August 2, 2010

அறியாமையே ஆனந்தமோ?

கருமையின் பக்கங்களை அழித்து வெள்ளையாக்கும் முயற்சியில் காற்று ஈடுபட்டிருந்தது. இருந்தும் நன்றி மறக்காமல் காத்து நின்ற மரங்களுக்கு சற்றே ஒரு சின்னத்தூறலைச்
சிந்திச்சென்றது மேகங்கள் .முகம் கழுவிய மரங்கள் பலநாள் தூசிகள் நீங்கி பொலிவாய் தலையாட்டியதில் குளிர் காற்றால் வெளி நிரம்பி இருந்தது. கட்டாந்தரை முழுதும் விரிந்த புல்வெளியாகி இருந்தது. நாலைந்து மைனாக்கள் ஒன்றையொன்று துரத்தியது . நேற்றைய மழையின் மிச்சங்களில் சிறகு விரித்து கீச்சிட்டு குதித்தன. பெயர்தெரியாத பறவைகளும் கூட இருந்தன. இருந்த அமைதியை கிழித்தபடி அதன் குரல் கூப்பாடு போடுவது போல இருந்தது.

நின்ற இடத்திலிருந்து தெரிகிற ஐந்தாறு மரங்களில் ஒன்றைத்தவிர எதற்கும் எனக்குப் பெயர் தெரியவில்லை. நேற்றைய வாசிப்பில் அந்த கதையில் வங்காள கதாசிரியர் அவர் வீட்டு முற்றத்தில் இருந்த மரங்களின் பெயர்களையும் அது பூத்த காலத்தையும் கிளைத்த காலத்தையும் கூட விவரித்திருந்ததை நினைக்கையில் ஒரு வெட்கம் ஓடியது. எதை அறிந்திருக்கிறோம்?

அறிதல் !!. அறியாமலே செய்யும் செயல்கள் இப்படி எத்தனையோ உண்டே? அறியாமையைபோல ஒரு அமைதியில்லை என்றும் தோன்றி இருக்கிறதே?. அதுபோன்றதொரு நேரத்தை நினைத்தபடி வெட்கம் துறக்கலாம்.

அறியாத மனிதர்களிடம் கூட அறிந்தவர்கள் போல பேசுவதில் ஆனந்தமடையும் அதே மனதிற்கு தெரிந்த மனிதர்களிடமும் அறியாதவர்களாய்த்தான் இருந்தோம் என உணர்ந்து நிற்க நேரும் கணங்களும் வாய்ப்பதுண்டு. தலைகீழ் பிம்ப வாசிப்புகளைத் தொடரும் நியாயம் அழிக்கும் தன்முனைப்புகள் அந்த மேகங்களைப்போல ஏதும் சின்னத்தூரலையும் கூட விட்டுச் செல்வதில்லை.

எத்தனையெத்தனையோ முகங்களில் ஒன்றாக, அறியாதவர்களை கடக்கையில் தோன்றாத சில பதட்டங்கள் அறிந்தவர்களை கடக்கையில் தோன்றி மறையும்.

யாருமற்ற தனிமையில் குரலெடுத்துப் பாடிய பாடலில் முதல் வரியில் இல்லாத நயம் இரண்டாம் வரியில் வந்து நின்றது. அந்த பாடலின் ராகத்தையும் தான் அறிந்திருக்கவில்லை.

பெயர் தெரியாத மஞ்சள் நிறப்பூ பூக்கும் மரமொன்றை சிறிய செடியாக நடைபாதை ஓரத்தில் நேற்று நட்டு வைத்திருக்கிறேன். மஞ்சள்பூ மரத்திலிருந்து நானே பறிந்த விதையில் வந்த செடி தான் என்பதால் மஞ்சளாய்த்தான் அது பூக்குமென்பது மட்டும் தெரியும். அதுபோதாதா?

34 comments:

வெங்கட் நாகராஜ் said...

சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு விதத்தில் ஆனந்தமே சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

துளசி கோபால் said...

ignorance is bliss


அந்தக் காலத்துலே 'பேயடிச்சுச் செத்தவர்கள்' அதிகம்!!!!!

