July 26, 2011

ஆன் த வே டு கேப் மே...



Denny's ல காலைச்சாப்பாட்டிற்கு வந்திருக்கிறோம். தம்பி மனைவியின் பிறந்தநாள் என்பதால் வெளியில் சாப்பாடு. ப்ரஞ்ச் டோஸ்ட்  மேலே கொஞ்சம் ஜீனி தூவி , ப்ரன்ச் ப்ரைஸ், சீஸ் காஸடியா (Quesadilla), குழந்தைகள் மெனுவில் இருந்து ஆப்பிள் துண்டுகள் , லெமன் ஜூஸ்,சீஸ் ஆம்லெட்.
இந்த சீஸ் காஸடியா ரொம்ப நல்லா இருந்தது.. மைதா மாவில் சிறிய சப்பாத்தி போல இட்டு அதில் நடுவில் சீஸை வைத்து அழுத்தம் கொடுக்கிறார்கள். எங்க போனாலும் குட்டிப்பையனுக்கு அது இருந்தால் போதும்.



அடுத்து cape may கேப் மே நோக்கிப் புறப்பட்டோம். அந்த ஊரில் எல்லா வீடுகளும் அவ்வளவு அழகு. பழமையான விக்டோரியன் மாடல் வீடுகள் என்று அவற்றை அழைக்கிறார்கள். வண்ணமயமான வீடுகள்.

சிலபழமையான வீடுகளை அப்படியே தங்கும் விடுதிகளாக செய்து பராமரிக்கிறார்கள். திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்துதருகிறார்கள். விக்டோரியன் வீடுகளில் , அழகான கடற்கரையில் திருமணங்கள் செய்துகொள்வது என்றே ஆர்வமாய் சிலர் வருகிறார்கள்.


  பொதுவாக அமெரிக்கா முழுவதுமே எல்லார் வீட்டு முகப்பிலும் அந்நாட்டுக்கொடி ஒன்று சாய்ந்தபடி பறந்துகொண்டிருக்கிறது.  நம்ம எல்லாம் நேராத்தான் நிறுத்துவோம்ன்னு..நிறுத்திய கம்பத்தில் காற்றில்லாம கொடி சுருங்கிக் கிடக்கவிடுகிறோம். . கம்பத்தை சாஞ்சாப்பல சொருகிவச்சிட்டு கொடியை முழுக்கத் தெரியும்படி பறக்கவிடறாங்க..:)

(photo : thanks Steve and liza)
நியூஜெர்ஸி மாநிலத்தின் தெற்கு முனையில் இந்த லைட் ஹவுஸ் இருக்கிறது. இந்த இடம் படக்காட்சியாக ஓவியமாக அதிகமாக வெளிவந்திருக்கிறதாம். நீங்க பார்த்திருக்கீங்களா?



முதல் முறை கட்டப்பட்ட கலங்கரைவிளக்கத்தை கடலே சாப்பிட்டுவிட்டதாம். இரண்டாம் முறை சரியில்லாததால் உடைந்துபோய்விட்டதாம். இப்போது இரண்டு சுவர்களாக மிக அதிகமான பாதுகாப்புடன் கட்டப்பட்டு ,தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கலங்கரை விளக்கத்தில் ஒன்றாக இருக்கின்றது.( தானியங்கி)


ஜன்னல் வழி காட்சி. வெளிப்புறச்சுவரின் பரிமாணம் தெரிகிறதா?


photo :capemaytimes

199 இரும்புப்படிகள் .  மேலே ஏறியபின் அங்கிருந்து அழகான காட்சி. கம்பிகள் இட்டிருந்தாலும் என்னவோ அந்த இரும்பு மேடையின்  ஓரமாக நடப்பதற்கு ஒரு திகில் தான். காற்று பிச்சு வாங்கியது.


 இந்தப்படத்தில் கடற்கரையில் சிமெண்ட் நிறத்தில் தெரிவது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பங்க்கர். படத்தைக் கிளிக் செய்து பெரிதாகப்பாருங்கள். கடலுக்கு எதிரில் தேங்கி இருக்கின்ற நீர்ப்பகுதியில் விதவிதமானப் பறவைகள் வருவதால் அங்கே பறவை பார்க்கும் மேடை ஒன்றும் அமைத்திருக்கிறார்கள்.  அதன் அருகில் ஒரு பிக்னிக் கூடாரம் உள்ளது . கொண்டுவந்த உணவை அங்கே வைத்து சாப்பிடலாம். எங்கும் உணவு விற்பனை கிடையாது.
(காலையிலேயே அறையில்  மின் குக்கரில் சாதம் சமைத்து வந்திருந்தோம். புளிக்காச்சல் சேர்த்து , சிப்ஸ் மற்றும் ப்ரூட்டியுடன் அங்கே தான் அமர்ந்து மதிய உணவு முடித்தோம்.)

