June 22, 2013

ரிஷிகேஷ் ராஃப்டிங்

River Water Grade
Grade 1: Easy, small waves. No obstacles, 
Grade 2: Moderate difficulty with clear passages, 
Grade 3: Difficult, high irregular waves, narrow passages- require precise maneuvering, 
Grade 4: Difficult, powerful waves. Very precise maneuvering required, 
Grade 5: Extremely difficult, violent, highly congested. 

Water Grade 2/3 in BrahmpuriShivpuri Water Grade 2/3 Plus, Marine Drive 3/4 Plus and Kaudiyala 4 Plus.

நாங்கள் சென்ற ப்ரம்மபுரியிலிருந்து வரும் பகுதியில் 2மற்றும் 3 க்ரேட் களில் அலை இருக்கும் .அந்தப் பகுதி மட்டும் தான் நாங்கள் சென்றபோது ராஃப்டிங் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும். மற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருந்தார்கள்.
View My Saved Places in a larger map

கைஸ் முன்னேறுங்கள் என்றதும் எல்லாரும் ஒரே நேரத்தில் துடுப்பிடுகிறோமா என்று பார்த்து தாமதித்து செய்பவர்கள்,  ஒப்புக்குச் செய்கிறவர்களுக்கு பின்னாலிருந்து சளேர் சளேர் என்று தண்ணீரை அடித்து கமாண்டரின் மிரட்டல் வரும். வளைவுகளில் எங்கெங்கே தண்ணீர் வேகம் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப முன்னேறுகள் என்றோ பின்னோக்கி என்றோ அவர் சொல்ல , நாங்கள் துடுப்பிட,கங்கையின் வேகத்தோடு செல்கின்ற படகுக்கு சரியான பாதையில் செல்ல சிறு உதவியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருந்தோம். 


இருந்தாலும் நாம் துடுப்பிடுவதாலா இந்த படகு செல்கிறது என்பதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. எங்களிடமிருந்து மொபைல் , கேமிரா மற்று பர்ஸ் போன்ற பொருட்களை ட்ரை பேக் என்ற ஒன்றில் பத்திரப்படுத்தி இருந்ததால் நாங்கள் நிறைய படமெடுக்க இயலவில்லை.

சரி இப்போ ரேப்பிட் இல்ல நீங்கள் யாரல்லாம் தண்ணியில் குதிக்க விரும்புறீங்களோ குதித்துவிட்டு இந்த கயிற்றை பிடித்துக்கொள்ளுங்கள் என்று படகின் முனையில் இருந்த ப்ளூ ரோப்பை குறிப்பிட்டார். முதலில் குதித்த பையன் கயிற்றை பிடிக்கற தூரத்தில் இல்லாமல் குதித்ததும் நீரோடு செல்ல ஆரம்பித்தான். கல்யாண்சிங்கை நாங்களெல்லாம் பதட்டத்தோடு பார்த்தோம். அந்தப்பையன் முன்பே சொன்னது போல பயமாக இருந்தால் செய்யவேண்டிய சைகைகளை செய்யவில்லை மற்றும் எப்படியும் காப்பாத்திடுவார் என்கிற தைரியத்தோடு நீரோடு படகையே பார்த்தபடி சென்று கொண்டு இருந்தான். கவசத்தின் துணையால் அவன் மிதந்து கொண்டிருந்தான். கல்யாண் சிங் எங்களுக்கு படகு அவனுக்கருகில் செல்ல வேண்டிய அளவுக்கான துடுப்பு போடும் கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே நீரில் குதித்து கயிறை அவன் கையில் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொன்னார்.

பின் மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் குதித்து பக்கவாட்டில் இருந்த கயிற்றை பிடித்தபடி படகோடு பயணித்தனர். படகு கங்கையின் ஓட்டத்தில் தன்னைப்போல சென்று கொண்டிருந்தது. நான் மட்டும் படகில் இருந்தபடி படமெடுத்துக்கொண்டிருந்தேன். ரேப்பிட் வரப்போகிறது உடனே அனைவரும் படகில் ஏறுங்கள்   படகில் ஏறுங்கள் என்றபடி ஒவ்வொருவரையாக உள்ளே இழுத்துப்போட்டு விட்டு மீண்டும் கட்டளைகள். பாறைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும்போது மகனுக்கு டைட்டானிக் நினைவுக்கு வந்துவிட்டது. நீரின் போக்கிற்காக சிறிது தூரம் பாறையை நோக்கி சென்று பின் தான் திசை திருப்ப வேண்டி இருக்கிறது. நீங்கள் அப்பாறையில் மோதப்போகிறீர்களா என்று அவன் பின்னால் திரும்பி சிரித்தான்.

