தீபாவளி காட்சிக்கு போகலாம் என யாருக்கோ ஆசை வர நுழைவுச்சீட்டும் மாமனாரே முன்கூட்டி வாங்கித்தந்து விட்டார்கள். படம் ஆதவன். காலையிலிருந்து அது நாலாவது காட்சி. பெண்களை எல்லாம் முந்தின காட்சி முடியும் முன்பாகவே திரையரங்கின் பக்கவாட்டு கதவுக்கருகில் நிற்க சொல்லி இருந்தார்கள். படம் முடிந்து எல்லாரும் எழுந்து நின்று பார்க்கத்தொடங்கியும் வெளியேறாமல் இருந்ததைப் பார்த்து க்ளைமேக்ஸில் மக்களைக் கட்டிப்போடக்கூடிய படமா இது? என்று பெண்கள் எல்லாரும் குழம்பிப்போனோம்.
காலையில் பார்த்தவங்க நல்லா இல்லன்னு சொன்னாங்களே ? மத்த நாள் திரையரங்கு காலியாத்தாங் கிடக்குமுங்க.. எல்லாம் சீரியல் பாத்துட்டு கிடப்பாங் இன்னிக்கு தீவாளிக்கு பாக்கனும்ன்னு தான் வந்திருக்கறது எல்லாம்என்று ஒரு அம்மா எங்களிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அந்த காட்சியைப்பார்த்த போது இதற்கா அப்படி சிலையா நின்னாங்க என்று நொந்து போனதென்னவோ உண்மை.
எண்ணிக்கை இடாத இருக்கைகளை நாமகப் பிடிச்சிக்கனும். அந்த பக்கம் மக்கள் வெளியேற இந்த பக்கம் பெண்கள் வரிசைக்கொன்றாய் நின்றபடி அவங்கவீட்டு ஆண்களுக்கு இடம்பிடிக்க நானும் என் ஓர்ப்படியும் மெதுவா தலை மறைக்கிற இடமா இருந்தாலும் இரண்டு இருக்கைகளை கணவருக்காக பிடித்து அமர்ந்தோம்.
தலையெல்லாம் படம் பார்க்க ஆரம்பிச்சாத்தெரியாதுஇது அப்பாவின் வழக்கமான வசனம்.. மனதிற்குள் எதிரொலித்தது. மற்றபடி தில்லியிலேயே தியேட்டர் எஃபெக்டோடத்தானே சிடியில் பாக்கறோம்..
ஆண்களுக்கு வெளிக்கதவைத் திறந்து விட்டதும் ஜோ என்று ஆட்கள் நுழைந்தனர் . கொஞ்சம் திகில் தொடங்கியது. அதிகப்படி போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் இருக்கைகள் அவர்கள் வழியை மறைத்த கோபத்தில் எட்டி உதைத்ததில் திகில் எகிறியது. நல்லவேளை எங்களவர்கள் வந்து சேர்ந்தனர்.
வடிவேலு தான் கதாநாயகனோ எனும்படி சரி காமெடி பீஸ் படம். லாஜிக் பார்க்காமல் சிரிக்கலாம். மத்தபடி ஒன்றுமில்லை. 25 ரூ நுழைவுச்சீட்டு 60 க்கு விற்கப்பட்டது. அன்று சம்பாதித்தால் தான் உண்டு. ஏற்கனவே ஊரில் இன்னோரு திரையரங்கு மூடப்பட்டுவிட்டது. அதில் தான் முதன் முதலில் நானும் என் நாத்தனாரும் தைரியசாலிகளாக லவ் டுடே பார்க்கச்சென்று வரும்வழியில் யாரோ துரத்துவது போலவே ஓடிவந்தது.
பொள்ளாச்சியில் காலை விருந்துக்குப்பிறகு கோவை. பொள்ளாச்சி கோவை சாலை அன்றைக்கு மட்டும் தான் அத்தனை அமைதி.பேருந்திலிருந்து அதற்கு மேல் பார்த்ததெல்லாம் ஆடை அணிவகுப்பு. புதுச்சட்டை அணிந்த குழந்தைகளும் பட்டுசேலையோ பளபளா சேலையோ அணிந்த அம்மாக்கள் ( நாங்க சுடிதாருங்கோ) மொட மொட பளீர் வெள்ளைஉடையும் பளீர் விபூதியுமாக அப்பாக்களும் ஈச்சனாரியிலும் மகாலக்ஷ்மி கோயிலிலும் குவிந்திருந்தனர். புரட்டாசி சனிக்கிழமை தீபாவளி சிறப்பென்று பெருமாள் கோயிவிலில் மக்கள் அலை கரைபுரண்டது.
அடிக்கிற வெயிலில் தில்லி பரவாயில்லை என்றானது கோவையில். அதில் பெரும்கொடுமை சின்னக்குழந்தைகளின் தீபாவளி உடைகள் எல்லாம் பாலியஸ்டரில் கழுத்திலிருந்து கணுக்கால் வரை மூடி ஜிகுஜிகு வேலைப்பாடுகளோடு இருந்தது. புது உடை என்ற மகிழ்ச்சி அதை பொருட்படுத்தாமல் வேர்வையில் குளித்திருந்தார்கள். தீபாவளிக்கு அடுத்த ரெண்டு நாட்களும் நாங்கள் இந்த ஆடை அணிவகுப்பை ஆழியார் அருவியில் கோவைக்கருகில் சென்ற கோயில்கள் என்று எல்லா இடங்களிலும் கண்டு களித்தோம். எப்ப கிராமப்பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போகிறோமோ தெரியலை.
குறிப்பு: தீபாவளி பத்தி தொடர்பதிவு எதாச்சும் எழுதனும்ன்னு ஆயில்யன் முன்னாலேயே கூப்பிட்டிருக்கார்.. இதை அதுக்குன்னு இந்த குறிப்பில் போட்டுக்கிறேன்ப்பா..