December 16, 2009

ஹிப் ஹிப் ஹிப்போ!! (ஹூர்ரே!)

தொலைகாட்சியிலும் வானொலியிலும் ஹலோ நாந்தாங்க ... பேசறேன். எப்படி இருக்கீங்க ? உங்க வீட்டுல ? நல்லாருக்காங்களா சரி.. எனக்கு இந்த பாட்டு .. அதை இவங்களுக்கு டெடிகேட் ந்னு அடித்துப் பிடித்து எல்லாரும் கேட்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் நானும் கானாப்பிரபாவின் ரேடியோஸ்பதி தளத்தில் பதிவர் தேர்வுகள் வரிசைக்கு சில பாடல்களை கேட்டு எழுதி இருந்தேன் அவரும் ஒலிபரப்பினார். அதற்கு பிறகு இபோழுது 4தமிழ்மீடியா தளத்தில் வாரம் ஒரு நேயர் விருப்பம் பகுதிக்கு என்னுடைய விருப்பப்பாடலாக 5 பாடல்களை அனுப்பி இருந்தேன். அதில் நான்கு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. (இணைய இணைப்புவேகம் குறைவாக இருந்தால் சற்று சிரமமாக இருக்கலாம்)

நிகழ்ச்சியை நடத்துபவர் அஸ்வதன். நிகழ்ச்சிக்கு நடுவில் எதாவது புதுப்புது விசயங்களைச் சொல்வார். அவருடைய நிகழ்ச்சியை வாழ்த்தி நான் என்குரலில் ஒரு வாழ்த்து செய்தியையும் (பீ ஃகேர்புல்)அனுப்பி இருந்தேன். அதனை நிகழ்ச்சிக்கு நடுவில் ஒலிபரப்பி இருக்கிறார் . நன்றி அஸ்வதன்.
--------------------
நாங்கள் சின்னவயசா இருக்கும்போது நொறுக்குத்தீனிய “என்னமாச்சும்” ந்னு சொல்வோம். என்னமாச்சும் இருக்காம்மா? பிஸ்கட் இருக்கு , முறுக்கு இருக்கு, நெய்யுருண்டை இருக்குன்னு அம்மா சொல்வாங்க.. அதனால் நொறுக்குத்தீனிக்கு எங்க வீட்டில என்னமாச்சும்ன்னே ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மகன் வழக்கமாக பள்ளியிலிருந்து வரும்போதே கடைக்கு போகலாம் போகலாம் என்று நச்சரிப்பான். போனால் குர்க்குரே , லேஸ் , அங்கிள் சிப்ஸ் அல்லது ஃபன் ஃப்லிப்ஸ் இப்படி எதயாவது வாங்குவேன் என்று அடம்பிடிப்பான். குர்க்குரே சாப்பிடாதீர்கள் அதில் ப்ளாஸ்டிக் இருக்கிறது. லேஸ் சாப்பிடாதீர்கள் அதில் கேன்சர் வரவழைக்கும் பொருள் இருக்கிறது என்று நம் நலம்விரும்பிகள் அனுப்பிய மெயில்கள் ஏற்படுத்திய திகில் வேறு. ஃபன் ஃப்லிப்ஸ் போன்றவை உண்மையில் அரிசி வச்சி அப்படி பொரி மாதிரி தக்கையாக எப்படித்தான் செய்வார்களோ? ஒரு பயத்தோடுதான் வாங்கித்தருவேன்.

சிறிது நாட்களாக கடையில் ஹிப்போ என்ற ஒரு பெரிய கருப்பு ஹிப்போ நம்மைப் பார்த்தபடியே நிற்பதைப் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் வந்துகொண்டிருந்தேன். அதன் மேலட்டையில் இருந்த நீள்வட்ட வடிவ அந்த மன்ச்சீஸ் (backed munchies) என்றால் என்ன என்று தெரியவில்லையே என்று ஒரு ஆர்வத்தில் இத்தாலியன் பிசா வகையில் ஒன்றை வாங்கிவந்தேன்.


ஹிப்போ பார்லேயின் புது தயாரிப்பாம். மற்றவங்க மாதிரி இல்லை நாங்க.. ஆமாம் சும்மா என்ன உருளைகிழங்கும் , வறுத்ததும் , பொறிச்சதும் சாப்பிட்டுக்கிட்டு... ஹிப்போ கேர்ஸ் (cares) அதுவும் இந்த சூப்பர் ஹீரோஸ் மற்றும் உலகத்தலைவர்கள் எல்லாம் எதெதெற்கோ போராடுகிறார்கள் . பசிக்கு எதிரா போராடலயாம். அதனால் தான் ஹிப்போ இந்த ப்ரச்சனையை தன் கையில் எடுத்துக்கிட்டு அடுக்களைக்குள் புகுந்து விட்டதாம் பசியா இருக்கும் போது நீங்க வறுத்தது பொறிச்சத சாப்பிட்டு என்னடா இதைப்போய் சாப்பிடுகிறோமே என்றெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடவேண்டாமாம். இது ரொட்டித்துண்டுகளை (wheat bread crumbs) (bake) செய்து தயாரிக்கப்படுகிறது.

”ஹிப்போவை கையோடு வைத்துக்கொண்டால் நீங்கள் பசியோடு வேலை செய்யவேண்டியதில்லை. பசியோடு இருக்கிறவன் மகிழ்ச்சியா இருப்பதில்லை. பசியோடு இருப்பவன் அதிகம் சண்டைபோடுவான். அதனால் ஹிப்போ ட்ரை’
ந்னு எக்கச்சக்கமா ஹிப்போ மேலட்டையில் அறிவுரை சொல்லி இருக்கிறது.



இதை எழுதிக்கொண்டே நேற்று வாங்கிவந்த ஹிப்போ தாய் சில்லி (thai chilli) காலி செய்துவிட்டேன். நிஜமாய் சொல்கிறேன். இப்போ நான் ஹிப்போக்கு அடிமை. ஹிப்போ என்னை ஹிப்னாடிஸ் செய்துவிட்டது. கடைக்கு மகனுக்கு என்னமாச்சும் வாங்கச் சென்றால் ”அம்மாக்கு இது ஒன்று” என்று நானே எடுத்துக்கொள்கிறேன். இதிலும் அது இருக்கு இது இருக்கு என்று யாராவது மெயில் போட்டு பயப்படுத்தாத வரை ஹிப் ஹிப் ஹிப்போ!!

December 11, 2009

ரொம்ப ஸ்மார்ட் தான்!

(photo thanks to http://greentechi.files.wordpress.com/)

தில்லியில் மெட்ரோ வந்ததன்பின் பலமுறை சுற்றுலா வழிகாட்டி போல உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டுவதற்காக இங்கே ஏறி அங்கே இறங்கும் பயணங்கள் சின்ன பயங்களோடு செய்திருக்கிறேன். ஒன்னுமில்லை நுழைவுச்சீட்டான சின்ன வட்டவடிவக் காயினை (coin தமிழில் என்ன?) தானியங்கி தடைகளிடம் காண்பிக்கனும். அது திறந்ததும் நாம் உள்ளே நுழையலாம். இறங்கும் இடத்தில் அந்த காயினை உண்டியலில் போடுவது போல தானியங்கி தடைகளிடமே கொடுத்துடனும்.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு தோழி தயானந்த சரஸ்வதியின் ’வேல்யூஸ் அண்ட் ஆட்டிட்யூட்ஸ்’ பற்றிய சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். போகும்போதும் வரும்போது அவர்களுடனே வழக்கம்போல அரட்டை அடித்தபடி மெட்ரோவில் பயணப்பட்டேன்.திடீரென “ நாளைக்கு வரும்போது நீங்கள் தனியாக வந்துவிடுங்கள்..நான் அலுவலகத்திலிருந்து வருவேன்’ என்று சொல்லிவிட்டார்கள். முதல் நாள் நடந்தது எல்லாம் ஒருமுறை மனதில் ஓட்டிப்பார்த்து வழியெல்லாம் நினைவுப்படுத்திக்கொண்டேன்.

முதல் நாளே ’எப்படியும் தொடர்ந்து நான்கு நாட்கள் சொற்பொழிவு கேட்க வரத்தானே போகிறீர்கள்? ஸ்மார்கார்ட் செய்துகொள்ளுங்கள். வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகும்’ என்று தோழி சொன்னதால் ஸ்மார்ட்கார்ட் செய்துகொண்டேன்.( நான் ஸ்மார்ட்டாகிட்டேன்ல) முதலில் 50 ரூ முன்பணம். அதற்குபிறகு 50 , 100, 150 என போன் கார்ட் போல மேலே போட்டுக்கொள்ளலாம்.

மெட்ரோவில் பயணிப்பது தன்னம்பிக்கையளிப்பதாக இருந்தது. என்னுடைய தனியான மெட்ரோ பயண தினத்தில் இரண்டு பெண்கள் என்னிடமே வழி கேட்கவும் , தகவல்கள் விசாரிக்கவும் வந்தார்கள் . டிஜிட்டல் போர்ட்களில் அடுத்த ரயிலின் கடைசி நிறுத்தம், காத்திருக்க வேண்டிய நேரம் ( 3 அல்லது 5 நிமிடங்கள் ) காண்பிக்கிறார்கள். ஒலிபரப்பும் செய்கிறார்கள். அதை காண்பித்ததும் அவர்களும் கலக்கம் குறைந்தவர்களாக ஆனது உணர்ந்ததேன்.

எந்த நிறுத்தம் என்பது எழுத்துக்களாகவும் ஒலியாகவும் மேலும் வண்டியின் உள்பக்கத்தில் இருக்கும் வரைபடத்தில் அணைந்து அணைந்து எரியும் விளக்காலும் அறிவுறுத்துகிறார்கள். வழித்தடம் மாற்ற வேண்டியவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றியும் அறிவிப்பு வருகிறது.

இரவு நேரத்தில் மட்டும் (முக்கியமாக ஞாயிற்றுக்கிழமையில்) கொஞ்சம் கூட்டமில்லாப் பொழுதுகள் பயமா இருக்குமென்று தோன்றுகிறது. இருந்தாலும் கொஞ்சம் பயமில்லாதமாதிரி காட்டிக்கிட்டாப் போச்சு.. :)இருக்கைகள் சன்னலோரமாக நீளவாக்கில் இருக்கிறது.
என்னைப்போன்ற குள்ளமானவர்களும் பிடிக்கும்படி வசதியாக கைப்பிடிகள் இருக்கிறது. அதிக குலுக்கல் இல்லை . ஆனால் விரைகிறது வண்டி. கர்ப்பிணி ,கைக்குழந்தைப் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும், நிற்கமுடியாதவர்களுக்கும் இடம் தருமாறு அறிவிப்பு வருகிறது. ஆனால் நல்லா இருக்கிறப் பெண்களும் இடம் தாங்கன்னு கேட்டு வாங்குவது பார்க்க வருத்தமா இருக்கு.

கொஞ்சமே கொஞ்ச நேரம் ஒரு நிறுத்தத்தில் தாமதிக்கிறது என்றாலும் மன்னிப்பெல்லாம் கேட்கிறார்கள்.. நல்லாவே இருக்கு. ப்திய தாழ்தள பேருந்துகளும் மெட்ரோவும் என காமன்வெல்த் கேம்ஸ் காரணமாக காமன் மேன் களுக்கு மிக வசதி தான். தூய்மையாய் வைத்திருக்கவும் மக்கள் இதனால் பழகிவருவதாகத் தெரிகிறது. வீட்டிலிருந்து அப்படியே காருக்கு தாவும் மக்களுக்கு கொஞ்சம் தூரம் மெட்ரோவரை செல்வதற்கும் யோசனையாக இருக்கிறதாம்.மெட்ரோ ஃபீடர் வேன்களை டவுன் பஸ்ஸாக பயன்படுத்தத் தொடங்கி அது நிரம்பி வழிகிறது. கார் எண்ணிக்கை இன்னும் ரோட்டில் குறையவில்லை. ஆனால் கார் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தவர்களை கொஞ்சம் மனம் மாற்றி இருக்கிறது எனலாம்.

--------------------------
சபரி துணுக்ஸ்
----------
சொன்னப்பேச்சே கேக்காம நீ சும்மா சும்மா கேமிராவைக் கேட்டு அடம்பிடிச்சேன்னா பாரு , கெட்டுப்போச்சுன்னா அதைக் குப்பையில் தான் போடனும்.

அம்ம்ம்ம்மா ( கோபமா முறைக்கிறார்)

கோபப்பட்டேன்னா பாரு இருக்கு உனக்கு ..

அம்ம்மா நான் கோபப்பட்டா நீ சிரிக்கல்ல செய்வே இன்னைக்கு என் கோபப்படறே ? (ஸ்மார்ட்??)

அது என்னடா டீல் ? நீ கோபப்பட்டா நான் சிரிக்கிறது..

நேத்து சிரிச்சியே..
( அன்னிக்கு அவன் கோச்சிக்கிட்டு இடுப்பில் கைவச்சிக்கிட்டு டான் டாண்னு நடந்து போன அழகில் சிரிச்சிட்டேன் போல )

November 23, 2009

பதிலுக்கு பதில் நானும் விளம்பரம் போட்டுட்டேன் :)

சிறுமுயற்சியைப் பற்றி தேவதை என்கிற பெண்கள் இதழில் போட இருக்கிறோம் என்று பின்னூட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டார் அப்பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள். பதிலுக்கு நானும் ஒரு கண்டிசனைச் சொல்லிவைத்தேன். என் பெயரை மட்டும் போட்டு என் பதிவினை பிரசுரித்த குமுதம் போல இல்லாமல் லிங்க் அச்சிடப்படவேண்டும் முக்கியமாக வலையோடு உறவாடு என்கிற பகுதிக்கு என்பதால் இது அவசியமுமாகும். படிச்சிட்டு பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ புதியதாக பல பெண்கள் எழுத வரலாம்.. லிங்க் அச்சில் வந்திருக்கிறது . . எனக்கான படி(காப்பி) இன்று வந்து சேர்ந்தது..நன்றி

அங்கே சிறுகுறிப்பில் சொன்னது போல என் முயற்சிகளை சேமிக்கும் இடமான இத்தளத்தில் இந்நினைவையும் சேமிக்கிறேன்.