 ஒரு ”ப்ரஞ்ச் பியர்’ பெரியவர் மேலே ஏறி வந்தார். ஆனால் கதவைத்தாண்டி அந்த இரும்பு மேடையில் கால் வைக்கவில்லை. “ஹனி ஐ ம் கோயிங் டௌன்.. டோண்ட் டோண்ட் டச் மீ “ என்று அவரை நிறுத்த முயன்ற மனைவியை நோக்கி பரபரப்பாக பதில் சொல்லிவிட்டு கீழே இறங்க ஆரம்பித்துவிட்டார். அவர் முகம் மேலும் சிவந்து பயந்து போயிருந்தது.  அவர் ஒழுங்காக இறங்கிப்போய்விடுவாரா என்று எனக்கு பயமாக இருந்தது. வெளியில் பார்க்கத்தான் அவருக்கு பயம் போல...


photo: southfloridadayily


கடற்கரைக்குப் போகலாமா? இதோ இந்த நொடி கடற்கரை எப்படி இருக்கென்று  கூட நீங்கள் பாக்கலாம். ஒரு சில இடங்களில் லைவ் கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டு இணைப்பிலும் நீங்கள் பார்க்கலாம். நமது நேரம் பகலில் பார்த்தால் கருப்பானத் திரையினைத் தான் பார்ப்பீர்கள்:) அமெரிக்க நேரத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கவும்.
cape may live cam

http://www.thesurfersview.com/index.php?option=com_content&view=article&id=200&Itemid=199

http://www.sunsetcam.com/cams/capemaycams.html

கடற்கரைக் காட்சிகள் இரண்டு . இந்தப் பாட்டு  எவ்ளோ அழகு கேளுங்களேன்..காதல் ஜோடிகளாகப் போகாவிட்டாலும்  போகிற வழியில் காதலை சந்திப்பார்களோ?
on the way to cape may
i fell in love with you
on the way to cape may 
i saw my dreams come true









July 22, 2011

அமெரிக்கா-2- அட்லாண்டிக் சிட்டி

மாலையில் தயாராகி பெட்டிகளை அடுக்கிவிட்டுப் பார்த்தால் எண்ணிக்கை நம்பமுடியாததாக இருந்தது. பெட்டிகளைத் தவிர நமக்கான உணவு இந்த நாட்டில் கிடைப்பது அரிது என்பதால் உணவுப்பொருட்களும் கணக்கில் சேர்ந்திருந்தது. ஒரு பெரிய ட்ரம் சைஸ் கூலர் அதனுள் பரோட்டா மாவு சப்பாத்தியாக இட்டது, ரெடிமேட் சப்பாத்திகள், அதற்கான சப்ஜி வகையறாக்கள், பழரசங்கள் , தயிர், பால் , ப்ளேவர்ட் மில்க் ,புளிக்காச்சல் அனைத்தும் இருந்தது. அடுத்து வரும் நாட்களில் சமைக்க அரிசி , அதற்கான மின் குக்கர் , தட்டுகளும் ஸ்பூன்களும் என ஏறக்குறைய வீட்டைக் காலி செய்துவிட்டோம். இன்னும் நின்று யோசிக்க யோசிக்க பொருட்கள் சேரும் என்பதால் கிளம்பிவிடுவதே நல்லது என்று கிளம்பினோம். இதில் சின்னப்பசங்களுக்கு கார் இருக்கையின் மேல் உயரமாக்கிக்கொடுக்கும் இருக்கைகள் வேறு.

காருக்குள் பொருட்களுக்கு மத்தியில் நாங்கள் ஏழு பேரும் இருந்தோம். ஒரு உருளை நாப்கினும் உண்டு. நீங்கள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லமுடியாதபடிக்கு அத்தனையும் இருந்தது. முதல் திட்டம் சூதாட்டவிடுதிக்கு செல்வது.

