August 10, 2010

இப்படித்தான் ஒருமுறை மதுரைமுத்து தில்லிதமிழ்சங்கத்துல...

அப்பா பெரியப்பாக்கள் சித்தப்பா என்று கூடி உட்கார்ந்தாலே சிரிப்புத்தான். பழைய கதையைச் சொல்லி நாங்களெல்லாம் ஆ வென்று கதை கேட்டும் சிரித்தப்படியும் இருப்போம்.
இப்படித்தான் பெரியப்பா இன்னோரு கரண்டி கூட்டாஞ்சோறு எடுக்கும் போது என்பையன் ஆரம்பித்து வைத்தான். ”தாத்தா நீங்க மட்டும் எவ்ளொ சாப்பாடு சாப்பிடறீங்க ?” (அடப்பாவி )

அவங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது.

“இப்படித்தான் ஒருமுறை தென்காசி அத்த எங்களை ஒருத்தங்க வீட்டுக்கு கூட்டிப்போனா. அங்க அவங்க பாயசம் இன்னும் கொஞ்சம் வேணுமான்னாங்க. சரின்னு சொன்னேன். அவங்க வீட்டுப்பையன் ‘ பாயசம்ன்னா எவ்ளோவும் குடிப்பீங்களோ’ன்னான்.- பெரியப்பா

”அப்பறம் அந்த பாயசத்தைக் குடிச்சீங்களா?”- என் தங்கச்சி

”ஆமா அவன் கேட்டான்னு குடிக்காமலா வருவேன்” - பெரியப்பா.

அடுத்த நாள் இன்னோரு பெரியப்பா வீட்டில் நேத்து சாப்பாடு விசயமாக சில பழைய விசயம் பேசிக்கொண்டிருந்தோம் என்றதும். பாயாசக்கதையைச் சொல்லி இருப்பானே என்று சொல்ல எல்லாரும் சிரித்துக்கொண்டிருந்தோம். இப்படி நமக்குள்ள கலகலப்பாய் இருப்பது போல . இப்படித்தான் அங்க இங்கன்னு பேசறதுக்கு பேரு ஸ்டாண்டப் காமெடியாம்.

மதுரை முத்து டீவியில் பேசப்போறார்ன்னா ஸ்டேட்டஸ்லயே இருங்க முத்து பேச்சைக் கேட்டுட்டு வந்துடறேன்னு போட்டுவிட்டுப் போகும் ஆள் . தில்லி தமிழ்சங்கத்துக்கு வந்தால் போகாமல் இருப்பமா? நல்ல கூட்டம். விமானம் தாமதமாக வந்ததால் நிகழ்ச்சியும் தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் அரங்கு நிறைந்து கலையாமல் ஆர்வத்துடன் காத்திருந்து அளித்த வரவேற்பில் அசத்தபோவது தானென்று நினைத்து வந்த முத்துவை தில்லிக்காரங்க நாங்க அசத்திவிட்டோம்.

நிகழ்ச்சியின் முன்பு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மகன் மாணிக்கம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு பாராட்டுதல் வழங்கப்பட்டது. அவரே நிகழ்ச்சியினைத் தலைமை தாங்கவும் செய்தார். முடிவில் ரசித்து சிரித்துவிட்டு காசோலை ஒன்றும் பரிசளித்துச் சென்றார்.

எதையுமே அவர் சிரிப்பாகவே பேசினார். பேச்சுக்கு நடுவில் அதிகம் கைதட்டி பேச்சைகேட்காமல் போய்விடுவோமோ என்று எல்லாரும் இருந்த போது ஒருவர் மட்டும் கையைத்தட்டிவைக்க.. ’அய்யா நான் எதோ உங்களுக்கு 200 ரூ குடுத்து கைதட்டச் சொன்னதா நினைச்சிடுவாங்க இல்ல.. தனியா தட்டாதீங்க’
சிறிது நேரத்தில் வேறொரு பக்கத்திலிருந்து தனியாக கைத்தட்டுவரவே.. ’அய்யா இப்ப அங்க போயிட்டாரா’ என்றார்.

இது போன்ற எளிய மனிதர்கள் எல்லாராலும் ரசிக்கப்படுவதும் அவசியம் தான். அவர் கூட வந்த இருவரும் விமானத்தில் முதல் முறை வந்ததையும் தமிழ்நாடு தாண்டி வந்ததையே ஒரு வெளிநாடு போல் உணர்ச்சிவசப்பட்டதையும் பார்த்தபோது எளிய மனிதர்களுக்கு இது போல பல வாய்ப்புக்களை வழங்கும் தமிழ் சங்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.



நகைச்சுவையில் சிரித்து சிரித்து முடியாமல் பலர் அங்காங்கே இருமிக்கொண்டும் கண்ணைத் தொடைத்துக்கொண்டும் இருந்தார்கள். முடிவில் ஒரு பெண்கள் குழு அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அதில் ஒரு வயதான பெண்மணி ‘ மதுரையிலிருந்து இங்கு வந்து ‘ என்று பாராட்டத்தொடங்கியதும்.. என்னம்மா அங்க...ருந்து வந்தா இந்த கொடுமை யை செய்யறேன்னு கேக்கப்போறீங்களா என்று ஜோக் அடித்துவிட்டு வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

அவருடன் நாகேஷ் செல்லக்கண்ணு என்பவர் நாகேஷ் போன்று ஆடிய நடனத்தைப் பார்த்து மகனுக்கு ஒரே சிரிப்பு. டமால் டமால் என்று சேரிலிருந்து கீழே விழுகிறார். ஆடும்போதே பந்து போல விழுந்து எழுகிறார். பீடியை வாய்க்குள்ளயே வைத்தபடி ஆடிக்கொண்டிருந்துவிட்டு திடீரென திரும்ப எடுத்து புகையை வெளியே விடுகிறார். இந்த முயற்சியால் அவர் சுவை நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறதாம் . இருந்தும் நாம் சிரிக்க ரசிக்க என்று சொல்லிவிட்டு முத்து அவர்கள் நாங்க என்னைக்கு சிரித்திருக்கிறோம் என்றார். உண்மை .

