February 27, 2010

வானவில் இற்றைகள் -3

ஹோலி ஹை .. வானவில் வண்ணங்களின் தினம்.



அக்கா பத்தியும் கொஞ்சம் பதிவோம்..

தேர்வுகள் முடிந்து விடுமுறையின் தொடக்க நாளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பெரிய திட்டத்தோடு களத்தில் இறங்கி இருக்கிறாள்..

முதல் நாள் தையலில் ஓட்டுத்தையல் போட்டு ஒரு கோடு முடித்திருக்கிறாள்.

தமிழில் படிக்க இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுக்க எண்ணி மீண்டும் உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்து என்று தொடங்கி ,போன முறை வாங்கிவந்த 5 ம் வகுப்பு (ஆங்கிலமீடியம் குழந்தைகளின் ஏடு)அறிவியல் தமிழ் புத்தகத்திலிருந்து பாடங்களை வாசிக்கத்தொடங்கி இருக்கிறாள். அறிவியலும் தமிழும் ஒரே நேரத்தில் அவள் அறிந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. வானவில் தோன்றுவது எப்படி? கூட அதில் வருகிறது :)

வீட்டில் நடக்கும் கட்டிட வேலைகளை கூர்ந்து கவனித்து, லெண்டர் போடுவது எப்படி ? நிறங்களை கலக்குவது எப்படி ? சுவற்றில் வண்ணமாக்குவது எப்படி? என்று அறிந்துகொண்டுவருகிறாள்.

இதில் ஒரு அறைக்கு மட்டும் எதிர் எதிர் பக்கத்துக்கு அடர்த்தியான வண்ணம் அடிக்க வேண்டும் என்கிற அவள் கோரிக்கையால் நல்ல சிகப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தோம் . அடித்து முடித்தவுடன் அதன் நிறம் முகத்தில் அடிப்பது போலவும் அதன் மணம் ஆளைத்துரத்துவது போலவும் இருப்பதால் .. தனக்கு கிடைக்கப்போகும் புது அறையில் அடர்த்தி குறைவான நான் முதலில் தேர்ந்தெடுத்த வண்ணத்தை அடித்துக்கொள்ள எண்ணி இருக்கிறாள்.

என்னம்மா ஒரு பக்கம் அடித்ததுமே பயம்மா இருக்கே- நான்
அதனால் என்னம்மா- மகள்
இல்ல இன்னோரு பக்கம் வேற அடிக்கனுமே
அடிச்சுக்கோ அதனால் என்ன நல்லாத்தானே இருக்கு
( அடிச்சிக்கோ என்றால் இது என் அறை இல்லையே என்கிற மாதிரி இல்லை சவுண்ட் ஆகிறது.. அவ்வ்)

இன்னும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை பாடிப்பயிற்சி எடுப்பது , இசைவகுப்பு பாடல்களை தினமும் பாடிப் பயிற்சி செய்வது, மாலையிலிருந்து இரவு வரை பூங்காவில் ஆட்டம் மற்றும் கொஞ்சம் கான்ட்ம்பரரி நடன வகுப்பு செய்ய வேண்டியவைகளின் பட்டியல் நீளுகிறது.



தம்பியைப் பார்ப்போம்.
சின்னப்பையன் பதிவு படித்தீர்களா? இந்த நிறத்தினால் ஆன பாகுபாட்டை நாம் தவிர்த்தாலும் வெளியில் உள்ளவர்கள் எப்படியேனும் புகுத்திவிடுகிறார்கள். பெரியமானப்பிரச்சனையாகிவிடுகிறது.
தன் நெருங்கியதோழன் பரிசளித்தது என்பதால் அன்போடு பயன்படுத்தத்தொடங்கிய பிங்க் நிற தண்ணீர் பாட்டிலை இனி கொண்டுபோகமாட்டேன் பழய ஆரஞ்சு பாட்டிலை ஜெயந்தி ஆண்ட்டி வரும் போது கழுவி வாங்கிவை என்று சொல்லிக்கொண்டிருந்தான். மறந்து போனேன் வழக்கம்போல.. தானே ஒரு நாள் ஆண்ட்டியிடம் கொடுத்து கழுவி வாங்கிக்கொண்டான்.
என்ன விசயம் என்று கேட்டால்..
’அது எனக்கு வேணாம் அது கேர்ள்ஸ் பாட்டில்
யாருடா அப்படி சொன்னா
என் ப்ரண்ட் சொன்னான்..’

