December 4, 2012

வார்த்தைகளும் மௌனங்களும் - 2


த சீக்ரெட் லைஃப் ஆஃப் வார்ட்ஸ்(2005)-


The secret life of words - Isabel Coixet

எண்ணெய் எடுக்கும் இடத்தைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கச்சென்ற இசபெல்  ..அங்கே கிடைக்கும் வெளியுலகத்திலிருந்து பிரிக்கும் தனிமையும் அதனால் அங்கிருப்பவர்களுக்குள் உருவாகும் ஒரு நெருக்கத்தையும் வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தாராம்..

 இதிலும் சாராவே (Sarah Polley) கதாநாயகி   காதுக்கு கருவி பொருத்தி கேட்கக்கூடியவராக உணர்ச்சிகளற்ற முகத்தோடு ஒரே விதமான உணவை ஒரே விதமான வேலையை ஒரேவிதமான வாழ்க்கையை இயந்திரத்தனமாக வாழ்பவராக  சாரா  அப்படியே வாழ்ந்திருக்கிறார். சாராவுக்காகவே  இந்தப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்..

ஹன்னா ஒரே விதமான பூத் தையல் செய்வாள். ஆனால் அதையும் முடித்ததும் தூக்கி எறிந்துவிடுவாள்.. யாரோடும் பழகாமல்.. வருகின்ற கடிதங்களைப் படிக்காமல்.. காதுக்கு பொருத்திய கருவியையும் அணைத்தே வைத்து இருக்கிறாள். மௌனத்தினால் அவள் அவளைச்சுற்றிலும் வேலியிட்டுக்கொண்டு அதற்குள் வாழ்கிறாள். 

4 வருடங்களாக விடுப்பு எடுக்காமல் சரியான நேரத்திற்கு வந்து வேலை செய்யும் நீ கண்டிப்பாக விடுமுறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மேலதிகாரி வற்புறுத்தி அனுப்பி வைத்தாலும் அவளால் என்ன செய்யமுடியும் என்று அவள் ஹோட்டல் அறையில் வெறுப்புடன் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு விட்டு அழுகிறாள். 

தற்செயலாக ஒரு உணவகத்தில் காதில் விழுந்த விசயத்தை வைத்து எண்ணெய் எடுக்கும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்ற ஒருவரை தற்காலிகமாக பார்த்துக்கொள்ள நர்ஸ்  வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கிறாள். அங்கே சென்றபின் அங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும் எப்படி உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு அங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறாள். 

ஜோசப் என்கிற அந்த காயமுற்றவன் தற்காலிகமாக கண் தெரியாமல் போனவன் மற்றும் தன்காரியங்களைத் தானே செய்துகொள்ளமுடியாத ஒருவன். ஜோசப் ஹன்னாவுடன் பேசமுயற்சிக்கும் போதெல்லாம் அவள் பதில் சொல்லாமல் இருந்தாலும் ஜோசப் தானாகவே அவளுக்குப் பெயர் வைத்து தனக்கு நீச்சல் தெரியாது என்று தொடங்கி ..தன் ரகசியங்களை , தன் குற்ற உணர்ச்சியை ,தன் மனதின் கஷ்டங்களைப் பகிரத்தொடங்க கொஞ்சம் கொஞ்சமாக ஹன்னாவும் பேசத்தொடங்குவாள். 
ஹன்னாவின் தனிமைக்கு காரணம் அவள் போர்க்காலத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டது , எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் எப்படி தன் தோழி இறந்தாள். எப்படி தன் உடம்பெல்லாம் கத்தியால் கீறப்பட்டது என்று மௌனத்திலிருந்து வெளியேறி  வார்த்தைகளாக்கி சொல்லும் போது இசபெல் காட்சியை ஹன்னாவின் வார்த்தைகளின் மூலமாக மட்டுமே காட்சிப்படுத்துகிறார். 

ஹன்னா தினம் ஒரு புதிய சோப் பயன்படுத்துவதாக காட்டியபோது அது ஏன் என்று முதலில் தெரியவில்லை... அவளுடைய இறந்தகாலத்தை அழிக்க அவள் தினம் புதிய ஒன்றைப் பயன்படுத்துவதாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம்.

ஜோசப்பை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபின் ஹன்னா தன்னைப்பற்றியவிவரங்களை தராமலே திரும்பிவிடுவாள்.ஆனால் ஜோசப் அவளைத்தேடிகொண்டு வருவது ஒரு சுபமான முடிவு தான்.  படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வருகிற சிறுமியின் குரல் ஹன்னாவின் பாதிக்கப்படாத வயதின் குரலாக இருக்குமோ ? 

துக்கமோ, பயமோ நம்பிக்கைக்குரிய இடத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் போது அது மாறிவிடக்கூடியது . 



Hanna: Um, because I think that if we go away to someplace together, I'm afraid that, ah, one day, maybe not today, maybe, maybe not tomorrow either, but one day suddenly, I may begin to cry and cry so very much that nothing or nobody can stop me and the tears will fill the room and I won't be able to breath and I will pull you down with me and we'll both drown. 