ஆயில்யன் said...

//அறியாதவர்களை கடக்கையில் தோன்றாத சில பதட்டங்கள் அறிந்தவர்களை கடக்கையில் தோன்றி மறையும்.//
:)

தேவையற்ற விசயமென ஒதுங்கி செல்ல/செல்ல முயல்வதும் பின் அதை பற்றி தேவையற்ற வகையில் - ஏன் எஸ்கேப் ஆக நினைக்கிறோம் - என நினைத்து வருத்தமுறுவதும் ஏனோ தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது !

Sanjai Gandhi said...

தயவுசெய்து வாரம் 4 பதிவுகள் எழுதவும்..


முடியல..

☀நான் ஆதவன்☀ said...

:)) ஏதோ வெறுமை, தனிமையில இந்த பதிவு எழுதியிருக்கீங்க போலயேக்கா. ஒவ்வொரு பத்தியும் ஒன்னொக்கொன்னு தொடர்பு இருக்கிற விதம் ரொம்ப நல்லாயிருக்குக்கா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வெங்கட் .. ’சில’ ந்னு அழுத்திச் சொல்லிட்டீங்க :)
------------------------
நன்றி துளசி :))
-----------------------
அறியாமையால் தான் தொடருதோ ..அப்ப அது ஆனந்தமில்லையா ? ஆயில்யன்
----------------------------
சஞ்சய் பதிவுக்கு மிக பொருத்தமான கமெண்ட் உங்களுது தான்..
:)
-----------------------------
ஆமா தனியா இருக்கும் போது யோசிக்கிறத அப்படியே தோணுனா மாதிரியே எழுதினா என்னன்னு எழுதியது தான்.. :)

கோபிநாத் said...

\\எத்தனையெத்தனையோ முகங்களில் ஒன்றாக, அறியாதவர்களை கடக்கையில் தோன்றாத சில பதட்டங்கள் அறிந்தவர்களை கடக்கையில் தோன்றி மறையும்.\\\

ம்ம்ம்..நிஜம் !

அம்பிகா said...

\\பெயர் தெரியாத மஞ்சள் நிறப்பூ பூக்கும் மரமொன்றை சிறிய செடியாக நடைபாதை ஓரத்தில் நேற்று நட்டு வைத்திருக்கிறேன். மஞ்சள்பூ மரத்திலிருந்து நானே பறிந்த விதையில் வந்த செடி தான் என்பதால் மஞ்சளாய்த்தான் அது பூக்குமென்பது மட்டும் தெரியும். அதுபோதாதா?\\
ஒரு நல்ல கவிதை வாசித்தது போல் உணர்ந்தேன். அருமை.

Anonymous said...

நினைவோட்டம் நல்லா ஓடுது.

ஹேமா said...

அக்கா...சிந்தித்த வேகத்தில் மனம் சொன்னதை அப்படியே பதிவாக்கியிருக்கிறீர்கள்.பதிவில் நானாக இருந்து பார்த்தேன் ஒருசில நிமிடம்.அதே உணர்வு !

'பரிவை' சே.குமார் said...

சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு விதத்தில் ஆனந்தமே சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

தலைப்பு அருமை.

அறியாமை ஆனந்தம்தான்.

அறிந்தும் அறிந்து கொள்ளாதது போல் குழந்தைகளிடம் கேட்கிறோமே அம்மாவிற்கு தெரியவில்லையாம் செல்லகுட்டி சொல்வாளாம்,என்று.
குழந்தைகள் சொல்லும் போது நமக்கு ஆனந்தம்.

குட்டி கவிதை போல் உள்ளது.

விக்னேஷ்வரி said...

அக்கா, நிஜமாவே சொல்றேன். செம பதிவு இது. ரசிச்சு ரசிச்சு வாசிச்சேன். ரொம்பப் பிடித்தமா இருந்தது.

Thamiz Priyan said...

