December 21, 2011

எண்ணப்பின்னல்கள்


எண்ணப்பின்னல்கள்
பின்னலும் பிரித்தலும்
பிரித்தலும் பின்னலுமாய்

பின்னிக்கொண்ட மகிழ்ச்சிகள்
மகிழ்விழை இழைந்தோர் நிலையும் - நீ
நிலைத்த நெஞ்சில் ஈரமுமாய்

ஈரவிழிச் சொற்கள்
சொல்லிழந்தோர்ப் புள்ளியில் மலரவும்
மலர்மனதில் எண்ணப்பின்னல்கள்
முதல்முறையாக பின்னல்கோலாட்டம் கண்டபோது தோன்றியது முதல் மூன்றுவரிகள்

December 11, 2011

உள்வெளி


கோணங்களை மாற்றிவைத்தாலும்
அக எதிரொளிப்பில்
ஒளியிழைகளைப் பற்றி
மேலேறி நிற்கிறது
குறுக்குவெட்டிலும் நோக்கி
பிழைகளைப் பட்டியலாக்கி
முடிவுகளை மேலேற்றி
வடிவம் செய்கிறது

சத்தமின்றி சில உயிர்களை
அச்சட்டகத்திலாக்கி
பார்வைக்கு மறைவாய்
அலையத்தொடங்குகிறேன்.

வின்மீண் தொலைவில்
வேறொரு உலகம் சமைத்தும்
பருவங்களில்
நீர் வற்றாத ஓவிய ஆறாக
உள்ளே தான் உறைந்திருக்கிறதது

உள்ளோடும் ஈர்ப்பில்
சுருங்கி சுருங்கி
அளவில்லாததும்
உருவில்லாததும் ஆனபின்னும்
நிரம்பாத வெற்றிடமும் கொண்டு..

இம்மாத வடக்குவாசலில் வெளிவந்திருக்கும் என் கவிதை

November 30, 2011

பேரருள்

காணிக்கை என்பதும் கையூட்டாய்
கடவுள் கூட அவர் கூட்டாய்
பால்வெண்மையில் கரையுமோ
சிவப்பு நிறப்பாவங்கள்
கண்கள் மூடிய அரையிருட்டில்
தள்ளுமுள்ளு இல்லாத
தரிசனத்தில்
தள்ளுபடியானதோ கணக்குகள்?
மனமிரங்கக் கேட்டோர் குரல்
மலை எதிரொலிக்க பட்டு
திரும்புவதோ
வாழ்வின் திருப்பம்?
நீளும் உயிரும்
நெருக்கிய இருளுமாய்
தவித்த இரைச்சல்களை
கடந்த கால்கள்
இன்று யாத்திரையோ?
குற்றம்சுட்டிய விரல்கள்
நெஞ்சு துளைக்க
இன்றவர் கூப்பியகரங்களோ?
இல்லையென்றார்
இருக்கின்றாரென்றார்
நிலையானவர் என்றார்
நிலையுயர்த்துவார் என்றார்
நிலையாக நிற்பவரே
உம்நிலை தான் என்ன?

டிசம்பர் 2009 - ஈழநேசன் தளத்தில் வெளிவந்த எனது கவிதை

November 27, 2011

கூட்டம்


வண்ணக்குழம்புகள் பூசிய முகங்கள்
ஒன்றேபோல உடைகள்
புடைத்த நரம்புகள்
கனத்த குரல்கள்
குறிக்கோள் தாங்கிய கண்மணிகள்
வீசி உதறி குதித்து
ஓரோர் பக்கமாய் நிமிர்ந்து நின்றனர்.

பறவையைப்போல்
சிறகுவிரித்துப் பறந்தான் ஒருவன்
மஞ்சள் வண்ணம் ஒளிரும் முகம்
சிரிக்கக் கண்டார்கள்.

நிமிட இடைவெளியில்
புகுந்தான் ஒருவன்
திரண்ட தோளுக்குரியவனாய்
கருமையும் செம்மையுமாய்
வண்ணக்கலவை மிரட்ட
உரக்கக்கூவினான்
யார் நீ? யார் நீ?

நான் நீ! நான் நீ!
குழம்பி உரைத்தான் இவன்.
மறுத்துச் சாய்த்தான் ஒருவன்..
மடங்கி சரிந்தான் இவன்..
இதயம் கனத்தது என்றது கூட்டம்.
எதையோ இழந்தோம் என்றது கூட்டம்.
பேசிக் கலைந்தது கூட்டம்.
கூட்டம் விட்டுச்சென்ற
முகமூடிகளைப்
பொறுக்கிச் சேர்த்தான் ஒருவன்.

நன்றி:
 22 ஜூலை 2009 ல் ஈழநேசன் முல்லை இணைய இதழில்  வெளிவந்த என் கவிதை. 

November 16, 2011

யந்திரவாகனன்


சிறுமுயற்சிக்கு 5 வருடம் நிறைந்துவிட்டது.
அதற்கு காரணமாயிருந்த நட்புகளுக்கு என் நன்றிகள்.

நான் செம்படம்பர் மாதம் தில்லி ஹிந்தி அகடமியில் கவிதை வாசித்தபோது என்கவிதைகளை மொழிபெயர்த்து தந்த பாலசுப்ரமணியம் சார் அவர் மொழிபெயர்த்த இப்புத்தகத்தை தன் நல்லாசிகளோடு கையெழுத்திட்டுத்தந்தார்கள். நாவலை மற்ற கதைகளைப்போல நான் வேகவேகமாக கடக்கவே முடியவில்லை. நாலோ ஐந்தோ பக்கம் படித்துவிட்டு மூடிவைத்துவிட்டு நானும் அவரைப்போலவே உள்ளே யோசிக்கக்கூட ஆரம்பித்துவிட்டேன். யோசனை ஓடி ஓடி ஒரு சில கவிதைகள் கூட எழுதிவைத்தேன். மனசுக்குள்ள(யும்)யே பேசித்தீர்த்துக்கிறவங்களுக்கு இந்தக்கதை படிக்க ரொம்பவுமே பிடிக்கலாம். உடலைத்தேர் என்றும் ஆத்மாவை தேரோட்டி என்று கொண்டதாக உருவகிக்கும் ஆழமானதொரு கதையை மொழிபெயர்த்தவரே எனக்கு பரிசளித்தது மிகப்பெருமையாக கருதுகிறேன். நன்றி சார்.

[கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை இங்கே யூட்யுபில் காணலாம்..
என்கவிதைகளின் முதல் மேடை..பிழைகளைப் பொறுத்தருள்க. கவிதை வாசிப்பு நிகழ்விற்கு என்னை பரிந்துரைத்த திரு ஷாஜகான் அவர்களுக்கு சிறுமுயற்சியின் பாதையில் ஒரு முக்கிய நிகழ்வை தந்ததற்காக தனிப்பட்ட நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹிந்தியில் என் கவிதைகள்

இரண்டு கவிதைகள் ராஜஸ்தானி மொழியில் திரு நீரஜ் தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.]


--------------------------------------------
யந்திரவாகனன் - சந்திரசேகர் ரத் ஒரியா மொழியில் எழுதிய நாவல்.
ஹிந்தியில் - சங்கர்லால் ப்ரோஹித்
தமிழில் - திரு ஹச்.பாலசுப்ரமணியம்

தாசர் என்கிற கிராமத்துக்கோயிலில் பூஜை செய்கிற மனிதரோட கதை. கிடைக்கிறதை விட அதிகமா எதிர்ப்பார்க்காத நிம்மதியான மனுசனான தாசர் ,உலகத்து வாழ்வில் வாழ்வதைவிட மனசுக்குள் ஒரு வாழ்க்கையை தனியா வாழ்ந்துகிட்டிருக்கார். சொல்லப்போனா அவர் மனசுக்குள்ள வாழற வாழ்வைத்தான் முழுமையா வாழ்ந்தார்ன்னு நினைக்கிறேன்.

தோட்ட வேலை செய்கிற மாலியையும் சத்பதி போன்ற தத்துவநெறிகளை அறிந்த மனத்தெளிவு கொண்டவராக மதிக்கப்படறவரையும் சமமாக ஞானிகளாக பாவிக்கிறார். அவர்களை ஏறக்குறைய துலாபாரத்துல ஒரு தட்டில் வைத்து தன்னை அஞ்ஞானியாக மற்றோரு தட்டில் வைத்து உள்ளுக்குள்ளேயே தர்க்கம் செய்துக்கிறார்.



பழமையான எண்ணங்களில் தத்துவங்களில் பழகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவரோட மனசுக்குள்ளே அவற்றை கேள்வியும் கேட்டு விவாதம் செய்கிறார். பசுவை தானம் குடுக்கச்சொல்லி ஒருவருக்கு சொல்லிவிட்டு அதை தனக்கான ஆதாயத்துக்காக சொல்லிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் மனுச மனங்களின் கள்ளங்களை அவர்களின் நேர்மையைப்பற்றி கேள்விக்கேட்டுக்கொள்கிறார். விதியைப்பற்றி இறந்த பின்னான உலகம் பற்றியும் படித்தவனானாலும் நீலகண்டருக்கு இருக்கின்ற பொறாமையைப்பற்றியும் நீளநீளமாக யோசித்து நேரம் கடத்தி மனைவியின்
“இப்படியே தான் உக்காந்திருக்கப்போறீங்களா ?”

போன்ற அதட்டலில் நிகழுலகத்துக்கு வந்து வந்து போகிறவர்.



புரிக்கு திருவிழா பார்க்க குடும்பத்தை அழைத்துச்செல்லமுடியாத நிலையில் ..

“கோவிந்த தூவதசி வர்ரது எல்லாரும் கிளம்பராங்க , புண்ணியம் சம்பாதிக்கவா போறானுக ? அட ஒரு ஆடு நொண்டித்துன்னு பின்னால் வர எல்லா ஆடும் நொண்டுமே அது மாதிரி கதைதான்”
என்று திருவிழாவில் கடையும் கொண்டாட்டமும் என்று கடவுளை நினைக்காதவங்களை பற்றி குறைபட்டுக்கொண்டே மனைவியின் புலம்பலிலிருந்து தப்பித்து கோயில் வாசலில் தூங்கிய தூக்கத்தின் நடுவில் கனவில் அவர் புரிக்குச் சென்று கடவுளையும் தரிசித்துவிடுகிறார்.

ரயில் வண்டியிலிருந்தே ஜெகன்னாநாதனை நினைத்தபடி கூட்டத்தில் முண்டியடித்து

‘ஹே பரந்தாமா! ஈரேழு பதினாலு லோகமும் உன்னுடைய லீலாபூமி . பிரபு! உனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? அகற்றிடு மேகநாதர் மதிலை..மேகத்தின் பக்கமாக உயர்த்தி விடு இதை. எவ்வளவு தூரத்திலிருந்து உன்னை தரிசிக்க வந்திருக்கு ஜனகோடிகள். ஏழை எளியவர் எல்லாரையும் உள்ளே நுழைய விடு . எல்லாரும் பக்கத்தில் வரட்டும் .. ஹரி ஜெகந்நாதா! ஜெய் ஜகன்னாதா!உன்னைக் கண்களால் பருகும்போதே இந்த உயிர் பிரிஞ்சுடனும் 

என்றபடி மற்றவர்களுக்காகவும் வேண்டி உருகி வழிபடும் அவர் உள்ளுக்குள் கண்ட தரிசனத்தைப் போல கோயிலுக்கு போனவர்கள் கூட கண்டிருக்கமுடியாது.


சத்பதியைப்பற்றி மாலியும் தாசரும் உரையாடுவதிலும் சத்பதியிடம் விவாதிக்கிற இடங்களிலும் தத்துவங்களை கேள்விகேட்டு புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.

ஒருநாளானால் மனைவியும் குழந்தைகளும் தன்னை வாழ்க்கையில் பெரும் மோகத்தில் ஆழ்த்தும் சக்திகளென்று வெறுத்து யோசித்தாலும் மருத்துவம் பார்க்க பணமில்லாமல் மனைவியும் ஒரு மகனும் இறந்த பின்  மனைவியின் மேலான அன்பு மேலிட மனம் பேதலித்து நிற்கிறார்.

