July 31, 2007

கோன் பனேகா கோரோர்பதி

என் பெண்ணோட பர்த்டே எப்பவுமே நாங்க லீவில் இருக்கும் போது தான் வரும்.அதனால இங்கே தில்லி வந்ததும் ஒரு கெட்டுகெதர் பார்டி வைப்பது வழக்கம். சும்மா எல்லாரையும் கூப்பிட்டு விளையாட்டெல்லாம் வைத்து ஜாலியா நட்பு வட்டத்துடன் இனிமையாக இருக்கும் . ஒரு மாதம் முன்னாலே இருந்தே அதற்காக தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள் மகள்.

பேப்பரை வெட்டி வெட்டித்தள்ளுவாள். அதில் சிங்கத்தை போல கர்ஜனை செய்.
பாட்டியைபோல நடி என்று இன்னும் என்ன எல்லாமோ இருக்கும்.. இந்த சிட் துண்டுகள் எல்லாம் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பாள். ஒரு பெரிய லிஸ்ட் வேறு போட்டு வைத்திருப்பாள்.அடுத்தடுத்து என்ன என்ன விளையாட்டு விளையாடப்போகிறோம் என்று. அதற்கு ஓட்டெடுப்பும் நடக்கும். அதிக பேர் ஆசைப்படும் விளையாட்டு முதலில் விளையாடப்படும்.

அவளுடைய பார்டிக்கு அவளே செய்யும் ஏற்பாடுகளை பார்த்து அக்கம்பக்கமுள்ளவர்கள் எங்கள் வீட்டு பார்டியை மேனேஜ் செய்ய அவளைத்தான் கூப்பிடணும் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எவண்ட் மேணேஜ்மெண்ட் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாம் போல.


இந்த முறை வித்தியாசமாய் அதில் ஒரு விளையாட்டு . யாருக்கு ஒரு சிட் கிடைத்ததோ அது படி அவர்கள் அமிதாப்பை போல கோன் பனேக கோரோர் பதி நடித்து காண்பிக்க வேண்டும்.

அந்த சிட்டை எடுத்த பெண் என்ன கேள்வி கேட்க என்று முதலில் முழித்தாள். நானும் முதல் கேள்வி எளிதாக இருக்கும் . எனவே சிக்னலில் எந்த கலர் லைட் போட்டால் போகலாம் என்று கேள் என்று ஐடியா சொன்னேன்.
அவ்வளவுதான் அதற்கப்புறம் அவங்க கலக்கிட்டாங்க.


அமிதாப்பாக இருந்த பெண்.: எந்த கலரில் லை ட் எரிந்தால் நீங்கள் போகலாம் என்று சிக்னலில் அர்த்தம்? ஏ.பச்சை பி. மஞ்சள் சி.சிவப்பு டி. நீலம்
போட்டியாளராக வந்த பெண்: ம்..(யோசித்தபடி) எனக்கு முதல் ஆப்சன் போன் அ ஃப்ரண்டு வேணும் சார்!
(அதற்குள் சுற்றி இருக்கிறவர்கள் எல்லா ம் அய்யோ இந்த கொஸ்டினுக்கா என்றபடி ஹோ என்று கத்த ஆரம்பித்தார்கள்)

அமி : பெண் : சரி யார் உங்க ப்ரண்டு நம்பர்?( என்றவுடன் என் பெண்ணிடம் பேச போன் போடப்பட்டது)
என் பெண் போனை எடுக்க

அமி.பெண் : ஹலோ நான் தான் கோன் பனேக கோர்ரொர் பதி யில் இருந்து அமிதாப்

என் பெண்: அய்யோ அமிதாப் நான் உங்ககிட்ட பேசனும்ன்னு எத்தனை நினைச்சிருக்கேன் உங்க படம்ன்னா எனக்கு உயிர் என்ன பேசறதுன்னே தெரியலயே ! என படபடக்க

அமி.பெண்.: சரி சரி நேரம் ஆகுது உங்கள் நண்பருக்கு உதவுங்கள்.

போட். பெண் : எந்த கலரில் லைட் போட்டால் நாம் சிக்னலில் போகலாம்.

என் பெண்: அது பச்சை தான் எனக்கு நல்லாத்தெரியும் நீ பச்சையே சொல்லு சீக்கிரம்.

போட் பெண்: ஒகே நன்றி. ஆனால் அமிதாப் சார் நான் பிப்டி பிப்டி ஆப்சன் எடுக்கறேன் அடுத்தது.
(எல்லாரும் மீண்டும் ஹோ)

அமி. பெண்.: பிப்டி பிப்டி யில் உங்களுக்கு வந்த கலர் மஞ்சள் மற்றும் பச்சை.

இப்போ என்ன சொல்றீங்க?

போட்:பெண்: இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு எதுக்கும் ஆடியன் ஸ் போல் போறேனே!
(எல்லா குழந்தைகளும் கீழே விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் இதுக்குள்)

ஆடியன்ஸ் போலுக்கு குழந்தைகள் எல்லாரும் கையில் எதையோ தட்டி கொட்டி செய்தனர்.

என் பெண்: ஆடியனஸ் போலில் 93% பச்சையும் 2% மஞ்சளும் 5% எதை சொல்றதுன்னு தெரியலன்னு வந்திருக்கு .

போட்: பெண் : அய்யோ எனக்கு குழப்பம் தீரல..வேற என்ன ஆப்சன் இருக்கு

அமி:பெண்; சாரி இனி ஆப்சன் இல்ல வெளியேறுகிறேன்னு ஒரு ஆப்சன் தான் இருக்கு.

போட்: பெண் அப்படியா சரி அப்ப கிவிட் பண்ணிக்கிறேன்.
கலே மிலோ (கட்டி பிடிச்சுக்கறது) கலே மிலோன்னு சொல்லிட்டு அமிதாப்பாக நடித்த பெண்ணை கட்டி பிடித்துவிட்டு கையை உயர்த்தி ஆட்டியபடி வெளியேறி விட்டாள் .

ஒரே கூச்சல் அட்டகாசம் . இருவருக்கும் அன்று சிறந்த ஆட்டக்காரர் விருது க்கான பரிசு முடிவில் வழங்கப்பட்டது.

July 27, 2007

நினைவுகளின் நிறங்கள்

கோலத்தின் புள்ளிகளைச் சுற்றியோடும் இழைகளென
ஆரம்பமும் முடிவும் காணமுடியாத படி
உன் நினைவுகள் பின்னி நிற்கின்றன
அழிய அழிய புள்ளிகள்
புது மொட்டுக்களென விரிகின்றன
இளங்கொடியைப்போல கோல இழைகள்
நிமிடத்தில் வளர்ந்து
புள்ளிகளுக்கு இடையில் நிரப்பிவிடுகிறது
நினைவுகளுக்கு நிறமுண்டா ?
என் வெள்ளைநிறத்து நினைவுகள்
எப்போதும் மழையோடே வருகிறது
பச்சை நிறத்து நினைவுகள்
சிதறிய வேப்பிலைகளின் வாசத்தோடே வருகிறது
சில சமயம் மரத்தின் வேர் முண்டில்
அமர்ந்திருக்கும் காட்சி கோலமாய் வாசலில்
அந்த சாம்பல் நிறநினைவுகள்
யாரோ இரண்டு வரிசைக்கப்பால் பிடிக்கும்
வெண்சுருட்டின் புகையோடு வருகிறது
இருட்டு வெளியில்
ஒளிகற்றை ஒன்று
சின்னதாய் தொடங்கி பெரியதாய் விரிந்து
வெள்ளைத்திரையில் விழும் காட்சியில்
அதோ அவளும் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள்

July 26, 2007

July 22, 2007

நன்றி! நன்றி! நன்றி!

நன்றி யென்ற வார்த்தை இருக்கிறதே அது பெறுபவருக்கும் சொல்பவருக்கும் இரண்டு பேருக்குமே ஒரு மகிழ்ச்சியைத்தருகிறது. பெறுகிறவர் தன் செயலுக்கான பாராட்டுதலைப்பெறுகிறார் அதனால் மகிழ்ச்சி.. சொல்பவர் நிச்சயமாய் அந்த செயலால் நன்மை அடைந்திருப்பார் அதனால் மகிழ்ச்சி.

எனக்கும் இப்போது நன்றி சொல்லும் நேரம் வந்துவிட்டது. தமிழ்மணத்திற்கு நன்றி. நண்பர்களுக்கு நன்றி..படித்தவர்களுக்கும் ப்டித்து பின்னூட்டமிட்டவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் தொடந்து ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றிகள் .


என் நட்சத்திரவாரம் உங்கள் எல்லாருக்கும் எத்தனை உபயோகமாக இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு எப்போதும் போல தோன்றியதை எல்லாம் பேசியே பொழுதைக்கழிக்கும் அதேமனப்பான்மையோடு எழுதித் தள்ளிவிட்டேன்.


பொறுத்துக்கொண்ட உள்ளங்களுக்கு நன்றிகள்.
நன்றி யை ச் சொல்வதில் அதுவும் உண்மையில் நமது தாய்மொழியில் சொல்வதற்கு தயக்க்ம் இருக்கிறது. கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தேங்க்ஸ் தான் . யாராவது பாதையில் வழிசொல்லி உதவினால் தேங்க்ஸ் தான். நன்றி என்றால் திரும்பி ஒரு ஆச்சரியப்பார்வை தான். தமிழிலும் சொல்ல ஆசைதான்..


இங்கே அழகான நன்றிகள் இரண்டு,

ரிக்ஷசாவில் வந்து இறங்கும் இரண்டரை வயது மகன் பணத்தைக் கொடுத்துவிட்டு சொல்லும் "தேங்க்கோ" வைக் கேட்டவுடன் அந்த இளைஞனின் முகம் மலர்ந்துவிடும்.

