பேச்சாற்றலில் புகழ்பெற்ற நம் முத்துலெட்சுமி தான் இன்றைக்கு நம்முடன் கஞ்சி குடிக்க வந்துள்ளார். அவரை நானும் அணிலும் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்கள் கேள்விகளை கேட்டு குடைந்து இருக்கிறார்கள், பார்க்கலாம் முத்து கேள்விகளுக்கு எப்படி குறைந்த வார்த்தைகளில் பதில் சொல்லுகிறார் என்று…:) வாயை புடுங்கற ரவுண்டு :- கவிதா:- வாங்க முத்து, எப்படி இருக்கீங்க..?! உங்கள் பதிவுகளை படித்த போது கவனித்தேன், பதிவெழுத வந்த மிக குறுகிய காலத்திலேயே நீங்கள் தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆகி இருக்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன? (இப்படி ஒரு கேள்வியை நாகை சிவாவிற்கு பிறகு உங்களிடம் மட்டுமே கேட்கிறேன்)

வீரமங்கை கவிதாவிற்கு வணக்கம். இருங்க கொஞ்சம் கஞ்சி குடிச்சிட்டுப்பேசறேன். எனக்கு கேப்பக்கஞ்சி ரொம்பப் பிடிக்கும். அதுவும் எங்கம்மா அதுல கோதுமை, பாதாம் இன்னுமெல்லாமோ போட்டு ஸ்பெஷலா அரைச்சுத் தருவாங்க.. க்க்குக்கும் . இந்த நட்சத்திர மேட்டர் பத்தி எனக்கே இப்பத்தான் தெரியும். இத்தனை குறைந்தகாலத்தில் யாரும் வரலையா என்ன? ஆனா எனக்கு என்னவோ லேட்டாத்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதா உணர்வு.. J நான் அடிக்கடி சொல்லுவேன் நான் எழுத வந்தபோது நாகை சிவா நட்சத்திரமாகப்பார்த்தேன். எழுத ஆரம்பித்த உடனேயே எப்படா நம்மளை நட்சத்திரமாக்கூப்பிடுவாங்கன்னு இருந்தேன்.

தெகாஜி :- நீங்கள் வலைப்பதிவுகளுக்கு வந்ததின் மூலமா ஏதாவது நன்மைகள் அடைந்திருக்கிறதா உணரச் செய்ய முடிகிறதா? அப்படியெனில், அது போன்றவைகளில்னு கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா, ப்ளீஸ்?

முன் காலத்தில் பேனா நட்பு பேசப்பட்டது போலத்தான். முகம் தெரியாத ஆனால் மிக பலநாட்களாக பழகிய உணர்வை ஒவ்வொரு பதிவரிடமும் காண்கிறோம். நட்புகள் மிகப்பெரிய நன்மை. இதுதவிர நான் எத்தனையோ கற்றிருக்கிறேன். இணையத்தின் பயனை யாராலும் முற்றிலும் அனுபவிக்கமுடியாது. அது ஒரு கடல் போன்றது. அதில் சில துளிகளை எனக்கு புரியவைத்தது இந்த பதிவர் நட்புக்கள் தான். அதன் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் என் நண்பர்களுக்கும் நான் உதவ முடிகிறது. கற்றுக்கொள்வது என்பது தான் எனக்கு ஒரு போதை. அதற்கு பெருந்தீனி இங்கே இருக்கிறது. சர்வேசன் புகைப்பட ப்போட்டி எனக்கே என்னுடைய புகைப்படக்கலை ஆர்வத்தைக்காட்டியது. அன்புடன் குழும காட்சிக்கவிதை போட்டி ஒரு புதிய முயற்சி. இன்றையபெற்றோர்களும் அவர்களின் குழந்தைவளர்ப்பும் பற்றி எழுதும்போதும் கற்றுக்கொள்கிறேன். தற்போது "நான் ஆதவன்" என்கிற பதிவரின் பதிவில் அனிமேசன்களைப் பார்த்து அவர் உதவியுடன் சில வரைதலை பழகிவருகிறேன். முன்பே சொன்னதுபோல என் கோப உணர்வை குறைக்கவும் உதவி இருக்கிறது... ஒவ்வொரு வரின் நியாயம் படிக்கும் போது பலவிசயங்கள் புரியவந்திருக்கிறது.