பத்திரிக்கை ஜூலை மாதத்திலிருந்து வெளிவருகிறதாம். அவள் விகடனுக்கு தங்கச்சி போல இருக்கிறது. பெண்கள் பத்திரிக்கைகளுக்கு என்று தனியாக நாட்டில் வைத்திருக்கிற அளவுகோலில் உள்ள எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது. எம்பிராய்டரியிலிருந்து ,சொற்ப முதலீட்டு சிறுதொழில்கள், வீட்டுக்குறிப்புகள் வரை....:) வகை வகையான பிரியாணி க்கு ஒரு இணைப்பு. மாலை போடற சீசனுக்காக சபரிமலை தரிசனம் என்கிற சபரிமலை பற்றிய கையேடு. குடும்பப்பத்திரிக்கைன்னு சொல்லிக்கலாம் ..பயமுறுத்தாத படங்கள். :)

November 18, 2009

ஸ்வீட் எடு கொண்டாடு !!

என்ன கொண்டாட்டம் எதுக்கு கொண்டாட்டம் கண்டுபிடிங்க பார்க்கலாம்.. :)

சிலருக்கு ஏற்கனவே கேள்வித்தாள் கிடைத்திருக்கும் கிடைக்காதவங்க சொல்லுங்க பார்க்கலாம்..


[ இவ்விடத்தில் இருந்த எறும்பு அனிமேசன் காட்சி என் பதிவின் வேகத்தை தடை செய்யுமளவு பெரியதாக இருந்ததால் அதனை எம்பெட் செய்திருந்த கோடை நீக்கிவிட்டு அதன் லிங்கை வைத்திருக்கிறேன்.. லிங்கை சொடுக்கி சென்றுப் பாருங்கள் நன்றி.]

பலரும் சரியான விடை சொல்லிவிட்டதால் பதிவில் சேர்த்துவிடுகிறேன்.
15 நவம்பரில் தொடங்கப்பட்ட சிறுமுயற்சி 18 நவம்பரில் தமிழ்மணத்தில் தெரியத்தொடங்கியது. இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகிறது.. உங்கள் அனைவருக்கும் நன்றி..

November 12, 2009

இஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்

என் கணினியின் ஆமை வேகத்தால் முன்பே சிலர் ’தங்கள் பதிவை மாற்றம் செய்திருக்கிறோம் ..கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லவும்’.. என்று டெஸ்ட் இஞ்சினியர் வேலை பார்க்கச்சொல்லிவந்த விசயம் அனைவரும் அறிந்ததே! இதனால் ரீடர் மூலமாக படித்து மடல் மற்றும் அரட்டைப் பெட்டிகளின் மூலமோ அல்லது அவர்களிடமே உங்கள் பின்னூட்ட உரலைத் தாருங்கள் என்று சொல்லி நேராக பின்னூட்டங்களில் நுழைந்தோ கடமையாற்றிவந்தேன்.

சரி ஒரு கவிதைக்கு எதிர்கவிதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் கூட இப்படித்தான் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்..

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

ஒரு நாளைக்கு ஒரு கேம் தான்
அதிகம் கணினி பார்த்தால்
கண் மூன்றாகிப்போகும் என்று
நான் சொன்ன பொய்யை நம்பி
நீ
ஆன்லைனிலேயே விட்டு வந்த
டவுன்லோட் ஆக தாமதிக்கும்
அந்த ஏஃபார் கேம்.காம்
என் நினைவையும் கம்ப்யூட்டர் மெமரியையும்
ஹேங்க் செய்துகொண்டே இருக்கிறது
இன்னமும்!



சரி பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ’ரீடர்ஸ் ப்ரண்ட்லி’ பதிவுகளுக்குன்னு அவார்ட் கொடுக்கறதா முடிவு எடுத்து அரட்டைப் பெட்டியின் ஸ்டேடஸில் அதை தெரிவித்து ஐடியா மணிகளுக்கு அறை கூவல் விடுத்திருந்தேன். ( முல்லை கொடுத்த அவார்ட் ஒன்றும்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டி இருந்தது . அவார்ட் பெயரை மாற்றி கொடுத்துவிடலாம் என்ற ஐடியா தான்)

முதல் ஐடியா மணி தமிழ்பிரியன் - சாட் பூட் த்ரி
நல்லாதான் இருக்கு .. ஆனா ரீடர்ஸ் ப்ரண்ட்லிக்கு தமிழில் என்னவா இருக்கும் என்றதும் ’பயனாளருக்கு இலகுவான்?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். இப்படியே டமில் டமில் ன்னா நம்ம கருப்பாக்கிடுவாங்களாமே (நன்றி : கடகம் ஆயில்யன்) கருப்பு= block

இரண்டாம் ஐடியா மணி ...நான் ஆதவன் - அவசரக்குடுக்கை ( அவரில்லைங்க அவர் தந்த விருதுக்கான பெயர் ஐடியா அது)

மூன்றாவது ஐடியா அம்மணி - அப்பத்தான் எங்கருந்தோ இம்சை அரசி குதிச்சாங்க.. அவங்க எப்பேர்ப்பட்ட நகைச்சுவை வித்தகின்னு உங்க எல்லாருக்கும் தெரியுமில்லயா.. வந்ததும் ’படா பட் விருது’ ந்னாங்க.. ஆமா படாபட் ஜெயலக்‌ஷ்மிய யாரும் மறக்கமுடியாது. ஆனா யாராவது வந்து ஹிந்தி ஒழிக என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று நான் இழுக்க..

சட்டென்று சொன்னாங்க ‘ வாம்மா மின்னல் விருது ‘ எப்பூடி?

சரி விருதுக்கான பெயர் கிடைச்சாச்சு .. “வாம்மாமின்னல் பதிவு விருது”



யாருக்கு குடுக்கலாம் .. அதான் நம்ம டெஸ்ட் இஞ்சினியர் வேலை அனுபவம் இருக்கே.. முதலில் மாட்டியது வல்லி சிம்ஹன் பதிவு.. சிறிது நாட்களுக்கு முன்பு அவங்க பல சோதனைகளை செய்து படம் ஏற்றி திறக்கமுடியாம இருந்து வந்தது. ஆனா இப்ப திறந்ததும் மின்னல் போல பதிவு திறந்தது. தி அவார்ட் கோஸ் டூ திருமதி வல்லி சிம்ஹன் .

சரி இன்னும் ஒருத்தருக்கும் குடுக்கலாம் என்று நினைக்கும்போது.. இந்த பதிவு
லிங்க் கிடைத்தது.. ஸோ ரசிகன் நீங்களும் ’வாம்மா மின்னல் பதிவு விருது’ பெறுகிறீர்கள்.
அதிகம் படிப்பாளிகளைப் பெற்று நீங்க நூறு நூறு ஃபாலோயர்களைப் பெற வாழ்த்துகிறேன்.

November 4, 2009

பிடிக்கும் ஆனா பிடிக்காது, பிடிக்காது ஆனா பிடிக்கும்

பிடிச்சவங்க பிடிக்காதவங்களுக்கு உங்களை சீக்கிரமே யாராச்சும் கூப்பிடனும்ன்னு நேத்து ஒரு தோழி அதிரடியா ஆசைப்பட்டாங்க.. வாக்கு உடனடியா பலிச்சுருச்சு ரொம்ப நாளே தியானத்திலிருந்த வெட்டிஆபிசர் ராப் தியானத்தை கலைச்சு போஸ்ட் போட்டிருக்காங்க . ராப் கூப்பிட்டு பதிவு போடாம இருக்கலாமா?

பிடிச்சவங்கன்னு நானா ஒரு சிலரை இது இதுனாலல்லாம் பிடிக்குதுன்னு நினைச்சிட்டிருப்பேன். அவங்களோட இன்னோரு பக்கத்தை யாராவது சொன்னா தெரிஞ்சுகிட்டு அடடா ந்னு ஆகிடும் சில சமயம்.

பிடிக்காதவங்கன்னு சிலரை நினைச்சிருப்பேன் அவங்களோட இன்னோரு முகத்தைப் பார்த்து அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு நல்ல குணமான்னு நினைச்சுக்கறதும்.. நிறை குறை இருக்கவங்க தானே மனுசங்கன்னு மனசைத் தேத்திக்கிட்டதும் உண்டு.

பிடிச்சது பிடிக்காததை நம் சரிபாதிங்களுக்கு தெரிஞ்சுருக்கனும்ன்னு சில போட்டிகள் நடத்தறாங்களே.. அது எப்படி முடியும் ? நமக்கே நமக்கு பிடிச்சது பிடிக்காதது எதுன்னு சரியா முடிவெடுக்கமுடியலயே.. என்று எனக்கு இப்ப செம குழப்பமாகிடுச்சு.. எதோ தோணினதை எழுதிட்டேன்.



அரசியல் தலைவர்
பிடித்தவர்:திருமாவளவன், நல்லகண்ணு (இவங்களப்பத்தி எல்லாம் ரொம்ப ஓவரா திட்டி எங்கயும் படிக்கல) இறந்துபோனவங்க தமிழ்நாட்டைவிட்டு வெளியே இருக்கவங்களையும் சொல்லலாம்ன்னா (இந்திராகாந்தி)
பிடிக்காதவர்:மத்தவங்க எல்லாருமே

கவிஞர்
பிடித்தவர்: தாமரை, நாமுத்துக்குமார் (பட்டுக்கோட்டை)
பிடிக்காதவர்: அப்படி சொல்லத்தெரியல

நடிகர்
பிடித்தவர்:வடிவேலு, ரஜினி,ப்ரகாஷ்ராஜ் ,ஈரம் ஆதி ( ரங்காராவ், தங்கவேலு)
பிடிக்காதவர்: தியாகு,எஸ் எஸ் சந்திரன் ரெண்டுபேரு காமெடி பிடிக்காது

நடிகை
பிடித்தவர்: சரளா,சரண்யா பொண்வண்ணன் ,பத்மபிரியா( பண்டரிபாய், ஜமுனா)
பிடிக்காதவர்:யாரும் அப்படி சொல்ல நினைவுக்கு வரல

பாடகர் :
பிடித்தவர்: ஹரிஹரன்,எஸ்பிபி, டி எம் எஸ்
பிடிக்காதவர்: நினைவுக்கு வரல

பாடகி
பிடித்தவர் : கல்யாணி, ஜென்சி
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்

எழுத்தாளர்
எஸ்.ரா படிப்பதுண்டு. பலரோட புத்தகங்களை படிச்சுட்டு சூப்பர்னு நினைச்சுட்டு அப்படியே புத்தகத்தை யும் அவங்களையும் மறந்துடற என்னோட மோச்மான நினைவாற்றலால் பிடித்தவங்களையும் சரி பிடிக்காதவங்களையும்சரி , சரியா குறிப்பிட முடியல..

இதை தொடர அழைக்க விரும்புபவர்கள்

மிஸஸ் தேவ்
சின்னம்மிணி

October 30, 2009

தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர்

குட்டிப்பையனுக்கு தமிழில் சில பாடல்கள் மற்றும் திருக்குறள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அவன் இப்போது அதிகம் தமிழ்சொற்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டான். எப்போதும் எனக்கு சாஹியே என்பதும் கூட ’எனக்கு வேண்டும்’எனமாறிவிட்டது. வேணும் என்பது கூட இல்லை ’வேண்டும்’ என்று தூயதமிழில் சொல்கிறான்.அவன் அக்கா தமிழிசைப் போட்டிக்காக ’எனக்குவேண்டும் வரங்களை இசைப்பாய்’ என்ற பாரதியார் பாடலை பாடிக்கொண்டிருந்த காரணம் தான் இந்த ”வேண்டும்”.

சரி பாடல்களை இங்கே போய் கேளுங்கள்.

----------------------------------------
பாடல்களை பதிவேற்ற எம்பெட் செய்ய வேறு சிறந்த தளம் இருக்கிறதா என்பதை அறியப்படுத்துங்கள். தற்போது ஈஸ்னிப்ஸ் மற்றும் இமெம் பயன்படுத்தி வருகிறேன்.
-----------------------------------------

கோவையருகே இருக்கும் ஈச்சனாரி கோவில் சென்றிருந்தபோது புத்தகங்கள் விற்பனை நிலையத்தில் ஒரு பார்வை விட்டுக்கொண்டிருந்தேன். பாரதிதாசன் கவிதைகள் புத்தகத்தை எடுத்த உடன் கடைக்காரர் பார்த்தார் . இவங்க எதோ கவிதைபிரியை என்று மடமட வென கலீல் ஜிப்ரான் பற்றிய இரண்டு சிறுபுத்தகங்கள், ஒரு தாகூர்கதைகள் புத்தகம் என என் பட்டியலை உயர்த்தினார். ரெண்டு நாளில் வாங்க தாகூர் கவிதைகள் எடுத்துவைக்கிறேன் என்றார். ஜிப்ரானுடைய கடிதங்கள் இருந்த புத்தகமும் தாகூர் கதைகளும் நன்றாகவே இருந்தன.

ரயில்பயணத்தில் தாகூர் கதைகள் தான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஊருல ஒரு ராஜான்னு ஆரம்பிப்பது பற்றி எழுதி இருந்தார் . எந்த குழந்தைக்கும் அது எந்த ஊர் ராஜா அவர் பெயர் என்னவாக இருக்கும் என்று கேட்க தோன்றாது கதை தானே முக்கியம். அந்த கதையில் பாட்டி தானாக வாய்க்கு வந்தபடி இட்டு கட்டிய கதையில் கதை கேட்கும் சிறுவனுக்காக முடிவை மாற்றிச்சொல்வதை அழகாக எழுதி இருந்தார். உண்மையில் தாகூருக்கு நன்றாக இட்டுகட்ட வந்திருக்கிறது (இதெல்லாம் நான் சொல்லலாமா ஓவரா இருக்கே)..பசி கொண்ட பளிங்குமாளிகை என்ற கதையில் யாரோ இட்டுக்கட்டி சொன்ன கதை என்று ஒரு பிசாசு மாளிகையைப் பற்றி செமத்தியாக சுற்றிவிட்டிருந்தார். கடைசியில் முடிவே சொல்லவில்லை. அதான் கதையை சொல்லிக்கொண்டிருந்தவர் ரயில்பயணத்தின் நடுவில் வேறு பெட்டிக்கு மாறிவிட்டாராமே.. தாகூர் திஸ் இஸ் நாட் ஃபேர். :)

கனம் கோர்ட்டார் அவர்களே என்ற கதை அந்த காலத்து சிவாஜி படம் போல இருந்தது. காபுலிவாலா என்ற கதை மனதை கனக்கவைத்தது. ஒரு குழந்தைக்கும் தன் குழந்தையை வெளியூரில் விட்டுவந்த ஒரு வியாபாரியான தந்தைக்கும் இருந்த நட்பைப் பற்றிய கதை அது.
இருந்தும் இல்லாமல் என்று ஒரு கதை கண்கள் என்று ஒரு கதை . அந்த இரண்டையும் மட்டும் நம்ம ஊர் சீரியல்காரர்கள் கண்ணில் படவிடக்கூடாது. ஏற்கனவே பெண்களை தியாக பிம்பங்களாக காட்டி அழுகாச்சி குடுப்பவர்களுக்கு நல்ல ஒரு விசயம்.இருந்தும் இல்லாமலில் இறந்து விட்டதாக நினைத்த பெண் தான் உயிரோடு இருப்பதை இறந்து நிரூபித்த கதை. ( என்ன தலை சுத்துத்தா?) கண்களில் அரைவைத்தியரான கணவர் மனைவியின் கண்ணை குருடாக்கிய கதை.