 தனக்குள்ளே பேசி தர்க்கம் செய்து வாழ்ந்தவர் பேதலித்த மனதோடு வாய் வார்த்தை குறைந்து உள்ளுக்குள் ஆமைஓட்டுக்குள் சுருங்கியது போல இருக்க, அவரின் மனம் மாற்ற கொள்ளவேண்டுமென்று சத்பதி தலயாத்திரை அழைத்து செல்கிறார். மௌனச்சாமியாராக..காசிக்கு சென்று கங்கையில் முங்கி சிவனை தரிசிக்க செல்லும் வழியில் அவருடைய பேதலித்த நடையைக் கண்டு கடைக்காரர்கள் தாமாக அவரையும் பூஜித்து, கடவுளுக்கு சாத்த பூவும் பொருட்களும் குடுக்க..
‘கடைசியில் பிச்சையும் எடுத்தாய் இல்லையா?’
இவர்களுக்கு என்ன பைத்தியமா? என்னை மதிப்பதற்கு ..காசியில் எது வேண்டுமானாலும் நடக்கும். தினம் ஒரு மகான் தோன்றக்கூடும் மனிதனைபிடித்து மகானாக்குவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கபோகிறது
என்றபடி சத்பதி மகராஜிடம் வேடிக்கையாக .. காசி மக்களுக்கு பக்தி ஜாஸ்தி இப்படி பைத்தியம் பிடிச்சு என்னையும் பைத்தியமாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்.

எவ்வளவு மனைவியை மறக்க நினைக்கிறாரோ அவ்வளவு அவள் நினைவுக்கு வருவதை
‘’” இந்த டுக்கு அம்மா அடிக்கடி நினைவுக்கு வராளே ஏன் ? ஒரு நாழிகைப் பொழுதாக நானும் பார்க்கிறேன் அவள் ஞாபகமே வருதே! மனம் ரொம்ப சஞ்சலமடைகிறது’ மதுரா பிருந்தாவன்னு சொல்றாளே எப்படி இருக்கும் போய் வரலாமா என்றாள் நான் சிரிச்சி மழுப்பினேனே.. அவ ஆத்மா மறந்திருக்காது . அவளும் கூடவே வந்திருக்கா. என் சரீரத்தில் புகுந்து அவளும் பிருந்தாவன் பார்ப்பா போலிருக்கு. //

தாசரும் அவரை மனசமாதனம் படுத்த

இவ்வளவு தூரம் கிளம்பி வந்தது அதையெல்லாம் விடறதுக்குத்தானே . நீர்தான் வீணாக நிழலை பார்த்துண்டு ஓடறீர்’

இல்லே சுவாமி! வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம் நிழலையும் கூடவே கொண்டுதானே நடக்கவேண்டி இருக்கு.

ஒளியை இலக்காகக் கொண்டு நாம் முன்னேறினா நிழல் தானே
பின்னடைஞ்சுடாதா? அதுக்கு போய் கவலைப்படுவானேன்?’

அப்ப நிஜம்மாவே நிழல் விட்டுப்போயிடும்ன்னு சொல்றேளா? ஒளிபக்கத்தில் வரவர நிழலும் அதிலிருந்து சக்தியைப் பெருக்கிக்கும் . ஒளியோட சேர்ந்துட்டா அங்க நிழல் இருக்காதே. அது ஒளியில் லயித்துவிடும்’
எத்தனையோ சிந்தனைத்தெளிவாக ஓரொரு சமயம் பேசினாலும் ,தன்னை சுற்றி நடப்பதையோ , பேச்சுக்களையோ உணரமுடியாத நிலையிலேயே சிலநாட்கள் குழம்பி பின் மனைவி ஆசையாக செல்லவேண்டுமென்றாளே அந்த ஜகன்னாத புரியில் இறக்க ஆசைபடுகிறேன் என்று அங்கேயே சென்று இறக்கிறார்.

படித்தவராகவும் இந்த சாதரண மனுசன் மேல பொறாமையும் கொண்டிருந்தவராகவும் இருக்கிற நீலகண்ட பண்டிதருக்கும் தாசருடைய மரணத்திற்கு பின்பு அவரின் மகத்துவம் ,பொறாமையற்ற எளிமையான மனது புரிகிறது.

October 24, 2011

தமிழ்மீடியாவில் பதிவு அறிமுகங்கள் -1

சிலவருடங்களுக்கு முன்பு 4தமிழ்மீடியா தளம் உருவாகியபோது அங்கே வாரம் ஒரு வலைப்பூ என்ற ஒரு பகுதியைத் தொடங்கபோவதாகவும் அதற்கு சில அறிமுகங்களைத் தரவேண்டும் என்றும் அதன் நிர்வாகத்திலிருந்து நண்பவரொருவர் கேட்டிருந்தார். வலைச்சரத்தில் பொறுப்பாசிரியராக இருந்து சில நல்ல அறிமுகங்களைக் கொடுத்துக்கொண்டிருந்ததை நினைவில் கொண்டு அப்பொறுப்பை அவர் கொடுத்திருக்கலாம். அவருக்கு நன்றி. முக்கியமாக நான் அதனை ஒத்துக்கொண்டதற்கு காரணம் அப்போது தமிழ்மணத்தில் வந்துவிழும் அத்தனை பதிவுகளையும் வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்.

அந்த அறிமுகங்களை ஒரு சேமிப்பிற்காக இங்கே சிறுமுயற்சியில் பதிந்து வைக்கிறேன். இதில் வெளிவந்திருக்கும் பதிவுகளில் சில என் நண்பர்களுடையதாக இருந்தாலும் கூட அந்த நண்பர்களுக்கே அது வெளிவந்த போது நான்தான் அறிமுகம் எழுதி இருந்தேனென்று தெரியாது. இப்பொழுது கூறுவதால் ஏன் எழுதினாய் என்றோ? மற்றவர்களை குறிப்பிடவில்லையென்றெல்லாமும் யாரும் தவறாக நினைக்கப்போவதில்லை என்று ஒரு நம்பிக்கை . முதல் பத்து பதிவுகளைஇங்கே காணலாம்.

1. குழந்தை வளர்ப்புக் குறித்த வலைப்பூ

இணையஉலகில் ஆங்கிலத்தில் குழந்தைவளர்ப்பு பற்றிய குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.. தமிழில் அதன் அவசியத்தை உணர்ந்து சில பெற்றோர்களின் இணைந்த முயற்சியில் இந்த வலைப்பதிவு நடத்தப்படுகிறது. குழந்தைகளிடம் நம் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்? மற்றும் குழந்தை வளர்ப்பில் நேர்கிற தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளும் வழங்குகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கான உணவுகள் , கல்வி பற்றிய விசயங்களும் காணலாம்.ஒரு சிறுகுழந்தையைப் போலவே மலர்ந்து (வளர்ந்து) வரும் இந்த பதிவின் வெற்றிக்கு வாழ்த்துகள். "பேரன்ட்ஸ் கிளப்" எனும் இவ் வலைப்பூவினைக் காண

2. மென்பொருள் முகவரி தரும் தமிழ்நெஞ்சம்

இவர் இன்னது தான் எழுதுவார் என்று நம்மால் வரையறுக்க இயலாது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இணையத்தில் கிடைக்கின்ற மென்பொருளுக்கு அறிமுகம் தந்து வருகிறார்.எங்கிருந்து நீங்கள் தரவிறக்கம் செய்யலாம் என்பவற்றையும் கூறுவதோடு அவற்றினை ஓரிடத்தில் தொகுத்தும் அளிக்கிறார். ஆடியோ வீடியோ எடிட்டிங்க் மென்பொருள்கள் ,ரீசைக்கிள் பின்னை காலி செய்த பின்னும் கோப்புக்களை பெறுவது எப்படி? இவை சில உதாரணங்கள்.தமிழ் 2000 வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள். சலனப்பட வரிசைகள் அதிகம் இடம்பெற்று இருக்கின்றதென்றாலும் அவைகளிலும் எப்படி ? எப்படி? வகை சார்த்தவைகள் இருக்கின்றன. பயனுள்ள பதிவு.

3. தமிழில் புகைப்படக் கலை
தமிழ் வலைப்பதிவுகளிலேயே மிகவும் அதிக வரவேற்பைப் பெற்றவற்றில் இந்த கூட்டுவலைப்பதிவுத்தளம் முக்கியமான ஒன்றாகும். புகைப்படக்கலையில் ஆர்வமிகுந்தவர்கள், அக்கலையின் நுணுக்கங்களை தாங்களாகவே கற்றுக்கொண்டு வருபவர்களின் முயற்சி. எனினும் மற்றவர்களையும் போட்டிகளின் மூலம் கவர்ந்துவருகிறார்கள். மாதாமாதம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை கூடிவருவது தளத்தின் வெற்றி. இந்த போட்டியில் பங்கேற்பதற்காகவே சிலர் பதிவுகளை தொடங்கியது சுவாரசியம்.

முதலில் எளிதான நிறங்கள், இயற்கை என்ற தலைப்புகளில் வந்த போட்டி பின் இரவுஒளியில் எடுக்கப்பட்ட புகைப்படம், பிரதிபலிப்புகள் போன்ற போட்டியாளர்களுக்கு சவாலான தலைப்புகளை நோக்கி முன்னேறி வந்திருக்கிறது. வெற்றிபெற்றவர்களின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து கூறுகிற நடுவர்கள், அந்த போட்டிகளின் மூலமாகவே, நுட்பங்களை கற்றுத்தந்து வருகிறார்கள்.போட்டிகள் தவிர்த்து படம் செய்யவிரும்பு தொடர் மூலமாக ஃபோகல் லென்த் , ஒயிட் பேலன்ஸ் ,ஷட்டர் ஸ்பீடு போன்றவைகளை விளக்கமாக அறிந்து கொள்ளமுடிகிறது.


மிகச்சிறிய அளவிலான பொருள்களை படமெடுப்பது எப்படி? லென்ஸுகளை மாற்றி உபயோகிப்பது மூலம் அவற்றை துல்லியமாக காட்டுதிறன் அதிகரிக்கிறது மேலும் பிற்தயாரிப்பு என்கிற வகைகளில் எடுக்கப்பட்ட படங்களை மேலும் மெருகேற்றும் தொழில்நுட்பங்களை எளிமையாக தருகிறார்கள்.நீங்கள் எந்த வகையான புகைப்படக்கருவி வாங்கலாம் என்பதற்கான ஆலோசனைகளும் கிடைக்கின்றது.
மொத்தத்தில் ஒரு குழுவாக இணைந்து இயங்கும் இவர்கள், பதிவில் எழுதுபவர்கள் மட்டுமில்லாமல் வாசிப்பவர்களும் பங்களிப்பவர்களுமாக மிகப்பெரிய குழுவாக முன்னேறிவருகிறார்கள். தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான முயற்சி



4. இணையத்தில் ஒரு இயற்கை போராளி

இயற்கையின் கணக்கு தெரியுமா?. மண் + மரம் = மழை , சோலைவனம் . மண் - மரம் = - மழை , பாலைவனம். மழை - மரம் = வெள்ளம் , மண் அரிப்பு. ''இயற்கை நமக்கு கற்பதற்கு நிறைய தருகிறது. நாம் கற்க மறுக்கிறோம். விளைவுகளை நாம் தினமும் செய்தியாக படிக்கிறோம், பார்க்கிறோம். காலம் தாழ்த்தாமல் கற்க ஆரம்பிப்போம்.'' என்றபடி இங்கே இணையத்தில் ஒரு இயற்கை போராளியாக உருவெடுத்திருப்பவர் பதிவர் வின்சென்ட்.
இயற்கைக்கு எதிரான பாலிதீன்களிடமிருந்து மீண்டுவர அழைக்கிறார். பசுமைப்புரட்சியால் இழந்தோம்! இயற்கை விவசாயத்தால் உயர்வோம்! என்கிற இவரின் பதிவுகள் அனைத்திலும் நாளைய உலகின் இயற்கை சூழலுக்கான நல்லெண்ணத்தை காணமுடிகிறது. மரம் வளர்க்க வங்கிகளின் கடனுதவிகள், வேளாண்மை தொடர்பான பயிலரங்க அறிவுப்புகள் போன்ற தகவல்கள் தருகிறார் .

வெட்டிவேரின் சிறப்புகள் பற்றிய அவரின் பதிவுகளில் களை என்று ஒதுக்கும் வெட்டிவேரின் இயற்கை பாதுகாப்பு திறமையையும் கைத்தொழில் பயன்களையும் எடுத்துரைக்கிறார். ஜப்பானிய இயற்கை ஞானி மாசானபு புகோகா ,கேரள அலையாத்தி காடுகளின் பொக்கூடன், நோபல்பரிசு பெற்ற ஆப்பிரிக்க வங்கேரீ மாத்தாய் ,பிஷ்னாயி இன மக்களின் மரங்களின் மீதான அன்பு, grow bag என காணக்கிடைக்கும் ஒவ்வொரு பதிவும் இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான படிப்பினைகளை தருகிறது.

மண் மரம் மழை மனிதன் இணையத்தில் ஒரு இயற்கை போராளியின் முயற்சி.. முயற்சிக்கு தோள்கொடுப்போம்.