சிபி :- மாயவரத்துல பிறந்தீங்க, மத்த ஊரையெல்லாம் கூட சொந்த ஊர் போல பாவிக்கிறீங்களே எப்படி?

அந்த ஊரெல்லாம் சண்டைக்கும் வராது அது எப்படி நீ சொல்லலாம்ன்னு அந்த தைரியம் தான்..:) (ஊரைப்பற்றிய ) இதுக்கு ஒரு தனிபதிவே போட்டிருக்கேன் . என் மாமனாரைப்பற்றி எழுதி இருக்கிறேன். இன்னும் என் சொந்த ஊராக இந்தியாவில் இருக்கிற ஊர்களைத்தான் சொல்கிறேன் என்பதில் தான் வருத்தம் எனக்கு. யாதும் ஊரே யாவரும் கேளீர் .

சென்ஷி :- பதிவு எழுதனும்னு முடிவு செஞ்சப்புறம் எதுக்கு இப்படி ஒரு சமூக அக்கறை பதிவு? ரொம்ப நல்லகேள்வி..இந்த பதிவை அடிக்கடி நீயே மீள்வாசிப்புக் கொண்டுவருவது பெருமைப்படவேண்டிய விசயம். எனக்கு வகைகள் மேகத்தில் செய்திவிமர்சனம் என்பதற்கு ஒன்றிரண்டாவது தேறினால் பரவாயில்லையே என்று நினைத்தபோது கிடைத்த பதிவு இது .

முல்லை : புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுண்டா, சமீபத்தில் (கடந்த மூன்று மாதங்களுக்குள்) படித்த புத்தகம் எது?

புத்தகங்கள் படிப்பது எக்கசக்கமான ஆர்வம் உண்டு. இப்போது இணையத்தில் படிப்பதால் குறைந்திருக்கிறது என்றாலும். தமிழ்சங்கத்துல இருந்து கணவர் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கத்தருவார்கள் . சமீபத்தில் படிச்சதுன்னா தென்கச்சியின் சுவையான தகவல்கள் 100 புத்தகம் சொல்லலாம். சிவசங்கரியின் நெருஞ்சிமுள்.. இப்ப படித்துக்கொண்டிருப்பது சத்தியஞானசபை பற்றிய புத்தகம். வள்ளலாரின் சபை பற்றிய விவரங்கள் இருக்கிறது.

கவிதா: மெளனம் என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? அதனை நீங்கள் ரசித்து இருக்கிறீர்களா?

ம் தெரியும் அதன் வலிமையைத் தாங்கும் சக்தி எனக்கு இருப்பதாக தெரியவில்லை. எங்கம்மா வாரம் ஒரு நாள் மௌனவிரதம் இருப்பார்கள். அவர்கள் மெடிட்டேசன் மற்றும் பல பயிற்சிகள் மேற்கொள்வதைப்போல இதுவும் ஒரு வித பயிற்சி தான் என்பார்கள். அன்று சக்தி சேமிக்கப்படுகிறது . நானும் பலநாட்களாக அப்படி இருக்க முயற்சித்தாலும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை. பொதுவாக அன்றைய நாட்களில் ஜீன்ஸ் பட அம்மா மாதிரி உம் கொட்டுதலும் கூடாது. எழுதிக்காமித்தலும் கூடாது என்பார்கள். மௌனம் என்றால் மனமும் கூட மௌனமாக இருக்கவேண்டும். நான் ஏறக்குறைய மௌனம் தான் இருக்கிறேன். குழந்தைகள் கணவர் பள்ளிக்குப் போனபின் வீடு அமைதியாகத்தான் இருக்கும். நானென்ன தனியாகவா பேசிக்கமுடியும். வெறும் டைப்பிங்க் தான். ஆனால் அதன் மூலம் நான் பேசிவிடுவதால் அதை முழு மௌனமாகக் கொள்ள முடியாது. சும்மா இருப்பது மிக பெரிய தவம். அதனை செய்யுமளவுக்கு நான் பக்குவி ஆகலை.

