December 31, 2007

இனியதாய் அமையட்டும் 2008

எத்தனையோ ஆசைகள் குறைவில்லாத ஆசைகள் . வருடா வருடம் ஏறிக்கொண்டே போகும் ஆசைகள்.. எல்லாம் நிறைவேறிடனும் என்கிற பேராசையும் கூட. உங்களிடமும் இருக்கும் ஆசைகள் கனவுகள் நிறைவேற இந்த 2008 ஒரு இனிய வருடமாக இருக்க வாழ்த்துக்கள். 2007 எனக்கு நிறைவான வருடமாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி.

பரிசுகள் என்பதை பெற்று பலவருட இடைவெளிக்கு பிறகு 2007 ல் தான் பரிசுகளின் சுவை உணர்ந்தேன். அன்புடன் கவிதைப்போட்டியில் புத்தகப் பரிசில் என் தேர்வான 1. துப்பறியும் சாம்பு என் சிறுவயதில் நான் ரசித்த ஒரு தொடர் . இப்போது மீண்டும் வாசித்து ரசிக்கிறேன்.
2.காந்தியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை கொத்தமங்கலம் சுப்பு கதைகளாக எழுதி இருக்கும் புத்தகம் என் குழந்தைகளுக்கு சொல்வதற்காக வாங்கினேன் அவர்களுக்கு வாசித்து சொல்லவேண்டும்.
3.மிருதுளா நாகராஜனின் எம்ப்ராய்டரி புத்தகம் அதில் கொஞ்சமேனும் பழகிப்பார்க்கனும்.


பதிவுகள் எழுதுவதற்கு இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்டது . அடுத்த வருடம் அவ்வப்போதாவது எழுதிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஆசை.
சிநேகப்பறவைகளே!
புன்னகையோடும் புதுமை சிந்தனையோடும் , அள்ளக்குறையாத அன்போடும் வரவேற்போம் புத்தாண்டை.....

December 14, 2007

பொற்கோயில் அமிர்தசரஸ் ஸ்பெஷல்-5

அமிர்தசரஸ் சென்ற முக்கிய காரணம் பொற்கோயில் பார்ப்பது தான். சீக்கியர்களின் முக்கியமான புனிதத்தலம் . உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து போக நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு "குரு ராம் தாஸ்" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம். அந்த குளத்தின் நடுவில் தான் இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோயில் இருக்கிறது.
இக்கோயிலில் நுழையும் முன் ஆண்களும் பெண்களும் தலையை துணியால் மூடவேண்டும் என்பது அவர்கள் மத வழக்கம் என்பதால் பெண்கள் சேலையோ துப்பட்டாவோ கொண்டு முக்காடிட்டு கொள்வார்கள். ஆண்கள் அங்கே வாசலில் வைக்க்ப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு இருக்கும் பல வண்ணத் துணிகளால் தலையில் குல்லா போல கட்டிக்கொள்வார்கள். வாசல் பகுதியில் காலை சுத்தப்படுத்திக்கொள்ள தண்ணீர்
ஓடிக்கொண்டே இருக்கும் படி குழாய்கள் அமைத்திருக்கிறார்கள்..


உள்ளே புனித தீர்த்தகுளத்தில் குளிக்க வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றது.. குறைந்த வாடகையில்தங்கும் அறைகள் இருக்கின்றன.





இக்கோயிலை காலையில் ஒரு முறை யும் இரவில் ஒரு முறையும் பார்த்தால் தான் நிறைவாகத் தோன்றுகிறது எனக்கு.. காலையில் ஒரு முறை நின்று நிதானித்து கோயிலின் உள்ளே சென்று நடுநாயகமான பொற்கோயிலின் ஹர்மன்ந்திர் எனப்படும் இடத்தில் புனித புத்தகமான க்ரந்தசாஹிப் வாசிக்கப்படுவதை பார்த்துவிட்டு வரலாம். பின்னர் அங்கேயே தொடர்ந்து நடத்தப்படும் லங்கர் கானா எனும் இலவச உணவு அளிக்கும் அறைக்கு செல்லலாம்.


தட்டு , தண்ணீர் குடிக்க ஒரு கிண்ணம் தால் எடுக்க ஒரு ஸ்பூன் கையில் தந்து விடுவார்கள். உள்ளே தொடர்ந்து உணவு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.. இரு கையாலும் ஏந்தி தான் அவர்கள் தரும் ரொட்டியை வாங்கிக்கொள்ளவேண்டும் . தால் மிக அருமையாக இருக்கும். உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தால் தட்டுகளை கிண்ணங்களை கழுவ பெரிய ஹால் இருக்கும்.



அங்கே இரும்பாலான பெரிய பெரிய சிங்க்குகள் ஒன்றில் சோப்பு நுரை இன்னொன்றில் தண்ணீர் அலச ..பின்னர் மீண்டும் மீண்டும் அலச வரிசையாக தண்ணீர் நிரப்பிய சிங்க்குகள். நாம் சாப்பிட்ட தட்டுகளை வண்டியில் போட்டு அவர்கள் அங்கே கொண்டு செல்வார்கள்.
விருப்பமிருப்பவர்கள் வேண்டுதலைப்போல அங்கே சென்று அந்த வேலையில் ஈடுபடுவார்கள். போன முறை நான் நினைத்துக்கொண்டேன் முடியவில்லை..இம்முறை போனபோது நானும் என் மகளும் அங்கே சென்று சிறிது நேரம் தட்டு கிண்ணங்களை அலசி எடுக்கும் பணியில் சேர்ந்து கொண்டோம். சமைக்கும் இடத்திலும் உதவி செய்யலாம் என அறிந்தேன்.


பின்னர் இரவில் ஒரு முறை கோயிலின் உள்ளே சென்று மேல் மாடிவரை சென்று மீண்டும் ஒரு முறை க்ரந்தம் வாசிப்பதை தரிசிக்கலாம். ஆங்காங்கே சிறு சிறு புத்தகங்களோடு ஜபித்தபடி இருப்ப்வர்களைக்காணலாம்.

குளத்தில் தண்ணீரை தெளித்துகொள்ள முற்படும் போது கீழே சிந்திவிடும் தன்ணீரை ஒரு துணிகொண்டு துடைத்தப்படி இருப்பார்கள். எல்லாம் வருகின்ற பக்தர்கள் தான்.. கோயில்பணி செய்து கடவுள் அருள் பெற நினைக்கிறார்கள்.

இரவில் குளத்தில் தகதகவென பிரதிபலிக்கும் பொற்கோயிலை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது மனதில் அப்படி ஒரு அமைதி வந்து சேருகிறது.


கிரந்த புக்கத்தை இரவில் வேறொரு அறை யில் கொண்டு சென்று வைத்துவிடுவார்கள் மீண்டும் காலையில் அது ஹர்மந்திருக்கு வரும். அந்த நிகழ்ச்சி நம் ஊரில் சாமியை பல்லாக்கில் கொண்டுசெல்வது போலவே இருக்கும்.. 9.45 இரவு வாத்திய இசையோடு பல்லாக்கில் புத்தகத்தை மூடி கொண்டு செல்வார்கள். பிறகு கதவு சாத்தப்படும்.

இத்தொடரை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.