5. புது வண்டு எனும் கதை சொல்லி

வலைப்பூவினில் தேன்குடித்து இளைப்பாற வந்த சிலநாட்களில் புதுமுயற்சி ஒன்றைத் தொடங்கி இருக்கும் புதுவண்டு இவர். அனைவரையும் போல வாழ்வில் தான் சந்திக்கின்ற நிகழ்வுகளையும், கருத்துக்களையும் ,மலரும் நினைவுகளையும் பதியத்தொடங்கினார். குழந்தையின் முதல் ஆசிரியை , தாய் என்பது அறிவோம். இன்றைய குழந்தைகளுக்கு அறிவுரைகளை வழங்குவது எளிதான காரியம் இல்லை. இதற்காக ஒரு கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார் புதுவண்டு. வண்டு சிண்டு என்ற இரு பொம்மைகளின் புகைப்படங்களை கொண்டு காட்சி அமைப்பும் பிண்ணனியில் குரல் கொடுத்தும் இயக்கி இருக்கிறார். காட்சிகளின் எளிமை, கனிவான குரல் என்று குழந்தைகளை கவர்வதாக இருக்கின்றது.
அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் என்ன ஆகும்? வண்டுவுக்கு வந்தது போல வயிற்றுவலி வரும். ஆனால் அவர் மகனின் வருத்தம் உணர்ந்து தாயாக கதையின் முடிவை மாற்றி மறுநாள் சரியாகும்படியா மாற்றிவிட்டார். கதையின் தாக்கம் அவர் குழந்தையிடம் என்ன என்பதையும் சிறு பின்குறிப்பாகத் தருகிறார்.

தமிழில் சிறுவர் இலக்கியங்களுக்கான படைப்பாளிகள் மிகவும் அரிதாகவேயுள்ளார்கள். தமிழகத்தில் அழ.வள்ளியப்பா போன்ற குழந்தைகளுக்கான எழுத்தாளர் தொடர்ந்து உருவாகதது, எங்கள் பிள்ளைககளின் துர்ப்பாக்கியமே. இலங்கை வானொலியில் மாஸ்டர் சிவலிங்கம் என்றொரு கலைஞர் இருந்தார். சிறுவர்களுக்கான கதைசொல்லும் அற்புதமான கலைஞன் அதன்பின் அந்த இடம் இற்றை வரைக்கும் நிரப்பப்படவில்லை. அந்த இடங்களின் வெற்றிடங்களை, எங்கள் வீட்டுக் கூடத்துக்கு வந்த தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துக்கொள்ள, எங்கள் பிள்ளைகள் அது சொல்லும் "எவா..அவா.." வார்த்தைகளில் பரிச்சயமாகின்றார்கள். இந்த நிலை மாற்றமுற, இத்தகைய புதுவண்டுகளின் வரவு மிக அவசியமானது. அவரின் இப்புதுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.

வாருங்கள் வண்டின் கதை கேட்க


6.இசைக்கு மயங்காதோர் யார்?
இவ்வார வலைப்பதிவின் தாரக மந்திரம் ரசிக்கத்துவங்கிவிட்டால் , ருசிக்கத்துவங்கிவிடலாம் வாருங்கள் இசையின் நுணுக்கங்கள் அறிவோம் . கர்நாடக இசை , திரையிசை , திரையிசையில் கர்நாடக இசை மேலும் இளைஞர்களுக்கு ஜாஸ் ப்ரைய்ன் ஆடம்ஸ் என ஃப்யூசன் கூட்டுப்பதிவு. திரையிசையில் காப்பியடிக்கப்படும் பாடல்களை சொல்லும் சினிமா காரம் காப்பி.வீணையில் ருத்ரவீணை ,சரஸ்வதி வீணை , கொன்னக்கோல், சாரங்கி , புல்லாங்குழல் , வயலின் போன்ற ஒவ்வொரு வாத்தியங்களைப் பற்றிய குறிப்புகள்.அவை பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பட்ட பாடல்கள்.

இசையைக்கேட்டுக்கொண்டிருக்கையில் அதன் பிண்ணனியில் நிகழ்ந்த தகவல்களையும் பரிமாறுகிறார்கள். கீர்த்தனைகள் புனையப்பெற்ற காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் கதைகளாக அறிகிறோம். ராக சாயல்களை கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோமெஸ் க்தை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம் . கண்டுபிடித்ததை பின் கேட்பதுவும் ஆனந்தம் அல்லவா? இசையில் ஆர்வம் மிகுந்தோருக்கு இனிய கலந்துரையாடலைப்போன்றதொரு இசைக்கல்வி . செவிக்கின்பம் , இதயத்திற்கின்பம் தரும் இசையின்பம் குழுவினருக்கு வாழ்த்துகள். வாருங்கள் இசை இன்பம் இரசிப்போம்



7. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
/வடிவேலுவின் திரைப்படத்தில் வரும் "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்" என்பதே இதன் விரிவு. யாருடைய மனமும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க செய்யும் வடிவேலுவின் பாணியே இவர்களின் பாணியும். யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை இழையோட வரும் பதிவுகள், மாதம் ஒரு பதிவரை அட்லஸ் வாலிபராக்கி அவருடைய நகைச்சுவை ரசனையை அனைவருக்கும் வெளிப்படுத்துவது என்பவை சிறப்பு. வ.வா.சங்கக் கூட்டுப்பதிவு நகைச்சுவைக்கெனவே ஆரம்பிக்கப்பட்டது.

வெற்றிக்கரமான இரண்டாம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு போட்டி , ப்ரம்ம ரசம் போட்டி போன்று அவ்வப்போது நடக்கும் போட்டிகளெல்லாம் வாசகர்களின் நகைச்சுவை ரசனையை ஊக்கப்படுத்துகிறது. வ.வா.சங்கத்தில் இருக்கும் சிங்கங்களில் கைப்புள்ளையையோ இல்ல அங்கே அப்பரண்டிசா இருக்கறவங்களையோ அவர்களே கலாய்த்துப் (கிண்டலடித்து) போடப்படும் பதிவுகள் நிஜ கைப்புள்ளை வடிவேலுவையே கவர்ந்த விசயங்களாகும்.உங்களுக்காக இரண்டு உதாரணச்சிரிப்பு வெடிகள்.

1.அண்ணே, அண்ணே உங்களுக்கு மூத்திர சந்தில் இருந்து போன் வந்திருக்கு
கைப்புள்ள : கட்டதுரை கட்ட்ட்ட்ட்ட்ட துரை பார்த்தியா என் ரேஞ்ச...நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை, அங்கங்கே அப்பாய்ன்மெண்ட் கொடுத்து...அடிவாங்க போன் போட்டு கூப்பிட்டு கொடுக்கிறானுங்க, நான் அவ்வளவு பிசி.... உன்னிய மதிச்சி 2 அரைவாங்கினது நான் உனக்கு கொடுத்த மரியாதை...காப்பாத்திக்க...

2.ஆமாங்க கடைசி ஓவர்ல்ல ஆறு பாலுக்கு முப்பது ரன் இருந்துச்சு... அப்போ எங்க கோச் வந்து காட்டுக் கத்தலா அடிச்சு ஆடுறா கொய்யா.... அடிச்சு ஆடுறா கொய்யா.....அப்படின்னு உசுப்பு ஏத்துனார்"
"சுத்திப் பாத்தேன்... நான் அடிக்கிற அளவுக்கு யாரும் பக்கத்துல்ல இல்ல... எதிரி டீம்ல்ல எல்லாருமே வாட்டச் சாட்டமா இருந்தாங்க.. யோசிச்சேன்... யார் அடிச்சாலும் சும்மா அசால்ட்டா தாங்குற ஒரே மனதைரியம் கொண்ட ஒப்பற்ற மனுசன்.. எங்கத் தல தான் அதான் வேகமா ஓடிப் போய் பெவிலியன்ல்ல குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த எங்கத் தல கன்னத்துல்ல பளேர்ன்னு ஒரு அரை விட்டுட்டு வந்து ஆடுனேன்... நாங்க செயிச்சுட்டோம்.. ஆனா எங்கத் தல கண்ணீர் விட்டு அழுததை டிவியிலே திரும்ப திரும்ப பாக்கும் போது தான் மனச் சங்கடமாப் போயிச்சுங்க".சங்கத்தச் சிங்கங்களைச் சந்திக்கலாம் வாங்க..



8.கேன்சருடன் ஒரு யுத்தம்
மார்பகப்புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டு நோயின் துன்பத்தை, தீவிரத்தை, காரணங்களை வலையுலகில் பகிர்ந்து கொண்டு வந்த பதிவர் அனுராதா ஆகஸ்ட் 28, 2008 அன்று நோயின் துயரிலிருந்து விடுபட்டார். அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.அனுராதாவிற்கு புற்றுநோய் வந்தபோதினில் அவருக்கோ அவருடைய துணைக்கோ நோயைப்பற்றிய எந்த ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
2003 ஆம் ஆண்டிலிருந்து நோயின் தீவிரத்தினால் பலவாறும் துன்பங்களை எதிர்த்துப்போராடியதோடு இணையத்தில் அவற்றை தொடர்ந்து குறிப்புக்களாக எழுதி சேகரித்தும் வந்தார். அவருக்கு மார்பகத்தை அகற்ற விருப்பமில்லாததால் மாற்று முறைகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இடையில் மார்பகப்புற்றுநோய் கல்லீரலுக்கும் பரவியது, சர்க்கரை நோய் இணைந்து கொண்டது.

மருத்துவமனை மருத்துவனையாக வெவ்வேறு மருத்துவர்களை கலந்தாலோசித்து நோயின் ஒவ்வொரு மூலத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த அனுராதா ,மார்பகத்தை அகற்றாமல் 5 வருடங்கள் போரடிய நிலையில் , மற்றவர்கள் கருத்து பற்றிய கவலையின்றி மார்பகத்தை அகற்றிவிட்டு போராடி இருந்தால் மேலும் பலநாட்கள் நம்முடன் இருந்திருக்கலாமோ என்ற ஒரு கலக்கம் சிலர் மனதில் தோன்றுகின்ற கருத்தாக இருக்கின்றது.

கேன்சருடன் ஒரு யுத்தம் பதிவில் அனுராதா எழுதி இருக்கின்ற சிகிச்சைகளின் விளக்கங்கள் நம்மை கதிகலங்க வைப்பதாகவும் அவற்றின் பின்விளைவுகள் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன. ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலமாகவும் சிடி ஸ்கேன் மூலமாகவும் புற்று பரவுவதை குறிப்பிட்டார். மூளைக்கும் புற்று பரவிய பிறகு அவர் சொல்லச்சொல்ல அவருடைய கணவர் குறிப்புக்களை வலையில் பதிவிடும்படி செய்தார். மே மாதத்தில் அவர் விதியை வெல்லும் நிலைக்கு வந்துவிட்டதாக பதிவிட்டிருந்தார் .. ஆனால் விதியை யாரால் முன்கூட்டி அறிய இயலும்? அனுராதாவின் குறிப்புக்களை புத்தகமாக்கும் ஆசையை நிறைவேற்ற அவரின் கணவர் மற்றும் வலைப்பதிவர் நண்பர்கள் இணைந்து செயல்பட இருக்கிறார்கள்
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-50-40/2125----2

9. சமையலுக்கு என்ன தேவை?

சமையல் குறிப்பு - தேவையான பொருட்கள் - ஒரு ஸ்பூன் இனிய அன்பான மனம், ஒரு ஸ்பூன் ரசிப்பு தன்மை, ஒரு ஸ்பூன் கோப தாபமில்லா அமைதியான மனம். என்ன இது! என்று பார்க்கிறீர்களா? இது தான் முக்கியமான சமையல் குறிப்பு. சமையலுக்கென்ற கூட்டு வலைப்பதிவான சமையல் திரட்டியில் தான் இப்படிப்பட்ட முக்கியமான விசயங்களைத் தருகிறார்கள்.
சுண்டகீரை , பழங்கஞ்சியும் உண்டு. திருநெல்வேலி சிறப்பு சொதியும் உண்டு. ஈழத்து வாழக்காய் சம்பலும் உண்டு. சுண்டைக்காய் கொழம்பு மண்பாண்டத்தில் செய்வது எப்படி? புளியோதரை தெரியும் தக்காளியோதரை தெரியுமா? இறால் வஞ்சிரம் என்னவகையானாலும் சுவைகூட்ட குறிப்பிருக்கிறது. வாரத்திட்டம் என்கிற திட்டத்தின் கீழ் தயிர் ஐயிட்டங்கள், இனிப்பு ஐட்டங்கள், பதிவர்களின் மனதுக்கு பிடித்த ஐட்டங்கள்.

