April 18, 2013

காட்மண்டு – A mirror in the sky


Kathmandu a mirror in the sky
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் அதிகவித்தியாசமில்லையென்பதால் இக்கதையை இந்தியத்தன்மையோடு நாம் உணர்ந்துகொள்ளலாம். திரைப்படத்தை இசியார் பொலைன் என்னும் ஸ்பானிய பெண் இயக்குனர் இயக்கி இருக்கிறார். தன்னார்வ ஆசிரியப்பணி செய்ய காட்மண்டுவிற்கு வந்தவர், கல்வியாளர் விக்டோரியா சுபரைனா. .ஆசிரியப்பயிற்சி மற்றும் கல்விமுறைகளைப்பற்றி ஆய்வுகள், உடல்மொழி பற்றிய பாடங்கள் எனப்பலவற்றை பயின்ற Victoria Subirana தன் வாழ்வின் 25 ஆண்டுகளை நேபாளத்தில் எளியமக்களுக்காக செலவிட்டிருக்கிறார். Vicki Sherpa, a teacher in Kathmandu” என்கிற அவருடைய சுயசரிதையை அடிப்படையாக்கொண்டு அமைக்கப்பட்ட கதை.ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் 2011 ல் வெளிவந்த திரைப்படம்.

நேபாளத்தில் பள்ளிக்கல்வியின் மோசமான நிலை மற்றும் தண்டனை அளிக்கும் விதங்களைத் தவிர்த்து மாண்டிசோரி முறை போன்ற குழந்தை மையக் கல்வித் திட்டங்களைக் கொண்டுவரவிரும்பும் ஆசிரியை லயா. கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்காக பள்ளி தொடங்கும் முயற்சியில் ஆசிரியைக்கு நேரும் பல இடர்பாடுகளின் நடுவில் நமது நாடுகளின் ஏற்றத்தாழ்வுகளையும், ஊழல்களையும் ,பெண்ணடிமைத்தனத்தையும் கூடவே  அவருக்கு எதிர்பாரதவிதத்தில் அமையும் அன்பான வாழ்க்கையையும் அவ்வாழ்க்கைக்கும் குறிக்கோளுக்கும் இடையிலான போராட்டத்தையும் சொல்லும் கதை. ஒருபக்கம் நேபாளத்தின் நகரவாழ்க்கையின் வேறுபாடுகளும் மறுபக்கத்தில் அமைதியும் அழகும் அன்பும் மிகு மலைக்கிராமமும் பள்ளத்தாக்குகளும் கதைப்பயணத்தில் உண்டு.
“I wanted to tell the learning process of a woman, her journey by another culture, how it comes to arrogance, bump into this new society, but eventually learns to understand and respect rather than prejudge “says Bollaín .
லையாவாக வெரோனிகா செகுயி , (ஷர்மிளா) சௌம்யதா பட்டாரை, (நொப்ரு ஷிரிங்) ஷிரிங்
மற்றும் முனா தமி சங்கீதா தமங்க்
தனக்கென சில மாணவர்களையும் ஒரு உதவியாளராக ஷர்மிளாவையும் பெற்றுக்கொண்டு தான் வேலை செய்த பள்ளியிலேயே ஒருவகுப்பை தன் வழிமுறையில் நடத்த துவங்குகிறார் லயா.. வழக்கமாக குடிசைப்பகுதிகளில் களமிறங்கி வேலைசெய்வதென்றால் குளிப்பாட்டுதலில் இருந்து துவங்குவது போலவே, ஒரு சிறுவனின் தலையில் பேன் நிறைந்திருப்பதாகக் கூறி முடிதிருத்துபவரை அழைக்கிறார். அதை கவனிக்கும் ஷர்மிளா கோவத்தில் உன் நாட்டில் இருப்பவரிடமும் இதே போல நடப்பாயா? என்று கேட்கும்போது லயா தானும் கற்றுக்கொள்ளும் பாதையில் தான் இருக்கிறோம் என்று உணரத்தொடங்குகிறாள். சில கிழமைகளில் பிறந்தகுழந்தைகளுக்கு முடிநேர்ச்சைகள் இருந்ததால் அவர்களின் மதநம்பிக்கையை மதிக்காததாகக் கூறி சில பெற்றோர் பள்ளியில் வந்து பிரச்சனைசெய்கிறார்கள். லயாவின் சார்பாக பெற்றோர்களிடம் ஷர்மிளாவே அவர்களின் நம்பிக்கைக்காக பரிகாரம் செய்கிறோம் என்று பேசி சமாதானம் செய்துவைக்கிறாள்.
