December 20, 2006

அட அவரா நீலமணி

அது ஒரு தீபாவளி நாளின் காலைப் பொழுது. தெருவெங்கும் சரவெடிகளின் சிகப்பு வெள்ளைக் காகிதங்களின் குப்பை.குளிர் காற்றில் வெடி மருந்துகளின் நெடி. வீட்டில் சாமி கும்பிடும் நல்ல நேரம் அது ஆகையால் தெருவில் நடமாட்டமும் வெடிச்சத்தமும் குறைந்தே இருந்தது.

காலனியின் நடுவில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் எப்போதும் சத்தமிட்டு கொண்டிருக்கும் இளைஞர் கூட்டமும் கூட அன்று பண்டிகையில் மூழ்கி இருந்தார்கள். மதியத்துக்கு மேல் வருவார்களாக இருக்கும்.
பால் பூத் மாரியப்பன் மட்டும் நீல டப்பாக்களை அடுக்கும் வேலையில் இருந்தான்.

முக்குவீட்டில் மட்டும் காலையில் ஊரிலிருந்து வந்திருந்த கதிருடைய காரில் சின்னக் குழந்தைகள் ஏறி பஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்பொது தான் அவன் சத்தமிட்டு கொண்டே ஓடி வந்தான். அவன் சட்டையெல்லாம் ரத்தம். இடது கையால் வலது தோள்பட்டையை பிடித்தவண்ணம் ஓடிவந்தான்.
அங்கே தான் காயம் பட்டிருக்க வேண்டும்.

பின்னால் ஒருவன் பெரிய அறுவாள் சுழட்டிய வண்ணம் "நில்லுடா" என்று கத்தியவாறு துரத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தான். குழந்தைகளில் பெரியவள் அதை பார்த்ததும் பயந்து " வாங்க எல்லாரும் வீட்டுக்குள்ள போயிடுவோம் " சொல்லிக் கொண்டே ஓடினாள்.

வீட்டில் பெரியவங்க எல்லாம்" என்ன என்ன" என்று எட்டி பார்த்து கொஞ்சம் புரிந்ததும் கதவை வெகுவேகமாக அடைத்து, "பிள்ளைங்களா என்ன பார்க்கறீங்க போங்க" என்று விரட்டி விட்டார்கள்.சன்னலை எல்லாம் கூட மூடிவிடுவது தான் நல்லது என்று வீட்டு பெண்கள் சொல்ல அதுவும் மூடப்பட்டது . கொஞ்சம் திறந்து நடப்பதை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

மாரியப்பன் எங்கே போனான் எப்படி தெரியவில்லை பயந்து ஒளிந்து கொண்டிருப்பான் போலும்.
மற்ற வீட்டினரும் இதை தான் செய்து விட்டிருந்தனர்.
அவனோ நேராக முக்கு வீட்டிற்கு தான் வந்தான்.அங்கே தானே குழந்தைகள் வாசல் கேட்டை பூட்டாமல் பயத்தில் ஓடிவந்திருந்தார்கள். வந்தவன் வாசல் கதவுகளையும் சன்னலையும் தட்டி "காப்பத்துங்க காப்பத்துங்க" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். "முடியாதப்பா போய்டு இங்கருந்து" உள்ளிருந்து ஒரு குரல்.சில நொடிகளில் அவன் தன் நிலை உணர்ந்து மீண்டும் ஓடத்துவங்கினான்.

சிறிது நேரத்தில் அத்தனை வீட்டிலிருந்தும் ஓரிருவர் வெளியே வந்து நடந்தது என்ன என்று கூடி பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்." பாவம்பா அந்த ஆள்", யாரோ .
"நான் உள்ளே இருந்தேன் இல்லைன்னா" இது இன்னொருத்தர். "சரி சரி பார்த்தேன் வச்சேன்னு சொல்லாதீங்க வெளியே அப்புறம் யார் மாட்டிகிட்டு கேஸு கோர்டுன்னு அலையறது" இப்படியே கலைந்தனர்.

பின் வழக்கம் போல் எல்லாரும் வெடி வெடித்து புத்தாடை உடுத்தி அக்கம் பக்கத்தில் பட்சணம் பரிமாறிக்கொண்டு ..
என்ன ஒரு வித்தியாசம் , அன்று எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை அவனை பற்றி பேசிக் கொண்டார்கள்.