G3 : ப்ளாக் உலகமே உங்களை முத்து'அக்கான்னு கூப்பிடுதே.. நீங்க ஏன் உங்க ஞாபகமா ப்ளாக் உலக மக்களு்க்கு ஆளுக்கொரு முத்து கொடுக்க கூடாது? (உங்க அன்பு அளவுக்கு முத்து சைஸ் இருந்தா போதும், ஒரிஜினல் முத்து ஒன்லி அக்ஸப்டட்)

ஜி3 என் அன்பு அளவுக்குன்னு நீ சொல்லிட்டதால நீயே எனக்கு ஒரு சான்ஸ் குடுத்துட்ட.. அந்த அளவுக்கு ஒரிஜினல் முத்து எங்காவது உருவாகினால் அது செய்தியில் வந்தால் நான் எல்லாருக்கும் குடுக்க சம்மதமே.. ( ஹப்பாடா என் வீட்டுக்காரங்க பர்ஸ் தப்பிச்சுச்சு)

ஜியா : நீங்க ஏன் லட்சுமி, முத்துலட்சுமி, கயல்விழி முத்துலட்சுமின்னு ஒவ்வொரு அவதாரமா எடுத்துட்டு வர்றீங்க? இடைக்கால லட்சுமிகள், முத்துலட்சுமிகளிடமிருந்து தனித்து நிக்கனும்னு கயல்விழினு முன்னால போட்டுக்கிட்டீங்க. இன்னொரு கயல்விழி முத்துலட்சுமின்னு வேற யாராவது வந்தா, என்ன பேரு வச்சுக்குவீங்க? ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் மாதிரி, தில்லி, சாந்த்னி சவுக்னு அட்ரஸ அட்டாச் பண்ணிப்பீங்களா?

இனி பெயரை மாற்றமாட்டேன் என்று நினைக்கிறேன்..ஜி...:)

முல்லை:- பேச்சுப் போட்டிகளில்/விவாத/பட்டிமன்றங்களில் ஆர்வமுடன் பங்கேற்றதுண்டா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அல்லது அதையும் தாண்டி பொது மேடைகளில்? சுவையான நிகழ்வுகள்?

இல்லவே இல்லைப்பா... நான் போட்டிகளில் கலந்துகொண்டதே இல்லை.. இங்க வந்தப்பறம் தான் ஒரு முறை சிந்தாநதியின் விவாதப்போட்டியில் கலந்துகிட்டேன். மத்தபடி நான் என் குழுவில் பேசிக்கிட்டே இருப்பேன் அதாவது ஜாலியா அரட்டையா... அவ்வளவுதான் மேடை ஏறுரதுங்கறது என்னப் பொருத்தவரை பயங்கரமான விசயம். ஒரே ஒரு முறை ஒரு நாடகத்திற்கு பின்னிருந்து குரல் கொடுக்கவேண்டும். காட்சி பற்றிய விவரங்களுக்கு. அதற்கும் கூட நான் மேடையின் மறைவான இடத்தில் மைக்கை வைத்து தான் பேசினேன்.. :)