நீதி உணர்ந்து ,
ஒருகுளியலறைக்கு நீலமும் மற்றொன்றுக்கு பிங்கும் அடித்துவிட்டோம்.
---------------------
அம்மா நீ என்னைத்திட்டறே..இது பேட் மேனர்ஸ்..
நீ தானேடா திட்டவைக்கறே..

ஹய்யா அம்மாவை பேட் மேனர்ஸாக்கிட்டேன்..


------------------
அப்பா : இன்னிக்கு மாதிரியே நாளைக்கும் நல்ல பையனா இருக்கனும்
பையன் : நான் எப்ப நல்லா இருந்தேன் இன்னிக்கு?
(நம்ம சொன்னா கூட அவன் ஒத்துக்கமாட்டான் போலிருக்கே)
-----------------------------

ஆச்சி தாத்தா தொலைபேசும் போது எப்படி இருக்கே என்று கேட்டா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கனும் என்று சொல்லிக்கொடுத்திருப்பதால், அவங்க நல்லா இருக்கியா என்று கேட்கும் முன்பே..
நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க..?

--------------------------
தமிழை ஒழுங்கா பேசுடா என்றால் நாக்கு தமிழ் வராதுன்னு சொல்ரான்..
என்னோடதுக்கு 'நாவோடது' என்றும் சொல்வதுண்டு .
எதிர்வீட்டில் விளையாடிவிட்டு ஹிந்தமிழ் சில நேரம் இப்படி தெலுங்குத்தமிழாகிறது.
------------------
three letter வார்த்தைகளைப் படிக்க முயற்சி செய்கிறான். தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதுகிறான். லெட்டர்களின் உருவங்களை வைத்துக்கொண்டு நாங்கள் வார்த்தை உருவாக்கும் விளையாட்டு விளையாடுவது உண்டு.
-----------------------------------
before , after எண்களுக்கான ரயில் விளையாட்டை விளையாடி வருகிறோம்.
அவனுடைய எண் 54 என்று சொன்னால் முன்போ பின்போ எந்த எண் வேண்டும் என்று கேட்டுவிட்டு நான் எஞ்சினாகவோ அவன் எஞ்சினாகவோ ஆகி அந்த ரயில் ஸ்டேசனை விட்டு செல்லும். தவறாக சொன்னால் ரயில் கிளம்பாது.

February 25, 2010

சொந்த அம்புகள்


எங்கோ நிகழ்ந்ததாம்
மரணங்களை
செவியோரமாய் வாங்கியபடி
உறைபிரித்து உள்ளே தள்ளிய
ஒருசதுர ஒயின்சாக்லேட்
எவருடனோ எவரோ பெற்ற
வெற்றி எக்களிப்பு குரல்கள்
ஓசை நரம்புகளைத் தொடுகையில்
கசப்புணர்வாய் நாக்கடியில்
தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்

இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்
தனதல்லாத துயரங்களும் இன்பங்களும்
தீண்ட முடியா புற்றுக்களாய்
சூழ வளர்த்திருக்கும் தவங்கள்
தனக்கான துயரதினத்தில்
வெட்கம் துறந்து
வேற்றுக்கரம் பற்ற
புற்றின் மேலாக நீண்டிருந்தது.

ஈழநேசனில் வெளிவந்த என் கவிதை.

February 19, 2010

நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்



இன்று மணநாள் காணும் மை ப்ரண்ட் அனுவின் இந்த பத்திரிக்கை படிக்கும் போதே மிக நெகிழ்வாக இருந்தது. முக்கியமானதொரு வாழ்வின் நிலையில் அத்தனை பேரையும் நினைத்துபார்த்து வாழ்த்தும் இம்மனப்பாங்குடைய தம்பதிகள் என்றென்றைக்கும் இனிமையான வாழ நாம் எல்லாரும் வாழ்த்துவோம்.

February 15, 2010

A page from my teenage diary

பகிரப்படாத டைரிப்பக்கங்களைப் பகிர சந்தனமுல்லை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் டைரிக்குறிப்புக்களில் நுழைந்தபோதும் சரி , அமிர்தவர்ஷினி அம்மாவின் படித்தபோதும் சரி அந்த பதின்மங்களின் காலச்சுழலுக்குள் கொஞ்சநேரம் சிக்கிக்கொண்டேன். சிறுவயதில் டைரி எழுதும் பழக்கம் இருந்ததில்லை. ஆனால் எழுதத்தொடங்கிய காலத்தில் ”not allowed to watch" என்ற வாசகத்துடனே தான் என்னுடைய டைரியும் தொடங்கியது. எதோ கொஞ்சம் கிறுக்கி இருக்கிறேன்..


