October 30, 2009

தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர்

குட்டிப்பையனுக்கு தமிழில் சில பாடல்கள் மற்றும் திருக்குறள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அவன் இப்போது அதிகம் தமிழ்சொற்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டான். எப்போதும் எனக்கு சாஹியே என்பதும் கூட ’எனக்கு வேண்டும்’எனமாறிவிட்டது. வேணும் என்பது கூட இல்லை ’வேண்டும்’ என்று தூயதமிழில் சொல்கிறான்.அவன் அக்கா தமிழிசைப் போட்டிக்காக ’எனக்குவேண்டும் வரங்களை இசைப்பாய்’ என்ற பாரதியார் பாடலை பாடிக்கொண்டிருந்த காரணம் தான் இந்த ”வேண்டும்”.

சரி பாடல்களை இங்கே போய் கேளுங்கள்.

----------------------------------------
பாடல்களை பதிவேற்ற எம்பெட் செய்ய வேறு சிறந்த தளம் இருக்கிறதா என்பதை அறியப்படுத்துங்கள். தற்போது ஈஸ்னிப்ஸ் மற்றும் இமெம் பயன்படுத்தி வருகிறேன்.
-----------------------------------------

கோவையருகே இருக்கும் ஈச்சனாரி கோவில் சென்றிருந்தபோது புத்தகங்கள் விற்பனை நிலையத்தில் ஒரு பார்வை விட்டுக்கொண்டிருந்தேன். பாரதிதாசன் கவிதைகள் புத்தகத்தை எடுத்த உடன் கடைக்காரர் பார்த்தார் . இவங்க எதோ கவிதைபிரியை என்று மடமட வென கலீல் ஜிப்ரான் பற்றிய இரண்டு சிறுபுத்தகங்கள், ஒரு தாகூர்கதைகள் புத்தகம் என என் பட்டியலை உயர்த்தினார். ரெண்டு நாளில் வாங்க தாகூர் கவிதைகள் எடுத்துவைக்கிறேன் என்றார். ஜிப்ரானுடைய கடிதங்கள் இருந்த புத்தகமும் தாகூர் கதைகளும் நன்றாகவே இருந்தன.

ரயில்பயணத்தில் தாகூர் கதைகள் தான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊருல ஒரு ராஜான்னு ஆரம்பிப்பது பற்றி எழுதி இருந்தார் . எந்த குழந்தைக்கும் அது எந்த ஊர் ராஜா அவர் பெயர் என்னவாக இருக்கும் என்று கேட்க தோன்றாது கதை தானே முக்கியம். அந்த கதையில் பாட்டி தானாக வாய்க்கு வந்தபடி இட்டு கட்டிய கதையில் கதை கேட்கும் சிறுவனுக்காக முடிவை மாற்றிச்சொல்வதை அழகாக எழுதி இருந்தார். உண்மையில் தாகூருக்கு நன்றாக இட்டுகட்ட வந்திருக்கிறது (இதெல்லாம் நான் சொல்லலாமா ஓவரா இருக்கே)..பசி கொண்ட பளிங்குமாளிகை என்ற கதையில் யாரோ இட்டுக்கட்டி சொன்ன கதை என்று ஒரு பிசாசு மாளிகையைப் பற்றி செமத்தியாக சுற்றிவிட்டிருந்தார். கடைசியில் முடிவே சொல்லவில்லை. அதான் கதையை சொல்லிக்கொண்டிருந்தவர் ரயில்பயணத்தின் நடுவில் வேறு பெட்டிக்கு மாறிவிட்டாராமே.. தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர். :)

கனம் கோர்ட்டார் அவர்களே என்ற கதை அந்த காலத்து சிவாஜி படம் போல இருந்தது. காபுலிவாலா என்ற கதை மனதை கனக்கவைத்தது. ஒரு குழந்தைக்கும் தன் குழந்தையை வெளியூரில் விட்டுவந்த ஒரு வியாபாரியான தந்தைக்கும் இருந்த நட்பைப் பற்றிய கதை அது.
இருந்தும் இல்லாமல் என்று ஒரு கதை கண்கள் என்று ஒரு கதை . அந்த இரண்டையும் மட்டும் நம்ம ஊர் சீரியல்காரர்கள் கண்ணில் படவிடக்கூடாது. ஏற்கனவே பெண்களை தியாக பிம்பங்களாக காட்டி அழுகாச்சி குடுப்பவர்களுக்கு நல்ல ஒரு விசயம்.இருந்தும் இல்லாமலில் இறந்து விட்டதாக நினைத்த பெண் தான் உயிரோடு இருப்பதை இறந்து நிரூபித்த கதை. ( என்ன தலை சுத்துத்தா?) கண்களில் அரைவைத்தியரான கணவர் மனைவியின் கண்ணை குருடாக்கிய கதை.

