September 27, 2008

பெரிய கவலை விட்டது!! ஸ்.. அப்பாடா!

இந்த வாரம் மகளுடைய பள்ளியில் மகன் சேர்க்கைக்கு தேர்வான முடிவு தெரிந்தது. ஆன்லைனில் ஃபார்ம் பூர்த்தி செய்து , ஆன்லைனிலேயே அழைப்புப்பார்த்து நேர்முகத்தேர்வு முடிந்ததும் ஆன்லைனிலேயே முடிவும் தெரிந்துகொண்டாயிற்று."அட அந்தக்காலத்துல நாங்கள்ளாம் இண்டர்வியூவா போனோம் " என்ற தோழமைகளிடம் " சரிதான்ப்பா நாங்களும் தான்" என்று சொல்லிவிட்டு உள்ளூர ஒருவிதமான கலக்கத்தோடு இருந்தேன்.

நாங்கள் தமிழ்நாடு செல்லவேண்டியிருந்த தினங்களில் தான் சரியாக எல்லா பள்ளிகளும் தங்கள் விண்ணப்பங்களை வாங்க வேண்டிய தேதிகளையும் திரும்ப கொடுக்கும் தேதிகளையும் வைத்திருந்தார்கள். எனவே நன்றாக தெரிந்துவிட்டது . அக்காவின் பள்ளியில் தம்பியை போட்டாலொழிய வேறு வழியில்லை. ஆனால் அவர்களும் இன்னோரு பிள்ளை தங்கள் பள்ளியில் என்றாலும் அதற்கு ஒன்றும் உறுதி அளிக்க முடியாது என்கிறார்கள். ப்ளே ஸ்கூல் டீச்சர் அறிவுரையில் நாங்கள் பள்ளி தலைமையாசிரியை இடம் அக்காவின் பெருமைகளை சொல்லி தம்பிக்கு இண்டர்வியூ கால் செய்வதை தள்ளிவைக்க சொல்லிவிட்டு சென்றோம். தன்னால் ஆனதை செய்வதாக சொன்னார்கள். அதுவே பெரிது இந்த காலத்தில்.

தில்லி திரும்பியதும் பார்த்தால் , இனி இண்டர்வியூ அழைப்பு வராது என்று இணையத்தில் போட்டிருந்த செய்தி மேலும் அதிர்ச்சி. மீண்டும் படையெடுத்து தலைமை ஆசிரியை பார்த்து இண்டர்வியூ தேதி வாங்கியாயிற்று. முதல் கட்டமாக கலரிங் .. உள்ளே நுழையவே சில குழந்தைகள் அழுது தேம்ப இவர் தலையை சொரிந்தபடி உள்ளே போய் சின்ன சின்ன நாற்காலியில் உட்கார்ந்தார். வண்ணம் தீட்டுதல் மும்முறமாக செய்யும் போது ஒரு முறை நிமிர்ந்து என்னை கவனித்தான். போதும் அவனை டென்சனாக்காதே என்ற மறுபாதியின் மிரட்டலுக்கு பயந்து தொடரவில்லை. ( வெளியே வந்ததும் " நீ என்னை பார்க்கவே இல்லையே அம்மா என்றான்" :)... ) வண்ணம் தீட்டுதலுக்கு இடையில் ஆசிரியை ஓரிரண்டு கேள்விகள் கேட்டார். ஆனால் அவை என்ன என்ன என்று சொல்லவே இல்லை இன்று வரை."குச் நஹி ஹை அம்மா"தான் பதில்.

எங்களையும் உள்ளே அழைத்து எங்கள் முன்னிலையில் ஒரு ஹெலிக்காப்டர் புதிரை கொடுத்தார்கள் அவர் தான் புதிரில் புலியாயிற்றே மேலும் அவன் ப்ளே ஸ்கூலிலும் இது பயிற்சி அளிக்கப்பட்டதே என்பதால் கண்மூடி திறப்பதற்குள் முடித்துவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னர் பேட்டர்ன் போர்ட் ..மற்றும் ஞாபகத்திறனுக்கான ஒரு சோதனை . அவன் பெயர் ப்ளே ஸ்கூல் பெயர் எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டான். நன்றி என்றபடி எங்களை வெளியே செல்ல அனுமதித்தார் ஆசிரியை. ஆனால் வரும்போதே அத்தனையும் செய்தால் மிட்டாய் கிடைக்கும் நன்றி சொல்லவேண்டும் என்று பழக்கியதால் மிட்டாய் தரவில்லையே என்று ரகசியமாக என்னிடம் கேட்டுக்கொண்டான். பின்னர் நாங்களே வெளியே வாங்கிக்கொடுத்தோம்.


