எவரெஸ்டில் கால் பதித்த டென்சிங்கின் வரலாறு , புது இடங்களை தேடி அலைந்து சுற்றுபவர்களைப்பற்றிய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்று படித்து பார்த்து ஆச்சரியமாய் இவங்களை எது இழுத்திருக்கும் .. என்ன உணர்ந்திருப்பார்கள் .. என்று நினைத்துக்கொள்வேன்.ஆனால் உண்மையில் ரசனையான விசயம் தான்.
தோழி கேட்டாங்க .. என்னங்க விடுமுறைக்கு அல்மோரா போனீங்களாமே.. அது ஒரு கிராமமாமில்ல..
ஆமாங்க மலையில் அது நகரம் தான்..ஆனா நமக்கு கிராமம் .
அங்க போய் என்ன பாத்தீங்க?
2வது நூற்றாண்டுல கட்டின கோயில்கள். மலைஏற்றம். யாருமற்ற பாதைகளில் நடைபயணம்.
அய்யோ அது ரிஸ்க் இல்லையா?
ஹ்ம் இருக்கலாம் ரிஸ்க் இல்லாத எது இருக்கு ? வாழ்க்கையில்..
யாருகூட போனீங்க வேறெ நண்பர்கள் யாரும் வந்தாங்களா?
இல்லை நாங்க நால்வரும் தான்.
என்னப்பா போரடிக்காதா?
இல்லை அங்க தான் நாங்க நால்வரும் ஜாலியா அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் மாதிரி ஜாலியா குடும்பமா இருப்போம்..
சரி பஸ்ஸா ட்ரையினா ... எப்ப புக் செய்தீங்க சொல்லவே இல்லையே?
புக் எல்லாம் செய்யலைங்க... பேருந்து நிலையம் போனோம் பஸ் பிடிச்சு போயிட்டோம்.
அல்மோரா போகனும்ன்னு எப்படி தேர்ந்தெடுத்தீங்க? நெட்லயா பிடிச்சீங்க..
ஹ்ம் முன்னாடி நானித்தால் போனோமில்ல அப்ப அங்கருந்து ராணிகேத் அல்மோரா போகலாம்ன்னு சொல்வாங்க.. தொடர்ச்சியா போக அப்ப விடுமுறை இருக்காததால் இப்ப அல்மோரா இன்னொரு முறை ராணிகேத் போவோம்.
-----------------------
அல்மோரா போவதற்கு டில்லி ஆனந்த்விகார் இண்டர்ஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இரவில் 8 மணிக்கு ஒன்றும் 9 மணிக்கு ஒன்றும் பேருந்துகிளம்புகிறது. நாங்கள் எட்டு மணிபேருந்திற்கு சென்றோம். வெகுசீக்கிரமே கிளம்பிவிட்டோம் என்றாலும் எக்கச்சக்க ட்ராபிக் ஜாம். மூன்று பேர் சீட்களை எல்லாம் ஒத்தையாட்கள் ஜன்னலைப்பிடித்து உட்கார்ந்து கொண்டார்கள்.எதுக்கா? ராத்திரி நீட்டிப்படுக்கத்தான்.
இரவு 2 மணிக்கு மேல் தான் மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. ஐந்து மணிக்கெல்லாம் அல்மோரா வந்து சேர்ந்துவிட்டோம். தில்லியில் வெயில் அடித்துக் கொளுத்தியது. மலை நெருங்க நெருங்க குளிராடைகள் ஒன்று ஒன்றாய் அணிந்தோம். தொப்பி , மப்ளர் , க்ளவுஸ்.
நடுக்கும் குளிர் இல்லைதான். அல்மோராவில் பேருந்து நிலையம் என்பது ஒரு பேருந்து நிறுத்தம் தான். அங்கிருந்து அந்த காலை நேரத்தில் குமாவுன் ஹாலிடே ஹோமுக்கு நடந்தோம.

முன்பே பேசி வைத்திருந்தபடி அறைஎடுத்தோம்.ஹாலிடே ஹோமிலேயே சமையற்காரர் செய்து தந்த ஆலுபராத்தா சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடை.மால் ரோட்டில் ( கடைத்தெருங்க)பேருந்து நிலைய எதிரில் இருக்கும் கோவிந்த் வல்லப் பந்த் ம்யூசியம் சென்றோம். அங்கே அல்மோராவின் மிகப்பழமையான கோயில்களின் புகைப்படங்களும் செய்திகளும் சிற்பங்களும், ஓவியங்களும் என இரண்டு சிறிய அறைகளும் .. ஒரு சிறிய அறையில் கோவிந்த் வல்லப் பந்த் ன் வரலாறும் இருந்தன.

அல்மோரா பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் ஒன்றில் ஜாகேஸ்வர் கோயிலிற்கு செல்வதற்காக ஏறிக்கொண்டோம். இந்த மலைக்காரர்களுக்கு இசைமேல் எக்கச்சக்க பிரியம் .அவர்கள் மொழியாகட்டும் ஹிந்தியாகட்டும் பாட்டு கேட்காமல் இருக்கவே மாட்டார்கள்.குமாவுன் மொழிப்பாடல்களோட இசை ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் அன்றைக்கு போட்ட எல்லா ஹிந்திப் பாட்டும் செம டப்பா பாடல்கள். நீ என் முதல் மழை.. நீ என் முதல் வாய்ப்புன்னோ இல்லாட்டி நீ யாருன்னா என் இதயம் யாருக்காக இறக்கின்றதோ அவள் /அவன் . என்று போய்க்கொண்டிருந்தது.

ஜாகேஸ்வர் கோயிலை ஜோதிர்லிங்கக்கோயில் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அங்கே சிறுதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. முக்கியமான சன்னிதியில் ம்ருத்யுஞ்சர் , கேதாரேஸ்வர் ,ஜாகேஸ்வர் என்று லிங்கங்கள் உள்ளன.

வழக்கம்போல காசைக்குடுத்தால் நீயே அபிஷேகம் பூஜை செய்யலாம் , அணையா விளக்குக்கு நெய் கொடு என்று பலதும் சொன்னார்கள்.. எங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் அவர்களே ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார்கள்.
மதிய உணவாக ரொட்டி சாப்பிட்டுவிட்டு அல்மோரா செல்ல என்ன வழி என்று விசாரித்த போது .. தற்போது வண்டி எதுவும் கிடைக்காது வேண்டுமென்றால் 3 மைல் நடந்தால் கூட்டு ரோட்டில் ஜீப் கிடைக்கும் என்றார்கள்..

அழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.