August 1, 2011

சுப்புடு நினைவில் ஒரு இசை விழா

வடக்குவாசல் புத்தகங்கள் வெளியிடும் நிகழ்வும் மற்றும் சுப்புடு நினைவில் ஒரு இசை விழாவும் என்று இந்த வாரம் மூன்று நாள் நிகழ்வு இருந்தது. பொதுவாகவே வடக்குவாசல் நிகழ்வில் தமிழிசை கேட்க நல்ல வாய்ப்பு என்பதால் ஆவலாக எதிர்பார்ப்பதுண்டு. முன்பே வெள்ளி, சனிக்கிழமைகளை அதற்கென ஒதுக்கி வைத்துவிட்டோம். ஞாயிறு அன்று மட்டும் செல்ல இயலவில்லை. மகளுக்கு அடுத்த நாளுக்கான பாடங்கள் தயார் செய்யவேண்டி இருந்தது.
{அன்று அவசரமாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப படம் வேண்டுமென்று என்னுடைய கேமிரா படங்களைத்தான் வாங்கினார்கள்.. எந்த பத்திரிக்கையில் வந்ததென்று தான் தெரியலை :) }




வெள்ளி மாலை என்றாலும் கூட கலாம் என்னும் ஈர்ப்புக்கென சில மக்கள் , இசைக்கான மக்கள், புத்தங்களின் ரசிகர்கள் என அரங்கம் இரு தளங்களும் நிறைந்துவிட்டது. கலாமின் உரை பற்றி விரிவாக கலாநேசன் இங்கே பதிவிட்டிருக்கிறார்.


இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.- கலாம்

தானாகவே முயல்பவர்களுக்கு எந்த வித உந்து சக்தியும் வெளியிலிருந்து தேவைப்படுவதில்லை. ஆனால் பலருக்கு ஊக்கமும் உந்துதலும் வெளியிலிருந்தே தேவைப்படுகிறது. இல்லையென்றால் இத்தனை எப்படி எப்படி, வெற்றியின் கதைகள் புத்தகங்கள் விற்பனையில் முதலிடத்தில் இருக்குமா?
அப்படி ஒரு ஊக்கத்தை அளிப்பவராக இருக்கிறார் கலாம்.. ஒவ்வொரு முறையும் அவர் கேள்விகளோ உறுதிமொழியோ அல்லது தன் கவிதையோ மேடையில் சொல்லும்போது மக்களையும் கூடவே சிறுவர்சிறுமிகளைப்போல ஒப்புவிக்க வைத்துவிடுகிறார்.

சுப்புடுவின் நினைவுகளைப்பற்றி பகிர்ந்துகொண்டார் கலாம் , சுப்புடு எழுதிய கடிதத்தையும் வாசிக்கச்செய்தார் . அக்கடிதத்தில் இருந்தபடியே சுப்புடு இறந்தபோது மொகல் தோட்டத்து ரோஜாமலரோடு தான் சென்றதையும் சொன்னார். மேலும் அக்கடிதத்தில் ”கலாம் உங்கள் கவிதைகளை நாட்டியமாக்க வேண்டுமென்றால் மிகத் திறமைவாய்ந்த நாட்டியமணிகளால் தான் முடியும் . எனவே எக்காலத்திலும் அதில் நாட்டியமாட அனுமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சுப்புடு. அந்த வரிகள் வாசிக்கப்பட்டபோது ”அது தான் சுப்புடு ”என்றார் கலாம் சிரித்தபடி. .. அவர் நாட்டியம் தானே ஆடக்கூடாதென்றார் பாடலாக அன்று சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடினார்கள். ஒரு கவிதை சிறியது.
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம் (வளமான )

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம் (வளமான)
இக்கவிதையின் இன்னோரு பத்தி எனக்கு தெரியவில்லை. இசையுடன் அழகாக இருந்தது.

மற்றொன்று மிக நீளமானது (ஆலமரம் பற்றிய கவிதை) மிகக்குறைந்த நேரத்தில் அதனை இசைவடிவமாக்கி பாடிவிட்டதாக பின்னர் பென்னேஸ்வரன் மேடையில் அறிவித்தார்.

வெளியிடப்பட  இருந்த புத்தகங்களை பற்றியும் அவற்றின் ஆசிரியர்களையும் பாராட்டிப்பேசினார் கலாம்.
வெளியிடப்பட்ட புத்தகங்கள்
சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன்
விருட்சங்களாகும் சிறுவிதைகள் - சி.டி.சனத்குமார்
சனிமூலை - ராகவன் தம்பி
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி
தேவந்தி - எம். ஏ சுசீலா
சுசீலாம்மாவின் தேவந்தி கதைத் தொகுப்பிலிருந்து தனக்குப் பிடித்த கதையைக் குறிப்பிட்டு கலாம் மேடையிலேயே பாராட்டிய விதமும் அவர் ஏன் அப்படி அக்கதையை தேர்ந்தெடுத்து குறிப்பிட்டார் என்றும் சுசீலாம்மா இந்த இணைப்பிலுள்ள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேவந்தி புத்தகத்தை சுசீலாம்மாவின் மகள் மற்றும் பதிவர் விட்டலன் இருவரும் மேடையில் கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.


