந்திக்க வேண்டும் என என் மூளை பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. 

காலையை அறிவிக்கும் ஒளிகிரணங்கள் ஏதும் எங்கள் வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் எனக்கு ஒளிகிரணங்கள் என்பது ஒரு பார்வையற்றவளின் கற்பனை வடிவமே. என் நினைவிலிருந்தே கூட அது அழிந்து போய்விட்டது. ஆனால் சூரியக்கிரணங்களின் வெப்பத்தின் உணர்வு எப்படி இருக்குமென்ற நினைவிருக்கிறது. உணர்வுகள் இன்னும் இறந்து போகாமல் இருப்பதை இதனைக்கொண்டு நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

முன்பெல்லாம் நானும் அம்மாவும் மட்டர் உரித்துக்கொண்டோ மேத்தியை ஆய்ந்துகொண்டோ வீட்டின் முன்பக்கத்தில் அமர்ந்திருப்போம். சூரியவெப்பம் எங்கள் முதுகில் படும்படி நாங்கள் அமர்ந்தபடி அவ்வேலையைச் செய்யும்போது இதமான ஒரு அனுபவமாக அது இருந்தது நினைவிருக்கிறது. 

ரெமி எங்களைவிட்டுச் சென்ற அடுத்த வாரத்தில் நாங்கள் யமுனைக்கடந்து வெகுதொலைவில் அழைத்து வரப்பட்டோம். வழி நெடுக புதிதாக முளைத்த உயர்ந்த கட்டிடங்களைத்தவிர எதுவுமே இல்லாத ஒரு புறநகர்பகுதியில் ஆள் அரவமற்ற இந்த குடியிருப்பில் வந்து இறங்கினோம். இந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த முதல் நாளைத்தவிர நானோ அம்மாவோ வெளியுலகைப் பின் கண்டதே இல்லை. 

எழுந்தபின் அறையின் உள் நடந்துகொண்டு மட்டுமிருப்பேன். கால்களுக்கான பயிற்சி அது.
அம்மா சமையலறையிலிருந்து என்னறைக்குள் எட்டிப்பார்த்தால் அவள் காபி தயாரித்துவிட்டாள் என்பதாகும். அவள் பேச்சை இழந்துவிட்டாள். நினைத்தால் அவளால் பேசமுடியும் ஆனால் பழக்கம் விட்டுப்போய்விட்டது. சொல்லப்போனால் வீட்டில் யாருமே பேசிக்கொள்வதில்லை. நான் அவ்வப்போது கிசுகிசுப்பாக எனக்குள்ளே பேசிக்கொள்வேன்.

ரெமியும் நானும் சிறுவயதாக இருக்கும்போதே அப்பா மிகவும் கண்டிப்பாகத்தான் இருப்பார். பள்ளிக்குச் செல்லும் முன் பலவகையான சட்டத்திட்டங்களை அவர் வாய் ஜெபித்தபடியே இருக்கும். அது எங்கள் பாதையில் பள்ளி வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். ரெமி மட்டும் சட்டங்களை எல்லாம் அவளுடைய நண்பர்களைக் கண்டதுமோ தெருமுனை தாண்டியதுமோ மறந்துவிட்டு அவர்களுடன் கலந்துவிடுவாள். 

அவளின் அந்த மறக்கும் குணம் தான் அவளை இந்நரகத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. இந்நேரம் அவள் எங்கேயோ சுகமாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் அவள் வந்து அழைக்கின்ற தினத்தில் நான் அவளை ஓடிச்சென்று அணைத்துக்கொள்வதற்காகவே நடைப்பயிற்சியை செய்கிறேன். ஆனால் என்னால் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. 

வெளியுலக நரகத்திலிருந்து என் இரண்டு பெண்குழந்தைகளைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா. அவரால் பணமும் சம்பாதிக்கமுடியவில்லை , எங்களுக்கென்று குடும்பம் என்பதை அவரால் ஏற்படுத்திக்கொடுக்கவும் முடியவில்லை. ரெமியின் இரண்டே வார்த்தை அவரை அத்தனை மூர்க்கமாக்கிவிட்டது. “நான் போகிறேன்” .நான் அப்பாவின் பேச்சைக் கேட்கச்சொல்லி ரெமியை மிகவும் கெஞ்சினேன். என்னால் அவளை ஏறெடுத்துப்பார்க்கமுடியாது.

அவளின் அனுமானம் சரியாகிப்போனது. அவளை நான் நம்ப மறுத்ததற்கு அவளிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். வெளியுலகத்தில் பெண்ணை போகமாய் நினைப்பவர்க்கும் வீட்டில் இவர் தன் உடமையாய் நினைப்பதற்கும் எந்த வேறுபாடுமில்லை என்று அவள் எனக்கு புரியவைக்க முயற்சித்தாள். நான் பாசத்தில் கட்டுப்பட்டிருந்தேன். முட்டாள் என்றாள். போராடுவதற்கு நீ பாசத்தை அறுக்கவேண்டுமென்றாள்..

கதவுகள் உடைபடும் ஓசை. அம்மா ஓரத்தில் ஒடுங்கி நின்றாள். வெளியே பூட்டியிருக்கும் கதவை யாரோ உடைக்கிறார்கள். குரல்கள் அதிகம் பேர் சூழ்ந்திருப்பதாகக் காட்டுகிறது. வெளிச்சம் வெளிச்சம் கண் கூசுகிறதே! நான் என்படுக்கையில் ஓடி தலைகணைகளால் முகம் மூடிக்கொண்டேன். நுழைந்தவர்களின் குரல்களில் அனுதாபமும் அருவருப்பும் ஆத்திரமும் மாறிமாறிவெளிப்பட்டது. வெளிச்சமும் காற்றுமற்ற அந்த சூழல் .யாரோ குமட்டலும் வாந்தியுமாகி ஓடுகிறார்கள். யாரோ எங்களை வெளிச்சப்பள்ளத்தாக்கில் கொண்டு நிறுத்தினார்கள்.

ரெமியின் தீதீ* என்ற குரல் ..என்னால் நிமிர்த்து பார்க்கமுடியாது.
”தீதீ தீதீ” ..என்னைப் பார் .. என்னைப்பார் நான் ரெமி வந்திருக்கிறேன். சமூக சேவகிகளுடனும் போலீஸ் துணையுடனும் தேடிக்கண்டுபிடித்து வந்த கதைகளும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை குற்றப்படுத்தும் பேச்சுக்களுமான இரைச்சலின் நடுவில் அம்மாவின் நெகிழ்வான குரல் தனித்துக் கேட்டது. ”ரெமி அவளால் நிமிரமுடியாது உனக்காக பரிந்து பேசிய தினத்தில் அவள் கழுத்து முறிபட்டுவிட்டது’ 
மீதமிருந்த என் உயிருக்கான அவளின் மௌனவிரதம் புரிந்தது. 

எங்கோ முறிகின்ற கழுத்துகளுக்கு நாமும் காரணமென்று சுற்றி இருந்தவர்க்கு புரியுமா தெரியவில்லை.

( ஒரு உண்மைக்கதையைக் கொண்டு எழுதியது) தீதீ*-அக்கா