நீங்கள் தனிச்சமையலா? பிடியுங்கள் அவசர ரசம்.அதிலும் பலவகை ரசம்.இடியாப்ப பிரியாணி , தக்காளி சஞ்சிகை, கலர்புல் மிண்ட் ரைஸ் , வினிகர் கத்திரிக்காய். கேட்க கேட்க நாவூறுகிறதா?தமிழ் சமையல் வலைப்பூ திரட்டியை எட்டிப்பாருங்கள் , சமைத்துப்பாருங்கள்.

10.ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

இவ்வாரத்திய பதிவு , விசய ஞானத்தைப்பகிர்வது மட்டுமின்றி சுள்ளென்ற கேள்விகளையும் பகிர்ந்து வைக்கும் பதிவு .மூகமூடியற்ற நிஜமுகத்தைக்காட்ட விரும்புபவராகவும் , தான் வாழ்நாளில் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் சிந்திக்கவைத்த சில கேள்விகளை ஏன் இப்படி? என்று கேட்டு நம் மனங்களையும் திடுக்கிட வைக்கிறார்.
சில வேளைகளில் நீங்களும் அந்த நிகழ்வுகளை வாழ்வில் சந்தித்திருக்க வாய்ப்புண்டு. அப்போது உங்கள் மனம் ஒரு பாதையிலும் வாழ்வின் சிக்கல்கள் உங்களை வேறு பாதையிலும் செலுத்தி இருக்கலாம்.

சாக்கடை மூடிகள் தயாரிப்பில் நம்மவர்களின் பாடுபற்றி அறிவீர்களா? ஆண்களுக்கும் அப்பாவாகும் போது மன அழுத்தம் வரும் என்பது உண்மையா? உணர்ந்திருக்கிறீர்களா? ஒருகாலத்தில் நாம் இயற்கையாக அனுபவித்த உணவுப்பொருட்களை இன்று ரசாயன உரங்களால் இழந்துவிட்டு அதிக காசுகொடுத்து ஆர்கானிக் காய்கறிகள் உண்பது ஏன்? உடல் உறுப்பு தானம் என்றால் பதறுவது ஏன்? முதுமை சாபக்கேடா? கருக்கலைப்பு சட்டம் இதுநியாயமா?

உலகில் பலபாகங்களில் இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நிகழ்ந்த நிகழ்வுகளைக்கூறி இன்னமும் நாம் படிப்பினை பெறவில்லையே ஏன் இப்படி? என்று பல கேள்விக்குறிகளை சுற்றிலும் சுழலவிடுகிறார்.ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. வாழ்வில் உண்மையை உணர கேள்விகள் கேட்க பழகுங்கள்.

October 20, 2011

அன்றொரு காலத்தில்,..



இடுப்பொடிய சுடாதேயம்மா
அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு
குளிக்கமறுப்பவன் முன்னால் எழுப்பச்சொல்லி
முறையிடுவான்

காசைக்கரியாக்க ஆசையோடு
அட்டவணையில் குறிப்பெடுப்போம்
வாழ்வினிமைக்கு வாழ்த்தி
மருந்தோடு வருவாள் ஆச்சி
உனக்கெத்தனை எனக்கெத்தனை
பங்கிட்டோம் பட்டாசுகளை
சேர்ந்தே குதூகலிக்க

வரிசை வரிசையாய் ஆசைகள்
கொளுத்தி வைத்து
பூக்கிண்ணமாய் சிதறிக்கொண்டிருந்தன

இன்று
பக்கத்திற்கொன்றாய்
தெறித்த பட்டாஸாய்
வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
எவருக்குமில்லை..

வல்லமை இதழுக்காக எழுதிய அந்தக்கால தீபாவளிய மிஸ் செய்யும் என் கவிதை

October 17, 2011

பனிஊழிக்காலங்கள்

தோல்வி

சிறுமிகட்டிய
சின்னச் சின்ன மணற்கோபுரங்கள்
நான் ஒளித்த ஈர்க்குச்சியை
ஒவ்வொருமுறையும்
கண்டுகொண்டாய்.
ஒருமுறைகூட விளையாட்டாய்
தோற்கத்தெரியாதா?

சில வார்த்தை ஒளிக்கிறேன்
பெரியவள்
ஒருமுறை கூட நீ அதன் பொருள்
அறிந்துகொள்ளவில்லை

-------------------------------------------------------


முடிவு

நூற்றாண்டுகளாய்
உறைந்துகொண்டிருந்த பனி
உருகிக்கொண்டிருந்தது
வெளிகாட்டும் படிமங்கள்
நிகழ்ந்த
பிறப்பும் இறப்பும்
காட்டிக்கொண்டிருக்க
னி ஊழிக்கு காத்திருக்கும்
குளிர் தேடியலையும்
உயிர் ஒன்றின் காலடியில்
எங்கோ
நீர் உயர்ந்துகொண்டிருந்தது

------------------------------------------------
 வழி

காரணங்கள் உருவாக்க
அவசியமிருக்கவில்லை
இல்லாத ஒன்றை
இருக்கின்றதென்றும் சொல்லவில்லை
இல்லாததற்காக
ஆகாத்தியமும் தேவையில்லை
நினைத்துக்கொண்டாற்போல
மறந்துகொள்வதற்கு
கோபத்திற்கான காரணங்களாவது வேண்டும்
பெரியவிசயமில்லை
வரிகளுக்கிடையில் படிக்கலாம்
கிடைக்காமலா போகும்
-----------------------------------------------------------

நாடகம்

பாடப்புத்தகத்தின் பக்கங்களில்
கிரீடம் வைத்த அரசனுக்கு
ஒரு கண்ணைக் கருப்படித்தாள்
சிலபல தலைகளை வரைந்தாள்
பயங்கரனைப் போல
ஆக்கிவிட்டோமா என்று
தூரநிறுத்திப் பார்த்துக்கொண்டாள்
முடிந்தவரை
அவனே வந்தாலும்
தன்னையறிய முடியாதபடிக்காய்
அதை
ருமாற்றிக்கொண்டிருந்தாள்

October 14, 2011

வானவில் இற்றைகள் அக்டோபர் 2011

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னும் கிரிக்கெட் பிடிக்கும் விளையாடுவான் பேசுவான் . ஒருமுறை நேராக என் மூக்கைப்பார்த்து பந்தை இறக்கி, அதிலிருந்து ”அம்மா உங்கள் மேல் அடிக்கமாட்டேன் வாங்க விளையாடலாம்” என்பான். இறுதிப்போட்டியில் வெற்றிக்கோப்பையைப் பெற்ற உடன் தெருமுனையில் டோல் அடித்து குழு நடனங்கள் நடந்தது. இதுநாள் வரை பூஸ்ட் க்கு கிடைத்த கிரிக்கெட் மட்டைகளை வைத்து விளையாண்டு கொண்டிருந்தவர் புது மட்டைக்கு அடிப்போட்டார். நான் மறுக்க அப்பா வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். அவர்கள் அடுத்தவர்களுடையது வைத்து விளையாடிய நினைவு வந்து மகனின் கனவை நினைவாக்கி விட்டார்கள். அது கிடைத்ததும் அடுத்து இந்தியா டீசர்ட்டுக்கு அடிபோட்டார். அது இவர் அளவுக்கு கிடைக்காததால் ஒருவருசம் போகட்டும் உடம்பைத் தேத்தப்பா என்று சொல்லிவைத்தேன்.

கடைக்கு செல்லவேண்டியதினத்தில் சீக்கிரமே எழுந்து அம்மா அப்பாவுக்கு குட்மார்னிங்க் வைத்து எல்லாரையும் கடைக்கு தயாராகச்செய்து ..என்ன ஒரு நல்லபையன்.

புது கிரிக்கெட் பேட் வாங்கியபின் விளையாட விடாமல் ஒரு நடன அரங்கேற்றம் பார்க்க அழைத்துச்செல்ல ஒரே அழுகை . விடுமுறையில் விளையாட விடவில்லையே .” நாங்கள் சிறுபிள்ளையாக இருந்தபோது விடுமுறை நாட்களில் கோயிலுக்கு வார வழிபாடு என்று அழைத்துச் செல்வார்கள். (கொஞ்சம் பெரிசானதும் நாங்கள் குறைத்தோம் தான்) காரிலா போனோம்? நடந்து போனோம்” என்று வழக்கமான அறிவுரையைக் கேட்டுக்கொண்டிருந்தான். டீவி இல்லை , கார் இல்லை,ஃபிரிட்ஜ் இல்லை என்று சொன்ன கதைகளை அடிக்கடிக் கேட்டுக்கேட்டு கடுப்பாகி

அப்பறம் எப்படித்தான் வாழ்ந்தீங்க?

”ஏன் அது எல்லாம் இல்லாம வாழமுடியாதா என்ன? முடியும்டா?
இருக்கிற அத்தனை விளையாட்டு சாமன்களையும் வைக்க இடமில்லை. மேலும் மேலும் கேட்பதை நிறுத்து ” என்று அடுத்த அறிவுரை..... அவன் படுத்து தூங்கிவிட்டான், பின்சீட்டில்...
----------------------------------
தலைமுடியை எப்பப்பாருங்க க்ரோஷா பின்னல் போல சுற்றிக்கொண்டே இருப்பான். முன் பக்கம் செய்வதால் யாரிடமாவது பேசும்போது அப்படி சுழட்டுவது பார்க்க நன்றாக இல்லை.  ஏண்டா அப்படி செய்கிற  என்று கேட்டால்  அது மகிழ்ச்சியைக்கொடுப்பதா சொல்வான் ( மஜா ஆரஹாஹெ )

முடிவெட்டிவிட்டு வந்த நாள் ....உடையில் எதோ ஒரு நூலைப் பிடித்து அதே போல சுற்றிக்கொண்டிருந்தான். என்னடா அதை விட்டு இப்ப இதா என்று கேட்ட என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அதைக்கேட்டதும் எனக்கு இதயமே வலித்தது. என்னவா?

‘ அம்மா இதும் எனக்கு மகிழ்ச்சியா இருக்குன்னு சொன்னா நீங்க எடுத்துடுவிங்களா..? ‘

நான் என்ன அவன் மகிழ்ச்சியைவா பிடுங்கறேன். ஹ்ம்.. :(  உன்னை நாலு பேர் ஸ்மார்ட் பாய் ந்னு அப்பத்தானே சொல்வாங்க..இப்படி முடியை சுத்திட்டிருந்தா என்ன பையன் இவன்னு சொல்வாங்களே அதுக்குத்தானே சொன்னேன் என்று புரியவைக்க முயற்சித்தேன். ஆமா முயற்சித்தேன்னு தான் சொல்லனும். முடிந்ததா என்று தெரியல.

-------------------------------
புது புது ஹிந்தி அல்லது ஆங்கில வார்த்தைகள் தெரிந்துகொண்டால் அது ஒரு வாரகாலம் அதே வைத்து தான் பேசுவது வழக்கம். பெஹோஷ் மயக்கம் என்று ஒரு வார்த்தை தெரிந்தது. அம்மா சீக்கிரம் வாங்க இந்த கேம் ல நான் எவ்ளோ பாயிண்ட் எடுத்திருக்கேன் தெரியும..? ம் சொல்லுப்பா.. கேட்டா நீங்க பெகோஷ் ஆகிடுவீங்க.. என்று சொல்லிவிட்டுத்தான் பாயிண்ட் எவ்ளோ என்று சொல்வது. இப்போதெல்லாம் நான் கூப்பிட்டால் சீக்கிரம் சொல்லு பெகோஷ் ஆகி விழனும்ல்லன்னு சொல்லிட்டு கீழே விழப்போகும் மாதிரி நிற்பது கண்டு அவனுக்கு ஒரே வெட்கம். ரொம்ப அதிகமாப்போனா அம்மா ந்னு ஒரு கோவம்..
-------------------------------------------
महानो का यह पवित्र देश‌
अब क्यो बदल रहा है अपना वेश?
स्वतंत्र तो हो गये है मगर,
कब छाएगा एकता का अम्बर?
இது என் மகள் அவளோட பள்ளி கையெழுத்துப் பத்திரிக்கைக்காக எழுதியது.

ஹிந்தியில் கவிதை வேணும் என்றதும்.. எல்லாரும் இவளை கைகாட்டி இருக்காங்க..நான் ஆங்கிலத்தில் தான் எழுதுவேன் என்று சொன்னதும்..டீச்சர் அதெல்லாம் ஹிந்தியிலும் வரும் ட்ரை செய்யு என்று சொல்லிட்டாங்களாம்..
வந்து என்ன எழுத எழுத ந்னு தொணத்தொணத்தா எழுதுடி எதயாச்சும் எழுதிட்டு காமி சொல்றேன்னேன்..

