December 31, 2007

இனியதாய் அமையட்டும் 2008

எத்தனையோ ஆசைகள் குறைவில்லாத ஆசைகள் . வருடா வருடம் ஏறிக்கொண்டே போகும் ஆசைகள்.. எல்லாம் நிறைவேறிடனும் என்கிற பேராசையும் கூட. உங்களிடமும் இருக்கும் ஆசைகள் கனவுகள் நிறைவேற இந்த 2008 ஒரு இனிய வருடமாக இருக்க வாழ்த்துக்கள். 2007 எனக்கு நிறைவான வருடமாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி.

பரிசுகள் என்பதை பெற்று பலவருட இடைவெளிக்கு பிறகு 2007 ல் தான் பரிசுகளின் சுவை உணர்ந்தேன். அன்புடன் கவிதைப்போட்டியில் புத்தகப் பரிசில் என் தேர்வான 1. துப்பறியும் சாம்பு என் சிறுவயதில் நான் ரசித்த ஒரு தொடர் . இப்போது மீண்டும் வாசித்து ரசிக்கிறேன்.
2.காந்தியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை கொத்தமங்கலம் சுப்பு கதைகளாக எழுதி இருக்கும் புத்தகம் என் குழந்தைகளுக்கு சொல்வதற்காக வாங்கினேன் அவர்களுக்கு வாசித்து சொல்லவேண்டும்.
3.மிருதுளா நாகராஜனின் எம்ப்ராய்டரி புத்தகம் அதில் கொஞ்சமேனும் பழகிப்பார்க்கனும்.


பதிவுகள் எழுதுவதற்கு இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்டது . அடுத்த வருடம் அவ்வப்போதாவது எழுதிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஆசை.
சிநேகப்பறவைகளே!
புன்னகையோடும் புதுமை சிந்தனையோடும் , அள்ளக்குறையாத அன்போடும் வரவேற்போம் புத்தாண்டை.....

December 14, 2007

பொற்கோயில் அமிர்தசரஸ் ஸ்பெஷல்-5

அமிர்தசரஸ் சென்ற முக்கிய காரணம் பொற்கோயில் பார்ப்பது தான். சீக்கியர்களின் முக்கியமான புனிதத்தலம் . உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து போக நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு "குரு ராம் தாஸ்" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம். அந்த குளத்தின் நடுவில் தான் இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோயில் இருக்கிறது.
இக்கோயிலில் நுழையும் முன் ஆண்களும் பெண்களும் தலையை துணியால் மூடவேண்டும் என்பது அவர்கள் மத வழக்கம் என்பதால் பெண்கள் சேலையோ துப்பட்டாவோ கொண்டு முக்காடிட்டு கொள்வார்கள். ஆண்கள் அங்கே வாசலில் வைக்க்ப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு இருக்கும் பல வண்ணத் துணிகளால் தலையில் குல்லா போல கட்டிக்கொள்வார்கள். வாசல் பகுதியில் காலை சுத்தப்படுத்திக்கொள்ள தண்ணீர்
ஓடிக்கொண்டே இருக்கும் படி குழாய்கள் அமைத்திருக்கிறார்கள்..


உள்ளே புனித தீர்த்தகுளத்தில் குளிக்க வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றது.. குறைந்த வாடகையில்தங்கும் அறைகள் இருக்கின்றன.





இக்கோயிலை காலையில் ஒரு முறை யும் இரவில் ஒரு முறையும் பார்த்தால் தான் நிறைவாகத் தோன்றுகிறது எனக்கு.. காலையில் ஒரு முறை நின்று நிதானித்து கோயிலின் உள்ளே சென்று நடுநாயகமான பொற்கோயிலின் ஹர்மன்ந்திர் எனப்படும் இடத்தில் புனித புத்தகமான க்ரந்தசாஹிப் வாசிக்கப்படுவதை பார்த்துவிட்டு வரலாம். பின்னர் அங்கேயே தொடர்ந்து நடத்தப்படும் லங்கர் கானா எனும் இலவச உணவு அளிக்கும் அறைக்கு செல்லலாம்.


தட்டு , தண்ணீர் குடிக்க ஒரு கிண்ணம் தால் எடுக்க ஒரு ஸ்பூன் கையில் தந்து விடுவார்கள். உள்ளே தொடர்ந்து உணவு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.. இரு கையாலும் ஏந்தி தான் அவர்கள் தரும் ரொட்டியை வாங்கிக்கொள்ளவேண்டும் . தால் மிக அருமையாக இருக்கும். உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தால் தட்டுகளை கிண்ணங்களை கழுவ பெரிய ஹால் இருக்கும்.



அங்கே இரும்பாலான பெரிய பெரிய சிங்க்குகள் ஒன்றில் சோப்பு நுரை இன்னொன்றில் தண்ணீர் அலச ..பின்னர் மீண்டும் மீண்டும் அலச வரிசையாக தண்ணீர் நிரப்பிய சிங்க்குகள். நாம் சாப்பிட்ட தட்டுகளை வண்டியில் போட்டு அவர்கள் அங்கே கொண்டு செல்வார்கள்.
விருப்பமிருப்பவர்கள் வேண்டுதலைப்போல அங்கே சென்று அந்த வேலையில் ஈடுபடுவார்கள். போன முறை நான் நினைத்துக்கொண்டேன் முடியவில்லை..இம்முறை போனபோது நானும் என் மகளும் அங்கே சென்று சிறிது நேரம் தட்டு கிண்ணங்களை அலசி எடுக்கும் பணியில் சேர்ந்து கொண்டோம். சமைக்கும் இடத்திலும் உதவி செய்யலாம் என அறிந்தேன்.


பின்னர் இரவில் ஒரு முறை கோயிலின் உள்ளே சென்று மேல் மாடிவரை சென்று மீண்டும் ஒரு முறை க்ரந்தம் வாசிப்பதை தரிசிக்கலாம். ஆங்காங்கே சிறு சிறு புத்தகங்களோடு ஜபித்தபடி இருப்ப்வர்களைக்காணலாம்.

குளத்தில் தண்ணீரை தெளித்துகொள்ள முற்படும் போது கீழே சிந்திவிடும் தன்ணீரை ஒரு துணிகொண்டு துடைத்தப்படி இருப்பார்கள். எல்லாம் வருகின்ற பக்தர்கள் தான்.. கோயில்பணி செய்து கடவுள் அருள் பெற நினைக்கிறார்கள்.

இரவில் குளத்தில் தகதகவென பிரதிபலிக்கும் பொற்கோயிலை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது மனதில் அப்படி ஒரு அமைதி வந்து சேருகிறது.


கிரந்த புக்கத்தை இரவில் வேறொரு அறை யில் கொண்டு சென்று வைத்துவிடுவார்கள் மீண்டும் காலையில் அது ஹர்மந்திருக்கு வரும். அந்த நிகழ்ச்சி நம் ஊரில் சாமியை பல்லாக்கில் கொண்டுசெல்வது போலவே இருக்கும்.. 9.45 இரவு வாத்திய இசையோடு பல்லாக்கில் புத்தகத்தை மூடி கொண்டு செல்வார்கள். பிறகு கதவு சாத்தப்படும்.

இத்தொடரை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

November 20, 2007

லவகுசா,துர்கையானா அமிர்தசரஸ்ஸ்பெஷல்-4

அமிர்தசரஸ் தொடர் 1,2,3
ராம் தீர்த் என்கிற இடம் அமிர்தசரஸிலிருந்து சௌகன்வான் சாலையில் 16 கிமீ தூரத்திலிருக்கிறது இங்கே தான் வால்மீகி ஆசிரமத்தில் சீதைதன் மகன்கள் லவாகுசாவைப் பெற்றெடுத்தாளாம். வால்மீகி ராமாயணத்தை எழுதிய இடமும் இது என்று சொல்கிறார்கள்.


மிகப்பெரிய குளம் அதை சுற்றியும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன.இப்போது பூஜ்ய மாதா என்கிற வயதான அம்மா பெயரால் குளக்கரை
யில் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன .





லவாகுசாவின் பிறப்பிலிருந்து வளர்ப்புவரை பொம்மைகளால் செய்யப்பட்ட காட்சி கண்ணாடி ஓவியங்கள் என்று இப்போது தான் தயாராகிறது. குகை போன்ற ஒன்றில் அழகான காட்சிகள் செய்துவருகிறார்கள் பின்னாளில் இதுவும் ஒரு நல்ல சுற்றுலா தலமாகிவிடும்.






மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை. வைஷ்ணோதேவியின் குகைக்கோயிலைப்போன்ற மாடல்கள் தான் எத்தனை விதம். ஒரு சுண்டெலியின் வாயில் குகை இன்னொருகோயிலில் முதலையின் வாய் தான் குகை வாயில். குழந்தைகள் குதித்தபடி உள்ளே ஓடுவதும் ஆடுவதும் என்று ஆனந்தம். குளத்தில் பொரி போட்டு கொஞ்சம் மீன்களோடு விளையாட்டு.




வால்வீகி ஆசிரமத்தில் ஒருவர் சாம்பல் மடித்து கொடுத்துக்கொண்டிருந்தார் பக்கத்தில் ஒரு ஹோம குண்டம் அவரைப்பார்த்தால் முஸ்லீம் துறவி போலக்கூட இருந்தார் வாய்விட்டு எதையோ மந்திரம் முணுமுணுத்தபடி இருந்தார் அதனால் ஒன்றும் கேட்க இயலவில்லை. அங்கெல்லாம் நம் ஓட்டை ஹிந்தியும் கிராமத்தாளுகளிடம் செல்லுபடியும் ஆவதில்லை என்பது வேறு விசயம்.


நவம்பர் மாதம் பௌர்ணமி நாளில் விழா நடக்குமாம்.. 4 நாட்களுக்கு.அங்கே குளிப்பதற்கு ஒரு லட்சம் பேர் வருவார்களா ம்.அத்தனை பெரிய குளம் தான் இந்த படத்தை பாருங்களேன் சிறப்பு பேருந்துகள் இருக்குமாம் அப்போது . ஆனால் சாதாரண நாட்களில் பேருந்துகளைக்கண்களில் காண்பதே அபூர்வமாகத்தெரிகிறது.அமிர்தசரஸில் உள்ளூர் வாகனங்கள் மிக மோசம். எல்லாரும் புகைக்கக்கும் வாகனங்களோடு அதிவேகமாக ஓட்டுகிறார்கள். சின்ன சின்ன சந்துகளில் கூட வளைத்து நெளித்து, ஆனால் இடித்தால் சண்டைப்போட்டு அந்த இரு நாட்களில் பார்க்கவில்லை அது அப்படித்தான் என்று போய்க்கொண்டிருந்தார்கள்.



துர்கையானா தீர்த் இது இன்னொரு பொற்கோயில் போன்ற தோற்றம் தருகிறது.. இக்கோயில் அமிர்தசரஸிலேயே தான் இருக்கிறது ஆட்டோவில் 150 ரூபாய் பேசிக்கொண்டு 4 அல்லது 5 இடங்கள் ஒரு நாளில் பார்த்தோம்.தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கிருஷ்ணன் கோயில் எப்போதும் அங்கே பஜன் நடந்த வண்ணம் இருக்கிறது. தங்க கோபுரம் நிறைவு பெறவில்லை தங்கம் தானம் செய்யக்கோருகிறார்கள்.இத்தீர்த்ததில் குளிக்க நோய் போகும் என்று நம்பிக்கை .. கொய்யா கனிகள் வைத்து பூஜை செய்வார்களாம்.. இப்படத்தை பெரிதுசெய்து இந்தி தெரிந்தவர்கள் கதையைப் புரிந்துகொள்ளுங்கள்.. இங்கே (130 வருடங்கள் என்று ஞாபகம்..)சியமாளா தேவிக்கோயில் இருக்கிறது..