ஒரு வெளிநாட்டு பெண் மகாபலிபுரத்தில் பாசிமணி மாலை வாங்கியவுடன் தேங்க்ஸ் எனசொல்ல அந்த பெண் கண்கள் சிரிக்க "டேங்குஸூ மேடம் ""

சொல்ல நினைத்து சொல்லமுடியாத நன்றி ஒன்று.

அரசு வண்டிகளில் இரவுப்பயணங்களில் தூங்காமல் கவனமாக வண்டியோட்டி வந்து நம்மை பாதுக்காப்பாக கொண்டு சேர்த்த ஓட்டுனருக்கு இறங்கிய வுடன் நன்றீ சொல்ல நினைத்தது உண்டு. கிறுக்கி என நினைப்பார்களோ என்று செய்ததில்லை. (நமக்காக நாம் ஏற்பாடு செய்யும் டாக்சியோ மற்ற வண்டிகளோ என்றால் அவரை வீட்டினுள அழைத்து பணம் கொடுத்த பின் நன்றீ சொல்வது வழக்கம் தானே)

குறும்படம் எடுக்க வேண்டுமா?

நீங்கள் குறும்படம் எடுக்க விரும்புகிறீர்களா? முதல் முயற்சி என்றால் என்ன செய்யவேண்டும் என்ற தயக்கம் இருக்கிறதா ..இதோ சில வழிமுறைகள் இணையத்தில் படித்தது . நானும் ஒரு மாணவி தான் . கிடைத்த விசயத்தையும் என் அனுபவத்தையும் ,பகிர்கிறேன்.



1.நிறைய குறும்படங்களைப்பாருங்கள். டாக்குமெண்டரிகள் திரையிடப்படும் போது பெரிய திரையில் பாருங்கள். இல்லையெனில் வீடியோ கிடைத்தால் பாருங்கள்.குறும்படங்களின் வடிவங்கள் எப்படிப்பட்டது என்கிற மற்றும் அதன் எத்தனையோ வகை இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..


2.தொழிட்நுட்பத்தில் தேர்ந்திடப்பழகுங்கள். கடனோ உடனோ வாங்கி ஒரு கேமரா ஏற்பாடு செய்து அதன் தொழிட்நுட்பம் பழகுங்கள். எடிட்டிங் மற்றும் ஒலி அமைப்புகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று அதன் அதன் தொழிட்நுட்பத்தை அறிந்துகொள்ளுங்கள்.


3. ஒரு கருப்பொருளை எதைப்பற்றி எடுக்கபோகிறீர்கள் என்று முடிவெடுத்துவையுங்கள்.அது எடுக்க எளிதாக , பிடித்தமான ஒன்றாக இருக்கட்டும்.உங்கள் பகுதியில் இருப்பவரைப்பற்றியோ அல்லது வீட்டுக்கருகில் நடக்கும் நிகழ்ச்சியோ என்றால் அதிகம் பணச்செலவில்லாமல் மற்றும் அதிக நேரம் செலவு செய்து நிறைய முயற்சிக்கமுடியும்.


4. எடுத்துக்கொண்ட கருப்பொருளில் நிறைய ஆய்வு செய்து கொள்ளுங்கள்.இணையம் மற்றும் புத்தகங்களில் அதனைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதையும் உண்மையான விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.


5 .ஒரு மொத்தமான வடிவமைப்பை வரைந்து கொள்ளுங்கள். கண்மூடி யோசியுங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.


6.என்ன என்ன தேவை என்பதை குறித்துக்கொள்ளுங்கள்..கேமிரா மற்றும் உபகரணங்கள், யாரை வைத்து எடுக்கப்போகிறோம் அவர்கள் நேரம் மற்றும் அனுமதி என்ற திட்டமிடல்


7.எடுப்பதற்கான பணத்தேவை களை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.




8.படமெடுக்கத்தொடங்குங்கள். எடுக்கப்போவதை பற்றி பேசிக்கொண்டே இருக்காதீர்கள் , இந்த விசயம்தான் கனவுடன் நாளைய நம்பிக்கையோடிருக்கும் இயக்குனர்களுக்கும் உண்மையான இயக்குனர்களுக்கும் இருக்கும் வேறுபாடு.




9. படமெடுத்தபின் உள்ள வேலைகள். எந்த காட்சிகள் எப்படி எடிட் செய்யப்படவேண்டும் எது எந்த இடத்தில் வரவேண்டும்..
என்கிற எழுதியதோ வரைந்ததோ ஒரு குறிப்பு.. தயார் செய்தால் வெட்டி ஒட்ட வசதியாக இருக்கும்..நேரம் மிச்சமாகும். பின்னர் முடிவான பார்வைக்கு தயார் செய்யவும்.




10. காட்சிப்படுத்துதல் என்பது முக்கியமான ஒன்று. ..சரியான இடத்தில் சரியான நபர்களுக்கு காட்சிப்படுத்துதல் குறும்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.


-----------

நான் என் சமீபத்திய இடுகையிலிட்ட
குறும்படம் (ஒரு நாளின் துவக்கம்) ஒரு இஸ்திரி வாலாவின் குடும்பம் எப்படி ஒரு நாள் முழுதும் வீட்டுக்குவெளியே இருக்கிறார்கள் ..வீடு வீட்டுக்கு வெளியே என்பதாக திட்டமிட்டேன்..ஆனால் அதற்கு நான் அவர்களின் வீட்டிற்கு இரு முறை போகவேண்டி இருந்தது..பின்னால் அது வசதிப்படாததால் எழுத்து வடிவத்திலேயே ஒதுக்கப்பட்டது.


முதலிலேயே அவர்கள் இப்படி ஒரு வீடியோ எடுக்க அனுமதிக்க யோசித்தனர். அதுவும் அவர்களைப்போன்றோருக்கு இது எதற்காக இதனால் என்ன ஆகும் என்றெல்லாம் கூட மனதில் கேள்வி எழுந்திருக்கும்.


பின்னர் அவர்கள் வருகிற நேரம் மற்றும் வேலை யின் தன்மையும் கூட முதல் நாளே பேசி வைத்துக்கொண்டேன். அப்படி இருந்தும் நான் படமெடுக்க சென்ற போது அவர்கள் கணவர் வேறுவேலையாக் போயிருந்தார். எனவே மனைவி மகன் மகள் தான் வீடியோவில் இருந்தனர்.




முதல் முதலாக எடுப்பதால் யாரும் நம்மை பார்த்து ஏன் என்ன செய்கிறாய் என்று கேட்டுவிடுவார்களோ அவர்க்ளுகு என்ன பதில் சொல்வது என்ற கேள்விகளால் ஒரு வித தயக்கம். மனதில் எதோ தப்பு செய்வது போல் பயப்படவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் ஒரு குறுகுறுப்பு.




அதன் படத்தினை விடியோக்கேமிராவிலேயே எடிட் செய்து பின்னர் பிக்சர் பேக்கேஜ் மூலமாக அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டவுடன்.
அதற்கான பாடல் புல்லாங்குழலாக இருக்கவேண்டுமென்பதால் தேடி எடுத்த பாடலை கணினியில் பாடவிட்டு...எம்பித்ரி ரெக்கார்டர் மூலம் ரெக்கார்ட் செய்து அதனை விண்டோஸ் மூவி மேக்கரில் ஆடியோ விற்கு இணைத்தேன்.




பின்னர் டைட்டில் மற்றும் நன்றீ யும் மூவி மேக்கரில் தயாரித்து யூட்யூப் அக்கௌண்டில் வலையேற்றி அதனை எம்பெட் செய்து போட்டாயிற்று..
பார்க்கத்தான் வலைப்பதிவர் நட்பு வட்டம் இருக்கிறதே..
கருப்பொருளின் சாதாணத்தன்மை பற்றி ஒருவித கருத்து இருந்தாலும் ஒருவரை போய் சம்மதிக்கவைத்து செய்வது என்பது நடைமுறையில் கொஞ்சம் எளிதானது அல்ல.. நடிகர்களை வைத்து செய்வதானால் அதற்கு போதுமான பயிற்சியும் நேரமொதுக்குதலும் என்று போய்க்கொண்டிருக்கும்..




நான் எடுத்தபின்னர் அதனை அந்த சாமான்ய தொழிலாளிக்குடும்பம் தங்களை ஒரு சினிமா போன்ற காட்சியில் பார்த்த மகிழ்ச்சியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. இதனால் என் முதல் குறும்படம் ஒரு வகையில் வெற்றியே.

camera --- sony DVD 703E
editing with -- picture package producer 2 and
windows movie maker
audio ----music india online and mp3mymp3 software

July 21, 2007

தில்லியின் கம்பீரமான கோட்டைகள்

தில்லியென்றவுடன் எல்லாருக்கும் செங்கோட்டை நினைவுக்கு வரலாம். பழைய கோட்டையை உங்களுக்கு தெரியுமா இதன் பெயரே பழைய கோட்டை தான். புராண கிலா. இது தில்லி மதுரா ரோட்டில் பிரகதி மைதான் அருகில் இருக்கிறது.


மகாபாரத்ததில் வரும் இந்திரப்ரஸ்ததிற்கும் இந்த இடத்திற்கும் சம்பதம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.யமுனையின் கரையில் இருக்கிறது. அருகிலேயே தில்லியின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையும் இருக்கிறது.




