Showing posts with label கவனிக்க. Show all posts
Showing posts with label கவனிக்க. Show all posts

February 19, 2009

அந்த மஞ்சப்பைய எடு....

நாங்க பெரிய ஐட்டங்களா சைக்கிள், டீவி இப்படி எதாச்சும் கேட்டாக்கூட அப்பா சீரியசா முகத்தை வச்சிட்டு " அந்த மஞ்சப்பைய எடு' ன்னு வாங்க.. மஞ்சப்பையில் அதெல்லாம் வாங்கமுடியாதுல்ல.. உடனே சிரிச்சிடுவோம். அப்ப எல்லாம் கடைக்குப் போனும்ன்னா ஒரு மஞ்சப்பை தான்.. அது விதவிதமா ஒரு பெரிய கூடையில் கிடக்கும்.. பெரிசு சின்னது, சாமிபடம் போட்டது, சீமாட்டிபை, சங்கம் பை ன்னு... ஹபீப் கடை பை மட்டும் ஒரு மாதிரி டார்க் ஆலிவ் க்ரீன் ல இருக்கும்.. சிலசமயம் ப்ரவுனாவும் வரும்.


மஞ்சள் பை புகைப்படம் பதிவுக்கு வேண்டுமென தேடினேன். அட ஏற்றி விட்ட ஏணிய மறந்துட்டாங்களே.. :( எனக்கும் மேற்கொண்டு தேட பொறுமை இல்லை. வீட்டில் வெண்டைக்காய் போட்டு வச்சிருந்த மஞ்சைப்பையை ப்ரிட்ஜிலிருந்து எடுத்து சுடச்சுட( ஆனா அது ஜில்ன்னு இருந்தது ) எடுத்த போட்டோ..


சீமாட்டியில் துணி எடுத்தா 4 துணி எடுத்தோ நாலு பை தாங்கன்னு கேட்டு வாங்குவது அப்போது. கடைக்குப்போனா பேப்பரில் மளிகை சாமான் கட்டித்தருவாங்க நாம நம்ம பையில் வாங்கிக் கொண்டுவருவோம்..இப்ப நாம கைவீசிப்போகிறோம் .. பெரிய பெரிய பாலிதீன் தராங்க.. ரொம்ப கொடுமை. பெரிய பெரிய கடைகளில் கையில் கொண்டுபோகிற பையை வெளியே வச்சிடனும்.

தில்லியில் எல்லா பழக்கடை காய்கறி கடையில் .. எடையில் நிறுத்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு கை தன்னிச்சையாக பாலிதீன் பைகளை பிரித்து வைத்திருக்கும் உடனே பொருள் உள்ளே கொட்டி ஒரு முடிச்சிட்டு கொடுத்துவிடுவார்கள். இது மின்னல் வேகத்தில் நடக்கும். நான் பத்துவருடத்துக்கு முன் இங்கே வரும் போது அது எனக்கு புதிய விசயம் தான். அப்பொழுது வரைக்கும் கூட எங்க ஊரில் இந்த அளவு புழக்கத்தில் வரவில்லை.ஆனால் இப்பொழுது ஊரிலும் இதே கதை தான்.

நான் சிறிது காலமாகவே காய்கறி சந்தைக்குப் போனால் (கட்டைபை எனும் ஆர் எம் கேவி பையோடு).. எடைபோடும்போதே பையா (அண்ணா) அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன். சரியாக காதில் வாங்காத அவர்கள் என்ன எடை சரியாத்தானே இருக்கு.. என்ன வேண்டாமா என்றெல்லாம் அதிர்ந்து விட்டு பின் புரிந்து கொள்வார்கள். ஒரே கடையில் வெண்டைக்காயும் பீன்சும் வாங்கினால் இரண்டையும் ஒன்றாகவே வா என்று ஒரு கேள்வி கேட்பார்கள். ஆமாய்யா ஆமாம் என்று வாங்கிவருவேன். இதில் பல நன்மை இருக்கிறது.