நீங்களும் படித்துப்பாருங்கள் . நயஞ்சோர் சீமான்கள் , மன்னவன் நீயே என்ற இரண்டு கதைகளிலும் நல்ல நையாண்டியோடு வெற்று ஜம்பம் அடிக்கும் இருவரைப்பற்றி சுவாரசியமாக எழுத் இருந்தார். புத்தகத்தை வாங்கச் சொன்ன கடைக்காரருக்கும்.. எதாவது புத்தகம் வாங்கிக்கோயென் என்று கடைக்கு முன்னால் நிறுத்திய கணவருக்கும் நன்றி.

October 27, 2009

ஊருல தீபாவளி

வெகுநாட்களுக்கு பிறகு தென்னிந்தியாவில் (பொள்ளாச்சி) தீபாவளி கொண்டாடினோம். குறைவான பட்டாசை வெடித்து அதிக பட்டாசை வேடிக்கைப் பார்த்தோம்.ஆம்புலன்ஸ் ஊஊ என்று கத்திகொண்டே புகைகக்கும் பட்டாசுகள் எரிச்சலைக் கிளப்பின. ஊரெங்கும் போஸ்டரில் வடிவேலு ”இவங்க மட்டும் எப்படி தீபாவளிக்கு குறைச்சவிலையில் தரமான வெடி தராங்க”ன்னு ஒரு கடையைப் பார்த்து அவ்வ்வ்விக்கொண்டிருந்தார். முதல் நாள் சென்னை ரங்கநாதன் தெருபோல மகராஜா ரோட்டில் மக்கள் தள்ளிக்கொண்டே அடுத்த முனையில் விட்டார்கள். இன்னைக்கு ஒரு நாள் கூட சைக்கிள் பைக்கைவிட்டு இறங்க மாட்டாங்களே என்ற பாராட்டு வார்த்தைகளை வண்டிக்காரர்கள் பெருமையாகக் கேட்டுக் கடந்தார்கள்.


தீபாவளி காட்சிக்கு போகலாம் என யாருக்கோ ஆசை வர நுழைவுச்சீட்டும் மாமனாரே முன்கூட்டி வாங்கித்தந்து விட்டார்கள். படம் ஆதவன். காலையிலிருந்து அது நாலாவது காட்சி. பெண்களை எல்லாம் முந்தின காட்சி முடியும் முன்பாகவே திரையரங்கின் பக்கவாட்டு கதவுக்கருகில் நிற்க சொல்லி இருந்தார்கள். படம் முடிந்து எல்லாரும் எழுந்து நின்று பார்க்கத்தொடங்கியும் வெளியேறாமல் இருந்ததைப் பார்த்து க்ளைமேக்ஸில் மக்களைக் கட்டிப்போடக்கூடிய படமா இது? என்று பெண்கள் எல்லாரும் குழம்பிப்போனோம்.
காலையில் பார்த்தவங்க நல்லா இல்லன்னு சொன்னாங்களே ? மத்த நாள் திரையரங்கு காலியாத்தாங் கிடக்குமுங்க.. எல்லாம் சீரியல் பாத்துட்டு கிடப்பாங் இன்னிக்கு தீவாளிக்கு பாக்கனும்ன்னு தான் வந்திருக்கறது எல்லாம்
என்று ஒரு அம்மா எங்களிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அந்த காட்சியைப்பார்த்த போது இதற்கா அப்படி சிலையா நின்னாங்க என்று நொந்து போனதென்னவோ உண்மை.

எண்ணிக்கை இடாத இருக்கைகளை நாமகப் பிடிச்சிக்கனும். அந்த பக்கம் மக்கள் வெளியேற இந்த பக்கம் பெண்கள் வரிசைக்கொன்றாய் நின்றபடி அவங்கவீட்டு ஆண்களுக்கு இடம்பிடிக்க நானும் என் ஓர்ப்படியும் மெதுவா தலை மறைக்கிற இடமா இருந்தாலும் இரண்டு இருக்கைகளை கணவருக்காக பிடித்து அமர்ந்தோம்.
தலையெல்லாம் படம் பார்க்க ஆரம்பிச்சாத்தெரியாது
இது அப்பாவின் வழக்கமான வசனம்.. மனதிற்குள் எதிரொலித்தது. மற்றபடி தில்லியிலேயே தியேட்டர் எஃபெக்டோடத்தானே சிடியில் பாக்கறோம்..

ஆண்களுக்கு வெளிக்கதவைத் திறந்து விட்டதும் ஜோ என்று ஆட்கள் நுழைந்தனர் . கொஞ்சம் திகில் தொடங்கியது. அதிகப்படி போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் இருக்கைகள் அவர்கள் வழியை மறைத்த கோபத்தில் எட்டி உதைத்ததில் திகில் எகிறியது. நல்லவேளை எங்களவர்கள் வந்து சேர்ந்தனர்.

வடிவேலு தான் கதாநாயகனோ எனும்படி சரி காமெடி பீஸ் படம். லாஜிக் பார்க்காமல் சிரிக்கலாம். மத்தபடி ஒன்றுமில்லை. 25 ரூ நுழைவுச்சீட்டு 60 க்கு விற்கப்பட்டது. அன்று சம்பாதித்தால் தான் உண்டு. ஏற்கனவே ஊரில் இன்னோரு திரையரங்கு மூடப்பட்டுவிட்டது. அதில் தான் முதன் முதலில் நானும் என் நாத்தனாரும் தைரியசாலிகளாக லவ் டுடே பார்க்கச்சென்று வரும்வழியில் யாரோ துரத்துவது போலவே ஓடிவந்தது.

பொள்ளாச்சியில் காலை விருந்துக்குப்பிறகு கோவை. பொள்ளாச்சி கோவை சாலை அன்றைக்கு மட்டும் தான் அத்தனை அமைதி.பேருந்திலிருந்து அதற்கு மேல் பார்த்ததெல்லாம் ஆடை அணிவகுப்பு. புதுச்சட்டை அணிந்த குழந்தைகளும் பட்டுசேலையோ பளபளா சேலையோ அணிந்த அம்மாக்கள் ( நாங்க சுடிதாருங்கோ) மொட மொட பளீர் வெள்ளைஉடையும் பளீர் விபூதியுமாக அப்பாக்களும் ஈச்சனாரியிலும் மகாலக்‌ஷ்மி கோயிலிலும் குவிந்திருந்தனர். புரட்டாசி சனிக்கிழமை தீபாவளி சிறப்பென்று பெருமாள் கோயிவிலில் மக்கள் அலை கரைபுரண்டது.

அடிக்கிற வெயிலில் தில்லி பரவாயில்லை என்றானது கோவையில். அதில் பெரும்கொடுமை சின்னக்குழந்தைகளின் தீபாவளி உடைகள் எல்லாம் பாலியஸ்டரில் கழுத்திலிருந்து கணுக்கால் வரை மூடி ஜிகுஜிகு வேலைப்பாடுகளோடு இருந்தது. புது உடை என்ற மகிழ்ச்சி அதை பொருட்படுத்தாமல் வேர்வையில் குளித்திருந்தார்கள். தீபாவளிக்கு அடுத்த ரெண்டு நாட்களும் நாங்கள் இந்த ஆடை அணிவகுப்பை ஆழியார் அருவியில் கோவைக்கருகில் சென்ற கோயில்கள் என்று எல்லா இடங்களிலும் கண்டு களித்தோம். எப்ப கிராமப்பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போகிறோமோ தெரியலை.

குறிப்பு: தீபாவளி பத்தி தொடர்பதிவு எதாச்சும் எழுதனும்ன்னு ஆயில்யன் முன்னாலேயே கூப்பிட்டிருக்கார்.. இதை அதுக்குன்னு இந்த குறிப்பில் போட்டுக்கிறேன்ப்பா..

October 15, 2009

சிறுமுயற்சியில் இன்னுமொரு முயற்சி

கவிஞர் தாமரையின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ( யாருக்குத்தான் பிடிக்காதுங்கறீங்களா? )

பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்த பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்புகளற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ் வார்த்தைகளை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்த புதிய தமிழ்வார்த்தைகளை என்னவென்று தேடி தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.

தாமரை அவர்களிடம் நான் கண்ட சிறு பேட்டியினை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.

என் முயற்சிக்கு ஊக்கங்களும் , அவற்றை திறம்பட செய்ய தங்கள் அறிவுரைகளையும் நேரத்தையும் தந்து உதவிவரும் நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியூரில் இருப்பதால் பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரிந்துணர்தலுக்கு நன்றி

September 30, 2009

கும்மியடிப்பெண்ணே! விடுமுறை என்று கும்மியடி!

நவராத்திரி பஜனைக்கு எங்க பாட்டு டீச்சர் வீட்டுக்கு போயிருந்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக நிஜக்கும்மி அடிச்சேன். எத்தனையோ வலை பின்னூட்ட கும்மிகளின் போது நினைப்பேன் நாம் நிஜம்மா கும்மியே ஆடியதில்லையே என்று .. அதற்கு ஒரு வாய்ப்பு குடுத்த டீச்சருக்கு என் நன்றிகள். பெரியவங்க அவங்களும் கும்பலில் நடுவில் நின்று அழகாக சக்தி பாட்டு பாடி கும்மி அடித்தார்கள். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியா இருந்தது .
----------------------------------------
சில விளம்பரங்களில் புதிர் போடுவாங்க... அப்படி புதிய தலைமுறை இதழுக்கு விளம்பரம் வந்துகொண்டிருந்தது. முதல் முறை வந்த போதே ஐந்து ரூபாய் மற்றும் இளைஞர்கள் என்கிற குறிப்பைக் கொண்டு அது புதியதலைமுறைக்கானது என்று கண்டுபிடிக்கமுடிந்தது. முதன் முறையாக புதிர் விளம்பரம் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன் மகிழ்ச்சி தானே..

--------------------------------------------
எங்க வீட்டு கொலுவின் படங்கள். சின்னகிராமம் .







தாமரைக்குளம்.
ஓங்கியுயர்ந்த ஆலமரம் அங்கே அழகான இரண்டு கிளிகள்... நாங்கள் அமைத்து வைத்த பஞ்சாயத்து மேடை . (விழுதுகள் மகளே சொன்ன யோசனை) விளக்குத் திரிகளைக் கொண்டு செய்த விழுதுகள். கோயில் இல்லாத ஊர் உண்டா..? பிள்ளையாரப்பா!..என் கனவான திண்ணை வைத்த வீடுகள். கீரை பதியனிட்ட தோட்டம். கிணறு.


எப்பப்பாருங்க நம்ம மக்கள் ஒரு கவர் குடுங்க என்றபடி ப்ரசாதங்களை போட்டு எடுத்துச் செல்ல கவர் கேப்பாங்க. நிஜமாகவே எங்கள் வீட்டில் பாலிதின்கள் கிடையாது. இதுபோன்று எப்படியாச்சும் பேக்கிங்க் கவர்கள் கட்டியே வந்தால் ஒழிய.. நான் தவிர்த்துவிடுவேன். அதனால் இம்முறை எல்லோரிடமும் நான் கவரில்லை கவர் இல்லை என்று சொன்னதால் ஏன் என்று கேட்பவர்களிடம் சின்னப்ரசங்கமே செய்துவிட்டேன். வீட்டில் முன்பு வேலை பார்த்தவங்களில் ஆரம்பித்து கீழ் வீட்டு டீச்சர் வரை எல்லோருக்கும் செய்தியை இம்முறை அழுத்தமாக சொல்லி இருக்கிறேன். ஒருநாள், ஒரு வேளை,கவர் வேண்டாம் என்று என்னால் அவர்கள் பொருட்களை கையில் எடுத்துச்சென்றது ஒரு விதமகிழ்ச்சி தான்.





வருபவர்களுக்கு கொடுப்பதற்கான நீலமும் சிவப்புமான கிண்ணங்கள்.

நான் செல்லும்போதே துணி பை கொண்டு சென்றேன் . மற்றொரு வீட்டில் அப்படி கவர் கேட்கக்கூடாது என்று, நான் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு ( பயந்துகொண்டு) என் தோழி தன் சேலை தலைப்பிலேயே தேங்காய் வெத்தலை பாக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.. வேறென்ன வேண்டும் ?
----------------------------------------
அப்பறம் இத்தனை மகிழ்வான விசயம் தந்திருக்கிறேன் . இனி விசயம் ஒன்று. ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.

September 22, 2009

எப்படி வசதி?

மின்னரட்டையில், சிலர் சமையல் ஆச்சா? வேலை ஆச்சா? என்று கேட்பது வழக்கம்.. நண்பரொருவர் வித்தியாசமாவே சிந்திப்பவர். சாப்பிட்டாச்சா / சாப்பாடு போட்டாச்சா ? என்று கேட்டிருந்தார்.. எல்லாரும் சாப்பிட்டப்பறம் நானும் சாப்பிட்டுட்டேன் என்று புத்திசாலித்தனமாக (?!!) சொல்லிமுடிக்கும் முன்பாக... அது ஏன் அப்படின்னு கேள்வியைப் போட்டார்.. வசதி என்பதே பதில். உண்மையில் இந்த கட்டு இப்படித்தான் பழக்கம் இல்லையென்றாலும் இது வசதி, எப்படின்னா? முதல்லயே நாம சாப்பிட்டு மத்தவங்களுக்கு போதவில்லை என்றால்.. புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும். இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?

-------------------------------------------

புதியதாக தமிழில் எழுதியதை படித்துக்காட்டும் புது தொழில்நுட்பம் வந்திருப்பதாக மாலன் வலைப்பூவில் கண்டேன். அது உண்மையில் யாருக்கு உதவியாகக் கண்டுபிடிக்கப்பட்டதோ ? ஆனால் என் போன்ற சோம்பேறிகளுக்கு வேறொரு வகையில் உதவக்கூடும். மிக நீண்ட பதிவுகளை வாசிக்க சிரமமா? வெட்டி ஒட்டினால் போதும் பதிவை வாசிக்க வேண்டாம், கேட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கதைகளை இதனைக்கொண்டு வாசிக்க வைக்கலாம்.. :) நல்லா இருக்குதில்லயா..?
----------------------------------------------

செருப்புக்கு வந்த மரியாதை பாருங்களேன்.. காதில் செருப்புகள்.. விதவிதமாய்.. இனி செருப்பு வாங்கனும்ன்னா தோடு கடைக்கும் போவோமே?