பரிகாரம் செய்கிற நாளில் ஷர்மிளா தான் திருமணமான நாளிலிருந்து நான்குவருடங்களாக சிவனுக்கு அபிஷேகம் செய்து குழந்தைவரம் வேண்டுதலைக் கூறுகிறாள். கோயில் வாயிலில் காத்திருக்கநேர்கையில் அங்கே பிச்சை எடுக்கும் சிறுவர்களைக் கண்டு லயா வேதனைப்படுகிறாள். அவர்களின் குடியிருப்புக்கு நேரில் சென்று வந்த பின் அவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை ? அவர்களின் நிலை பல நூறுவருடங்களாக இப்படித்தான் என்பதை எப்படி ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு நீ சொல்லமுடிகிறது? கல்வி கற்றுக்கொடுப்பது பற்றிய உனது கருத்து என்ன? கல்வியளிப்பது என்பது ஒருவர் சுதந்திரமாக அவர்கள் என்னவாகவேண்டுமென்று முடிவெடுக்க வாய்ப்பளிக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இப்படியே இருக்கவேண்டும் என்று மதம் அல்லது ஜாதி எதுவாயினும் எப்படி கட்டாயப்படுத்தமுடியும் ? என ஷர்மிளாவிடம் கேட்கிறாள்.
ஷர்மிளாவுக்கு தன் மதத்தின் சில பழக்கவழக்கங்கள் மாறுபாடாக இருந்தாலும் தன் குடும்பத்தின் பார்வையிலிருந்து தன் வளர்ப்பின் வழியிலிருந்து முழுவதுமாக அதை வெறுக்கமுடியாத நிலையில் இருப்பதைத்தான் அவளுடைய வெற்றுவாதங்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் இயலாமல் விசா முடியும் நிலையேற்படும்போது தன் குறிக்கோளுக்காக மட்டுமே ஒரு திருமணத்தையும் செய்துகொள்கிறாள். யாரென்று அறியாமலே திருமணம் மற்றும் வசதிக்கென்று அமைத்துக்கொள்ளும் திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. துறவி ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு நல்ல மனிதன் ஷிரிங் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கிறான். எதற்காக என்னைத்திருமணம் செய்கிறாய் ? என அவள் கேட்கும் பொழுது நீ செய்கின்ற வேலை நிறைவு பெற என் உதவி உனக்கு தேவைப்படுகிறது. அந்தக்குழந்தைகளைப்போலத்தான் நான். நீ அவர்களுக்கு செய்கிற சேவையைத் தொடர என்னாலான உதவி என்று சொல்கிற அன்பானவன். தோழமையுடன் துவங்குகிறது அவர்கள் வாழ்வு. அந்தத்தோழமை ஒரு காதலாகவும் மலர்கிறது.
அந்த வாழ்க்கைத்தோழனுடைய சொந்த கிராமத்துக்கு நீண்ட தூர நடைப் பயணம் மேற்கொள்ளும் போது ஷிரிங் ”என்னுடைய தாத்தா அடிக்கடி என் வாழ்வு அந்த வானத்தில் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.. (மை மிரர் இன் த ஸ்கை) வாழ்வில் உன் இடம் எது? ”எனக்கேட்கிறான் அவளால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. பணத்திற்காக கஷ்டப்படும்போதும் இந்த வேலைகளை நீ உன் மதத்துக்கிற்காகவா அல்லது அரசியல் காரணத்திற்காகவா ஏன் செய்கிறாய் என்றக் கேள்விக்கும் அவளால் சரியாகச் சொல்லமுடியவில்லை..
பள்ளியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு புதிய பள்ளி தொடங்குகிறாள். பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு இலவச உணவு அளிப்பதாக ஷர்மிளா வாக்குறுதி கொடுத்து அழைத்துவருகிறாள். அந்தப்பள்ளிக்கு வருகின்ற ஒரு சிறுமி தன் பெயரைத்தொலைத்துவிட்டு தன் தம்பியைச்சுமப்பவள் என்றே தன் பெயரைக்கூறுகிறாள். கண்ணாடி முன் அமர்ந்து தொலைந்த தன்னைத்தேடும் அந்தச்சிறுமிக்கு மீண்டும் விமலா என்கிற அவளைக் கண்டடைய உதவுகிறாள்.
தொடர்ந்து குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் இருக்கின்ற பின்னடைவுகளுக்கு குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகளேக் காரணம் என்று அறிகின்ற லயா குழந்தைகளின் தாய்மார்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய நினைக்கிறாள். கணவனோ உன்னால் எல்லாவற்றையும் எப்படி செய்யமுடியும் என்று மலைக்கிறான். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்கு அவளுடைய குறிக்கோளின் தீவிரம் புரிபடவில்லை. மேலும் தன் தந்தையின் உடல்நிலை மோசமடைவதால் தன் கிராமம் நோக்கி பயணிக்கிறான்.