ஷெர்ஷா சூரி என்பவர் இதனை கட்ட ஆரம்பித்து ஹுமாயூனால் தொடர்ந்து கட்டப்பட்டது. இதனுள் இருக்கும் ஷெர் மண்டல் என்னும் சிகப்பு கற்களால் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ஹுமாயூனால் நூலகமாக உபயோகிக்கப்பட்டதாகவும் , நூலகத்தில் இருந்து படிகளில் இறங்கும் போது தான் ஹுமாயூன் விழுந்து இறந்து போனதாகவும் சொல்லப்படுகிறது.
ஷெர்-மண்டல்


வடக்கு தெற்கு மற்றும் மேற்கில் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் வடக்கு வாயில் தலாகி தர்வாசா (forbidden gate) என்று அழைக்கப்படுகிறது காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதன் பாதி உடைந்த கோட்டை சாலையின் மறுபக்கத்தில் இருக்கிறது . உடைந்து போனாலும் கம்பீரமாக நிற்கும் இந்த கோட்டை இரவின் வெளிச்சத்தில் நிலவும் மற்றும் focus ligt காரணமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு.



ஒளிஒலிக்காட்சி இரவில் நடைபெறுகிறது. மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் ஹெரிட்டேஜ் வாக் என்று இருக்கிறது.தொடர்புக்கு,
INTACH DELHI CHAPTERThe Indian National Trust For Art & Cultural heritage71, Lodhi Estate, New Delhi - 110003Ph:24641304, 24692774, 24632269Email: intachdelhi@rediffmail.com



கோட்டையை ஒட்டி புல்வெளியும் மரங்கள் அடர்ந்த பகுதியும் நேரம் போக்க நல்ல இடம் . தில்லியின் எல்லாப் பூங்காவைப்போன்றே இங்கேயும் காதலர்களின் கொட்டம் அதிகம் தான். இங்கே ஒரு நீர்நிலையில் போட்டிங் போகும் வசதி இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும்.


ஹூமாயூன் டூம். இதுவும் பார்க்கவேண்டிய ஒரு இடம் தான் இதன் கட்டுமானம் உங்களுக்கு ஆக்ராக் கோட்டையைப்போல இருக்கிறதா? இது ஹுமாயூனின் முதல் மனைவி ஹாஜி பேகம் அவருக்காகக் கட்டியது.

July 20, 2007

சேதுக்கரசிக்காக

சேதுக்கரசி இந்த வார நட்சத்திரம் நீங்களா வாழ்த்துக்கள் என்றதோடு மட்டுமில்லாமல் இயக்குனரிடம் இருந்து இன்னொரு படைப்பு கிடைக்குமா என்று கேட்டுவிட்டார்கள். உண்மையில் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் முடியாத அளவு வேலைப்பளு.

என் காட்சிக்கவிதைப் பற்றிய பதிவைப்படித்திருப்பீர்கள் சேதுக்கரசி வந்து சொன்னபிறகு தான் அந்த போட்டிக்கு தயார் செய்தேன். கீழே அந்த காட்சி....




இப்போது நட்சத்திரவாரத்தில் சேதுக்கரசி யின் ஆசைக்காக ஒரு அவசரப் படைப்பு இங்கே கீழே...இன்னும் நன்றாக எடிட் செய்ய நேரம் இல்லாததால் இப்படி. பின்பு ஒரு சமயம் இதே படைப்பு மேலும் மெருகேற்றி இடுகிறேன். (இப்போது உபயோகித்த தொழிட்நுட்பத்தில் மீண்டும் மீண்டும் காட்சிகளைக் காண்பிக்கிறது மட்டுமில்லாமல் சில நல்ல காட்சிகள் கத்தரிக்கப்படுகிறது தானாகவே)

July 19, 2007

நூற்றுக்கு நூறு

எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்கிற பொழுதும் வேறு எந்த காரியத்தையும் இத்தனை ஈடுபாட்டோடு செய்திருப்பேனோ என்னவோ அந்த அளவு மிக வும் ஈடுபாட்டோடும் ஒருவிதமான மனநிறைவோடும் இங்கே பதிவுகள் எழுதி வந்திருக்கிறேன். இது நூற்று ஒன்றாவ‌தாகும்.


பதிவுகள் எழுதுவது நம் அன்றாட வாழ்வின் அழுத்தத்தை குறைக்கிறது. நட்பு வட்டத்தை ஏற்படுத்துகிறது .தனித் தமிழில் பேசுவதும் எழுதுவது குறைந்து விட்ட இந்த நேரத்தில் அவற்றை நமக்கு பழக்கத்தில் வைத்திருக்க ஒரு வித வாய்ப்பைத் தருகிறது. மேலும் நம் எண்ணங்களை பதிகிற ஒரு தளமாக இருக்கிறது.


ந‌ம‌க்கு தெரியாத‌ விச‌ய‌ங்க‌ளை க‌ற்றுக்கொள்ள‌வும் வ‌கையாக‌ இருக்கிற‌து. இப்போது த‌மிழில் புகைப்ப‌ட‌க்க‌லை என்று த‌னித்த‌னியாக‌ துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள் வ‌ர‌த்தொட‌ங்கி வெற்றி ந‌டை போட‌ இன்னும் இன்னும் இத்த‌ள‌த்தில் இய‌ங்குவ‌தில் ஆர்வ‌ம் மிகுகிற‌தே த‌விர‌ எப்போதும் தோன்றுகின்ற‌ , போதும் அடுத்த‌து என்ன‌ என்கிற‌ எண்ண‌ம் இல்லை.


எந்த‌ ஒரு க‌ண்டுபிடிப்பும் ந‌ன்மையையும் தீமையையும் கொண்ட‌தாக‌வே இருக்கும் . இணைய‌த்தின் எல்லையில்லா த‌ன்மையை ந‌ன்மைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி ந‌ம் அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்லும் க‌ட‌மை எல்லாருக்கும் இருக்கிற‌து.


மா.சிவக்குமார் நெய்தல்கரை பக்கத்தில் பேசி இருந்த ஒலிப்பதிவு கேட்டதிலிருந்து அவ்வப்போதாவது உபயோகமான தகவல்களைப் பதிய எண்ணம்.

இன்னும் இன்னும் அறிவியல் பார்வை , மண் மழை மரம் மனிதன் என்றும் பதிவுகள் வித்தியாசமான முறையில் வரத்தொடங்கி இருக்கிறது.அவர்களும் எப்பவாவது மட்டும் பதியாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.


டெல்பின் மருத்துவர் என்பதால் மருத்துவம் சம்பத்தபட்ட பதிவுகளை இட்டு அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கை முளைத்திருக்கிறது. குடிப்பழக்கம் இருப்பவரிடம் கோபமோ வெறுப்போ காண்பிப்பதால் எந்த பயனுமில்லை என்று சொன்ன அவர்கள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய பதிவு இட்டிருக்கிறார்கள் (தெரிந்து கொள்ளுங்கள் )

குழந்தைகளுக்கென புதிதான தளத்தில் கதை சொல்கிறார்கள்.
மாயவரம் கோயிலைச் சுத்திக்காட்டி இருக்காங்க இதுபோல இன்னும் இன்னும் நிறைய நான் படிக்கும் பல பதிவுகள் மகிழ்ச்சியைத்தருகின்றன.

யாமினி அம்மா

நான் அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருக்கும் அன்றை க்கு வரை யாரும் அப்படி கூட்டமாய் வந்தது இல்லை . எனக்கோ கையும் ஓடலை காலும் ஓடலை..வாங்க வாங்க என்று அழைத்து இரு ந்த ஓரிரு நாற்காலிகளை இழுத்துபோட்டு பாயை விரித்து உட்கார வழிசெய்து கொண்டிருக்கும் போதே உள்ளே கேள்வி குடைந்து கொண்டிருந்தது என்ன விஷய்மாக இருக்கும். அடுத்த ப்ளாட் அதுக்கும் அடுத்த ப்ளாட் என்று 10 வீட்டு ஆண்டிகளும் சேர்ந்து வந்தா என்ன வா இருக்குமோ?


"ம்..டாக்டரிடம் போனியா செக்கப்பெல்லாம் ஆச்சா" என்ற கேள்விகளுக்கு பின்னால் மெதுவாக சித்ரா ஆண்ட்டி ஆரம்பித்தார்கள் " எதிர்த்தவீட்டில் என்னதான் நடக்குது நீதான் பக்கத்துல இருக்கே உனக்குத்தெரிஞ்சு இருக்கனும் அதான் கேக்கிறோம்.". அட இதான் விஷயமா என்று எனக்குள் ஒரு பெருமூச்சு.



"தினம் சத்தமாக் கிடக்குதே நாளைக்கே எதாச்சும் ஒன்னுன்னா போலிஸ் வந்து எங்களையும் கேக்கும் ஏன் உன்னையும் கேக்கும்.. அதுக்கும் முன்னால எதாச்சும் பிரச்சனைன்னு உனக்கு தோணினா சொல்லிடு நாம முதல்ல போலிஸ் ல கம்ப்ளெயிண்ட் குடுத்துடலாம் ..".என்றதும் எனக்கு மீண்டும் கலக்கம் . வயித்தில் குழந்தை குடுகுடுன்னு ஓடுகிறது என் கலக்கம் அதுக்கும் தொற்றிக்கொண்டது போல.



"இல்லை ஆண்ட்டி உங்களைப்போல தான் எனக்கும் புரியல..இந்தியில் இன்னும் அத்தனை பண்டிதம் இல்லை ...யே ,வோ ன்னு எதோ ச்சலேஹா லெவல் தான் ,ஆண்ட்டி எதிர்த்த வீட்டு சண்டையை காதுகுடுத்து கேட்டாலும் புரியாது. அதிலும் அந்த மருமகளுக்கு வேற காதும் கேக்காது வாயும் பேசவராதே."



