முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் "இலக்கியமும் நகைச்சுவையும் " உரை கேட்டு வாய்விட்டு சிரித்து சனிக்கிழமை மாலையை ஒரு சந்தோஷ மாலையாக்கிக் கொண்டோம். சரளமாக துணுக்குத் தோரணங்களை உரையெங்கும் அள்ளித் தெளித்தார். நகைச்சுவை மன்றங்களைத் தொடர்ந்து பல இடங்களில் துவக்கி வைத்து வருவதாயும் நீங்களும் அப்படி செய்யுங்களேன் என்றார். நல்ல விஷயம் தான்.
மதுரைத் தூங்கா நகரம் என்று ஏன் பெயர்வந்ததாம்.. விடியவிடிய
பட்டிமன்றங்கள் நடக்குமாம். பத்துமணிக்கு ஆரம்பிப்பதால் பத்துமன்றம் என்றார். நகைச்சுவைகளில் அறுவை , கடி ,சீசன்
அனுபவ நகைச்சுவைகளை பட்டியலிட்டு உதாரணத்துடன் ஆரம்பித்தார். மேடையைத் தவிர மற்ற இடங்களில் இருளை வழக்கம்போல செய்த சங்கத்துக்கு உடனேயே ஒரு வேண்டுகோள் விடுத்தார். மக்கள் சிரிக்கிறார்களா பல்லை க்
கடித்துக் கொண்டிருக்கிரார்களா என்று எனக்கு தெரியவேண்டாமா? உடனே ஒளியூட்டப்பட்டது அரங்கம்.
கஷ்டத்தில் கூட ஒருத்தருக்கு வந்த நகைச்சுவையைப் பாருங்களேன். ஒருத்தர் பனியான நகரத்தில் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தாராம் நாயை அடிக்கக் கல்லைத்தேட அது பனியால் தரையோடு ஒட்டிக்கொண்டு வரவில்லையாம்.
"என்னடா ஊரு இது தலைகீழா இருக்குது. கட்டிவைக்கவேண்டிய நாயை அவிழ்த்துவிட்டு கல்லைக் கட்டி வைத்திருக்கிறார்களே." என்றாராம்.
எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி விட்டார்கள் மெகாசீரியலில் மூழ்கி இருக்கிறார்கள் . சைக்கிள் கத்துக்க ஆரம்பிக்கும் போது இறங்கத் தெரியாமால் போஸ்ட் கம்பி எதும் கிடைக்கும் வரை சுற்றுவது போல் இயக்குனர்கள் முடிக்கத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றார்.
இலக்கியத்தில் இருந்து சில நகைச்சுவைகள். சிலேடை , வஞ்சப்புகழ்ச்சி , உயர்வு நவிற்சி வகைக்கு உதாரணங்களுடன் விளக்கினார் . ஒளவை தொண்டைமானின் ஆயுதக்கிடங்குக்கு போய் "அதியமானிடம் எல்லாம் முனைமழுங்கிய கத்தி தான் இருக்கிறது நீ எத்தனை பளபளப்பாய் வைத்திருக்கிறாய் ..... ஆனால் அதியமான் அடிக்கடி போருக்கு போவான்" என்று வஞ்சப்புகழ்ச்சியில் உண்மையை உணர்த்தியதை குறிப்பிட்டார்.
ஒருமுறை அரசர் ஒருவர் வேம்பத்தூர் பிச்சுவயர் என்பவரை மன்றத்தில் "வேம்புக்கு இங்கு இடமில்லை" என்று சொன்னாராம். அந்தப் புலவரும் உடனே வேம்பு அரசோடு தான் இருக்கும் என்றாராம் . வேப்பமரம் அரசமரம் என்ற சிலேடையில்.
ஒரு அரசர் கடைமடையில் பிறந்த புலவரைப் பார்த்து வாருங்கள் "கடைமடையாரே" என்று கடைசியாக வந்த மடையரே என்று பொருள் படும்படி கூற அவர் மன்றத்தலைவரே எனப்பொருள் படும்படியும் மடையர்களுக்கு தலைவரே எனும்படியும் " மடத்தலைவரே" என்று கூறினாராம்.