அப்பறம் எதோ எழுதினா. நம்ம தேசம் , இதோட மன்ணுன்னு ஒரே பெருமையா இருந்தது கவிதையில்..இதே மாதிரி தானெ எல்லாரும் எழுதிட்டு வருவாங்க..கவிதை எழுதினா அதுக்கு உண்மையா இருக்கனும்.. எழுதனுமேன்னு இருந்தா எழுதாதே வரலைன்னு சொல்லிடு டீச்சருக்குந்னு சொல்லிட்டேன்.. அதோட வராதுனு கவலையில் முகத்தைத் தூக்கிவச்சிட்டிருக்காதே ..
இதை எடுத்துட்டுபோ இன்னும் ஒரு நாள் டைம் கிடச்சா வேற எழுதுன்னேன்.. அதே மாதிரி வகுப்பில் எல்லாரும் அதே மாதிரி எழுதி இருக்கவும் திரும்ப வந்தா..

என்ன எழுதனுமோ அதை ஆங்கிலத்தில் எழுது அப்பறம் அதுக்கான வார்த்தைய ஹிந்தியில் தேடுன்னேன்.. கவிதைய சமைக்கச்சொன்னேன்..:)) திருத்தி எழுதப்பட்டது ..
டீச்சர் இதை நீதான் எழுதினியா மண்டபத்துல வாங்கிட்டுவந்தியான்னு எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் கேட்டுக்கிட்டாங்களாம்..:))

மகான்களால் நிறைந்த இந்த புண்ணியதேசம்
ஏன் கலைக்கிறது அதன் வேஷம்
சுதந்திரம் வந்துவிட்டது ஆனால்
எல்லாரும் சமமென்ற வானம் விரிவதெப்போது ?
- இது நான் என் அறிவுக்கு அதை மொழிபெயர்த்திருக்கிறேன்..
---------------------
தூங்கிட்டிருந்தவளை எழுப்பி ’அன்ஷுல் நம்பர் சொல்லும்மா..’
’போன்ல தானேடா இருக்கு.. ’
’அன்ஷுல் 4 மணிக்கு என் வீட்டுக்கு விளையாடவா..’
6 மணிக்கு ’அன்ஷுல் உன் வீட்டுக்கு போற டைமாகிடுச்சுல்ல..வா நானும் உன்கூடவே உன் வீட்டுக்கு வரேன்..’

’அம்மா அன்ஷுலுக்கு அவன் வீட்டுக்குப்போனும் கொண்டுவிடு..
நானும் அப்படியே போறேன்..’
’டேய் யாருடா திரும்ப 7 மணிக்கு கூட்டிடுவருவா.. ’
’நீதான்மா..’
நானில்லைன்னு தலையாட்டிட்டிருக்கும்போதே..
கிரிக்கெட்ல அவுட் செய்துட்டா பவுலர் செய்ய்ரமாதிரி எல்போ மடக்கி.. எஸ் ந்னு கத்திக்கிட்டே

‘ நான் உன் வீட்டுக்கு வரேன் அன்ஷுல்..’
----------------------------------------------
’தாயே பராசக்தி என்னைக்காப்பாத்தும்மா ‘- நான்..

என்னைத்திட்டரதுக்குத்தானேம்மா சக்தி கேக்கரே.. என்னை அடிக்கிறதுக்குத்தானே - குட்டிப்பையன்

அவ்....
----------------------------
ஷாப்பிங் போன இடத்துல குட்டிப்பையன் சொன்னதை நான் வாங்கலைன்னு , ப்ளே ஏரியால விளையாட விடலைன்னு ஒரே சண்டை.. நிருலாஸ் ல சாப்பிடப்போனா ,அங்க வரைக்கும் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு.. பேசினா பேசாம..நான் உக்காந்திருக்கும் டேபிளில் எதிர்சேர்ல கூட உக்காரமாட்டானாம்.. உன் கூட பேசமாட்டேன் ந்னு சொல்லிட்டு எங்க டேபிள் ,அத்தை மாமா உக்காந்திருந்த டெபிள் எல்லாம் சுத்திட்டு அப்படியே திரும்ப வந்து , நீங்க எப்பவும் என் பேச்சுக்கேக்கறதில்ல., எப்பவும் திட்டறீங்கன்னு சொல்லிக்கிட்டே மடியில் ஏறி உக்காந்தாச்சு..

ஏ ஒருத்தன் என்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னானே அவன் எங்கே ?
இப்ப அவன் அவ்வ்..:))


October 4, 2011

காற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை






இந்த முறை கொலுவில் தீம் டாய்ஸ்டோரி.. சோனி டீவியில் இருந்து டாய்ஸ் எல்லாம் வெளியே வருகிறது.. எல்.ஜி டீவி தான் ந்னு குட்டிப்பையன் ஒரே அழுகை.. அது எப்படி? நாம ஒரு ‘சோனி’(க்)குடும்பம் ந்னு சொல்லி .. நானும் பொண்ணும் ஒரே பிடியா , ”சோனி எல் சிடி” டீவி மாடல் தான் செய்தோம். அதுல இருந்து பாருங்க ஒரு டினோசர் வெளிய வந்திட்டிருக்கு.. ட்யூப்லைட்.. டீவி ,ஷோகேஸ், பக்கத்துல சின்ன பியானோ, பூந்தொட்டி, எல்லாம் பெரிசு செய்து பார்த்துக்கோங்க..:)

முன்னமே வெளிய வந்த பொம்மையெல்லாம் நின்னிட்டிருக்கு.. சுண்டலை எல்லாம் போட்டோ எடுக்கல இந்த முறை.. இன்னிக்கு சுசியமும் , பட்டாணி சுண்டலும்.. எல்லாருக்கும் வச்சிக்கொடுத்தது டீ கப்ஸ் பீங்கானில்.. எல்லாத்தையும் படம் எடுத்துப்போட ரொம்ப சோம்பலாகிடுச்சு.... அம்மா ஸ்கைப்ல குழந்தைங்க பாடியதை எழுதி இருக்காங்க..நானும் ஊருல இருக்கும் கொலுவுக்கு திருப்புகழ் பாடினேன்.. அம்மா பூஜை செய்யும்போது பாடும் ‘ அன்னவாகன தேவி ’பாடினேன் அவங்க கூடவே..

அமரிக்காவில் இருக்கும் தம்பிக்கு ஃபேஸ்டைம் ல கொலுவைக்காண்பிச்சேன்.. அங்கருந்தே
நாத்தனார் மகளும் தம்பி மகனும் எங்கள் கொலுவுக்கு பாடினார்கள்.

”காற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை”

October 2, 2011

திருத்தம்




திருத்தம் 



உணவாக்க விழையாத இழைகளை
வட்டத்துக்குள் சிக்காமல்
குறுக்கில் நடந்து கடக்கிறாய்
இழைகளை
உண்டு செரிக்கத் தயாராகிறேன்
--------------------------------------------



எல்லாம் அறிவாய்
வேண்டி நிற்பதும் அறிவாய்
காட்சி எப்போது?
அல்லது யாருக்கு?
கர்வம் மிக்கது எது?
கசிந்துருகுவது எது?
கடமைக்காய் இருப்பது எது?
கடந்து போவது எது?
கல்லாய் நினைப்பது எது?
துல்லியமாய் அறிவாய்
அறியாதது
நீ யாரென்பது மட்டும்.
-----------------------------
காதல் எழுதுபவர்கள்
காதலில் இருக்கிறார்கள்
மரணம் எழுதுபவர்கள்
மரணித்துக்கொண்டும்
கருணை எழுதுபவர்கள்
கசிந்துருகிக் கொண்டும்
இவ்வாறெனில்
எவ்வளவு எளிது
இவ்வுலகம்.

-------------------------------

கூகிள் பஸ் பற்றி அறிந்தும் ரொம்ப நாள் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.. டிவிட்டர் அளவுக்கு யோசிக்கவைக்காமல்.எவ்வளவும் தட்டச்சலாம்.. என்பதால் அங்கே அவ்வப்போது தோன்றியதை எழுதி வந்தேன். அதனை இங்கே சேமித்து வைக்கிறேன்.

-----------------------------

September 2, 2011

ஸெர்யோஷா என்றொரு சிறுவன்

கள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்கும் ஸெர்யோஷா என்கிற சிறுவனுக்கும் முகிழ்கின்ற சிறு நேசத்தின் வாசம் இக்கதை எங்கும் வீசி நிற்கிறது.ஸெர்யோஷாவின் வாழ்வில் சிறிய மகிழ்ச்சிகளும் உண்டு. வாட்டும் கேள்விகளும் உண்டு. வாசிப்பவரை சில நேரம் குழந்தையாக்கி மகிழவைக்கிறார் வேரா பனோவா. சில நேரம் ஏக்கத்தில் திண்டாடவைக்கிறார். நீங்கள் மீண்டுமொருமுறை குழந்தையாக வாழ்ந்து பார்க்க நேரிடலாம்.

 அறிமுகக்காட்சியிலேயே “பெரியவர்கள் சூனியக்காரியைப் பற்றி கதைகள் படித்துவிட்டு அதே மூச்சில் “ ஸெர்யோஷா , சூனியக்காரிகள் உண்மையில் இருப்பதில்லை “ என்று சொன்னால் பொதுவாக இந்த புத்தகங்களை நம்புவது எப்படியாம்? “ என்று உள்ளுக்குள் பெரிய சிந்தனையாளனாகத்தான் நமக்கு அறிமுகமாகிறான்.

 ஸெர்யோஷா நேர்மையான கீழ்படிதலுள்ள எளிமையான சிறுவன். பெற்றோராக இருந்தால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவராக இருக்க விருப்பமுண்டாக்க போதுமான குணங்கள் அவனுக்கு இருக்கிறது. நண்பர்கள் குழுவுடன் ஆனந்தமாக பொழுதைக் கழித்தபடி இருந்தவனைப் பார்த்து , தாய் “ நம் வீட்டில் ஒரு அப்பா இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது ‘ என்று சொல்லும்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லையெனினும் அம்மாவுக்கு அப்படி தோன்றுகிறது என்றால் நாம் அதை ஆமோதிப்பது நல்லது என்ற தெளிவு இருக்கிறது.

 அவனால் சரியாக எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குழந்தையின் மன அலைகளை நாம் அறிவது எவ்வாறு? பொதுவாகவே பலரும் மரத்தை நறுக்கி நறுக்கி போன்சாய் செய்வது போல குழந்தைகளை சொல்பேச்சு கேட்க வைப்பதில் கவனமாயிருந்துவிடுவதுண்டு. தன் வளர்ச்சியாக அவர்களின் சிந்தனை போகும் பாதையைப் பற்றி பெரியவர்கள் அறிவதுமில்லை முயல்வதுமில்லை.

அப்பா இல்லாவிட்டால் மோசம் தானே என்று கேட்டுவிட்டபின் தான் அப்பா இருப்பது மோசமா இல்லாதிருப்பது மோசமா என அவன் சீர்தூக்கிப்பார்க்கிறான். போரில் இறந்துபோன அப்பாவின் புகைப்படத்தினை மட்டும் பார்த்து அவனால் அன்பு கொள்ளமுடியவில்லை. எப்படியும் நமக்கு நன்மை செய்பவராய் இருப்பார் என்ற நம்பிக்கையில் புது அப்பாவின் வரவை எதிர்கொள்கிறான்.

குழந்தைகள் நேரடியாகக் கேட்டு தெளிவுபடுத்திகொள்வார்கள். ஒளிவு மறைவில்லை. ’நீ என்னை இடுப்புவாரால் அடிப்பாயா’ என்று புது அப்பாவிடம் நேரடியாகக் கேட்டு தெளிந்து அமைதியுறுகிறான். அது போல தங்களிடம் சொல்வது போல் பெரியவர்கள் செயல்படுகிறார்களா என்று கவனிப்பதில் சமர்த்தர்கள். ஞாயிறு புதியசைக்கிள் வாங்கித்தருவதாக ஒப்புக்கொண்ட பின் அதை நிறைவேத்தி தருகின்ற புது அப்பாவான கொரஸ்தல்யோ நேர்மையானவன் . ஸெர்ன்யோன்ஸாவின் உணர்வுகளை மதிப்பவன் என்ற ரீதியில் அவன் மனதில் இடம்பிடிக்கிறான்.