பூஜ்ய மாதாவின் கோயில் இன்னொன்று அமிர்த சரஸிலேயே ஒரு வைஷ்னோ மாதா கோயில் இது நிஜமாகவே தவழ்ந்து செல்லும்படி ஒரிடத்தில் வருகிறது பிறகு தன்ணீர் காலை நனைக்கும் படியான குகைக்குள் போய் பார்க்கவேண்டும் சாமியை.. ஒரிஜனல் வைஷ்ணோ தேவிகோயில் போக இன்னும் வாய்ப்புகிடைக்கவில்லை..கோயிலில் பெங்களூர் கெம்ப் போர்ட் சிவன் கோயில் போல எல்லா சாமியும் இருக்கிறார்கள் அதில் நம்மூர் சாமிகளும் உண்டு.. மீனாட்சி , ரங்கநாதர் போன்று சில தெய்வங்கள்.

November 18, 2007

விதையாய் வந்து விழுந்த சிறுமுயற்சி

நன்றி என்கிற ஒரு கவிதைப் பதிவுடன் ஆரம்பித்த என் சிறுமுயற்சி வலைப்பதிவு ஒரு வருடம் நிறைந்து நிற்கிறது. நான் 15 நவம்பரில் எழுதி இருந்தாலும் அது தமிழ்மணத்தில் காட்டப்பட்டது நவம்பர் 18 தான்.. இதோ
அந்த சிறப்புமிக்க நிகழ்வின் புகைப்படம்.. :)

நன்றி , வன்முறைமனிதர்கள் , யாருக்கு போர்வேண்டும்? இவை மூன்றும் தான் அன்று சேர்ந்தார்ப்போல தமிழ்மணத்தில் வகைப்படுத்தாதவை பகுதியில் காண்பிக்கப்பட்டது.



மீள்பதிவு போடத்தெரியாம அந்த பதிவை டேட் மாத்தி எல்லாம் போட்டுப்பாத்ததில் அது இப்போது வேறு தேதியைக்காண்பிக்கிறது . பின்னூட்டங்களில் லக்ஷ்மி என்று இருக்கும்.. முத்துலெட்சுமியா 30 பதிவுக்கு பின்னர் தானே மாறினேன்.





என் முதல் ப்ளாக் அக்டோபர் 26 ஆரம்பித்தேன் அது இரு பதிவுகளோடு நின்று விட்டது.
பூங்காவில் பதிவு வந்த போதே "ஊக்கு" வித்தவர்கள் எல்லாருக்கும் நன்றி என்று சலாம் போட்டேன்....
இப்போதும் எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்.. என் சிறுமுயற்சிக்கு ஆதரவளித்து "ஊக்கு" விக்கறதுக்கு... நன்றி நன்றி.

October 30, 2007

திருப்புகழ் ராகத்துடன் கற்க..

எங்க தாத்தா அப்பா எல்லாம் முறையா தேவாரம் திருப்புகழ் பாடுவார்கள் என்றாலும் நான் முறையாகக் கற்றுக்கொ ள்ளவில்லை. இப்போ அதுக்கு ஒரு நேரம் கிடைச்சிருக்கு.
இங்கே தில்லியிலும்(பம்பாய் , சென்னை, கல்கத்தா இன்னும் நிறைய இடங்களில் இதன் கிளைகள் விரிந்து வருகிறது.)திருப்புகழ் அன்பர்கள் என்று ஒருகுழு
இருக்கிறது. குருஜி என அழைக்கப்படும் திரு ஏ.எஸ்.ராகவன் அவர்களின் உழைப்பில் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.

அன்பையும் அவிரோதத்தையும் தெய்வீக நெறியையும்
இசையோடு இலவசமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.நீங்களும் கேட்டு மகிழலாம் .

October 26, 2007

நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து

நேசித்த நிறங்களெல்லாம்
பிடிக்காமல் போன அந்த கணத்தில்,
மனிதர்கள் எல்லாருமே நிறம் மாறிகள்
என்றாகி
நான் சிவந்தேன்.
மயக்கும் மொழிகளெல்லாம்
நெஞ்சம் மறந்த அந்த கணத்தில்,
வார்த்தைகள் எல்லாமே போலிகள்
என்றாகி
விழி இழந்தவனின்
கம்பு விசிறலைப்போல,
வீசி வீசி நானிறைத்த சொற்களெல்லாம்
சிதறிய அறையில்
தனிமை தியானத்திற்குப் பிறகான ஒர் கணத்தில்
தேடியபடியிருக்கிறேன்,
நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து
வெளிவர எனக்கிருக்கும்
ஒரே சாவியான சில சொற்களை-

அ ச
ன் மா
பு தா
ம் ..........

October 15, 2007

அமிர்தசரஸ் -3 ஜாலியன்வாலாபாக்

ஜாலியன் வாலாபாக் பற்றி படிக்காதவர்கள் இல்லை தான். ஆனால் அங்கே சென்று வந்தால் உங்கள் மனநிலை படிப்பதைக்காட்டிலும் அதிகமான வேதனைக்குள்ளாகும். அந்த இடம் மதில்களால் சூழப்பட்ட மிகப்பெரிய மைதானம். உள்ளே செல்லும் வாயிலோ ஒரு மாருதி கார் நுழையக்கூட சிரமமான இடம் மட்டுமே .

மனிதர்களின் உரிமையை மறுக்கும் ரவுலட் சட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட கூட்டம் அது என்கிறார்கள். பைசாகி
( நம் பொங்கல் போன்ற விவசாயத்திருநாள் ) கூட்டம் என்கிறார்கள். எதுவானால் என்ன அங்கே கூடிய கூட்டம் அதிகம் ஏதுமறியாதவர்களால் குழந்தைகளால் வ்யதானவர்களால் நிரம்பி இருந்தது மட்டும் உண்மை.

ஜெனரல் டயர் இந்திய வீரர்கள் கை கொண்டே இந்த கொலைக்கட்டத்தை நடத்தி இருக்கிறான். வாசலை மறித்தபடி நின்று கொண்டு சுடுங்கள் என்று உத்தரவிட்டபின் முதலில் நடுவில் சுட்டனராம். மக்கள் சிதறி வலமும் இடமுமாக ஓட .. அடுத்ததாக வலமாகவும் இடமாகவும் சுட்டனராம். மக்கள் தரையோடு தரையாக விழுந்து உயிர் காக்க போராட தரையில் அடுத்ததாக சுட்டனராம்.

மதில்களில் ஏறி கடந்துவிடமுடியாது எனினும் அத்தனை பெரிய மதிலில் ஏறி உயிர் தப்ப நினைத்த பேருக்கும் குண்டு இருந்தது . இன்றும் அந்த மதில்கள் குண்டு துளைத்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது.
இன்று அந்த மைதானம் ஒரு நினைவுச்சின்ன பூங்காவாகப் பராமரிக்கப்படுகிறது.


அணையாத ஒரு விளக்கு எரிகிறது.

புகைப்படங்கள் காட்சிக்குவைக்கப்பட்டுள்ள சின்ன அறையின் உள்ளே நுழைபவர்க்ளின் கண்களைக்கலங்க வைக்கும் அந்த மனித உடல்களின் குவியல்களின் ஓவியம் அந்த காட்சியை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத்தருகிறது.

டயரை க் கொன்ற உத்தம்சிங் பற்றி படிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட என் மனதில் நின்றது ரத்தன் தேவியின் கலங்கவைக்கும் கதை தான்.

ரத்தன் தேவி சொல்கிறார்... "" நான் அந்த நிகழ்ச்சி நடக்கும் போது வீட்டில் இருந்தேன். என் கணவர் அங்கே சென்றிருந்தார் . துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும் நான் இரு பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன்.. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் யாருக்கும் வெளியே வர பயம். கூட வந்த
பெண்களை திருப்பி அனுப்பிவிட்டு இரத்தவெள்ளத்தில் குவியல் குவியலாக கிடந்தவர்களில் நான் என்கணவரைத் தேடினேன்.

உறவினரைத்தேடி வந்த ஒருவரின் உதவியோடு என் கணவரை நகர்த்தி வைத்தேன். அவர் தோள்களில் உறவினரின் உடலை எடுத்து சென்றார் . என் வீட்டிலிருந்து யாரையாவது கட்டில் கொண்டு வரும்படி பணித்தேன் . யாரும் வரவில்லை. இரவெல்லாம் ஒரு மூங்கில் குச்சி கொண்டு நாய்களிடம் இருந்து என் கணவர் உடலை க் காப்பாற்ற முயற்சித்தேன்.ஒருவர் அவர் காலை எடுத்துவிடும்படி கூறினார். இரத்த வெள்ளத்தில் இருந்த அவருடைய ஆடையை தூக்கி காலை சரி செய்தேன்.

அருகில் 16 வயது சிறுவன் ஒருவன் முனகினான். நான் அருகில் சென்றதும் குளிர்கிறதா என்று கேட்டேன் . அவன் இல்லை எனக்கு தண்ணீர் வேண்டும் என்றான் அந்த மைதானத்தில் தண்ணீருக்கு எங்கே போவேன். என்னை விட்டு போகாதீர்கள் என்றான். நானும் என் கணவர் உடலை எடுத்து செல்லாதவரை எங்கேயும் செல்லமுடியாது இங்கேயே இருப்பேன் என்று சொன்னேன்.
எங்கேயும் முனகல்கள்.. இரத்தத்தின் வாடை. இருட்டு .நான் மட்டும் தனியே உட்கார்ந்து இருந்தேன். அந்த இரவினைப்பற்றி
எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அதை விளக்க வார்த்தைகள் இல்லை.. ""
படிக்கும்போதே கண்கலங்கியது. எத்தனை கொடூரம் அந்த இரவு.

சொந்த கச்சேரியில் தேவ் நிறைய படம் போட்டிருக்கார்.
அந்த கிணறு குண்டுகளுக்கு பயந்து குழந்தைகளை இடுப்பில் இடுக்கியபடி குதித்த பெண்கள் .. ஆண்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் உயிரைக்குடித்த கிணறு.
கொஞ்சம் கற்பனை கலந்தது தான் திரைப்படங்கள் என்றாலும் இந்த காட்சியை முடிந்தால் பாருங்கள்.

October 7, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)

அமிர்தசரஸ் செல்லுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது ஷானே பஞ்சாப் ரயில் , வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. குளிரூட்டப்பட்ட அறையின் பழுப்பு நிறக்கண்ணாடி வழியே இதமாகவே தெரிந்தது சுட்டெரிக்கும் வெயிலும். தாமதமாக கிளம்பிய ரயில் வண்டி அரைமணி நேரம் தாமதமாகவே சென்றடைந்தது. இறங்கிய உடனே யே சாமான்களோடே வண்டி பேசினோம் வாஹா பார்டர் செல்வதற்கு. ஆட்டோ என்றால் 250 கார் என்றால் 400, 450 என்று பேரம் பேசி செல்லலாம். 28 கிலோமீட்டர்ஸ்.

வாஹா பார்டரில் 4.30 மணிக்கு அனுமதி அளிப்பார்கள்.
வெளியே மூவர்ணத்தில் ஐஸ் செய்து விற்கிறார் ஒருவர். சிறு சிறு பையன்கள் மூவர்ணக்கொடிகளும் மூவர்ணத்தில் அமைந்த வெயிலுக்கான நெற்றி ம்றைக்கும் தொப்பிகளும் விற்கின்றன்ர் .


முழு நிகழ்ச்சிகளின் வீடியோ 20 30 ரூபாய்க்களுக்கு கிடைக்கிறது . நல்ல தரமானது . 30 ரூபாய்க்கு வாங்கினால் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட எல்லாமே காட்டுகிறான் அதில் . நியாபகத்துக்கு எல்லாருமே வாங்கிச் செல்லலாம். வெளி வாயிலிலிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அதற்கும் இம்முறை ரிக்ஷா கிடைக்கிறது. சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். வழியில் மின்சாரம் செலுத்தப்பட்ட தடுப்புகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம்.



