June 23, 2010

பெம்மானை ஓதுவார்

Get this widget | Track details | eSnips Social DNA



பெரியம்மா தேவார சிடி ஒன்றை கொடுத்திருந்தார்கள்.அதனைப் பாடி
பயிற்சி செய்து வீட்டில் நிகழ இருக்கும் விழாவில் என் மகளைப்
பாடச் சொல்லி இருந்தார்கள்.. இரண்டு நாட்களாக அவள் அதனை
பயிற்சிக்காகப் பாடிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே இருந்த
மகனுக்கு அதன் தாக்கம் வந்திருக்கிறது. முதல் இரண்டு வார்த்தைகளை
மீண்டும் மீண்டும் ராகமிட்டு பாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்து நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம்.

மகள் அதனை சொல்லச்சொல்ல பாடுகிறாயா என்று கேட்க தம்பியாரும்
சரி என்று பாடத்தொடங்கி இருந்தார்கள்.’ தோடுடைய செவியென்
விடையேறியோர் தூவெண் மதிசூடி’ சத்தம் கேட்டு நான் அங்கே
சென்றால் எங்கே பயிற்சி கெடுமோ என்ற பயத்தால் அடுத்த
அறையிலிருந்தபடியே போனில் பதிவு செய்யத்தொடங்கினேன்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கார்டூன் பார்த்துக்கொண்டிருந்த
மகனுக்கு விளம்பர இடைவேளையில் தேவார வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பின்புறமிருந்து மெதுவாக மிக மெதுவாக நான் சென்றபோது கைகளை
வீசி வீசி ‘ஏஏஏஎ’ க்கள் இழுத்துக்கொண்டிருந்தவனை வீடியோவும் எடுத்தேன்.
ஆனால் அதனை இணைக்க இயலவில்லை. விடுமுறைக்கு வந்த இடத்தில்
கணினிக்கு மாற்றும் இணைப்பு வயரை எடுத்து வரவில்லை.

மிக அழகாக சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அவன் பாடியது கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..

June 17, 2010

கண்ணாடிகளற்ற அறை



கண்ணாடிகளற்ற அறை
-------------------------
திரும்பிய பக்கமெல்லாம்
எதிர்படுவோரிடமெல்லாம்
தன்னைப்போலவே
எதோ ஒன்றைக் கண்ட
பயத்தில் புகுந்த இடம்

இன்னாரென்று
அடையாளப்படுத்திவிட
கண்ணாடிகளும் அற்ற அறை

எப்போதும் போலில்லை
யாரைப்போலும் இல்லை
இல்லை
இல்லையென்று
தனக்குள் ஓதிக்கொள்ளும்
மந்திரங்கள் சூழ்ந்த அறை

எப்போதைப்போன்ற எதையும்
மறுத்தும்
மாற்றியும்
அலங்கரிக்கப்பட்ட அறை

எப்போதாவது நுழைபவரிடமும்
கண்ணாடிகளற்றதாயும்
மாற்றப்பட்ட அலங்காரங்களுடனும்
புதிய மந்திரங்களோடுமான
என் அறை இது என்று
அதே நான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
எதிரில் நானே கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்.

ஜூன் மாத வடக்குவாசலில் வெளியாகியுள்ள கவிதை.. நன்றி வடக்குவாசல்

June 11, 2010

சிதல் அரிக்கும் நாட்கள்

பாதிவழியில் திரும்புவதே
வழக்கமாகி விடுகிறது
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்

சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்

கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி




*சிதல் - கரையான்





நன்றி :ஈழநேசன்