மகனுக்கு இந்த வயசில் காய்கறி பெயர் சொல்லித்தரனும்.. ஒரே மாதிரியான பொருட்களை தேடி பிரிக்கக் கத்துக்குடுக்கனும் இதெல்லாம் கூடப் பாடத்திட்டத்தில் வருவது தான். அவன் எனக்கு உதவியும் செய்யனும்.அழகா உட்கார்ந்து ஒவ்வொன்னா பிரிச்சு தனி தனி காய்கறிப்பைகளில் போடுவான். பெயர் சொல்லிக்கொண்டே.. அம்மா உனக்கு ஹெல்ப் செய்தேனேனு அவனுக்கும் குஷி.. இத்தனைக்கும் மேலே சுற்றுப்புற சூழலுக்கு கேடு குறைவு .

ஆனால் மஞ்சப்பை கூட இப்பொழுது முன்பு போல் வருவதில்லை. எங்க தாத்தா எப்பவும் ஒரு மஞ்சள் பை வைத்திருப்பாங்க.. அது இல்லாம நீங்க அவங்களைப்பார்ப்பது அபூர்வம்.. அதுல பர்ஸ் அப்பறம் ஒரு விபூதிப்பை இருக்கும். அது அழகா மடிச்சு மடிச்சு இருக்கும். தன்னோட தலைகாணி பக்கத்துலயே தூங்கும் போதும் வைத்திருப்பாங்க. இப்ப பழைய பை வேணாம் புதுசா ஒரு மஞ்சப்பை கொடுன்னு கேட்டா ஒரு துணிக்கடை பை கூட முழு காட்டனில் வருவது இல்லை. எதோ கலந்து செய்யறாங்க அது அப்படியே மொடமொடன்னு நிக்குதே தவிர மடங்குவது இல்லை..:( தாத்தா கேட்ட மஞ்சப்பைய குடுக்கமுடியலயேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்.

தில்லியில் இப்போது சட்டம்( அட அடிக்கடி போடுவாங்க எடுப்பாங்க) வந்திருக்கு பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என்று ,.. ஆனாலும் இன்னமும் நடக்கிறது . உங்கள் உங்கள் பிள்ளை பேரன் பேத்திக்கு சொத்து சேர்த்து வைக்கும் நேரத்தில் கொஞ்சம் நல்ல சுற்று சூழலையும் தந்துவிட்டு போவோம் என்று நினையுங்கள்.

February 3, 2009

200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி - திகில்காட்சிகள் நிறைந்தது

வழக்கம் போல என் டேஷ்போர்டில் கடைசியாக போட்ட போஸ்ட் 198 என்று காட்டிக்கொண்டிருக்க .. பதிவின் பக்கங்களில் 201 கூட்டுத்தொகை காட்டிக்கொண்டிருக்க எடிட் போஸ்ட் பக்கத்தில் சென்று ஷோ 300 போஸ்ட் என்றுப் போட்டுப்பார்த்தேன்.... 1-201 ஆஃப் 201 என்று காட்டியதால் குழம்பித் தெளிந்து நான் 200 பதிவுகள் கடந்துவிட்டதை தாமதமாகத் தெரிந்துகொண்டேன்.

இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் சிபியின் ஆவி நண்பர்களோ என்னவோ? முன்பு எப்போதோ டேஷ்போர்டிலிருந்த பின்னூட்டங்களை தின்ற ஆவிகள் இப்போது பதிவின் கணக்கையும் தின்றுருச்சு போல.. :) அவை இங்கேயே குடியிருக்கிறதோ..? ப்ளாக்கரின் கோஸ்டு வேலையும் இதில் இருக்கிறது.
இன்னமும் எனக்கு டேஷ்போர்டில் மாடரேட் செய்யவேண்டிய பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்ல்லையே...

