March 8, 2012

விடுதலை

அறைந்து கதவை சாத்தி வெளியே இருந்து தாழிடும் ஓசைக் கேட்கிறது. அப்பா வெளியே கிளம்பிவிட்டார். காலையிலேயே 5 மணிக்கே விழித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் விழித்துக்கொண்டாலும் சிந்திப்பது மட்டும் இல்லை. வீட்டு வெளிக்கதவை அறைந்து சாத்தி தாழிடும் ஓசைக் கேட்டால் மட்டுமே சிந்திக்க வேண்டும் என என் மூளை பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. 

காலையை அறிவிக்கும் ஒளிகிரணங்கள் ஏதும் எங்கள் வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் எனக்கு ஒளிகிரணங்கள் என்பது ஒரு பார்வையற்றவளின் கற்பனை வடிவமே. என் நினைவிலிருந்தே கூட அது அழிந்து போய்விட்டது. ஆனால் சூரியக்கிரணங்களின் வெப்பத்தின் உணர்வு எப்படி இருக்குமென்ற நினைவிருக்கிறது. உணர்வுகள் இன்னும் இறந்து போகாமல் இருப்பதை இதனைக்கொண்டு நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

முன்பெல்லாம் நானும் அம்மாவும் மட்டர் உரித்துக்கொண்டோ மேத்தியை ஆய்ந்துகொண்டோ வீட்டின் முன்பக்கத்தில் அமர்ந்திருப்போம். சூரியவெப்பம் எங்கள் முதுகில் படும்படி நாங்கள் அமர்ந்தபடி அவ்வேலையைச் செய்யும்போது இதமான ஒரு அனுபவமாக அது இருந்தது நினைவிருக்கிறது. 

ரெமி எங்களைவிட்டுச் சென்ற அடுத்த வாரத்தில் நாங்கள் யமுனைக்கடந்து வெகுதொலைவில் அழைத்து வரப்பட்டோம். வழி நெடுக புதிதாக முளைத்த உயர்ந்த கட்டிடங்களைத்தவிர எதுவுமே இல்லாத ஒரு புறநகர்பகுதியில் ஆள் அரவமற்ற இந்த குடியிருப்பில் வந்து இறங்கினோம். இந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த முதல் நாளைத்தவிர நானோ அம்மாவோ வெளியுலகைப் பின் கண்டதே இல்லை. 

எழுந்தபின் அறையின் உள் நடந்துகொண்டு மட்டுமிருப்பேன். கால்களுக்கான பயிற்சி அது.
அம்மா சமையலறையிலிருந்து என்னறைக்குள் எட்டிப்பார்த்தால் அவள் காபி தயாரித்துவிட்டாள் என்பதாகும். அவள் பேச்சை இழந்துவிட்டாள். நினைத்தால் அவளால் பேசமுடியும் ஆனால் பழக்கம் விட்டுப்போய்விட்டது. சொல்லப்போனால் வீட்டில் யாருமே பேசிக்கொள்வதில்லை. நான் அவ்வப்போது கிசுகிசுப்பாக எனக்குள்ளே பேசிக்கொள்வேன்.

ரெமியும் நானும் சிறுவயதாக இருக்கும்போதே அப்பா மிகவும் கண்டிப்பாகத்தான் இருப்பார். பள்ளிக்குச் செல்லும் முன் பலவகையான சட்டத்திட்டங்களை அவர் வாய் ஜெபித்தபடியே இருக்கும். அது எங்கள் பாதையில் பள்ளி வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். ரெமி மட்டும் சட்டங்களை எல்லாம் அவளுடைய நண்பர்களைக் கண்டதுமோ தெருமுனை தாண்டியதுமோ மறந்துவிட்டு அவர்களுடன் கலந்துவிடுவாள். 

அவளின் அந்த மறக்கும் குணம் தான் அவளை இந்நரகத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. இந்நேரம் அவள் எங்கேயோ சுகமாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் அவள் வந்து அழைக்கின்ற தினத்தில் நான் அவளை ஓடிச்சென்று அணைத்துக்கொள்வதற்காகவே நடைப்பயிற்சியை செய்கிறேன். ஆனால் என்னால் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. 

வெளியுலக நரகத்திலிருந்து என் இரண்டு பெண்குழந்தைகளைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா. அவரால் பணமும் சம்பாதிக்கமுடியவில்லை , எங்களுக்கென்று குடும்பம் என்பதை அவரால் ஏற்படுத்திக்கொடுக்கவும் முடியவில்லை. ரெமியின் இரண்டே வார்த்தை அவரை அத்தனை மூர்க்கமாக்கிவிட்டது. “நான் போகிறேன்” .நான் அப்பாவின் பேச்சைக் கேட்கச்சொல்லி ரெமியை மிகவும் கெஞ்சினேன். என்னால் அவளை ஏறெடுத்துப்பார்க்கமுடியாது.

