July 23, 2014

ஓவியத்தின் வழி கைப்பற்றுதல்






 
ஒரு ஓவியத்தின் வழி
கைப்பற்றும் வழியறிதல்
இக்கணத்தின் தேவை

சற்றே விலகிய பொழுதின்
விலையறிந்து
கண்ணிமை எண்ணியழைத்து
எச்சரித்து
கரம் பற்றிக்கொண்ட நினைவை 
நிகழ்வாக்கும் 
மற்றுமொரு 
அத்தினம் தேவை.
-----------------------------------------
 
வாயில் மாற்றி வைத்த
அவ்விடம் தேடி
வெகுதொலைவு நடந்தபோதும்
 துணையற்று திரும்பியபோதிருந்ததும்
ஒன்றல்ல
பாதங்கள் புதைய மணலற்ற
அப்பாதையின்
ஒற்றைச்சருகுமற்ற தன்மை
எழுப்பிய செயற்கையொலியால்
என் மணலை
என் சருகுகளை
அள்ளிக்கொண்டு
கருமை பரப்பி திசை திருப்புவதாய்
நிழலின் மென்மைக்கும்
புதுச்சாயம்

------------------------------------


காலச்சுழல் 
விரிகிறதா சுருங்குகிறதா 
நொடிகளின் ஒலி
எச்சரிக்கையா 
அமைதியின் எதிரொலியா
நெருங்குவது 
ஓய்வா 
முடிவற்ற தேடலா








------------------------------------------------------------


இன்றென ஒவ்வொன்றாய்
வெற்றிடம் நிரப்பவென்றும்
எனைச்சார்ந்தவை என்றே
உரிமை கொண்டும்
வந்தவை எல்லாம்
அரணுடைக்க முடியாமல்
நிரப்பவியலாமல்
மிகச்சரியான வெற்றிடமென்று
ஏதுமில்லை என்றபடி
ஒன்றாய்
வழி திரும்பிக்கொண்டிருக்கின்றன 


-------------------------------------------


 
நட்சத்திரங்களையும் வானையும்
சமைக்கப்படாத
தங்கள் பாதைகளை
தாங்களே அறியும் பறவைகளையும்
உண்டாக்கும் போதே
தனக்காய்
வனங்களை நிழல்களை
உருவாக்குவாள்
சக்தி













------------------------------------------------
ஒவ்வொன்றாய் எடுத்து
பார்வைக்கு அடுக்கியபின்
விழியற்றவர்களின்
வருகை மட்டுமே
உறுதி செய்யப்பட்டதாய் அறிகிறேன்


நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றேதான்
இருந்தும் கடக்கிறீர்கள்
விழியற்றும்
இதோ ஒவ்வொன்றையும் 
பிழையற்று அறிந்துநிற்கின்றன
மனங்கள் 

அன்பின் தூதுவர்கள்


முனைகளில் நின்று 
குதிப்பது போல பாசாங்குடன்
பதறும் இதயத்தை மறந்து 
தாவி இழுக்கும் கைகள் 
விரிகிறதா என்று ரசித்தபடி
வாழ்வின் தீவிரத்தை 
விளிம்புகளில் உணர்கிறார்கள்
சத்தமின்றி உயிர்கொல்லும்
அன்பின் தூதுவர்கள்
-------------------------------------------------
கொஞ்சம் கொஞ்சமாய் உணர
கவனமாக நறுக்குகிறேன்
இதயத்தை
ஒரே அளவாக இருக்கிறதா என்றும்
அதிகம் வீணாகிவிடாமலும்
மறக்காமல் மிச்சமிருக்கும் ஈரத்தையும்
 உலர்த்தி எடுத்துவைக்கிறேன்
அடுத்து..

பதப்படுத்தும் கலையறியாததால்
முடிவற்ற
கவிதை இது.