அட்லாண்டிக் சிட்டி சென்று சேரும்போது இரவு . மின்விளக்குகள் ஒளிர கடைத்தெருக்கள் அழகாக இருந்தது. கசினோ வழியாகத்தான் விடுதியின் மேலுள்ள அறைகளுக்குச் செல்லவேண்டும் என்பதால் குழந்தைகள் அந்த இடத்தைப் பார்க்க முடிந்தது. மற்றபடி குழந்தைகளுக்கு அனுமதியில்லை. புகைப்படமெடுக்க அனுமதி இல்லை.
அறையில் சென்று பொருட்களை வைத்துவிட்டு , போர்ட்வாக்கிங் சென்றோம்.


 பகலில் போர்ட் வாக்கிங்க் தோற்றம் (இந்தப்படம் :google)


இரவில் போர்ட்வாக்கிங்க் ..

தரையில் மரப்பலகையால் பாதை அமைத்திருக்கிறார்கள். ஷாப்பிங்கும் கசினோக்களும் ஒருபக்கம் மற்றொரு பக்கம் கடல். நம்ம ஊரில் வந்ததும் ரிக்‌ஷாவா? மனுசனை மனுசன் இழுப்பதா? என்று கூப்பாடு போடறாங்க. மேலே படத்தில் ரிக்‌ஷாக்களைப் பாருங்க.. நம் ஊரிலாவது மனுசன் சைக்கிளைப்போல ஓட்டி இழுக்கிறார்கள். இங்கே நடந்தபடி தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

இரவு வெளிச்சத்தில் சூதாட்டவிடுதிகள் பளிச் பளிச் விளக்கு காட்டி எல்லாரையும் அழைக்கிறது.


சீசர்ஸ் சூதாட்டவிடுதி .


  கூரைப்பகுதியில் வானத்தையே கொண்டு வந்து வரைந்து  வைத்திருக்கிறார்கள். இந்த இணைப்பில் நீங்கள் அவ்விடத்தைச் சுற்றிப்பார்க்கலாம். (virtual tour) ரோமாபுரியில் இருப்பது போன்ற உணர்வு.



இரவில் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு தங்கி இருந்த ட்ரம்ப் ப்ளாசாவில் சூதாட்டம் பார்க்கச்சென்றோம். தம்பி முதலில் கொஞ்சம் ஜெயித்து விட்டு பின் தோற்றான். நாங்கள் வேடிக்கைத்தான் பார்த்தோம். டாலர்களை கூப்பன்களாக மாற்றிவிட்டு அந்த மிசின்களுக்குள் செலுத்தி விளையாடவேண்டும். ஒரு முறை டேபிள் கேம் பக்கம் சென்றோம். அம்மேஜையில் விளையாட்டை நடத்துபவர் ஒரு பாட்டி. அவர் கொடுக்கும் சீட்டுக்களின் கூட்டுத்தொகையை வைத்து விளையாட்டு. ஒவ்வொரு நொடியிலும் ஒரு பத்து டாலரை விழுங்கிவிட்டாங்க பாட்டி அம்மா.. சரி போதும் தோற்றதென்று நடையைக் கட்டிவிட்டோம்.


(படம் :google)

பெரும்பாலும் வயதானவர்களே விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காலத்துக்கு உழைத்து முடித்துவிட்டு இப்போது இப்படி செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள் போல.. ஆனால் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஒரு பாட்டி மட்டும் தன் தோழிகளிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எவ்வளவோ ஜெயித்திருந்தார்கள் போலும். ’நான் தான் சொன்னேன் ல’ என்று ஒரு பாட்டி அவருக்கு பெருமையைத் தேடிக்கொண்டிருந்தார். எனக்கென்னவோ ஜெயித்து அந்தப்பணத்தை அடுத்த விளையாட்டில் தோற்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஜெயிக்கின்ற யாருக்கும் வெளியேற மனசு வராது இன்னும் இன்னும் என்று தான் இருக்கும்.

பக்கத்தில் இன்னொரு சூதாட்டவிடுதியில் இப்படி அந்தக்கால வீடுகளும் வீதியும்  செட்டப்பில் அமைத்திருந்தார்கள்.