Josef: I'll learn how to swim, Hann

December 3, 2012

வார்த்தைகளும் மௌனங்களும் -1




பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்கள் . ஆனால் மௌனங்களும் காக்கத் தெரிந்தவர்கள்.

இங்க்லீஷ் விங்க்லீஷ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மனசு கலங்கிப்போன அன்று இதை இவ்வளவு சின்னச்சின்ன விசயங்களோடு அழகாக காட்டமுடிந்ததன் காரணம் அது ஒரு பெண்ணால் எடுக்கப்பட்டதால் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் திரைப்படத்தைப் பார்க்கும்போது கதையில் அந்தச்சின்னச்சின்ன விசயங்களைக் கவனத்தில் எடுக்கக்கூட சில ஆண்களால் முடியாமல் போகலாம் என்றும் தோன்றிக்கொண்டிருந்தது.

ஆனால் ஷிண்டேயின் முயற்சி தோற்கவில்லை, எனக்குத் தெரிந்து விமர்சனம் எழுதிய சில நண்பர்களும் அவர்களின் சிறுகுறைகளை உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்டார்கள்.

அன்று உடனே பெண்களால் இயக்கப்பட்டப் படங்களைத் தேடிப்பார்ப்பது என்று தொடங்கினேன். இதுவரை  அந்த வரிசையில் இந்தப்படத்தையும் சேர்த்து 6 திரைப்படங்களை  பார்த்து முடித்தேன்.

.மை லைஃப் வித்தவுட் மீ (2003) - இசபெல் கோசெட் (Isabel Coixet)

My Life Without Me 


மை லைஃப் வித்தவுட் மீ ..  ஷிண்டெ யைப் போலவே இசபெல் கூட விளம்பரத்துறையிலிருந்தே சினிமாவுக்கு வந்திருக்காங்க..  எப்படியோ அவங்க படம் கைக்கு கிடைச்சுப் பார்த்துட்டமே என்று அவங்களைப்பற்றி படிச்சப்போ அவங்களும் எங்கயோ உலகத்தில் ஒருமூலையில் இருந்து பார்த்துட்டு உங்க படம் நல்லா இருந்ததுன்னு சிலர் சொல்றாங்க.. அதுவே போதும்.. எனக்கு படம் எடுக்கப்பிடிக்கும். என்று சிம்பிளா முடிச்சிக்கிறாங்க.. ரொம்பப்பேசராங்க .ஆனா எல்லாமே ஸ்பானிஷ் ல   பேட்டிக்கொடுத்திருக்காங்க.

தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்த பின் சில செயல்களை செய்யவேண்டும் என்று முடிவெடுக்கும்
ஒரு பெண்ணின் கதை. கணவனின் அன்பில் குழந்தைகளின் அன்பில் குறையேதும் காணாத ஒரு பெண் தான். ஆனா இறக்கபோகிறோம் என்கிற அழுத்தத்தை மறக்கவோ அல்லது வாழ இருக்கும் நாட்களை வேறுவிதமா வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணமோ அவள் சில வித்தியாசமான முடிவுகளையும் அதில் சேர்த்திருப்பாள். அவற்றை அவள் ஏன் செய்யவேண்டும் அல்லது ஏன் செய்யக்கூடாது என்பதற்கு
நாம் செல்லவேண்டியதில்லை. அப்படி ஒரு நிலையில் யார் என்ன முடிவெடுப்பார்கள் என்பது யாராலும் முன்கூட்டியே சொல்லமுடியாது.

இசபெல் சுபமான முடிவுகொண்ட படங்களை விட கஷ்டமான முடிவு கொண்ட படங்கள் உங்களை திரும்ப உலகத்துக்கு வரும்போது நிம்மதியா இருக்கவைக்கும்ன்னு கேலியா சொல்லிக்கிறாங்க..

இசபெல் இதுபோன்ற ட்ரைலர் ல வாழ்கிற பணக்கஷ்டத்தோடு வாழ்க்கையை நகர்த்தும் அமெரிக்கர்களைப்பற்றி சினிமாவில் இதுவரை சித்தரிச்சதற்கு மாற்றாக காண்பிக்கனும் முயற்சித்திருக்கிறதா சொல்றாங்க..

Ann: THINGS TO DO BEFORE I DIE.
Ann: 1. Tell my daughters I love them several times.
Ann: 2. Find Don a new wife who the girls like.
Ann: 3. Record birthday messages for the girls for every year until they're 18.
Ann: 4. Go to Whalebay Beach together and have a big picnic.
Ann: 5. Smoke and drink as much as I want.
Ann: 6. Say what I'm thinking.
Ann: 7. Make love with other man to see what it's like.
Ann: 8. Make someone fall in love with me.
Ann: 9. Go and see Dad in Jail.
Ann: 10. Get false nails. And do something with my hair.