"ஆனா எதிர்த்தவீட்டு ஆண்ட்டி எனக்கு ஸ்வெட்டர் பின்னக்கத்துக்குடுக்கிறாங்க..
சாயங்காலம் எப்படி ஆலு மேத்தி சப்ஜி எப்படி செய்யறது ன்னு சொல்லித்தராங்க அதுக்கு போகும் போது அவங்களே எதாச்சும் சொல்லுவாங்க".
" இவளுக்கு ஒன்னும் தெரியல மக்கா வளத்துட்டாங்க பேச க்கேக்க வரலன்னா என்ன என் பையனும் அதே மாதிரி தானே அவன் வேலைக்கெல்லாம் போகலயா ? பாரு ரொட்டிக்கு மாவு பிசைய சொன்னா ஒரு ஷாதிக்கு (கல்யாணம்) தேவையான அளவு பிசைந்து மூடி வச்சிருக்கா.
அன்னைக்கு இப்படித்தான் தவாயி (மருந்து) குடுக்க சொன்னேன் அவ பொண்ணுக்க்கு 5 எம் எல் குடுக்கச்சொன்னா இவ அரைபாட்டில் குடுக்கறா எதாச்சும் ஆனா என்ன செய்யறது அதான் நானே அவளைப்பாத்துக்கவேண்டி இருக்கு எனக்கு வயசாகியும் வேலை தான் ." சலிப்போட முடிப்பாங்க.


"யாமினி அம்மாவும் வருவா எப்பவாவது அதுவும் நேராக காலிங் பெல் எல்லாம் அடிச்சு வரமாட்டா அவங்க வீட்டு பால்கனியில் ஒரு கதவு இருக்கே அது வழியா வந்து என் வீட்டு பால்கனியில் ஏறி குதிச்சு கதவைத் தட்டுவா!
சைகையில் எதாச்சும் சொல்லுவா இவங்கள்ளாம் சரி இல்ல என் குழந்தையை அவங்க குழந்தையாட்டம் வச்சுக்கிட்டு என்கிட்ட வரவிடமாட்டங்கறாங்க..
வீடு கூட்டு, துடை ,பாத்திரம் கழுவு இதான் என் வேலை வேற மதிப்பே இல்லை என் அம்மாவீட்டுக்கு போமுடியாது யாரும் வருவதும் இல்லை. இப்படி எல்லாம் ..அடிக்கடி அடி விழும் அவளுக்கு அவளும் அடிப்பாளோ என்னவோ தெரியாது, அவளுக்கு கோபம் வந்தாக் கத்துவாள். வயிறே கலங்கும்."


"ரெண்டு பக்கமும் பிரச்சனை இருக்கு போல யார் முதலில் ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. இவள் சரியில்லை என்று அவர்கள் படுத்துகிறார்களா ? அவர்கள் மதிக்கவில்லை என்று இவள் சரியில்லாதது போல நடந்துகொள்கிறாளா தெரியவில்லை.
நம்ம என்ன செய்ய ?" என்று நான் முடித்ததும் வ்ந்தவர்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்த படி சரி அப்ப வரோம் கவனமா இருந்துக்கோ என்றபடி கீழே இறங்கிப்போனார்கள்.




அதற்கு அடுத்த வாரம் எதிர்த்த வீட்டு அங்கிள் ராத்திரி 11 மணிக்கு வந்து கதைவைத்தட்டி 'வைஃப் மர்கயா ஒரு போன் எஸ்டிடி போடணும் ' ' என்றது ஒன்னுமே புரியல . அவரோடேயே பக்கத்து ஹாஸ்பிடலுக்கு போய் அங்கே தூங்குவது போல் கிடந்த ஆண்ட்டியைப்பார்த்துவிட்டு வந்தோம்.



மூன்று பையன்களும் அந்த அங்கிளும் தான் வீட்டில் இப்போது . யாமினி அம்மா எதுவும் சரியாக செய்யமாட்டாள் எனவே வீட்டுக்கு ஒரு நல்ல பெண் வேண்டும் என்று ஒரு அழகான பொண்ணை அடுத்த பையனுக்கு கட்டி வைத்துக் கூட்டி வந்தார்கள். யாமினி அம்மாவைப்போல இல்லை இவள், அடிக்கடி கணவருடன் வண்டியில் முக்காடிட்டு லிப்ஸ்டிக் போட்டு ஊர் சுற்ற கிளம்புவாள். யாமினி அம்மா வந்து பார்த்தியா எனக்கு நல்ல சுடிதார் கிடையாது அவளைப்பார் என்பாள். இப்போதும் அடி விழுகிறது. தினமும் அவளுக்கு.மாமனாரும் கணவரும் அடிக்கிறார்களாம்.



ஊரிலிருந்து வந்த பெரியபெண் என் அம்மா இவளோடு கத்திகத்தியே செத்துப்போனாள் என்று சொல்லிபோனாள்..சரி இங்கேயே இருந்தால் பிரச்சனை என்று அவர்கள் குடும்பத்தோடு வீட்டை விற்று விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள்.

போகும் முன் சின்ன மருமகள் எல்லாரிடமும் யாமினி அம்மாவை அவள் அண்ணன் வீட்டில் விடப்போவதாகவும் யாமினியை தங்களோடு வைத்திருக்கப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

(பி.கு) உண்மை நிகழ்வின் கதை வடிவம்.


July 18, 2007

மௌனம் கலை


பேசாத வார்த்தைகளின் அழுத்தத்தில்
இதயம் கனத்துப்போகிறது.
உள்ளுக்குள் ஓடும் ஒலிகளின் பேரிரைச்சலில்
அருவிக்கரையாக காதடைக்கிறது.
பலமணித்துளிகள் காத்திருந்து திரை நீங்கிய
இறைகாட்சியாக கண்கள் மயங்குகிறது.
தன்னிச்சையாக ஓடும் சுவாசம்கூட
நீண்டு நீண்டு சிரமப்பெருமூச்சாய்.

மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.
நிலவு நேரத்தில் ஆந்தையைப்போல
உறக்கம் தொலைத்து அலைவானேன்?
மௌனம் கலை.

குருக்ஷேத்திரம்

குருக்ஷேத்திரம் இது தில்லியிலிருந்து அம்பாலா ,சண்டிகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நம்பர் ஒன்றில் இருக்கிறது.அலங்காரவளைவு தேர் காட்சியோடு வரவேற்கிறது. மகாபாரத்தில் வரும் போர் நடந்த இடம் மற்றும் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட இடம் என்பதால் இது ஒரு ஆன்மீகச்சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

இத்தலத்திற்கு செல்வதற்கு பஸ் மற்றும் ரெயில் வசதிகள் நன்றாக இருக்கிறது. நாங்கள் எங்கள் காரிலேயே தில்லியிலிருந்து சென்றோம்..சண்டிகர் செல்லும் அந்த பாதை மிக அருமையாக லாங்க் டிரைவுக்கு வசதியான பாதை தான். போகும் வழியெங்கும் மோட்டல்களும் தாபாக்களும் வரிசையாக இருக்கின்றன. தாபாக்கள் குறிப்பாக வைஷ்ணோ தாபா அதாங்க நம்ம ஊரு சைவ ஹோட்டல் என்று கொட்டை எழுத்துக்களில் வரவேற்கின்றன.. சுத்தம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சுடச்சுட வைக்கிற ரொட்டியையும் சென்னாவையும் ரசிக்கவேண்டும்.ருசிக்கவேண்டும்.

நாங்கள் பார்த்தவரையில் வடக்கில் இருக்கிற எல்லா அரசு தங்குமிடங்களும் நன்றாக பாதுக்காக்கப்பட்டு தங்க வசதியாக மேலும் குறைந்த செலவில் இருப்பதாக படுகிறது. இணையம் மூலம் திரட்டிய தகவ்ல் படி நாங்கள் நீல்காந்த் அரசு தங்குமிடம் சென்று பொருட்களை போட்டுவிட்டு சுற்றக்கிளம்பினோம்.

இந்த தங்குமிடம் எல்லா இடத்துக்கும் நடுநாயகமாக வே இருந்தது வசதியாக போனது .

பகவத்கீதை போதிக்கப்பட்ட ஜோதிஸர் இடத்துக்கு(jyotisar) சென்றோம்.. (பிஹோவா ஸ்டேட் பாதை 12கிமீ). அந்த ஆலமரத்தினடியில் பளிங்கினால் செய்யப்பட்ட மேடையும் அதில் ஒரு தேர்க்காட்சியும் இருந்தது.அதில் தமிழில் கல்வெட்டு இது காஞ்சி மடத்தால் நிறுவப்பட்டது..என்கிறது. இத்தனை தொலைவில் வந்து தமிழில் கல்வெட்டு என்பதால் சந்தோஷம். இரவு எட்டிலிருந்து ஒன்பது வரை ஒலிஒளிக்காட்சி உண்டு இங்கே.



ஒலிஒளிக்காட்சி காண சென்றோம்.. நாடகப்பாணியில் எடுக்கப்பட்ட ஒலி பின்னால் ஒலிக்க... மிகப்பெரிய நீர்நிலையின் மறுபக்கம் போடப்பட்ட கேலரியில் அமர்ந்து பார்க்கவேண்டும். லேசர் ஒளியில் சில வடிவங்களைக்கொண்டு கதையை சொல்ல முயற்சி...ஆங்கிலம் அன்று இல்லையாம்.. அதனால் குடும்பத்திற்கு...ஹிந்தி கேட்டு நான் கதை சொல்லவேண்டியதாகிவிட்டது பீஷ்மர் இறக்கும் நிலையில் தண்ணீரை பாணத்தால் விழச்செய்யும் காட்சி அருமை...அது மட்டும் என் பொண்ணுக்கே புரிஞ்சிடுச்சு சொல்லாமலே..