ஸ்வர்ண ஜெயந்தி வாயிலின் முன் இரு கைகள் குலுக்குவதை ப்போன்ற சிற்பம்.
எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதா தோன்றுகிறது. வாஹா அருகில் பெரிய ஊரான சுற்றுலா ஊர் அமிர்தசரஸ் இருப்பதால் அப்படி இருக்க்லாம் என்று நினைக்கிறேன். இம்முறை எங்கெங்கும் தலைகள் தான்.






நேரடி யான பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் சிறு துண்டு காட்சி தான் கீழே. கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் அவர்களின் வர்ணனைகளோடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு ஜவான் பெண்குரலில் லதா மங்கேஷ்கரின் பாடலை பாடினார் என் கண்களில் இருந்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது.. அந்த பாடலை(ம்யூசிக் இண்டியா ஆன்லைன் by anuradha ) எப்போது கேட்டாலும் இப்படித்தான்.. லதா எப்படித்தான் முழுதாக அந்த பாடலைப் பாடினாரோ ...துக்கம் தொண்டை அடைக்கும்.






இந்த முறை நம் மக்களின் அட்டகாசம் தாங்க வில்லை.. அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் காலரியில் நன்றாக வே தெரியும்..ஆனால் எழுந்து எழுந்து நின்று சரியாகவே பார்க்க விடவில்லை. ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்து கதைவை மூடிக்கொண்டு வருவதும் தான் பார்க்க வேண்டிய விசயம். கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.

மக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி கேட்டுக்கொண்டனர் மைக்கில். இல்லையென்றால் உணர்ச்சி பெருக்கில் இவர்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போடுவார்கள். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் எழுந்து ஆடுவதும் நடந்தது. இறங்கி காவலர்களின் அனுமதியோடு நடுவிலும் ஆடினார்கள் சிலர்.

பாகிஸ்தானியர் கூட்டம் குறைவென்பதால் வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். ஒரு வர் முழுவதும் அவர்களின் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருந்தார்.. அடிக்கடி சிலர் அப்படி கொடியோடு கதவு வரை ஓடி வருவதும் போவதுமாய் இருந்தனர். நம் மக்களின் நாட்டுப்பற்று இது போன்ற நேரங்களில் நன்றாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை அதை எடுத்துபோகாதே இதை எடுத்துப்போகாதே என்று.. அமிர்தசரஸில்.அதுவே பெரிய விசயமாக இருக்கிறது . லாகூரிலிருந்து பஸ் வருகிறது இல்லையா வருபவர்களை வரவேற்கும் பலகை.

6.30 வரை ஆகிறது வெளியே வரும்போது.

October 3, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்- 1(லஸ்ஸி,குல்ச்சா,தாபா)

போனவாரக்கடைசியில் அமிர்தரஸில் இருந்தேன். கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோன்றாமல் இருந்தேன்.. போகும் முன்னரே நண்பர்கள் அப்ப உங்களுக்கு எழுத விசயம் கிடைச்சிடுச்சு என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அதான் வந்தவுடன் ஒரு பதிவு போடறேன்.



193 வருசமா இருக்காம்நாங்க லஸ்ஸிவாங்கி குடிச்ச ஞான்சந்த் ஹலுவாயி கடை .. (93 ஐ தான் ஆட்டோக்காரர் சொல்லி இருப்பாரோ நம்ம இந்தி அறிவுக்கு அப்படி கேட்டிருக்குமோன்னும் ஒரு சந்தேகம்.) சின்ன எவர்சில்வர் பானையில் மோர் கடையற மிசின் பொருத்தி இருக்காங்க.. தட்டு தட்டா அலமாரியில் தயிர் அடுக்கி வச்சிருக்காங்க.தயிரோட மேல் ஆடையை தனியா எடுத்து வச்சிட்டு தயிரை உள்ள போட்டு ஐஸ்கட்டி போட்டு கடைஞ்சு பைப் பைத் திறந்துவிட்டு பெரிய்ய்ய்ய டம்ளரில் ஊத்திவைக்கிறான் சின்ன பையன்.

கடை ஓனர் ஒரு கிண்ணத்துல இருந்து வெண்ணை ஒரு உருண்டையும் தயிர் ஆடை கொஞ்சமும் போட்டு "கேவ்டா எசென்ஸ்" ( அது வாசனைக்காம் என்ன எஸென்ஸென்று தெரியல) ஊத்தி கொடுத்தார். முழு டம்ளரும் அந்த ஊருக்காரங்க அனாயாசமா குடிக்கறாங்க.

இது காலையில் இருந்து காலியான தயிர் தட்டுக்கள் மதியத்துக்குள். இன்னமும் அலமாரியில் ஒரு தட்டுக்கும் இன்னோரு தட்டுக்கும் நடுவில் இரண்டு கட்டை வைத்து (ஒட்டிக்காமல் இருக்க) அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருந்தார்கள்.
தயிரும் ஒரு கிண்ணம் நிறைக்க வாங்கி சாப்பிடறாங்க.நல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊரு காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.



அப்பறம் குல்ச்சாஹட் ராணி பாக் தெரு. இதுவும் ஒரு பேமஸான கடையாம். சின்ன கடை தான்.
இதுல சப்பாத்திக்குள்ள உருளைக்கிழங்கை வச்சு தந்தூரி அடுப்பில் போட்டு எடுக்கறாங்க. ஒரு பட்டர் சதுரத்தை மேலே வச்சுத்தராங்க வித் சென்னா மசாலா. எதோ இண்டியன் பிட்ஸா மாத்ரி இருக்கு.



கேசர்க்கா தாபா இந்த ஹோட்டல் 1916 ல் இருந்து இருக்காம். அந்த ரோட்டுக்குள்ள மத்த நாளில் கால் வைக்க இடம் இருக்காதாம். ஞாயிறு சாயங்காலம் என்பதால் பரவாயில்லை என்றார் ஆட்டோக்காரர். ஆனால் அதுவே ஒரு திரில்லிங் அனுபவம் தான் மிக சின்ன சின்ன சந்துபொந்துகளில் திறமையாக ஓட்டும் திறனிருந்தால் மட்டுமே முடியும். ஒலிப்பான் உபயோகிக்காமல் யாரும் ஓட்டுவதே இல்லை . அதிவேகம் , இடித்தாலும் யாரும் சண்டை போட்டு பார்க்கவில்லை நாங்கள். காற்றில் மாசு அதிகம்.
கடையின் சமையலறை தரையைப் பார்த்தால் சிலர் சாப்பிட மறுக்கக்கூடும்.
தரை முழுதும் ஈரம் சதசத என்றிருக்கிறது. ரொட்டி செய்பவர்கள் பெரிய மேடைகள் அமைத்து அதன் மேல் அமர்ந்து செய்கிறார்கள் அதனால் பரவாயில்லை. சின்ன சின்ன கவர்களில் தால் விற்கிறார்கள்.. வீட்டில் ரொட்டி செய்து கொண்டு தால் கடையில் வாங்கிக் கொள்வார்கள் போல. எங்கெங்கிருந்தோ இந்த கடையின் பெயரை விசாரித்து வருகிறார்கள்.



பராத்தா , ஸ்டஃப்டு பராத்தா
கொஞ்சம் தயிரில் பூந்தி போட்ட ராய்தா , முழூஉளுந்து போட்ட குழம்பு (தால் மக்கனி) சென்னா மசாலா வெங்காயம் ம் ஷாகி பனீர் இது நாங்கள் டேஸ்ட் செய்த ஐயிட்டங்கள். வீடியோ எடுக்க சமையலறை உள்ளே போன எங்களுக்கு ஒரே மரியாதை நல்லா போஸ் கொடுத்தாங்க எல்லாரும்.

September 17, 2007

நாட்டிய நாடகம் 'மித்தாலஜீஸ் ரிடோல்ட்"

ரசஜா ஃபவுண்டேஷன் ஜயா அப்பாசாமியின் பல விதமான பெண் கடவுள்களின் ஓவியத்தின்
அடிப்படையில் சந்த்யா ராமன் மற்றும் ரத்னா ராமன் இவர்களின் முனைப்பில் , நடனமணி பத்மஸ்ரீகீதா சந்திரன் ம்ற்றும் ராஷ்மி வைத்தியலிங்கம் இவர்களால் நடத்தப்பட்ட நாட்டிய நாடகம் 'மித்தாலஜி ரிடோல்ட்" தில்லியில் காமினி ஆடிட்டோரியத்தில் 15 .9.2007 நடந்தது.
அந்நிகழ்ச்சி பற்றி ஒரு பகிர்வு இங்கே.

ரேணுகாசவுத்ரி முன்னுரையில்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னாலும் பெண்களுக்கான உரிமைக்காக பேசவேண்டி இருக்கிறது அதற்காக ஆண்களே உங்களை நாங்கள் வெறுக்கிறோம் என்று நினைக்காதீர்கள். எங்களின் ஒரு பக்கத்துணையாக நீங்கள் இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம் என்று நகைச்சுவை துணுக்குகளோடு உரையாற்றினார்.

சிவன் ,பிரம்மன் , விஷ்ணு என்று புராணங்கள் எல்லாம் புகழ்வது முன்னிருத்துவதும் ஆண்கடவுள்களைத்தான். இவர்களின் நாட்டியத்தில் பெண் கடவுள் களை முன்னிறுத்தி யதாக அமைத்திருந்தார்கள்.

சந்த்யா ராமனின் குறிப்பில்... the story we have put together here is about the origins of these gooddesses. Our attempt is not to take oru viewers into a space of ritulaized worship and adoration , but to imaginatively visualize these goodesses as symbols that have liberated m renewed and celebrated female energy from the beginnings of time - all the way to now.

அம்மாவாரா என்கிற ஒரு பெண்ணிடம் இருந்து உலகம் வந்ததாக கற்பனை செய்யப்பட்டு... ஐந்து பூதங்களையும் பெண்களாக உருவகப்படுத்தி இருந்தார்கள். இருளிலிருந்து முதலில் நீர் உலகமெங்கும் நிறைந்திருந்த காட்சியை அதிருந்து ஐந்து பூதங்களான நீர் நில நெருப்பு வான பூமி பெண்கள் எழுந்து வ்ந்து ஒவ்வொருவரும் அவரவரின் இயல்புகளை நாட்டியத்தில் உணர்ந்த்தினர்.


காட்சியும் இசையும் மிக அருமையாக பொருந்தி அனைவரையும் ஒரு புது உலகத்திற்கு அழைத்து சென்றது. அம்மாவாரா நீ எங்கே எனக் கேட்டு அரற்றும் பெண் முன் தேவி தோன்று கிறாள். பின்னாலேயே எந்த தேவியோ அந்த தேவியின் ஓவியம் சிறியதாக இறங்குறது . ஒவ்வொரு தேவியாக அவள் தோன்றுவதையும் அவள் இயல்புகளை கூறுவதும் என்று அமைத்திருந்தார்கள்.

ஹூ ஆர் யூ என்றதும் நான் தான் உஷா ... என் தோழி உஷாவா இல்லையில்லை யார் நீ ? நான் தான் ஒளியின் கடவுள் உஷா .ஆ அது சூரியன் அல்லவா நீ தான் ஒளியின் க்டவுள் என்கிறாயே எங்கே நிரூபி என்றதும் பின்னால் ஓவியத்தில் குதிரை பூட்டிய வண்டியில் இருக்கும் தேவியைப்போல்வே கற்பனை குதிரை யை ஓட்டியபடி கீதா உலகெங்கும் ஒளி நிரப்பும் காட்சி கண் முன் உண்மையிலேயே நடப்பது போன்ற காட்சியாக விரிகிறது.


அனைவருக்கும் உணவளித்து அரவணைக்கும் அன்னபூரணியாக, வெறுப்பு இல்லாத உலகமாக அன்பும் காதலும் நிரம்பிய உலகமாகச் செய்யும் ரதி தேவியாக , அறியாமை இருள் போக்கும் வாக்குவாணியாக , என்று ஒவ்வொரு காட்சியாக விரிகிறது. இன்றைய பெண் கருக்கொலைகளையும் காட்சியாக்கி இருக்கிறார்கள்.


