July 2, 2008

கேள்வி-பதில்..பதிலுக்கு கேள்வி...

கேள்விபதில் சுடராக ஏற்கனவே கையில் வந்து போனது..இப்போது மீண்டும் சென்ஷி ..
கேள்விகள் எல்லாமே என் கண்களுக்கு அவுட் ஆஃப் சிலபஸ் மாதிரியே தெரிகிறது . வழக்கம்போல தேர்வில் எழுதுவது போலவே இறுதிக்கேள்விக்கு முதலில் பதில்..

4. தமிழ்மணத்தில் கலக்குகின்ற (என் போன்ற) புதிய பதிவர்களுக்கு மூத்த பதிவராய் தங்களின் மேலான ஆலோசனை என்ன?
முழு சோற்றை பூசணிக்காயில் மறைப்பது போல இருக்கே.. நான் நவம்பர் மாதம் தான் பதிவே ஆரம்பித்தேன்.. . செப்டம்பரிலேயே ஆரம்பிச்சது உங்க பதிவு .. ஆக கேள்வியே தப்பு.. அப்பப்ப மொக்கைப்பதிவு போடுவதெப்படி ? பதிவெழுத ஐடியா தருகிறேன் என்று தலைப்பு வைக்கும் பதிவுகளையெல்லாம் ஓடிப்போய் எட்டிப்பார்க்கும் என்னைப்போய் ... எந்த தலைப்பை சொன்னாலும் ,,, இல்ல சேட்டிலே பேசிய பேச்சை.. இல்லையா புள்ளி வைத்தால் கூட அதை புள்ளி விவரமாக மாற்றி தடாலடியா பதிவு போட்டு கலக்கும் நீங்களெல்லாம் அறிவுரை கேட்டால் எப்படி? சின்னவங்களைப்பார்த்து அண்ணன்னு கூப்பிட்டு வயசை மறைக்க நினைப்பது போல மூத்தபதிவரான தாங்கள் என்னை அப்படி சொல்வது சிரிப்பாத்தானிருக்கு..
அது மட்டுமில்லாம புரியாமல் பதிவு போடும் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்ட பின்னர் மீத பர்ஸ்டு போடுவதில் கூட கணக்கு தப்புகிறது.... சரியை தப்பாக , தப்பை சரியாக செய்வதும் தான் பி.ந ஆமே அப்படியா ?

நான் மூத்தபதிவரில்லை இல்லை. குசும்பனின் பதிவுக்கு பின்னர்.. நான் வெறும் ஸ்மைலி போடுவதைக்கூட மாற்றிவிட்டேன்.. அது கூட இதுவரை போட்டுக்கொண்டிருந்தற்கு காரணம் பயந்தாகொள்ளித்தனம் தான்.


3. உலகத்திரைப்படங்களை பற்றிய உங்கள் பார்வை எவ்வளவு தூரம்?


உலகசினிமா ...சரி.. அது என்ன பார்வை தூரம்.. உலகசினிமா பத்தி சொல்லுங்கன்னா சொல்லிட்டுப் போயிருப்பேன் இல்லையா.. பார்வை தூரம்ன்னா எனக்கு தூரத்துல இருக்கறதெல்லாம் தெரியாது .. அதுகுத்தான் பவர் அதிகமான கண்ணாடி போட்டிருக்கேன்.. அதைகிண்டல் செய்யறயோன்னு தோணுது.. என்னைப்பொறுத்தவரை நடப்பதை அப்படியே காண்பிக்கற இல்லாட்டி நாலு பாட்டு நாலு பைட் இல்லாமல் சில நிகழ்வுகளையோ அல்லது உணர்வுகளையோ மையமா வச்சுக்கிட்டு உலகத்துல இருக்கற எல்லாரும் மொழியே புரியலைன்னாலும் பாத்து புரிஞ்சுக்கமுடியறதா இருந்தா அது உலகசினிமான்னு சொல்லிக்கலாம்.. உண்மையில் உலகசினிமாக்கான அர்த்தம் என்னனன்னு எனக்குத் தெரியாது எங்கயும் படிச்சதில்லை.. பொழுதுபோகாம இருக்கறவங்க பார்க்க சிறந்த படம் உலகசினிமா... ஓடறதை ... நடக்கறதை யோசிக்கறதை எல்லாம் காட்டுவாங்க..