அடுத்தநாள் காலையில் பிரம்ம சரோவர் , எத்தனை பெரிய குளம்..சுத்தியும் இருக்கும் இடம் ஆயிரக்கணக்கானோரை தங்க வைக்கக்கூடியது. எத்தனை விதமான துறவிக்கோலங்கள்..அவரவர்க்கென ஒரு இடம் அதில் ஒரு மூட்டை துணிகள் ஒரு விரிப்பு அதில் ராஜாவைப்போல படுத்துக்கொண்டு ரேடியோவில் பழைய ஹிந்தி ப்பாடல் கேட்கிறார்கள்..

வழியெங்கும் சாமியார்கள் தான் ஒரு பொரிப்பாட்டி தமிழில் பேசினார் ..அட எப்போவந்தீங்க என்றால் அது ஆச்சுங்க 40 வருடம் என்கிறார்கள். ப்ரம்ம சரோவர் பக்கத்தில் ஒரு தமிழ் இட்லிக்கடை அவங்க்ளும் வந்து ரொம்ப வருடம் ஆகிவிட்டதாம்.. சாமியார்களுக்குத்தான் முக்கியத்துவம் கடையில்..பாருங்க தினமும் காலை இட்லி உண்டு..மதியம் எல்லாக்கோயிலிலும் சாப்பாடு இலவசம். அதனால் ஹோட்டல் மூடி இருக்கும். சாயங்காலம் சாமியார்களுக்கு போண்டா பஜ்ஜி.ராத்திரி உணவு கிடையாது அவர்களுக்கு..
ம்..வீட்டில் இருந்தால் இப்படி யார் தருவா அதான் ஓடி வந்து சந்தோஷமா இருக்காங்க போல..

சன்னிஹித் சரோவர் என்னும் குளம் பிரம்ம சரோவரிலிருந்து ஒரு கிமீ தூரத்தில் இருக்கிறது . ஸ்தானேஸ்வர் சிவன் கோயில் , பீஷ்மர் மரணப்படுக்கையில் தண்ணீர் அருந்திய இடம் , லக்ஷ்மி நாராயணன் கோயில், பனோரமா சயின்ஸ் மியூசியம் கிருஷ்ணா மியூசியம் என்று பார்க்க இடங்கள் நிறைய இருக்கிறது.
. (பனோரமா மியூசியம்)



தானேஸ்வரத்தில் இருக்கும் பத்ரகாளி கோயில் இது சக்திபீடத்தில் ஒன்றாகும்.
இவையெல்லாம் தவிர ஹர்ஷரின் தோட்டம் , பாத்ரி மஜ்ஜித் ஆர்க்கியாலஜி இடங்கள் என்று இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு சுற்றலாம். நாங்கள் எடுத்த படங்களின் சிடி கைக்குக்கிடைக்கவில்லை தற்போது கூகிளே துணை.




(ஹர்ஷரின் தோட்டம்)



நீல் காந்த் தங்குமிடம் .....01744 -221615 முன் பதிவுக்கு ...
http://haryanatourism.com

க்ளிக்க்ளிக்

என்னுடைய பொழுதுபோக்கான புகைப்படமெடுப்பதை மேம்படுத்திக்கொள்ள தனியாக ஒரு பதிவு தொடங்கி இருக்கிறேன். இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. புகைப்படக்கலை வகுப்பில் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள். அதில் மற்றவர்கள் போஸ்ட் செய்து இருக்கும் படங்களின் பக்கத்தில் என் படங்கள் நிற்கக்கூட முடியாது என்று தெரிகிறது.

இருந்தாலும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்.

July 17, 2007

தலையைச்சுற்றி ஒளிவட்டம்

சின்னக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நான் பார்த்தது என் அம்மா தினமும் அடுக்களையில் விழுகிற காய்கறி குப்பையை எல்லாம்சேர்த்துத் தொட்டி செடிகளின் மண்ணைக்கிளறி உள்ளே போட்டு மூடிவிடுவார்கள். இப்போதும் தில்லியில் என் வீட்டிலும் தொட்டி ஒன்றில் மண் போட்டு மூடி காய்கறிக்குப்பைகளை மக்க செய்வது என் வழக்கம்.



பெங்களூர் போயிருந்த போது என் சித்திப்பெண் வீட்டில் வாசலில் பெரிய டெரகோட்டா பானைகள் அடுக்கி இருந்தது, என்ன அழகு என்று பார்த்துக்கொண்டு இருந்த போது சொன்னாள் , இது குப்பைகளை மக்க செய்யும் கம்போஸ்ட் சிஸ்டம் என்று , எனக்கு ஒரே ஆச்சரியம். பார்ப்பதற்கு ஒரு கலைநயமிக்க டெரகோட்டா டிசைனாக இருக்கும் இது அடுக்களையில் தினமும் விழும் குப்பைகளை மக்க செய்து தோட்டத்துக்கு இயற்கை உரமாக்குகிறதே .
இது பற்றி மேலும் அவளிடம் கேட்டபோது கிடைத்த தகவல் களை இங்கே பகிர்கிறேன்.






டெய்லி டம்ப் என்பது தான் அதன் பெயர். ஹிந்துவில் வந்த செய்தி கட்டிங்க்....
Bangalore: Bangalore-based designer and educationist Poonam Bir Kasturi now has the distinction of being the first Indian to be nominated for the coveted international INDEX award, which focusses on "design to improve life".
The cost-effective, do-it-yourself kitchen-waste terracotta composter that Ms. Poonam has designed and irreverently named "Daily Dump", has made it to the final list of nominations of the INDEX award, considered one of the biggest international design honours.


தினமும் சமையல் செய்யும் போது காய்கள் பழங்களின் தோல் மற்றய பாகங்கள் மற்றும் வேண்டாத உணவுப்பொருட்கள் தான் அதிகம் குப்பையில் போடுகிறோம்.அவற்றை அப்படியே ஒரு பாலித்தீன் கவரில் போட்டு குப்பைக்காரனிடம் போடுவதை விட அவற்றை தனியா க சேர்த்துவைத்து மக்க செய்து உங்கள் வீட்டு த்தோட்டத்தின் செடிகளுக்கு உரமாக்கலாம்.செழிப்பாக வளரும்.தொட்டியில் செடி வைத்திருந்தால் உரம் கண்டிப்பாக அதற்கு தேவை .


இப்படி குப்பையை மக்க வைக்கும் போது எது மண்ணுக்கு நல்லது எது நல்லதில்லை என்பது தெரியவருவதால் தூக்கி எறியும் பொருள்மேல் கவனம் கொள்வோம்..ப்ளாஸ்டிக் மற்றும் பால்கவர்களைப்போன்ற மக்காத குப்பையைக்கூட குப்பைக்காரனிடம் கொடுக்காமல் கபாடி வாலா அதாங்க
பழைய சாமான் வாங்குகிறவனிடம் கொடுத்தால் அது நிச்சயமாக ரிசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி யால் உபயோகப்படுத்தப்பட்டுவிடும். காசுக்காக நான் போடுவதில்லை பழக்கம் இல்லை என்று சொல்லாதீர்கள் மறுசுழற்சிக்கு அனுப்பவாவது பழைய சாமான் ஆளைக்கூப்பிடுங்கள்.




(பால்கவரை சரியாக கழுவாமல் போடாதீர்கள் பின்னால் அது காய்ந்து கிடக்கும் பாலுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்போகும்போது அதை எடுக்கும் ஆட்களின் கைகளில் அதனால் நோய் வருகிறதாம்.நம்மால் வேறு ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?)


பூனம் செய்திருக்கும் அந்த மாடல் மிக அழகாக இருக்கிறது.
பெங்களூர் இந்திரா நகர் ஏரியாவில் என் தங்கை வாங்கி இருக்கிறாள். மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.சென்னையிலும் கிடைப்பதாகவும் அதன் முகவரி news எனும் தலைப்பின் கீழ் இருக்கிறது.




எனக்கு தில்லியில் இதற்கு கிளைகள் இருப்பதாக தெரியவில்லை. செயல்முறை விளக்கங்கள் படங்களுடன் அந்த தளத்தை ஒரு பார்வை பாத்ததற்கே என்னமோ ஒளிவட்டம் சுத்தறமாதிரி தான் இருந்தது.



அதற்காக விளம்பரத்திற்கு செய்திருக்கும் ஒரு வீடியோவைப்பாருங்களேன்...அட்டகாசமா எடுத்துருக்காங்க...சாப்பிட்டு முடிச்சதும் தட்டுல இருக்கற மிச்சமீதி எல்லாம் எடுத்து மக்க செய்யப் போடபோகும் போது அப்படியே சந்தோஷமா டிவைனில்லியா உணருகிறார்களாம் தலைக்கு பின்னால் ஒளிவட்டமும் கால்கள் தரைக்கு கொஞ்சம் மேலாக அப்படியே மிதக்கிறாங்களாம்.. :)


July 16, 2007

மீண்டும் படங்களுடன்.....

இந்த பதிவு எழுதிய போது தான் எழுதும் தன்னம்பிக்கையே வந்தது. பின்னூட்டமும் வந்தது. :)

மேம்பாலம் போகலாமா?


எங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும் விட்டா வேற பொழுதுபோக்கு இல்லை. மேம்பாலம் போகலாமா ன்னு அப்பா கேட்டா குதிச்சுகிட்டு கிளம்பிடுவோம் நானும் தம்பியும். மேம்பாலம் ஊரோட ஆரம்பம். ரயில் பார்க்கறதுன்னா எப்போதும் சின்னவங்க பெரியவங்க எல்லாருக்கும் ஆசை தான்.





இதாங்க அந்தப்பாலம்.


அப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.





மேம்பாலத்திலிருந்து காட்சி (இந்தமுறை போனபோது எடுத்து வந்தேன் )



மேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம்.



அந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.






இதான் அந்த கண்ணாடி போட்ட ரூம்.


பாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா? அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது.