படத்தை பெரியதாக்கி செருப்பழகைக் காணலாம்..
------------------------------------

September 17, 2009

நான் இயக்குனரான கதை

முன் குறிப்பு : சும்மாத்தானே இருக்கோம்.. பழைய பதிவுகளுக்கு லேபிள்களை சரிப்படுத்துவோம்ன்னு நினைத்துக் கொண்டிருந்த போது.. என் முதல் முயற்சியான இக்காட்சிக் கவிதைக்கு லேபிள் குறும்படம்ன்னு போடலாமோ போட்டுட்டு அப்படியே மீள்பதிவாக்கலாமோ என்று தோன்றியது . மீள்பதிவாக்கியாச்சு. பதிவின் பழைய பின்னூட்டங்களுக்கு ...

மேலும் சில சுய விளம்பரங்கள்..
குறும்படம் எடுக்க போகிறீர்களா சில குறிப்புகள்...

என் இரண்டாவது முயற்சி


அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

என் கவிதை வரிகள்:


பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.





நடுவர் நிலாவின் கருத்து:





இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு: "பூங்கா"
காட்சிச் சுவை நன்று. குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்ததைத் தவிர்த்திருக்கலாம். சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம். கவிதையைக் காட்சியில் எழுதியதால் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் போகிறது சில வேளைகளில். இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு பருவத்தின்உணர்வுளையும் க்ளோஸப்பில் ஓரிரு ஃப்ரேம்களாவது வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்






அன்புடனில் வெளிவந்த புகாரியின் கடிதம்:
(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்பின் முத்துலட்சுமி,
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி திறந்தவெளியில் பொழுதெல்லாம் இனிதாக்கிச் சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
நறுக்கென்று ஒரு நல்ல கருத்து. அதை மிக எளிமையாய்ச் சொல்லிச் செல்லும் உங்கள் கவிதையும் காட்சிகளும்.
மரங்களை வெட்டிவிட்டு மாளிகைகள் கட்டும் முட்டாள் மனிதர்களுக்கு நல்லதோர் உபதேசம்.
கட்டிடங்களுக்கு இடமே இல்லாத நியூயார்க் நகரின் நடுவிலும் பெரியதொரு பூங்கா இருக்கும் "சென்ட்ரல் பார்க்" அது இல்லாவிட்டால் நியூயார்க்கும் ஒரு மயானம்தான்.
மீண்டும் மீண்டும் வரும் அதே காட்சிகள் அலுப்பைத்தருவது உண்மைதான் என்றாலும் நல்ல படைப்பு
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, காட்சியாய் அமைத்து தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி




அன்புடன் குழுவிற்கு நான் எழுதிய கடிதம்:


வெற்றி பெற்ற செய்திமுதலில் சகபதிவர் மங்கை மூலம் அறிந்தேன் , அப்போதே மகிழ்ச்சி அளவிட முடியாமல் இருந்தது. குடும்பத்தில் எல்லோரும் பாராட்டினார்கள்.
கவிதை உருவானகதை மிகப் பெரியது. போட்டியில் இந்த பகுதி காட்சிக்கவிதை புதுமையாக இருந்தது. இப்படி ஒரு முயற்சி செய்ய வெகுநாளாகவே ஆசையிருந்தது. இப்போட்டி அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கவிதை ஒரு நாள் காலை கண்விழித்ததும் சிறு பொறியாக தோன்றியது. உடனே அதன் சுருக்கத்தை எழுதி வைத்தேன். பின் சமையலுக்கு நடுநடுவே அதன் விரிவாக்கமும்... வீடியோவுக்கான ஸ்டோரிபோர்டுக்கான வேலையும் குறிப்பெடுத்தேன்.


உடனேயே காட்சியை எடுக்க ஆசை அளவிட முடியாமல் போனது. ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னால் சிந்தாநதி அவர்களின் ஒரு விவாதக்களப்போட்டியில் பரிசாக எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. நான் பதேர்பாஞ்சாலியின் நாவலின் மொழிபெயர்ப்பு புத்தகம் கேட்டிருந்தேன். எழுத்தாளரின் பெயர் குறிப்பிட தவறி இருந்தேன் அதனால் அவர்கள் பதேர்பாஞ்சாலி படத்தினைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார்கள். அதுவும் ஒரு நல்ல புத்தகமே. இளைய இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாடபுத்தகம் அது.



அதில்குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விசயம். சத்யஜித்ரே ஒரு காட்சியை மூங்கில் புதர்களில் எடுத்தாராம். பணம் குறைந்ததால் மீதி காட்சி தொடர நாள் ஆகியதாம் அதற்குள் புதர் காடாகிவிட்டதாம். அதே காட்சி தொடர அவர் ஒரு ஆறு மாதம் காத்திருந்தாராம் காட்சியமைப்பில் அத்தனை ஒரு கவனம். அட யாரையெல்லாம் உவமை சொல்றான்னு நினைக்காதீங்க. முயற்சி செய்யும் போதே பெரியதாக கனவு காணனும் இல்லையா. அதனால் காத்திருந்து ஒரு 10 நாட்களாக காட்சிகளை எடுத்து பின் எடிட் செய்தேன். பின் அதனை ஒரு வடிவத்துக்கு கொண்டுவர மேலும் ஒரு வாரம் ஆனது எனக்கு ஏனென்றால் முதல் முயற்சி , கணினி தொழிட்நுட்பத்தில் தடுமாற்றம்.




நடுவர் நிலாவுக்கு நன்றி. அவர் குறிப்பிட்ட சில விசயங்கள் பாடலாக அதை பிண்ணனியில் ஒலிக்க செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது அதற்கும் முயற்சி செய்தேன் அப்போது எனக்கு பாடலை பதிவு செய்ய ஒரு நல்லதொரு சாப்ட்வேர் தெரியவில்லை. நிழல் படிந்தது போல் சில இடம் என்றது எனக்கு தெரிந்தே இருந்தது. அது மிக த்தொலைவில் விளையாண்ட குழந்தைகளின் காட்சி , எடுத்தபின் தான் தெரிந்தது நிழல் விழுந்தது. காட்சி திரும்ப கிடைக்காது என்பதால் அதை இணைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் வந்தது அது எல்லா காட்சியை இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட வீடியோ சாப்ட்வேர் அப்படித்தான் இருமுறை காட்சிகளை காண்பிக்கிறது எப்போதுமே.. கவிதை எழுத்தாக வருவதால் காட்சிகளை மறுமுறை பார்க்க வசதியாக இருக்கட்டுமே என்று அப்படியே விட்டுவிட்டேன்.


அன்புடனின் இக்கவிதைப்போட்டி மிகசிறப்பான ஒன்று. நன்றாக நடந்தது. எல்லாருக்கும் அறிவிப்பு சென்று சேர்க்க எடுத்த முயற்சி ஆகட்டும் , அடிக்கடி மெயில் செய்து தகவல்களை தெரிவிப்பதில் ஆகட்டும் மிக சிறப்பான செயல்பாடுகள். மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். அதற்கான ஆலோசனை தரும் அளவு யோசனை என்னிடம் இல்லை. என்னைப்போன்ற முயற்சி செய்போர்களுக்கு இது ஒரு நல்லதொரு வாய்ப்பளித்தது. அன்புடன் குழுமேல்மேலும் வளர ....வாழ்க வளமுடன். நன்றி

September 7, 2009

பரோட்டா செய்த கதை

புரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான். பொள்ளாச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் கடைசி ரெண்டு நாளில் பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு கேட்டுகிட்டோம். பக்கத்துவீட்டு அம்மணி நீங்க தில்லிலேர்ந்து வந்திருக்கீங்க கொஞ்சம் சப்ஜி சொல்லித்தாங்கன்னு கேட்டாங்க..அவங்களுக்கு சன்னா ,பாலக் எல்லாம் தெரிஞ்சுது வேற எதாச்சும்ன்னு இழுத்தாங்க.. தில்லி என்னங்க தில்லி எல்லா சப்ஜிக்கும் ஒரே ஸ்டார்ட்டிங்க் தான்னு சொல்லி ஸ்டார்ட் செய்தேன்..

வெங்காயம், தக்காளி,இஞ்சி ,பூண்டு தான் அடிப்படை . இதுகூட உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வச்சிக்கிட்டே எந்த சப்ஜியோடும் கூட்டு போட்டுக்கிட்டு எல்லா மேஜிக்கும் காட்டலாம். ஒரு ரெசிப்பி சொல்லிட்டு மத்ததெல்லாம் அதே தான் அடிப்படைன்னு மேலே
ட்ரை சப்ஜிக்கு போயிட்டேன். உருளை + முட்டைக்கோஸ், உருளை + முள்ளங்கி , உருளை + வெண்டைக்காய் உருளை + மட்டர் எக்ஸட்ரா எகஸட்ரா.. நோட்ஸ் எடுத்துக்கலாம்ன்னு நினைச்சது வீண் தானோன்னும் நான் தான் என் வீட்டுல சமைப்பனா இல்லையான்னும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல..

( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)

கடைசியா என்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல நானே நேரா அவங்க அடுக்களை களத்தில் புகுந்து என்னோட ஸ்பெஷல் சப்ஜியை செய்துக் காமிக்கிறதா ஒப்புக்கிட்டேன். வெங்காயம் , உருளைக்கிழங்கு, கத்திரிக்காய்,வெண்டைக்காய் , குடமிளகாய் , தக்காளி எல்லாத்தையும் வெட்டி வச்சிட்டு கூப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். அன்னைக்குன்னு பாத்து அவங்கவீட்டுக்கு சில நண்பர்கள் வந்திருந்தாங்க.. அவங்க மனைவிகளும் இதெல்லாம் சேத்து ஒரு காய் கேள்விபட்டதே இல்லைன்னு அடுக்களைக்குள்ள புகுந்துட்டாங்க..

நான் எழுதின வரிசை முறையாகவே காய்களை போட்டு வதக்கி மசாலாத்தூள் போட்டு மூடிமூடி வச்சு செய்தா கடைசியில் வர்ர வாசனையை வைத்து “ அம்மா என்ன செய்யறீங்கன்னு” வெளியே விளையாண்டுகிட்டிருந்த என் மகள் வந்தப்பதான் எல்லாருக்கும் அதோட மாயம் புரிந்தது. வித் எண்ணெய் விடாத ரொட்டியும் சொல்லிக்குடுத்ததில் அவங்க எல்லாரும் எனக்கும் சமையல் தெரியுமென்று ஒத்துக்கிட்டு பரோட்டா ரகசியத்தை சொல்லித்தர சம்மதிச்சாங்க..

பரோட்டாக்கு அரைக்கிலோ மாவுக்கு கொஞ்சம் உப்பு ஒரு ஸ்பூன் ஜீனி சேத்து கொஞ்சம் கொஞ்சமா மாவு பிசைஞ்சாங்க ( நான் பாத்துட்டிருந்தேன்) என் பையன் ஒரு உருண்டை மாவை அவங்க சொன்னமாதிரியே பிசைந்து செயல்முறை வகுப்பெடுத்துக்கிட்டான். மாவு பிசைஞ்சு முடிச்சதும் 'U' வடிவத்துல உருளையாக செய்துவச்சிட்டாங்க. ஒரு கிண்ணத்துல நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் அரிசிமாவைக் கொட்டி அதை நல்லா கோழிக்கு மஞ்சள் தடவுறமாதிரி தடவி மூடிவச்சுட்டாங்க. காலையில் ஊறவச்சா ராத்திரிக்கும் ராத்திரி ஊறவச்சா காலைக்கும் அதை பரோட்டாவாக்கலாமாம்.

(மேற்கொண்டு கதைக்கு போறதுக்கு முன்னால்: இதைக் கத்துக்கிட்டு வந்து சிலமாதங்களான பின்னும் யாருக்காக கத்துக்கிட்டு வந்தனோ அவங்களுக்கு செய்து தரவே இல்லை. நேற்று தான் அதுக்கான நேரம் வந்தது.)

உருண்டைகளா செய்து அதை நீட்டமான பலகையில் போட்டு எண்ணைய்+ அரிசிமாவுக் கலவையை தடவித் தடவி நீட்டி நீட்டி கிழிஞ்ச பனியன் மாதிரி செய்திடனும்.எங்க வீட்டுல பலகை இல்லாததால் அடுக்களை க்ரானைட் மேடையையே நல்லா சுத்தம் செய்து பனியனை கிழித்தோம்.(மகள், ”அப்பா இங்க வந்து பாருங்க கிழிஞ்ச பனியன்”னு எதுக்கு கூப்பிட்டு காட்டினா??!!..பரோட்டாவுக்காக அவ என் கட்சியில் சேர்ந்திட்டான்னு உதவிகள் செய்ததிலிருந்தும் இதிலிருந்து புரிஞ்சுது :) ) ஒருமுனையைப் பிடிச்சு தூக்கி முறுக்கு சுத்தறாப்பல சுத்தி வட்டமாக்கி வச்சிட்டோம்.

எல்லா முறுக்கும் சுத்தினப்பறம் அதை லேசா அழுத்தாம சின்னச் சின்ன பரோட்டாவாக்கி சுட்டு எடுத்தாச்சு. ரெண்டு பரோட்டா சுட்டதும் அழுத்தி பிடிச்சு மேலும் கீழுமா இழுத்து விட்டாத்தான் லேயர் வருமாம் கை எல்லாம் சிவந்து போச்சு.. உப்புதான் கொஞ்சம் கம்மி ஆனா பரோட்டா சூப்பர்ன்னு பின்னூட்டம் கிடைத்தது. பரோட்டாக்கு குருமாவும் , தயிர்பச்சடியும் செய்யப்பட்டு இருந்தது.எல்லாரும் அதை சாப்பிட்டு.. அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்..................

August 30, 2009

புதிய தலைமுறை - இதழ்

சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை இதழில் என்னவெல்லாம் நமக்குப் பிடித்தமானது , எவையிருந்தால் ஒரு பத்திரிக்கையை தரமென்று ஒத்துக்கொள்வோம், எவை தேவையில்லாத பகுதிகள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். கூடவே வாங்கிப்படிகின்ற பத்திரிக்கையின் பெயரையும் கேட்டிருந்தார்கள். நான் வாங்கிப்படிக்கும் பத்திரிக்கையின் பெயர் அங்கே குடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் அதனை தனியாகக் குறிப்பிடவேண்டிய கட்டத்தில் இட்டு நிரப்பினேன். நான் தற்போது வாங்கிப்படிக்கும் ஒரே புத்தகம் தில்லியில் வெளியாகும் வடக்குவாசல் மட்டுமே..