எத்தனையோ பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்று குவித்த அன்மைக்கால நிகழ்ச்சியை விவரித்து தேவியின் கோபத்தையும் மீண்டும் அவள் வரவேண்டும் என்று
"" எங்கிருக்கிறாய் அம்மாவாரா! வா!! எங்கும் தலைவிரித்தாடும் அறியாமையும் , வெறுப்பும் , ஏழ்மையும் மறைய நீ வா!! "" என்று அழுது புலம்பும் பெண் முன் தேவி மீண்டும் தோன்றி ""நான் எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கிறேன்"" என்கிறாள். இந்த விவேகா இந்த ஸ்வேதா ..போன்ற எல்லா பெண்களுக்குள்ளும் இருப்பது என் சக்தி தான் உணர்ந்து கொள்ளுங்கள் "
நானே அவள் அவளே நான் நான் யோசிக்கலாம் நான் எனக்கான முடிவை நானே எடுக்கலாம் நாம் யோசிக்கலாம் நாம் நமக்கான முடிவை எடுக்கலாம் என்ற பாடலுடன் முடிவடைந்தது. (we can dream we can think we can take our own decision )

கீதா சந்திரன் தில்லி டைம்ஸுக்கு தந்திருக்கும் சின்ன பேட்டி ... idont want to be called a femisit. often depcts women and their problems through dance but feels that the feminist tag puts me in a minority. mythologies retold is fictional account of a search for the feminine energy at the beginning of human histroy. Most myths speak of the male trinity of Bramha , Vishnu and Mahesh. but what about the role of the gooddessses?" . it s not just the myths - even today , goddesses are sacrificed . " It happeens when the female foetus is sacrificed in the womb , or when parliament refuses to give 33 per cent reservation to women . theis fictionalised account is a stinging critique of our times. this is an attempt ot bring to the youth an awerness of the absence of goddesses.

September 13, 2007

கோபால்சாமி பெட்டா மைசூர்

மைசூருக்கு பிறகு நஞ்சன்கோடு கோயிலுக்கு போனோம்... அங்கிருந்து பாந்திப்பூர் பாதையில்NH212 hangala village ஹங்காலா கிராமத்தில் ஒரு பெயர்பலகை வலது பக்கம் திரும்ப ஹிமாடா கோபால் சாமி பெட்டா என்று இருக்கும் பாதையில் சென்றால் வனத்துறை சேர்ந்த சின்ன குன்று. பாதை சிறிது கடினமானதாக இருந்ததாக நினைவு. 45 டிகிரி ஏற்றமாகவும் சில கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டதாக இருந்தது. ஆனால் அழகான குளிர்ச்சியான இடம். அடிவாரத்தில் வனத்துறையினருக்கு பணம் கட்டிவிட்டு தொடர்ந்தோம் .



பாந்திப்பூர் வனச்சரணாலயத்தின் முழுமையையும் இங்கிருந்து கண்காணிக்கமுடியுமாம்.1454 மீ உயரம் கொண்டது. எப்போதும் பனி(மிஸ்ட்) படர்ந்த் மாதிரியான குளிரிச்சி யுடன் இருப்பதால் தான் ஹிமாடா என்று அழைக்கப்படுவதாக தோன்றுகிறது.
மேலே சின்னதாக கிருஷ்ணர் கோயில். நாங்கள் போன நேரத்திற்கு எங்களுக்கு முன்னர் இரு குடும்பங்கள் இருந்தார்கள். அமைதியான இடம் .சன்னதில் போட்டு இருந்த திரையில் நெல்லை லாலா மிட்டாய் கடை என்று தமிழில் எழுத்து. உள்ளே அழைத்து கன்னடத்தில் எல்லாருக்கும் கதை சொன்ன குருக்கள் எல்லாருக்கும் துளசி தீர்த்தம் குடுத்து பூசை காண்பித்தார்.




கிருஷ்ணன் புடைவை அணிந்த மாத்ரி தோற்றம். அழகான மரம் கல்லால் இலைகளும் கிளைகளும் இடைவெளியோட ரொம்ப அருமையான சிற்பம். அவர் கதை சொன்னபடியே அந்த கிருஷ்ணனின் மேலிருந்த மரத்தின் மேல் கைவைத்தார் அங்கே ஒரு சிறு பள்ளம் . அதில் இருந்த தண்ணீரை எல்லார் மேலும் தெளித்தார். வெளியே வந்து உட்கார்ந்து இருந்த போது அவர் யாரிடமோ தமிழில் பேசினார் அப்போ அவரிடம் தமிழில் அந்த கதையை கேட்கலாமே என்று காத்திருந்தேன்.ஆனால் இப்போது கேட்ட கதை முழுதுமாக நினைவில் இல்லை மறந்து விட்டது.


மீதி வந்திருந்த குடும்பங்கள் கும்பிட்டு முடித்து அவர் அமரும் போது போய் கேட்டேன் . கிருஷ்ணனின் மேலே அந்த மரத்தில் இருந்த அந்த தண்ணீர்
எப்படி அங்கே வருகிறது என்பது தெரியாது எப்போதும் பனி நீர் அங்கே இருக்கும் என்றார். நானும் சும்மா இருக்காமல் மேலே கோபுரத்தில் எதாவ்து துளை இருக்கிறதோ என்றேன் கோபப்படாமல் இல்லையம்மா என்றார்... பனி நீர் என்றதும் ஒரு வேளை பனி தான் சேர்ந்து இருக்கிறதோ என்று நினைத்தேன்.


அந்த மலையை சுற்றியும் எத்தனையோ தீர்த்தம் இருப்பதாக சொன்னார் சரியாக இப்போது நினைவு இல்லை 31 இல்லனா 71 இப்படி..திருப்பதியில் இருக்கும் பாபம் தீர்க்க்கும் தீர்த்தத்தின் ஆரம்பம் இங்கு தான் என்றும் இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் கீழே ஒரு பாறை இருப்பதாகவும் அதில் ஒரு பூஜை செய்தால் குழந்தை பிறக்காதவர்களுக்கு பிறக்கும் என்றும் அதற்கு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார். லாலா மிட்டாய்காரர் குடும்பத்துடன் அடிக்கடி அங்கு வருவாராம்.


காகமே அந்த மலைப்பகுதியில் வராதாம். அந்த கதையும் மறந்துடுச்சு அப்பறமா கேட்டு பின்னூட்டத்தில் இடுகிறேன். வெளியே வந்ததும் உண்மைதானா என்று சுற்றி முற்றி தேடினோம் தன்னிச்சையாக என்ன தான் இருந்தாலும் படித்தால் நாமெல்லாம் கடவுளை நம்புவது குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டோம். பஸ் நிறைய ஆட்களும் சாப்பாட்டு டிரம் களும் வந்து இறங்கியது.


அங்கிருந்து மலையின் அழகு ரொம்பவும் அருமை.. இடத்தைவிட்டு வரவே மனமில்லை நாமும் சாப்பாடு கட்டி வந்திருக்கலாமோ என்று யோசித்தோம். ஆனா மக்களே சாப்பிட்டுட்டு அழகான இடத்தைக் குப்பையாக்கிடாதீங்கப்பா !!!


சற்று தொலைவில் வனத்துறையினர் கட்டும் கட்டிடம். பாதி எழும்பி இருந்தது . கீழ் பகுதியில் வெறும் தாங்கும் தூண்களும் மேலே இரு காட்டேஜ் போல இருந்தது. டூரிஸ்ட் இடமாக மாற்றவேண்டும் என்பதற்காக இருக்குமோ என்னவோ அதை விசாரிக்கவில்லை.. பைக்கிலேயே கூட ஒரு குடும்பம் வந்திருந்தது. .

September 8, 2007

அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?


அன்பைப்போன்றதொரு
கெடுதியான விசயமில்லை இவ்வுலகில்
என்கிறேன்.
புருவம் நெறித்து ஏனென்கிறாய்?
அன்போடே சேர்ந்து வருகிறது ஆசை.
ஆசையோடே சேர்ந்து வருகிறது பேராசை.
பேராசை கொண்டு வருகிறது ஏமாற்றம்.
ஏமாற்றம் கொண்டு வருகிறது சோகம்.
'ம்'என்கிறாய் மறுபேச்சின்றி.
அன்பைப்போன்றதொரு
அற்புத விசயமில்லை இவ்வுலகில்
என்கிறேன்.
அப்படியா வியந்தபடி வினவுகிறாய்?
அடக்கமுடியாத கோபத்துடன் நான் -
சரிதான் உனக்கு என் மேல் அன்பே இல்லை.
உண்மையில்
அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?

September 5, 2007

மாடர்ன் கிருஷ்ணரும் தில்லி கிருஷ்ணஜெயந்தியும்

தில்லியில் கிருஷ்ணஜெயந்தி அன்று இரவு குழந்தைகள் கிருஷ்ணனின் பர்த்டேயை அவங்க பர்த்டேயை விட சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். முப்பையில் இருந்து வந்த ஒர் பெண் வருடா வருடம் இப்படி கொண்டாடுவீங்களா என்னையும் இனிமே சேத்துக்கோங்களேன் என்று கேட்டாள் ...அப்ப மும்பையில் இப்படி பழக்கமில்லை போல என்று நினைத்துக் கொண்டேன்..



அவரவர் வீட்டிலிருந்து கிருஷ்ணனின் வித விதமான பொம்மைகளை கொண்டுவந்து சாலையோரத்தில் செங்கல்லால் வேலி போல கட்டி அதனுள் மண் நிரப்பி ஒரு ஓரத்தில் மலை ...ஆறு ஓடுவது போல என்று நம் கொலுவில் பக்கத்தில் ஊர் அமைப்போமே அது போல செய்து கோயில் கட்டுவார்கள்.


இரவாக இரவாக மெழுகுவத்தி ஏற்றி வரும் போவோர்களுக்கு பிரசாதம் தந்து உற்சாகமடைவார்கள். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரி இடமும் அலங்காரமும் அதிகமாகும்..ஒவ்வொரு வரும் விதவிதமான அலங்காரங்களுடனும் பவனி வருவார்கள்..



பெரிவர்கள் சாமி கும்பிட்டபின் ப்ரசாதம் எடுத்துக்கொண்டு கோயிலில் தருவது போலவே காணிக்கையும் தருவார்கள் அது குழந்தைகளின் சேமிப்பில் சேர்ந்து விடும்... பலர் வந்து அவர்களின் வித்தியாசமான அலங்காரமான கோயிலை பாராட்டும் போது அவர்கள் பெருமிதமாக உணர்வார்கள் .



நேற்றைய கொண்டாட்டத்தின் சில புகைப்படங்கள் இங்கே.....












கீழ் வீடாக இருப்பவர்கள் கரெண்ட் கனெக்ஷன் எடுத்து லைட் போட்டிருக்கிறார்கள்.


கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு நடந்த ஒரு பேன்சி டிரஸ் போட்டியில் சின்ன கிருஷ்ணன் செய்த ஒரு குறும்பைக் கேளுங்கள் .3 லிருந்து 5 வயதுக்கான குழுவைச்சேர்ந்த பையன் அவன் மேடையில் ஏறவேண்டுமென்றால் ஃபோனைக் குடு என்று அவன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்திருக்கிறான் . மேடை ஏறும்போது "சரி அதைக்குடுத்துவிட்டு புல்லாங்குழலை வாங்கிக்கொள்ளடா" என்றால் "அது வேணாம் போ" என்று மேடையில் மைக்கில் சொல்லிவிட்டு போன் நம்பர்களை அழுத்திக்கொண்டே கொஞ்ச நேரம் மேடையில் நின்று விட்டு வந்து விட்டான்.


ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...