 ஆன் 17 வயதில் திருமணம் ஆனவள். இரண்டு குழந்தைகளின் தாய். அப்பா சிறையில் இருப்பார். அம்மாவின் வீட்டின் பின்னால் ட்ரைலர் வண்டியில் தான் இவர்கள் குடியிருப்பு. கணவருக்கு வேலை இழப்பினால்
தற்காலிகமாக நீச்சல்குளம் கட்டும்பணி. இவளுக்கு இரவு நேரம் கல்லூரியை சுத்தம் செய்யும் பணி.

கிடைக்கின்ற கொஞ்ச நேரத்திலும் கொஞ்சம் பணத்திலும் அன்பை பகிர்ந்துக்கிற சின்னகுடும்பம்.. ஆனா வாழ்க்கையில் அடுத்த நாளைப்பற்றிய சிந்தனையோ ஆசையோ அதிகம் இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கின்ற வாழ்க்கை.  ஒரு சமயம் படத்துல வர வசனம் இது...
\\Thinking. You're not used to thinking.//

அவள் தன் கணவனை ஒரு இசை நிகழ்ச்சியில் சந்தித்ததாகக் நினைவுகூர்கிறாள். அழுதுகொண்டிருந்த அந்தச்சின்னப்பெண்ணை தேற்ற தன்னிடம் கைக்குட்டை இல்லை என்று தன் டீசர்ட்டை கழட்டி கொடுத்த அன்பானவன். என்னிடம் எதையும் கேட்டு தொந்திரவு செய்யாத அன்பானவள் என்று அவளைப்புரிந்தே இருக்கிறவன்..

அவளின் ஏழாவது எட்டாவது திட்டங்கள் ஒன்று போல் தோன்றினாலும் ஒன்றல்ல.. அதற்காக அவள் முயற்சி செய்வதாக படத்தில் காட்டப்படவில்லை. அவளின் நோயின் சோகமும் தனிமையும்.. போலவே
நிலையில் இருக்கும் இன்னோரு மனிதனின் தற்செயலான சந்திப்பு. அறையின் வெறுமையையும் அவனுடைய தனிமையும் மாற்றுவதற்கு அவளின் தேவையும் இருந்தது போன்ற ஒரு அமைப்பு.

மருத்துவரிடம் அவள் பதிவு செய்த கேசட்டுகளைக் கொடுத்து இறந்தபின் சேர்க்கக் கேட்கிறாள். எல்லாருக்கும் செய்திகளை  சேர்க்கிறாள்..எல்லாரிடமும் மன்னிப்புகளைக் கேட்கிறாள். சோகமென்றால்
படத்தில் சோகமான காட்சிகள் அவ்வளவாக இல்லை.சாவைக் காட்டவில்லை. அழுகையைக் காட்டவில்லை. ஆனால் சோகத்தை நம் இதயத்தில் உணரவைக்கும் ஒரு முகம் கதாநாயகி சாரா வுக்கு.. (Sarah Polley)

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களின் வசனங்களும் நன்றாக இருந்தது.. ஒரு நாவலை கதையாக்கியிருக்கிறார்கள் என்கிற போது அதைப்படிக்கவேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுவதாய்
வசனங்கள்.

எல்லாரும் தான் சாகப்போகிறார்கள் . ஆனால் நாள் குறிப்பிட்டபின் அதுவும் ஒருமாதம் என்றபின் அவள் சுற்றி இருக்கிறவர்களை கவனிக்க ஆரம்பிக்கிறாள். யோசிக்கவும் ஆரம்பிக்கிறாள் . டயட் டயட் என்று பாடுபடும் தோழி, லாட்டரி பணம் கிடைத்தால் என்ன செய்வேன் என்று சொல்லும் ரெஸ்டரண்ட் ஊழியர் ..எல்லாரையும் குறை சொல்லும் அம்மா ஏன் அப்படி நடந்துகொள்கிறாள்.. இதுவரை சந்திக்கத் தோன்றாத அப்பாவை சந்தித்துவிடவேண்டும் , என்னதான் வேதிப்பொருள் கலந்திருந்தாலும் சாகப்போகிற நாள் தெரியாமல் பிடித்திருக்கிறது என்று எல்லாம் வாங்கி சாப்பிடும் மக்களின் மனநிலை. யாராவது சூப்பர்மார்க்கெடில் சாவை நினைப்பார்களா என்றபடி நடப்பாள்..



சூப்பர்மார்க்கெட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக நடனமாடுவது போன்ற காட்சி..
லீ அவளைத்தூங்கும்போது கவனிக்கும் காட்சி, ஆன் ம் அவள் அப்பாவும் பேசுவது , மனைவியைப் புகழ்ந்து பேசும் கணவன்,  அவன் உறங்கியபின் அவனுக்கு லவ்யூ சொல்லும் மனைவி....லீ யும் ஆன் ம் சந்திக்கும் கடைசி சந்திப்பு... என பலகாட்சிகள் எனக்கு குறிப்பாக  மிகவும் பிடித்திருந்தது.
அவளுடைய இரண்டாவது திட்டத்திற்கு வசதியாக வந்து வாய்க்கும் பக்கத்துவீட்டு ஆன், கதை சொல்லும் காட்சியும் மிக அருமையானது..