இரண்டாம் கட்டமாக ஒரு கான்ஸ்ப்ரன்ஸ் ஹாலில் பெற்றவர்கள் அனைவரும் அமரவைக்கப்பட்டனர். ப்ரின்ஸி மற்றும் தலைமையாசிரியை முன் பெற்றவர்கள் பெயர் , படிப்பு வேலை பற்றி சிறு அறிமுகம் தரவேண்டும். மற்றொரு குழந்தை இருந்தால் அவர்கள் எங்கே படிக்கிறார்கள் என்று குறிப்பிட சொன்னார்கள்.என் வாழ்நாளில் எனக்கு இது தான் முதன் முறையாக்கும், இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொள்வது.. டெக் தீபாவிடம் நேர்முகத்தேர்வுக்கு நான் தனியாக பயிற்சி எடுத்தேனாக்கும் ஸ்கைப்பில்...:) சிலர் ஆகா ஊஹூ என்று டம்பம் அடித்தார்கள். என் கம்பெனி வேல்யூ அது இது .. என் குழந்தை இந்த வயசில் இத்தனை சிறப்பா பார்க்கமுடியாது என்று .. ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்த நாள் கதை.


[மகளின் பள்ளி ஒரு கல்லூரியைப்போல இருக்குமே தவிர படோடபம் இருக்காது.
இதற்கான முடிவு தெரியும் முன் எதற்கும் இருக்கட்டுமென்று இன்னொரு பள்ளியிலும் போட்டுவைத்திருந்தோம் அங்கே அது பள்ளியா இல்லை ஹோட்டலா என்று எண்ணும் படி இருந்தது வரவேற்பரை.. பள்ளி ஏக்கர்களை வளைத்துப்போட்ட பெரும் இடம். 3 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது என்றாலும் 1870 ல் இருந்தே அவர்களுக்கு கல்விப்பாரம்பரியம் இருக்கிறது. கல்லூரி நடத்தி வருகிறார்களாம். உள்ளே நுழைந்ததும் குழந்தைகளைக்கவர சிறு வீடு,ஓக்கே ப்ளே ஐயிட்டங்கள் சறுக்கு , சீசா. அந்த சிறுவீட்டில் நுழைந்ததும் இங்கே கிச்சன் எங்கே அம்மா? என்கிறான் பையன்.. :)அங்கே இன்னும் முடிவு வரவில்லை 1 ம் தேதி தான் ஆன்லைனில் வரும்.]

பணம் கட்டும் தினத்தில் தலைமையாசிரியை மிக அழகான ஒரு உரையாற்றினார். மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். அதற்கான ஒரு சிறு தொகையை அளிப்பது ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி நம் பிள்ளைகளின் கல்வியை தொடங்கும் நேரத்தில் மனநிறைவைத்தரும் என்றார். அவர்கள் கையில் கொண்டுவரச் சொன்ன அளவு பணத்திலே 5000 ரூ பள்ளிக்கட்டணத்தோடு அதிகமாக சொல்லி இருந்திருக்கிறார்கள் என்பதால் செக் இல்லை என்றோ பணம் இல்லை என்றோ ஆகாது. உங்களுக்கு மனநிறைவைத்தரும் என்றால் 5000ரூ தரலாம். இல்லை என்றாலும் இல்லை. ஆனால் பொதுவாக அப்படிப்பட்ட நிலையில் தருவதே ஒரே வழி. அதை மனநிறைவோடு தருகிறார்களா கட்டாயமாக நினைத்துத் தருகிறார்களா என்பது தான் வித்தியாசம்.