August 29, 2007

நிகழ்தகவின் படி என்றேனும்

நிகழ்தகவின் படி என்றேனும்
நடந்தே ஆகவேண்டியது தானே!!
சுழற்றி அடிக்காத ஒரு சின்னத்தூரல் மழை நேரத்தில்
மலைச்சாலையின் வளைவில்
தேநீருக்கு இறங்கிய இடத்தில்
எதிர்பாராமல் நடக்கவேண்டும் அந்த சந்திப்பு
இல்லையெனில்,
ஓய்வாக அமர்ந்த படி
அலைகளின் எண்ணிக்கையை எண்ணியப்டி
இருக்கையில்
சாயலை உணர்ந்து
திரும்பி வந்து
உற்றுப்பார்த்து
எப்படியேனும் நடக்கவேண்டும் அந்த சந்திப்பு.
திட்டமிடாமல் நடக்கும் என்று
எதிர் பார்த்திருக்கும் மனம்.
சின்ன சிரிப்போடு தொடங்குமா ?
துளி கண்ணீரோடு தொடங்குமா?
அனிச்சையாய் கை பிடித்து
நலம் கேட்டு தொடங்கிடுமா?
கேள்விகளின் வரிசை
நான் முந்தி நீ முந்தி என போட்டியிட்டு ஓடிவர
அத்தனையும் பின் தள்ளி
மவுனம் ஜெயிக்குமா?

August 27, 2007

சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு

நேற்றைப்போல ஏன் இல்லை
எந்த பக்கமும் இக்கேள்வி
எழாதவரை எல்லாம் சுகமே!

.
வாதங்கள் செய் ஆனால் வார்த்தையால் வருடிக்கொடு.
உறவின் விதி விலக்கி தோல்வியில்லா தோழமை கொடு.

சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு.
ஆராவாரமில்லாத அன்பைக்கொடு.
முரண்படு ஆனால் முத்தங்களில் முடித்துவிடு.

இப்படியாக ஒரு கனவின் கதறல்களை எழுத்தாய் உருவேற்றி இருந்தாள்.


மலரின் கவிதை வாரப்பத்திரிக்கையில் வந்துருக்கு...உயிர்ப்பான கவிதைகளைத் தொடர்ந்து அனுப்பும்படி ஆசிரியரின் கடித்ததுடன் ஒரு பதிப்பு இலவசமாக அனுப்பி இருக்கிறார்கள். முகிலனிடம் சொன்னால் என்னை திட்டி தானே கொஞ்ச நாளா எழுதற என்று கேட்பான்.


மலர் நேற்றே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் முகிலனைப் பார்க்கவே முடியவில்லை பள்ளி முடிந்து வந்தால் களைப்போடு வீட்டு வேலைகளும் இரவு உணவுக்கான வேலைகளும் அவளை கட்டிப்போட்டிருந்தன. அவனாக வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள். எப்போதும் முகிலன் இரவில் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான். அப்பாவோடு தொழிலைப் பற்றி பேசுவது போல நிலைப்படியில் அமர்ந்து கொஞ்ச நேரம் பொழுதுபோக்குவான். இல்லையென்றால் சின்ன அண்ணனோடு சினிமா பத்தி பேசிக்கொண்டிருப்பான்.


யோசித்துக்கொண்டிருக்கும் போதே உலை கொதித்து வழிந்து அடுப்பை அணைத்தது.. "ஏந்த மலரு என்ன கனவு" என்ற படி சின்ன அண்ணன் வரவும் நினைப்பை அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டையா முடியும் போதே சேர்த்து முடிந்தாள். நேற்றிரவுக்கான குழம்பை சுண்ட வைத்து எடுத்து சுட்ட அப்பளத்தோடு அவள் இன்று சின்னதாய் சமையலை முடித்ததே ஒரு எட்டு முகிலன் வீடு வரை போவதற்குத்தான்.

வாசல் தட்டியைத் தாண்டும் போது அப்பாவின் இருமல் அழைத்தது. "அப்பா இந்தா சுசீலாக்கா வீடு வரை தான் "
" ம்...இருட்டி என்ன வேலையோ போ..." "மன்னார்குடி பெரிய மாமா வீட்டுல இருந்து இன்னிக்கும் போன் வந்துச்ச்சாம் சுசீலாக்கா க்கிட்டவே அப்ப விசயத்தை கேட்டுக்கோ என்கிட்ட பேச எங்க உனக்கு நேரம் " இருமலோடே முடித்தார்.

சுசீலாக்கா வாசலிலேயே டாமியோட உட்கார்ந்து இருந்தது. அக்கா முகிலன் ஊரில் இல்லயாக்கா ....

உன்னைப் பாக்கவரலியா தேடிக்கிட்டு வந்தயா இதே வேலை உங்களுக்கு என்ன சண்டை இப்ப?

அக்கா நீங்க வேற நான் என்னைக்கு சண்டை போட்டேன் அதுவா வரும் கோச்சுக்கும் திட்டும் பின்னால நான் தான் எதுக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். இப்ப என்னவோ..."

"ஆமா பெரியமாமா வீட்டுல இருந்து இன்னிக்கும் போன் வந்துச்சு அப்பா சொல்லலையா வீட்டுக்கு மருமகள்னு வந்தா படிக்க வச்சு பாத்துக்கறேன்னு சொல்றாங்க. நீயானா இதும் பின்னால சுத்திட்டு இருக்கற இது ஒன் வேலையை தூக்கி எறிஞ்சிட்டு வீட்டுல சோறு சமைச்சிக்கிட்டு வெளியே போனா இவன் பின்னாடி குனிஞ்ச தலை நிமிராம போனாலும் எதாயாச்சும் கேட்டு சண்டை போடுவான்."
உனக்கு என்னிக்குத்தான் அறிவு வரப்போதோ!"

பேசிக்கொண்டே இருக்கும் போதே நாதனோடு சைக்கிளில் வந்து இறங்கிய வேகத்தில் முகிலன் வீட்டுக்குள் கண்டுக்கொள்ளாதவனாக புகுந்தது மலரை கவலைப்படவைத்தது. நாதன் "அண்ணி வரட்டா" என்ற படி நகரப்பார்த்தான். என்ன வாம் உங்கண்ணனுக்கு என்ற போது அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை..சங்கடத்தில். "இல்லண்ணி நேத்து உங்க பள்ளிடத்துல எல்லாரும் சினிமாக்கு போனிங்களாமே அவனுக்கு நீங்க சொல்லலையாம். அது எப்படி போகலான்னு கேட்டுட்டு ஒரே புலம்பல். சரி நான் வரேன். நின்னா அடிக்கவருவான்."

"ம்..இந்தா சொல்லிட்டேன் இவனை எல்லாம் ஒருத்தன்னு நீ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறயே போ போய் கெஞ்சு...
நீ ...அங்க போனா சொல்லனும் ....இங்க போனா சொல்லனும்ன்னு.. சே போபோ ...நீ மட்டும் என்ன சொன்னா கேக்கப்போறியா என்ன? நான் படுக்கறன்பா...அங்க முகிலன் அம்மா சோறு எடுத்துவச்சிட்டு தூங்க போயிட்டு ...நீயே போட்டுட்டு சமாதானம் செய்." கோபமும் நிறைய வருத்தமுமாக சுசீலாக்கா சொல்லிவிட்டு உள்ளே போனாள்.


தட்டு முன்னாடி கைலியும் பனியனுமாக உக்காந்திருந்த முகிலன் இவளுக்காகத்தான் காத்திருந்தான். வருவா சாப்பாடு போடன்னு. ரிமோட் டை கோபத்தில் அழுத்திய அழுத்தலில் ஒரு ஒரு சேனலும் அடிச்சு புரண்டு மாறிக்கொண்டிருந்தது.

கண்ணீரோடு அவள் பரிமாற அவன் சொல்லிட்டுப் போறதுக்கென்னா அவனவன் உன் பொண்டாட்டிய தியேட்டர்ல பாத்தேன்னு கிண்டல் பண்றான் ... நான் இல்லாம் பள்ளிடம் தவிர எங்கயும் போகதன்னு சொன்னா கேக்கறயா மனுசன் மானம் போகுது.

காதல் பண்ணிய தவறை கண்ணீரில் கழுவியபடி.. சோற்றை தட்டிலிட்டு குழம்பு ஊற்றும் போது அவன் ஆரம்பித்தான்
"சரி சரி போய் சேரு வீட்டுக்கு... இருட்டுல தனியா அனுப்பி இருக்கான் பாரு உங்கப்பன்.... "


வர வர எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க இவன் வேணான்னு ...நீ பண்ணற அலும்பும் தாங்காமத்தான் போயிட்டு இருக்கு காதல ஒத்துக்கிட்ட பாவத்துக்கே பொண்டாட்டின்னு படுத்தற..
போனவாரம் என்கிட்ட சொல்லிக்கிட்டா நாலு பசங்களோட சேந்துகிட்டு பாண்டிக்கு போன. .. அப்பாக்கிட்ட பெரியமாமா பையனைக் கட்டிக்க சம்மதம்ன்னு சொல்லிடறேன்..அடுத்த வாரமும் பாண்டிக்குப் போய் பொண்டாட்டி ஓடிப்போயீட்டான்னு குடிச்சுட்டு அழு. மலர் கையில் கொண்டுபோன பத்திரிக்கையை அவன் மீது விசிறி விட்டு வந்தாள் படிச்சிட்டு நாளைக்கு சொல்லு உ ன் முடிவை என்றபடி வெளியேறினாள்.

August 17, 2007

கணக்கா கணக்குன்னா என்னாப்பா!

வழக்கமாய் போகும் பாதைதான். யாரோ யாரையோ ஏதோ ஒரு அடுக்குமாடியின் காலியான அறையில் சத்தமாய் திட்டுவது போன்ற ஒலி கேட்டது. காகம் கூட கரைய யோசிக்கும் அந்த அமைதியான மதிய நேரத்தில் நேரத்தில் சாமான்கள் இல்லாத அறையின் சுவர்களில் பட்டு எதிரொலிக்கும் குரல் திடுக்கென்று தூக்கிவாரி போட்டது. ஏற்கனவே அதையும் இதையும் போட்டு குழப்பிக்கொண்டிருந்த மனது திடுக்கென்ற உணர்வால் இன்னமும் துணுக்குற்று சாலையோரத்தில் போய்க்கொண்டிருந்தவனை கவனமின்றி
சைக்கிள் காரன் மேல் மோத விட்டது.

"என்னாண்ணே யோசனை" என்று அவன் பதமாக கேட்டது கொஞ்சம் நிதானத்துக்குக் கொண்டுவந்தது. இப்படி நண்பணும் நிதானமாக பேசி இருந்தால்
எனக்கு ஏன் இத்தனை யோசனை என்று அவனுக்குள் எண்ணம் ஓடியது.இதுவரை உதவி என்று யாரிடமும் கேட்டது இல்லை. இவன் செய்திருக்கிறான் கேக்கும் முன்னரே மற்றவர்களுக்கு . ஆனால் இவனுக்கு ஒரு நிலை இப்படி என்று வந்த போது ..ம்...யாரையும் சொல்லி குற்றமில்லை...வெயில் கூட உறைக்காமல் யோசிக்க யோசிக்க தலைக்குள் ஒரு கொதிகலன் குமிழியிட்டு கொண்டிருந்தது.



"கடை போட்டு கடன் வாங்காம லாபமாத்தான் போனது எங்க தப்பு செய்தேன். நாலு பேருக்கு நல்லது செய்தது தப்பா.. யாரும் எதுவும் சொல்வது க்கு முன்னால அவங்களுக்கு உதவின்னு போய் நிப்பேனே...இன்னிக்கு நண்பன்னு வந்து இத்தனை நாள் என் பாசமான குடும்பத்துல ஒருத்தனா நடிச்சு வாழ்க்கையில்
கஷ்டப்படறேன்னு சொன்னப்போ என்கூடவே வச்சி தொழில் கத்துக்குடுத்ததும் எல்லா பணத்தையும் அவன் பேருக்காக்கி என்னை நடுத்தெருவில் இப்படி புலம்ப வச்சிட்டானே!" ஆராத மனது ஆறாக புலம்ப அவன் வீட்டையே அவனுக்கு அடையாளம் தெரியாதவனாகத் தாண்டிப்போய் பின்னர் உணர்ந்து தலையை உலுக்கியபடி திரும்பி நடந்தான்.