முன்பு விகடன் மட்டும் வாங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் , கதைகளை கிழித்து புத்தகமாக பைண்ட் செய்துகொள்வது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக அப்படி சேமிக்கத் தக்கதாக எனக்கு ஒன்றும் தோணவில்லை. அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... மேலும் இங்கே வலைப்பூக்களும் மற்றும் வாசிப்புக்களுக்குமே எனது பகுதி நேரம் செலவாகியதும் ஒரு காரணம். கருத்துக்கணிப்பில் என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.

புதிய தலைமுறையின் மாதிரி இதழை அனுப்பி வைத்திருந்தார் மாலன். அட்டைப்படம் இளைஞர்களுக்கானது என்று காட்டுவது போல இருந்தது. நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா? அங்கே தான் உருப்பட என்கிற தலைப்பில் புத்தக அறிமுகப் பகுதி இருந்தது. எங்கே போனது என் அல்வாத்துண்டு புத்தத்தின் விமர்சனம் வெளிவந்திருந்தது. நிச்சயம் உருப்படத்தேவையான புத்தகமே என்பதால் தொடர்ந்து அது போன்ற நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் வருமென்றும் உருப்படியான இதழாக புதிய தலைமுறை இருக்குமென்றே ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் விழுந்தது. .
இதற்கு முன் புதிய தலைமுறையை படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்து வெற்றி வெற்றி எனக்கூறிக்கொண்ட முதல் கட்டுரையை ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனாக எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள்.

அடுத்த பகுதியான கணினிப்பகுதியில் ஈகலப்பைப் பற்றி எல்லாமே ஓசி என்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஈகலப்பை சிலநாட்களாக சரியாக பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் எல்லாரும் NHM க்கு மாறிவிட்டோமே என்று தோன்றியது. ஆனால் கேள்வி பதில் முறையில் நன்றாகவே தமிழ் எழுதிக்கு அறிமுகமாக இருந்தது.
எல்லாமே தலைகீழ் முறையில் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது நினைவிருக்கட்டும்.. :)

மறுகூட்டலுக்குப் பின் மாநிலத்தில் முதலிடத்தை தான் நூலிழையில் தவறவிட்ட செய்தியறிந்த மாணவனின் சோகக்கதை,நிறைவான கதையாக அருணா அவர்களின் ‘நிறைவு ‘ சிறுகதை, கோடம்பாக்கத்து சுனாமிகளான புது இயக்குனர்களின் கதை எல்லாமே எனக்குப் பிடித்தது. நடுவில் டைம் பாஸ் என்கிற குமுதம் ஆறுவித்தியாசம் போன்ற ஒன்று இருந்தது. என்னால் விடை காணவே முடியலை டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கண்ணைப் பரிசோதனை செய்யனும் போல.. :)

நடுப்பக்கத்து குடும்ப மரம் அழகு.. நேரு குடும்பத்துக்கப்பறம் நம்ம தமிழ்நாட்டுக்குடும்பம் தான் பெரிய ஆலமரம்.பைக் வாங்குவது எப்படி ? தல சொல்லறது நல்லவே இருக்கு. எனக்கு, நோய் அதன் அறிகுறிகளை எல்லாம் படித்து படித்து இப்பல்லாம் எதுவந்தாலும் அதுவா இருக்குமோ என்று பயப்படுகின்ற நோய் வந்துவிட்டது அதனால் சர்க்கரை இந்திய இளைஞர்களைத் தின்கிறது என்ற கட்டுரையை தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் கட்டுரைக்கு சென்று விட்டேன்.ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருந்தாக வேண்டியதில்லை என்கிற வாதம் அருமையா இருந்தது.கவுன்சிலிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க அதிஷா & லக்கி எளிமையாப் புரியுது. உதவிக்காத்திருக்கு என்கிறபகுதி நன்றாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்.

இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..

August 26, 2009

அன்புக்கதை

குழந்தைகள் சில விசயங்களை திரும்பத் திரும்ப செய்வார்கள் அவர்களுக்கு அலுப்பே இருப்பதில்லை. குழந்தைகளை உற்று கவனித்திருந்தால் நீங்கள் இதனை அறிந்திருக்க வாய்ப்புண்டு . அதிகபட்சமாக 24 முறைவரை செய்யக்கூடும் என்று சொல்கிறார்கள். பிறகே சற்றே அலுப்புதட்டி மற்ற ஒரு செயலுக்கு நகர்வார்கள். சில நேரங்களில் மற்றவர்களின் கவனம் கவர்வதற்காக செய்வார்கள் சிலநேரம் அவர்களின் உண்மையான ஆர்வத்தின் காரணமாகவும் செய்வார்கள். அவைபோலவே அவர்கள் கேள்விக்கணைகளும் தொடுப்பது வழக்கம்.
இது என்ன?
ஏன் இப்படி இருக்கிறது?
ஏன் அப்படி இல்லை?
இன்னும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அவை வருவதுண்டு.

அவ்வாறான கேள்விகளை எதிர்ப்படும் நேரங்களில் ஒவ்வொருவரின் வெளிப்பாடும் வேறுபடுவதுண்டு. நாம் நம் குழந்தைகள் என்கிற அன்பு மிகுதியினால் அவர்களின் கேள்விகள் அவர்களை வளர்க்கின்றன என்று உணர்ந்து கொண்டு பதிலளிக்கவும் கூடும். சிலர் பொறுமையுடன் சிலமுறைகள் பதில் அளிப்பதும் நேரம் செல்லச் செல்ல பொறுமை இழப்பதும் அதன் பின் ’சற்று நேரம் அமைதியாக இருக்ககூடாதா’வென்று பொறுமை இழந்தோ அல்லது கோபத்தின் உச்சத்தில் சென்று இரைந்து கத்தியோ இருக்கலாம்.

ஆனால் வயதான காலத்தில் பெற்றோர்கள் பேச்சுத் துணைக்கென ஏங்கி நிற்கிற போது மறுதலித்து ஒதுங்கி இருத்தல் என்பது போன்ற கடுமையான செயல் வேறெதுவுமில்லை. ஒருகாலத்தில் கண்ணின் மணி போல காத்து இருந்த பெற்றோரிடம் சற்றே அமர்ந்து பேசி இருக்கத்தான் எத்தனையோ தடங்கல்கள்.

க்ரேக்க இயக்குனர் Constantin Pilavios இன் இந்த குறும்படத்தை நீங்கள் ஏற்கனவே பாத்திருக்கலாம். இல்லையென்றால் என்னைப்போல முதல் முறை பார்ப்பவராக இருக்கலாம். குறும்படங்கள் என்று குறிப்பிடுகின்றோமே தவிர நீள நீள கதை வசனக்காட்சிகள் கூட நமக்குள் இவைபோன்றதொரு தாக்கமேற்படுத்த முடியாது. மெல்லிய தாலாட்டைப் போன்ற ஒலியுடன் தொடங்கி ஒரு வீட்டின் முன்பகுதியின் அழகை துளித்துளியாக துல்லியமாக காட்டுகின்றது கேமிரா. இசையின் குழைவில் ஆயிரம் அன்புக்கதை மீதமிருக்கிறது. சில நிமிடங்கள் கள்ளமற்ற குழந்தையாகவும் வீட்டிற்குள் சென்று திரும்பிய சில நிமிடங்கள் கம்பீரமான தந்தையாக உருமாறும் போது தந்தை கதாபாத்திரம் வியக்கவைக்கிறார். நாட்குறிப்பில் இருப்பதை மகன் வாசிக்கையில் அவர் பெருமூச்சிடும் பொழுது காலங்களின் தொலைவில் அவர் கொண்ட அன்பின் பாரம் நம்மையும் ஒரு சேர அழுத்துகிறது.


ஈரம் மிச்சமிருக்கும் இதயங்கள் கண்டால் நிச்சயம் கண்கள் குளமாகலாம் .அன்பில் இதயம் கனக்கலாம். அர்த்தமுள்ள நல்லமாற்றம் ஒன்றை விதைக்கும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.





Directed by: Constantin Pilavios
Written by: Nikos & Constantin Pilavios
Director of photgraphy: Zoe Manta
Music by: Christos Triantafillou
Sound by: Teo Babouris
Mixed by: Kostas Varibobiotis
Produced by: MovieTeller films

(ஈழநேசன் இணைய தளத்திற்காக எழுதியது)

இந்த குறும்படத்தை நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் என்றாலும் இதனுடைய எழுத்துவடிவம் பலநாட்களாக மின் மடலாக பலருடைய பார்வைக்கும் வந்திருப்பதாகத் தெரிகிறது. எப்பொழுதுமே எழுத்துவடிவத்தில் நாம் முதலில் பார்த்த விசயத்தை காட்சிவடிவமாக நம் மனதில் ஒரு விதமாக உருவகப்படுத்தி இருப்போம். அதனால் அது நமக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புண்டு. மகன் செயற்கையாக நடிப்பது போல தெரிகிறது என்று ஒரு நண்பனுக்கு தோன்றியதாம். ஒருவருடைய குணம் ஒரு நிகழ்வினால் உடனே மாறிவிடாது.அந்நேரத்து குற்ற உணர்ச்சியால் அவன் அப்படி மட்டுமே செயற்கையாக இருக்கலாம் என்று தோன்றியது. எனக்கு எப்படித்தெரியுமா? எனக்கும் வந்ததே குற்ற உணர்ச்சி.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் அம்மாவுடன் வாய்ஸ் சேட்டில் பகிர்ந்து கொள்ள நினைத்தபோது நான் பாதிக்கதைக்கு மேல் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க அழுதுவிட்டேன். ஒருநாளில் அன்புமயமாக மாற இயலாது. ஆனால் இன்னும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் தோன்றியிருக்கிறது .

August 24, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

ஞாயிறு காலையில் கானா ப்ரபாவின் ஸ்டேட்டஸில் நேரலை பதிவர் சந்திப்பின் தொடுப்பினைக் கண்டதும் லைவ் ஸ்ட்ரீமில் நுழைந்தேன். வெகுநேரமாக நடந்து கொண்டிருந்த சந்திப்பின் முடிவில் ஒன்றரை மணி நேரம் நானும் கலந்துகொண்டேன். அறுபது எழுபது பேருக்கு மேற்பட்ட கூட்டத்தில் ஒன்பது பெண்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. யாரும் நடுத்தர வயதுப் பெண்களாகத் தெரியவில்லை. இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்கள் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

காணொளியில் கூட்டத்தினரின் உரைகளை கேட்டுக்கொண்டிருக்கையிலே அருகிலிருந்த அரட்டைப் பெட்டியில் இணைய விருந்தினர்கள் வேகமான தட்டச்சிக்கொண்டிருந்தார்கள் . கானாவிடம் நாங்களும் அங்கே தட்டச்சலாமா என்று கேட்டுவிட்டு பின் புனைப்பெயராக முத்துலெட்சுமியையே தேர்ந்தெடுத்து நேரலை பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பெண்களை பேசவிடுங்கப்பா.. அவரைப் பேசியது போதுமென்று உக்கார சொல்லுங்கப்பா, முதுகு காட்டறவர் யாரப்பா? என்று அங்கே அவ்வப்போது நடந்த தட்டச்சு உரையாடல் களேபரங்கள் கல்லூரியை நினைவு படுத்தியது. குட்டிப்பதிவர் ஒருவர் வந்திருந்தார் .. 6 ம் வகுப்பு படிக்கிறாராம். நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ பேச்சு நடந்து கொண்டிருந்தது. பின் வந்தவர்கள் எல்லாருடைய பேச்சிலும் அது அடிபட்டது.

ஒருபோது தான் தன் எழுத்தினால் விசாரிக்கப்பட நேர்ந்தது என்றும் ஆனால் அதுவே எல்லாருக்கும் ஏற்படாது என்று சொல்லிவிட்டு உண்மைபெயரைக் கொண்டே எல்லாரும் எழுதவேண்டும் அப்போது தான் பொறுப்புணர்வோடு எழுதத்தலைப்படுவோம் என்று ஒரு பதிவர் சொல்லிக்கொண்டிருந்தார். ஆங்கிலம் கற்றால் தான் வாழ்க்கை என்று சொல்லப்படும் காலத்தில் இருப்பதால் தங்களுக்கு தமிழின் கடினமான சொற்கள் புரிவதில்லை என்றார் ஒரு பெண்பதிவர். அவர் ஒருவர்தான் எழுந்து பேசிய பெண் என்று கேள்விபட்டேன்.

சிங்கை நாதனைப்பற்றிய குறிப்பு மற்றும் உதவி செய்ய விரும்புவர்கள் கோவிகண்ணன் பதிவைப் பார்க்குமாறு அறிவுறுத்தபட்டார்கள்.

முடிவில் “இருக்கிறம்” என்கிற ஒரு இதழ் எல்லாருக்கும் வழங்கப்பட்டது. இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்கள் ( 40) ”நாங்களும் இருக்கிறம்” என்று சொன்னப்போதிலும் எங்களுக்கு கிட்டவில்லை. ஊரோடி தன் மடிகணினி மூலமாக நிகழ்வை இணையத்தில் காட்டிக்கொண்டிருந்தார். முடிவில் அனைவரும் முகம் காட்டிவிட்டு செல்லும்படி சொல்ல அதற்கு பதில் ஒரு நல்ல யுக்தி செய்தார் . வாயில்படியருகே நின்று கொண்டு எல்லாரையும் காட்டிக்கொண்டிருந்தார்.

இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும்பலரின் பதிவர் சந்திப்பினைப்பற்றிய பதிவுகளுக்கும் தொடுப்புகளுக்கும்.
.

And , Now... நீலப்பேனாவும் சிகப்பு டைரியும்

என்னிடம் ஒரு மை சிந்தும்
நீலப் பேனாவும்
அதை மாட்டியே வைத்திருக்கும்
சிகப்பு டைரியும் இருந்தது
இரண்டும் எப்படியோ
தொலைந்து போனது ஒருநாளில்
அதனோடு என் கிறுக்கல்களும்.

பி.கு இப்போதுதான் பதிவும் e kalappaiயும், NHM எழுதிகளும் கிடைத்துவிட்டதே தொடர்கின்றது கிறுக்கல்கள்..

முல்லையின் கவிதைக்கு எதிர்கவுஜயாக்கும் இது. மற்றவர்களெல்லாம் அந்த கவிதைக்கு வெறும் எதிர்பதிவு மட்டுமே போட்டார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

August 21, 2009

பரிச்சயங்கள்



photo : thanks to layoutsparks.com

ஒளிகளை நிறுத்தி
ஒலிகளையும் சேமித்திருக்கும்
வனம் சொன்ன உறுதிமொழி
நம்பத்தகுந்ததென கூடு சமைத்தேன்
எப்போதாவது நிகழும் பெருந்தீயினையும்
வனமே
பெருமழை துணையோடு தணித்து
தஞ்சமென்றது
இருளோடு கலந்து
நிசப்தங்களே பழகிக்கொண்டிருக்க
தன்னையே பதம் பார்க்கும்
உளியின் ஓசையோடு கொண்ட பேராசை
வனத்துக்கு வெளியே ஈர்த்தபடியே இருக்கிறது.