ஷர்மிளாவின் நிலையோ குழந்தை இல்லாததோடு இதுபோன்ற தாழ்த்தப்பட்ட குழந்தைகளுடன் இருப்பதால் அவர்களின் குடும்பத்துக்கு கெடுதியை துர்சகுனத்தை மேலும் கூட்டுவதாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறாள். ஷர்மிளா ஜோசியம் பார்ப்பவரிடம் இருவருடைய எதிர்காலத்தை கணிக்க முயல்கிறாள். ஷர்மிளாவுக்கு ஆண்குழந்தையும் லயாவிற்கு தன் முயற்சியில் வெற்றியும் உறுதி என்ற அவரின் நம்பிக்கை வார்த்தை கிடைக்கிறது.
பணம் ஏற்பாடு செய்ய தன் நாட்டிற்கு திரும்பச்செல்லும் போது லயா தன் துணையை அழைக்கிறாள். அவனோ தந்தையின் உடல்நிலை மற்றும் தன் ஊர் இதுதான், தன் வாழ்வு இங்குதான் என்று குறிப்பிட்டு தன் மனநிலைக்கு அவளையும் கொண்டுவர முயல்கிறான். உனக்கு குடும்பம் முக்கியமில்லையா.. உனக்கு இந்தப்பள்ளி மட்டும் தான் வேண்டுமா.. நம் வாழ்க்கை என்ன ஆவது ?நீ திரும்ப ஊர் செல்வதையும் நான் விரும்பவில்லை எனச்சொல்லும் ஷிரிங்கின் முன் , பள்ளியும் நம் வாழ்க்கை இல்லையா? என்று அவர்களின் வாழ்வின் பேதம் அவளைக் குழப்புகிறது.
தன் ஊர் சென்று அங்கிருந்து ஷிரிங் க்கு கடிதங்கள் எழுதும் போது அவள் அவனுடைய கேள்விக்கான பதிலை எழுதுகிறாள் இவ்வாறு..” என் வாழ்வு காட்மண்டுவில் அந்தக் குழந்தைகள், ஷர்மிளா மற்றும் உன்னுடன் இருக்கிறது. ” ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்திற்கான முழு ஏற்பாட்டுடன் அவள் திரும்ப வந்து பள்ளியின் ஒவ்வொரு நிகழ்விலும் தன் வாழ்வின் மகிழ்ச்சியை உணர்கிறாள்.
பிரியமாணவியான குசிலா குழந்தைக்கடத்தல் முறையில் இந்தியாவிற்கு சென்று பாதிக்கப்பட்டு திரும்பிவந்ததும் அவளை அவள் குடும்பத்தினர் ஏற்காதபோது அவளைத் தன் பள்ளியில் தன்னுடனே அழைத்து வந்து அவளுடைய முழுகவனத்தையும் கொடுக்கிறாள். ஷிரிங் தனிமையை உணர்கிறான் .அவளை விட்டுப்பிரிந்து தன் மலைக்கிராமத்திற்கே செல்ல முடிவெடுக்கிறான்.
ஷர்மிளா தன் குடும்பத்தினரின் பேச்சுக்களை எல்லாம் மீறி வேறு திருமணம் செய்யாமல் தனக்கு பலவிதத்தில் துணையாக நின்ற கணவனுக்கு பெண்குழந்தையைக் கொடுப்பது சரியில்லை என்றும் அதனால் அவள் வாழ்வு இன்னும் போராட்டத்துக்குள்ளாகும் என்றும் நினைத்து அதனை அழிக்க நினைத்து தன் வாழ்வையே அழித்துக்கொள்கிறாள்.
கதையின் தொடக்கத்தில் பெண்களை மதத்தின் பெயரில் தூய்மையாக்க என்று இருட்டறையில் வைத்திருப்பதைக் குறிப்பிடுகிறாள் ஷர்மிளா. ஷர்மிளாவின் மூலம் லயாவிற்கு ஒரு பாடம் சொல்கிறது வாழ்வு. ஷர்மிளாவை பிடித்து வைத்திருக்கின்றவை அவளால் உடைக்கமுடியாத அறியாமைச் சங்கிலிகள் . அவள் தன் முடிவை அறிந்தவளாக எழுதிய கடிதத்தில். அறியாமையிலிருந்தும் வறுமையிலிருந்தும் வெளியே வர உதவும் சாவியை அளிப்பதே கல்வி. வெளியேற உதவுவது போலவே உள்ளே செல்லவும் ..நான் இருட்டறையில் நுழைந்துவிட்டேனோ அல்லது ஒரு போதும் வெளியேறாமலே வாழ்க்கையைத்தொலைத்தவளோ.. ஆனால் நீ வெளியில் இருக்கிறாய். இன்னும் பலரை இருட்டறையிலிருந்து வெளியேற்ற நீ உன் வாழ்வை சரியான பாதையில் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.





நன்றி பண்புடன் இணைய இதழ்