நண்பனின்?? குரல் இதய அறைகளில் பட்டு எதிரொலித்தபடியே இருந்தது "இதப்பாரு உன்கிட்ட பார்டனரா சேரும் போதே சொன்னது தான் இப்பவும்.. எனக்கு சீக்கிரம் பணம் பண்ணனும் முதல்முழுசாப் போடமுடியாம தான் உங்கூட சேர்ந்தேன்.. இன்னிக்கு என் உழைப்புல பெரிசாக்கினேன் இப்ப லாபத்தை இருமடங்காக்கினப்புறம் நான் தான் அனுபவிப்பேன் நான் பாவம் புண்ணியம் உன்னை மாதிரி பார்ப்பதில்லை..."


இவன் இதயத்தை போலவே திறந்தே கிடந்த வீட்டின் வாசலில் காலனியைக் கழட்டியதுமே ஓடி வந்துக் காலைக்கட்டிக் கொண்டது அவன் மழலை. "அப்பா நீ நேத்து வாங்கியாந்தீல்ல பலூன் கவர் அதுல நான் அஞ்சு என்று விரல்களில் நான்கைக் காண்பித்து ( அவனுக்கு எண்ணிக்கையே தெரியாது சொல்ல த்தெரிந்த ஒரே எண் அஞ்சு தான் ) நம்ம பக்கத்துவீட்டு பாப்பா க்கு குடுத்தேன்பா "


"இல்லடா கண்ணா இனிமே ஒண்ணு குடு யாருக்கும் . அதுலயே பத்து தானே இருந்தது கணக்கா இருக்கனுண்டா என்னமாத்ரி அள்ளிக்குடுக்காதடா "

"கணக்கா! கணக்குன்னா என்னாப்பா !"

August 15, 2007

எண்ணுவான் செய்த கொடுமை

நம்ம பக்கத்துக்கு எத்தனை பேர் வந்து படிச்சிருப்பாங்க ன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் எண்ணுவான் கவுண்ட்டர் வச்சிருக்கறதே பதிவு எழுத ஆரம்பித்து கொஞ்ச் நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது சரி நாமளும் வைப்போம் பின்னூட்டம் போடாமல் எத்தனை பேர் படிப்பாங்கன்னு நானும் ஆர்வமா பாக்கறதுக்காக...ஒரு எண்ணுவதுக்கு உதவி செய்யற கவுண்ட்டர் வைத்தேன்....


ஒவ்வொருவரும் வேற வேற மாதிரி வைத்திருக்காங்களேன்னு அதையெல்லாம் போய் பார்ப்பதும் வழக்கம்..இப்படி ஒரு நாள் தமிழ்நதியின் எண்ணுவானை ப்பார்த்து அந்த தளத்தில் பதிந்து கொண்டு நானும் ஒரு கவுண்ட்டர் வைத்தேன்..


அப்பத்தான் கிளிக்கிளிக் தளமும் ஆரம்பித்தேன்..அதில் படத்தை போட்டதும் சர்வேசன் எதோ பாப் அப் வருது உங்க தளத்துக்கு என்று சொன்னாங்க.. என்னப்பா அப்படியான்னு ரெண்டுபேரு கிட்ட கேட்டேன் இல்லையே எங்களுக்கு வரலியேன்னதும் சரி வேற விண்டோ எதும் ஓப்பன் செய்ததில் வ்ந்திருக்கும் தவறா நினைத்துவிட்டாங்களோன்னு விட்டுட்டேன்..


அப்பறம் திருப்பியும் வருதுன்னு இன்னொருத்தர் சொன்னதும் தீபா மேடத்துக்கிட்ட கேக்கறேன்னேன்...அவங்களும் பாத்துட்டு கண்ட்ரோல் எஃப் போடுங்க பாப் ன்னு அடிச்சு பாருங்க எதாச்சும் வருதா உங்க டெம்ளேட்டுல என்றாங்க..பார்த்தேன் ஒன்னும் வரலை..என்ன லிங்க் என்று சொல்லுங்கன்னு கேட்டதுக்கு பாப் அப் வந்தவங்களே அனுப்பினப்பறம் தான் எனக்கு பிரச்சனையின் தீவரம் புரிந்தது... அய்யோ இத்தனை நாளா இல்லாம எப்படி இப்பன்னு சந்தேகத்துல மோட்டிகோ கவுண்ட்டரு மேல தான் சந்தேகம் வலுத்து எடுத்துட்டேன்..


தீபா ஆன்லைனில் வந்ததும் மேடம் மேடம் சொல்லுங்க மேடம் தப்பான சைட்டுக்கு பாப் அப் வந்தா படிக்க வரவங்க என்ன நினைப்பாங்க...என்றதும் மோட்டிகோ பத்தி கொஞ்சம் கூகிளிட்டு சொன்னாங்க அவங்க பாலிஸியே அதாங்க..உங்களுக்கு இலவசமா செய்துட்டு அவங்க பாப் அப் போட்டு தான் சம்பாதிக்கறாங்க போலன்னு...


அப்பறம் பார்த்தா இப்படி ஒருத்தர் பதிவு போட்டுருக்கார்...
நான் இது போல நம்ம பதிவர்கள் வைத்திருக்கிறார்களே அப்ப நல்லதாத்தான் இருக்குமாக்கும்ன்னு நினைச்சு பாலிஸி கொள்கை எதையும் கண்டுக்காம அப்படியே கோடை காபி பேஸ்ட் பண்ணிட்டேன்..மக்களே பார்த்து செய்யுங்க..

கோரஸில் பாடிட்டேன்

சர்வேசன் எத்தனையோ விளம்பரம் போட்டும் 60 பேர் பாடவே இல்லை.... சரி என்னால் ஆனது இந்த ஜனகனமனகோரஸ் . என் பொண்ணு அவளோட ப்ரண்ட்ஸ் ஒரு ரெண்டு பேர் இப்படி 3 பேரை சேர்த்து இந்த கோரஸில் நானும் பாடி இருப்பதால் 4 பேர் அவரோட லிஸ்ட்ல சேர்ந்ததா கணக்குப் போட்டுக்கட்டும்.



தனியாப் பாட பயந்துகிட்டு கோரஸில் பாடிட்டேன். :)


Get this widget Share Track details

August 11, 2007

எப்போதும் கோபமாவே இருப்பாங்க போல

தில்லியில் அதிகம் பஸ் மற்றும் பொது வண்டிகளில் பயணம் போவதில்லை எனவேதான் இங்கே நடக்கும் சண்டை பற்றி எழுத வில்லை..(இந்த டிஸ்கி முதல்லயே போட்டுவிட்டேன்.)விடுமுறைக்கு வரும் போது ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மூலையில் என்பதால் பஸ்களில் இரயில்களில் பயணிக்கவேண்டிய கட்டாயம்.

மதுரைபஸ் ஸ்டாண்டில் புளியங்குடி பஸ்ஸில் ஏறுவதற்கு பெட்டியெல்லாம் கொண்டு வைத்ததும் கண்டக்டர் இத்தனை லக்கேஜெல்லாம் ஏத்தாதீங்கய்யா நிக்க இடம் இருக்காது என்று வள்ளென்று விழுந்தார்..அய்யா நாங்க யார் காலையும் இடறாமல் எங்க காலுக்கடியில் வைத்துக்கொள்கிறோம் என்றபடி டிரைவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அத்தனையையும் போட்டுவிட்டு காலைத்தூக்கி அதன் மேல் வைத்து உட்கார்ந்து கொண்டோம்.


கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் ஏறிக்கொண்டே போனது...டிரைவர் ஏத்தாததைய்யா ஏத்தாதையா என்று பாடிக்கொண்டே வந்தார்..சிலர் இன்ஜின் மேல் கூட உட்கார்ந்து வந்தார்கள். அய்யா வண்டி பழசு கூட்டம் ஏறி அது நின்று போனா எனக்கு தெரியாது என்றார் டிரைவர். பஸ்ஸுக்குள்ள ரெண்டு அக்காங்க பேசிக்கிட்டாங்க..
''ஆமாக்கா அன்னிக்கு மாதிரி நின்னா எங்க போக டெப்போ என்ன இங்கன கிட்டத்துலயா இருக்கு.."
ஆமாக்கா அவர் சொல்றாரு ஆனா நம்ம ஆளுக கேக்கவா செய்யும்"


ஒரு நிறுத்தத்தில் இன் ஜின் சீட் காலியாக அடுத்து ஏறிய அம்மா பக்கத்துல உட்கார்ந்து இருந்த அத்தையை பாத்து அம்மா அப்படி தள்ளி உக்காருங்க என்றதும் அத்தை அம்மா நாங்களே நாலு பேர் மூணு பேர் சீட்டுல அந்தா அங்க போய் உக்காருங்களேன் என்று கண்ணாடிக்கு பக்கத்தில் இருந்த டப்பாவை க்காட்ட அந்த அம்மாவுக்கு கோபம் பொசுக்கென்று ஏறியதில்.
"எங்க இன் ஜின் ல யா உக்கார சொல்லுதிய ___ பழுக்கவா ? ஏன் நீங்க உக்காருறது தானே?"

எனக்கு கோபம் " அம்மா உங்கள யாரும் அதில உக்கார சொல்லல..டப்பா இருக்கே முன்னால் அதுல தான் உக்கார சொன்னாங்க...இத்தனை நேரம் எத்தனையோ பேர் இன் ஜின் மேல கூட உக்காரத்தான் செஞ்சாங்க.."

கொஞ்ச நேரத்தில் அடுத்த ஸ்டாப்பில் இன்னும் ஆள் ... கோபப்பட்டு பேசின அம்மாவை யாரோ தள்ளி விட...
" அக்கா தள்ளாதீங்க இங்கன ஏக்கனவே திட்டராக நீங்க வேற தள்ளாதீக சாஞ்சாலும் திட்டுவாகலோ என்னமோ.."
எங்களத்தான் நக்கலடிக்கிராங்க..
பஸ் ஹாரன் எங்க காதுவலிக்க அடிச்சும் வழி விடாமல் போன பையனை பஸ்ஸை நிறுத்தி "ஏலே என்ன " திட்ட ஆரம்பிக்க அவனும் விடல .....இறங்கி வாய்யா பேசிக்கலாம்"

"டிரைவர்..அண்ணே கோச்சுக்காதீங்க நேரமாச்சு வீட்டுல போய் கஞ்சி குடிக்கணும்" என்று விரட்டும் அக்காவுக்காக டிரைவர் சமாதானாமாகி "இவனையெல்லாம் விடக்கூடாது இறங்கி நாலு சாத்தனும்" என்று கோபமாகவே பஸ்ஸை உறும விட்டார் .....


இன்னொரு நாள் கோவையில் உக்கடத்தில் இறங்கறோம் ...பின்னாடி இறங்கும் ஒரு அம்மா இன்னொருத்தரை "வெரசா இறங்கினா என்ன மத்தவங்க இறங்க வேணாமா " அவ்வளவுதான் " அம்மனீ உனக்கு மேனர்ஸ் இருக்கா ஆ ...இங்க முன்னாடி இறங்கினாத்தான ...அவுங்களை தள்ளிவிட்டுட்டா இறங்க சொல்லுற்ற நீயு"

"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு" என்று அந்த ஒரு பிடி பிடிக்க சண்டை ஆரம்பித்தது..அவங்க
சண்டை ஆரம்பித்ததும் என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வந்தோமே ஒன்னும் சண்டையே காணுமேன்னு ..எப்போதும் எல்லாரும் கோபமாவே இருப்பாங்க போல...."