ஒரு தந்தை எழுந்து, நாங்கள் குழந்தைகளுக்கு உடைகள் கொண்டுவந்து தரலாமா ? என்று கேட்டார். தலைமையாசிரியை அழகாக இல்லை அது அவர்களின் தன்மானத்தை பாதிக்கும் என்றார். அவர் மீண்டும் பழைய உடைகள் அல்ல புதியவைகளே பண்டிகை மற்றும் விசேச தினங்களில் பகிர்வுக்கு மறுப்பில்லை என்றார்.
எளியவர்களின் குழந்தைகளுக்கான நேரம் மதியத்தில் தொடங்குகிறது. அவர்களுக்கு முழுப்பள்ளியிலும் நடமாட மற்றும் வசதிபடைத்தோரின் குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் பங்கிடப்படுகிறது என்று கூறினார். கணினி போன்ற பள்ளியின் பொருட்கள்.அப்பள்ளியில் வாலண்டியராக ஆசிரியைப்பணி செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்.
பள்ளிக்கும் எங்களுக்குமான தொலைவு அதிகமென்பதால் அங்கே வாலண்டியராக இணைந்து செயல்பட தற்போது இயலவில்லை . ஒருவேளை மெட்ரோ எங்கள் பகுதியில் வந்துவிட்டால் முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம்.

புதிய தலைமையாசிரியை வந்த இவ்வருடத்தில் எளியவருக்கான பள்ளியின் சில குழந்தைகளில் மிக அறிவார்ந்த பிள்ளைகள் பகல் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் மகளிடம் முதல் கேள்வியாக அவர்களைப்பற்றியே கேட்டேன். மகளின் பதில் கேட்டதும் மிக ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேல் வகுப்பில் தான் இந்த புது சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று அந்த அக்காமார்களின் பேச்சில் மகிழ்ச்சி இருந்ததாகவும்.. இந்த எளியவர்களின் குழந்தைகளின் மிக அன்பான கனிவான அணுகுமுறையை அவர்கள் இதற்கு முன் அவர்கள் வகுப்பின் தோழிகளிடமிருந்து கூட் பெற்றதில்லை என்றும் சொன்னார்களாம்.

உனக்கு இடம் கிடைத்துவிட்டதுடா ! என்ற குதூகலத்தைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம். அவன் சொன்னது என்னவென்றால்...

அம்மா ஏக் நஹித்தோ தூஸ்ரே மே பேட்டூங்கா , ஜஹாத்தோ ஹே ன்னா... பர் மே ஆகே பேட்டூங்கா" ("அம்மா அங்கே நிறைய இடம் இருந்ததே ஒன்று இல்லாவிட்டால் இன்னோன்று.. உட்கார்ந்துக்குவேனே.. ஆனா நாம் முன்னாடி உக்காந்துக்குவேன்.. ")

September 22, 2008

தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்






தக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும் மீண்டும் ஆசை துளிர்விட்டது .

சென்னை ஆட்கள் பலரும் தக்ஷின் சித்ரா போறீங்களா? எங்க இருக்கு அது என்று கூகிள்சேட்டில் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.திருவான்மியூர் மாமாமகள் வீட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து தக்ஷின் சித்ரா போவதாக திட்டம். நான் வந்து இறங்குவதோ எக்மோர் . எதாவது எளிதான போக்குவரத்து என்று லக்ஷ்மிக்கே தொலைபேசினேன். மின்சாரரயிலே உண்டே என்று வயிற்றில் பால் வார்த்தார்கள்.

எக்மோரிலிருந்து கோட்டை .. கோட்டையிலிருந்து திருவான்மியூர். ஆகா! அலுவலக நேரம் தவிர்த்து மின்சார ரயில் பயணம் செய்வது என்பது இன்பமானது. நல்ல காற்று .. அமைதியாக, ஆனந்தமாக குழந்தைகள் ரசித்து பயணித்தனர். திருவான்மியூரிலிருந்து மாமாமகளின் கணவர் எங்களை பஸ் ஏற்றிவிட்டார். எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட் க்கு அடுத்து இருக்கிறது தக்ஷின் சித்ரா. எம் ஜி எம் நிறுத்தத்தில் இறங்கி கொஞ்சமே கொஞ்சம் நடந்தால் வந்துவிடுகிறது.