பதிவர் மரவளம் வின்சென்ட் உடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்வைச் சொன்னார் அது எனக்குப் பெரிய திகிலாக இருந்தது. முன்பெல்லாம் பிக்னிக் அல்லது சுற்றுலா குடும்பங்களாக செல்வது குறைவு தான். இப்போது பல இடங்களுக்கு மக்கள் சென்று வர பிரியமாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த இடங்களை சுற்றிப்பார்ப்பதை விட ... அதிகமாக குப்பைப் போட்டுவருவது தான் நடக்கிறது. அதிலும் பெரும் கொடுமை இந்த ஆண்கள் கும்பலாக செல்வது. இளைஞர்களுக்குள் பாட்டில் எடுத்து செல்லும் பழக்கம் இருக்கிறது. அதனை அந்த அழகான இயற்கை பகுதிகளில் குடித்துவிட்டு போடுவது மட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் ஒரு காரியம் உடைத்து எறிவது.

வெறும் புல்வெளியில் போடுவதை விட திகிலான காரியம் அதனை ஆற்றுக்குள் போடுவது. இவ்வாறான ஒரு கண்ணாடிச்சில் ஆற்றில் கால் வைத்து ஆனந்தித்து இருந்த ஒரு நபரைப்பற்றிக் கூறினார் வின்சென்ட். பொதுவாக தண்ணீருக்குள் இருக்கும் போது இரத்தம் கசிவதோ அல்லது வலியோ நமக்குத் தெரிவது குறைவு. அந்த நபருக்கு கண்ணாடி கீறி ரத்தம் வெளியேறியபடி இருந்திருக்கிறது. மணல் நெருடிய உணர்வில் காலை வெளியே எடுத்தவர்க்கு பகீரென்றிருக்கிறது.
எக்கசக்கமாக இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது.

கொடுமையில் கொடுமை அவர் தன் மோட்டர்பைக்கில் வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் எவ்வாறு செல்வார். முதலுதவிகள் செய்து எப்படியோ பாதுகாப்பாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கிறார்கள்.. ஒரு வேளை அவர் தன்னையறியால் இன்னும் கொஞ்சம் நேரம் அந்த நீரில் இரத்தம் கசிய நின்றிருந்தால் அவர் நிலை நினைத்துப்பார்க்கவே திகிலாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நம் பதிவர் குழுவினர்கள் மலைப்பகுதிகள் சென்று வந்ததை பரிசல் வடகரை வேலன் போன்றோர் எழுதி இருந்தார்கள்.. அப்போது வேலன் அவர்களும் செல்வேந்திரன் அவர்களும் கொண்டு சென்ற பொருள்களை மலையில் சேர்க்காமல் கீழே கொண்டுவர கோணி கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். அது மிக நல்ல விசயம்.

நாங்கள் மணாலி சென்றிருந்த போது இப்படி மலையடிவாரத்திலேயே ஒரு பெரிய குப்பை போடும் பையைக் கொடுத்து குப்பைகளை கீழேயே கொண்டுவருமாறு சொன்னார்கள்.. அதனை திரும்ப கொண்டுவந்து அவர்களிடமே கொடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறார்கள்.. முதலில் அந்த பைக்கு பணம் வாங்கிக்கொண்டு பின்னர் திரும்பிக்கொடுக்கும்போது அந்த பணத்தை திரும்ப தந்துவிடுவார்கள். பணம் என்றால் தானே மக்கள் எதையும் கவனமாகச் செய்வார்கள். :( ( இதை முன்பே எழுதி இருப்பதாக ஞாபக்ம் ஆனால் நல்ல விசயத்தை திரும்ப சொல்வதில் தவறில்லையே)

சுற்றுலா செல்வதில் இருக்கும் விருப்பம் அந்த பகுதியை அதே அழகோடும் பாதுகாப்பானதாவும் வைத்துக்கொள்வதிலும் இருக்கவேண்டும்.