August 8, 2007

கைப்பேசியின் அழைப்பு


மின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்
நொடிகளைக்கூறும் முட்களின் ஒலியும்
ஓங்கி ஒலித்து
தனிமையின் இருப்பை உறுதி செய்கிறது.
கோபத்தில் தலையணைக்கடியில்
கைபேசி.
அழைக்கவே இல்லாத அது
இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?
நேற்றுவரை கூட இருந்தவன்
குறைவில்லா அன்பினை தந்தவன்
பள்ளிக்கு போய் விட்டான்.
அவன் குரலைக் கேட்பதற்காகவேணும்
யாராவது என் கைபேசி எண்ணை
தொடர்புகொள்ளக்கூடாதா ?
கைப்பேசி அழைப்பது அவன் குரலில் தானே!
ஞானி ஞானி யெஸ்பாப்பா!

August 1, 2007

வெற்றிபெற வாழ்த்துக்கள்

ப்ளாக்கர் சேவைகள் ஆங்கிலத்தில் தொடங்கி பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துகொண்டு இருப்பதாக விக்கிதளத்தில் சொல்லப்படுகிறது.பல நாடுகளில் பல மொழிகளில் எழுத ஆரம்பித்து மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த ப்ளாக் வலைப்பதிவு என்கிற ஒன்று தமிழில் தொடங்கிய பின் வளர்ச்சி இருக்கிறது தான் என்கிற போதும் எத்தனையோ கோடி மக்களுக்கு என்று பார்க்கும் போது எண்ணிக்கை அளவில் குறைவுதான்.


ரேடியோ டிவியைப்போன்று இணையதளம் இல்லாத வீடுகள் இனி இருக்காது என்கிற அளவுக்கு இப்போது நடுத்தர குடும்பங்களிலும் இணைய சேவை நுழையத்தொடங்கி இருக்கிறது. தங்கள் படிப்பிற்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் என்று தொடங்கி இருக்கும் இந்த தொழிட்நுட்ப வாசலை இன்னும் விரியத்திறந்து இணையத்தில் உலவும் மக்கள் இப்படி வலைப்பதிவுகளை வாசிக்கவும் அதன் பயனைப்பெறவும் இன்னும் சிறப்புற வலைப்பதிவுகள் உண்டாவதற்கும் வழி செய்யவேண்டும் என்ற ஆவலில் பட்டறை என்ற ஒன்று சென்னையில் (ஆகஸ்டு 5, 2007 ஞாயிற்றுக் கிழமை 09:30 - 05:30 சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் Marina Campus ) நடத்தப்பட இருக்கிறது.பட்டறை என்ற வார்த்தையின் லிங்கில் நீங்கள் பட்டறை பற்றிய மேல் விவரங்கள் அறியலாம்.


அவர்களின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். முதற்கட்டமாக அவர்கள் மாணவர்களை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தோடு இணைந்து செய்கிறார்கள். இதனால் மாணவர்கள் கவனம் இதில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பதிலிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதற்கான எல்லா வழிமுறைகளையும் திரட்டி சேவை வசதிகள் பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் நடத்த இருக்கிறார்கள். இதன் வெற்றிக்கு பின்னர் இது போன்ற பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்படலாம் . இது ஒரு பட்டறைக்கான விளம்பரப்பதிவு.

July 31, 2007

கோன் பனேகா கோரோர்பதி

என் பெண்ணோட பர்த்டே எப்பவுமே நாங்க லீவில் இருக்கும் போது தான் வரும்.அதனால இங்கே தில்லி வந்ததும் ஒரு கெட்டுகெதர் பார்டி வைப்பது வழக்கம். சும்மா எல்லாரையும் கூப்பிட்டு விளையாட்டெல்லாம் வைத்து ஜாலியா நட்பு வட்டத்துடன் இனிமையாக இருக்கும் . ஒரு மாதம் முன்னாலே இருந்தே அதற்காக தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள் மகள்.

பேப்பரை வெட்டி வெட்டித்தள்ளுவாள். அதில் சிங்கத்தை போல கர்ஜனை செய்.
பாட்டியைபோல நடி என்று இன்னும் என்ன எல்லாமோ இருக்கும்.. இந்த சிட் துண்டுகள் எல்லாம் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பாள். ஒரு பெரிய லிஸ்ட் வேறு போட்டு வைத்திருப்பாள்.அடுத்தடுத்து என்ன என்ன விளையாட்டு விளையாடப்போகிறோம் என்று. அதற்கு ஓட்டெடுப்பும் நடக்கும். அதிக பேர் ஆசைப்படும் விளையாட்டு முதலில் விளையாடப்படும்.

அவளுடைய பார்டிக்கு அவளே செய்யும் ஏற்பாடுகளை பார்த்து அக்கம்பக்கமுள்ளவர்கள் எங்கள் வீட்டு பார்டியை மேனேஜ் செய்ய அவளைத்தான் கூப்பிடணும் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எவண்ட் மேணேஜ்மெண்ட் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாம் போல.


இந்த முறை வித்தியாசமாய் அதில் ஒரு விளையாட்டு . யாருக்கு ஒரு சிட் கிடைத்ததோ அது படி அவர்கள் அமிதாப்பை போல கோன் பனேக கோரோர் பதி நடித்து காண்பிக்க வேண்டும்.

அந்த சிட்டை எடுத்த பெண் என்ன கேள்வி கேட்க என்று முதலில் முழித்தாள். நானும் முதல் கேள்வி எளிதாக இருக்கும் . எனவே சிக்னலில் எந்த கலர் லைட் போட்டால் போகலாம் என்று கேள் என்று ஐடியா சொன்னேன்.
அவ்வளவுதான் அதற்கப்புறம் அவங்க கலக்கிட்டாங்க.


அமிதாப்பாக இருந்த பெண்.: எந்த கலரில் லை ட் எரிந்தால் நீங்கள் போகலாம் என்று சிக்னலில் அர்த்தம்? ஏ.பச்சை பி. மஞ்சள் சி.சிவப்பு டி. நீலம்
போட்டியாளராக வந்த பெண்: ம்..(யோசித்தபடி) எனக்கு முதல் ஆப்சன் போன் அ ஃப்ரண்டு வேணும் சார்!
(அதற்குள் சுற்றி இருக்கிறவர்கள் எல்லா ம் அய்யோ இந்த கொஸ்டினுக்கா என்றபடி ஹோ என்று கத்த ஆரம்பித்தார்கள்)

அமி : பெண் : சரி யார் உங்க ப்ரண்டு நம்பர்?( என்றவுடன் என் பெண்ணிடம் பேச போன் போடப்பட்டது)
என் பெண் போனை எடுக்க

அமி.பெண் : ஹலோ நான் தான் கோன் பனேக கோர்ரொர் பதி யில் இருந்து அமிதாப்

என் பெண்: அய்யோ அமிதாப் நான் உங்ககிட்ட பேசனும்ன்னு எத்தனை நினைச்சிருக்கேன் உங்க படம்ன்னா எனக்கு உயிர் என்ன பேசறதுன்னே தெரியலயே ! என படபடக்க

அமி.பெண்.: சரி சரி நேரம் ஆகுது உங்கள் நண்பருக்கு உதவுங்கள்.

போட். பெண் : எந்த கலரில் லைட் போட்டால் நாம் சிக்னலில் போகலாம்.

என் பெண்: அது பச்சை தான் எனக்கு நல்லாத்தெரியும் நீ பச்சையே சொல்லு சீக்கிரம்.

போட் பெண்: ஒகே நன்றி. ஆனால் அமிதாப் சார் நான் பிப்டி பிப்டி ஆப்சன் எடுக்கறேன் அடுத்தது.
(எல்லாரும் மீண்டும் ஹோ)

அமி. பெண்.: பிப்டி பிப்டி யில் உங்களுக்கு வந்த கலர் மஞ்சள் மற்றும் பச்சை.

இப்போ என்ன சொல்றீங்க?

போட்:பெண்: இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு எதுக்கும் ஆடியன் ஸ் போல் போறேனே!
(எல்லா குழந்தைகளும் கீழே விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் இதுக்குள்)

ஆடியன்ஸ் போலுக்கு குழந்தைகள் எல்லாரும் கையில் எதையோ தட்டி கொட்டி செய்தனர்.

என் பெண்: ஆடியனஸ் போலில் 93% பச்சையும் 2% மஞ்சளும் 5% எதை சொல்றதுன்னு தெரியலன்னு வந்திருக்கு .

போட்: பெண் : அய்யோ எனக்கு குழப்பம் தீரல..வேற என்ன ஆப்சன் இருக்கு

அமி:பெண்; சாரி இனி ஆப்சன் இல்ல வெளியேறுகிறேன்னு ஒரு ஆப்சன் தான் இருக்கு.

போட்: பெண் அப்படியா சரி அப்ப கிவிட் பண்ணிக்கிறேன்.
கலே மிலோ (கட்டி பிடிச்சுக்கறது) கலே மிலோன்னு சொல்லிட்டு அமிதாப்பாக நடித்த பெண்ணை கட்டி பிடித்துவிட்டு கையை உயர்த்தி ஆட்டியபடி வெளியேறி விட்டாள் .

ஒரே கூச்சல் அட்டகாசம் . இருவருக்கும் அன்று சிறந்த ஆட்டக்காரர் விருது க்கான பரிசு முடிவில் வழங்கப்பட்டது.

July 27, 2007

நினைவுகளின் நிறங்கள்

கோலத்தின் புள்ளிகளைச் சுற்றியோடும் இழைகளென
ஆரம்பமும் முடிவும் காணமுடியாத படி
உன் நினைவுகள் பின்னி நிற்கின்றன
அழிய அழிய புள்ளிகள்
புது மொட்டுக்களென விரிகின்றன
இளங்கொடியைப்போல கோல இழைகள்
நிமிடத்தில் வளர்ந்து
புள்ளிகளுக்கு இடையில் நிரப்பிவிடுகிறது
நினைவுகளுக்கு நிறமுண்டா ?
என் வெள்ளைநிறத்து நினைவுகள்
எப்போதும் மழையோடே வருகிறது
பச்சை நிறத்து நினைவுகள்
சிதறிய வேப்பிலைகளின் வாசத்தோடே வருகிறது
சில சமயம் மரத்தின் வேர் முண்டில்
அமர்ந்திருக்கும் காட்சி கோலமாய் வாசலில்
அந்த சாம்பல் நிறநினைவுகள்
யாரோ இரண்டு வரிசைக்கப்பால் பிடிக்கும்
வெண்சுருட்டின் புகையோடு வருகிறது
இருட்டு வெளியில்
ஒளிகற்றை ஒன்று
சின்னதாய் தொடங்கி பெரியதாய் விரிந்து
வெள்ளைத்திரையில் விழும் காட்சியில்
அதோ அவளும் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள்

July 26, 2007

July 22, 2007

நன்றி! நன்றி! நன்றி!

நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது. பெறுகிறவர் தன் செயலுக்கான பாராட்டுதலைப்பெறுகிறார் அதனால் மகிழ்ச்சி.. சொல்பவர் நிச்சயமாய் அந்த செயலால் நன்மை அடைந்திருப்பார் அதனால் மகிழ்ச்சி.

எனக்கும் இப்போது நன்றி சொல்லும் நேரம் வந்துவிட்டது. தமிழ்மணத்திற்கு நன்றி. நண்பர்களுக்கு நன்றி..படித்தவர்களுக்கும் ப்டித்து பின்னூட்டமிட்டவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் தொடந்து ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றிகள் .


என் நட்சத்திரவாரம் உங்கள் எல்லாருக்கும் எத்தனை உபயோகமாக இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு எப்போதும் போல தோன்றியதை எல்லாம் பேசியே பொழுதைக்கழிக்கும் அதேமனப்பான்மையோடு எழுதித் தள்ளிவிட்டேன்.


பொறுத்துக்கொண்ட உள்ளங்களுக்கு நன்றிகள்.
நன்றி யை ச் சொல்வதில் அதுவும் உண்மையில் நமது தாய்மொழியில் சொல்வதற்கு தயக்க்ம் இருக்கிறது. கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தேங்க்ஸ் தான் . யாராவது பாதையில் வழிசொல்லி உதவினால் தேங்க்ஸ் தான். நன்றி என்றால் திரும்பி ஒரு ஆச்சரியப்பார்வை தான். தமிழிலும் சொல்ல ஆசைதான்..