நடிகை ராதா என்றால் அத்தனை ப்ரியமாக கட்டிங் சேகரித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் வீட்டில் சர்க்குலேசன் புக் தான் . இதற்காகவே தோழிகள் வீட்டுக்குப் போய் புத்தகங்களிலிருந்து கட்டிங்க் கொண்டுவருவேன். பொங்கல் வாழ்த்து அட்டையென்றாலும் ராதாதான் வாங்குவேன். இல்லாவிட்டால் நதியா. உடைகளுக்கெல்லாம் நதியாவைப்போலவே அனைத்தும் மேட்சிங்காக தேடி வாங்குவேன். தோடுக்கு மேட்சிங் பார்ப்பதில் மேட்சிங் ப்ளவுஸ் கூட எந்தப் பெண்ணும் என்னை விட சீக்கிரம் வாங்கிவிடுவாள். நன்றாக நினைவிருக்கிறது, ஒரு மெருன் கலர் மிடி இருந்தது என்னிடம் அதற்கு மேட்சாக நான் வாங்கிய தோடைப் பார்த்துவிட்டு என் கணக்கு டீச்சர் எப்படித்தான் இவ தோடுவாங்குவாளோ என்று சொல்லி மத்த டீச்சரிடம் எல்லாம் என்னை அழைத்துக் காமித்துக்கொண்டிருந்தார்கள்.

என்ன அலங்காரம் செய்தாலும் சோடாபுட்டி ( எனக்கு பதின்மத்தில் கிடைத்த பட்டப்பெயர்) ஒன்று குறுக்கே தடை செய்துகொண்டிருந்தது. அடிக்கடி ஞாபக மறதியாக எங்காவது வைத்து அந்த கறுப்பு ப்ரேம் உடைந்து கொண்டே இருக்கும் . அதும் கண்ணாடியின் காது தான் அடிக்கடி உடையும். பள்ளிக்கு சீக்கிரம் கிளம்பி கடை திறந்ததும் ஒட்டிக்கொண்டோ அல்லது வேறு காது போட்டோ கண்ணாடியை சரி செய்து போட்டுச்செல்வேன்..

என் வீட்டுக்கருகில் என் பள்ளித்தோழிகள் எப்போதுமே இருந்ததில்லை. அதிலும் நெருங்கியத்தோழிகள் வீடுகள் எல்லாம் ஊரின் மற்ற கோடியிலேயே இருந்தது. ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தோழி மணிமேகலையின் வீட்டுக்கு செல்வதாக கிளம்பிவிட்டேன். எனக்கு சைக்கிள் கிடையாது அப்போது. மதிய வெயிலில் நடந்தேன் நடந்தேன் நடந்துகிட்டே இருந்தேன். எப்படியோ அவள் வீடு சேருகிற வரை திக் திக் தான். முதன் முறையாக தோழி வீட்டுக்கு சென்ற நினைவை என்னால் மறக்கவே முடியாது. பள்ளியோடே தன் படிப்பை நிறுத்திவிட்ட முஸ்லீம் தோழியின் கல்யாணத்திற்காக முதன் முதலாக நானும் என் தோழி பாலாவும் பஸ்ஸில் அம்பகரத்தூர் வரை பயணப்பட்டதும் வித்தியாசமான அனுபவம்.

கவலையின்றி திரிந்த காலம் அந்த 17 வரை தான்.. பள்ளியில் நாங்கள் மூவர் கூட்டணியாக இருந்தோம். விளையாட்டு திடலின் இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரம் வரை தோள் மேல் கையாக வலம் வருவோம்.
-------------------------
அம்பிகா சொன்னது போல உண்மைகளைப் பகிரமுடியாததால் டைரியை டைரியாக பயன்படுத்தாத மேதை நான்..
அவைகள் எல்லாம் எம்.எஸ் உதயமூர்த்தியின் வரிகளும் , சில சிறுகதைகளின் அடிக்கோடிடக்கூடிய பகுதிகளும், என்னைப் பாதித்த கவிதைகளும் என நிரம்பிய பக்கங்கள். அவற்றின் வரிசையை இப்போது வாசிக்கும் போது வருடங்களின் போக்கில் நிகழ்ந்த விசயங்களுக்கும் அந்த பிடித்தமான பகிர்வுகளாகப் பகிரப்பட்டவைக்கும் ஒரு தொடர்பு தெரிகிறது.