August 18, 2009

படிநிலைகள்


கனவு வந்து
கலைத்துப் போட்ட பத்திகளை
முன்பின்னாக அடுக்கி
ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன்
நிலைப்படிகளான
நிலைகள் முன்னாலும்
நிலைப்படிகளோடு
நிலைகள் பின்னாலுமாக


----------------------------------------



வரிகளாய் வளர்ந்தவை
துண்டங்களாய்
உடைந்து உடைந்து
உதிர்ந்த வழிகளில
மிச்சமாய்
மறிக்கிறது முற்றுப்புள்ளி.

August 17, 2009

கண்ணன் பிறந்தநாள் விழா - குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை

போன வருடங்களின் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் எப்படி அடுத்தவர் செங்கல்லோடும் மணலோடும் கொண்டாடப்பட்டுவந்தது நாங்க எடுத்த உறுதிமொழிகள் என்ன என்பதெல்லாம் பழைய பதிவில் இருக்கிறது.

சில நாட்கள் முன்னமே என்ன செய்வது எந்த குழுவோடு இணைவது என்று மகளின் திட்டங்கள் தொடங்கிவிட்டது. அவளின் நெருங்கிய தோழி ஒரு பெரிய குழுவோடு இணையப்போவதா செய்திருந்த திட்டம் இவளை முழுக்க சோகமக்கிவிட்டது. நானோ அவள் அக்குழுவோடு இணைவதை விரும்பவில்லை. போன முறையே செங்கல் மணல் திருட்டை மேற்கொண்ட குழு என்பதும் அல்லாமல் முதலீடான பூந்திகளுக்கு என்ற பங்குப் பணம் என் மகளிடமும் அவள் தோழியிடமும் மட்டும் அதிகமாக கேட்ட பெரிய குழந்தைகளாயிற்றே! ..

இரண்டொரு நாளில் அவள் தோழியின் அம்மாவும் அவளை அக்குழுவோடு இணைய வேண்டாமென்ற நல்ல செய்தி கேட்டதும் மீண்டும் மகிழ்வோடு தயாராகிக் கொண்டிருந்தாள். செங்கல்லுக்கு பதிலா பழைய நோட்டு அட்டைகளை ஏழு செமீ அகலத்துக்கு பட்டைகளாக வெட்டிக்கொண்டோம். முதலில் அத்திட்டத்துக்கு மறுத்தவள் மாதிரியை படமாக வரைந்து காட்டியதும் ஒத்துக்கொண்டாள். பிறகு அவற்றை அவளே குறிப்பிட்ட நீளத்திற்கு ஸ்டேபிள் செய்து வைத்தாள்.. நான்கு விதமான பட்டைகளாக தயார் செய்து வைத்தபின் தெர்மக்கோல் நுழைவாயில் தோரணத்திற்கு எடுத்துக்கொண்டாள்.

இம்முறை எதிர்வீட்டுச் சிறுவனும் இணைந்து கொள்ள மகளும் அவள் தோழியும் அவரவர் தம்பிகளுடன் நால்வரோடு ஐவரானோம் என்றபடி அவரவர் வீட்டு கிருஷ்ணர் பொம்மைகளுடனும் ஏனைய கடவுள்களுடனும் கிளம்பினார்கள். பூந்திக்கு பதில் இம்முறை மெதுவான லட்டு வாங்கி பிரித்து வைத்தார்கள். அட்டைகளை அங்கே கொண்டு சென்று சதுரமாக அமைத்து ஓரங்களை நான் இணைத்துக் கொடுத்தேன். அவை நேராக நிற்க ஒரு அட்டையை மடித்து வைத்து |_ ஸ்டேபிள் செய்த பின் அதன் கீழ் பகுதியில் ஒரு கடவுள் பொம்மையை வைத்ததும் அது அந்த சுவற்றை நேராக நிக்க உதவியது.



இவ்வாறாக ஆங்காங்கே |_ இப்படி ஒட்டுக்கொடுத்து அதன் மேல் பொம்மைகளை வைத்து , மணலுக்கு பதிலாக இலைகளாள் தரை பாவி நடுவில் யானைகளின் ஊர்வலம் அமைத்து , வாசலில் வண்ணக்கோலமிட்டு , ஆங்காங்கே சிறு மரங்களைப்போல சிறு கொம்புகளையும், கூடையை கவிழ்த்து அமைத்து சிறு மலைமேல் துர்க்கையுமாக இடம் தயாரானது.



நீலக்காகித்தால் ஆன நதி தயாரானதும் வசுதேவர் கண்ணனைத் தூக்கியபடி ஆற்றில் இறங்கினார். சிறு மரம்போன்ற கொம்புகளுக்கிடையில் கண்ணனும் ராதையும் ஊஞ்சலாடினார்கள். மாடு கன்றுகள் அருகில் யாசோதை பானை தயிற்றில் வெண்ணெய் எடுக்க கண்ணன் அதை எடுக்க ... வெக்கை எங்களை படுத்த என நேரம் சென்றது.



தீபங்கள் ஏற்றி அழகு செய்த நேரத்தில் மக்கள் பார்ப்பதற்கு வர ஆரம்பித்தார்கள். செங்கல்லுக்கு பதிலான என் அட்டைத்திட்டம் பாராட்டுப் பெற்றது. செய்வதற்கும் எளிதும் .. முடித்தபின் அடுத்தவர்களுக்கு தொல்லையும் இல்லை . உடனே கலைத்து எடுத்துச் சென்றுவிடலாம் என்பதெல்லாம் அதன் நன்மைகள். அலங்காரங்களும் யானை அணிவகுப்பும் எல்லாருக்கும் மிகப்பிடித்திருந்ததால் குழந்தைகள் பாராட்டுப் பெற்றார்கள். பெருமிதமாய் அவர்கள் பிரசாதம் வழங்க வந்தவர்கள் தட்டில் பணங்களைப் போட்டபடி வணங்கிச் சென்றார்கள். பிறகு அது அக்காக்களுக்கும் தம்பிகளுக்குமாய் பங்கு போடப்பட்டு அவர்களின் சிறு சேமிப்புக்குச் சென்று சேர்ந்துவிட்டது.




கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..

August 14, 2009

சிறகு பெற்ற மனது

இன்று
சிட்டுக்குருவியினையொத்த
சிறகுபெற்ற என் மனது
உன் இருப்பிடம் தேடி
வீட்டின் முற்றத்தில் இறங்கி
உதட்டிலிருந்து சிதறிய சொற்களை
கடவுளின் பிரசாதமென
கொணர்ந்து சேர்க்கிறது

நாளை மீண்டும் ஒரு
வண்ணத்துப்பூச்சியென
ஜன்னலின் ஊடாக நுழைந்திருக்கும்
என்னிடமல்லாமல் வேறு யாரோடும்
பேசும் ஒவ்வோர் வார்த்தைகளையும் கூட
வேதமென எழுதி வைக்கிறது

மறுநாளும் அதற்கப்புறமும்
வழிதவறியதாகச் சொல்லிக்கொண்டு
வாசல் நுழையும் வண்டென
திரைச்சீலைத் தள்ளி தைரியமாய்
எட்டிப்பார்க்கும் தென்றலென
நித்தம் பல உருமாறி
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.


பி.கு : மீள்பதிவு

August 7, 2009

இனிது ! இனிது! தமிழினிது!

தில்லி நகரில் வடக்கு வாசல் இதழுக்காக நடைபெறும் இசைவிழாக்கள் என்றாலே தமிழிசையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கத் தொடங்குவது வழக்கம். இம்முறை பக்தி இசைவிழா என்று மூன்று நாட்கள் அறிவிப்பு கிடைத்தது. எதிர்பாராதவிதமாக திருமதி பட்டம்மாளின் இழப்பினால் நித்யஸ்ரீ அவர்களின் கச்சேரி இருந்த தினம் மட்டும் விழா நடைபெறவில்லை.

முதல் நாள் விழாவை கேட்க இயாலதபடி வேலை வந்தது. இரண்டாம்நாள் சஞ்சய் சுப்ரமணியத்தின் கச்சேரிக்கு அரை மணி முன்னதாகவே போய் இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம். அது என்ன மாயமோ? இசைக்கச்சேரிகளில் 80 விழுக்காட்டிற்கும் மேல் வயதான தாத்தாவும் பாட்டியுமாகவே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் ரசிப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இளையவர்களும் நடுவயதினரும் சம பங்காக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு ஆசை தான்.


’ என்ன புண்ணியம் செய்தாயோ’ என்று சஞ்சய் பாடியபோது இது போன்ற தமிழிசைக் கச்சேரிகளைக் கேட்க நிச்சயம் புண்ணியம் தான் செய்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்குமான இடைவேளையில் ஒரு சின்ன துண்டுச் சீட்டு வந்தது. சரிதான் யாரோ பாட்டு கேட்டிருப்பார்களோ அது என்ன பாட்டாக இருக்கும் இப்படி ஆவலோடு (ரசிகர்கள் எல்லாரும் தான்) இருந்தோம். சஞ்சய் ஒருநிமிடம் அமைதியாக அதை வாசித்துவிட்டு சிரித்தபடி ” ஒரு வண்டி ரோடை ப்ளாக் செய்து நிற்கிறதாம் நம்பர் -----” என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பென்னேஸ்வரன் அவர்கள் இதைத் தனியாக வேறு யாரையும் கொண்டு அறிவித்திருக்கலாமே என்று சொல்ல ஓடினார் என்று நினைக்கிறேன். சிச்சுவேசன் சாங் ஐ போல ”யாருக்கும் அடங்காத நீலி” என்று சஞ்சய் ஆரம்பித்ததும் எல்லாரும் சிரிக்கத்தொடங்கினார்கள்.

ஷண்முகப்பிரியாவில் பார்வதி நாயகனே! கண்டேன் கலி தீர்ந்தேன் , மாலனை மன்றாடி மைந்தனை ,பூத்தவளே புவனம் பதினாங்கையும் .. என அவர் தொடர்ந்து இசை மழையாய் பொழிய.. உற்சாகமாய் பாடிக்கொண்டே தானும் ரசித்து மற்றோரையும் ரசிக்க செய்து கொண்டிருந்தார். பக்கவாத்தியங்களும் வயலினில் எஸ்.வரதராஜனும் நெய்வேலி வெங்கடேஷ் மிருதங்கத்திலுமாக களை கட்டி இருந்தது. பாடுவது நமக்காக இல்லாமல் தானும் ரசித்து அவர் பாடும் போது ரசிகர்களுக்கும் அவருக்குமான ஒரு மகிழ்ச்சி அங்கே சமன்பாட்டில் இருந்தது.




” குழலினிது யாழினிது” குறளின் ஈரடிகளை வைத்துக்கொண்டு ஓர் அற்புதமே நிகழ்த்தினார். ( இது பெஹாக் என்கிற ராகம் என்று தலைவாசல் கட்டுரையைப் படித்து அறிந்துகொண்டேன் ) என்னதான் மகளோடு இசை வகுப்பில் போய் அமர்ந்தும் அங்கே இங்கே கேட்டும் வந்திருக்கிற கீர்த்தனை , கிருதி என்கிற கேள்வி ஞானம் கொஞ்சம் இருந்தாலும் தமிழில் பாட்டைக் கேட்டு ரசிப்பதன் இன்பம் தனிவிதம் தான். சில ராகங்களை மட்டும் உடனே கண்டுபிடித்துவிடுவேன் அதில் சகானா முதலிடம். சஞ்சய் சஹானாவில் ஒரு பாட்டு பாடிய போது மகிழ்ச்சியாக இருந்தது.( அன்றைக்கு அவர் சஹானாவில் பாடவே இல்லைன்னு மட்டும் யாரும் சொல்லிடாதீங்க)

சஞ்சய் சுப்ரமணியம் பாடியதைக் கேட்டதிலிருந்து வீட்டுக்குட்டிப்பையன் ராகம் பாட ஆரம்பித்திருக்கிறான். மேடையில் இருப்பது சபரி என்று அவனே சொல்லிகொண்டான் (மைக் ஆசை வந்துவிட்டதோ?). விழா நடந்த வாரத்திலேயே எழுதி இருந்தால் அழகாக சொல்லி இருக்கலாம்.. இது நினைவில் வைத்து (வைக்க) சேமித்த சிறு குறிப்புக்கள்

’வடக்குவாசல்’ பென்னேஸ்வரன் அவர்கள் தமிழிசையை அனைவருக்கும் கொண்டுசேர்ப்பதற்காய் பற்பல நன்றிகள்.

July 22, 2009

துவக்கப்பள்ளிக்காலம்


தோழியாக அவார்ட் குடுத்த புதுகைத்தென்றலுக்கு நன்றி . போனமுறை சுவாரசியப்பதிவு என்று பாராட்டவேண்டி இருந்ததால் அவார்டை பிரித்துக்கொடுத்தேன். இது நண்பர்களுக்கான விருது தானே..என் நண்பர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்பதால் பிரித்துக்கொடுக்கவில்லை.
--------------------------------------
தொடர்பதிவுக்குன்னே இந்த தளத்தை வைச்சிடலாமாங்கற அளவு மக்கள் தொடர்ந்து தலைப்புகளை தந்தவண்ணம் இருக்க.. நானும் அம்மா தலைப்பப் பிடிச்சக் குழந்தையாக போய்க்கொண்டிருக்கிறேன். இப்போ தமிழ்பிரியனின் தொடரழைப்புக்காக என் இளமைக்காலங்களுக்குள்ளே நுழையலாம்...

நான் முதல் முதலில் பள்ளிக்கூடம் போனது ஒன்றாம் வகுப்பு. சிலர் அரைக்ளாஸ் , பேபிக்ளாஸ் எல்லாம் முடிந்து போயிருப்பீர்கள். அது ஒரு சின்னக்கிராமம் திருவெண்காடுன்னு பெயர். ...பள்ளிக்கூடம் பெயர் ... மெய்கண்டார் துவக்கப்பள்ளி. அது இப்போது இடிக்கப்பட்டு சங்கரமடம் வந்திருப்பதாகக் கேள்விபட்டேன். முதல் வகுப்பு ஆசிரியை பெயர் ஜானகியாம் .. அது என்ன ஆம் என்றால், என் அம்மாவிடம் நேற்று கேட்டு நினைவுப்படுத்திக்கொள்ள முயற்சித்தேன்.. அத்தனை நினைவாற்றல். முதல் நாள் வகுப்பறைக்காட்சி மட்டுமே என் மனதில் நிழலாடுகிறது. இருட்டான வகுப்பறையில் மேலிருக்கும் கண்ணாடிவழி ஒளிகசிய அந்த ஒளிக்கற்றைக்கு பின்னால் ஆரஞ்சு வண்ணத்தில் சேலையணிந்த ஆசிரியை.பின் ஒருநாள் நாங்கள் மாயவரத்துக்கு மாறிப்போய்விட்டபின் அவர்களை அவர்கள் வீட்டில் சந்தித்ததாக நினைவு.