August 15, 2007

எண்ணுவான் செய்த கொடுமை

நம்ம பக்கத்துக்கு எத்தனை பேர் வந்து படிச்சிருப்பாங்க ன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் எண்ணுவான் கவுண்ட்டர் வச்சிருக்கறதே பதிவு எழுத ஆரம்பித்து கொஞ்ச் நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது சரி நாமளும் வைப்போம் பின்னூட்டம் போடாமல் எத்தனை பேர் படிப்பாங்கன்னு நானும் ஆர்வமா பாக்கறதுக்காக...ஒரு எண்ணுவதுக்கு உதவி செய்யற கவுண்ட்டர் வைத்தேன்....


ஒவ்வொருவரும் வேற வேற மாதிரி வைத்திருக்காங்களேன்னு அதையெல்லாம் போய் பார்ப்பதும் வழக்கம்..இப்படி ஒரு நாள் தமிழ்நதியின் எண்ணுவானை ப்பார்த்து அந்த தளத்தில் பதிந்து கொண்டு நானும் ஒரு கவுண்ட்டர் வைத்தேன்..


அப்பத்தான் கிளிக்கிளிக் தளமும் ஆரம்பித்தேன்..அதில் படத்தை போட்டதும் சர்வேசன் எதோ பாப் அப் வருது உங்க தளத்துக்கு என்று சொன்னாங்க.. என்னப்பா அப்படியான்னு ரெண்டுபேரு கிட்ட கேட்டேன் இல்லையே எங்களுக்கு வரலியேன்னதும் சரி வேற விண்டோ எதும் ஓப்பன் செய்ததில் வ்ந்திருக்கும் தவறா நினைத்துவிட்டாங்களோன்னு விட்டுட்டேன்..


அப்பறம் திருப்பியும் வருதுன்னு இன்னொருத்தர் சொன்னதும் தீபா மேடத்துக்கிட்ட கேக்கறேன்னேன்...அவங்களும் பாத்துட்டு கண்ட்ரோல் எஃப் போடுங்க பாப் ன்னு அடிச்சு பாருங்க எதாச்சும் வருதா உங்க டெம்ளேட்டுல என்றாங்க..பார்த்தேன் ஒன்னும் வரலை..என்ன லிங்க் என்று சொல்லுங்கன்னு கேட்டதுக்கு பாப் அப் வந்தவங்களே அனுப்பினப்பறம் தான் எனக்கு பிரச்சனையின் தீவரம் புரிந்தது... அய்யோ இத்தனை நாளா இல்லாம எப்படி இப்பன்னு சந்தேகத்துல மோட்டிகோ கவுண்ட்டரு மேல தான் சந்தேகம் வலுத்து எடுத்துட்டேன்..


தீபா ஆன்லைனில் வந்ததும் மேடம் மேடம் சொல்லுங்க மேடம் தப்பான சைட்டுக்கு பாப் அப் வந்தா படிக்க வரவங்க என்ன நினைப்பாங்க...என்றதும் மோட்டிகோ பத்தி கொஞ்சம் கூகிளிட்டு சொன்னாங்க அவங்க பாலிஸியே அதாங்க..உங்களுக்கு இலவசமா செய்துட்டு அவங்க பாப் அப் போட்டு தான் சம்பாதிக்கறாங்க போலன்னு...


அப்பறம் பார்த்தா இப்படி ஒருத்தர் பதிவு போட்டுருக்கார்...
நான் இது போல நம்ம பதிவர்கள் வைத்திருக்கிறார்களே அப்ப நல்லதாத்தான் இருக்குமாக்கும்ன்னு நினைச்சு பாலிஸி கொள்கை எதையும் கண்டுக்காம அப்படியே கோடை காபி பேஸ்ட் பண்ணிட்டேன்..மக்களே பார்த்து செய்யுங்க..

