Showing posts with label பதின்மம். Show all posts
Showing posts with label பதின்மம். Show all posts

February 15, 2010

A page from my teenage diary

பகிரப்படாத டைரிப்பக்கங்களைப் பகிர சந்தனமுல்லை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் டைரிக்குறிப்புக்களில் நுழைந்தபோதும் சரி , அமிர்தவர்ஷினி அம்மாவின் படித்தபோதும் சரி அந்த பதின்மங்களின் காலச்சுழலுக்குள் கொஞ்சநேரம் சிக்கிக்கொண்டேன். சிறுவயதில் டைரி எழுதும் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் எழுதத்தொடங்கிய காலத்தில் ”not allowed to watch" என்ற வாசகத்துடனே தான் என்னுடைய டைரியும் தொடங்கியது. எதோ கொஞ்சம் கிறுக்கி இருக்கிறேன்..


நடிகை ராதா என்றால் அத்தனை ப்ரியமாக கட்டிங் சேகரித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் வீட்டில் சர்க்குலேசன் புக் தான் . இதற்காகவே தோழிகள் வீட்டுக்குப் போய் புத்தகங்களிலிருந்து கட்டிங்க் கொண்டுவருவேன். பொங்கல் வாழ்த்து அட்டையென்றாலும் ராதாதான் வாங்குவேன். இல்லாவிட்டால் நதியா. உடைகளுக்கெல்லாம் நதியாவைப்போலவே அனைத்தும் மேட்சிங்காக தேடி வாங்குவேன். தோடுக்கு மேட்சிங் பார்ப்பதில் மேட்சிங் ப்ளவுஸ் கூட எந்தப் பெண்ணும் என்னை விட சீக்கிரம் வாங்கிவிடுவாள். நன்றாக நினைவிருக்கிறது, ஒரு மெருன் கலர் மிடி இருந்தது என்னிடம் அதற்கு மேட்சாக நான் வாங்கிய தோடைப் பார்த்துவிட்டு என் கணக்கு டீச்சர் எப்படித்தான் இவ தோடுவாங்குவாளோ என்று சொல்லி மத்த டீச்சரிடம் எல்லாம் என்னை அழைத்துக் காமித்துக்கொண்டிருந்தார்கள்.

என்ன அலங்காரம் செய்தாலும் சோடாபுட்டி ( எனக்கு பதின்மத்தில் கிடைத்த பட்டப்பெயர்) ஒன்று குறுக்கே தடை செய்துகொண்டிருந்தது. அடிக்கடி ஞாபக மறதியாக எங்காவது வைத்து அந்த கறுப்பு ப்ரேம் உடைந்து கொண்டே இருக்கும் . அதும் கண்ணாடியின் காது தான் அடிக்கடி உடையும். பள்ளிக்கு சீக்கிரம் கிளம்பி கடை திறந்ததும் ஒட்டிக்கொண்டோ அல்லது வேறு காது போட்டோ கண்ணாடியை சரி செய்து போட்டுச்செல்வேன்..

என் வீட்டுக்கருகில் என் பள்ளித்தோழிகள் எப்போதுமே இருந்ததில்லை. அதிலும் நெருங்கியத்தோழிகள் வீடுகள் எல்லாம் ஊரின் மற்ற கோடியிலேயே இருந்தது. ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தோழி மணிமேகலையின் வீட்டுக்கு செல்வதாக கிளம்பிவிட்டேன். எனக்கு சைக்கிள் கிடையாது அப்போது. மதிய வெயிலில் நடந்தேன் நடந்தேன் நடந்துகிட்டே இருந்தேன். எப்படியோ அவள் வீடு சேருகிற வரை திக் திக் தான். முதன் முறையாக தோழி வீட்டுக்கு சென்ற நினைவை என்னால் மறக்கவே முடியாது. பள்ளியோடே தன் படிப்பை நிறுத்திவிட்ட முஸ்லீம் தோழியின் கல்யாணத்திற்காக முதன் முதலாக நானும் என் தோழி பாலாவும் பஸ்ஸில் அம்பகரத்தூர் வரை பயணப்பட்டதும் வித்தியாசமான அனுபவம்.

