December 16, 2009

ஹிப் ஹிப் ஹிப்போ!! (ஹூர்ரே!)

தொலைகாட்சியிலும் வானொலியிலும் ஹலோ நாந்தாங்க ... பேசறேன். எப்படி இருக்கீங்க ? உங்க வீட்டுல ? நல்லாருக்காங்களா சரி.. எனக்கு இந்த பாட்டு .. அதை இவங்களுக்கு டெடிகேட் ந்னு அடித்துப் பிடித்து எல்லாரும் கேட்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் நானும் கானாப்பிரபாவின் ரேடியோஸ்பதி தளத்தில் பதிவர் தேர்வுகள் வரிசைக்கு சில பாடல்களை கேட்டு எழுதி இருந்தேன் அவரும் ஒலிபரப்பினார். அதற்கு பிறகு இபோழுது 4தமிழ்மீடியா தளத்தில் வாரம் ஒரு நேயர் விருப்பம் பகுதிக்கு என்னுடைய விருப்பப்பாடலாக 5 பாடல்களை அனுப்பி இருந்தேன். அதில் நான்கு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. (இணைய இணைப்புவேகம் குறைவாக இருந்தால் சற்று சிரமமாக இருக்கலாம்)

நிகழ்ச்சியை நடத்துபவர் அஸ்வதன். நிகழ்ச்சிக்கு நடுவில் எதாவது புதுப்புது விசயங்களைச் சொல்வார். அவருடைய நிகழ்ச்சியை வாழ்த்தி நான் என்குரலில் ஒரு வாழ்த்து செய்தியையும் (பீ ஃகேர்புல்)அனுப்பி இருந்தேன். அதனை நிகழ்ச்சிக்கு நடுவில் ஒலிபரப்பி இருக்கிறார் . நன்றி அஸ்வதன்.
--------------------
நாங்கள் சின்னவயசா இருக்கும்போது நொறுக்குத்தீனிய “என்னமாச்சும்” ந்னு சொல்வோம். என்னமாச்சும் இருக்காம்மா? பிஸ்கட் இருக்கு , முறுக்கு இருக்கு, நெய்யுருண்டை இருக்குன்னு அம்மா சொல்வாங்க.. அதனால் நொறுக்குத்தீனிக்கு எங்க வீட்டில என்னமாச்சும்ன்னே ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மகன் வழக்கமாக பள்ளியிலிருந்து வரும்போதே கடைக்கு போகலாம் போகலாம் என்று நச்சரிப்பான். போனால் குர்க்குரே , லேஸ் , அங்கிள் சிப்ஸ் அல்லது ஃபன் ஃப்லிப்ஸ் இப்படி எதயாவது வாங்குவேன் என்று அடம்பிடிப்பான். குர்க்குரே சாப்பிடாதீர்கள் அதில் ப்ளாஸ்டிக் இருக்கிறது. லேஸ் சாப்பிடாதீர்கள் அதில் கேன்சர் வரவழைக்கும் பொருள் இருக்கிறது என்று நம் நலம்விரும்பிகள் அனுப்பிய மெயில்கள் ஏற்படுத்திய திகில் வேறு. ஃபன் ஃப்லிப்ஸ் போன்றவை உண்மையில் அரிசி வச்சி அப்படி பொரி மாதிரி தக்கையாக எப்படித்தான் செய்வார்களோ? ஒரு பயத்தோடுதான் வாங்கித்தருவேன்.

சிறிது நாட்களாக கடையில் ஹிப்போ என்ற ஒரு பெரிய கருப்பு ஹிப்போ நம்மைப் பார்த்தபடியே நிற்பதைப் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் வந்துகொண்டிருந்தேன். அதன் மேலட்டையில் இருந்த நீள்வட்ட வடிவ அந்த மன்ச்சீஸ் (backed munchies) என்றால் என்ன என்று தெரியவில்லையே என்று ஒரு ஆர்வத்தில் இத்தாலியன் பிசா வகையில் ஒன்றை வாங்கிவந்தேன்.