----------------------------------------
தன்னை எழுதும் 
கதைக்குள் 
விடுபட்டவைகளை
கதையில் யாரோவாக 
தானேயிருந்து  எழுதச்செய்கிறாள்

வாசிப்பவரெல்லாம் 
தம்மைக் காண்பது
எதிர்பார்த்த முடிவென்பதா
எதிர்பாரா முடிவென்பதா

புனைவற்ற உண்மைக்கதை



 
கண்ணிலிருந்து விண்ணேறி
நட்சத்திரங்களாகிவிட்ட
உப்புகற்களைப் பற்றிய கதைககளும்
உண்ணுகையில் அழும் விலங்கின்
இதயப்பசி கதைகளும்
மறுப்பினால் மறுகி
அலங்காரம் களையாத
மூப்பியின் பழியும்
முரண் பேசி குளத்தில் விழாமலிருக்க
அடர்காட்டில் வழிமறந்து
அப்பங்களோடு அவியாமலிருக்க
புனையப்பட்ட கதைகளுமாய் நிறைந்த
புத்தக அறைக்கு வெளியே
மறைவற்ற வெட்டவெளியில்
சிக்கிக்கொள்வதன்பது
புனைவற்ற உண்மைக்கதை

-------------------
ஆச்சரியங்களையும்
அதிசயங்களையும்
விரும்புபவள் வாழ்வில்
ஆச்சரியங்கள்
அதிசயமாய் நிகழத்தொடங்கியது
விருப்பங்களை விரும்பாமல்
இருப்பது எப்படி

ஒளியை
ஒரு  கூண்டில் ஏந்தி
இருளைப் பிரித்து
உள்நுழைந்து
கனவுப் பரணிலிருந்து
எடுத்து அடுக்குகிறாள்
வாழ்வின் பார்வைக்கு 

புறக்கணிக்க இயலாத தாமதங்கள்

இலகுவிற்கு பழகிய 
கரையை விட்டு 
நகர்ந்துவிட்ட  படகுகள்


துடுப்புகளின் இருப்பிற்கும்
பாய்மரத்தின் இழுப்பிற்கும்
நதியின் நடுவிலிருந்து
புதியகோணங்கள் எழுதும் 
போலிப்படகுகள்

----------------------------
புறக்கணிக்க இயலாத தாமதங்கள்
அவதியற்றிருந்தும் கூட 
ஓர்   நிலையின்மை
உரிமையற்றதாகிவிட்ட பின்னும்
சிறுதொலைவுக்குள்
வண்ணம் நிறைக்கும் அந்திச்சூரியன்
முற்றாய் 
கரைத்துவிடத் தயாரான  இரவு

உறக்கம் தொலைத்து 
கீழ்நோக்கி விழுந்து 
பறக்கத்தயாராய்
நாளெல்லாம் பற்றியிருந்த கிளையை 
விடுவிக்கும் வாவல்

ஒவ்வொரு சங்கிலியாய் 
இளகிக்கொண்டிருக்கும்  மனம்
 

புன்னகை


புன்னகை

எப்போதும் 
கையோடு தான் வைத்திருப்பது 
செப்படி வித்தை தெரிந்தவராய் 
கையிலிருப்பதை அறிகிறார்கள்
வாராக்கடனாய் அதும் சென்றுவிடுகிறது

பிம்பங்களை உருவாக்காமல்
ஊடுருவிச் செல்லும் போது 
இரட்டிப்பாவதில்லை
 
அரவமற்றதும் 
ஒளியற்றதுமான பொழுதுகளில் 
கதவிடுக்கில் மேஜைகளுக்கடியிலிருந்து 
அது க்ரீச்சிட்டிக்கொண்டிருக்கும்
அதன் பெயர் அதிர்ஷ்டம்

----------------------------------------------------------------

 
நாட்களாய் படிந்து விட்ட
அலமாரியின்   தரையழுந்திய ஓரங்களும்
கட்டிலின் பாதங்களும்
விட்டுச்சென்ற சுவடுகள்

சற்றும் பொருத்தமற்ற
எம் புதிய அலமாரிகளின்
நீளத்தில் நீளம் மறைந்தாலும்
அகலத்தில்
பழங்கதையின் சில பக்கங்கள்

