October 5, 2012

என் வீட்டு ஜன்னல் எட்டி...


முன்பிருந்த செம்பருத்திச் செடி வெளியூர் போய் இருக்கும் போது குட்பை சொல்லிவிட்டுப்போய்விட்டது.. வெறுமையாய் இருந்த தொட்டிக்கு வேறு ஒரு செம்பருத்தியை அதுபோலவே கொண்டுவருவதாய் சொல்லி இருந்தார் தோட்டக்காரர். ஆனால் வேறு விதமான ஒரு செம்பருத்தி . அதன் முதல் பூவையே நான் வெறுத்தேன். மிகவும் அளவில் பெரியதாக..சிவப்பு நிறம் அடர்த்தியற்று வெளிரென்று  அதை நான் பறிக்கவும் இல்லை . சாமிக்கு வைக்கவும் இல்லை. என்னை சமாதானப்படுத்த வேறு ஒரு சிகப்பு செம்பருத்தியும் ஒரு வெள்ளை செம்பருத்தியும் கூட கொண்டுவந்தார். ஆனால் எனக்கு பழைய செம்பருத்தியைப் போல எதுவும் வரவில்லை.

தோட்டவேலையையும் கணவருக்குக் கொடுத்துவிட்டு எப்போவாவது ஒரு சின்ன ஹாய் (மற்ற செடிகளுக்குதான்) சொல்லுவதுடன் இருந்தேன். பால்கனிக்கு போனாலும் ஒரு பாராமுகம் தான். கூடவே ஒரு பப்பாளியை நட்டு அதற்குரிய தனித்தன்மையையும் கொடுக்க மறுத்தேன்.  பப்பாளி பூக்கவே இல்லை அது வேறு விசயம்.

மாடிவீட்டிலிருந்தும் , பக்கத்துவீட்டிலிருந்தும் புதுச்செடியின் பூ அழகு என்று பாராட்டையும் வாங்கிக்கொண்டது. ’க்கும் ’ என்று சொல்லிவிட்டு அந்த விசாரிப்பையும் நான் அதற்கு சொல்லவே இல்லை.

அடுக்களை ஜன்னலை திறந்து வைத்து சமைக்கும் போது பின்னால் இருக்கும் மரங்களையும் குருவிகளையும் ரசிப்பது வழக்கம்.[அடுக்களையில் இருக்கிறோம் என்பதை மறக்கத்தான்..:) அதனால் தான் அடிக்கடி சூடு படுகிறதோ :) ] ஒரு நாள் ஓரமாய் எட்டிப்பார்க்கும் இந்த செம்பருத்தி என்னைப்பாரேன் என்றது .அட அழகா இருக்கியே என்று ஒரு கணம் நினைத்துவிட்டேன்.


அந்த நேரம் பார்த்து மகளும் வந்து நான் என்ன ரசிக்கிறேன் என்று கேட்டுவிட்டு..இந்தச்செடிக்கு எவ்வளவு  பாரேன்மா.. நம்ம வீட்டுப்பக்கத்தில் பூக்காமல் வெளியே போய் இத்தனைப்பூக்கிறது  என்று சொல்லவும் தான் நிஜம்மாகவே இந்த செம்பருத்தி ஜன்னல் எட்டிப்பார்த்து  புன்னகைக்கத்தான் இப்படிப் பூக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இருந்தாலும் நான் பறிக்கப்போவதில்லை. இவ்வளவு அழகா புரிஞ்சுக்கிற செடியிலிருந்து பறிச்சு வைக்கலையேன்னு கேக்கவாப் போறார் சாமி. (சோம்பேறித்தனத்துக்கு என்ன ஒரு சப்பைக்கட்டு)

 பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் ’ - தாயுமானவர்