சென்ஷி :- புதிய பதிவர்களை எப்படி ஊக்குவிக்காலம்னு நீங்க நினைக்கறீங்க..?! புதியபதிவர்களை எப்பவும் போல பின்னூட்டம் போட்டுத்தான் ... அதே சமயம் வித்தியாசமான முயற்சிகளைஅவங்க செய்கிற போது அவங்களைப்பற்றி நம் நண்பர்களுக்கும் சொல்லி படிக்கத் தூண்டுவது மேலும் நன்மை தரும். புதுபதிவர்களுக்கு தனிமடலிட்டு அந்த வித்தியாசமான முயற்சியை தொடரும்படி கேட்டுக்கொள்ளலாம்.. அவர்களின் தனித்திறமையை பாராட்டலாம்.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்கம் என்பது தன்னுள்ளே இருந்து வருவதைவிட பாராட்டாக வருவது பலன் தரும்

ஜியா : எல்லாத்துக்கிட்டையும் கேள்வி கேக்குற கவிதா+அனிதா உங்க கைல மாட்டுனா, நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கனும்? என்ன கேப்பீங்க?? ;))

நாகேஷ் மாதிரி இல்லை எனக்கு கேள்வியே அதிகம் கேக்கத்தெரியாது. யாரவது வந்து என்னிடம் எங்க வீட்டுக்கு வாடகைக்கு ஆள் வேணும் தெரிஞ்சால் சொல்லுங்கன்னு சொல்லி இருப்பாங்க.. சரின்னுடுவேன். தவிர .. எத்தனை வாடகை .. என்ன லீஸ் எதிர்பார்க்கறீங்களான்னு அவங்களைக் கேட்டு தெரிஞ்சு வச்சிக்க எல்லாம் தெரியாது. ஒரு கேள்வியே கேக்கத்தெரியாத என்னை அதுவும் நறுக்குன்னு வேற .... நாலு கேள்வியா.. ? சரி ஒன்னே ஒன்னு தான்... நீங்க அந்நியன் மாதிரி ஸ்பிலிட் பெர்சானலிட்டியா உண்மையில்??

ராப் : .சில ஆண்கள், ஒரு வரம்பையும் மீறி பெண்களை பொதுமைப்படுத்தி கீழ்த்தரமான நக்கலில் இறங்கறாங்களே அதப் பார்த்தா ஏதாவது தோனுமா உங்களுக்கு? சில என்று நீயே சொல்லிவிட்டாய்.. தப்பித்துக்கொண்டாய் இல்லாவிட்டால் அதுக்கு ஒரு பெரிய கும்பலே ஓடிவந்திருப்பார்கள்.(பதிவுகளில் தானே கேட்டே) நிச்சயமாக காது மடல் சூடாகி கோவம் வரும். எழுந்து போய் தண்ணீர் குடிச்சிட்டு வந்து அடுத்த பதிவுக்கு போயிடுவேன். நாமும் பொதுமைப்படுத்தி பேசினால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையே.. நம்மால் முடிந்தது அடுத்த ஜெனரேசனில் அப்படி எண்ணம் கொள்ளாமல் பிள்ளைகளை வளர்ப்பது தான்.

ராயல் ராம் : - பேசமா இருக்கிறது? அமைதியா இருக்கிறது? சும்மா இருக்கிறது? சத்தம் போடாமே இருக்கிறது? தொணதொணக்காமே இருக்கிறது? இப்பிடியெல்லாம் யாராவது சொல்லிருக்காங்களா? அப்பிடின்னா என்னான்னு அர்த்தம் தெரியுமா??

அதெல்லாம் எங்க வாத்தியாருங்க டீச்சருங்க சொல்லி இருக்காங்க.. ஒரே ஒரு ப்ரண்ட் மட்டும் உன் வாயடைக்கறமாதிரி ஒருத்தன் புருசனா வரனும்டின்னு சொல்லி இருக்கா... ஆனா அவங்க ஆபீஸ் வேலையா எதாச்சும் இருக்கறப்ப மட்டும் தான் ... சொல்வாங்க.. கொஞ்ச நேரம் பேசாம இருன்னு..

சிபி : மொக்கை எதிர்ப்பு நிலைல இருந்த நீங்க எப்ப மொக்கை ஆதரவு நிலைக்கு வந்தீங்க? ஏன்?