’முகம்’ - ம.ப.சித்ரா
இந்த கதை என்னை மிக பாதிச்சிருந்திருக்கும் போல.. பெண்ணிய வாத பிரதிவாதங்கள் செய்யத்தொடங்கியகாலமாக இருந்திருக்கவேண்டும்.. அக்கதையிலிருந்து சில வரிகள்..

\\உடல் முழுக்க மின்சாரம் பரவ .. என்ன இது ? எங்கே என் முகம்? அதற்குபதில் அவன் முகம் ..உற்றுப்பார்க்க அப்பாவின் முகம்.. இத்தனை நாளாய் பாத்து ரசித்த முகம் என்னுடையதில்லையா..? அம்மாவிடம் ஓடி அம்மா என் முகம் எங்கே ? அம்மா ’போடி பைத்தியம்’ என சிரித்தபடி கடந்தாள்.

அவனுக்குத் தெரிந்திருக்குமோ? அவன் என்முகம் பார்த்துத்தானே விரும்பி இருப்பான் .
என் முகத்தை காணவில்லை உங்களுக்கு தெரிகிறதா?
உனக்கென்று முகமா? ஏது அப்படி ஒன்று ?
அப்படி என்றால் நீங்கள் முதலில் பார்த்தது..
என் முகத்தைத்தான் பார்த்தேன். அது அழகாக ப்ரதிபலிப்பதே, என் தேடல்.

நீங்கள் என் முகத்தை ப்ரதிபலிக்கவில்லையே?
எப்படி ப்ரதிபலிக்கமுடியும் உனக்கென்று முகமே இல்லாதபோது? “நான் இல்லாத உன்னை எப்படி விரும்ப இயலும்?

என் முகம் வேண்டும் உடைந்த முகமூடி துண்டுகளில் எத்தனையோ தலைமுறை முகங்கள். இத்தனை காலமாக மூகமூடியின் அழுத்தத்தில் இருந்த முகம் நசுங்கி பொலிவின்றி , எப்படியும் இது என் முகம் பூச்சுக்கள் இல்லாத சொந்தமுகம். இனி அழகுபடுத்துவேன். //
---------------------------------
ஒருகவிதை
---------
தனித்தனியே

ஒரு பறவையின் சிறகுகள்
பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்
சிறகுகளின்றிப் பின் வந்த பறவை
ஒரு இசையின் குழைவில்
லாவகமாய் தன் சிறகுகளை
தன்னோடு இணைத்துக் கொண்டது
பறந்து பறந்து
பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றிப் பறக்கப் பறவைக்கும்
கூட் வந்த சூட்சுமம்
என் மனதில் விரிந்தபோது
துவண்டு கிடந்த என் மனதில்
ஒரு பூ மலர்ந்தது. - - பசவய்யா
-----------------------------------------
’மென்மை’ என்கிற மேலாண்மை பொன்னுசாமியின் கதையில் ஒரு பிரிகேடியர் எப்படி ஸ்டேப்பிளர் பின்னை மடக்கி காகிதத்தில் மடித்து குப்பையில் போடுகிறார் என்பதை வைத்தே கதை . அதை டைரியில் எழுதி வைத்திருக்கிறேன். எழுதிப்படித்தால் மனதில் பதியும் என்பது போல இன்றுவரை நான் நான் மிககவனமாக பின்களை மடக்கி அது யாரையும் காயப்படுத்தாத வண்ணமே போடுகிறேன்.

தொடருக்கு இவர்களை அழைக்கிறேன்.
யாழினித் தோட்டம் யாழினி
தெக்கிக்காட்டான்

மலைநாடன்







.

