February 2, 2009

ஒன்றிப்படிங்க விளங்கும்....

முல்லை என்னை வழக்கொழிந்த தமிழ் சொல் சிலவற்றை எழுதுமாறு தொடருக்கு அழைத்திருக்கிறார்கள்.. உண்மையில் நம்மையும் அறியாமல் பல வார்த்தைகளை மறந்துவிட்டிருக்கிறோம்.. மகனிடம் தமிழில் பேசு என்று வலியுறுத்தும் என்னிடம் அவன் திரும்பி கேட்கும் போது தான் நான் ஆங்கிலமே கலந்து எத்தனை பொருட்களைக் குறிப்பிடுகிறேன் என்று உணர்ந்தேன்..நிறங்களை தமிழில் குறிப்பிடுவது குறைந்துவிட்டது. சின்னப்பிள்ளையா இருந்தப்பல்லாம் பச்ச வாளியில் தண்ணி பிடிச்சு வைச்சிருக்கேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவள் தான் எப்ப மாறிவிட்டேன்னு தெரியவே இல்லாமல்..க்ரீன் பக்கெட் நிறைய தண்ணீர் பிடிச்சுவைன்னு சொல்றேன். இப்ப ஆங்கில வார்த்தைகலப்பும் இந்தி வார்த்தைக்கலப்பும் எக்கசக்கமாகிவிட்டது.

எங்க ஆச்சி நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது குளிப்பாட்டி விடுவாங்க.. அப்போதெல்லாம் முதுகுப்பக்கம் சோப்பு போட்டுவிடனும்ன்னு " பொறத்தக்காட்டுன்னு" சொல்வாங்க.. புறம் என்றால் பின்புறம்ன்னு அர்த்தம்பட சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அதை அவங்க சொல்லும்போது அழகா இருக்கும்..

என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்..இப்ப கொஞ்சம் புரிகிறது. அம்மா உழக்கால்( ஆழாக்கு) அளப்பதால் அரை உழக்கு கால் உழக்கு என்றும் சொல்வாங்க.. இப்ப பலரும் டம்ளர் கணக்கு ஒரு டம்ளர் இரண்டு டம்ளர்ன்னு சொல்வதைக் கேட்டிருக்கேன்.

மேற்கொண்டு என்ன வார்த்தை என்று யோசிச்சிட்டே இருந்தேன் அப்பத்தான் முல்லையே ஒரு யோசனை சொன்னாங்க.. உடனே நான் .." நல்ல ஐடியான்னு " சொன்னேன்.. பாருங்க நான் நல்ல யோசனைன்னு சொல்லவே இல்லையே.. :)கிழமைகளை நாம தமிழில் சொல்வதும் குறைந்தே வருகிறது என்று தோன்றுகிறது. இவையெல்லாமும் ஒரு நாள் வழக்கொழிந்த வரிசையில் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.

படிக்கும் போது சரியாப் படிக்கலைன்னா.. நல்லா ஒன்றிப் படிச்சால்ல நீ எங்க பாட்டுக்கேட்டுக்கிட்டு ... வாய்பாத்துக்கிட்டு படிச்சான்னு திட்டுவாங்க.. அந்த ஒன்றி படிக்கிறது இப்பல்லாம் நாம் பயன்படுத்துவது இல்லைன்னு நினைக்கிறேன்..

என்ன முழிக்கிற... சொன்னது விளங்குச்சா இல்லையான்னு கணவர் கேப்பாங்க.. விளங்கிக்கொள்ளுகிற என்ற வகையில் விளங்கிச்சா என்பது நல்ல சொல் தானே... நான் யாரையும் கேட்பது புரிஞ்சுதான்னு தான்.. இப்படியாக என் ஞாபகத்துக்கு வந்த சில வார்த்தைகளை இங்கே தந்திருக்கேன்.. இங்கே யாரோ பதிவர் எல்லோரையும் ஞாபகத்தை நியாபகம்ன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க அது யாருன்னு இப்ப ஞாபகம் இல்லைங்க.. :)

பி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.

நான் அழைக்க விரும்புவது....

ரொம்ப நாளா பதிவு போடாத கோபிநாத்,
அப்பரம் அயன்கார்த்தி
துளசி]
ஊடால பின்னூட்டப்பதிவு போட்ட அபி அப்பாவையும் பதிவிட அழைக்கிறேன்..
அவர் வித்தியாசமா ஒரு பதிவு போடுவதாக சொல்லி இருக்கிறார்.