அவளின் அனுமானம் சரியாகிப்போனது. அவளை நான் நம்ப மறுத்ததற்கு அவளிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். வெளியுலகத்தில் பெண்ணை போகமாய் நினைப்பவர்க்கும் வீட்டில் இவர் தன் உடமையாய் நினைப்பதற்கும் எந்த வேறுபாடுமில்லை என்று அவள் எனக்கு புரியவைக்க முயற்சித்தாள். நான் பாசத்தில் கட்டுப்பட்டிருந்தேன். முட்டாள் என்றாள். போராடுவதற்கு நீ பாசத்தை அறுக்கவேண்டுமென்றாள்..

கதவுகள் உடைபடும் ஓசை. அம்மா ஓரத்தில் ஒடுங்கி நின்றாள். வெளியே பூட்டியிருக்கும் கதவை யாரோ உடைக்கிறார்கள். குரல்கள் அதிகம் பேர் சூழ்ந்திருப்பதாகக் காட்டுகிறது. வெளிச்சம் வெளிச்சம் கண் கூசுகிறதே! நான் என்படுக்கையில் ஓடி தலைகணைகளால் முகம் மூடிக்கொண்டேன். நுழைந்தவர்களின் குரல்களில் அனுதாபமும் அருவருப்பும் ஆத்திரமும் மாறிமாறிவெளிப்பட்டது. வெளிச்சமும் காற்றுமற்ற அந்த சூழல் .யாரோ குமட்டலும் வாந்தியுமாகி ஓடுகிறார்கள். யாரோ எங்களை வெளிச்சப்பள்ளத்தாக்கில் கொண்டு நிறுத்தினார்கள்.

ரெமியின் தீதீ* என்ற குரல் ..என்னால் நிமிர்த்து பார்க்கமுடியாது.
”தீதீ தீதீ” ..என்னைப் பார் .. என்னைப்பார் நான் ரெமி வந்திருக்கிறேன். சமூக சேவகிகளுடனும் போலீஸ் துணையுடனும் தேடிக்கண்டுபிடித்து வந்த கதைகளும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை குற்றப்படுத்தும் பேச்சுக்களுமான இரைச்சலின் நடுவில் அம்மாவின் நெகிழ்வான குரல் தனித்துக் கேட்டது. ”ரெமி அவளால் நிமிரமுடியாது உனக்காக பரிந்து பேசிய தினத்தில் அவள் கழுத்து முறிபட்டுவிட்டது’ 
மீதமிருந்த என் உயிருக்கான அவளின் மௌனவிரதம் புரிந்தது. 

எங்கோ முறிகின்ற கழுத்துகளுக்கு நாமும் காரணமென்று சுற்றி இருந்தவர்க்கு புரியுமா தெரியவில்லை.

( ஒரு உண்மைக்கதையைக் கொண்டு எழுதியது) தீதீ*-அக்கா

28 comments:

Thekkikattan|தெகா said...

அடர்த்தியான எழுத்து! எழுத்து நடை தேர்ந்த மன ஓட்டத்தின் தெளிந்த வார்த்தைக் கோர்வை போன்று உள்ளது. இதே சூடோட வேற ஏதாவது கதைக் களனில் எழுத முயற்சி செய்யுங்க.

ம்ம்ம் வெளிச்சப்பள்ளத்தாக்கு :) ... சோகமே அடிநாதமாக உலுக்கி உட்கார வைக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கதையை எழுதி ரொம்ப நாளாச்சு .. முடிவு மட்டும் எழுத வரல ..ன்னு வச்சிருந்தேன்.. இப்பத்தான் எப்படியோ ஒருவழியா முடிச்சேன்..

ராமலக்ஷ்மி said...

/ முடிவு மட்டும் எழுத வரல ..ன்னு /

முடிவாக அமைந்த ஒன்பது வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது கதையின் மொத்த ஜீவனும்.

மகளிர் விடுதலை குறித்த முழுமையான புரிதலை உலகிடம் வேண்டும் சிறந்த சிறுகதை.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

Anonymous said...

நொய்டாவில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் நீங்கள் எழுதியிருக்கும் சிறுகதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாராய்ணா விகாரில் நடந்தது நான் எழுதி இருப்பது.. ஆனால் சமீபமாய் நொய்டாவில் இருசகோதரிகள் இவ்வாறு ஆனதும் செய்தியில் படித்தேன்..