ஏதும் எழுதிச்செல்லாத
கூரைகளில் சுழலும் விசிறியின்
உராய்விலிருந்து
இறங்குகிறது ஒரு கதை

சுவர்களிலிருந்து
புதியகதையில் இல்லாத
பிஞ்சுக்கைகள் அழைக்கிறது

சிறுகச்சிறுக சேர்க்கும் கேள்விகள்

 
சிறுகச்சிறுக சேர்க்கும் கேள்விகள்

தொலைவுகளின் நீளத்தை
இரட்டிப்பாக்கவும்
இல்லாதாக்கவும்
ஒருசேர முடிவதென்ன கணக்கு ?

பாதம் பட்டறியாத
அறைகளின் துல்லியம்
கால்கள் அறிவதெப்படி?

சொல்லவிரும்பாப்
பொய்களுக்கு மாற்றாக
கரங்களுள் பொதிந்திருக்கும்
உண்மைகளின் பட்டியல்களை
விரல்விரலாக நீக்கியும்
கேட்டு வாங்கியும்
கிழித்துப்போடுவது என்ன விளையாட்டு?

வேரலென
சட்டென்று வளரும்
வருத்தமும் கோபமும்
பூத்து சிதறி மறைவதென்ன மாயம்?

வேரல் - மூங்கில்*
-------------------------------
 
புல்வெளிகள் கடந்து
நடைவேகத்தில்
உரையாடல்
 உலைக்களம் அடைந்தது
நினைவுப்பரிசாக 
அங்கே பரிமாறப்பட்டது 
கனன்று கொண்டிருக்கும் கோளம்
மீண்டு நடந்த ஒற்றைச் சுவடுகளை 
விழுங்கியதில்
அலையற்றுப்போனது கடல்
7

May 6, 2014

லேண்ட்ஸ்டௌன்

லேண்ட்ஸ்டவுன் (Landsdowne) - உத்தரகாண்ட்
தில்லியிலிருந்து மீரட்-> பிஜ்னூர்->நஜிபாபாத் -> கோத்வாருக்குப் பிறகு தான் மலைப்பகுதி தொடங்குகிறது.  அதிகம் சுற்றுலாத்தலமாக அறியப்படாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் தற்போது இல்லை. தில்லியிலிருந்து 250 கிமீ. காலை ஆறுமணிக்கோ அதற்கு முன்போ கிளம்புவதால் மீரட்டின் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் ஆறுமணிவாக்கில் வீட்டிலிருந்து இறங்கினால் மேகம் இருண்டு , மழைக்காற்று . காரில் ஏறும்போதே சடசட வென மழைத்தூரல். லேண்ட்ஸ்டவுன் தில்லிக்கே வந்துவிட்டிருந்தது.


பயண தூரத்தின் சரிபாதியாக வரக்கூடிய மீராப்பூருக்கு அருகில் சில தாபாக்கள் உண்டு. மதிய உணவுக்கு அங்கே இளைப்பாறுதல்.சாலையோரக்கடைகள் தவிர்த்து மல்டி மில்லியன்ஸ் ( போகும்வழியில் இது சாலையின் மறுபுறத்தில் இருப்பதால் தவறவிட்டோம்) சுகாதாரமான கழிப்பறைகளுடன் கூடிய உணவகம் என்பதாக அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

 மலையேறும்  போது நல்ல சாலை. சில இடங்களில் மட்டும் கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓக் க்ரோவ் இன் ஐ நடத்தும் தம்பதியினர் தொடர்ந்து வருகையை மற்றும் சரியான பாதையில் தான் வருகிறோமா என்பதை விசாரித்துக்கொண்டே இருந்தனர். மதிய உணவுக்கு அவர்களுடன் வெல்கம் லஞ்ச் என்று சொல்லி இருந்தார்கள்.