ரிசப்ஷன் ஹாலே ஒரு அழகான வீடு தான். நடத்தறவங்க மெட்ராஸ் க்ராப்ட்ஸ் ஃபவுண்டேசன்.. 1996 ல் ஆரம்பிச்சிருக்காங்க.நுழைவுகட்டணம் பெரியவங்களுக்கு 75 ரூ. சிறுவருக்கு 20 ரூ. புகைப்படம் எடுக்க அனுமதி இலவசமாம்.. பாருங்க அதிசயத்தை. வீடியோவுக்கு 25 ரூ தான். நாங்க ஒரு வீடியோக்கேமிராக் கூப்பன் வாங்கிட்டு நுழைந்தோம். ஒரு மேப் கூட குடுக்கறாங்க. அதுல எங்க எங்க என்ன இருக்குன்னு அழகா நம்பர் போட்டிருக்காங்க.. நாங்க முதலில் பார்த்தது கர்நாடகா . அப்பறம் ஆந்திரா வீடு. வட்டமான குடிசை வீடு . வாசலில் ஒரு அம்மா குச்சியில் கட்டி சுத்தினால் சத்தம் வரும் டிக் டாக் 10 ரூ க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.

உள்ளே அழகான கயித்துக்கட்டில். எல்லா இடத்திலும் அழகா மெழுகி கோலமிட்டிருந்தார்கள். . குடிசை வீடு. கொஞ்சம் வசதியானவர்கள் வீடு.தறி நெய்பவர்கள் வீடு. வீடுகள் அந்த காலத்தின் அமைப்பு என்பதால் வாசல் தனித்தே இருக்கும். யாரும் வணங்கா முடிகள் வந்தால் இடித்துக்கொள்ளக்கூடாதே என்று சின்ன சின்ன கருப்பு தலைகாணிகளை வாயிலில் கட்டிவிட்டிருக்கிறார்கள். ஆமாம் தெரியாமல் இடித்தால் பத்து நாள் தலைவலிக்குமே.

தமிழ்நாடு வீட்டில் செட்டி நாடு வீடு அமர்க்களம். வரிசைகட்டி திண்ணை வீடுகள் இருக்க ஒரு தெருவே அந்த காலத்தை கண் முன்னே காட்டுகிறது. திண்ணையில் கிளி ஜோசியமும், கை ரேகை பார்ப்பவர்களுமாக உயிரோட்டமாக இருக்கிறது. கிளி ஜோசியக்காரர்கள் உள்ளே பப்பெட் ஷோ சீக்கிரம் போங்க என்றார்கள். உள்ளே நுழைந்தால் ஒன் மேன் ஷோ. செல்வராஜ் என்பவர் பேச்சு நிழற்பிம்ப நாடகம் .. தோல்ப்பாவைகளை வைத்து காட்டுகிறார். அவரே குரல். அவரே இசை. அவரே பொம்மைகளை ஆட்டுவிக்கிறார்.


10 நிமிடங்களில் என்ன பெரிய கதை சொல்லிவிட முடியும் என்று சின்னதாக ஒரு அறிமுகம் செய்கிறார். கிருஷ்ணலீலாவில் ஒரு காட்சி என்று சொல்லிவிட்டு அதில் ஆங்கிலம் கலந்து நகைச்சுவையாக ( இரண்டு அறை விட்டா நகைச்சுவைதானே ... டமால் டமால் என்று அடிவிழுகிறது) நடத்துகிறார். நடுவில் வரும் எக்சூஸ்மிக்கெல்லாம் ஒரு வெளிநாட்டுக்காரர் சிரித்துக்கொண்டிருந்தார்.

கேரளாவீடுகள் சொல்லவா வேண்டும் அழகு. முற்றம் ஒரு நீச்சல் குளம் போல இருந்தது. முற்றிலும் கம்பியில்லா மர ஜன்னல்கள். ஜன்னல் கதைவை கீழ் நோக்கித் திறந்து ரயில் பெர்த் போல போட்டால் உட்கார ஏதுவாகும். வேண்டாமா? எடுத்து மூடிவிடலாம். நல்லா யோசிச்சிருக்காங்கப்பா.