பரத்தை வீட்டுக்கு போன கணவனை வாசலில் வைத்து மனைவி எங்கே போனாய் எனக்கேட்காமல் ...நேற்றுப் போனவீட்டில் பாடினாயோ என்று கேட்டாளாம். ஆம் என்றானாம். காட்டுல பேய் அழுகுது என்றாள் அன்னை நரி ஊளையிடுகிறது என்று சொன்னாள் தோழி 'நான் நீ என்றேன் போ , என்று சொன்னாளாம்.
வாரியார் பேச்சில் வரும் நகைச்சுவைகளைக் குறிப்பிட்டு சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய பேச்சுக்களை சிறுவயதில் கேட்டிருந்தாலும் நினைவு இல்லை. காதல் கடவுளைக் காமன் என்று ஏன் சொல்லுகிறோமாம் அவர் common god என்பதாலாம் [கிரேக்கமதத்தில் கூட அம்புடன் இருக்கும்] காதல் கடவுள் போல் . குழந்தையைக் கூப்பிட்டு முருகனின் தந்தை யார் எனக்கேட்டால் சிவனாக நடித்த சிவாஜியைக் குறிப்பிட்டதாம் .சிவா ஜி அதாவது ஹிந்தி மரியாதை விகிதியான ஜி எனவே குழந்தை சரியான விடை தான் தந்தது என்றாராம் வாரியார்.
நடுவில் வெண்பா பாடுவதுபற்றியும் மற்றும் இடையிடையே சில கேள்விகள் கேட்டார் . பயப்படாதீர்கள் " வந்திருக்கக்கூடாதோ" என நினைக்க வைக்கமாட்டேன்.. கேள்விக்கு சிறு இடைவெளியில்
நானே விடையும் சொல்லிவிடுவேன். ஆனால் வெண்பா மற்றும்
இலக்கணங்கள் எல்லாம் 8 வகுப்பில் படித்தது என்பதை மட்டும்
மறக்காதீர்கள் என்றார்.
காளமேகப் புலவரின் வசைபாடும் பாடல்களில் கூட நகைச்சுவை மிகுந்திருப்பதை சுட்டினார். சுருக்க வேண்டும் குடுமியை எனும் பாட்டைக் கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பின் மகத்துவத்தை சிரித்துக் கொண்டு இருப்பதால் தான் மனிதன் என திருக்குறள் சொல்கிறது. வடிவேலு இன்று நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கும் காரணம் மதுரைத் தமிழ் என்றார் .மதுரையில் இன்னும் வழக்கத்தில் பல பழய தமிழ் சொற்கள் இருப்பதைக் குறிப்பிட்டு இன்று தமிழில் குழந்தைகளுக்கு தமிழில் வைப்பது அரிகி வருவதைக் கவலையாகக் குறிப்பிட்டார்.
ஒரு மதுரைக்காரர் சென்னை சென்றாராம் . பஸ்ஸில் மீதி சில்லறைக்கு "அண்ணே பையத் தாங்க" என்றாராம் .மதுரைக்காரர் பேசிய தமிழைப் புரியாமல் நடத்துனர் பயந்து போனாராம். என்னடா 50 பைசா சில்லறைக்கு இந்த ஆள் 500 ரு பை யைக்கேக்கறானே என்று.
மதுரைக்காரர் சொன்னது "பைய தாங்க " என்றால் மெதுவாகத் தாங்க என்று அர்த்தம்.
முடிவில் அவர் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தார் .உடனடியாக பெட்டி காலியாகியது.
எங்களுக்கு கிடைத்தது பேசும் கலை எனும் அவருடைய புத்தகம் . அதில் அவருடைய கையொப்பம் வாங்கி வந்தோம். தமிழை வளர்க்கும் இன்னொரு வழி நகைச்சுவை என்று புது வழி கண்டிருக்கிறார் .