நாங்கள் கோத்வார் அருகில் சிறிய குன்றின் மீது அனுமன் கோயிலைக்கண்டதும் நிறுத்திவிட்டோம். மகனுக்கு பஜ்ரங்க்பலி என்றால் அவ்வளவு பிரியம். அருகில் ஓடும் ஆறும் ( ஒற்றையடிப்பாதை அளவே ஓடினாலும் சலசலப்பு உயரம் வரைக்கேட்டது) மலையடிவார அழகும் சித்பலி அனுமன் கோயில் இருந்த குன்றில் பல சித்தர்கள் வந்திருந்து தியானம் செய்திருப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மலையடிவாரத்தில் பொன்வயலழகும் ...

மலையில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. மலையேறத்தொடங்கும் முன்பே ஒரு இடத்தில் மகன் எங்களிடம் “கண்களை மூடி இயற்கையின் சத்தத்தைக் கேட்டுப்பாருங்கள்” என்று சொன்னபோது ஆச்சரியமாய் யாரு இவனா இவனா சொன்னது என்று  கேலி செய்துகொண்டிருந்தோம்.
oak grove inn
ஓக் க்ரோவ் இன் சென்றடைந்ததும் தம்பதிகள் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்தவர்களைப்போல உபசரித்து உரையாடிவிட்டு  விடுதியின் உணவருந்தும் அறைக்கு அழைத்துச்சென்றார்கள். வீட்டில் தயார் செய்வது போன்ற உணவு. அமைதியான பரிசாரகர்கள். சப்பாத்தி , சாதம், பருப்பு, சப்ஜி வகைகள். எனக்கு சுற்றுலாவில் முதல் விருப்பம்  அடுத்தவர் சமைத்து சுடச்சுட  சாப்பிடுவது. அது இன்னும் சுவையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு படி  மகிழ்வு.  அவர்கள் சமைத்த அறை கூட சமைத்தது போலவே இல்லை. அத்தனை சுத்தம். அவர்களும் எங்களுடன் அமர்ந்து உணவருந்தியது ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தது போலவே இருந்தது.

மற்ற அறைகளெல்லாம் தனித்தனி அறைகள். இது ஒன்று பெரியது. அவர்கள் வீட்டைச்சுற்றிலும் விதவிதமான செடிகள். அவை கவர்ந்திழுக்கும் வண்டுகள். பறவைகள். சூரியன் மறையும் போது ரசிக்க அங்கே இரண்டு இடங்கள் . ஒன்று மரவீடு போன்ற ஒரு இடம். அதற்கும் அடியில் ஒரு ஹைட் அவுட்.
oak grove inn



March 10, 2014

ஓவியம்போல் கவிதை போல் குறும்படங்கள்

10th IAWRT Asian Women's Film Festival
(The International Association of Women in Radio and Television )
 முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்விற்கு சென்றேன். குறும்படங்களின் சிறுகுறிப்பு என்னை இவற்றைப் பார்க்கத்தூண்டியது. நானும் இப்படி முயற்சி எல்லாம் முன்பு செய்திருக்கிறேன். பார்த்தப்படங்களைப்பற்றி ஒரு நினைவுக்குறிப்பு.

 Watermelon, fish and half ghost | payal kapadia - 11 நிமிடங்கள்

 ஒரு ச்சால் ந்னு சொல்கிற குடியிருப்பில் இருக்கிற பழக்கமான வாழ்க்கையைப் பற்றிய ஆரம்பம் எனக்கு மிகவும் பிடித்தது. நேரம் என்பதே அங்கே முக்கியத்துவமற்றது போல இருந்தது ஆனா நேரத்தைக் கணக்கில் கொண்டு செய்யும்  எந்திரத்தனமாக செயல்பாடுகளால் அவர்கள் வாழ்வதை உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு குரல் சன்னமாக பிண்ணனியில் ஒலிக்க படம் துவங்கியது.  காட்சி நகரும் இடங்களை எல்லாம் கவனிக்கும் ஒரு மனக்குரலின் பதிவு.