நீங்களும் படித்துப்பாருங்கள் . நயஞ்சோர் சீமான்கள் , மன்னவன் நீயே என்ற இரண்டு கதைகளிலும் நல்ல நையாண்டியோடு வெற்று ஜம்பம் அடிக்கும் இருவரைப்பற்றி சுவாரசியமாக எழுத் இருந்தார். புத்தகத்தை வாங்கச் சொன்ன கடைக்காரருக்கும்.. எதாவது புத்தகம் வாங்கிக்கோயென் என்று கடைக்கு முன்னால் நிறுத்திய கணவருக்கும் நன்றி.

October 27, 2009

ஊருல தீபாவளி

வெகுநாட்களுக்கு பிறகு தென்னிந்தியாவில் (பொள்ளாச்சி) தீபாவளி கொண்டாடினோம். குறைவான பட்டாசை வெடித்து அதிக பட்டாசை வேடிக்கைப் பார்த்தோம்.ஆம்புலன்ஸ் ஊஊ என்று கத்திகொண்டே புகைகக்கும் பட்டாசுகள் எரிச்சலைக் கிளப்பின. ஊரெங்கும் போஸ்டரில் வடிவேலு ”இவங்க மட்டும் எப்படி தீபாவளிக்கு குறைச்சவிலையில் தரமான வெடி தராங்க”ன்னு ஒரு கடையைப் பார்த்து அவ்வ்வ்விக்கொண்டிருந்தார். முதல் நாள் சென்னை ரங்கநாதன் தெருபோல மகராஜா ரோட்டில் மக்கள் தள்ளிக்கொண்டே அடுத்த முனையில் விட்டார்கள். இன்னைக்கு ஒரு நாள் கூட சைக்கிள் பைக்கைவிட்டு இறங்க மாட்டாங்களே என்ற பாராட்டு வார்த்தைகளை வண்டிக்காரர்கள் பெருமையாகக் கேட்டுக் கடந்தார்கள்.


தீபாவளி காட்சிக்கு போகலாம் என யாருக்கோ ஆசை வர நுழைவுச்சீட்டும் மாமனாரே முன்கூட்டி வாங்கித்தந்து விட்டார்கள். படம் ஆதவன். காலையிலிருந்து அது நாலாவது காட்சி. பெண்களை எல்லாம் முந்தின காட்சி முடியும் முன்பாகவே திரையரங்கின் பக்கவாட்டு கதவுக்கருகில் நிற்க சொல்லி இருந்தார்கள். படம் முடிந்து எல்லாரும் எழுந்து நின்று பார்க்கத்தொடங்கியும் வெளியேறாமல் இருந்ததைப் பார்த்து க்ளைமேக்ஸில் மக்களைக் கட்டிப்போடக்கூடிய படமா இது? என்று பெண்கள் எல்லாரும் குழம்பிப்போனோம்.
காலையில் பார்த்தவங்க நல்லா இல்லன்னு சொன்னாங்களே ? மத்த நாள் திரையரங்கு காலியாத்தாங் கிடக்குமுங்க.. எல்லாம் சீரியல் பாத்துட்டு கிடப்பாங் இன்னிக்கு தீவாளிக்கு பாக்கனும்ன்னு தான் வந்திருக்கறது எல்லாம்
என்று ஒரு அம்மா எங்களிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அந்த காட்சியைப்பார்த்த போது இதற்கா அப்படி சிலையா நின்னாங்க என்று நொந்து போனதென்னவோ உண்மை.

எண்ணிக்கை இடாத இருக்கைகளை நாமகப் பிடிச்சிக்கனும். அந்த பக்கம் மக்கள் வெளியேற இந்த பக்கம் பெண்கள் வரிசைக்கொன்றாய் நின்றபடி அவங்கவீட்டு ஆண்களுக்கு இடம்பிடிக்க நானும் என் ஓர்ப்படியும் மெதுவா தலை மறைக்கிற இடமா இருந்தாலும் இரண்டு இருக்கைகளை கணவருக்காக பிடித்து அமர்ந்தோம்.
தலையெல்லாம் படம் பார்க்க ஆரம்பிச்சாத்தெரியாது
இது அப்பாவின் வழக்கமான வசனம்.. மனதிற்குள் எதிரொலித்தது. மற்றபடி தில்லியிலேயே தியேட்டர் எஃபெக்டோடத்தானே சிடியில் பாக்கறோம்..