பெரியவர்கள் தேவையற்ற வார்த்தைகளை கொட்டி இறைப்பதாக உணர்கிறான் ஸெர்யோஷா . தேநீரைக் கொட்டியதற்காக வருத்தப்படும் அவனை தேவையற்ற வார்த்தைகளால் அத்தை அர்ச்சிப்பது போன்றோ ,அம்மா அவன் எல்லாவற்றிற்கும் தயவு செய்து என்று இணைத்து பேசவேண்டும் என்பதற்காக படும் அவஸ்தைகளோ அற்ற கொரஸ்தல்யோ வித்தியாசமானவனாகத் தெரிகிறான்.

மிட்டாய் இருப்பதாக ஏமாற்றி தாளை தருகின்ற பெத்யா மாமாவை முட்டாள் என்று விமர்சித்தது சரியானது என்றும் அவன் ஆட்களை புரிந்துகொள்ளக்கூடிய அறிவாளி என்றும் கொரஸ்தல்யோ சொல்கிறபோது நன்றியுடையவனாகிப் போகிறான். ’சண்டைக்குப் போவாய் அப்போது காயங்களை கண்டு அழுது நிற்பாயோ பையனே’ என்கிற போது நெஞ்சு நிமிர்த்தி வீரனாகிறான். கொரஸ்தல்யோவின் வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் அவன் உருக்கொண்டுவந்தான்.

கொள்ளுப்பாட்டியின் இறுதிச்சடங்கில் “ வழியனுப்ப வந்தாயா உனக்கு என்ன அவள் மேல் பிரியமா ?”என்று கேட்கும் தோஸ்யா அத்தைக்கு .. ”பிரியமில்லை” என்று தானே சொல்வான். இனி அவள் இல்லாத வீட்டில் அவன் விருந்துண்ணப் போனால் மிரட்டவோ குற்றம் கண்டுபிடிக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பதில் அவன் எளிய உள்ளம் அமைதியுறுகிறது. எல்லாரும் இறப்பார்கள் என்றாலும் நீ இறக்கமாட்டாய் என்று சொல்கிற தந்தையை அவன் நம்புகிறான்.

கொரஸ்தல்யோவின் பண்ணைக்கு செல்லும்போது அவன் ஏன் தினமும் அவசரமாக பண்ணைக்கு ப் போகிறான் . அவன்வராவிட்டால் வேலையாட்களுக்கு இன்னின்னது செய்யவேண்டுமென்று எப்படித்தெரியும் என்று உணர்கிறான். பண்ணையாளின் மேல் கோவம் காட்டினாலும் வேலையை விட்டு நீக்காத அவன் செய்கையைக் கண்டு சர்வ வல்லமை மட்டுமல்ல இவன் நல்லவனும் கூட என்று பெருமிதம் கொள்கிறான்.

விண்மீன்களைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் அறிந்துகொண்ட நாட்களில் அவன் சிந்தனை நீள்கிறது. “செவ்வாய்கிரகம் பெரியதாக இருந்து அதில் மனிதர்கள் வசிக்கலாம் என்றால் ம் ஒரு வேளை என்னையே போன்ற பையன் இதே போன்ற சறுக்கு வண்டியுடன் அங்கே இப்போது நின்று கொண்டிருக்கலாம், ஒருவேளை அவன் பெயரும் ஸெர்யோசாவாக இருக்கலாம்’ என்று வியந்து போகும் அச்சிறுவன் இது போன்ற சிந்தனைகளை பகிர்ந்தால் ஏனையோர் கேலி செய்வதுண்டு. ஆனால் கொரஸ்தெல்யோவ் அவனை மதிப்பான். “அதெற்கென்ன நடக்கக்கூடியதுதான்’ என்பான்

மற்றொரு குழந்தையை தாய் பெற்றெடுக்க இருக்கையில் தந்தையிடம் தனக்கு பையன் வேண்டுமென்பது விருப்பமென்றும் பக்கத்துவீட்டு பெண்ணைப்போல தான் அக்குழந்தையை பாதுக்காக்க கடமையானவனாகிப் போவானோ என்றெல்லாம் அவன் சிந்திக்கத்தொடங்குகிறான். எல்லா ஏற்பாடுகளையும் செய்கிற தாயும் தந்தையும் இன்னமும் மருத்துவமனையிலிருந்து குழந்தையை கொண்டுவரத்தாமதப்படுத்துவது தான் ஏனென்று அவனுக்கு புரியவில்லையாம்.

”குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது தெரிந்ததுதான். அவை ஆஸ்பத்திரியில் விலைக்கு வாங்கப்படுகின்றன. ஒருத்தி ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கினாள். எதனாலோ அவள் முழுவதும் ஒரே மாதிரியான குழந்தைகளை வாங்கினாள். ஒரு குழந்தையின் கழுத்தில் மச்சம் இருக்கிரதாம். இன்னொன்றுக்கு மச்சம் கிடையாதாம். இந்த மச்சத்தைக் கொண்டுதான் அவள் குழந்தைகளை அடையாளம் கண்டு கொள்கிறாளாம். ஒரே மாதிரிக் குழந்தைகள் அவளுக்கு எதற்கோ தெரியவில்லை. வெவ்வேறு விதமான குழந்தைகளை வாங்கி இருக்கலாமே “

நண்பன் வாஸ்யாவின் மாமாவைப்போல அனைவரும் பச்சைக்குத்திக்கொள்கையில் தானும் பெரியவன் என்று நிரூபிக்க பச்சைக்குத்திக்கொண்டதில் இருந்து அவனுக்கு உடல்நலமின்றி போகின்றது. படுக்கையும் வீடே கதியாகவும் இருந்த சிறுவனுக்கு சிறைச்சாலையிலிருந்து வருகின்ற வேற்றாள் சுவாரசியத்தையும் கேள்விகளையும் கொண்டுவருகின்றான். அவனிடம் பாஷா அத்தை காட்டுகின்ற வேற்றுமைகள் அவனுக்கு மனிதரிடத்தில் நல்லவன் கெட்டவன் இன்னும் இன்னும் பல வேறுபாடுகள் இருப்பதை குழப்பத்தோடு அறிகிறான். அலமாரித்தட்டில் இருக்கும் இரண்டு வகை சோப்பில் , ரோஜா நிற சோப்புக்கு பதில் பழுப்பு நிற சோப்பால் கைகழுவிக்கொள்ளும் வேற்றாளைப் பார்த்து இப்படி யோசிக்கிறான்.

“ ரோஜா சோப்பினால் கைகழுவிக்கொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தெரியாதோ அல்லது மேஜை விரிப்பையும் இன்றைய சூப்பையும் போலவே அவனுக்கு ரோஜா சோப்பும் ஆகாதோ தெரியாது. “
சிறைக்கு சென்றவன் கெட்டவன் என்றாகிறது. ஆனால் அவனுக்கு இரக்கம் காட்டுவது எதற்கு என்று குழம்புகிறான். திருடினால் பிடிப்பார்கள் என்று தெரிந்து ஏன் திருடினான். பள்ளியில் புத்தகம் திருடும் சிறுவனுக்கு சிறை கிடையாதென்றால் ஏன் ? அவன் கேள்விக்கு எரிச்சலுறும் அம்மாவிடம் கொரெஸ்தெல்யோவ் பின்பு விளக்குகிறான்.

”அவன் என்ன வேண்டுகிறான் தெரியுமா ? அவனுக்கு ஆமாம் அல்லது இல்லை என்ற பதில் தான் வேண்டும் இடைப்பட்ட பதில் அவனுக்குப் புரிவதில்லை.” குழந்தையின் அனைத்துக் கேள்விக்கும் பதில் தரவேண்டாம் என்று நினைக்கின்ற அம்மாவிற்கு தெரியாமல் தந்தை அவனுக்கு பதிலளிக்கத்தான் செய்கிறார்.

கதை சொல்லக் கேட்ட மாத்திரம் பெரியவர்களுக்கு வந்துவிடுகின்ற வேலையைப்பற்றியும் அவனுக்கு மிக வருத்தமுண்டு. எப்படியோ கதை சொல்ல வராத கொரெஸ்தெல்வைக்கூட ஒத்தாசை செய்து அவன் கதை சொல்லப்பழக்கிவிட்டிருந்தானாம். இத்தனை ஒட்டிப்பழகி அவன் உணர்வாகிப்போன தந்தையையும் தாயையும் அவன் பிரிந்திருக்கவேண்டிய கட்டம் வந்தால் அவனால் தாங்கமுடியுமா. கொரெஸ்தெல்யோவின் வேலைகாரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும்போது இவன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிறிது நாட்கள் அதே ஊரில் அவன் தங்கியிருக்கும் படி சொல்கிறார்கள்.

அன்றிலிருந்து அவன் சிந்திப்பதெல்லாம் தான் நோயாய் இருப்பதால் அவர்களுக்கு அவன் சுமையாகிவிடுவான் என்ற எண்ணம் தான். அன்புக்குரியது எதுவும் சுமையாக இருக்காது என்று சிந்திக்கத்தொடங்கிவிட்டவன் . தந்தையின் விளக்கமெல்லாம் கேட்டபின்னும் தான் தொல்லைக்குள்ளானாலும் அவர்களோடு வாழவே ஆசைப்படுவதை சொல்லத் தெரியவில்லை. அழுவதில்லை என்ற வாக்கிற்கு கட்டுப்பட்டு அவன் அவர்கள் கிளம்பும் நேரம்வரை உள்ளுக்குள் குமைகின்ற பகுதிகள் நெகிழ்ச்சி தருபவை. துயரத்தில் கூனிக்குறுகி அவன் நடக்கையில் “ தயாராகு கிளம்பு ’என்கிற தந்தையின் குரலைக் கேட்டதும் நம்பமுடியாத மகிழ்ச்சியில் அவன் கொரெஸ்த்ல்யோவ் நம்மை நேசிக்கிறான் என்று பெருமிதம் கொள்கிறான்.

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆவார். குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தன் வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை தவிர்க்க உணர்த்துகிறார் வேரா பனோவா.

புத்தகம் : ஸெர்யோஷா என்றொரு சிறுவன் எழுதியவர்: வேரா பனோவா மொழிபெயர்ப்பு: ஜெபி வெளியீடு ஜெபி அண்ட் கோ. -------------------------------------------------- ஈழநேசன் முல்லை.org ல் சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 01:43 வெளிவந்தது.
-------------------------------------------------------
இக்கதைப்பற்றிய மற்றொரு பதிவு ஷெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்



 திரைப்படமாகவும் கிடைக்கிறது. யூட்யூப் ல்.. நான் இனிமேல்தான் பார்க்க இருக்கிறேன். இப்போது தான் கண்டுபிடித்தேன்.

August 31, 2011

தூரத்து வெளிச்சம்

இறக்கை இழந்த
சிறுநெல்மணிக்கான
பறவைக் குறுநடையோடு
தேடித்தேடி
களைத்திருந்தான்

எவனுக்கோ இவனுக்கோ
உருவங்கள் சாயங்கள் மறையும் வரை
சீட்டுக்கள் என்றும் ஏமாற்றுவதில்லை

கதைகளைப் புனைந்து
வாக்குகளை உரைக்கும்
ஆருடக்காரனின்
அடுக்கு மொழிகள்
தன் வசீகரங்களை இழந்திருந்தது

சொன்ன சொற்களுக்கான
உரைகள்
திருத்தப்பட்டன
சொல்லாத சொற்கள்
அரங்கேறி
வாழ்க்கை கலைத்தது

ஆருடங்கள் மாறுகிறதாயில்லை
ஆருடக்காரன்
மாறிக்கொண்டே இருக்கிறான்
வேதனை உதறி
எட்டி இட்ட நடையின் வழியில்
கோர்த்த கரங்களால்
உடைபடும் வேலிகள்
---------------------------------
(புதன்கிழமை, 14 அக்டோபர் 2009 )முல்லை( ஈழநேசன்)

----------------------------------

August 17, 2011

ஜாக்தே ரஹோ - விழித்துகொண்டிரு

நேற்று பலூன்மாமா கல்வெட்டு வின் பஸ்ஸை எல்லாரும் பகிர்ந்திருந்தார்கள், திண்ணை மற்றும் காலியிடங்களில் வழிபோக்கர்கள் தங்குவதற்கு அனுமதிக்காத நம் ஊர்களில் மனிதம் செத்துவிட்டதாகக் கூறி இருந்தார். தங்க விடுகிறோமோ இல்லையோ இன்றளவில் தண்ணீர் கொடுக்கக்கூடப் பயமாக இருக்கிறதாம்.

கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றோமா என்று நினைத்துப் பார்க்கிறேன். நான்கு மணிநேரக்கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றதாக நினைவில்லை. பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அங்கு ஒரு குடிசை வீட்டில் தண்ணீர் கேட்போம் அவர்களும் ஒரு செம்பு நிறைய தண்ணீர் தருவார்கள்.ஊரில் எங்கள் வீடும் ரோடு பார்க்க இருந்ததால் யாராவது தண்ணீர் என்று கேட்டு வருவார்கள்.நாங்களும் கொடுப்பதுண்டு. வீட்டுக்கு எதிர்புறத்தில் ஒரு பொதுக்குழாயும் உண்டு. அதில் தண்ணீர் வருகின்ற நேரத்தில் போவோர் வருவோரும் அங்கே தண்ணீர் குடிப்பதுண்டு. பலசமயம் உடைந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

தனிவீடுகளில் இன்று தண்ணீர் கேட்கவந்து அடித்துபோட்டு கொள்ளை என்கிறார்கள். சரி அடுக்குமாடிகளிலோ காவலுக்கு ஆள் இருப்பான் உள்ளே நுழைய முடியாது. இப்படி ஒரு படத்தைப் பார்த்தது  நினைவு வந்தது.
ஜாக்தே ரஹோ.. (விழித்து இரு..)1956


ராஜ்கபூர் நடித்தபடம் .இப்படி ஒரு நல்லபடத்தை சொந்த செலவில் எடுத்திருக்கிறார். படத்தில் அவருக்கு அதிகம் வசனமில்லை. எல்லாம் முகக்குறிப்பில் தான். மிக அருமையான நடிப்பு. ஒரு ஏழை விவசாயி நகர்புறத்திற்கு தன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக வந்து சேர்கிறான். அவனுக்கு தண்ணீரக்கு தட்டழிந்து ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்குள் இருந்த தண்ணீர்குழாயில் தண்ணீர் குடிக்க நுழைகிறான். அழுக்கு உடையும் பஞ்சப்பராரி தோற்றமும் அவனை ஒரு திருடன் என நினைக்கவைத்து குடியிருப்பே அவனைத்தேடி அலைய அவன் ஒவ்வொரு வீடாக ஒளிந்து தப்பிக்க முனையும் போது ... அங்கே வசிக்கும் ஒவ்வொருவரும் , பெரியமனிதப்போர்வையில் செய்கின்ற திருட்டுத்தனங்களை , தவறுகளை காண்கிறான்.

மனைவியிடம் திருடும் கணவன், குடிகாரன் மனைவியை படுத்தும்பாடு, கள்ளநோட்டு அச்சடிப்பவன், ஜோசியம் என்று பொய்வேசம் போடுபவன் என இருக்கிறது அந்த பெரியமனிதர்களின் இடம் . கள்ளநோட்டுக்களை அடிப்பவனோடு மருத்துவர் உடந்தை. அவர்களிருவரும் வீடுகளுக்கு இடையில் ரகசியப்பாதை வைத்து திருடனைத் தேடிவரும் போலீஸ் குழுவிலிருந்து தங்கள் தவறை மறைக்க முயல அங்கே போய் ராஜ்கபூர் சிக்கிக்கொள்கிறார். தங்களுக்காக ராஜ்கபூரை பலியிடவும் அவர்கள் தயங்கவில்லை.. போலீஸ் வந்து சோதனை செய்வதும் அதற்கு முன் ஒரு குழுவாக காவல் செய்பவர்களும் பின் வருகின்ற பத்திரிக்கையாளர்களும்.. 1956 லேயே அப்படித்தான்,  இன்னமும் பிப்லிலைவ் எடுக்கவும் நம்மிடம் கதை இருக்கிறது.

படத்தைப் பார்த்து பலநாட்களாகிவிட்டதால் சில பகுதிகள் நினைவில் இல்லை. ரோந்துகுழு அமைக்கப்படும்போது அதன் தலைவன் மிக நல்ல வசனங்கள் பேசுவான் . அதற்கான வீடியோ கிடைக்கவில்லை. இந்தப்பாடலைக் கேளுங்கள், படத்தில் வரும் ஒரு பஞ்சாபி ரோந்துக்குழுவின் பாடல்..
The Lyrics and its Translation


Oye aiwe duniya dewe duhai,
jhootha pondi shor
te apne dil to pooch ke vekho
kaun nahi hai chor

The world appeals for no reason
the liar makes hue and cry
Why don't you ask your heart
who is not a thief!


te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!


Oye hath dooje ka maar maar ke
ban de log ameer
mein ainu kainda chori
dunika kendi taqdeer
By pulling stuff from others hands
people become rich
I call it thievery
the world calls it destiny

te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!


O vekhe pandit gyaani-dhyaani
daya-dharam de bande
Ram naam japte
khaave goshala de chande

I have seen wise and pious
men of religion and kindness
They chant the name of Ram
and hoard all the charity


te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!

O sachche phansi chade vekhe
jhoota mauj udave
Loki kende rab di maya
Mein kenda anyay

I have seen honest people hanged
while the culprit enjoys life
People say it god's will
I call it injustice

te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!
(thanks to sandeep)

இரக்கமே இல்லாமல் ராஜ்கபூரின் உடம்பில் பணக்கட்டுகளை அடுக்கி ஜன்னல் வழியாக வெளியேறவைக்கிறார்கள். மேலே இருந்து தொங்கும் துணியை அறுக்கிறான் முதலாளி. கீழே இருந்து நெருப்பு பற்றவைக்கிறான் ஒருவன். கீழே திரண்ட மக்கள் ( யாரு எவன் என்று தெரியாவிட்டாலும் கூட்டமாக சேர்ந்து கொடிபிடித்தால் கொடிபிடிப்போம், தர்ம அடி போட்டுகிட்டிருந்தால் அதையும் செய்வோம்) ராஜ்கபூரை கீழே இருந்து பொருட்களால் அடிக்கத்தொடங்குகிறார்கள். திருடன் திருடன் என்று திட்டும் அவர்கள் பணம் பையிலிருந்து கீழே விழும்போது அடுத்தவன் பணமென்ற உணர்வின்றி பணம் பணம் என்று பொறுக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.


மேலும் கொஞ்சம் பணத்தை இறைத்து கவனம் திருப்பி ,தப்பி மேல் மாடிக்கு சென்று நீங்கள் படித்தவர்கள் , பெரியமனிதர்கள் ,நீங்கள் என்னைத்திருடன் என்றா சொல்கிறீர்கள் .. நீங்கள் மட்டுமென்ன..அனைவருமே திருடர்கள் என்று அவர்களின் குற்றங்களைச்சொல்லும்போது அனைவரும் அவனைக் கொல்ல நெருங்குகிறார்கள். அந்தக்காட்சியில் வசத்தின் வீச்சு அருமையானதாக இருக்கும். (அதன் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.)


மீண்டும் தப்பி ஒரு வீட்டில் நுழையும் போது டெய்சி ராணி (குழந்தைநட்சத்திரம் )அங்கே அவரிடம் கனிவுடன் பேசுகிறார். நீ திருடனா ? இல்லை தானே? அப்பறம் எதுக்காக நீ பயப்படனும் தைரியமாக நட . யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள் என்று தன்னம்பிக்கை கொள்ளச்செய்கிறாள். தைரியமாக அவர் நெஞ்சு நிமிர்த்தி நடந்துவெளியேறுகையில் சோதனையிடவந்த போலீஸ் அங்கே தவறு செய்த பெரியமனிதர்களைக் கையும்களவுமாகப் பிடித்துச்செல்கிறார்கள். எளிய விவசாயியை யாரும் கவனிக்கவே இல்லை. அந்த காட்சியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


இந்தப்படத்தை என் மகனோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அழுக்கு உடையும் ஏழையுமாய் இருப்பவனெல்லாம் திருடன் இல்லைடா என்று சொல்லிக்கொண்டிருந்தேன். குழந்தை அவனுக்கு தைரியம் சொல்லும் காட்சி வரை கவலையாக இருந்த அவன் முகம் மலர்ந்ததைக் கண்டேன். இன்று இப்பதிவை எழுதத் தயார் செய்தபோது கூட.. இந்தக்காட்சியை மீண்டுமொருமுறை பார்க்கவேண்டுமென்று  உட்கார்ந்திருந்தான்.
Jaago mohan pyaare, jaago
Jisne mann ka deep jalaaya
(Who ever lit the lamp in heart)
Duniya ko usne hi ujalaa paaya
(has found the world lit)
Mat rehna ankhiyon ke sahaare
(Do not depend on eyes only)
Jaago mohan pyaare, jaago
(Arise dear Mohan, Wake up)


August 16, 2011

தமிழ்மீடியாவில் சிறுமுயற்சி


தமிழ்மீடியா தளத்தில் சிறுமுயற்சி தளம் பற்றி அறிமுகம் வெளிவந்திருக்கிறது. இன்றைய வலைப்பூ பகுதியில் சிறுமுயற்சிக்கும் இடமளித்த அவர்களுக்கு என் நன்றிகள். இங்கே கீழே இருப்பது அங்கே வெளிவந்திருக்கும் பதிவு.

-----------------------------------------------------------------

வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக,

தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக மாற்றுங்கள்.. எனக் கூறும் முத்துலட்சுமி அதற்கு எல்லாவிடங்களிலும் தேவையானது சிறு முயற்சி என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் தன் வலைப்பதிவுக்கு வைத்திருக்கும் பெயர் சிறு முயற்சி.
இவரது வலைப்பதிவின் பெயர் சிறு முயற்சியாக இருந்தாலும், அதன்மூலம் இவர் பதிவு செய்கின்ற விடயங்கள் பெருமுயற்சி என்பதில் சந்தேகமில்லை. புதிய இடங்களைச் சுற்றிப்பார்பது சுகமென்றால், அதனை அழகாகவும் ரசனையாகவும் மற்றவர்களுக்கு சொல்வது மகிழ்ச்சி கலந்த பெருமிதம்.
தொடர்புச் சாதனங்களும், உலக வலையாக்கம் விரிவுபடாதிருந்த காலத்தில், தமிழ் எழுத்துலகில் தனது பயணக்கட்டுரைகள் மூலம் உலகின் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தைக் கொடுத்தவர் எழுத்தாளர் மணியன். இன்று அந்தச் சூழ்நிலை மாறி, பலரும் பலதும் தெரிந்திருக்கக் கூடிய சூழலிலும், அதேவிதமான ரசனைச்சுவையைத் தனது எழுத்துகளால் வலைப்பதிவில் பதிவு செய்யும் முத்துலெட்சுமியின் முயற்சியை சிறுமுயற்சி என்றிடலாமா..?
சுற்றுப் பயண அனுபவங்கள் என்றில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் தனது ரசனையின் நோக்கோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது சிறுமுயற்சியில். இவ்வாறு அனுபவங்களை, அறிந்தவைகளை அழகாகப் பதிவு செய்யும் முத்துலெட்சுமி குறித்து பலராலும் அறிந்து கொள்ளப்படாத செய்தி ஒன்று உள்ளது.
4தமிழ்மீடியாவில் முன்பு வாரமொரு வலைப்பதிவு பகுதியிலும், 'ஆனந்தி' சஞ்சிகையில் வலைப்பதிவு பகுதியையும் சிறப்பாகத் தொகுத்தளித்தவர் என்பதை, 4தமிழ்மீடியா 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் பெருமையோடு தெரிவித்து, பல வலைப்பதிவுகளின் பரவலான அறிமுகத்துக்குக் காரணமாக இருந்த அவரது சிறுமுயற்றி வலைப்பதிவினை இந்தப் பகுதியில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
அவரா..இவர் என ஆச்சரியப்படுகின்றீர்களா?.. 

August 12, 2011

யாவரும் நலம்




தரைமுழுதும் உதிர்ந்திருக்கும்
பின்கட்டு முருங்கைப்பூ,
செலவழிக்க விரும்பாத
சிறுவாடாய் ,
சின்னப்பிள்ளைகள் சிரிப்பினில் மகிழ்ந்திருந்த
மல்லிகை மணம் வீசும்
முற்றமிருக்கும்.
இல்லாதவர் பெயர்தாங்கிய
பலகைகள் தொங்கும்
இலக்கமிட்ட வாயில்
அனைவருக்குமாய் தவமிருக்கும்.
முகவரிகள் தொலைத்தபின்
நலமில்லா விவரம் தாங்கி
இருபக்கமும் கடிதமில்லை.
சோறிட்ட காகங்கள்
நன்றியோடு
நினைவில் நிறுத்தி
கரைகின்ற ஒரு பொழுதில்
யார் காலடியாவது
புழுதி கலைத்து நுழையுமெனில்
மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.
பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம்.
நலங்களை நினைப்பதில்
எங்கிருக்கிறது பிழை?
யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக்கொள்வோம்.