வீட்டுக்கூரையில் பாதி தடுத்து ஒரு மச்சு செய்து அதில் ஏற ஒரு மர ஏணி தென்காசியில் பார்த்திருக்கேன். அது போல இங்கேயும் உண்டு ஆனால் ஏறக்கூடாது என்று எழுதி இருக்கிறார்கள்.கேரள இந்து வீடு. கேரள கிருத்துவர் வீடு என்று மாடல்கள்.

தமிழ்நாட்டில் குயவர் வீட்டில் மண் பாண்டம் செய்வது எப்படி என்று செய்து காட்டுகிறார்கள் . நீங்கள் செய்துபார்க்கனுமா? 10 ரூ . மருதாணி போடறாங்க 10ரூ. ஆனா வடநாட்டு பாணி. நம்ம ஊருல கோன்லயா போடுவங்க.. மண்ணில் செய்த பொருட்கள் விலைக்கு இருந்தது. நான் என்ன வாங்கினேன் தெரியுமா?
ஆட்டுக்கல் அம்மிக்கல் உரல் திரிகை. எல்லாம் சேர்ந்து 70 ரூபாய்ன்னு ஞாபகம்.

இதெல்லாம் இனி ம்யூசியத்துலதான்னு சொல்லிக்கேள்விப்பட்டிருக்கேன். இப்ப ம்யூசியத்தில் பார்க்கவே பார்த்துட்டேன். மாவு திரிகையில் மாவு திரிக்க 5 ரூபாய்ங்க.. கொஞ்சம் அரிசியை உள்ளே போட்டு திரிச்சுப்பார்க்கலாம்.. பாட்டி எப்படி மாவு திரிச்சாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க... :)

ஒரு அய்யனார் கோயில் கூட இருக்கு அட்டகாசமா..

தில்லிகாட் மாதிரி கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யறாங்க..தில்லிகாட் மாதிரியே விலையும் பயமுறுத்தியது. ஒன்னும் வாங்கல அங்க.. ஒரு அம்மணி வாங்கிக்கொண்டிருந்த வளையல் விலை 800ரூ. அதே போன்ற இன்னொன்று 200ரூ . என்ன வித்தியாசம் என்ற அம்மணிக்கு இளைஞர் சொல்லிய பதில். " 800ரூ வளையலில் இருக்கும் ஃபினிஷிங் இன்னோன்றில் இல்லை. ஏனென்றால் அது என் மாணவர் செய்தது " ஹ்ம்.. சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்.

பனைஓலை பொம்மைகள் செய்வது எப்படி? களிமண் மோல்டிங் செய்வது எப்படி? இப்படி நிறைய விசயங்கள் சொல்லித்தருவதாக எழுதி இருந்தாலும் நாங்கள் சென்ற போது வெறுமனே மண் பாண்டத்தில் கலர் பெயிண்ட் செய்யமட்டுமே வசதி உண்டு என்று சொல்லிவிட்டார்கள்.

கேரளா வீட்டில் வாசலில் தென்னை வயலின் 30 ரூபாய்க்கு மகன் வாங்கினான். மகளுக்கு ஒரு பாட்டியம்மா பனையோலையில் யோ யோ செய்வது எப்படின்னு சொல்லிக்கொடுத்தாங்க.. ""பொருளு கம்பனி(!!!)ப்பொருளும்மா அது வெல 10 ரூ . டிக்கெட் கொடுத்துடுவோம். சொல்லிக்கொடுக்கறதுக்கு நீ பாத்துப் போட்டு கொடும்மா""ன்னாங்க.. சரின்னு ஒரு 5 ரூ. கரகாட்டம் ஒயிலாட்டம் நடக்க இருந்தது . எங்களுக்கு நேரம் இல்லை நாங்க வீடுகளை சுத்திக்கொண்டிருந்தபோது சத்தம் கேட்டது.

சாப்பாடு ஹால் இருக்கு. தங்கவசதியும் இருக்காம். இவங்களோட வலைப்பக்கத்துல http://www.dakshinachitra.net/index.htm விவரமா இருக்கு . அலுவலக மீட்டிங்க் , பர்த்டே பார்டி கூட அரேஞ்ச் செய்யலாம் போல...எட்டிப்பாத்து என்ஜாய் செய்யுங்க சென்னை மக்களே!