அவன் படகின் முனையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். நீங்கள் எல்லாம் என் அடிமைகள் . எனக்காக படகு செலுத்துப்பவர்கள் என்று என்னிடம் அவன்  ரகசியமாகச் சொன்னதை நான் கல்யாண்சிங்கிடம் சொல்லிவிட்டேன். அடேய் அப்படியா சொன்னே என்று அவன் மேல் தண்ணீரைத்தெளித்ததும் அவன் நான் சொல்லவே இல்லை என்று பல்டி அடித்துவிட்டான். பயத்தில் தான்..:)

வண்டி  பத்து நிமிசம் நிற்கும் . எதாவது வாங்கிக்குடிக்கறவங்க குடிங்க.. நூடுல்ஸ் செய்து தருவாங்க  சாப்பிடுங்க. என்றபடி ட்ரைவரும் கண்டக்டரும் இறங்கிப்போனாங்க.. பஸ் ஸா படகா..? தொடர்ந்து துடுப்பு போட்டதில் எல்லாரும் சோர்வடைந்ததுதான் ஆனால் சாப்பிடவும்  பயம். சரி ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம் என்று கேட்டால் 12 ரூ பாட்டில் 40 ரூ . சரி வாங்கறோம் என்றதும் நீருக்குள் இருந்து ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்து அதன் முனையில் இருந்த மூட்டையிலிருந்து பாட்டில்களை எடுக்கிறார்கள். இயற்கையான குளிர்ப்பெட்டி. அதான் கங்கை ஐஸ்கட்டியாக குளிர்கிறதே.

என்ன மேடம் நீங்கள் மட்டும் குதிக்கலையே என்று கல்யாண் கேட்டதும் நான் படமெடுத்துவிட்டு குதிக்கலாம் என்று நினைத்தேன் என்றேன். சரி கேமிரா உமன் என்று எல்லாரும் கேலிசெய்தார்கள். அடுத்த இடத்தில் நீங்கள் தான் முதலில் ..என்றார்.  முதலில் எங்கள் கேமிராவில் எங்கள் குடும்பத்தை எடுத்தேன் மாணவர்களுக்காக அவர்கள் கேமிராவில் அவர்களையும் படமெடுத்துக்கொடுத்துவிட்டுப் பார்க்கும்போது ரேப்பிட் வந்துவிட்டது என்று எல்லாரையும் திரும்ப ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்கு உதவச்சென்று விட்டேன்.

அடுத்த அமைதியான இடம் வந்ததும் நானும் நீரில் குதித்து பக்கக்கயிற்றை பிடித்தபடி பயணித்தேன்.  8 பயணிகளும் ஒரே சமயத்தில் நீரில் இருந்தோம். பிறகு மீண்டும் ராஃப்டிங் பயணம் . இந்தமுறை அதிக அலைகள் நிறைந்த இடம் வந்த போது (குறைந்த பட்சம் கோணம் 50 - 60 இருக்கலாம் என்று நினைக்கிறேன்) படகை அலைகள் உயரத்தூக்கித் தூக்கிப்போட்டது. நாங்கள் தொடர்ந்து கல்யாண்சிங்கின் கட்டளைகளுக்கு ஏற்ப துடுப்பை செலுத்திக்கொண்டிருந்தோம்.

என் கவனம் கட்டளைகளுக்கு மத்தியில்  நீரின் வேகத்தையும் படகின் ஆட்டத்தையும் கவனித்துக்கொண்டே  முன் வரிசையி கயிற்றைப்பிடித்திருக்கிறக் குட்டிப்பையன்  இதை எப்படி அனுபவிக்கிறான் என்று பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தது. கார்டூன் மற்றும் சினிமா பார்க்கும் போது அவற்றைவிட குழந்தைகளின் முகபாவங்களைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த விசயம். மகளின் முகம் தெரிகின்ற தூரத்தில் இருந்ததால் அவள் ரசித்துப் பயணிப்பதை நான் அறிந்துகொண்டேன்.