இது ஏறி வர பக்கவாட்டில் இருக்கும் ஒரு சறுக்கான , வளைவான பாதை .இதில் செல்வது கூட ஒரு மகிழ்ச்சியான விஷயம்.


இப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.


இப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.


இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.

எதிர்பார்த்திருந்தது

எதிர்பார்த்தது தான்...நடந்து விட்டது ஒரு நாள். அதாங்க தமிழ்மணத்தில் ஒரு வாரம் நட்சத்திரம். நான் எழுத வ்ந்த போது நாகை சிவா நட்சத்திரமா இருந்தார்ன்னு நினைக்கிறேன். வந்தவுடனேயே நினைத்துக்க்கொண்டேன் ஒரு நாள் நாமும் வருவோமில்லை.. எடுத்த உடனேயே பெரிசா ஆசைப்படுவது என்பது பழக்கமாப் போச்சு..

குறிப்பிடத்தக்க அளவில் எழுதும் பதிவரை அதிகம் கவனம் பெறச்செய்யவும் , இன்னும் எழுத ஊக்கம் அளிக்கும் வகையும் செய்யும் நட்சத்திரவாரம் என்று தமிழ்மணக்குறிப்பு சொல்கிறது.உண்மைதான் பாருங்க கொஞ்ச நாளாக தமிழ்மணத்தின் முகப்பு பக்கம் மாற்றம் செய்த பின்னர்...அதிக நேரம் நட்சத்திர வாரத்தின் பதிவுகள் தெரிய செய்தது இன்னும் சிறப்பு.


தமிழ்மணத்துக்கு இணைக்கப்பட்ட பாடு இருக்கே சொல்லில் அடங்காது ஒரு மாசம் உண்மையில் ஒரு மாசம் இந்த ப்ளாக்கரோடு போராடி இருக்கேன். முதல்ல பதிவுன்னா என்னா ப்ளாக்கர்ன்னா என்ன அப்பறம் ஐடி கிரியேட் செய்து ஆரம்பிச்சா தமிழ்மணத்துல இணைய மாட்டேங்குது என்னமோ ஆடம் ஃபீட் அப்படிங்குது சரியில்லை ங்குது. எந்த ஆடம் ஆதாமா அவனுக்கு தான் ஏவாள் ஃபீட் பண்ணிட்டாங்களே...ஆப்பிள் குடுத்து , அதுவே இன்னும் பெரிய சர்ச்சையில் இருக்கு...இன்னும் என்ன ..ன்னு ஒரே குழப்பம்.


அப்புறம் ( க.கை. நா) * கணினி கை நாட்டான நான் எப்படியோ இந்த வியூ சோர்ஸ் என்பதை கண்டு பிடித்து அதில் போய் தமிழ்நதி அருள்குமார் போன்றோரின் ப்ளாக்கரில் என்ன என்ன இருக்குன்னு பார்த்து என்னோடத சரிபண்ணேன்னா பார்த்துக்குங்க...இது பின்னாடி பொன்ஸ் க்கு தெரிஞ்சு ஏங்க அதெல்லாம் போய் பார்த்து என்ன பண்ணீங்கன்னாங்க எப்படியோ வேலை ஆகிடிச்சு இல்ல..


தமிழ்மணம் ஹச்டிஎமெல் ,xஎம் எல் ன்னு என்ன எல்லாமோ சரி இல்லன்னு சொன்ன போதும் ,, எனக்கு எதுக்கு இதெல்லாம்.... பேசாம 500 எம் எல் பாலை காய்ச்சி குழந்தைக்கு கொடுத்தமா காபி போட்டு கணவருக்கு கொடுத்தமான்னு இல்லாமன்னு ஒரு பின்வாங்கும் எண்ணம் வரவே இல்ல...கனவுல கூட இந்த கோட் , காபி , பேஸ்ட் அது இதுன்னு வர ஆரம்பிச்சு < > / இப்படி என்ன என்ன டிசைனோ எல்லாம் தலைய சுத்தி பறக்க , பிதற்றும் நிலைக்கு வரும் முன் எப்படியோ மாயாஜாலமோ இல்லை நான் செய்த எல்லா குறுக்கு வழியில் ஒன்றோ வேலை செய்து தமிழ்மணம் இணைத்துக்கொண்டது.



இதோ இந்த வாரம் ,
என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்துக்கு நன்றி. இதுவரைய்யிலும் தொடர்ந்த உங்கள் வாசிப்பிற்கும் மறுமொழிகளுக்கும் நன்றி நண்பர்களே!
(என்னமோ படத்தை அனுப்பினேன் அது அப்படியே பெரிதாக வ்ந்துவிட்டது பயந்துடாதீங்க)

*நன்றி துளசி

July 10, 2007

மினிபஸ் கவிழ்ந்தது

இன்று காலை பேப்பரில் முதல் செய்தி மினி பஸ் ஆமையைப்போல கவிழ்ந்ததாம்..24 குழந்தைகள் அடிப்பட்டார்கள். ஒரு குழந்தையின் தந்தை இறந்தார் .( அடுத்த குழந்தையின் சேர்க்கை விவரம் அறிய கூட்டத்தோடு அவரும். மருத்துவமனையில் குழந்தைகளையே அதிகம் கவனித்து அவரை சரியாக கவனிக்காததால் இறந்ததாக மனைவி தெரிவித்திருக்கிறார்).


தில்லி என்றாலே ப்ளூ லைன் பஸ்ஸின் அட்டகாசம் பற்றி எல்லாரும் அறிந்ததே..நாளொன்றுக்கு ஒரு பலியேனும் நடக்கவில்லை என்றால் அதன் அகோரபசி அடங்காது . (ப்ளூ லைன் என்பதற்கு பதில் ரெட் லைன்னு பேர் வச்சிருக்கலாமோ :( }



அவர்கள் தான் குடித்துவிட்டோ அல்லது கவனமில்லாமல் ஓட்டுகிறார்கள் என்றால்..பெற்றோர்களின் பொறுப்பின்மையைக்காட்டுகிறது இன்றைய நிகழ்ச்சி.. அந்த மினி பஸ் மெட்ரோ ரயிலுக்கான ஆட்களை ஏற்றிசெல்ல அனுமதி பெற்ற வண்டி. அதில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் பள்ளிக்கு ஏற்றிசெல்லப்பட்டிருக்கிறார்கள். அதுவும் 14 பேர் அமரும் பஸ்ஸில் 26 பேர்..
அதிக வேகம் தான் இதற்கு காரணம். இந்த ஆட்களை இறக்கி விட்டு அடுத்த சாவாரி போகவேண்டுமே...



பெற்றோர் குழந்தைகளை அனுப்பும் போது அந்த வாகனம் குழந்தைகளுக்கு ஏற்றதா என ஏன் யோசித்துப்பார்ப்பதில்லை..எத்தனை குழந்தைகளை அது அழைத்துப்போகிறது. அதன் வேகம் என்ன? அவர்கள் சரியாக ஓட்டுகிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும். ரிக்ஷா போன்ற வாகனங்களில் அதிகப்படி குழந்தைகள் செல்லும் போதும் மனம் பதைபதைக்கிறது. ஆட்டோவில் கூட இது தான் கதை..



இந்த முறை பொள்ளாச்சியில் நான் கண்ட காட்சி. ( மற்ற இடங்களிலும் இதான்கதை) ஆட்டோவில் பின்னால் இரு வரிசை நிறைய குழந்தைகள்..போதாக்குறைக்கு டிரைவரின் இருப்பக்கங்களிலும் இருவர்..அந்த சிறுவர்கள் வெளியே பார்க்க உட்கார்ந்திருக்கிறார்கள். ஓட்டும்போது அவருக்குத்தான் சிரமமாக இருக்காதா இல்லை குழந்தைகள் தான் சரியாக பிடித்து உட்காருமா? படித்த பெரிய பணக்காரர்கள் அவர்கள் குடும்பம்..அவர்கள் நினைத்தால் தனியாகவே வண்டி அமர்த்தலாம். காசுக்கு கொடுமை அதனால் கூட்டமாக அனுப்பினார்கள் என்று சொன்னாலே ஏற்றுக்கொள்ளமுடியாத விஷய்ம்.



இதே வாரம் தான் இன்னொரு குழந்தை தன் நாயை மருத்துவரிடம் காண்பிக்க சென்ற போது ஸ்கூட்டரில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.. பெற்றோர் சொல்கிறார்கள் நாயை அவனுக்கு ரொம்ப பிடிக்க்குமாம்..அது விழுந்துவிடக்கூடாதே என்று அவன் கவன்மாக கடைசிவரை பிடித்திருந்தான்.என்று,, முதலில் அவன் தானே சரியாக பிடித்திருக்கவில்லை என்பதை ஏன் கவனிக்கவில்லை பெற்றோர். தலைக்கவசம் அணிவதில்லை குழந்தையும் கவனமாக இருக்கவில்லை...வேன் வந்த வேகம் அதிகம் அது இடிக்க இவன் சக்கரத்தில் விழ ..கடவுளே !


ஒவ்வொரு நாளும் எத்தனையெத்தனையோ கேட்கிறோம் . குழந்தைகள் பள்ளி சென்று திரும்புவதே பெரிய விஷய்மாகிவிட்டது ..

July 7, 2007

குப்பையை எங்கே போட்டீங்க?

வீட்டை சுத்தம் செய்து அந்த குப்பையை எங்க போட்டீங்க..
கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு இடத்துக்கு தானே ..ஆனா அது உங்கள விட்டு எங்கயும் போறது இல்ல நீங்க இருக்கிற இதே உலகத்தில் தானே இருக்கப்போது
எப்படி அத தூக்கிப்போட்டதா நினைச்சிக்கிறீங்க..நீங்க போட்ட அந்த குப்பை இதே உலகத்தில் எதோ ஒரு இடத்தில் உங்களுக்கு எதிரான வேலையை செய்துகொண்டுதானிருக்கப்போகிறது.. இதை அறியாமல் நான் தூர எறிந்து விட்டேன்னு நீங்க சந்தோஷமா இருக்கீங்க..