கவலையின்றி திரிந்த காலம் அந்த 17 வரை தான்.. பள்ளியில் நாங்கள் மூவர் கூட்டணியாக இருந்தோம். விளையாட்டு திடலின் இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரம் வரை தோள் மேல் கையாக வலம் வருவோம்.
-------------------------
அம்பிகா சொன்னது போல உண்மைகளைப் பகிரமுடியாததால் டைரியை டைரியாக பயன்படுத்தாத மேதை நான்..
அவைகள் எல்லாம் எம்.எஸ் உதயமூர்த்தியின் வரிகளும் , சில சிறுகதைகளின் அடிக்கோடிடக்கூடிய பகுதிகளும், என்னைப் பாதித்த கவிதைகளும் என நிரம்பிய பக்கங்கள். அவற்றின் வரிசையை இப்போது வாசிக்கும் போது வருடங்களின் போக்கில் நிகழ்ந்த விசயங்களுக்கும் அந்த பிடித்தமான பகிர்வுகளாகப் பகிரப்பட்டவைக்கும் ஒரு தொடர்பு தெரிகிறது.

’முகம்’ - ம.ப.சித்ரா
இந்த கதை என்னை மிக பாதிச்சிருந்திருக்கும் போல.. பெண்ணிய வாத பிரதிவாதங்கள் செய்யத்தொடங்கியகாலமாக இருந்திருக்கவேண்டும்.. அக்கதையிலிருந்து சில வரிகள்..

\\உடல் முழுக்க மின்சாரம் பரவ .. என்ன இது ? எங்கே என் முகம்? அதற்குபதில் அவன் முகம் ..உற்றுப்பார்க்க அப்பாவின் முகம்.. இத்தனை நாளாய் பாத்து ரசித்த முகம் என்னுடையதில்லையா..? அம்மாவிடம் ஓடி அம்மா என் முகம் எங்கே ? அம்மா ’போடி பைத்தியம்’ என சிரித்தபடி கடந்தாள்.

அவனுக்குத் தெரிந்திருக்குமோ? அவன் என்முகம் பார்த்துத்தானே விரும்பி இருப்பான் .
என் முகத்தை காணவில்லை உங்களுக்கு தெரிகிறதா?
உனக்கென்று முகமா? ஏது அப்படி ஒன்று ?
அப்படி என்றால் நீங்கள் முதலில் பார்த்தது..
என் முகத்தைத்தான் பார்த்தேன். அது அழகாக ப்ரதிபலிப்பதே, என் தேடல்.

நீங்கள் என் முகத்தை ப்ரதிபலிக்கவில்லையே?
எப்படி ப்ரதிபலிக்கமுடியும் உனக்கென்று முகமே இல்லாதபோது? “நான் இல்லாத உன்னை எப்படி விரும்ப இயலும்?

என் முகம் வேண்டும் உடைந்த முகமூடி துண்டுகளில் எத்தனையோ தலைமுறை முகங்கள். இத்தனை காலமாக மூகமூடியின் அழுத்தத்தில் இருந்த முகம் நசுங்கி பொலிவின்றி , எப்படியும் இது என் முகம் பூச்சுக்கள் இல்லாத சொந்தமுகம். இனி அழகுபடுத்துவேன். //
---------------------------------
ஒருகவிதை
---------
தனித்தனியே

ஒரு பறவையின் சிறகுகள்
பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்
சிறகுகளின்றிப் பின் வந்த பறவை
ஒரு இசையின் குழைவில்
லாவகமாய் தன் சிறகுகளை
தன்னோடு இணைத்துக் கொண்டது
பறந்து பறந்து
பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றிப் பறக்கப் பறவைக்கும்
கூட் வந்த சூட்சுமம்
என் மனதில் விரிந்தபோது
துவண்டு கிடந்த என் மனதில்
ஒரு பூ மலர்ந்தது. - - பசவய்யா
-----------------------------------------
’மென்மை’ என்கிற மேலாண்மை பொன்னுசாமியின் கதையில் ஒரு பிரிகேடியர் எப்படி ஸ்டேப்பிளர் பின்னை மடக்கி காகிதத்தில் மடித்து குப்பையில் போடுகிறார் என்பதை வைத்தே கதை . அதை டைரியில் எழுதி வைத்திருக்கிறேன். எழுதிப்படித்தால் மனதில் பதியும் என்பது போல இன்றுவரை நான் நான் மிககவனமாக பின்களை மடக்கி அது யாரையும் காயப்படுத்தாத வண்ணமே போடுகிறேன்.

தொடருக்கு இவர்களை அழைக்கிறேன்.
யாழினித் தோட்டம் யாழினி
தெக்கிக்காட்டான்

மலைநாடன்







.