மேஜிக் அப்துல்லா மிகக்குறைந்த நேரத்தில் நிறைய மேஜிக் செய்து காட்டி அசத்தினார். ஒரு பையனை அழைத்து மேஜிக் நடுவே ஹிண்ட்களை எல்லாம் பின்னிருந்து சொல்லிக் கொடுக்க அவன் சொல்லும் பதில்கள் அரங்கத்தை அதிர வைத்தது. என்னதான் பின்னிருந்து சொல்லிக்கொடுத்தாலும் அந்த பையனும் உடனுக்குடன் அதை தானே சொல்வது போல சொல்லியதும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் வயதுக்குமீறிய விசயங்களைப் பேசவைத்ததை மட்டும் தவிர்த்திருக்கலாம்.


முடிவில் மேஜிக் சொல்லித்தருகிறேன் என்று சொல்லிவிட்டு எல்லாரையும் ஏமாத்தி டாட்டா காட்டவைத்துவிட்டார் அப்துல்லா.
அந்த மாலைப்பொழுது உரத்த சிரிப்பில் கரைந்தது.

14 comments:

☀நான் ஆதவன்☀ said...

//’அய்யா நான் எதோ உங்களுக்கு 200 ரூ குடுத்து கைதட்டச் சொன்னதா நினைச்சிடுவாங்க இல்ல.. தனியா தட்டாதீங்க’//

படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியலயே...அரங்கத்துல எல்லாரும் எப்படி சிரிச்சிருப்பாங்க :)))

Anonymous said...

மதுரை முத்து டீவி நிகழ்ச்சில பாத்திருக்கேன். நல்லா ஸ்டேண்டப் காமெடி பண்ணுவாரே.

வெங்கட் நாகராஜ் said...

மதுரை முத்துவின் நிகழ்ச்சிக்குப் போக முடியாததை நினைத்து வருந்த வேண்டிய அவசியமில்லாமல் செய்தது உங்களின் இப்பதிவு. பகிர்வுக்கு நன்றி.

சென்ஷி said...

:)))

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான தொகுப்பு.

‘இப்படித்தான் ஒருமுறை’ என உங்க பெரியப்பாவின் பாயாசக் கதையுடனான ஆரம்பம் அருமை:)!

Thekkikattan|தெகா said...

அவர் கூட வந்த இருவரும் விமானத்தில் முதல் முறை வந்ததையும் தமிழ்நாடு தாண்டி வந்ததையே ஒரு வெளிநாடு போல் உணர்ச்சிவசப்பட்டதையும் பார்த்தபோது எளிய மனிதர்களுக்கு இது போல பல வாய்ப்புக்களை வழங்கும் தமிழ் சங்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும். //

இதாங்க நானும் சொல்லிகிட்டு இருக்கிறது. முன்னமே ரொம்ப பிரபலமாகி இருக்காங்ககிறதுக்காக சொல்ற அனைத்திற்கும் ஆமா சாமி போட்டு வைக்கிறதோ, சிரிச்சு வைக்கிறதோ பெரும் வன் கொடுமை :)...

மதுரை முத்து நகைச்சுவை எப்படி உருவாகுதுன்னு சொன்ன விசயம், informative :)

Thamiz Priyan said...

மதுரை முத்து யாருன்னு தெரியல... ஆனா சிரிப்பில் ஆழ்த்தி இருக்கார்னு பெருமையா சொல்றீங்க... ம்ம்ம் நல்லபடியா இருக்கட்டும் தில்லி தமிழ் சங்கம்.

இப்படித் தான் ஒரு முறை.. எங்க ஊர்ல..

வேணாம் அடிக்க வருவாங்க.. ஹிஹி

கோபிநாத் said...

ஆகா..சூப்பரு ;))

நானும் மதுரைமுத்துவின் ரசிகன் தான். கடைசியில ஏதாச்சும் கருத்து சொல்லவரே சொன்னாரா ?? ;))

அம்பிகா said...

நல்ல அசத்தலான பகிர்வு. மதுரைமுத்துவின் சரளமான, வேகமான நகைச்சுவை... அருமையா இருக்கும்.

ஆயில்யன் said...

மதுரை முத்து - கலக்கப்போவது யாரு ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ந்துகொண்டிருப்பவர் சுவாரஸ்யம் குறையாமல் சிரிக்கவைத்துக்கொண்டிருப்பவர்! சொல்லும் விதமும் ரசிக்கவைக்கும்!

போட்டிபோட்டுக்கொண்டு வரவேற்புகொடுத்த தமிழ்ச்சங்கத்திற்கு வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

:-)))

'பரிவை' சே.குமார் said...

மதுரை முத்து டீவி நிகழ்ச்சில பாத்திருக்கேன். நல்லா ஸ்டேண்டப் காமெடி பண்ணுவாரே.

பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

மதுரை முத்து காமெடி பார்த்த நினைவு இல்லை .

பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு.

எளிய மனிதர்கள் காமெடியைப் பார்த்து அவர்களுக்கு ஆதரவும்,வாய்ப்புகளும் கண்டிப்பாய் தர வேண்டும்.

தமிழ் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

நினைவாலே said...

நானும் என் குடும்பத்தாரும் முத்துவின் ரசிகர்கள் ஆனல் நேரில் பார்ததில்லை