நகரும்படிகள் மட்டும் கொஞ்சம் இடத்திற்கு பொருத்தமற்றிருக்கும். :) யாருமில்லை என்பதால் படம் எடுத்தோம். சரி நாளைக்கு காலையில் டெனிஸ்ல (denny's)  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு கேப் மே கிளம்பலாம்................................................
அமெரிக்கப்பயணம் -1

July 21, 2011

அமெரிக்கப் பயணக்குறிப்புகள்




சிறுமுயற்சியைத் தொடங்கிய இத்தனை வருடங்களில் (5வது ஆண்டு நிறைவு வரப்போகுதுங்க) பார்க்கும் எதனையும் ஒரு ப்ளாக்கராக பார்த்தே பழகி அதை பதிந்து வந்திருக்கிறேன். ஆனால் இம்முறை விடுமுறைக்கு அமெரிக்கா சென்றபோது ஒரு ப்ளாக்கராக நான் உணரவே இல்லை. இப்பொழுது அதிகமாக பதிவுகள் எழுதுவதில்லை என்பதால் இருக்கலாம். அந்த அந்த நொடியை அப்படியே அனுபவிப்பதில் மட்டுமே மனம் இருந்தது. சென்ற இடங்களெல்லாம் தம்பியும் தம்பி மனைவியும் , நாத்தனாரும் அவள் கணவரும் போட்டு வைத்தத் திட்டங்கள் என்பதால் செல்லும் இடம் அதன் விவரங்கள் என எந்தவித திட்டமிடல்களும் எனக்குள் இல்லை. வழக்கமாக நாங்களாகச் செல்லும் பயணங்களில் இருக்கும் திட்டமிடல் என்கிற பளு இல்லாத காரணத்தால் இந்தப் பயணம் இன்னும் ரசிக்கும் படி இருந்தது.

”அடுத்து இப்போ எங்கே போகிறோம்? எவ்வளவு நேரமாகும்?” என்று அவ்வப்போது விசாரித்துக் கொண்டும் வழிகளின் வரைபடத்தை ’ஐ போன்’ துணைகொண்டு பார்த்துக்கொண்டே செல்வேன். அந்த அந்த நொடியில் அது நாம் இருக்கும் இடத்தையும்,செல்லும் தொலைவையும் வரைபடத்தில் காட்டுவதைப்பார்ப்பதும் சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்ப்பதுமாக இருந்தேன். குறிப்புகள் எதுவும் கூட எழுதவில்லை. நினைவில் வருவதை இங்கே பதிகிறேன்.
-------------------
அமெரிக்கப்பயணத்தை கட்டார் ஏர்வேஸில் பதிவு செய்திருந்தோம். தில்லி விமானநிலையத்தின் ப்ரமாண்ட புதிய தோற்றத்தை முதல் முதலாகப் பார்த்தோம்.ரசித்தோம். விமானம் வரை செல்ல நகரும் நடைபாதையில் சென்றோம். புதிய வசதிகளையும் அழகையும் பார்த்து மனம் பெருமிதமாக இருந்தது.

முதல் விமானத்தில் உணவு வருவதற்குள் கார்டூனை திரையில் பார்த்துக்கொண்டே சபரி தூங்கிவிட்டான். தோஹா விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எங்கெங்கும் மணற்பரப்பும் , கட்டிட்டங்களும் கூட அதே நிறத்திலே தெரிந்தது வித்தியாசமாக இருந்தது. அமெரிக்க விமானங்களுக்கான அதிகப்படியான சோதனைகள் இன்னும் ஒருமுறை அங்கேயும் நடந்தது . குழந்தைகளும் ஷூ மற்றும் பெல்ட்கள் என எல்லாவற்றையும் கழட்டி ஒரு ப்ளாஸ்டிக் ட்ரேயில் போட்டுவிட்டே மெட்டல் டிடெக்டர்களை கடக்கவேண்டும். அங்கிருந்து மீண்டும் விமானம் ஏறி அமெரிக்கா செல்லும் வழியில் தூங்கி விழித்து , தூங்கி விழித்து சில படங்கள் பார்த்தோம். தமிழ் படங்கள் எல்லாம் பார்த்த படங்களாக இருந்தது.