பாதியில்  ஐயர் மறந்து போன மந்திரத்தால் அரையுடல் ஆவியாக பாட்டிக்கு மட்டும் காட்சி தரும் தாத்தா . அதை நினைத்து பாட்டியின் தினப்படியான புலம்பல். பாதியில் நின்றுவிட்டது சிரார்த்தம். அவர் நிம்மதியற்றிருக்கிறார் அவர் நிம்மதியற்றிருக்கிறார்.  நிம்மதியற்று  இருப்பதெற்கென்றே இறந்த கணவர்  காரணமாக ஒரு கவலையை ஏற்றி வைத்திருப்பாரோ?  நிழல்கள் படம்  போல ஒரு இளங்காதல் ஜோடி. கீழ்வீட்டில் இளம்பெண். மாடியில் கவிதை வாசிக்கும் இளைஞன். அவளுக்கு திருமணம் ஆனதும் சோகமான கவிதை என்பது மட்டுமே மாற்றம். அவள் எப்போதும் அணியும் அதே சுகந்த மணம் வீசும் பூக்களிட்ட துப்பட்டாவில் குழந்தைக்கு தூளியாட்டுக்கிறாள்.  டைரக்ட் செய்தவங்க வரவில்லை என்பதால் அதைப்பற்றி எதும் கேள்வி வரவில்லை போலும்  நானும் ஒரு தொலைபேசிக்காக வெளியே சென்றிருந்தேன்.

படத்தைப்பற்றி அழைப்பிதழ் குறிப்பு- A fable about life in a chawl where superstitions, relationships, and crises create a unified communtiy


அடுத்த Haze |kanika gupta- Experimental 6 நிமிடங்கள்
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஒரே மழை  காரிலோ ரயிலிலோ அல்லது எதாவது ஜன்னலிருந்தோ முன் கண்ணாடியிலிருந்தோ  பக்கம் பார்க்கும் கண்ணாடியிலிருந்தோ மழையைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிகப்பு விளக்கில் வெகு நேரம் காத்திருக்கும் வண்டி.  ஒரு ஸ்க்ராப் பேப்பர் ஓவியம். அதும் சிகப்பு கலர்.  நடுவில் அடிக்கடி ஒரு உடைந்த கண்ணாடிக்கு பின் இருக்கும் ஒரு ஓவியம் . பிறகு நகரும் ரயிலிலிருந்து ஒரு தண்டவாளத்தின்  நகர்வையும் பின் அது கிளைத்து பரந்து பிரிகின்ற இவற்றைக் காட்சி படுத்தி முடிந்துவிட்டது.

கேள்விபதில் நேரத்தில் அதை எடுத்த சிறுபெண் அது தன் முதல் முயற்சி என்றும் சில இடங்களை வெறும் மொபைல் கேமிராவில் எடுத்தேன் என்றும் உங்களால் இதை எப்படி விளங்கிக்கொள்ள முடியுமோ அப்படி புரிந்துகொள்ளுங்கள். என்னைப்பொறுத்தவரை இது என்வாழ்க்கையின் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது என்றாள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் தங்கள் தங்கள் எண்ணத்தை வெளியே வைத்த பின் அந்த ஓவியம் தனக்கு பிரியமான ஒன்று என்றும் அது உடைந்தது மற்றும் சிகப்பு குழப்பத்தையும் ,கண்ணாடியின் வழி காட்சி மறைக்கும் மழைதாரை  எதிலும் தெளிவின்மையையும், நகரும் தண்டவாளம் வாழ்வின் எந்த ஒரு ப்ரச்சனையாலும் நின்றுவிடாத ஓட்டத்தையும் குறிப்பதாக ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியத்தின் விளக்கம் போல பேசப்பட்டது எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. முதலில் இது என்ன படம் என்று சிரித்த சில முகங்களும் கூட தலையசைத்துக்கொண்டன.  நிட் ல படிச்சிட்டிருந்த பொண்ணுக்கு எதோ தோன்றி இப்படி படமெடுத்து அதையும் விளக்கி சொன்னாளே அது திறமை. ஒரு பெண் இதை உணர்ந்திருக்கிறேன் எனவே சரியாக விளங்கிக்கொள்ளமுடிகிறது என்று சொன்னபோது கனிகா நீங்கள் என்னைப்போலவே உணர்ந்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருந்துகிறேன் என்று சொன்னது அழகா இருந்தது.
படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு -  A journey from trying to find meaning in everything to a realm beyond meaning.