ஹிப்போ பார்லேயின் புது தயாரிப்பாம். மற்றவங்க மாதிரி இல்லை நாங்க.. ஆமாம் சும்மா என்ன உருளைகிழங்கும் , வறுத்ததும் , பொறிச்சதும் சாப்பிட்டுக்கிட்டு... ஹிப்போ கேர்ஸ் (cares) அதுவும் இந்த சூப்பர் ஹீரோஸ் மற்றும் உலகத்தலைவர்கள் எல்லாம் எதெதெற்கோ போராடுகிறார்கள் . பசிக்கு எதிரா போராடலயாம். அதனால் தான் ஹிப்போ இந்த ப்ரச்சனையை தன் கையில் எடுத்துக்கிட்டு அடுக்களைக்குள் புகுந்து விட்டதாம் பசியா இருக்கும் போது நீங்க வறுத்தது பொறிச்சத சாப்பிட்டு என்னடா இதைப்போய் சாப்பிடுகிறோமே என்றெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடவேண்டாமாம். இது ரொட்டித்துண்டுகளை (wheat bread crumbs) (bake) செய்து தயாரிக்கப்படுகிறது.

”ஹிப்போவை கையோடு வைத்துக்கொண்டால் நீங்கள் பசியோடு வேலை செய்யவேண்டியதில்லை. பசியோடு இருக்கிறவன் மகிழ்ச்சியா இருப்பதில்லை. பசியோடு இருப்பவன் அதிகம் சண்டைபோடுவான். அதனால் ஹிப்போ ட்ரை’
ந்னு எக்கச்சக்கமா ஹிப்போ மேலட்டையில் அறிவுரை சொல்லி இருக்கிறது.



இதை எழுதிக்கொண்டே நேற்று வாங்கிவந்த ஹிப்போ தாய் சில்லி (thai chilli) காலி செய்துவிட்டேன். நிஜமாய் சொல்கிறேன். இப்போ நான் ஹிப்போக்கு அடிமை. ஹிப்போ என்னை ஹிப்னாடிஸ் செய்துவிட்டது. கடைக்கு மகனுக்கு என்னமாச்சும் வாங்கச் சென்றால் ”அம்மாக்கு இது ஒன்று” என்று நானே எடுத்துக்கொள்கிறேன். இதிலும் அது இருக்கு இது இருக்கு என்று யாராவது மெயில் போட்டு பயப்படுத்தாத வரை ஹிப் ஹிப் ஹிப்போ!!

December 11, 2009

ரொம்ப ஸ்மார்ட் தான்!

(photo thanks to http://greentechi.files.wordpress.com/)

தில்லியில் மெட்ரோ வந்ததன்பின் பலமுறை சுற்றுலா வழிகாட்டி போல உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காட்டுவதற்காக இங்கே ஏறி அங்கே இறங்கும் பயணங்கள் சின்ன பயங்களோடு செய்திருக்கிறேன். ஒன்னுமில்லை நுழைவுச்சீட்டான சின்ன வட்டவடிவக் காயினை (coin தமிழில் என்ன?) தானியங்கி தடைகளிடம் காண்பிக்கனும். அது திறந்ததும் நாம் உள்ளே நுழையலாம். இறங்கும் இடத்தில் அந்த காயினை உண்டியலில் போடுவது போல தானியங்கி தடைகளிடமே கொடுத்துடனும்.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு தோழி தயானந்த சரஸ்வதியின் ’வேல்யூஸ் அண்ட் ஆட்டிட்யூட்ஸ்’ பற்றிய சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். போகும்போதும் வரும்போது அவர்களுடனே வழக்கம்போல அரட்டை அடித்தபடி மெட்ரோவில் பயணப்பட்டேன்.திடீரென “ நாளைக்கு வரும்போது நீங்கள் தனியாக வந்துவிடுங்கள்..நான் அலுவலகத்திலிருந்து வருவேன்’ என்று சொல்லிவிட்டார்கள். முதல் நாள் நடந்தது எல்லாம் ஒருமுறை மனதில் ஓட்டிப்பார்த்து வழியெல்லாம் நினைவுப்படுத்திக்கொண்டேன்.

முதல் நாளே ’எப்படியும் தொடர்ந்து நான்கு நாட்கள் சொற்பொழிவு கேட்க வரத்தானே போகிறீர்கள்? ஸ்மார்கார்ட் செய்துகொள்ளுங்கள். வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகும்’ என்று தோழி சொன்னதால் ஸ்மார்ட்கார்ட் செய்துகொண்டேன்.( நான் ஸ்மார்ட்டாகிட்டேன்ல) முதலில் 50 ரூ முன்பணம். அதற்குபிறகு 50 , 100, 150 என போன் கார்ட் போல மேலே போட்டுக்கொள்ளலாம்.