இங்கே அழகான நன்றிகள் இரண்டு,

ரிக்ஷசாவில் வந்து இறங்கும் இரண்டரை வயது மகன் பணத்தைக் கொடுத்துவிட்டு சொல்லும் "தேங்க்கோ" வைக் கேட்டவுடன் அந்த இளைஞனின் முகம் மலர்ந்துவிடும்.

ஒரு வெளிநாட்டு பெண் மகாபலிபுரத்தில் பாசிமணி மாலை வாங்கியவுடன் தேங்க்ஸ் எனசொல்ல அந்த பெண் கண்கள் சிரிக்க "டேங்குஸூ மேடம் ""

சொல்ல நினைத்து சொல்லமுடியாத நன்றி ஒன்று.

அரசு வண்டிகளில் இரவுப்பயணங்களில் தூங்காமல் கவனமாக வண்டியோட்டி வந்து நம்மை பாதுக்காப்பாக கொண்டு சேர்த்த ஓட்டுனருக்கு இறங்கிய வுடன் நன்றீ சொல்ல நினைத்தது உண்டு. கிறுக்கி என நினைப்பார்களோ என்று செய்ததில்லை. (நமக்காக நாம் ஏற்பாடு செய்யும் டாக்சியோ மற்ற வண்டிகளோ என்றால் அவரை வீட்டினுள அழைத்து பணம் கொடுத்த பின் நன்றீ சொல்வது வழக்கம் தானே)

குறும்படம் எடுக்க வேண்டுமா?

நீங்கள் குறும்படம் எடுக்க விரும்புகிறீர்களா? முதல் முயற்சி என்றால் என்ன செய்யவேண்டும் என்ற தயக்கம் இருக்கிறதா ..இதோ சில வழிமுறைகள் இணையத்தில் படித்தது . நானும் ஒரு மாணவி தான் . கிடைத்த விசயத்தையும் என் அனுபவத்தையும் ,பகிர்கிறேன்.



1.நிறைய குறும்படங்களைப்பாருங்கள். டாக்குமெண்டரிகள் திரையிடப்படும் போது பெரிய திரையில் பாருங்கள். இல்லையெனில் வீடியோ கிடைத்தால் பாருங்கள்.குறும்படங்களின் வடிவங்கள் எப்படிப்பட்டது என்கிற மற்றும் அதன் எத்தனையோ வகை இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..


2.தொழிட்நுட்பத்தில் தேர்ந்திடப்பழகுங்கள். கடனோ உடனோ வாங்கி ஒரு கேமரா ஏற்பாடு செய்து அதன் தொழிட்நுட்பம் பழகுங்கள். எடிட்டிங் மற்றும் ஒலி அமைப்புகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று அதன் அதன் தொழிட்நுட்பத்தை அறிந்துகொள்ளுங்கள்.


3. ஒரு கருப்பொருளை எதைப்பற்றி எடுக்கபோகிறீர்கள் என்று முடிவெடுத்துவையுங்கள்.அது எடுக்க எளிதாக , பிடித்தமான ஒன்றாக இருக்கட்டும்.உங்கள் பகுதியில் இருப்பவரைப்பற்றியோ அல்லது வீட்டுக்கருகில் நடக்கும் நிகழ்ச்சியோ என்றால் அதிகம் பணச்செலவில்லாமல் மற்றும் அதிக நேரம் செலவு செய்து நிறைய முயற்சிக்கமுடியும்.


4. எடுத்துக்கொண்ட கருப்பொருளில் நிறைய ஆய்வு செய்து கொள்ளுங்கள்.இணையம் மற்றும் புத்தகங்களில் அதனைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதையும் உண்மையான விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.


5 .ஒரு மொத்தமான வடிவமைப்பை வரைந்து கொள்ளுங்கள். கண்மூடி யோசியுங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.


6.என்ன என்ன தேவை என்பதை குறித்துக்கொள்ளுங்கள்..கேமிரா மற்றும் உபகரணங்கள், யாரை வைத்து எடுக்கப்போகிறோம் அவர்கள் நேரம் மற்றும் அனுமதி என்ற திட்டமிடல்


7.எடுப்பதற்கான பணத்தேவை களை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.




8.படமெடுக்கத்தொடங்குங்கள். எடுக்கப்போவதை பற்றி பேசிக்கொண்டே இருக்காதீர்கள் , இந்த விசயம்தான் கனவுடன் நாளைய நம்பிக்கையோடிருக்கும் இயக்குனர்களுக்கும் உண்மையான இயக்குனர்களுக்கும் இருக்கும் வேறுபாடு.




9. படமெடுத்தபின் உள்ள வேலைகள். எந்த காட்சிகள் எப்படி எடிட் செய்யப்படவேண்டும் எது எந்த இடத்தில் வரவேண்டும்..
என்கிற எழுதியதோ வரைந்ததோ ஒரு குறிப்பு.. தயார் செய்தால் வெட்டி ஒட்ட வசதியாக இருக்கும்..நேரம் மிச்சமாகும். பின்னர் முடிவான பார்வைக்கு தயார் செய்யவும்.




10. காட்சிப்படுத்துதல் என்பது முக்கியமான ஒன்று. ..சரியான இடத்தில் சரியான நபர்களுக்கு காட்சிப்படுத்துதல் குறும்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.


-----------

நான் என் சமீபத்திய இடுகையிலிட்ட
குறும்படம் (ஒரு நாளின் துவக்கம்) ஒரு இஸ்திரி வாலாவின் குடும்பம் எப்படி ஒரு நாள் முழுதும் வீட்டுக்குவெளியே இருக்கிறார்கள் ..வீடு வீட்டுக்கு வெளியே என்பதாக திட்டமிட்டேன்..ஆனால் அதற்கு நான் அவர்களின் வீட்டிற்கு இரு முறை போகவேண்டி இருந்தது..பின்னால் அது வசதிப்படாததால் எழுத்து வடிவத்திலேயே ஒதுக்கப்பட்டது.


முதலிலேயே அவர்கள் இப்படி ஒரு வீடியோ எடுக்க அனுமதிக்க யோசித்தனர். அதுவும் அவர்களைப்போன்றோருக்கு இது எதற்காக இதனால் என்ன ஆகும் என்றெல்லாம் கூட மனதில் கேள்வி எழுந்திருக்கும்.


பின்னர் அவர்கள் வருகிற நேரம் மற்றும் வேலை யின் தன்மையும் கூட முதல் நாளே பேசி வைத்துக்கொண்டேன். அப்படி இருந்தும் நான் படமெடுக்க சென்ற போது அவர்கள் கணவர் வேறுவேலையாக் போயிருந்தார். எனவே மனைவி மகன் மகள் தான் வீடியோவில் இருந்தனர்.




முதல் முதலாக எடுப்பதால் யாரும் நம்மை பார்த்து ஏன் என்ன செய்கிறாய் என்று கேட்டுவிடுவார்களோ அவர்க்ளுகு என்ன பதில் சொல்வது என்ற கேள்விகளால் ஒரு வித தயக்கம். மனதில் எதோ தப்பு செய்வது போல் பயப்படவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் ஒரு குறுகுறுப்பு.




அதன் படத்தினை விடியோக்கேமிராவிலேயே எடிட் செய்து பின்னர் பிக்சர் பேக்கேஜ் மூலமாக அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டவுடன்.
அதற்கான பாடல் புல்லாங்குழலாக இருக்கவேண்டுமென்பதால் தேடி எடுத்த பாடலை கணினியில் பாடவிட்டு...எம்பித்ரி ரெக்கார்டர் மூலம் ரெக்கார்ட் செய்து அதனை விண்டோஸ் மூவி மேக்கரில் ஆடியோ விற்கு இணைத்தேன்.




பின்னர் டைட்டில் மற்றும் நன்றீ யும் மூவி மேக்கரில் தயாரித்து யூட்யூப் அக்கௌண்டில் வலையேற்றி அதனை எம்பெட் செய்து போட்டாயிற்று..
பார்க்கத்தான் வலைப்பதிவர் நட்பு வட்டம் இருக்கிறதே..
கருப்பொருளின் சாதாணத்தன்மை பற்றி ஒருவித கருத்து இருந்தாலும் ஒருவரை போய் சம்மதிக்கவைத்து செய்வது என்பது நடைமுறையில் கொஞ்சம் எளிதானது அல்ல.. நடிகர்களை வைத்து செய்வதானால் அதற்கு போதுமான பயிற்சியும் நேரமொதுக்குதலும் என்று போய்க்கொண்டிருக்கும்..




நான் எடுத்தபின்னர் அதனை அந்த சாமான்ய தொழிலாளிக்குடும்பம் தங்களை ஒரு சினிமா போன்ற காட்சியில் பார்த்த மகிழ்ச்சியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. இதனால் என் முதல் குறும்படம் ஒரு வகையில் வெற்றியே.

camera --- sony DVD 703E
editing with -- picture package producer 2 and
windows movie maker
audio ----music india online and mp3mymp3 software

July 21, 2007

தில்லியின் கம்பீரமான கோட்டைகள்

தில்லியென்றவுடன் எல்லாருக்கும் செங்கோட்டை நினைவுக்கு வரலாம். பழைய கோட்டையை உங்களுக்கு தெரியுமா இதன் பெயரே பழைய கோட்டை தான். புராண கிலா. இது தில்லி மதுரா ரோட்டில் பிரகதி மைதான் அருகில் இருக்கிறது.


மகாபாரத்ததில் வரும் இந்திரப்ரஸ்ததிற்கும் இந்த இடத்திற்கும் சம்பதம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.யமுனையின் கரையில் இருக்கிறது. அருகிலேயே தில்லியின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையும் இருக்கிறது.




ஷெர்ஷா சூரி என்பவர் இதனை கட்ட ஆரம்பித்து ஹுமாயூனால் தொடர்ந்து கட்டப்பட்டது. இதனுள் இருக்கும் ஷெர் மண்டல் என்னும் சிகப்பு கற்களால் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ஹுமாயூனால் நூலகமாக உபயோகிக்கப்பட்டதாகவும் , நூலகத்தில் இருந்து படிகளில் இறங்கும் போது தான் ஹுமாயூன் விழுந்து இறந்து போனதாகவும் சொல்லப்படுகிறது.
ஷெர்-மண்டல்


வடக்கு தெற்கு மற்றும் மேற்கில் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் வடக்கு வாயில் தலாகி தர்வாசா (forbidden gate) என்று அழைக்கப்படுகிறது காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதன் பாதி உடைந்த கோட்டை சாலையின் மறுபக்கத்தில் இருக்கிறது . உடைந்து போனாலும் கம்பீரமாக நிற்கும் இந்த கோட்டை இரவின் வெளிச்சத்தில் நிலவும் மற்றும் focus ligt காரணமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு.



ஒளிஒலிக்காட்சி இரவில் நடைபெறுகிறது. மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் ஹெரிட்டேஜ் வாக் என்று இருக்கிறது.தொடர்புக்கு,
INTACH DELHI CHAPTERThe Indian National Trust For Art & Cultural heritage71, Lodhi Estate, New Delhi - 110003Ph:24641304, 24692774, 24632269Email: intachdelhi@rediffmail.com



கோட்டையை ஒட்டி புல்வெளியும் மரங்கள் அடர்ந்த பகுதியும் நேரம் போக்க நல்ல இடம் . தில்லியின் எல்லாப் பூங்காவைப்போன்றே இங்கேயும் காதலர்களின் கொட்டம் அதிகம் தான். இங்கே ஒரு நீர்நிலையில் போட்டிங் போகும் வசதி இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும்.


ஹூமாயூன் டூம். இதுவும் பார்க்கவேண்டிய ஒரு இடம் தான் இதன் கட்டுமானம் உங்களுக்கு ஆக்ராக் கோட்டையைப்போல இருக்கிறதா? இது ஹுமாயூனின் முதல் மனைவி ஹாஜி பேகம் அவருக்காகக் கட்டியது.