மொக்கை எதிர்ப்பு நிலையில் இருந்ததாக நினைவில்லை சிபி. என் பதிவில் நீங்க டீ குடித்து நடத்திய பின்னூட்டக் கும்மியை நிறுத்த சொன்னதால் சொல்கிறீர்கள் போல. அதற்கு பதில் போட்டு மாளவில்லை என்பதால் சொன்னது அது . நான் மற்றவர்கள் பதிவில் போய் கும்மிப்பின்னூட்டங்கள் போடுவதில் மறுப்பேதும் இல்லை.

மங்கை:- வட இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும், தென் இந்தியாவில் உள்ள மக்களின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

நான் கவனித்தவரை இங்கே குழந்தைகளை மிகத் தன்னம்பிக்கையோடு வளர்கிறார்கள். அவர்களும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் செய்கிறார்கள். நகரங்களில் எல்லாமே ஒரு வித எட்டி நின்று புன்னகைத்து சுதந்திரமாக இருக்கவிடும் பண்பு இருக்கிறதோ என்னவோ.. நான் வளர்ந்த சிறு ஊருக்கு இந்த மெட்ரோ நகரம் மிக வித்தியாசமானது தான்.

ஜியா : கூட சில நண்பர்கள் இருந்தாலே எங்களால எழுத முடியறதில்ல... ஆனா, வீட்ல குட்டீஸ வச்சிக்கிட்டே, சிறு முயற்சி, புகைப்படம்னு தொடர்ந்து கலந்துக்கட்டி அடிக்கறீங்களே? (இப்பவும் அப்படித்தானே எழுதிட்டு இருக்கீங்க? ஏன்னா, நான் பதிவு பக்கம் வந்து லைட்டா ஒரு ஆறு மாசம் ஆகுது:)) அது எப்படி முடியுது?

சிலசமயம் குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கும்படியே இருக்கும். சிலசமயம் கோவம் வந்து நான் அதை கொட்டினால் அவர்களுக்கு அது சங்கடமாகி போகும்.. இங்கே எழுத உட்கார்ந்தால் அல்லது படிக்க உட்கார்ந்தால் வேறு உலகத்தில் நுழைந்ததுபோலாகி அவை கூலாகிவிடும். இதனால் நன்மைதானே.

கவிதா: ஒரு பெண் தன் கணவர், குழந்தைகளின் விருப்பத்திற்கும், விருப்பத்தை கேட்டும் நடந்து கொளவ்து பெண் அடிமைத்தனம் அல்லது அந்த பெண் அவர்களை சார்ந்து இருக்கிறாள் என்று சொல்லிவிட முடியுமா?

இருபக்கமும் கேட்டு கலந்தாலோசித்து நடக்கும் பட்சத்தில் அது ஒரு அழகான விசயம். பெண் மட்டும் கேட்டு நடந்துகொள்கிறாள் என்றால் அவளோட அன்பும் , அட்ஜஸ்ட் செய்து போகிற தன்மையும் தெரியவருகிறது. ஆனால் அப்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று கட்டளை இருந்தால் அங்கே பெண் அடிமைத்தனம் இருக்கின்றதோ என்று தோன்றுகிறது..

ரவுண்டு கட்டி கேட்ட கேள்விகள் கவிதா : உங்கள் தாத்தாவிடம் நீங்களும் நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்?

விடாத கடவுள் சாதனை..... எல்லோரிடத்திலும் கனிவு

ராப் : .என்னைய பார்த்தா அடுத்த நிமிஷம் என்ன கேப்பீங்க? என் கையால செய்த பிரியாணிய சாப்பிடறயா இல்லன்னா வரியா சரவணாலயோ ஆனந்தபவன்லயோ போய் சாப்பிட்டுட்டுவரலாம்ன்னு நீ என்ன சொல்வே "குட் ஐடியாக்கா.." அப்படின்னு ரைட்..?