July 17, 2007

தலையைச்சுற்றி ஒளிவட்டம்

சின்னக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நான் பார்த்தது என் அம்மா தினமும் அடுக்களையில் விழுகிற காய்கறி குப்பையை எல்லாம்சேர்த்துத் தொட்டி செடிகளின் மண்ணைக்கிளறி உள்ளே போட்டு மூடிவிடுவார்கள். இப்போதும் தில்லியில் என் வீட்டிலும் தொட்டி ஒன்றில் மண் போட்டு மூடி காய்கறிக்குப்பைகளை மக்க செய்வது என் வழக்கம்.



பெங்களூர் போயிருந்த போது என் சித்திப்பெண் வீட்டில் வாசலில் பெரிய டெரகோட்டா பானைகள் அடுக்கி இருந்தது, என்ன அழகு என்று பார்த்துக்கொண்டு இருந்த போது சொன்னாள் , இது குப்பைகளை மக்க செய்யும் கம்போஸ்ட் சிஸ்டம் என்று , எனக்கு ஒரே ஆச்சரியம். பார்ப்பதற்கு ஒரு கலைநயமிக்க டெரகோட்டா டிசைனாக இருக்கும் இது அடுக்களையில் தினமும் விழும் குப்பைகளை மக்க செய்து தோட்டத்துக்கு இயற்கை உரமாக்குகிறதே .
இது பற்றி மேலும் அவளிடம் கேட்டபோது கிடைத்த தகவல் களை இங்கே பகிர்கிறேன்.






டெய்லி டம்ப் என்பது தான் அதன் பெயர். ஹிந்துவில் வந்த செய்தி கட்டிங்க்....
Bangalore: Bangalore-based designer and educationist Poonam Bir Kasturi now has the distinction of being the first Indian to be nominated for the coveted international INDEX award, which focusses on "design to improve life".
The cost-effective, do-it-yourself kitchen-waste terracotta composter that Ms. Poonam has designed and irreverently named "Daily Dump", has made it to the final list of nominations of the INDEX award, considered one of the biggest international design honours.


தினமும் சமையல் செய்யும் போது காய்கள் பழங்களின் தோல் மற்றய பாகங்கள் மற்றும் வேண்டாத உணவுப்பொருட்கள் தான் அதிகம் குப்பையில் போடுகிறோம்.அவற்றை அப்படியே ஒரு பாலித்தீன் கவரில் போட்டு குப்பைக்காரனிடம் போடுவதை விட அவற்றை தனியா க சேர்த்துவைத்து மக்க செய்து உங்கள் வீட்டு த்தோட்டத்தின் செடிகளுக்கு உரமாக்கலாம்.செழிப்பாக வளரும்.தொட்டியில் செடி வைத்திருந்தால் உரம் கண்டிப்பாக அதற்கு தேவை .


இப்படி குப்பையை மக்க வைக்கும் போது எது மண்ணுக்கு நல்லது எது நல்லதில்லை என்பது தெரியவருவதால் தூக்கி எறியும் பொருள்மேல் கவனம் கொள்வோம்..ப்ளாஸ்டிக் மற்றும் பால்கவர்களைப்போன்ற மக்காத குப்பையைக்கூட குப்பைக்காரனிடம் கொடுக்காமல் கபாடி வாலா அதாங்க
பழைய சாமான் வாங்குகிறவனிடம் கொடுத்தால் அது நிச்சயமாக ரிசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி யால் உபயோகப்படுத்தப்பட்டுவிடும். காசுக்காக நான் போடுவதில்லை பழக்கம் இல்லை என்று சொல்லாதீர்கள் மறுசுழற்சிக்கு அனுப்பவாவது பழைய சாமான் ஆளைக்கூப்பிடுங்கள்.




(பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது காய்ந்து கிடக்கும் பாலுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்போகும்போது அதை எடுக்கும் ஆட்களின் கைகளில் அதனால் நோய் வருகிறதாம்.நம்மால் வேறு ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?)