பிறகு சீர்காழிசிவசிதம்பரம் அவர்களின் கச்சேரி தொடங்கியது. வாரீர் தமிழ் தேன் பருகவாரீர் எனத்தொடங்கினார். கலாம் அவர்களின் இரண்டு கவிதைகளைத் தொடர்ந்து இனிய தமிழ் பாடல்களால் எங்கள் ஆவலைத்தீர்த்தார். திருக்குறள்- செய்நன்றி அறிதல் பகுதியிலிருந்து சில குறள்களை பாடலாக்கித்தந்தார். இதுவும் வடக்குவாசல் நிகழ்வின் ஒரு சிறப்பம்சம். ‘மாயவித்தை செய்கிறானே’ கஞ்சிரா,மோர்சிங், வயலின் ,மிருதங்கம் என பக்கவாத்தியத்திய கலைஞர்களோடு கச்சேரி களைகட்டியது.

‘நீயல்லால் தெய்வமில்லை’ இந்தப்பாடலைக் கேட்டால் நெகிழ்ந்து அழுகை தொண்டை அடைக்கும்.
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய் நீயல்லால் தெய்வமில்லை முருகா ....

‘சின்னஞ்சிறு பெண்போலே’ ...
’சங்கே முழங்கு’ .. ( கீழே உட்கார்ந்து கார் விளையாடிக்கொண்டிருந்த சபரியும் பாட ஆரம்பித்துவிட்டான் சங்கே முழுங்கு)
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ ....
தூரதொலைவிலிருந்து வந்தவர்கள் சிலர் கிளம்பத்தொடங்கிவிட்ட போதிலும் இருக்கின்ற மக்கள் விரும்பிக்கேட்ட பாடல்களைத் தொடர்ந்து பாடுவதில் ஆர்வமாக இருந்தார் சீர்காழி. இருக்கையிலிருந்து எழுந்து ஒரு வயதான அம்மா ( அவர்கள் எழுந்த வேகமும் பாடலைச் சொன்னவேகமும் நிச்சயம் அவர்களின் உள்ளிருந்த இளவயதைச்சொன்னது) ’அமுதும் தேனும் எதற்கு பாடுங்க’ என்றார். தேனாக இருந்தது கச்சேரி முழுவதும். அவரே எழுதிய ஆங்கிலப்பாடல் லார்ட் முருகா லண்டன் முருகா பாடலும் பாடினார். :)

சனி மாலையன்றும் அரங்கம் நிரம்பிவிட்டது. சுப்புடு குடும்பத்தினர் ஒரு அறக்கட்டளை நிறுவி இளைஞர்களுக்கு சுப்புடுவிருது வழங்க இருக்கிறார்கள். இவ்வருடத்திற்கான விருது குமாரி சௌம்யாவிற்கு வாய்ப்பாட்டிற்கும் , மிருதங்கத்திற்கு ஒரு சிறுவனுக்கும் கிடைத்தது. (ஸ்ரீராம் எனநினைக்கிறேன்).

ஐ ஏ எஸ் பாலசந்திரன் அவர்கள் தமிழிசையை பரவலாக்கவேண்டிய அவசியத்தினைக் குறித்து சிறிய உரையாற்றினார்.
நித்யஸ்ரீ தத்வமறிய தரமா”என்று கணபதியை ரீதிகௌளையில் பாடித் தொடங்கினார்.
சென்ற இசைவிழாவின்போது நித்யஸ்ரீ அவர்களின் பாட்டி காலமானதால் தில்லி வர இயலாமல் போனது. எனவே இம்முறை பாட்டி பாடும் பாடல்களில் தனக்குப் பிடித்தமானவற்றை பாடினார்.
'மரியாத காதய்ய’, பாகிமாம்ராஜ ராஜேஸ்வரி, ஈசனே கோடி சூர்யப்ரகாசனே ,ப்ருஹிமுகுந்தேத்தி ரசனே...
எங்கள் ஊர் மலை மந்திர் முருகன் மேல் பாடப்பட்ட ’உத்தர ஸ்வாமிமலை உகந்த முருகா உன் சிற்றடி தனில் பணிந்தேன்’ என்ற பாடலையும் பாடி தில்லி மக்களை குளிர்வித்தார். இந்தப் பாடல் மீனாட்சி அம்மாள் என்பவர்களால் இயற்றப்பட்ட பாடல். அவர்களை முருகன் பாட்டியென்றே பலரும் அறிவார்கள். முருகன் மேல் விருப்பமாக பல பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிமணியின் ’எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு ?’(பெருமைக்கென்ன கேக்கனுமா..)

’தீராத விளையாட்டு பிள்ளை ’.. அதே பாட்டியின் சாயலில் பாடினார்.

’கோட்டைக்கட்டாதேடா மனிதா ..’ இந்தப்பாடலை நான் கேட்டதே இல்லை.
மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் வசந்த் ராக தில்லானா பாடி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

மகளுக்கு நித்யஸ்ரீ என்றால் மிகப்பிடிக்கும். அவருடைய கையெழுத்தைப்பெறவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் மேடையேறினோம். சிரித்தமுகத்துடன் ”பாடறியாம்மா .. நல்லா பாடு” என்று கூறி கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். வீடு வரும்போது தீராதவிளையாட்டுப்பிள்ளையே காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.