ராம்ஜூலாவைத்தாண்டி ரிஷிகேஷ் டேக்ஸி ஸ்டாண்ட் அருகில் இருந்த படிக்கட்டுகளிடம் எங்கள் பயணம் நிறைவுற்றது.  கல்யாண்சிங் எல்லாரும் மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக வருவீர்கள் எனக்குத்தெரியும். நம்பர் எழுதிக்கொள்ளுங்கள் என்று தன் எண்ணை எல்லாருக்கும் கொடுத்தார். எதிர்பாராமல் அமைந்த திரில்லிங் பயணம்.

இப்போது பதிவு எழுத ராஃப்டிங் க்ரேட் காப்பி பேஸ்ட் செய்வதற்காக கூகிள் செய்தபோது. அடுத்த இரண்டு நாட்களில் இதே போல பயணித்த ஒரு படகு கவிழ்ந்து விட்ட செய்தி. குர்க்காவுனைச் சேர்ந்த 30 வயது பெண்மணி இறந்துபோய்விட்டாராம். அடுத்தபடகின் கைடும் வந்து ஒவ்வொருவராய் காப்பாற்றியும் இந்தப்பெண்மணி அதிக நீரைக்குடித்திருக்கிறார்.

இன்று செய்திகளில் காணும் , தான்  பயணித்த அதே கங்கையின் சீற்றத்தைக் கண்டு குட்டிப்பையனுக்கு  தூங்கச்செல்லும் முன் கலக்கம் என்றாலும் அன்று அவன் காட்டிய தைரியம் எனக்கு என்றும் மறக்காது.  நீச்சல்  கற்றுக்கொள்ள பயந்த அவனை மிகவும் கட்டாயப்படுத்தி சேர்த்திருந்தேன். இன்று எங்களனைவரையும் விட அதிகமாக கற்றுக்கொண்டவனும் அவனே. நீச்சல் தெரிந்ததால் இது போன்ற நீர் விளையாட்டுகளில் பயமின்றி இருப்பார்கள் என்பது உண்மையாகிவிட்டது.

முந்தையபதிவு - 







June 21, 2013

வெள்ளத்திற்கு முன்பு வள்ளம் தள்ளுதல்

சென்ற பதிவு
பழைய பரமசிவம் - புதிய பரமசிவன்  எழுதிய தினத்தில் புதிய பரமசிவனையும் கங்கை அன்போடு தன்னுடன்  தனக்கே தனக்கென்று அழைத்துச் சென்றுவிட்டாள். விடாது பரமார்த் ஆசிரமத்தலைவர் மீண்டும் சிவன் செய்து வைப்போம் என்று பேட்டியளித்திருக்கிறார்.

நாங்கள் சென்றபோது ( 6 ம் தேதி) வெள்ளம் 17 ம் தேதி
அல்மோரா பயணத்திலும் பின்சர் பயணத்திலும் தொடர்ந்து புதிய புதிய கட்டிடங்கள் மலையின் பக்கவாட்டில் தூணெழுப்பி கட்டும் முறை திகிலையே கொடுத்தது.  இயற்கையை முழுவதுமாக குறைத்து மதிப்பிட்டுவிட்டு வருத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

கங்கையில் தினம் காலையில் குளிக்கவரும் அக்கம்பக்கத்தவர்கள் நீரையும் சூரியனையும் வணங்கிவிட்டு வீடு செல்லும் போது ஒரு தூக்குச்சட்டியில் நீருடன் செல்கிறார்கள். வீட்டில் சென்று அந்நீரை தெளிப்பது வழக்கம் என்றும் சொல்கிறார்கள். குளிக்க இறங்கும் முன் நீரை வணங்கிக்குளிக்க செல்வதை சிறு குழந்தைகள் கூட செய்கின்றனர். 

நாங்கள் ராஃப்டிங் செல்ல பணம் கட்டிவிட்டு காத்திருந்தோம். படகோடு ஒரு ஜீப் வந்து அழைத்துச்சென்றது. அதில் படகோட்டியும் கைடு ஒருவரும் நம்முடன் வருவார்கள். சில கிமீ தொலைவில் உள்ள ப்ரம்மபுரி என்ற இடத்திற்கு செல்வதற்குள் அந்த வாகனஓட்டி என்னைத் திகிலடையவைத்தார். ஒரு கோட்டினை சிறிதாக்க அருகில் பெரியக்கோட்டினை வரைவது போல  கங்கையில் படகோட்டப் (படகை ஓட்டறது எப்படின்னு முன்னப்பின்ன தெரியாது வேற)போகிற பயத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் ஜீப்பை ஓட்டியவர். அப்பாடா வரும் வழியில் படகில் தானே வரப்போகிறோம் என்கிற அளவுக்கு. 
போகும் வழியெல்லாம் பக்கவாட்டில் பள்ளத்தாக்கில் கங்கையின் வேகமும் அதில் படகோட்டுபவர்களும் கண்களுக்கு தென்பட்டுக்கொண்டே இருந்தார்கள். த்ரில்லிங்காக இருந்தது. ப்ரம்மபுரி வந்ததும் எல்லாருக்கும் அவரவர்க்கு ஒரு துடுப்பும் காற்றடைத்த உயிர்காப்பு கவசமும் கிடைத்தது..