காலையில் பேப்பரில் என்ன வந்திருக்கும் யார் அவன் எல்லாரும் ஆவலாய் காத்திருந்தனர். "முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் இதோ மூன்றாம் பக்கம் போட்டிருக்கானே . கோவையில் நேற்று காலை சமூக சேவகர் வெட்டிக் கொலை"

"என்ன அவர் ஒரு சமூக சேவகரா?? என்ன போட்டிருக்கான் படிங்க சத்தமாய்" . " நீலமணி என்னும் அவர் அப்பகுதியில் நடக்கும் சாராயக்கடையின் மூடுவிழாவுக்கு காரணமாக இருந்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்" . "அட இவரா நீலமணி!!.. நம்ம பகுதி சாராயக்கடையை மூடச் சொல்லி மனு குடுத்து ஒன்னும் நடக்கலையேன்னு கவலைப்பட்டு கொண்டு இருந்தோமே நமக்காக கஷ்டப்பட்டவர காப்பத்தாம விட்டுட்டோமே .

என்னங்க பண்றது அவர் நேரம் அப்படி. நீலமணியை எளிதாக மறந்துவிடலாம். இனி என்ன ? இரவுகளில் பெண்கள் தனியாக வரலாம். அடிதடி கலவரம் இல்லை ,பயமில்லை .இனி அடுத்த பிரச்சினை வரும் வரை நீலமணி போன்றோர் நியாபகம் வருவதற்கு இல்லை.

13 comments:

வல்லிசிம்ஹன் said...

நல்ல கதை லட்சுமி.
பரிதாபமா இருக்கு.
சமூக விழிப்பு எப்போதுமே வர நாளாகும்.

லட்சுமி said...

என் முதல் சிறுகதை இது.நல்ல கதை என்று நீங்கள் சொன்னதே திருப்தி அளிக்கிறது.நன்றி.

Divya said...

\"என்ன ஒரு வித்தியாசம் , அன்று எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை அவனை பற்றி பேசிக் கொண்டார்கள்.\"


லட்சுமி, ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க. பாராட்டுக்கள்!!
தொடர்ந்து சிறூகதை எழுதுங்கள்!

லட்சுமி said...

நன்றி திவ்யா .கண்டிப்பாக முயற்சியை தொடர்கிறேன்.

இயற்கை நேசி|Oruni said...

அட, இப்படியெல்லாம் யோசிச்சுரிக்கீங்களே! இப்போ இது மாதிரி டுவிஸ்ட் வைச்சு யோசிச்சு எழுதுனமாதிரி தெரியலையே.

கதையில இருக்கிறது தினசரி செய்தி நியூஸ்தானே. :-)

சென்ஷி said...

இங்க லட்சுமி லட்சுமின்னு யாரோ பின்னூட்டம் போட்டிருக்காங்கக்கா.. யார் அது :-)

சென்ஷி said...

// இயற்கை நேசி|Oruni said...

அட, இப்படியெல்லாம் யோசிச்சுரிக்கீங்களே! இப்போ இது மாதிரி டுவிஸ்ட் வைச்சு யோசிச்சு எழுதுனமாதிரி தெரியலையே.//

அப்படின்னா அக்கா இப்பல்லாம் யோசிச்சு எழுதறது இல்லைன்னு சொல்றீங்களா :-)

தமிழ் பிரியன் said...

ஆகா.. இதுதான் முதல் முயற்சியா? பரவாயில்லை.. நல்லா தான் எழுதி இருக்கீங்க

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தெகா..தினசரி படிச்சு ந்யூஸ் வச்சு கதை எழுதலாம்ன்னு கூட யாரோ ஐடியா குடுத்திருக்காங்க.. ஆனா இது உண்மை கலந்த கற்பனைக்கதை..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தெகாவை கேக்க நினைச்ச கேள்விய நீ கேட்டுட்டப்பா சென்ஷி..
..அந்த லட்சுமியா ..அது சின்ன வயசு முத்துலெட்சுமி.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி தமிழ்ப்ரியன்>> ;)

விக்னேஷ்வரி said...

முதல் சிறுகதை நல்லா இருக்கு அக்கா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி விக்னேஷ்வரி..