August 8, 2011

கவிஞர் தாமரை

முன்பு ஈழநேசன் தளத்திற்காக கவிஞர் தாமரையைப் பேட்டிக்கண்டு எழுதி இருந்தேன். அவர்கள் தற்போது தளத்தை முல்லை என்ற பெயரில் மாற்றிவிட்டிருக்கிறார்கள். எனது தளத்தில் ஒரு சேமிப்பிற்காக இங்கே இணைத்திருக்கிறேன்.
----------------------------------
16.10.09

கனிமொழி மற்றும் வைசாலி கண்ணதாசன் போன்றோர் முன்பே பாடல்கள் எழுதி இருந்தாலும் அவர்கள் திரையிசைப் பாடலாசிரியர்களாக தங்கள் துறையை மாற்றிக் கொள்ளவில்லை. இயந்திரவியல் படித்து இயந்திரங்களுடன் பழகத்தலைப்பட்ட ஆறுவருடங்களின் பின் கவிதைகளுக்கான தன் தாகத்தை உணர்ந்தவராய் பாடல் புனையத் தொடங்கியவர் கவிஞர் தாமரை.


பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அறியப்படத் தொடங்கியபோது இயக்குனர் சீமானால் திரைத்துறையில் ’இனியவளே’ திரைப்படத்திற்காக தேவாவின் இசையில் ’தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆண்கள் மட்டுமாய் (நடிப்பு தவிர்த்து) இருந்துவந்த துறைக்கு பெண் வருவதும் தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பதும் எளிதானது அன்று.


கவுதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் எழுதிய பாடல்கள் இவருக்கு மிக நல்ல பெயரை ஈட்டித்தந்தன. சின்னத்திரையிலும் கணேஷ் வசந்த், பஞ்சவர்ணம் , பாக்யராஜின் “ ஒரு கதையின் கதை” போன்ற தொடர்களுக்காகப் பாடல்கள் எழுதிய அனுபவமும் இவருக்கு இருக்கிறது. முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்ட ’மித்ரு மை ப்ரண்ட்’ படத்தில் இவர் பாடலாசிரியராக இருந்திருக்கிறார்.

பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்தப் பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்பற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ்ச் சொற்களை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்தப் புதிய தமிழ்ச் சொற்களை என்னவென்று தேடித் தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.


மேலும், இரட்டை அர்த்தக் கலப்புக்கள் மற்றும் ஆபாச வரிகள் இன்றி வெளிவரும் மிக மெல்லிய உணர்வுகளைக் காட்டும் வரிகளைக் கொண்ட தாமரையின் பாடல்கள் மக்களின் மனதை வருடி மகிழ்விக்கிறது . ஃபைவ் ஸ்டார் படத்தின் ஒரு பாடலில்
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்
எளிமையாகவும் காதலைச் சொல்வதில் நளினமாகவும் வந்து விழுகிறது வார்த்தைகள்.

வேண்டாத வேலையென்று ஈழத்துப் பிரச்சனைகளை பலர் தவிர்த்துக் கொண்டிருக்க ,சிலரோ ஆறுதலாகப் பேசிவிட்டு அமைதிகொள்ள , தாமரை அதிகாரங்களையும் எதிர்த்துக் குரல் கொடுத்த வண்ணமிருக்கிறார். தன் கவிதைத் தொகுப்புகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் அவரின் எண்ணங்களை உரத்துச் சொல்கிறார். ஈழநேசன் (தற்போது முல்லை)  இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.

இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?
ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.

முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?


இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.

தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்.

ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..

விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?
விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.
மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)


தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் நீங்கள்.. போருக்குப் பின்னும் மீள்குடியேற்றம் கனவாக, முகாம்களில் ஈழமக்கள் துயருற்று இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை சீராவதற்கு ஏற்படும் தாமதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உலகம் முழுதும் இலங்கை அரசைக் கண்டனம் செய்து கொண்டிருக்கிறாங்க. இந்தியாவோ மற்ற நாடுகளோ சொல்லி இலங்கை கேட்பதில்லை. போருக்குப் பின் இலங்கை அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பது எல்லா மத்திய, மாநில, உலக அரசுகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் முன்பே தெரிந்த விசயம் தான். அதை இன்று தான் தெரிந்துகொண்டது போல அரசுகள் நாடகம் ஆடுகின்றன. இந்தியாவே இலங்கை அரசைப் பாதுகாப்பது போல் இருப்பதனால் தான் உலகநாடுகள் தயங்குகின்றன .. போர்குற்றங்களுக்காக ஹிட்லரைச் சேர்ந்தவர்கள் பிற்காலத்தில் ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றது போல இன்று உடந்தையாக இருப்பவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
நேற்று (11.10.09)காலை என் கணவரும் முன்னின்று நடத்திய தமிழினப் பாதுகாப்பு மாநாடு நாள் முழுதும் நடந்தது. காலை பேரணியில் மூவாயிரம் பேர் கலந்துகொண்டாங்க..மாலை பொதுக்கூட்டம் இருந்தது . கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்தோம். அதில் நானும் ஒரு தீர்மானம் வாசித்தேன். இலங்கையை நாம் வற்புறுத்த வேண்டுமெனில் பொருளியல் தடை விதிக்கலாம். தனிமைப்படுத்தலாம். தமிழ்த் திரைப்படத்துறை சேர்ந்தவர்கள் படப்பிடிப்புக்கு இலங்கை போகாமல் இருக்கவேண்டும்.