நியூயார்க் நகரம் - ஜே எஃப் கே விமான நிலையம். இறங்கி வரும் மக்களுக்கென்று ஒரு பந்தாவையும் காண்பிக்காத அரசாங்க அலுவலக தோரணை. எல்லாரும் மிரட்டியபடி அங்கே எந்த சோதனையும் செய்யவில்லை. எங்கே செல்கிறீர்கள்? யார் இருக்கிறார்கள்? எவ்வளவு நாட்கள்? என்று கேட்டுவிட்டு கைவிரல்களின் பதிவுகளை எடுத்துக்கொண்டு நல்வரவு சொன்னார்கள். உண்மையில் இங்கிருந்து கொண்டு சென்ற உணவுப்பொருட்களை எல்லாம் ப்ரவுன் ப்ளாஸ்டிக் டேப்பால் சுத்து சுத்தென்று சுத்தி எல்லா பெட்டியிலும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கணும் என்றெல்லாம் சொல்லிவைத்திருந்தார்கள். சரி கும்பிட்டுப்போன கடவுளெல்லாம் நல்லபடி துணையிருந்திருக்கிறார்கள் என்று நன்றி கூறி தம்பியின் வரவுக்காக சிறிது நேரம் காத்திருந்தோம். அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி நியூயார்க் நகரம் வரை குடும்பத்துடன் வந்து வரவேற்பளித்தான்.

தம்பி மகனுக்கு இரண்டு வயது. பார்த்ததும் கையில் வந்துவிட்டான். ஆனால் கழுத்தை கட்டியபடி முகத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டான். இத்தனை நாள் ஸ்கைப்பில் பேசியவள் நேரிலா என்று குழப்பமும் அன்புமாய் இருந்தான்.
நியூ ஜெர்ஸி நோக்கி செல்லும் வழியெல்லாம் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல். போனோம் போனோம் போய்க்கொண்டே இருந்தோம். சபரிக்கோ நல்ல தூக்கம் வருகிறது. ஜெட் லாகின் வேலை ஆரம்பித்துவிட்டது. மாமா வீடு எப்போது வருமென்று ஆயாசமாகக் கேட்டான். எங்களுக்கும் கண் எரிகிறது. இருந்தும் இந்திய நேரத்திற்கு தூங்கிவிடாமல் இருக்க கட்டுப்படுத்திக்கொண்டிருந்தோம்.

அடுத்த இரண்டு நாட்களும் ராஜகணபதி கோயில் , ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் கோயில் ( அங்கே ஒரு பதிவர்கள் சந்திப்பும் நடந்தது ) இரு நண்பர்கள் வீடு மற்றும் லிபர்டி சிலை சென்று பார்த்தோம். அவற்றின் புகைப்படங்களை நான் எனது கணினிக்கு மாற்றாததால் குறிப்புக்களை பிறகு எழுதுகிறேன். தற்போது அதற்கு அடுத்த ஐந்து நாட்கள் நாங்கள் சென்ற சிறு சுற்றுப்பயணம் ஆமாம் உண்மையாகவே அது சுற்றுப்பயணம் தான் இந்த வரைபடத்தைப் பாருங்களேன்..


View Larger Map பெரிது செய்து ம் பார்க்கலாம்.


வித்தியாசமான பயணம். 157 அடி உயரத்தில் (கலங்கரை விளக்கத்தில்) ஏறி.. 

தரைக்கடியில் குகைகளுக்குள் நடந்து,
 கப்பலுக்குள் காரோடு ஏறி,
 கடலுக்கு மேலே பாலத்தில் பயணித்து, (7 km) 
கடலுக்குள்ளும் ( டன்னல் ரோடு)  காரை ஓட்டி..............................
காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணித்து அமெரிக்க சுதந்திர பிரகடனத்தின் போது நடந்தவற்றை கண்டு .. 
சரி விளக்கமாக அடுத்தடுத்த பதிவுகளில் ......... 

July 20, 2011

ஒன்றுக்கு மூன்றா பதில் கொடுக்கனுமாம்

ரொம்ப நாட்களாகிவிட்டது (பதிவுலக) பரிட்சை எழுதி இல்லையா? வெங்கட் கேள்விபதில் தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். இதோ விடைத்தாள்....

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

* தொல்லை தராம எப்பவும் சிரிச்சிக்கிட்டே அம்மா அப்பான்னு சொல் பேச்சுக்கேட்டு பிள்ளைங்க சமத்தா இருக்கின்ற நேரங்கள்
* இனிமையான பாடல்களும் தனிமையும்..
*அடுத்து செய்யவேண்டிய வேலை என்று எதுவும் என் முன்னால் இல்லாமல் இருப்பது .