வழிகாட்டியின் பெயர் கல்யாண்சிங். இருக்கக்கட்டிக்கொள்ளவில்லை என்றால்  உயிர்காக்கும் கவசங்கள்  தனியாக மிதக்கும் நீங்கள் தண்ணீரில் நழுவிப்போய்விடுவீர்கள் பரவாயில்லையா என்றபடி சிரித்துக்கொண்டே குழந்தைகளுக்கும் இறுக்கி அணிவித்தார்.











   















பாதையில் இறங்கிப்போகும் போது கவனமாக செல்லுங்கள். போகும் வரும் மக்களுக்கு வழிவிட்டபடி என்று சொல்லும்போது புரியவில்லை எதற்கு இந்தக்கட்டளை என்று. . பாதிவழிக்கு மேல் இறங்கும் போது எங்கள் எதிரில் ஏறிவந்துகொண்டிருந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர் கீழிருந்து திட்டிக்கொண்டிருந்தார்கள். பின்னால் திரும்பியபோது  படகை தூக்கிக்கொண்டு இறங்குபவர்கள் . அவரவர் இடத்தில் குனிந்தபடி இருங்கள் நாங்கள் கடந்துவிடுவோம் என்று சொல்லியபடி படகைத்தலையில் கவிழ்த்துக்கொண்டு அவர்கள் கீழிறங்கினார்கள்.


படகில் ஏறுவதற்கு முன்பு ஒரு ராணுவத்தளபதியைப்போல கைஸ்( guys) என்ன கட்டளை வருகிறதோ அதை காது கொடுத்துக் கேட்க வேண்டும் சொல்லும்போதே அருகில் இருக்கும் மற்றொரு குழுவை வேடிக்கைப்பார்த்த எங்கள் குழுப்பையன் ஒருவன் மீது துடுப்பினால் நீர் அள்ளி வீசி மிரட்டினார். யாருக்கெல்லாம் நீச்சல் தெரியும்? என்ற கேள்விக்கு நாங்கள் பெருமையாக தெரியும் என்றொம். ஆனால் நீச்சல் குள நீச்சல் என்று பம்மிக்கொண்டே சொன்னதும். பெரிய சிரிப்போடு அது என்னத்துக்கு உதவும் சரி நீரிடம் பயமில்லை. நல்லது. என்றார்.






நீச்சல் தெரிந்தவர்கள் என்று சொன்னால் காப்பாத்தப்படும்போது முன்னுரிமை குறையுமா என்ற போது கல்யாண் திட்டவட்டமாக எனக்கு எல்லாரும் சமம் தான் என்று கம்பீரமாகச் சொன்னார். முன்னேறு என்று சொல்லும்போது துடுப்பை பின்னோக்கி செலுத்தவேண்டும். பின்னோக்கி என்று சொல்லும்போது துடுப்பு எதிர்ப்புறமாக.. நிறுத்துங்கள் என்று சொன்னால் துடுப்பு உங்கள் துடைகள் மேல் இருக்கவேண்டும். துடுப்புகளை இறுகப்பற்றுவதற்கான முறைகள்  மற்றும் கட்டளைகள் .


பிறகு நீரில் விழுந்தால் அவர்களை எப்படி படகில் இருப்பவர்கள் காப்பாற்ற முயலவேண்டும் என்று ஒரு பயிற்சி . நாங்கள் - நான்குபேர் . மற்றும் நான்கு கல்லூரிமாணவர்கள். கங்கா மாதா க்கு ஜெய் என்றபடி நீரில் இறங்கியது படகு. எனக்கு ஒரே பயம் துடுப்பை இரண்டு கைகளால் பிடித்திருக்கிறோம். படகின் பக்கச்சுவரோ காற்றடைத்த பலூனாக வழுக்கென்றிருக்கிறது அதில் உட்பக்கமாகவும் உட்காராமல் நன்றாக வெளிப்பக்கமாக உட்காரவேண்டும் . அடிப்பாகத்திற்கும் பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட வெளியில் காலை வாகற்ற ஒரு முறையில் நுழைத்துக்கொண்டால் கிடைக்கின்ற பிடிமானம் மட்டும் தான் துணை.