August 11, 2011

கேப் மே ஃபெர்ரி ரைட்


கேப் மே எமலன் பிசிக் எஸ்டேட் (Emlen Physick Estate)


பிசிக் ந்னு ஒரு டாக்டர் . ஆனா அவர் டாக்டருக்கு ப்ராக்டிஸ் செய்யலையாம். விவசாயி யா மாறிட்டாராம். அவர், அவருடைய அம்மா , ஒரு அத்தை அந்த எஸ்டேட் வீட்டில் இருந்தாங்களாம். பிசிக்கோட தாத்தா தான் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கு தந்தையாம்.. அவர் கண்டுபிடித்த சிகிச்சைக்கான புதிய முறைகளும் கருவிகளும் இன்றும் பயன்படுகிறதாம்..

வீடுகள் வாங்கி விற்பதும் , (கேப் மே)ஊர் எப்படி இருக்கவேண்டும்ன்னு முடிவு செய்யும் கூட்டங்கள் நடத்துவதுன்னு அவர் பொழுதைப்போக்கி இருக்கிறார். அவருக்குப் பின்னால் அந்த இடத்தை இப்பொழுது மிட் -அட்லண்டிக் செண்ட்டர் என்கிற ஆர்ட் அண்ட் ஹுயுமனிடீஸ் நிறுவனம் எடுத்து நடத்துகிறதாம். வருகிறவர்கள் நுழைவுக்கட்டணம் கொடுப்பதை வைத்தே நிர்வாகம் நடக்கிறதாம். இதையெல்லாம் இதோ இவங்கதான் எங்களுக்கு சொன்னாங்க...

சுற்றிக்காட்ட அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டம் வரவேண்டும் . அதனால் எங்களைக் காக்க வைத்திருந்தார்கள். எங்களுக்கு கேப் மே ஃபெர்ரிக்கு அடுத்து போகவேண்டுமே என்ற போது சரி உங்களுக்கு முதல் தளம் மட்டும் காட்டுகிறேன். நீங்கள் பிறகு செல்லலாம் என்றார். அதுல என்ன பெருந்தன்மையோ.? மற்றவர்கள் வரும் முன் மேல்தளத்தை எங்களுக்கு காட்டி இருக்கலாம். ம்..

வீட்டின் ஒவ்வொரு அறையும் அன்றைய காலத்தில் எப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததோ அதே முறையில் அப்படியே இருந்தது. வரவேற்பரையின் ப்ரம்மாண்ட அலங்கராங்களும் , உணவுக்கூடத்தின் அருமையான தட்டு கரண்டிகளின் கலெக்சனும் ( என் மருமகனுக்கு ஸ்பூன் கரண்டின்னா பிரியம் எடுத்து தரலன்னா அழுவான் அடுத்த அறைக்கு ஓடுங்க ) பெரிய பெரிய இரும்பு அடுப்புகளும் சின்ன இரும்பு இஸ்திரி பெட்டியும் துணி துவைக்கும் மர அடுக்குகளும் வித்தியாசமான ஒன்று தான். மரவேலைப்பாடுகள் நிறைந்த அந்த வீடு அழகோ அழகு.  இன்னும் அந்த எஸ்டேட்டில் பார்க்க வேண்டியது இருந்தாலும். என்ன கிடைத்ததோ அதை சரியாகப் பார்த்துவிட்டோம். இந்த வண்டியில் வைத்து இன்னும் சில இடங்களையும் உள்ளே காண்பிப்பார்களாம்.


கீழ்தளத்தைச் சுற்றிக்காண்பித்துவிட்டு வீட்டுக்கு வந்த விருந்தாளியை வழியனுப்புவது போல வெளீயே வந்து சரியான நேரத்துக்கு ஃபெர்ரியைப் பிடித்துவிடுவீர்கள்ன்னு நினைக்கிறேன் என்று சொல்லி வழியனுப்பினார்கள்.




இந்த இணைப்புக்கு சென்று அந்த அறைகளை நீங்களும் பார்க்கலாம்.


கப்பலுக்கு நேரமாச்சு..



வாங்க இந்த வீடியோவைப் பாருங்க.. அப்படியே நீங்களும் கூடவே காரில் அமர்ந்தபடியே கப்பலுக்கு ஏறுங்க..

கேப் மே டெர்மினல் பாருங்க நீலக்கலர் கூரையோட எவ்வளவு அழகா இருக்கு. அந்தப்பக்கம் லூயிஸ் லயும் டெர்மினல் இதே அமைப்பும் நிறமும் தான்.

இதோ இந்த வழியாப்போனோம்ன்னா கப்பலுக்குள் கார்களை நிறுத்தற இடம் இருக்கு.

 நிறுத்திட்டு அப்படியே படிகளில் ஏறி மேல போகலாம். மேலே ஏறும்போதும் இறங்கும்போதும் மிகக்கவனம் வேணும்.. அடிக்கின்ற காற்றோ அல்லது கப்பலின் ஆட்டமோ நம்மை தண்ணிக்குள் தள்ளிவிட்டுவிடும். கைப்பிடியை சரியாப்பிடிச்சுக்கவேணும்..

முதல் தளத்தில் நல்ல உணவுக்கூடமும் கடையும் இருக்கிறது. வாங்கும் உணவுகளை கப்பலின் ஆட்டத்தோடு சரியான மேஜைக்குக் கொண்டு செல்வது கூட பெரிய விசயம் தான். கொஞ்சம் மஃபின்ஸும் சல்சாவும் சிப்ஸும் ஐஸ்க்ரீமும் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். பிறகு அதற்கடுத்த தளத்துக்கு ஏறவேண்டும். காற்று தள்ளுகிறது. கதவைத்திறக்க ரெண்டு ஆள் பலம் வேண்டும். படிகளில் ஏறி மேலே போனால் வெள்ளை நிற பெஞ்சுகள் வரிசை வரிசையாக இருக்கிறது.




கடலைக்கிழித்துக்கொண்டு செல்லும் கப்பலின் தடம் பின்னால் .. சிறுது நேரம் அதை ரசித்துவிட்டு .. கப்பலின் முன் பகுதிக்குச் சென்றோம்.


அப்போது தூரத்தில் ஒரு யாட்ச் படகு காற்றில் சரிந்தது போலத் தெரிந்தது . கப்பலின் கேப்டன் உடனே ஒலிபெருக்கியில் ,’நாம் அவர்களுக்கு உதவி தேவையா என்று பார்த்துவிட்டு பிறகு தொடர்வோம்’ என்ற படி அதன் அருகில் செல்ல ஆரம்பித்தார். ஒலிபெருக்கியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். அங்கிருந்து ஒரு கை அசைப்பு வந்ததும் சரி என்று மீண்டும் லூயிஸ் நோக்கித் திரும்பினோம்.

 ஒரு பாய்மரக்கப்பல் வந்தது. அதைப்பார்ததும் கதை மற்றும் காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்த கனவு போன்ற கடற்பயணத்தில் இருப்பது போன்ற உணர்வு ..

 இந்தப்பயணம் கேப் மே யிலிருந்து லூயிஸுக்கு தரைவழிப் பயணமான 4 நான்கு மணிநேரத்தை கடல்வழியில் ஒருமணி நேரமாகக் குறைக்கிறது. கடலுகு நடுவில் சிறிய இரண்டு லைட் ஹவுஸ்களும் உண்டு. இப்பொழுது தானியங்கி . ஆனல் முன்பு தனியாக அங்கே சிலர் காவல் காத்துக்கொண்டிருந்தார்களாம்.  எப்படி இருந்திருக்கும்?

googlegoogle

August 8, 2011

கவிஞர் தாமரை

முன்பு ஈழநேசன் தளத்திற்காக கவிஞர் தாமரையைப் பேட்டிக்கண்டு எழுதி இருந்தேன். அவர்கள் தற்போது தளத்தை முல்லை என்ற பெயரில் மாற்றிவிட்டிருக்கிறார்கள். எனது தளத்தில் ஒரு சேமிப்பிற்காக இங்கே இணைத்திருக்கிறேன்.
----------------------------------
16.10.09

கனிமொழி மற்றும் வைசாலி கண்ணதாசன் போன்றோர் முன்பே பாடல்கள் எழுதி இருந்தாலும் அவர்கள் திரையிசைப் பாடலாசிரியர்களாக தங்கள் துறையை மாற்றிக் கொள்ளவில்லை. இயந்திரவியல் படித்து இயந்திரங்களுடன் பழகத்தலைப்பட்ட ஆறுவருடங்களின் பின் கவிதைகளுக்கான தன் தாகத்தை உணர்ந்தவராய் பாடல் புனையத் தொடங்கியவர் கவிஞர் தாமரை.


பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அறியப்படத் தொடங்கியபோது இயக்குனர் சீமானால் திரைத்துறையில் ’இனியவளே’ திரைப்படத்திற்காக தேவாவின் இசையில் ’தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆண்கள் மட்டுமாய் (நடிப்பு தவிர்த்து) இருந்துவந்த துறைக்கு பெண் வருவதும் தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பதும் எளிதானது அன்று.


கவுதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் எழுதிய பாடல்கள் இவருக்கு மிக நல்ல பெயரை ஈட்டித்தந்தன. சின்னத்திரையிலும் கணேஷ் வசந்த், பஞ்சவர்ணம் , பாக்யராஜின் “ ஒரு கதையின் கதை” போன்ற தொடர்களுக்காகப் பாடல்கள் எழுதிய அனுபவமும் இவருக்கு இருக்கிறது. முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்ட ’மித்ரு மை ப்ரண்ட்’ படத்தில் இவர் பாடலாசிரியராக இருந்திருக்கிறார்.

பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்தப் பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்பற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ்ச் சொற்களை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்தப் புதிய தமிழ்ச் சொற்களை என்னவென்று தேடித் தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.


மேலும், இரட்டை அர்த்தக் கலப்புக்கள் மற்றும் ஆபாச வரிகள் இன்றி வெளிவரும் மிக மெல்லிய உணர்வுகளைக் காட்டும் வரிகளைக் கொண்ட தாமரையின் பாடல்கள் மக்களின் மனதை வருடி மகிழ்விக்கிறது . ஃபைவ் ஸ்டார் படத்தின் ஒரு பாடலில்
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்
எளிமையாகவும் காதலைச் சொல்வதில் நளினமாகவும் வந்து விழுகிறது வார்த்தைகள்.

வேண்டாத வேலையென்று ஈழத்துப் பிரச்சனைகளை பலர் தவிர்த்துக் கொண்டிருக்க ,சிலரோ ஆறுதலாகப் பேசிவிட்டு அமைதிகொள்ள , தாமரை அதிகாரங்களையும் எதிர்த்துக் குரல் கொடுத்த வண்ணமிருக்கிறார். தன் கவிதைத் தொகுப்புகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் அவரின் எண்ணங்களை உரத்துச் சொல்கிறார். ஈழநேசன் (தற்போது முல்லை)  இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.

இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?
ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.

முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?


இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.

தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்.

ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..

விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?
விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.
மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)


தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் நீங்கள்.. போருக்குப் பின்னும் மீள்குடியேற்றம் கனவாக, முகாம்களில் ஈழமக்கள் துயருற்று இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை சீராவதற்கு ஏற்படும் தாமதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உலகம் முழுதும் இலங்கை அரசைக் கண்டனம் செய்து கொண்டிருக்கிறாங்க. இந்தியாவோ மற்ற நாடுகளோ சொல்லி இலங்கை கேட்பதில்லை. போருக்குப் பின் இலங்கை அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பது எல்லா மத்திய, மாநில, உலக அரசுகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் முன்பே தெரிந்த விசயம் தான். அதை இன்று தான் தெரிந்துகொண்டது போல அரசுகள் நாடகம் ஆடுகின்றன. இந்தியாவே இலங்கை அரசைப் பாதுகாப்பது போல் இருப்பதனால் தான் உலகநாடுகள் தயங்குகின்றன .. போர்குற்றங்களுக்காக ஹிட்லரைச் சேர்ந்தவர்கள் பிற்காலத்தில் ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றது போல இன்று உடந்தையாக இருப்பவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
நேற்று (11.10.09)காலை என் கணவரும் முன்னின்று நடத்திய தமிழினப் பாதுகாப்பு மாநாடு நாள் முழுதும் நடந்தது. காலை பேரணியில் மூவாயிரம் பேர் கலந்துகொண்டாங்க..மாலை பொதுக்கூட்டம் இருந்தது . கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்தோம். அதில் நானும் ஒரு தீர்மானம் வாசித்தேன். இலங்கையை நாம் வற்புறுத்த வேண்டுமெனில் பொருளியல் தடை விதிக்கலாம். தனிமைப்படுத்தலாம். தமிழ்த் திரைப்படத்துறை சேர்ந்தவர்கள் படப்பிடிப்புக்கு இலங்கை போகாமல் இருக்கவேண்டும்.