எல்லாரும் பாராட்டுறாங்க.. ஒருவேளை எண்டர் தட்டி போட்டு இருந்தா கவிதை லிஸ்ட்டில் போட்டு இருக்கலாம்.. :)

Iyappan Krishnan said...

பெயர் தெரியாத
மஞ்சள் நிறப்பூ பூக்கும்
மரமொன்றை
சிறிய செடியாக
நடைபாதை ஓரத்தில்
நேற்று நட்டு வைத்திருக்கிறேன்.
மஞ்சள்பூ மரத்திலிருந்து
நானே பறிந்த
விதையில் வந்த செடி
தான் என்பதால்
மஞ்சளாய்த்தான்
அது பூக்குமென்பது
மட்டும் தெரியும்.
அதுபோதாதா?

வல்லிசிம்ஹன் said...

அருமையாக இருக்கிறது.லக்ஷ்மி.
பாதிகனவு பாதி நினைவு என்பது போல மிதக்கும் எழுத்து. அதனாலயே அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

மங்கை said...

ஏம்பா இப்படியும் எழுதி பார்க்கலாம்னா... இல்லை என்னோட ஃபோன்ல பேசின பாதிப்பா...

சுத்தி இருக்கிற எல்லாமே தெரியாதைவைகளா இருக்கறதும் மனசுக்கு சில சமயம் தேவையானது தான்

Thekkikattan|தெகா said...

அட! இது என்ன ஒரு வித்தியாசமான ஓட்டமா இருக்கே. ஆரம்பிச்சா அடுத்தடுத்துன்னு நழுவி ஓடுதே நடை. காத்திரமா இருக்குதுன்னு சொல்லுவாங்களே அதுதானா இது.

// சில பதட்டங்கள் அறிந்தவர்களை கடக்கையில் தோன்றி மறையும்.//

இது மிகச் சரியான அவதானிப்பு. இதுக்குப் பின்னாடி சில உளவியல் காரணங்கள் இருக்குமோ? எனக்கு என்னோட அட்வைசருக்கு முன்னாடி இது மாதிரி தோணும்... :)

பனித்துளி சங்கர் said...

நேர்த்தியான எழுத்து நடை வார்த்தைகளின் தேர்ந்தெடுப்பு எதார்த்தங்களை தழுவி செல்கிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

டுபாக்கூர் பதிவர் said...

அடர்த்தியான நடை...சமயங்களில் இதுவும் தேவையாயிருக்கிறது.

என்னோட மொத கமெண்ட் பப்ளிஷ் பண்ணீடுங்க :))

Chitra said...

எத்தனையெத்தனையோ முகங்களில் ஒன்றாக, அறியாதவர்களை கடக்கையில் தோன்றாத சில பதட்டங்கள் அறிந்தவர்களை கடக்கையில் தோன்றி மறையும்.

......Superb! வித்தியாசமான எண்ணங்களை, அருமையாக நீங்க சொல்லி இருக்கும் விதத்தை ரசித்து வாசித்தேன்.

தமிழ் said...

அருமை

Unknown said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க!

//தயவுசெய்து வாரம் 4 பதிவுகள் எழுதவும்.. // அதே!

எண்டர் தட்டிய ஜீவ்ஸ்க்கும் ரிப்பீட்டு:-)

இன்னும் எழுதுங்க. எலக்கியம் கைக்குள்!

ஜோக்ஸ் அபார்ட், வாழ்த்துகள்!

பத்மா said...

அருமை அருமை

ignorance is bliss .true true but only sometimes

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி )
-------------------
ஆகா அம்பிகா பாருங்க கீழ ஜீவ்ஸ் எண்ட்டர் தட்டி கவிதையாக்கிட்டார்.
நன்றி :)
-------------------------
நன்றி சின்னம்மிணி ..:)
------------------------
நன்றி ஹேமா:)
-----------------------
நன்றி சேகுமார் :)
0------------------
குழந்தைகளிடம்பேசும் பேச்சு சரியான உதாரணம் நன்றி கோமதிம்மா
-------------------------
நன்றி விக்னேஷ்வரி :)
--------------------
தமிழ் இந்தா போட்டாச்சுல்ல :)
--------------------------
ஜீவ்ஸ் நன்றி நன்றி ;)
--------------------------

