March 10, 2011

நம்பிக்கை ஒளி

தில்லியில் ஆண்டுபரிட்சைக் காலமிது. எங்கள் வீட்டு வேலைக்காரங்க எப்போதும் போலல்லாமல் மிகத்தாமதமாக வருகிறார்கள். விவரம் கேட்டபோது எப்போதும் குழந்தைகள் சமையலில் வீட்டுவேலைகளில் உதவுவார்கள் இந்த நேரத்தில் அவர்களால் உதவி செய்யமுடிவதில்லை அதனால் தானே எல்லாம் முடித்துவிட்டு வருவதால் ஏற்படும் தாமதமென்று கூறினார். மற்ற வீடுகளுக்கும் ( அவங்கள்ளாம் திட்டுவாங்களே) போய்விட்டு இங்கு வருவார்கள்.

அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் ஒரு பையன். எல்லாரையும் நன்றாகப் படிக்கவைப்பதற்காகவே நான் அவர்களை மிக மதிப்பதுண்டு. அவர்களின் இரண்டாவது பெண் பள்ளி நடத்தும் இதழுக்காக ஒரு படைப்பை அனுப்பி அது வெளிவந்ததாகக் காண்பித்தார்கள். நீங்கள் என்னிடம் அடிக்கடி சொல்வீர்கள் ப்ளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அதே போல என் மகளும் எழுதி இருக்கிறாள் என்று பெருமிதமாகச் சொன்னார்கள் , ஜெயந்தி. நான் எப்பவும் அவர்களுக்கும் லெக்சர் கொடுப்பது வழக்கம்.

அதிகமில்லையென்றாலும் நானும் அம்மாவிற்கு வீட்டில் வேலைகள் செய்துகொடுப்பது உண்டு. எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை டொமினிக் சிஸ்டர் எப்போதும் ஆண்டு விடுமுறைக்கு முன்பு ஒரு அறிவுரை வழங்குவார்கள். ”பெண்களே அம்மாவுக்கு உதவுங்கள்” என்று அந்தப்பேச்சைக் கேட்கும்போதே போன உடனே எல்லா வேலையும் இழுத்துப்போட்டு அம்மாவுக்கு உதவ வேண்டுமென்று தோன்றும். சமீபத்தில் நானும் என் மகளும் ,தோழி ஒருவர் வேலை செய்யும் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு சென்று இருந்தோம் . அங்கு சிறப்பு விருந்தினராக ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் வந்திருந்தார். அவரை இப்படியாக ஒரு பள்ளிக்கு அழைத்திருந்தார்களாம் அது மிக பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாம். இவர்களுக்கு நான் என்ன அறிவுரை கூறிவிடமுடியும் நானோ ஒரு எறுமை மேய்த்துக்கொண்டிருந்த பையன் என்று நினைத்துக்கொண்டு பேசினாராம்.




”இன்றைய காலகட்டத்தில் படிப்பு என்பது மதிப்பெண் பெறுவது மட்டும் கற்றுக்கொடுக்கும் இடமாக இருப்பதால் தான் ஊழல் மலிந்து மக்கள் துன்புறுகிறார்கள் . குழந்தைகளும் பள்ளிப்படிப்பு என்று சொல்லிவிட்டு வாழ்க்கையின் பாடங்களை தெரிந்துகொள்வதில்லை. என் தாய்க்கு நான் சமையல் வேலையிலிருந்து மாடு மேய்ப்பது வரை உதவியபடியே தான் படித்தேன். அங்கே தான் வாழ்க்கை பாடம் இருக்கிறது என்றார். பெற்றோர்களே ஆணோ பெண்ணோ குழந்தைக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரத் தவறாதீர்கள் என்று”...அவ்வப்போது நானும் வேலைவாங்குவதால் மகளை நானும் அர்த்தத்துடன் பார்த்தேன். ஹுசைனம்மா கவலைப்படாதீங்க குழந்தைகளுக்கு வாழ்க்கைப்பாடத்தைத்தான் நாம் கற்றுத்தருகிறோம். :)