18 comments:

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு அருமையான பேட்டி..

Rathnavel Natarajan said...

நல்ல நேர்காணல்.

ஆமினா said...

அருமையான பேட்டி... ரசித்தேன்

Chitra said...

Its been a long time..... How are you?

அடிக்கடி எழுதுங்க.

vetha (kovaikkavi) said...

பேட்டியை வாசித்தேன் இலக்கியம் கவிதை சம்பந்தமான கருத்துகள் மிகவும் பிடித்திருந்தது. மிக்க நன்றி. வாழ்த்துகள். என் வலைக்கு வருகையும், தந்த வார்த்தைக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்
http://www.kovaikkavi.wordpress.com

Bibiliobibuli said...

வித்தியாசமான திரைக்கவிஞர் தான் தாமரை. அதிலயும் விருதை ஒதுக்கும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்.

நல்ல கேள்விகளும், பதிலும்.

Anonymous said...

அருமையான நேர்காணல்.
எஸ்.பாயிஸா அலி

http://faiza.kinniya.net/

எஸ்.பாயிஸா அலி said...

அருமையானநேர்காணல்.
எஸ்.பாயிஸா அலி

http://faiza.kinniya.net/

ராமலக்ஷ்மி said...

முன்னர் ஒலிவடிவமாக இதன் சுட்டியைப் பகிர்ந்திருந்த நினைவு. அப்போது எனக்கு சுட்டி திறக்க இயலவில்லை. நல்ல பகிர்வு. நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பேட்டி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமைதிச்சாரல் , ரத்னவேல் , ஆமினா, சித்ரா, கவிதை , ரதி , ஃபாயிஷா ..நன்றி நன்றி..:)
ராமலக்‌ஷ்மி சே.குமார்.. நன்றி :)

வெங்கட் நாகராஜ் said...

முன்னரே படித்தது எனினும் திரும்பவும் படித்தேன்... ரசித்தேன்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

தாமரையின் பதிலகள் நல்ல தெளிவான பதில்கள்.
நன்றி முத்துலெட்சுமி.

ADHI VENKAT said...

நல்லதொரு பேட்டி.

ஆஹா! தாமரையும் இயந்திரவியல் பயின்றவரா!!!!!

ராஜ நடராஜன் said...

பகிர்வுக்கு நன்றின்னு மட்டும் சொல்லலாமென்றுதான் நினைத்தேன்.ஆனால் நேர்காணல் குறித்தும்,ஈழம் குறித்தும் கருத்து சொல்ல நினைக்கிறேன்.நேர்காணலில் கவிஞர் தாமரை குறிப்பிடும் தமிழன்ப் பாதுகாப்பு மாதிரியான நிறைய போராட்டங்களை கட்சி சார்ந்து தனித்தனியாக குரல் கொடுப்பதும் கூட தமிழர்களின் குரலுக்கு வலுவின்மைக்கு காரணமென்பேன்.

ஏனைய ஆங்கில ஊடகங்கள் தமிழீழ மக்கள் குறித்து எந்த தகவல்களையும் வெளியிடாத போது ஹெட்லைன்ஸ் டுடே மட்டும் மெல்ல் தனது குரலை இருதரப்பு சார்ந்தும் வெளியிடுகிறது.

தமிழர்களின் குரல் இணைந்து ஒலிக்கும் போது மட்டுமே தமிழீழ மக்களுக்கான உரிமைக்கான காற்று வீசும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராஜ நடராஜன் வாங்க.. வலுவின்மைக்கு காரணமா இருக்குங்கரது உண்மைதான். ஆனா.. இப்படி அப்பப்ப சலசலப்பை ஏற்படுத்தித் தானே நம்ம ஊருல இப்படி ஒரு ப்ரச்சனை ஓடுதுன்னே மக்களுக்கு தெரிவிக்கவேண்டி இருக்கு.. இல்லன்னா நம்மை திசைதிருப்ப எவ்ளோ வெட்டி விசயங்கள் நியூஸ் ல ஓடிக்கிட்டிருக்கு..மத்த நாட்டை விடவும் நம்ம நாட்டில் தான் அகதியா வந்தவங்க கூட சிறை போன்ற அமைப்பில் இருக்கவேண்டி இருக்கு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பாடல் வரிகள் மட்டுமல்ல... பதில்களும் அருமையாய் அளித்திருக்கிறார்... நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் said...

நல்ல நேர்காணல்.