June 17, 2013

பழைய பரமசிவம் - புதிய பரமசிவன் ( ரிஷிகேஷ் -1 )

ஹரித்வார் ரிஷிகேஷ் என்று போனமுறை தொடர்பதிவில் ஏனோ ( வழக்கமே அதானே ..என்ன ஏனோ) ரிஷிகேஷில் பாதியில் நிறுத்திவிட்டேன். ஆனால் அதற்கு காரணம் இருந்திருக்கிறது. மீண்டும் அதிக தூரம் காரில் பயணிக்க ஒரு ஊர் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தப்போது ரிஷிகேஷ் போகலாம். போனமுறையே குளிரில் நடுங்கிக்கொண்டு கங்கையை தலையில் தெளித்துவிட்டு வந்தோமே..வெயில் நேரத்தில் முங்கி எழுந்துவிடவேண்டும் என்று திட்டம். குளிர் காலத்தில் கோவிலூர் மடம் அருகில் இருந்த கங்கைக்கரையில் சிறிது தூரம் ( அதாவது பாதி கங்கையை காங்கிரீட் பாதையில் கடந்து) நடந்தால் தான்  கொஞ்சம் கங்கை ஓடிக்கொண்டிருந்தது . 
வெயில் நேரத்தில் கங்கை இரண்டு கரையையும் தொட்டபடி ஓடிக்கொண்டிருந்தது.  காலையில் கிளம்பி தாபாக்களில் உணவு உண்டு ஹரித்வார் நெருங்க நெருங்க வாகனநெரிசலில் 3 மணிக்கு சென்று சேர்ந்தோம். மாலையில்  அடித்த வெயிலுக்கு தைரியமாக கங்கைக்குள் இறங்கினால் அது  பனிக்கட்டியாக குளிர்ந்திருந்தது. 
கால்களாவது சிறிது நேரத்தில் பழகிக்கொண்டது. கைகளில் தண்ணீரை அளைந்தால் வலி. ரத்தம் கட்டியது போன்ற தோற்றம்.  
அறைக்குத் திரும்பிய போது நல்ல மழை. கங்கை எங்களைக் குளிர்வித்திருக்க.. மழை ஊரைக் குளிர்வித்தது. அறை ஜன்னலில் மழைக்கு ஒதுங்கிய குரங்கார். 
(பழைய பரமசிவம்)

சிறுது நேரத்தில் ஷேர் ஆட்டோவில் ராம் ஜூலா போய் இறங்கி அங்கிருந்து  கங்கையைக் கடந்து பரமார்த் ஆசிரம கங்கை ஆரத்தி. முன்பு பார்த்த சிவனை  கங்கை அன்பு வெள்ளமாக வந்து அழைத்து சென்று விட்டாள்.
  
.


 புதிய பரமசிவன் 
போனமுறை மிகச்சிறியவன் மகன். இந்தமுறை கொஞ்சம் பெரியவன். அதனால் ராம்ஜூலாவில் கங்கையைக் கடந்தது அவனுக்கு பயமும் ஆச்சரியமும் கலந்த உணர்வாக இருந்தது. திரும்பும் வழியில் Rafting  செல்வது பற்றிய பேச்சு எழுந்தது. ஆமா என் தோழிகள் கூட ரிஷிகேஷுக்கு போறியா? ராஃப்டிங் செய்யவா?  என்று கேட்டதாகப் பேச்சோடு வந்தது. மறுநாள் எழுந்து விசாரிக்கலாம் என்று முடிவு எடுத்துக்கொண்டோம். 

முதலில் மகனுடைய வயது போதாதென்றால் அப்பாவும் மகளும் செல்லலாம் என்று பேசிக்கொண்டிருந்தபோது மகன் நானில்லாமல் யாருமே போகக்கூடாது என்றான். ஆனால் அடுத்தநாள் அவன் வயதுக்கும் வரலாம் என்றதும் நெஞ்சு தடதட அவருக்கு. பணம் கொடுக்கும் முன் நாங்கள் மதிய உணவுக்கு செல்லவேண்டி இருந்ததால். மனதைத் தயார்படுத்த நேரம் கொடுங்கள் என்று நெஞ்சைத்தடவிக்கொண்டிருந்தார். ( தொடரும்)