2. தசாவதாரத்தில் தங்களை கவர்ந்த அவதாரம் எது, ஏன்?
இதுவரை தமிழ்மணத்தில் எல்லாரும் இந்த படம் பத்தி எழுதிட்டாங்க.. நான் எழுதாத ஒரே ஆள் என்று சாதனை செய்யலாம்ன்னு இருந்தேன் அது எப்படியோ தெரிஞ்சு அதை முறியடிக்கனும்ன்னு இப்படி கேள்வி கேட்டதை கண்டிக்கிறேன்.. இருந்தாலும் சொல்றேன்..
பூவராகன் தான் .. இயற்கை பத்தி கவலைப்படற ஒரு நியாயம் நேர்மைனு பேசற ஆளா வந்திருக்காரே அது ஒரு காரணம்..இன்னோன்னு இயற்கையாவே அப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருப்பது போல அவர் அந்த படத்தில் வந்திருக்க்காரே அது ஒரு காரணம்.. அவர் மற்ற அவதாரங்களைப் போல அதிகம் ப்ளாஸ்டிக் வேலைகள் செய்யவே வேண்டாம்.. தன் நடிப்பால் சின்ன சின்ன வித்தியாசம் காண்பிக்கிறாரே அதுவே போது நாம் அவரை பாராட்ட ரசிக்க.. .. இறந்த பின்னும் கூட அந்த அவதாரம் உபயோகப்படுது பாருங்க.. ஒரு தாய்க்கு தன் குழந்தையாக ..... அருமையான கதாப்பாத்திரம். தனியா அவரை வைத்து ஒரு படம் செய்ய சொல்லிக் கேக்கலாம் ..

1. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற விஷயத்தில் தலைமுறைகள் இழந்ததாக எதை நீங்கள் கருதுகிறீர்கள். உங்களால் மீட்க முடியும் என்ற என்ற சக்தியிருந்தால் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். (திண்ணையை தவிர..)
கலாச்சாரம் பாரம்பரியம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறத்தான் செய்யும்.. நல்லவற்றை மறக்காம பிடிச்சிக்கணும். எல்லாவற்றையும் இது தேவையில்லைன்னு தூக்கிப்போடக்கூடாது. நான் இன்றைக்கு நம்ம தலைமுறைல தொடர்ந்து கடைபிடிக்கனும்ன்னு ஆசைப்படற ஒரு விசயம் ..யாரையும் பார்க்கும் போது வணக்கம் சொல்றது தான்.. இப்பன்னு இல்ல நான் 25 வருடம் முன்ன பள்ளிக்கூடப்பிள்ளையா இருந்தபோதே வணக்கம் சொல்ல வெக்கப்படுவேன்.. கல்யாண வீடுகளிலோ மற்ற இடங்களிலோ பெரியவர்களை காண்பித்து இவர் எனக்கு இன்ன முறை வேண்டும் உனக்கு தாத்தா ..வணக்கம் சொல்லு என்று அம்மா கை கூப்பி சொல்லச் சொல்லும் போது வேண்டா வெறுப்பாக சொல்லுவேன். இங்கே தில்லியில் மக்களிடம் இன்னமும் அந்த பழக்கம் தொடர்கிறது..

வயதானவர்கள் சம வயதினரோ தமக்கு சிறியோரோ பார்த்ததும் நமஸ்தே .. ராம் ராம் என்று ஒன்றைச் சொல்லி வணங்கிக்கொள்கிறார்கள்..சிறு குழந்தைகள் கூட அதை வழிமொழிந்து விட்டு தங்கள் வலக்கையால் அவர்கள் காலில் விழுவது போன்றதொரு பாவனை செய்வார்கள்.. அது அந்த தை பெரியவர்களின் முட்டி வரை சென்று மீளும்.. அதற்குள் அந்த பெரிவர்கள் தடுத்து : ஜீத்தேரஹோ - நல்லா இருக்கனும் என்கிற அர்த்தத்துடன் ஆசி வழங்குகிறார்கள்.. அது மட்டுமா இந்த குழந்தைகள் நம்மீது மதிப்புடையவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு மகிழ்வான கர்வம் கூட அவர்கள் முகத்தில் அந்நேரம் வந்து போகும்.