இரண்டாம் வகுப்பு சுத்தமாக நினைவே இல்லை.. சோம்பேறியின் ”ஏ நீ ரெண்டாம்ப்பு பாஸ் பண்ணி இருக்கியா நினைவு வருகிறது ” பாஸ் செய்திருப்பேனாத்தான் இருக்கனும். அதற்கு ஒரு ஆசிரியர் பிரம்போடு இருப்பது போன்ற ஒரு காட்சி ஒரு நொடிப்பொழுது வந்து மறைகிறது. அப்போது என்னோடு படித்த என் தோழி ஒருத்தி இன்றும் தொடர்பில் இருக்கிறாள். அவர்கள் குடும்பமே எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்கள் ..அந்த ஒரு காரணத்தால் தான் அந்த தோழி இன்னும் நட்பில் இருக்கிறாள். அவள் அடிக்கடி நினைவுபடுத்துவது நாங்கள் இருவரும் சிலேட்டில் எங்கள் மார்க்கைத் திருத்திக் காண்பித்தோமாம்.

மூன்றாம் வகுப்புக்கு நாங்கள் மாயவரம் வந்துவிட்டோம். சர்ச்சை சேர்ந்த ஸ்கூல் ..நர்ஸ் போன்ற வெள்ளை உடையும் தொப்பியுமாக ஜெர்மன் அம்மா தான் தலைமை.
அங்கே பல ஏழைகிராமக் குழந்தைகள் விடுதியில் தங்கிப்படிப்பது உண்டு. மூன்றாம் வகுப்பு சேர்ந்த புதிதில் நோட் வேண்டும் என்று டீச்சர் சொல்லி அதை நான் வீட்டில் சொல்லாமல் விட்டுவிட்டதால் பல நாட்கள் கழித்து புது நோட் வாங்கி என் அம்மாவே எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை வந்ததாக நினைவு. அப்போது தான் இந்த மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைகள் அறிமுகம்.. தரையோடு ஒட்டிய பலகைகள் நினைவுக்கு இருக்கிறது
நாலாம் வகுப்பு டீச்சரை நினைவுக்கு கொண்டுவர முடிகிறது. ஆனால் பெயர் நினைவில்லை. அவர்கள் தான் முதன் முதலில் எனக்கு கண் பார்வையில் கோளாறு இருக்குமோ என்று சொன்னது. வகுப்புப்பாடங்களை தப்பும் தவறுமாக எழுதிவிட்டு போர்டில் க்ளார் அடிப்பதாகக் குற்றம் சாட்டி வந்தேன்.

ஐந்தாம் வகுப்பு டீச்சரை நல்லா நியாபகம் இருக்கு. நித்யா டீச்சர். அவங்க தலைமை ஆசிரியராவும் இருந்ததால் அவங்களுக்கு பாடம் எடுக்கவே நேரம் இருக்காது. பல நேரம் நாங்க டாக்டர் விளையாட்டு விளையாடுவோம். எப்பவும் சபி முனிசா தான் டாக்டர்.. பசங்க எல்லாம் பெஞ்சுகளில் ஏறி குதித்து விளையாடுவார்கள். அந்த வகுப்பில் படித்த நாலைந்து பெண்கள் கல்லூரியிலும் ஒன்றாக படிக்க நேர்ந்ததால் தொடர்பில் இருக்கிறார்கள். வகுப்பருகில் இருந்த மகிழம்பூ மரம் எனக்கு மிகப்பிடித்தமானது. பலநேரம் அவற்றை தொகுத்து மாலையாக்குவோம்.

பள்ளியில் தோட்டம் இருந்தது வெண்டைக்காய் , அவரைக்காய் போன்றவற்றை அங்கே நாங்களே வளர்த்து பறித்தது நினைவுக்கு இருக்கிறது. வாத்துகள் நிறைந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுவோம். தென்னந்தோப்பிலிருந்து காய்களை இழுத்துவந்து ஓரிடத்தில் குவிப்பது, தென்னை குச்சிகளால் இடங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் கூட செய்திருக்கிறோம். படிப்பைத்தவிர எல்லாம் நினைவுக்கு வருகிறது.

கிருஸ்துமஸுக்காக குழுநடனம் கோலாட்டம் ஆடி இருக்கிறேன். அப்போதெல்லாம் பயிற்சிக்கென்று வகுப்பிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோம். அது மிகப்பிடித்தமானது. அங்கே நடக்கும் கிருஸ்துமஸ் நாடகமென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த தேவதைகளும் வழிகாட்டும் நட்சத்திரங்களும் மேய்ப்பர்களும் நேரிலேயே பெத்தலகேமில் இருந்து பார்த்த உணர்வைத்தரும்.பெத்தலகேம் பிறந்தவரை போற்றி துதி மனமே!!

எனக்கு வகுப்பெடுக்காவிட்டாலும் ஒன்னாப்பு டீச்சரை மட்டும் பள்ளிக்கே பிடிக்கும்..என் தம்பி அவர்களிடம் படித்ததால் பின்னொரு நாள் நாங்களிருவருமாய் போய் பார்த்துவந்தோம். திருமணம் செய்துகொள்ளாமல் பள்ளியிலேயே தங்கி இருந்த அவர்களை பெயர் சொல்லியாருமே அதிகம் அழைப்பதில்லை ஒன்னாப் டீச்சரென்றாலே ப்ரபலம் தான். என் தம்பி மட்டும் பேபிக்ளாஸ் படித்தான். அங்கே ஜெர்மனில் இருந்து வந்த பல விதமான விளையாட்டு ப் பொருட்கள் இருக்கும். பொம்மை பிஸ்கட்கள் இருக்கும். மதியம் பாய் விரித்துத் தூங்குவார்கள். பின்னால் தலை சீவி கையில் பிஸ்கட்களுடன் வெளியே வரும் அவர்களைப் பார்த்து நாம் பேபிக்ளாஸ் படிக்கவில்லையே என்று பல நாள் சோகமாக இருந்திருக்கிறேன்.

பைபிள் க்ளாஸ் உண்டு . அதில் பரிட்சை உண்டு. பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவே என்று ஆரம்பித்த ப்ரேயர் உண்டு. ஆற்றுமணலாகக் குவிந்த முன் திடலும் மாமரங்களும் கூரைவேய்ந்த சாப்பாடுகூடமும் நினைவுக்கு வருகிறது. ஒன்றே ஒன்று தான் பள்ளியில் பிடிக்காதது. அது கழிப்பறை. மிகக்கொடுமையானதாக இருக்கும். அத்தனை குழந்தைகளுக்கு அது போதுமானதாக இருந்ததில்லை. மேலும் மிகத்தொலைவும் கூட.
----------------------------------------------

யாருக்கேனும் தொடர ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

July 15, 2009

தங்கமாவோ $ ஆகவோ கொடுத்திருக்கலாம்ல.....



முன் குறிப்பு 1 : அவார்ட் என்றதும் ஆசிப் மீரானின் பட்டாம்பூச்சிக்கு பதிலான கரப்பான் பூச்சி அவார்ட் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது. இனி எதிர்பதிவு மட்டுமல்ல தொடர்பதிவும் கேட்டுத்தான் போடவேண்டும் என்று கண்டிப்பான ரூல்ஸ் போடவேண்டுமோ.. ( கேட்டா மாட்டேனுவாங்கன்னு தானே கேக்காம தராங்க இப்ப நான் மட்டும் என்ன கேட்டுட்டாப் பேரைப்போடரேன்)

போனமுறை பட்டாம்பூச்சிக்கு தப்பினேன் .. ராப் விருதை கேக்காமலே அறிவிச்சிட்டபடியால் ஏற்றுக்கொண்டேன்.

1. ச்சின்னப்பையன் - எனக்கு பிடித்த மாது சீனு வச்சு நாடகம் எழுதியதற்காக மட்டுமல்லாமல் காமெடி போஸ்ட்களுக்காக..

2.கோமா - ஹஹஹா ஹாஸ்ய தலைப்பில் நகைச்சுவையில் ரசிக்கும்படியாக சுவாரசியமாக பதிவிடுகிறார்.

3. அவந்தி - முன்பு மிக சுவாரசியமாக ஜென்கதைகள் குடுத்துக்கொண்டிருந்தார். படிப்பில் பிசியாகிவிட்ட அவருக்கு அவார்ட் ஒரு ஊக்கமாக இருக்குமே என்று குடுத்திருக்கிறேன்.

4 . துளசி - 30 நாள் டூர் போய்விட்டு 45 பதிவு பயணக்கட்டுரை :) போடுபவர்கள் பதிவில் சுவாரசியத்துக் குறைச்சலே இல்லை.

5.ராமலக்‌ஷ்மி - முத்துசரத்தில் அழகான கவிதை முத்துக்களை தருவது அதில் நல்ல கருத்துக்களை அடுக்குவது எனக்குப் பிடித்தமானது.

6. தெகா - மிக சுவாரசியமாக சில நேரங்களில் என்னதான் சொல்லவருகிறார் என்று மண்டைய குடைய வைக்கும்படியாக வரிகளை சுத்தி சுத்தி ஜாங்கிரியாக ஆனால் பின்நவீனத்துவ பாணியும் இல்லாமல் ஒரு விதமாக (puzzle? ) எழுதி ஏன் இப்படி என்று கேட்கும் பதிவுகள் எழுதுவதால்.. :)



July 13, 2009

இது என்ன இடம்?

ஃபாலோவர்ஸ் ஃபாலோ திஸ் லிங்க் ப்ளீஸ்.. :)

July 7, 2009

இசையின் அலைகள்

இரவு கவிழ்ந்த நேரத்தில் நிலவு கசியும் ஒளியில் கடலலையில் கால் நனைத்திருக்கிறீகளா? கரைக்கும் நிலவுக்கும் நடுவில் ஒரு வெள்ளை ஒளிப்பாதை ..
இரவின் அமைதியில் அதுபோல ஒரு ஒலிப்பாதை எங்கோ கொண்டு செல்கிறது.

பொள்ளாச்சியில் இரண்டு வாரங்கள். இரவெல்லாம் இசையலையில் கால்நனைத்தபடி கழிந்தது. ஒருவேளை தூங்கிவிட்டால் என்பதற்காக எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்தபடி பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“ அம்மா எதற்கு ரேடியோ கேட்க உனக்கு பிடிக்கிறது . உன்னிடம் தான் சிடிக்கள் இருக்கிறதே!..”

” ரேடியோவில் தானே அடுத்தப்பாடல் என்னவரும் என்பது ஒரு சர்ப்ரைஸ் . அடுத்தடுத்த ஆச்சரிய அலைகளில் தொடர்ந்து நனைந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இதுவும்... ஓ இந்தப்பாடல் .. அடுத்த அலை பெரிசா வருது .. அந்தா பாருன்னு எப்படி கடல் அலுக்கவே அலுக்காதோ அது மாதிரி இல்லையா”
மகள் சரிதான் என்று தலையசைத்தபடி தூங்கிவிட்டாள்.

காலையிலிருந்தே அந்த எஃப் எம் இந்த எஃப் எம் என்று மாற்றிக்கேட்டுக்கொண்டிருந்தாலும் காலை நேரத்தில் இந்த ரேடியோ ஜாக்கிகளின் தொல்லையும் ..அவர்களுக்குத் தொல்லை பேசுபவர்களின் தொல்லையும் தான். ஊரில் சரிபாதி ஜாக்கிகளாகவும் சரிபாதி தொலைபேசுபவர்களாகவும் இருப்பார்களோ ?

ஒரு நாள் கோவையில் சிறுவாணியில் தண்ணீர் குறைகிறது என்ற செய்தித்தாள் செய்தியை வைத்துக்கொண்டு .. மழை என்று வருகிற பாடல்கள் எல்லாம் தொடர்ந்து தொகுத்தளித்தார்கள்..அன்று இசைமழையே பெய்தது. அவர்களின் இசையாகம் அன்றைக்கு இரவே எல்லாப்பக்கமும் மழை தான். சிலர் தொலைபேசி பிடித்தமழைப்பாடல்களை சொன்னார்கள். எங்கள் ஊரில் மேகம் திரள்கிறது என்றோ சிறுதுளிகள் பெய்தது என்றோ சொன்னால் .. எல்லாரும் மகிழ்ந்தார்கள்.

சிலர் வணக்கம் சொல்லும் முன்னமே ஒரு கவிதை(கவுஜ) சொல்லிவிட்டுத்தான் தன் பெயரையே சொல்கிறார்கள். அய்யோ பாவம் ஆர்ஜே.. இரவுகளில் கொஞ்சம் இந்த தொல்லை குறைவு . இட்ஸ் ஹாட் மச்சி ரேடியோ மிர்சி இரவில் நல்ல பாடல்கள் தந்தார்கள். இன்றைய மெலடிகள் தவிர்த்து மிட் டைம் மெலடிகள் போட்டது எனக்கு மிகவும் பிடித்தது. சில நேரம் மாற்றி கோவை வானொலியும் ரசித்தேன். இங்கே அந்த கடலலையின் சிறுதுளிகள்..



ரசிக்கத்தெரியுமே தவிர இது இன்னார் எழுதியது இன்னார் இசை என்று வகைப்பிரித்துச் சொல்லத்தெரியாது. பாடியவர்களை மட்டும் பிரித்து அறியமுடியும்.சில பாடல்கள் ரசிக்கும்போது அதன் வார்த்தைகள் மறைந்து வெறும் பி.ஜி. எம் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும்..மயக்கும். சில பாடல்களுக்கு யார் நடித்தார்கள் , காட்சி என்ன என்பதெல்லாம் நினைவுக்கு வராமல் இருப்பதே மகிழ்ச்சி. டிவியில் சிலபாடல்களைப் பார்க்க நேரும் போது தான் தெரியும் அய்யோ எத்தனை அழகான பாடல் .. என்ன கொடுமையான காட்சி அமைப்பு , நடனம். ..

July 5, 2009

கடமை 32..