எந்த பொருளும் இல்லாமப் போகபோறது இல்லை அது வேறொன்றா மாறத்தானே வேண்டும்..மீண்டும் அது ம்ண்ணோட போகாதுன்னா அதை எப்படி மாற்றப்போறோம்னு யோசிக்காம தூக்கி எறியாதீங்க.. இன்னிக்கு எந்த ஒரு குக்கிராமத்துக்கு போனாலும் கடையில் பாலிதீன் பை தராங்க..
அதோட உபயோகம் ரொம்ப அவசியம் தான் ஆனா அது என்னவாமா மாறுது..
ஊரோட முள்காடெல்லாம் பாலிதீன் பூ பூத்திருக்கிறது.. குப்பை காடெல்லாம் பாலிதீனால் நிரம்பி வழியுது.

எனர்ஜி சேவர் விளக்குஎல்லாரும் வாங்கிப்போடறோம் அதை அப்படியே தூக்கி எறியக்கூடாதாம்..என்ன செய்ய வேண்டும் தெரியாது ? இப்படி நம்ம ஊரில் ஒரு மறு சுழற்சி முறை தெரியாமல் உபயோகித்து எறியும் பொருட்களின் எண்ணிக்கை நிறைய..

மறு சுழற்சியில் உபயோக்கிக்கும் படி செய்யமுடியாது அல்லது தெரியாது என்றால் அந்த பொருளை உபயோகிப்பதையாவது குறைத்துக்கொள்ளலாமே!
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோடையும் குறைந்து வரும் குளிர்காலமும் காலநிலை மாற்றத்தினை காட்டி பயமுறுத்துகிறது.. கவனியுங்கள் ...செயல்படுங்கள்.

சர்வேசன் 07/07/07 பதிவில் அவர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு சின்ன பதிவு.

July 6, 2007

புன்னகைகள்

ஒரு சின்னப்புன்னகை






ஒரு வெட்கப்புன்னகை

ஒரு ஆச்சரியப்புன்னகை.


போட்டோகிராபி தளத்தில் பாடம் படிக்கிறோம்ல.
எடுத்ததப் போட்டு காண்பிக்கலாம்ன்னு தான் இதெல்லாம்.

July 5, 2007

டிக்கெட்டைப் பார்த்துவாங்குங்கப்பா

இந்த முறை ரயில் வண்டியில் போன சமயமெல்லாம் சில வேடிக்கைகள் நடந்தது.
ஜனசதாப்தியில் போய்க்கிட்டிருந்தோம். ஈரோட்டில் ஒரு பெண் ஏறினாள். சின்னப்பெண் தான் காலேஜ் இப்பத்தான் படிக்கிதோ முடிச்சிருக்கோ தெரியல தனியாத்தான் ஏறினாள். ஏறியதும் என் சீட் நம்பர், இந்த விண்டோ சீட், என்று ஜன்னல் கிட்ட உட்கார்ந்திருந்தவங்களைக் கேட்டாள்..அவங்க நான் நல்லா ப் பார்த்து தானே வாங்கினேன்..என்றதும் ஏத்திவிட வந்தவங்க கிட்ட பாத்துக்கிறேன் போங்க என்றாள். அப்போதே பார்த்திருந்தால் அங்கேயே இறங்கி இருக்கலாம்.ரயில் கிளம்பி விட்டது .


ஒரு வேளை அடுத்த பெட்டியா இருக்குமோ என்ற வர்களிடம் இல்லையே அதான் போட்டிருக்கு வேணா டிடி ஆர் வந்தா கேக்கலாம் அது எப்படி அதே நம்பர் என்றபடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதற்கு உட்கார்ந்தாள்..பக்கத்தில் இருந்த இரு காலேஜ் பொண்ணுங்க தாங்க அதை என்ற படி வாங்கி டேட் பார்த்தால் அது அடுத்த மாதத்திற்கு அதே தேதியில் எடுக்கப்பட்ட டிக்கெட்.கொஞ்ச நேரம் கழித்து
டிடி ஆர் வந்தார் இது டிக்கெட் இல்லாமல் வந்த குத்தமா த்தான் எடுத்துப்போம்...ஃபைன் ஒரு 300 அப்புறம் திருப்பி டிக்கெட்டுக்கு பணம் வேணும் என்றார்.. அப்படி இல்லைன்னா கரூர் ல இறங்குங் க அடுத்த ரயிலில் போங்க என்றார்..அத்தனை செலவழிப்பதற்கு இறங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..



அப்புறம் தான் விஷயமே அந்தப் பொண்ணு ஏத்திவிட்ட சித்தி சித்தப்பாக்கு போனை போட்டு இப்படி இப்படி ன்னதும் அடுத்து கரூரில் இறங்கி நில்லு நான் வரேன்னு சொல்றார்..அய்யோ நீங்க வர வரை நான் சும்மா நிலையத்தில் இருக்கமுடியாது நான் போய்க்கிறேன்னு சொன்னா அவங்க அந்த பக்கத்துல ஒத்துக்கல போல டென்ஷன் ஏறுது அந்த பொண்ணுக்கு ...




கவலைப்பட வேண்டியது தான் ஆனா அந்த பொண்ணு தனியா அதும் கூட்டமில்லா ஒரு ரயில் நிலையத்தில் (கரூர் ல நிலையம் காலியாதான் கிடந்துச்சு) இருப்பதற்கும் அடுத்த ரயிலில் வீடு போவதற்கும் எது நல்லது என்று யோசிக்கல அவங்க வீட்டுல..ஏதோ சமாதானம் செய்து போனை ஆப் செய்திட்டாள். ஆனா அடுத்து போன் மேல போன் அங்கயே இருன்னு.
நான் அந்த பொண்ணைப்பார்த்து போக வேண்டிய இடத்துக்காரங்க கிட்ட இப்ப சொல்லாதீங்க கரூரில் இறங்கியதும் டிக்கெட் எடுத்துடுங்க அப்புறம் இந்த டிரயினில் வரேன்னு சொல்லுங்க இல்லாட்டி ஆளாளுக்கு குழப்புவாங்க ன்னு அட்வைஸ் பண்னினேன்..என்ன பண்ணாளோ..

அடுத்தது ராக்போர்ட் ல சென்னை வரோம். கீழ் பெர்த் எனக்கும் ( குழந்தையும் நானும் படுக்கனுமே ), மிடில் பொண்ணுக்கும் ,எதிர் திசையில் கீழ் பெர்த் அம்மாவுக்கும் இரண்டு மாதம் முன்னமே இது தான் வேணும்ன்னு வீட்டுக்காரர் பதிவு பண்ணியாச்சு..கரெக்டா ஒரு தாத்தா முட்டியில் ஆபரேசன் ஆகிருக்காம் வந்துட்டார். அம்மா சரி நான் வேணா மிடில் போறேன்னாங்க சரியா போச்சு..



அடுத்து ஒரு வயதான பாட்டிய கூட்டிட்டு ரெண்டுபேர் ஏறினாங்க..ஏறிட்டு அந்த தாத்தாவோட சீட்டை அவங்க சீட்டுங்கறாங்க..சரி அப்படியே இருந்தாலும் எங்க படுக்க வைப்பீங்க ஏற்கனவே ஒரு சீட் கொடுத்தாச்சே என்று கவலையோடு நான் கேட்டேன்.. பாத்துக்கலாங்க என்ற அந்த அம்மா ஒரு பெரிய மடக்கு மேஜை வேற கொண்டுவந்துருக்காங்க இத இப்படியே காலுக்கிடையில் போடலாம் என்கிறார்கள்..சரிதான் இன்னைக்கு நாம் தூங்கினா மாத்ரி தான்ன்னு நினைச்சேன்.



தாத்தாக்கோ கடுப்பு என் சீட் நான் போன மாசமே எடுத்தேன் என்கிறார். அந்த வயதான் பாட்டியோட வந்த அம்மாவின் கணவர் இதேதடா பிரச்சனை என்று ஆரம்பித்தார் நான் ஜனசதாப்தி கதையாக இருக்குமோ என்று சந்தேகத்தில் என்னைக்கு எடுத்திருக்கீங்க டிக்கெட் என்றேன்.. அவங்க கண்ணாடி போட்டு படிக்க வேண்டிய ஆள் போல கண்ணை சுருக்கி அதெல்லாம் சரியாத்தான் இருக்கு என்றார்கள்...எதுக்கும் குடுங்களேன் என்று பறிக்காத குறையாக வாங்கிப்பார்த்தால் அது அடுத்த நாளைக்கு உள்ள டிக்கெட்..கிளம்பறதுக்குள்ள இறங்குங்க அப்புறம் ஒரு 1000 ரூ செலவாகப்போது என்று இறக்கிவிட்டோம்.


என்ன சொல்ல இவர்களை எல்லாம்..ஜனசதாப்தி பெண்ணுக்கு அவங்க அப்பா ஆபிசில் ஒரு ஆள் மூலம் எடுத்துக்கொடுத்தாராம்..அப்பாவும் பாக்கல பிள்ளையும் பாக்கல..(.எடுக்க சொன்ன ஆளுக்கு ஒருவேளை அந்த பொண்ணோட அப்பா மேல எதாச்சும் கோவம் இருக்குமோ.?)