2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

• குழந்தைகளை சீண்டி விளையாடும் பெரியவர்கள்
* வரிசையில் குறுக்கப்போகும் புத்திசாலிகளின் கர்வம்
* நல்ல பாடலுக்கு நடுவில் விளம்பரங்களைப்போட்டு கடுப்பேத்தும் வானொலி தொகுப்பாளர்


3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

• இரவு நேரத்தைய கார் மற்றும் பஸ் பயணங்கள்
• புதுகைத்தென்றல் பதிவில் இருந்து காப்பியடித்த பதில் ..எனக்கு பிடித்த தனிமையே பயமுறுத்தும் வேளைகள்... •
* மருத்துவரின் எதிர் நாற்காலியில் இருந்து பதில் சொல்லும் நேரம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
ஹே இதை சாய்ஸ் ல விடறேன்ப்பா.. நிஜம்மாவே இந்த கேள்விக்கு என்ன எழுதறதுன்னு புரியலை:)


5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

• என் கைபேசி
* சாப்பிட்டு முடித்த சாக்லேட் கவர் ( இதோ எழுதி முடிச்சிட்டு எடுத்துப் போட்டுடறேன்)
* இந்தக் கணினி

6) உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
*வீட்டில் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நீட்டி முழக்கிட்டு குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொள்ளும் தருணங்கள்
* தோழிகள், மற்றும் உறவினர்களாக கூடி களிக்கும் தருணங்கள் முக்கியமாக அப்பா சித்தப்பா பெரியப்பா எனச் சேரும்போது அவர்கள் பழைய நினைவுகளை வரிசை கட்டிச் சொன்னால் ......சுவாரசியமும் சிரிப்பும் தான்.
* நகைச்சுவைக்காட்சிகள்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

• லீவுக்குப் போய்வந்த அமெரிக்கா பற்றி பதிவு எப்படி எழுதறதுன்னு யோசனை செய்வது
http://www.ragasurabhi.com/identifying-ragas.html இந்த தளத்தில் இருந்து ராகங்களை அறிந்துகொள்ளக் கத்துக்கலாம்ன்னு ஒரு சிறுமுயற்சி.
• மகனுக்கு வீட்டுப்பாடங்களில் உதவுகிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

• முடிந்தவரை பல இடங்களைச் சுற்றிப்பார்க்கவேண்டும்.
• மகளும் மகனும் அவர்கள் வாழ்க்கையில் நான் எட்டாத உயரம் அடைய உதவுவது.
• திண்ணையும் ஊஞ்சலும் தோட்டமும் என ஊரில் வீடு.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
இதுக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை.
(இந்த பதிவையே முழுசா முடிக்க முடியலையே..)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

• ஒருவேலையைச் செய்யச்சொல்லி அதுக்கு ஒரு டார்கெட் வைத்து என்னிடம் ஒப்படைப்பது.
• வெட்டி பந்தாப்பேச்சு
• ஓவர் அட்வைஸ்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

• வயலின்
• வேற மொழிகள்
• நீச்சல்

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

• பேல் பூரி
• வெங்காய பக்கோடா ( ஊரிலிருந்தா சிங்கமடை ஸ்வீட் ஸ்டால் பக்கோடா)
• இட்லி கூட சாம்பார் அதுல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

• நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
• ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ
* ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே

இது ஒரு எக்ஸ்ட்ரா பதில்
• எப்பவும் மகளுக்கு பாட்டு வகுப்பில் புதியதாகச் சொல்லிக்கொடுத்தப் பாடல்களில் எனக்கு பிடித்தது முணுமுணுப்பில் இருக்கும். இப்பொழுது ”மனவியால கிஞ்சரா தடே” .. என்ன ஒரு நளினமான நளினகாந்தி ராகம். பிடிச்சுப்போய் இப்ப பைத்தியமாகி இந்த வீடியோவில் ஸ்வரங்களின் தேனை ரசிச்சிட்டிருக்கேன். “இசையின் ஸ்வரங்கள் தேனா”
ரைட் .. எந்தன் நெஞ்சில் நீங்காத பாட்டோட ராகம் தான்..

14) பிடித்த மூன்று படங்கள்?