மெட்ரோவில் பயணிப்பது தன்னம்பிக்கையளிப்பதாக இருந்தது. என்னுடைய தனியான மெட்ரோ பயண தினத்தில் இரண்டு பெண்கள் என்னிடமே வழி கேட்கவும் , தகவல்கள் விசாரிக்கவும் வந்தார்கள் . டிஜிட்டல் போர்ட்களில் அடுத்த ரயிலின் கடைசி நிறுத்தம், காத்திருக்க வேண்டிய நேரம் ( 3 அல்லது 5 நிமிடங்கள் ) காண்பிக்கிறார்கள். ஒலிபரப்பும் செய்கிறார்கள். அதை காண்பித்ததும் அவர்களும் கலக்கம் குறைந்தவர்களாக ஆனது உணர்ந்ததேன்.

எந்த நிறுத்தம் என்பது எழுத்துக்களாகவும் ஒலியாகவும் மேலும் வண்டியின் உள்பக்கத்தில் இருக்கும் வரைபடத்தில் அணைந்து அணைந்து எரியும் விளக்காலும் அறிவுறுத்துகிறார்கள். வழித்தடம் மாற்ற வேண்டியவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றியும் அறிவிப்பு வருகிறது.

இரவு நேரத்தில் மட்டும் (முக்கியமாக ஞாயிற்றுக்கிழமையில்) கொஞ்சம் கூட்டமில்லாப் பொழுதுகள் பயமா இருக்குமென்று தோன்றுகிறது. இருந்தாலும் கொஞ்சம் பயமில்லாதமாதிரி காட்டிக்கிட்டாப் போச்சு.. :)இருக்கைகள் சன்னலோரமாக நீளவாக்கில் இருக்கிறது.
என்னைப்போன்ற குள்ளமானவர்களும் பிடிக்கும்படி வசதியாக கைப்பிடிகள் இருக்கிறது. அதிக குலுக்கல் இல்லை . ஆனால் விரைகிறது வண்டி. கர்ப்பிணி ,கைக்குழந்தைப் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும், நிற்கமுடியாதவர்களுக்கும் இடம் தருமாறு அறிவிப்பு வருகிறது. ஆனால் நல்லா இருக்கிறப் பெண்களும் இடம் தாங்கன்னு கேட்டு வாங்குவது பார்க்க வருத்தமா இருக்கு.

கொஞ்சமே கொஞ்ச நேரம் ஒரு நிறுத்தத்தில் தாமதிக்கிறது என்றாலும் மன்னிப்பெல்லாம் கேட்கிறார்கள்.. நல்லாவே இருக்கு. ப்திய தாழ்தள பேருந்துகளும் மெட்ரோவும் என காமன்வெல்த் கேம்ஸ் காரணமாக காமன் மேன் களுக்கு மிக வசதி தான். தூய்மையாய் வைத்திருக்கவும் மக்கள் இதனால் பழகிவருவதாகத் தெரிகிறது. வீட்டிலிருந்து அப்படியே காருக்கு தாவும் மக்களுக்கு கொஞ்சம் தூரம் மெட்ரோவரை செல்வதற்கும் யோசனையாக இருக்கிறதாம்.மெட்ரோ ஃபீடர் வேன்களை டவுன் பஸ்ஸாக பயன்படுத்தத் தொடங்கி அது நிரம்பி வழிகிறது. கார் எண்ணிக்கை இன்னும் ரோட்டில் குறையவில்லை. ஆனால் கார் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தவர்களை கொஞ்சம் மனம் மாற்றி இருக்கிறது எனலாம்.

--------------------------
சபரி துணுக்ஸ்
----------
சொன்னப்பேச்சே கேக்காம நீ சும்மா சும்மா கேமிராவைக் கேட்டு அடம்பிடிச்சேன்னா பாரு , கெட்டுப்போச்சுன்னா அதைக் குப்பையில் தான் போடனும்.

அம்ம்ம்ம்மா ( கோபமா முறைக்கிறார்)

கோபப்பட்டேன்னா பாரு இருக்கு உனக்கு ..

அம்ம்மா நான் கோபப்பட்டா நீ சிரிக்கல்ல செய்வே இன்னைக்கு என் கோபப்படறே ? (ஸ்மார்ட்??)

அது என்னடா டீல் ? நீ கோபப்பட்டா நான் சிரிக்கிறது..

நேத்து சிரிச்சியே..
( அன்னிக்கு அவன் கோச்சிக்கிட்டு இடுப்பில் கைவச்சிக்கிட்டு டான் டாண்னு நடந்து போன அழகில் சிரிச்சிட்டேன் போல )