தமிழ்மணத்தில் வந்ததாலும் கூகிள் அரட்டையின் தமிழ்ச்சேவையாலும் நான் மீண்டும் வணக்கம் சொல்லுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.. இப்போது வெக்கமாக இருப்பது இல்லை.. அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் கூட புன்னகை மறந்து போன நகரத்தில் ... இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல.. அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.

----------------------------------------------------------------------------
பதில் சொல்வது கூட எளிதாக இருக்கும்போல... கேள்வி கேட்பது தான் சிரமமாகத் தோன்றுகிறது.. என்னடா இது தருமியைவிட மோசமான நிலைமை.. ம்.. எப்படிக் கேட்டாலும் குறைஞ்சபட்சம் தெரியாதுன்னாவது சொல்லுவேன்னு உறுதிமொழி கொடுத்ததால ஜீவ்ஸைக்கேக்கறேன்..

1. வெண்பா எழுதினதா சொல்லிக்கறாங்க.. திண்ணையில் எழுதினதா சொல்லிக்கறாங்க.. ஆனா இப்ப சத்தமில்லாம இருக்கீங்களே வெறும் புகைப்படம் எடுத்துக்கிட்டு .. ... ?

2. பெரிய அரசியல் வாதிகளில் யாரையாவது ஒரு நாள் முழுக்க கூடவே இருந்து படம் எடுத்துத்தள்ள அனுமதி கிடைத்தால் அது யாரா இருக்கனும்..

3. ஆபிஸில் ஒரு மாசம் லீவ் தரோம்.. என்ஜாய் ! இந்த ஆபிஸே உன் தலையில் ஓடுதுன்னு நினைக்காம வீட்டுக்குப்போ அப்பா .. ன்னு சொன்னா.. என்ன செய்வீங்க??

4. கிராமமா நகரமா எதில் வாழ்வது சிறப்பு..

June 25, 2008

சாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட


(மு.கு)இந்தப் படத்தினைப்பற்றிய விவரம் பதிவு இறுதியில்.
குழந்தையா இருந்தபோது நாம் செய்த குறும்புகளை இப்போது நமக்கு சொன்னால் வெக்கமாகவும் சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.. நாங்கள் பாடம்படிப்பதை டேப் செய்து வைத்திருந்தார்கள் . அழுகையை , பள்ளிப்பாடல்களை , சினிமாப்பாடல்களை....என்று பதிந்து வைத்தவைகளை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான் ஒலி நாடாவை சிடி யாக்கி வைக்கவேண்டும்.. இப்போது என்குழந்தைகளை வீடியோ எடுப்பது போல அப்போது ஒலிப்பதிவு.


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

பாடலை ரொம்ப நாளா நியாபகப்படுத்த முயன்று தோற்றுப்போனேன். பி.கே.பி அவர்களின் பதிவில் தற்செயலாகப் பார்த்து நினைவுக்கு வந்தது. இந்த பாடலைப் பற்றி எக்கச்சக்க பேர் எழுதி இருக்கிறார்கள்.
இந்த பாடலை வேகவேகமாக பாடி அதுவும் அந்த வாடிக்கை வரும் போது வாடிக்காய் என்று அடிப்பது போல முடிப்பேன். இப்போது மகன் அப்படித்தான் ஹிந்தி ரைம்ஸ் பாடுகிறான்.. என்னைபோலவோ..

சினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது "மூக்குத்தி பூமேல காத்து " ரொம்ப எல்லாம் இல்லங்க பல்லவி மட்டும் தான்.

ஒரு முறை தம்பி தீபாவளிக்கு சாட்டை கொளுத்தனும்ன்னு கேட்டான். இப்ப இல்ல அப்பறம் ராத்திரிக்கு ன்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ.. அவன் ரொம்ப நேரம், சாட்ட ம்ம்ம்ம்.. சாட்ட... ம்ம்.. சாட்ட னு விடாம அழுதுட்டே இருந்தான்.அதை அப்படியே அவனுக்கு தெரியாமல் பதிவு செய்துட்டாங்க. இப்ப கேட்டா ஒரே சிரிப்பு தான்.
இது போல ஆச்சி தாத்தாக்களின் பேச்சுகளையும் எடுத்து வைத்திருக்கிறோம். எங்கே என்று தேடத்தான் வேண்டும்.