•கரகாட்டக்காரன்
• பூ
• மணல்கயிறு

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

• கொஞ்சம் காலமாக கணினி
• எப்போதும் எதாவது பாட்டு
• ----
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

*ஆதவன்
*யாழினி
*விருப்பமுள்ள வேறு யாரும் சொல்லுங்கப்பா
-----------------------------------------
தமிழ்மணம் தமிழ் பதிவர்களுக்கு தாயின் மடிப் போல.... நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்! http://tamilmanam.net/
---------------------------------------------------

July 11, 2011

கதை, படக்கதை, கதை படமாக ,,...

சிறுவயதில் புகழ்பெற்ற ஆங்கிலக்கதைகளை படக்கதைகளாக பைக்கொ க்ளாஸிக்ஸ் மூலம் தான் வாசித்திருக்கிறேன்.


பள்ளிக்கூடத்தில் தருகிற ஆங்கில புத்தகம் தவிர்த்து வேறெதுவும் வாசிக்க முயன்றதாக நினைவில்லை. பள்ளி முடித்தபின் வாசிக்க முயன்றாலும் முழுசாக முடித்ததாக நினைவில்லை. (முதல் முறையாக கொஞ்ச நாட்கள் முன்பு தான் , மகளின் புத்தக அலமாரியிலிருந்து அவள் தோழி ஒரு புத்தகத்தை எடுத்துச்சென்றுவிட்டு படிக்கப் பிடிக்கவில்லை என்று திருப்பித் தந்தபோது அது ஏன் என்று ஒரு ஆர்வத்தில் வாசிக்க ஆரம்பித்து முழுவதும் முடித்தேன்.[How I saved My Father's live - (And Ruined Everything Else)- ANN HOOD ]சின்னப்பிள்ளைகளாயிற்றே.. அப்பா அம்மா விவாகரத்து என்றும் அதனால் அக்குழந்தைக்கு நேரும் குழப்பங்கள் என்றும் முதல் பாகமே இருந்தால்.. பயந்து போய் இருவரும் அதைப் படிக்காமல் வைத்துவிட்டார்கள் போலும். )

தமிழில் க.நா.சு அவர்கள் மொழி பெயர்த்த புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டு அதனைப்பற்றி இணையத்தில் தேடியபோது அவை படங்களாகவே கிடைத்தது. அது இன்னும் கதையை மனதில் பதியவைக்க உதவியது.
1984 by George Orwell / Nineteen Eighty-Four

இந்தப்படத்தை இங்கே பார்க்கலாம்


Animal Farm இந்தப் படத்தை இங்கே பார்க்கலாம்.



நம்ம டாக்டர் ரோகிணி எப்பவும் அயன் ராண்ட் பற்றி பஸ்ஸில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சமீபமாய் அவரின் பௌண்டெய்ன் ஹெட் புத்தகத்தை பதிவர் தெக்கிக்காட்டானும் வாசிக்கத்தொடங்கி விட்டு பஸ்ஸில் குறிப்பிட்டிருந்தார். அதனைப்பற்றி தேடியதில் அதுவும் படமாக வெளிவந்திருப்பதை அறிந்ததும் சோம்பேறி மனதுக்கு தெம்பாகிவிட்டது . படமாக மாற்றியதில் பல மாற்றங்களுடன் சுருக்கமாகிவிட்டாலும் எதோ அதையும் அறிமுகப்படுத்திக்கொண்டதாக ஆகிவிட்டதல்லவா?
இங்கே அப்படத்தை பன்னிரெண்டு பாகமாகப் பார்க்கலாம். இனி மெதுவாக வேண்டுமானால் பிடிஎஃப் கோப்பை இங்கிருந்து படித்துக்கொள்ளலாம்.


இதே போல பாரபாஸ் படமும் பார்த்த ஞாபகம். அப்போதே அதை சேமித்துவைக்கவில்லை.
( அதான் இந்த சேமிப்பு பதிவு )தற்போது அதன் இணைப்பு கைக்கு கிடைக்கவில்லை. வெறொரு இணைப்பில் இருக்கிறது ஆனால் எதோ மொழியில் ஒருவரே மொழிபெயர்த்து அந்தக்குரலை மேலே ஒலிக்கவிட்டிருக்கிறது போல இருக்கிறது. அதை சகித்துக்கொள்வதாக இருந்தால் படத்தைப் பார்க்கலாம். http://www.veoh.com/watch/v12000307AcXStkhH ..