வல்லிம்மா நன்றி :)
------------------------
மங்கை உங்களைப்போலத்தானே நானும் அதே யோசனை தான் ;)
------------------------
ஷங்கர் நன்றி :)

--------------
முதல் பின்னூட்டத்திலேயே ப்ரபல பதிவர்ன்னு நிரூபிக்கிறிங்க.. வாழ்த்துக்கள் பி.ப :)
-------------------------------
நன்றி சித்ரா..:)
_________
நன்றி திகழ் :)
------------------------
நன்றி கெக்கே
அவருக்கு 4 பதிவு வாரத்துக்கு எழுதுறத சேத்து இப்படி படுத்திட்டேன்ன்னு அவருகு குழப்பம்.
---------------------
நன்றி பத்மா உண்மை தான்ப்பா :)ம்,

Thekkikattan|தெகா said...

நல்ல வேளை எனக்கு இன்னும் பதில் பின்னூட்டம் போடல... இன்னொரு விசயம் சேர்த்துக்கிறேன்.

அறியாமையில வாழ்வதில் ஆனந்தம் இருக்கிறது, ஒத்துக்கிறேன்! ஆனா, அது எல்லாச் சூழலுக்கும் ஒத்து வராது. ஏன்னா, பெரிவியிங்க இப்படியும் சொல்லியிருக்கங்கன்னா - knowledge is power, wisdom is god!! ... so watch out :D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ உங்களுக்கு பதில் சொல்ல விட்டுப்போச்சா தெகா..
அறியாமையிலேர்ந்து வெளியே
வரவைக்கறதுக்கு ’நாலெட்ஜ் ஒரு பவர’் சரியான வழிநடத்தல்....
ஆனா உள்ளயே உட்கார்ந்துட்டு இப்படி சொல்லிக்கிறேன் போல அறியாமை ஆனந்தம்

யாழினி said...

அக்கா உங்க எழுத்து
மாறுபட தொடங்கியிருக்கு
எனக்கு பிடிச்சிருக்கு
நிறைய எழுதுங்க.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு!

Guruji said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

ராமலக்ஷ்மி said...

அருமை. எந்த வரிகளை என்று சொல்ல? இருப்பினும்..

//அறியாத மனிதர்களிடம் கூட அறிந்தவர்கள் போல பேசுவதில் ஆனந்தமடையும் அதே மனதிற்கு தெரிந்த மனிதர்களிடமும் அறியாதவர்களாய்த்தான் இருந்தோம் என உணர்ந்து நிற்க நேரும் கணங்களும் வாய்ப்பதுண்டு. தலைகீழ் பிம்ப வாசிப்புகளைத் தொடரும் நியாயம் அழிக்கும் தன்முனைப்புகள் அந்த மேகங்களைப்போல ஏதும் சின்னத்தூரலையும் கூட விட்டுச் செல்வதில்லை.//

அழகு.

butterfly Surya said...

வாவ். அருமை.

அரசூரான் said...

அறியாமை நிச்சயமாய் ஆனந்தமே. அதனால்தான் குழந்தைகள் பெரியவர்களைவிட ஆனந்தமாக இருக்கிறார்கள்.

அந்த மஞ்சள் நிற பூ பூக்கும் மரத்தின் பெயர் - சரகொன்னை. கொன்னை-யின் பூவும் காயும் சரம் சரமாக இருக்கும் அதனால் அது சரகொன்னை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சூர்யா :)

-----------
நன்றி அரசூரான்.. உண்மை குழந்தைகள் நிறைய
தெரிஞ்சுக்கிறாங்க இப்பல்லாம்
அதனாலேயே சீக்கிரம் பெரியவங்கமாதிரி
துக்கப்படறாங்க ..
சரக்கொன்றை இல்லை நிச்சயமாக..
ஏன்னா இது சரமா தொங்காது.
கிராமபோன் ஸ்பீக்கர் மாதிரி பூக்கும் ஒரே கொத்தா..:)