ராயல் ராம் : தலைநகரின் தலை சிறந்த தமிழ் பேச்சாளர்'னு சொல்லி சிலை வைக்கிறப்போ அதுவும் பேசிட்டு இருக்கிறமாதிரி தான் வைக்கனுமா??? நிச்சயமா வைக்கமாட்டாங்க அதனால் இப்படி ஒரு சந்தேகம் வரவே வேண்டாம்.. இந்த பேச்சாளர் பட்டமே நண்பர்கள் சும்மா போட்டுவிட்ட பட்டம் தானே..

கவிதா:- சிறந்த பதிவர்கள் –எழுத்தில், மொக்கையில், நகைசுவையில்- மொக்கைக்கு – சென்ஷி , ராப், நகைச்சுவைக்கு - அபிஅப்பா, குசும்பன், சின்னப்பையன், எழுத்துக்கு - பாலைத்திணை காயத்ரி, செல்வநாயகி குறிப்பு: யாரும் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு சட்டென்று நினைவுக்குவந்தவர்கள் இவர்க்ள் தான்

சிபி :- நேர்ல பார்க்காத வரை ரொம்ப புத்திசாலி/சாமார்த்தியசாலின்னு எல்லாரையும் நம்ப வைக்கிறீங்களே எப்படி? செண்ட்ரல் ரயில்வெஸ்டேஷனுக்கு வர முன்னாடியே இந்த குசும்பன் சிபி ஜி3 குழுவினர் ப்ளானோடதான் வந்தாங்க.. மூவரும் மாத்தி மாத்தி பேசி என்னை முழிக்கவிட்டாங்க. அப்ப கண்டுபிடிச்ச உண்மைதான் நான் சாமர்த்தியசாலி இல்லைன்னு அதை இங்க விளம்பரம் செய்துட்டாங்க... :) புத்திசாலின்னு எப்பவுமே நான் சொல்லிக்கிட்டதே இல்லை. என்னோடது வெறும் சிறுமுயற்சி என்கிற தன்னடக்கத்தை சிலர் தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ என்னவோ.. ?

ராப் : அதெப்படி எப்பவும் எல்லாத்தையும் கூலாவே எடுத்துக்கறீங்க? அனுபவம் தான். பொதுவா நான் எப்போதுமே சட்டென்று கோபப்பட்டு எதிராடுவது தான் வழக்கம். இப்போது மிகக்குறைந்திருக்கிறது. கோபத்தால் எனக்கே பூமாராங் மாதிரி திரும்ப அடிபட்டு ... இப்ப கூலா இருக்க பழகிவருகிறேன்.

G3 - மூச்சு விடாம பேசறீங்களே.எப்போதிலிருந்து இப்படி? சின்னவயசிலேர்ந்தே இப்படித்தான். சாப்பாடு கூட வேண்டாம் தண்ணீர்( H 2 O) குடிச்சே பேசுவாளே என்று எனக்கு புகழ் உண்டு.

கவிதா:- உங்களின் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது. குப்பையை எங்கே போட்டீர்கள்?

மங்கை: - பெண் சுதந்திரம் என்று எதை சொல்லுவீர்கள்? தளையாக எதையும் உணராமல் பெண் காரியங்களை இயல்பாக செய்வது தான். எதை செய்தாலும் யாராவது பெண் என்பதால் மட்டும் அந்த செயலை செய்ய தடை விதித்தால் அங்கே தான் ப்ரச்சனை வருகிறது.

ராயல் ராம் : Delhi Non-stop FM இப்பிடின்னு யாராவது பட்டபேரு வைச்சிருக்காங்களா??? அதான் இப்ப வச்சிட்டீங்களே!

முத்துலெட்சுமி'யின் தத்துவம் : நல்லதொரு மாற்றத்தினைக்காண மாற்றத்தின் முதல்படியா நீங்களே இருங்கள்... மகாத்மா காந்தி

-----------------------------------------

அங்கு வந்திருந்த பின்னூட்டங்களைக் காண க்ளிக் செய்யவும்.