பூனம் செய்திருக்கும் அந்த மாடல் மிக அழகாக இருக்கிறது.
பெங்களூர் இந்திரா நகர் ஏரியாவில் என் தங்கை வாங்கி இருக்கிறாள். மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.சென்னையிலும் கிடைப்பதாகவும் அதன் முகவரி news எனும் தலைப்பின் கீழ் இருக்கிறது.




எனக்கு தில்லியில் இதற்கு கிளைகள் இருப்பதாக தெரியவில்லை. செயல்முறை விளக்கங்கள் படங்களுடன் அந்த தளத்தை ஒரு பார்வை பாத்ததற்கே என்னமோ ஒளிவட்டம் சுத்தறமாதிரி தான் இருந்தது.



அதற்காக விளம்பரத்திற்கு செய்திருக்கும் ஒரு வீடியோவைப்பாருங்களேன்...அட்டகாசமா எடுத்துருக்காங்க...சாப்பிட்டு முடிச்சதும் தட்டுல இருக்கற மிச்சமீதி எல்லாம் எடுத்து மக்க செய்யப் போடபோகும் போது அப்படியே சந்தோஷமா டிவைனில்லியா உணருகிறார்களாம் தலைக்கு பின்னால் ஒளிவட்டமும் கால்கள் தரைக்கு கொஞ்சம் மேலாக அப்படியே மிதக்கிறாங்களாம்.. :)


July 7, 2007

குப்பையை எங்கே போட்டீங்க?

வீட்டை சுத்தம் செய்து அந்த குப்பையை எங்க போட்டீங்க..
கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு இடத்துக்கு தானே ..ஆனா அது உங்கள விட்டு எங்கயும் போறது இல்ல நீங்க இருக்கிற இதே உலகத்தில் தானே இருக்கப்போது
எப்படி அத தூக்கிப்போட்டதா நினைச்சிக்கிறீங்க..நீங்க போட்ட அந்த குப்பை இதே உலகத்தில் எதோ ஒரு இடத்தில் உங்களுக்கு எதிரான வேலையை செய்துகொண்டுதானிருக்கப்போகிறது.. இதை அறியாமல் நான் தூர எறிந்து விட்டேன்னு நீங்க சந்தோஷமா இருக்கீங்க..

எந்த பொருளும் இல்லாமப் போகபோறது இல்லை அது வேறொன்றா மாறத்தானே வேண்டும்..மீண்டும் அது ம்ண்ணோட போகாதுன்னா அதை எப்படி மாற்றப்போறோம்னு யோசிக்காம தூக்கி எறியாதீங்க.. இன்னிக்கு எந்த ஒரு குக்கிராமத்துக்கு போனாலும் கடையில் பாலிதீன் பை தராங்க..
அதோட உபயோகம் ரொம்ப அவசியம் தான் ஆனா அது என்னவாமா மாறுது..
ஊரோட முள்காடெல்லாம் பாலிதீன் பூ பூத்திருக்கிறது.. குப்பை காடெல்லாம் பாலிதீனால் நிரம்பி வழியுது.

எனர்ஜி சேவர் விளக்குஎல்லாரும் வாங்கிப்போடறோம் அதை அப்படியே தூக்கி எறியக்கூடாதாம்..என்ன செய்ய வேண்டும் தெரியாது ? இப்படி நம்ம ஊரில் ஒரு மறு சுழற்சி முறை தெரியாமல் உபயோகித்து எறியும் பொருட்களின் எண்ணிக்கை நிறைய..

மறு சுழற்சியில் உபயோக்கிக்கும் படி செய்யமுடியாது அல்லது தெரியாது என்றால் அந்த பொருளை உபயோகிப்பதையாவது குறைத்துக்கொள்ளலாமே!
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோடையும் குறைந்து வரும் குளிர்காலமும் காலநிலை மாற்றத்தினை காட்டி பயமுறுத்துகிறது.. கவனியுங்கள் ...செயல்படுங்கள்.

சர்வேசன் 07/07/07 பதிவில் அவர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு சின்ன பதிவு.