ஆண்களுக்கு வெளிக்கதவைத் திறந்து விட்டதும் ஜோ என்று ஆட்கள் நுழைந்தனர் . கொஞ்சம் திகில் தொடங்கியது. அதிகப்படி போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் இருக்கைகள் அவர்கள் வழியை மறைத்த கோபத்தில் எட்டி உதைத்ததில் திகில் எகிறியது. நல்லவேளை எங்களவர்கள் வந்து சேர்ந்தனர்.

வடிவேலு தான் கதாநாயகனோ எனும்படி சரி காமெடி பீஸ் படம். லாஜிக் பார்க்காமல் சிரிக்கலாம். மத்தபடி ஒன்றுமில்லை. 25 ரூ நுழைவுச்சீட்டு 60 க்கு விற்கப்பட்டது. அன்று சம்பாதித்தால் தான் உண்டு. ஏற்கனவே ஊரில் இன்னோரு திரையரங்கு மூடப்பட்டுவிட்டது. அதில் தான் முதன் முதலில் நானும் என் நாத்தனாரும் தைரியசாலிகளாக லவ் டுடே பார்க்கச்சென்று வரும்வழியில் யாரோ துரத்துவது போலவே ஓடிவந்தது.

பொள்ளாச்சியில் காலை விருந்துக்குப்பிறகு கோவை. பொள்ளாச்சி கோவை சாலை அன்றைக்கு மட்டும் தான் அத்தனை அமைதி.பேருந்திலிருந்து அதற்கு மேல் பார்த்ததெல்லாம் ஆடை அணிவகுப்பு. புதுச்சட்டை அணிந்த குழந்தைகளும் பட்டுசேலையோ பளபளா சேலையோ அணிந்த அம்மாக்கள் ( நாங்க சுடிதாருங்கோ) மொட மொட பளீர் வெள்ளைஉடையும் பளீர் விபூதியுமாக அப்பாக்களும் ஈச்சனாரியிலும் மகாலக்‌ஷ்மி கோயிலிலும் குவிந்திருந்தனர். புரட்டாசி சனிக்கிழமை தீபாவளி சிறப்பென்று பெருமாள் கோயிவிலில் மக்கள் அலை கரைபுரண்டது.

அடிக்கிற வெயிலில் தில்லி பரவாயில்லை என்றானது கோவையில். அதில் பெரும்கொடுமை சின்னக்குழந்தைகளின் தீபாவளி உடைகள் எல்லாம் பாலியஸ்டரில் கழுத்திலிருந்து கணுக்கால் வரை மூடி ஜிகுஜிகு வேலைப்பாடுகளோடு இருந்தது. புது உடை என்ற மகிழ்ச்சி அதை பொருட்படுத்தாமல் வேர்வையில் குளித்திருந்தார்கள். தீபாவளிக்கு அடுத்த ரெண்டு நாட்களும் நாங்கள் இந்த ஆடை அணிவகுப்பை ஆழியார் அருவியில் கோவைக்கருகில் சென்ற கோயில்கள் என்று எல்லா இடங்களிலும் கண்டு களித்தோம். எப்ப கிராமப்பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போகிறோமோ தெரியலை.

குறிப்பு: தீபாவளி பத்தி தொடர்பதிவு எதாச்சும் எழுதனும்ன்னு ஆயில்யன் முன்னாலேயே கூப்பிட்டிருக்கார்.. இதை அதுக்குன்னு இந்த குறிப்பில் போட்டுக்கிறேன்ப்பா..

October 15, 2009

சிறுமுயற்சியில் இன்னுமொரு முயற்சி

கவிஞர் தாமரையின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ( யாருக்குத்தான் பிடிக்காதுங்கறீங்களா? )

பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்த பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்புகளற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ் வார்த்தைகளை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்த புதிய தமிழ்வார்த்தைகளை என்னவென்று தேடி தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.

தாமரை அவர்களிடம் நான் கண்ட சிறு பேட்டியினை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.

என் முயற்சிக்கு ஊக்கங்களும் , அவற்றை திறம்பட செய்ய தங்கள் அறிவுரைகளையும் நேரத்தையும் தந்து உதவிவரும் நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியூரில் இருப்பதால் பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரிந்துணர்தலுக்கு நன்றி