February 2, 2010

தில்லியில் பதிவர் சந்திப்பு

தி்ல்லியில் இதற்கு முன்பு தேசிய சந்திப்பு என்று மூன்று பேர் கொண்ட மாநாடு நடத்தி இருக்கிறோம். சந்தித்த மற்ற இருவரும் (மங்கை மற்றும் சென்ஷி) தில்லியை விட்டு சென்றுவிட்டார்கள்(நான் காரணமில்லப்பா). அயன் கார்த்தி மீண்டும் வருவதாக தைரியமாக சொல்லி இருக்கிறார். பிப்ரவரிக்கு மேல் மீண்டும் தில்லி பதிவராவார் என்று நினைக்கிறேன் . புதிதாக சிலர் எழுதுகிறார்கள். விக்னேஷ்வரி, லாவண்யா போன்றவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தாலும் மற்றவர்களையும் இணைத்து ஒரு சந்திப்பு நடத்த எல்லாருக்குமே ஆசை என்று தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே சந்திப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது பதிவரும் வடக்குவாசல் பத்திரிக்கையாசிரியருமான திரு. பென்னேஸ்வரன் தன்னுடைய அலுவலகத்திலேயே நடத்தலாமே என்று கூறினார். குளிர் வாட்டிக்கொண்டிருந்தபடியால் ஒரு பாதுகாப்பான இடம் என்று உடனேயே ஒத்துக்கொண்டோம். அனைவருமே ஆர்வமாக கலந்து கொண்ட ஒரு அறிமுகக்கூட்டம் இது.

சரியான நேரத்திற்கு முன்பே வந்து விட்டார் வெங்கட் நாகராஜ் . நான் எப்போதோ கூகிள் செய்து எதையோ தேடியபோது இவருடைய பதிவு கிடைத்தது. தமிழீஸ்ல் மட்டுமே இணைந்திருக்கிறார் என்பதால் தவற விட்டிருக்கிறேன். எளிமையான அவர் வலைப்பூ தொடர்ந்து படிக்கத்தூண்டியது.

எம். ஏ.சுசீலா அவர்கள் பழக எளிமையானவர்கள் கூட இளமையானவருமாக இருக்கிறார். ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர். தொலைவிலிருந்து கூட்டத்திற்காக வந்து கலந்துகொண்டு இனிமையாக எங்களுடன் கலந்து பேசினார்.

உயிரோடை லாவண்யா தன்னைப்பற்றிய அறிமுகத்தை அழகாக முன்வைத்தார். கூடவே அகநாழிகை மற்றும் அவருடைய கவிதை புத்தகத்தின் கடையும் வைத்தார். நல்லவேளையாக புத்தகக்கண்காட்சி போலவே தள்ளுபடியும் வழங்கினார்.

விக்னேஷ்வரியின் கணவர் யோகி மொழி புரியாவிட்டாலும் ஒரு யோகியைப்போல அந்நேரம் அமைதியாக அமர்ந்து ரசித்தார். விக்னேஷ்வரி புதியதாக ஆரம்பித்திருக்கும் துறை சார்ந்த தொடரில் மேலும் பல விசயங்களைப் பகிர்வார் என்று நினைக்கிறேன்.

மோகன்குமார் போட்டோகிராபி இன் தமிழ் பதிவு நடத்தும் போட்டியின் மூலம் தெரியவந்தார். அவர் மனைவி விஜயலக்‌ஷ்மியும் கலந்து கொண்டார்கள்.

மற்றும் ச.வீரமணி என்னும் பதிவரையும் தொடர்பு கொண்டிருந்தோம். அவர் தாம் தமிழ்நாட்டிற்கு சென்று இருப்பதால் வர இயலாதென்று தெரிவித்திருந்தார்.

வடக்குவாசல் பென்னேஸ்வரன் அவர்களின் விருந்தோம்பல் சொல்லி முடியாது. இருக்க இடமும் தந்து செவிக்குணவு நேரத்தில் வயிற்றுக்கு தேநீரும் மற்றும் பலவகையான பிஸ்கட்டுகளும் தரும்படி தம் அலுவலகத்து பணியாளர்களிடம் பணித்திருந்தார்.

தன் அனுபவங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார். எழுத்துலகும் இன்றைய இலக்கியமும் கொண்டிருக்கும் அபாயங்களைப் பற்றி உரையாடினார்.

ப்ளாக் எழுதுவதும் பின்னூட்டம் பெறுவதிலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய ஒருவருக்கொருவருடய கருத்துக்களைப் பரிமாறி ஐயம் தீர்த்துக்கொண்டோம் என்று நினைக்கிறேன்.

இன்னும் சில பதிவர்கள் எங்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் அடுத்த முறை ஒன்றிணைக்க உதவுவதாக பென்னேஸ்வரன் கூறினார். எல்லாருக்கும் ஜுகல்பந்தி என்கிற இசையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் வடக்குவாசலின் இலக்கியமலரைப் பரிசளித்திருந்தார்.அவருக்கு நன்றி.