படிச்சவங்க டிக்கெட் எடுத்தவுடனே செக் செய்யாமல் அடுத்தவங்களை மிரட்டற மிரட்டல் இருக்கே... போனமுறை ஜனசதாப்தியில் ஒரு புது தம்பதி பொண்ணோட அப்பா அம்மா வை ஏத்திவிட வந்தாங்க.. சீட் நம்பர் 60 61 அழுத்தமா சொல்றாங்க...அந்த பொண்ணாவது பரவால்ல... அம்மா வந்தாங்க உட்கார்ந்து இருக்கறவங்கள நம்மளதுன்னு சொல்லி எழுந்திரிக்க சொல்லவேண்டியது தானே என்று கத்துராங்க.. என்னன்னா அந்த அம்மாக்கு 60 அந்த அய்யாக்கு 61.... வயசுங்க..சீட் நம்பர் எது வயசு எதுன்னு தெரியாம வந்துடறாங்க..

July 2, 2007

தண்ணீரில்லா குற்றாலம்

சீசன் ஆரம்பிச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டு பல முறை பெரியப்பா , மாமான்னு லீவில் யார்வீட்டுக்கு போனாலும் குற்றாலம் போயிருக்கேன். ஆனா தண்ணீரில்லாத போது பார்த்ததே இல்லை... கடையநல்லூர் புளியங்குடின்னு இந்த முறை மே கடைசியில் சுத்திக்கிட்டு இருக்கும் போது டிவி நியூஸில் தண்ணீர் வரத்தொடங்கிவிட்டது அப்படின்னு சொன்னாங்க..அதுமட்டுமில்லாம தினப்பேப்பரில் கூட தண்ணீர் கொட்டறமாதிரி படம் போட்டிருந்தது...எல்லாம் ஃபைல் பிக்சர் தான் போல..



சரி தென்காசி போற வழியில் பாக்கலாமேன்னு போனா கார் உள்ள போகும்போதே தண்ணி இல்லீங்க என்று ஒரு கடைக்காரர் சொன்னார்..எதிரில் வர சிலர் நனைஞ்சாப்பல இருக்காங்க சரி குளிக்கலன்னாலும் பாத்துட்டு வருவோம்ன்னு போனா , வீட்டு பாத்ரூம் ஷவர்ல கூட தண்ணி கொஞ்சம் கூடுதலா வரும் போல , அப்படி இருக்கு..எதுக்கு இப்படி மீடியா எல்லாம் பொய் சொல்றாங்கன்னு திட்டிகிட்டே பக்கத்துல போனா.. அப்பதான் எனக்கு தெரியும் அந்த அருவி விழற இடத்துல சிவலிங்கங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கற விஷயமே....




நிறைய சிவலிங்கங்கள். கொஞ்சமா விழற தண்ணி அதுல பட்டு அபிஷேகம் ஆகிற மாத்ரி இருந்தது...அப்புறம் தான் அப்பா சொன்னாங்க தினமும் காலையில் முன்பெல்லாம் அருவிக்கு பூஜை நடக்கும் இப்ப நடக்குதான்னு தெரியல அப்படின்னு.அந்த படங்கள் இங்கே.....





எட்டு எட்டாம்

பதிவெழுத இப்போதைக்கு எதுவும் தோணாததால் எட்டு எட்டு என்று எல்லாரும் எட்டும் அந்த எட்டை போட்டு விடலாம் என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.ராதா வும் காயத்ரியும் கூப்பிட்டு இருக்காங்க எட்டு எழுத சொல்லி.


1.என்னத்த சொல்றது , முதல் பாயிண்டே தடங்குது. எந்த வகுப்பிலும் பெயில் ஆகாம பெரிதா கப்பு வைக்காம படிச்சு பாஸாகி பெத்தவங்களுக்கு கவலை வைக்காம இருந்ததே சாதனை தான். பின்ன கை வலிச்சா பரிட்சையில் எழுந்து வந்துட்டா பாஸாகிறது பெரிய விசயம் இல்லயா. மதிப்பெண் நடுத்தரமா இருந்தாலும் எல்லா ஆசிரியர்கள் மனதிலும் இவ புத்திசாலின்னு ஒரு இமேஜ் ஏற்படுத்தி வச்சிருந்ததும் சாதனை தானே.



2.இன்னிக்கும் அதே ஊரில் இருக்கற பள்ளி கல்லூரி நட்பு வட்டத்தை நான் போய் தான் சேர்த்து வைப்பேன். ஊருக்கு போகும் போது அட்ரஸ் மாறிப்போனதை யாருக்கும் சொல்லாத சில தோழிகளைக்கூட போன் நம்பர் கண்டுபிடிச்சு பேசியோ நேரில் போயோ அசத்துவது , என் பழக்கம். நீ ஒருத்தி தான் எப்போவும் தொடர்பு கொண்டு பேசறடீ ன்னு வாங்க , அவர்கள்
வாழ்க்கையின் ஓட்டத்தில் வயதானவர்களா நினைக்க ஆரம்பித்திருந்தால் நான்போய் அவர்களை வருடங்களுக்கு பின்னால் அழைத்து சென்று இளமையாக்கிவிட்டு வருவேன் கணக்கிலடங்காதவர்களின் நட்பு வட்டம் ஒரு சாதனை.



3. இசை கத்துக்கனும்ன்னு தோண்றியதும் குரல் சரியில்லை என்று யோசித்துவிட்டு வயலின் பக்கம் ஒதுங்கினேன்.. இருமுறை உள்ளூர் தியாகராஜ ஆராதனை யில் நிகழ்ச்சி நிரலில் பேர் எல்லாம் போட்டு பத்திரிக்கைய் அடிச்சிருந்தாங்க மேடையேறி வாசித்தது ஒரு சாதனை..கேட்டவங்களுக்குத்தானே கஷ்டம் எனக்கென்ன..கல்லூரியில் ஒரு முறையாவது மேடையேறும் ஆசையும் வயலினால் நடந்தது. அதுவும் போட்டியில் கம்பி வாத்தியம் அப்படின்னு ஒரு பிரிவுக்கு ஆளே இல்லை .
அதுனால் போட்டி இன்றி முதல் பரிசும் கோல் டு மெடலும்...எப்படி.சாதனை தானே.



4, நல்லபடியா குழந்தைய வளர்த்துருக்கீங்க வளர்க்கிறீங்கன்னு சிலர் சொல்லும் படி வளர்த்துட்டு வரதும் நியாயமா நடந்துக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்னா அவங்களும் சிலருக்கு நியாயத்தை எடுத்து சொல்ற மாத்ரி ஒரு சிந்தனை உண்டாக்கி வச்சிருக்கேன்னா அது ம்.ஒரு சாதனையாத்தான் இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. நீங்க தான் இந்த குழந்தோயோட அம்மாவான்னு பாராட்டு பெற்ற பல சந்தர்ப்பங்கள் ஆனந்தமான ஒன்று.(அப்படி ஒரு நாளும் நாம நம்ம அம்மா அப்பாக்கு குடுத்துருக்கமான்னு ஒரு கேள்வி உள்ள)



5.இங்க எழுதறதும் இத்தனை பேர் அத படிக்கறதும் ஒரு சாதனை தான்னு நினைக்கிறேன்...



6. அருணாவோட எட்டு படிச்சீங்களா அப்படி நானும் செய்திருக்கேன்.. குழந்தை அழுதான்னு பாக்கப்போய் பாத்திரத்தில் ஸ்டெரிலைஸ் பன்ணப்போட்ட பாட்டில் பாட்டில் மூடி ரப்ப்பர் எதுவும் கண்ணுக்கு தெரியாம தண்ணியோட அப்படியே ஆவியாகி வெளியே போனப்புறம் எங்கே அது ன்னு தேடி சாதனை புரிந்திருக்கிறேன்...பூரி செய்து விட்டு குறைத்து வைத்த அடுப்பை அணைக்க மறந்து எரிய விட்ட சாதனை.



7. பெண் 3 வயது இருக்கும் போது அவளை வைத்துக்கொண்டு தனியாக ரயிலில் போகாதே என்றார்கள். சரி என்று பெங்களூரிலிருந்து தில்லிக்கு ப்ளைட்டில் வந்தேன். கணவர் முன்னால் போனால் அப்படியே காலைப்பாத்துக்கிட்டே பின்னாடி போய் தான் பழக்கம்..நான் போய் தனியா செக்கின்பண்ணி ப்ளைட்டிலான்னு பயந்துட்டு புலம்பினேன்..நமக்கும் ஸ்போக்கன் இங்கிலீஸுக்கும் அத்தனை பொருத்தம். சென்னையில் கூட நம்மாளுங்க தமிழில் பேசமாட்டாங்க. ...உள்ள போய்ட்டு அங்க பைலட் யாராவது காக்பிட் பாக்கவரீங்களான்னு அறிவிப்பு செஞ்சதும் ஆங்கிலத்தில் தடால்ன்னு ஏர்ஹோஸ்டஸை கூப்பிட்டு நான் என் பொண்ணுக்கு காண்பிக்கனும்ன்னு சொன்னேன். அங்க போய் இதான் அதான்னு அந்த பைலட் சொல்ல சொல்ல அவர்கிட்டயும் தட்டு தடுமாறி பேசிட்டு கடைசில என் பொண்ணுக்கு தமிழ்ல புரியறமாதிரி சொன்னா கேட்டுட்டு அவரும் தமிழ் தான் அப்படின்னார்.



8.வேறென்ன சொல்றது ...சாய்ஸில் விடலாமா? இல்ல வழக்கம்போல கைவலிக்குதுன்னு சொல்லி பேப்பரை சீக்கிரமா மடிச்சு குடுத்துட்டு ஹாலை விட்டு முதல் ஆளா வெளிய போய்டலாமா / சரி தான் இல்லன்னா நான் நானா இருப்பது எப்படி? அதனால எட்டாவது எழுதலை.


இன்னும் யாராவது எழுதாம இருக்கீங்களா? நானே கடைசியில் தான் எழுதி இருக்கேன்.