May 30, 2012

நற்குறிகள்

தோகை நீண்ட மயில்
இரட்டை மைனாக்கள்
இன்றைக்கும்
நற்குறியோடு விடிந்தது
இருந்தும்
என்னோடு
காத்திருப்பை விட்டுச் செல்வதும்
உன்னோடு
பிரிவைக் கொணர்வதும் 
என்றும் மாறுவதில்லை


-----------------------------------



நிதானமாய் 
காத்திருக்கிறேன்
நொடிகள் தெரிகிறது
இதயம் துடிப்பதைக்கொண்டு 
நேரம் சொல்லமுடிகிறது

நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை

கடிகாரப்படியும்
நாட்காட்டிப்படியும் பேசி 
பதட்டம் நிறைக்கிறார்கள்
சுற்றிலும் நகர்பவர்கள்

காலம்

காலம்

துகள் துகளாய் 
இறந்து கொண்டிருக்கிறது
முற்றிலும் தீர்வதற்குள்
கவிழ்த்து வைத்தாலும் 
அதே சீரில்.


------------------------


எனது கிராமத்தில் 
கதவடைத்து வாழ்கிறார்கள்
எனது நகரத்தில்
அடுத்தவர் வாழ்க்கையை 
உற்று நோக்குவோர்
அதிகரிக்கிறார்கள்
இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு.

May 29, 2012

இறக்கை தொலைத்தது தேவதை

விரல்களுக்குள் அடங்கிவிடும்
ஓசைகள் தான்
வரிகளை உடைத்து
ஆயிரமாயிரமாய் 
அர்த்தப்படுத்தியபின் 
களிம்பென்றும்
காயமென்றும்
பிரித்தது போக 
மீதி இறக்கை விரித்து 
பறந்து மறைந்தது

ஆண்டாண்டுகளாய் 
உறங்கி 
விழித்தெழுந்து 
தானாய் பூத்தது தாமரை

உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை 
இறக்கை தொலைத்து
கூட இருக்க சம்மதிக்கிறது
தேவதை

May 26, 2012

வானவில் இற்றைகள் (சவுத் இந்தியா)

சூப்பர் மார்க்கெட் ல பிடிச்ச பிஸ்கட் , ஜூஸ் எல்லாம் எடுத்தாச்சு.. மாடியில் இருந்த டாய் செக்‌ஷனில் மட்டும் எதும் சரிப்பட்டு வரல..வரும்போது ரொம்ப டல்..

மகள்: டேய் அதான் எல்லாம் பிஸ்கட்லாம் வாங்கினியேடா
மகன்: இருந்தாலும் டாய் வாங்கலியே
மகள்: ஃபுட் இல்லன்னா லைஃப் ல சாவோம்.. டாய் இல்லன்னா சாவோமாடா?
மகன்: எனக்கு லைஃப்ல டாய் ம் வேணும் ஃபுட் ம் வேணும்
மகள்: ஓகே அப்பன்னா ரெண்டு நாள் ஃபுட் மட்டும் சாப்பிடு..
ரெண்டு நாள் டாய் மட்டும் வச்சி விளையாடு புரியும் உனக்கு..
(யம்மாடி ...)
------------------------------------------------------------------------------
”அம்மா தாயே” (என்று ஆரம்பிச்சு பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மான்னு நான் முடிக்கிறதுக்குள்ள.. )

”பராசக்தி காப்பாத்தும்மா’ன்னு மட்டும் சொன்னான்.. 

”யாரைடா காப்பாத்தனும் “

”என்னையை , அம்மாவை...”
(அப்பறம்ங்கறமாதிரி நான் பாக்கவும்)

”சவுத் இந்தியாவை “ ( சென்னை சூப்பர் சிங்க்ஸ் ஜெயிக்கனும்ன்னு நினைச்சுட்டே இருந்ததால் இருக்குமோ)

இந்தியாவை ..
பாகிஸ்தானை...
ஸ்ரீலங்காவை...
எர்த்தை .... 

அப்பறம்ன்னு அவன் இப்ப என்னைப்பார்க்கிறான்..
----------------------------------------------------------
”இன்னிக்கு ஒரு அன்லக்கி டே எனக்கு”ன்னு முகத்தை சோகமா வச்சிக்கிட்டு சொன்னான்..குட்டிப்பையன்
”ஏண்டா அப்படி வருத்தப்படர அளவு என்னடா ஆச்சு?”
”எனக்கு இன்னிக்கு பேட்டிங்க் கிடைக்கவே இல்ல..”
”வீட்டுக்கு வந்தா அப்பா டீவி தரமாட்டேங்கராங்க..”
”நீ என்னடான்னா மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யு ஸ்டோரி புக் படி”ன்னு சொல்றே.. 

May 16, 2012

வாசப்புகைப்படம்


மண்கிளறி களையூறி
பார்த்துப்பார்த்து
உயிராக்கினாலும்
பூக்கும்போதெல்லாம்
களைந்தெறிந்த
கோபமின்றி
பூகிள்ளிய கரங்களை
தோட்டத்துக் காற்றை
வாசத்தால் நிறைக்கிறாய்
.
ஈரமும் உடைதலுமாய்
கிளைத்த
என்னுயிரை
மனதை
எனை
அறியாதவற்கு தர
வாசப்புகைப்படமாய்.

May 1, 2012

ஒற்றைக் கூழாங்கல்


கவனமாய் கோத்த
முத்தாரத்தில்
எல்லாமுமாய் கூடி
கவனம் ஈர்த்தபடி
இருக்க
ஒற்றைக் கூழாங்கல்
அமைதியாய் அங்கே
பொருந்திவிட்டிருந்தது

-----------------------------------------------------

நிலா பார்த்து
நட்சத்திரங்கள் எண்ணிமுடித்து
என்றொருநாள் பாலைக்கனவு

மலையேறி முகடெட்டி
பள்ளத்தாக்கில் கரைந்து
என்றொருநாள் பனிமலைக்கனவு

எங்கேயும் போகப்போவதில்லை
என்பதைத்தான்
கனவில் வந்த கனவு
சொல்லிக்கொண்டிருக்கிறது