Bandish| Adwaita Das|Experimental -7 நிமிடங்கள்

அத்வைதா ஒரு கவிதாயினியாம். இப்போ தேடியபோது தெரிந்துகொண்டேன். பந்திஷ் என்பது ஒரு பாடலின் ஒரு ராகத்தின் ஒரு பகுதி மீண்டும் மீண்டும் சிறு வேறுபாடுகளுடன் இசைக்கப்படுவது . ஒரு பெண் தன்னுடைய கேமிராக்கண்களால் தன்னையும் தன் நாளையும் பார்த்துக்கொள்ளும் ஒரு படம். நடப்பது குளிப்பது காபி  , என காலையின் நிகழ்வுகளோடு கூட அவளுடைய உடலையும் அழகையும் உணர்வுகளையும் என எல்லாவற்றையும் வேறொரு கண்களால் பார்ப்பது போல தன் கேமிராவால் தானே படமெடுத்து இருக்கிறார். படம் முடிந்ததும் லீனா அதன் ஒலியமைப்பு சிறப்பாக இருந்ததாக் குறிப்பிட்டார். அத்வைதா அதை தனியாகப் பின்னால் தான் சேர்த்தோம் என்று கூறினார். அவர் நிறுத்தி நிதானமாக பேசுவதே கவிதை வாசிப்பது போல இருந்தது. இன்றைய தினத்தில் செல்ஃபி படமென்பதும் தொடர்ந்து தங்கள் உறவு நட்பு என அனைவருக்கும் படங்களால் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதும் ஆச்சரியமில்லை. அது நம் கையில் இருக்கும் ஒரு தூரிகையைப் போல பேனாவைப்போல அந்நேரத்தை அப்படியே அடுத்தவருக்கு கடத்துகிறது, அதனால் என்கையில் கிடைத்த மொபைலில் இது போன்ற ஒரு முயற்சியை செய்தேன் என்றார் அத்வைதா. முழுக்கமுழுக்க மொபைலில் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட திரைப்படம்.

படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு - A young woman observes herself through the camera seeking a deeper truth.

For you and me |Tanushree Das - 11 நிமிடங்கள்
இந்த படம் முழுவதும் காட்சியில் வருகிற இடங்களிலிருந்து எல்லாம் வேறெங்கோ இருக்கும் இன்னோருவருக்கு செய்தி தட்டச்சப்பட்டுக்கொண்டே இருக்கிறது. திரையின் மேல் ஒரு கர்சர் ஒளிர்ந்து வார்த்தைகள் தட்டச்சும் ஒலியுடன் வந்து விழுகிறது. "நினைவிலிருத்தி  என்னில் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டும் தான் இந்த தூரம் பிரித்திருக்கிறது .  என்னால் எல்லாவற்றையும் முழுமையாக வார்த்தைகளால் இசையால் சொல்லிவிடமுடியாது ஆனால் இவ்வார்த்தைகள் முயற்சிக்கின்றன. இவ்வார்த்தைகளே உனக்கான நான் .”

படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு - A flim of yearning and the struggle to sustain relationships in a society of technological proximity  and physical distances
Show less

January 12, 2014

ஒளிர்

 
பனியின் கரங்கள்
மிடாஸின் துயரம் போல
உயிர்களை
சிலைகளாக்கி செல்கிறது
உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்
தன்னையே
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது

வெம்மைசூழ் நாட்களுக்குள்
தன்னையறிந்துகொண்டால்
விரிந்துகொண்டிருக்கும்
இடைவெளிகளை நிரப்ப
விலைமதிப்பற்றவைகளை
சேகரிக்கத் தொடங்கலாம்