32 ல வெட்டீஸ் வெர்சன் எழுதலாமான்னு பார்த்தா.. இத்தன நாளுக்கப்பறமா எழுதினா இந்த பதிவே வெட்டீஸ் வெர்சனாத்தான் இருக்கும்ன்னு நினைச்சு, மாசம் ஒரு பதிவு போடும் கோபி அழைத்ததன் பேரில் இங்கே கேள்வி 32.. சில கொஸ்டின் கடைசியில் கைவலிச்சதுனு வழக்கம்போல விட்டாச்சு..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எங்கப்பாக்கு தமிழ் பெயர் வைக்கனும்ன்னு ஆசை.. கயல்விழின்னு வச்சாங்க.. தாத்தாபாட்டி பேரை பேத்திங்களுக்கு பேரன்களுக்கு வைக்கிற பழக்கத்தையும் விட மனசில்லாததால் ரெண்டுபக்கப் பாட்டி பேரை சேத்து முத்துலெட்சுமி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.. (முத்தம்மாள் - வீரலெட்சுமி)
என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். பரிட்சை மற்றும் பெரிய லிஸ்ட்களில் தேட ஈஸியா இருக்கும் .


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பசங்க படம் பாத்துட்டிருக்கும்போது..




3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும் . ஆனா ஒரு பாராவுக்கு மேல அதே அசிங்கமானதும் பிடிக்காது.



4.பிடித்த மதிய உணவு என்ன?
ரசம் சாதம் பீன்ஸ் பொரியல்


5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
பேசறதை கேக்கமட்டுமே பிடிக்குமா இருந்தா நட்பு வச்சிக்கிடலாம்.. நான் பேசனுன்னு ஆசை இல்ல நானே பேசனும்ன்னு பேராசை பிடிச்சவளா இருக்கறதால கஷ்டம் தான்..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் காலை நனைக்கமட்டும் தான்.. அருவி தான் அருமை.அது சுருளி மாதிரி டமால் டிமீல்ன்னு விழறதுல இருந்து சின்ன அருவி வரை ..எதுன்னாலும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம் . சில சமயம் வந்துட்டு போனாங்களே அவங்க் அந்த மாடல் தோடு ..இந்த மாதிரி ட்ரஸ் ந்னு யாராவது திரும்ப நினைவுப்படுத்த முயற்சித்தால் .. என்ன போராடினாலும் அதை நான் கவனிச்சதா நினைவே இருக்காது..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம் ... ப்ரண்ட்லியா இருக்கறது..
பிடிக்காத விசயம்.. பொறுப்பா நடந்துக்காம இருக்கிறது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எல்லாத்துலயும் பெர்ஃபெக்டா இருக்கிறது.
பிடிக்காததும் அதேதான்.. பின்ன எங்களுக்கு கில்டியா இருக்குமில்ல..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை

14.பிடித்த மணம்?

மண்வாசனை,மருதாணி வாசனை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

யாரையும் அழைக்கப்போறதில்ல.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கோபி போடறமாசம் ஒரு பதிவில் .. என்ன செலக்ட் செய்யரது ?
வேறயாரும் கூப்பிட்டாங்களான்னு தெரியல.. பதிவுகள் படிச்சு ஒரு மாசம் ஆகுது.


17. பிடித்த விளையாட்டு?
zuma கம்ப்யூட்டர் கேம்...


18.கண்ணாடி அணிபவரா?
ஆமா .. கவச குண்டலம் போல

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ஆர்ட் பிலிம் மாதிரி இருக்கிற படம். மணல் கயிறு மாதிரி ஜோக் படம்





20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க



21.பிடித்த பருவ காலம் எது?
தில்லியில்ன்னா நவம்பர் .. மிதமான குளிர்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வ.உ.சி எழுதிய ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி..



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தெரியல.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிங்கப்பூர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியல.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலை சார்ந்த இடங்கள் (கூட்டமில்லாம)

July 4, 2009

தாயே பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மா!

முருகா முருகான்னு நானும் நாலு நாளா முருகன் கோயிலுக்கு போயிட்டுவந்ததை எழுத நினைச்சு க்ரியேட்டை க்ளிக் செய்துவிட்டு ஒரு புள்ளி கூட வைக்கமுடியாமல் வெளியேறிவிட்டேன். இன்னைக்கு இந்த முருகா முருகா பதிவைப் படிச்சு ,அய்யோ என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.

ஆனா இதே மாதிரி நானும் பல விசயத்தை செய்து பாத்துட்டேன் . என்ன முருகாவுக்கு பதிலா .வேண்ணா தாயே பராசக்தி சொல்லுவேன்.
ஆனா அடி ஒன்னைத்தவிர இதுங்க எதுக்கும் பயப்படறதா தெரியலயே.. சொல்ற பேச்சை கேளேண்டாவை . நான் ரிங்க் டோன் ஏறுமுகமா அலர்ரமாதிரி படிப்படியாக சத்தம் உயர்த்தி சொல்ல ஆரம்பிச்சேன்..இப்ப அவன் சிம்பு தனுஷ் மாதிரி “ சொல்ற பேச்சை கேளேம்ம்மா””ங்கறான்.

ஆனா இப்ப படிச்ச ஒருபுத்தகத்தில், நீங்க அடிக்கடி குழந்தைகளிடம் நேராகவே “சொல்ற பேச்சை நீ என்னைக்குத்தான் கேட்டிருக்க”ன்னு எதிர்மறையா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க.. இப்போது எனக்கு தேர்வு அதுல தான் . எதிர்மறை வார்த்தை என்ன யூஸ் செய்யறேன்னு யோசிச்சு பார்த்து சரி செய்கிறேன். நான் எதயாவது சரி செய்து வழி கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவன் பெரியவனாகவே ஆகிவிடுவானோ?

முந்தாநாள் தான் பசங்க படம் பார்த்தேன். அந்த காலத்துப் படம் மாதிரி நல்லா இருந்தது. அழகா நெகிழ்வா. வாத்தியார், ஹீரோ அப்பான்னு ஒவ்வொரு கேரக்டரும் அழகா நடிச்சாங்க..குட்டிப்பையன் அடிக்கிறதை ..அடிவாங்கினவர் பொண்டாட்டியே வாய் பொத்தி சிரிச்சி ஹய்யோ படம் ஒரு கவிதைங்க..
வாத்தியார் பேசற சீனிலிருந்தே கண் கலங்கிடுச்சு. ஆமா அறிவுரை எளிது. கேட்கும் போது கூட நல்லாதான் இருக்கிறது. நடைமுறையில்.. ஹ்ம். வெகுநாட்களுக்குப் பிறகு குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க ஒரு அழகான படமா இருந்தது. அதை ஊரிலேயே தியேட்டரில் பார்க்கவிட்டுப்போனது ஒரு வருத்தம்.

June 2, 2009

கால எந்திரம் - காமிக்ஸ்




போனமுறை மாயவரம் வந்தபோது காமிக்ஸ் மற்றும் பூந்தளிர் பைக்கோக்ளாசிக்ஸ்களை பைண்ட் செய்ய குடுத்து இருந்தோம்.. அப்போதே அவை அட்டைகளையும் சில பல பக்கங்களை இழந்து நின்றது என்றாலும்... மேலும் மோசமடையாமல் இனி பாதுகாக்க எண்ணி பைண்ட்க்கு குடுத்தோம்.

பல சோவியத் ரஷ்ய கதை புத்தகங்கள் உண்டு. மந்திரக்குதிரை என்று ஒரு புத்தகத்தை ஆவலோடு பீரோவில் இருந்து எடுத்துக்கொண்டு அட்டையை படம் எடுத்துக்கொண்ட(ப்ளாக்கராகிவிட்டாலே உள்ள தொல்லை தான் ) பின் தான் கவனித்தேன்.. அது வெறும் அட்டை தான் அடியில் வேற ஒரு புத்தகம். ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மற்ற புத்தகங்களை எடுத்துப் படிக்க உட்கார்ந்தேன்..

காலஎந்திரத்தில் ஏறி அமர்ந்தது போல நான் என் சிறுவயதுக்கு சென்றேன். இரும்புக்கை மாயாவியும், மாண்ட்ரெக்கும், ஃபேண்டம் மற்றும் கிர்பியும் டேஸ்மண்டும் .... கதைகளின் தலைப்புகள், முதல் பக்கங்கள் இல்லை . இருந்தாலும் சுவாரசியமாக படித்தேன். மகளுக்கு சிலவற்றை வாசித்துக்காட்டினேன்.. அத்தனை விருப்பமாக அவள் கேட்டதைப்போல தோன்றவில்லை..:(

அ.கொ.தீ கழகத்துக்கு என்னப்பா விரிவு ?? மறந்து போச்சே..
மண் இனத்தினர் எல்லாம் அப்ப பயங்கர திகிலான கதைகள்...

May 28, 2009

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்....

பதிவு எழுதாத இந்த சில நாட்களில் கூடுதலாக சில நல்லவர்கள் ஃபாலோவர்ஸா சேர்ந்திருக்காங்க,, என்ன சொல்லவர்ராங்கன்னு தான் தெரியல.. :)
----------------------------------------------------------
தென்னிந்தியா வந்தாச்சு.. சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.. லிஸ்ட்ல ஒரு டிக் அடிச்சாச்சு..
அரைக்கீரை கூட்டு , அரைக்கீரை கடைசல் ,அரைக்கீரை பொரியல்ன்னு வகைக்கொன்று டிக் அடிச்சாச்சு..எதிர்பாராம பம்ப்ளிமாஸ் கூட கிடைச்சுச்சு ., பிரிச்சு சீனி போட்டு சாப்பிட்டாச்சு..பொரிஉருண்டை, நவாப்பழம் கூட ஆச்சு.. சின்னச்சின்ன வெள்ளரிப்பிஞ்சும் சாப்பிட்டாச்சு..  

---------------------------------------------------------
பக்த கோடிகளை அம்மன் அருள் பெற அழைக்கும் ஆட்டோக்களுடன் ஊர் (மாயவரம் என்னும் மயிலாடுதுறை ) இன்னமும் பழமையை மறக்காமல் இருக்கிறது.  கடைகளிலெல்லாம் ஒல்லிபிச்சான் சுடிதார் பெண்கள் பாவமாய் வேலை செய்கிறார்கள்.. பெண்கள் எல்லாம் இன்னமும் ஜல் ஜல் கொலுசுடன் நடக்கிறார்கள்.. குட்டிப்பிள்ளைய பின்னாடி கேரியரிலும் ஒயர் கூடையை ஹேண்ட்பாரிலும் வச்சிக்கிட்டு கடைக்கு போகும் அம்மாக்கள்.. இதெல்லாம் ஊருல ( தில்லியில்)  பார்க்கமுடியாதில்ல..:-)

 
பள்ளி கல்லூரித் தோழிகளின் அம்மா வீட்டிற்கு தொலைபேசி புது எண்களை வாங்கி வழக்கம்போல எல்லாரையும் நலம் விசாரிக்க தொடங்கியாயிற்று.. வழக்கம்போல அவர்களும் பக்கத்து ஊரில் இருக்கும் தோழிகள் எண்களை என்னிடமே வாங்கிக்கொண்டார்கள்.. அழைப்பார்களோ இல்லை மீண்டும் அடுத்தமுறை நான் வரும்வரை காத்திருந்து அவர்களின் நலம் விசாரித்துக்கொள்வார்களோ தெரியவில்லை... :)






பூம்புகார் பீச்சுக்கு போயிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிடாமலா அதையும் டேஸ்ட் செய்தாச்சு..


கடற்கரையே இல்லை. பாறைகள் போட்ட இடம் வரை அலைகள் வந்து கொண்டிருந்தது. வெகுதூரம் நடந்து சென்று தான் கடற்கரை உள்ள கடலில் விளையாட முடிந்தது.. :( கடலம்மா இன்னும் எத்தனை நிலத்தை உணவாக்க இருக்கிறாளோ தெரியவில்லை..

May 14, 2009

என் வீட்டுத் தோட்டத்தில் ....

என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் நண்பர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துக்கிறேன்.


ப்ரோமிலைட்ஸ் (Bromeliads)
யுபோர்பியா மிலி (Euphorbia milii )

இவங்க பதிவர் வின்சென்ட் பரிசாகத் தரும்போது ரொம்ப சின்னவங்களா இருந்தாங்க ... அதற்கப்பறம் அந்த குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு வின்சென்ட் விசாரித்தபோது வளர்ந்துகிட்டே இருங்காங்க பத்திரமா இருக்காங்கன்னு சமாதானம் சொன்னேன்.. இப்பத்தான் அவருக்கும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டறேன்.. வரும்போது மூன்று நான்கு இலைகளுடன் இருந்த இவங்க இப்ப நல்லா வளர்ந்திருக்காங்க.. பூ முழு சிவப்பாக இல்லாம மஞ்சள் பச்சை கலந்து இருக்கிறது.

அவ்வப்போது மாலி (தோட்டக்காரர்) வருவார் . உரங்கள் போட்டு கொஞ்சம் கவனிச்சிட்டு ப் போவார். என்னதான் நாம கவனிச்சாலும் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல டாக்டர் மாலி தான்.. அவருக்கு இந்த புது செடிகள் ஆச்சரியமாக இருந்தது. நல்ல உயர்ந்த வகை செடிகள் கவனம் என்று சொல்லிவிட்டுப் போனார். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அதிக வெயில் படாமல் வைங்க என்று சொல்லிச்சென்றார்.



கறிவேப்பிலை முதலில் சவலைப்பிள்ளையாக இருந்து இப்போது தான் நல்ல நிலைக்கு வந்திருக்காங்க.. பாக்க என்ன அழகு!!
மணிப்பிளாண்ட் அப்பப்ப டிரிம் செய்து பண்ணிரண்டு வருசமாக இளமையாவே இருக்கறவங்க இவங்க..
மணத்தக்காளி.. இவங்க ஒருத்தவங்களா வந்து பெரிய குடும்பமாகிட்டவங்க .. ஒரு செடியில் பழம் ஆரஞ்சாவும் ஒரு செடியில் கருப்பாவும் இருக்கும்.. திடீர்ன்னு பூச்சி வந்து இலைகள் சுருங்கிபோவாங்க.. திடீர்ன்னு நல்லா வளமாவும் இருப்பாங்க..


நந்தியாவட்டை ... இவங்க ஒல்லிப்பிச்சான் . தொட்டியில் வேர் போக இடமில்லாம இலை சிறுத்து இருக்காங்க. இந்த காலநிலையில் நல்லா பூகொடுக்கிறாங்க..

இது தவிரவும் துளசி இருக்காங்க , பன்னீர் ரோஸ் இருக்காங்க..செம்பருத்தி இருக்காங்க
கற்றாழை இருக்காங்க அவங்களை இன்னொரு நாளில் அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)