இந்த் கொசுவத்திக்கேத்த ஒரு கொசுவத்தி ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது அதனை ஆவணப்படுத்த(!!!! :) ) வேண்டுமல்லவா..

June 22, 2008

பாடல்வரிப் புதிர்

றேடியோஸ்பதியில் அடிக்கடி புதிர் வச்சு என்பதிவில் புதிர் வைக்கும் ஆசையைக் கிளப்பிட்டார் கானாப்ரபா..
நம்மை ஒருவர் மண்டை குழம்பச் செய்தால் நாம் நாலு பேரை குழம்பச் செய்ய வேண்டாமா..
பார்த்துவிட்டு இந்த வரிகள் வந்த பாடல் என்ன படம் என்ன சொல்லுங்கள் பார்க்கலாம். ..

1..கடலுக்கு மேல் ஒரு மழைதுளி வந்து விழுந்ததே உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

2... வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான்....

3.நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை விட்டுச்சென்றாயே

4.. கோயிலை பாத்தாத் தானா கைகள்
உனக்காகத்தான் கும்பிடுதே

June 18, 2008

சிவாஜி வாயில் ஜிலேபியைப் போடவில்லை..

வாசல் தெருவில் கோடு கிழித்து பிள்ளைகளோட பிள்ளைகளாய் விளையாண்டு கொண்டிருந்த சுமதி அவ்வப்போது அம்மாவிடம் "அப்பாருஎப்ப வருவாரு?" என்று விசாரித்தபடியே இருந்தாள்..
"வந்தா உன்னையத்தாண்டிதானே வரனும் சும்மா நொய்நொய்ய்ன்னுகிட்டு" என்று அம்மா அதட்டிய அதட்டலில் கொஞ்சம் அடங்கி பத்துநிமிசமாக கேட்பதையும் விட்டிருந்தாள்.

வரும்போதே சிவாஜி எதோ கோபத்தில் ஒரு கால் செருப்பு வாசலிலும் ஒரு கால் செருப்பு வீட்டுக்குள்ளுமாக விழ அடித்தபடி உள்ளே போனான். குதித்து ஓடி அப்பா என்றவளுக்கு "தொம்" என்று விழுந்தது ஒன்று.. "சே மனுசன் வரங்காட்டியும் ஆரம்பிச்சிடுவியா நீயு போடி " கத்தியவனாய் உண்டியலை உடைத்து காசுக்களை பொறுக்கிக்கொண்டிருந்தான்.

"அப்பா நேத்தைக்கே கேட்டேன்ல வரும்போது சிலேபி வாங்கிவரேன்னியேப்பா" அடிவாங்கியதால் வந்த கேவலோடே சொல்லிக்கொண்டிருந்தாள் சுமதி . அவனவன் ரிக்ஷா இழுத்தும் தினப்படிக்கான காசுவரலையேன்னு இருக்கையிலே சிலேபியாம்ல சிலேபி ... அடியே இவளை இழுத்துட்டுப் போ இல்லாட்டி அடிவாங்கி சாவப்போறா" என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டே விருட்டென்று வெளியேறி நேராக சாராயக்கடைக்கு சென்றான்.

வலி போக நிறைய குடித்தவன் வரும்வழியில் நண்பன் செய்த தகராறுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டு பதினைந்து நாள் சிறையில் போடப்பட்டான். மறுநாள் தலைவர் பிறந்தநாள் என்று எல்லாருக்கும் சிலேபி வழங்கப்பட்டது. கையில் வாங்கியவன் சாப்பிடாமல் தேம்பி அழுததை பார்த்து உடனிருந்தவர்கள் குழம்பி நின்றனர்.
சிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..

-----------------------------
சிவாஜி
வாயில்
ஜிலேபிக்காக எழுதிய கதை.. என்னை அழைத்த ராமலக்ஷ்மிக்காக எப்படியோ எழுதியாச்சு... இதுல வேற இன்னும் என்ன எல்லாம் எழுத முடியும்ன்னு தெரியல.. கவிதை கட்டுரை கதை நல்ல கருத்துன்னு ஆளாளுக்கு ஒன்னு எழுதிட்டாங்க.. இன்னும் யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....