வெங்கட் நாகராஜ் said...

அந்த இரண்டு சம்பவங்களும் என்னை மிகவும் பாதித்தன....

மகளிர் தினம் ஆன இன்று உண்மை நிலையைச் சொல்லும் ஒரு கதை. இன்னும் நிறைய மாற்றங்கள் வர வேண்டும் முத்துலெட்சுமி.....

வரட்டும்... சீக்கிரமே....

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

கோபிநாத் said...

\முடிவாக அமைந்த ஒன்பது வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது கதையின் மொத்த ஜீவனும். \\

ரீப்பிட்டேய் ;)))

சாந்தி மாரியப்பன் said...

எங்களையும் ரொம்பவும் பாதிச்ச அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கதை ரொம்பவும் அருமையா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி hemgan

நன்றி வெங்கட்..

நன்றி கோபி..

நன்றி சாரல்..

கானா பிரபா said...

கதை நன்று, தலைப்பை இன்னும் நச் என்று வைத்திருக்கலாமோ?

Rathnavel Natarajan said...

அருமை.

Marc said...

மிக நல்ல முயற்சி வாழ்த்துகள்

meenamuthu said...

தீதீயின் முழு வேதனையை முடிவு உணர்த்தியது. சம்பவங்கள் மனதினுள் பாரமாய் அழுந்த...

பாராட்டுகள் கயல்!

கோமதி அரசு said...

ரெமி அவளால் நிமிரமுடியாது உனக்காக பரிந்து பேசிய தினத்தில் அவள் கழுத்து முறிபட்டுவிட்டது’
மீதமிருந்த என் உயிருக்கான அவளின் மௌனவிரதம் புரிந்தது.//

எங்கோ முறிகின்ற கழுத்துகளுக்கு நாமும் காரணமென்று சுற்றி இருந்தவர்க்கு புரியுமா தெரியவில்லை.//

உண்மையில் நடந்த நிகழ்வை இவ்வளவு அழகாய் எழுதி இருக்கிறாய்
பாராட்டுக்கள்.

கதை மனதை கஷ்டப்படுத்துகிறது, இப்படி எவ்வளவு பேர் இந்த மாதிரி இருக்கிறார்கள் அவர்களுக்கு எப்போது விடிவு வரும் என்று நினைக்க தோன்றுகிறது.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமை


- மலைநாடான்

Easwaran said...

கூட்டுறவுக் கொள்கை விட்டு
கட்டுமானக் காட்டில் வாழ்வதில் உள்ள குழப்பத்தில் பலியானவர்கள் இவர்கள்.

மகளிர்தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள் வரும் என்று நம்புவோம்.

ADHI VENKAT said...

சம்பவங்கள் மனதை பிசைகின்றன.....

உண்மை சம்பவத்தை மனதில் வைத்து எழுதிய கதை அருமையா வந்திருக்குங்க.

கவிதா | Kavitha said...

எழுத்து நடை நல்லா இருக்கு முத்து. மெச்சூர்ட் ரைட்டிங்... :)

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கனமான அழுத்தமான வார்த்தகள் உணர்வுகள் கோர்த்துச் செல்கின்றது கதை...பிரபா சொன்னது போல் தலைப்பு இன்னும் கொஞ்சம் கனமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது..

முடிவு சூப்பர் பஞ்ச்...

நிறைய எழுதுங்க...

Unknown said...

அடக்குமுறை மிக்க எண்ணங்கள் கொண்ட ஒருவனால் குடும்பமும், குடும்பத்தில் அடங்கியுள்ள பெண்களும் வன்முறைக்கு உள்ளாக்க படுகிறார்கள் என்பதை வலி மிகுந்த வார்த்தைகளால் கூறியுள்ளீர்கள்.
அதே வேளையில் தங்களது இந்த பதிவு ஒரு சிறுகதையாக உருமாற வேண்டும் என்பதே என் விருப்பம் .

இதே பதிவை ஒரு சிறுகதையாக மாற்ற முயற்சி செய்யுங்கள்
ஒரு நான்கு பக்கங்கள் வருமளவு எழுதுங்கள்.

அன்புடன்
தேவராஜ் விட்டலன்

ஹுஸைனம்மா said...

கதையை வாசிக்கும்போது முன்பே அறிந்திருந்ததுபோல ஒரு பரிச்சயம் தெரிந்ததாலும், அழுத்தமான எழுத்துகளாலும் ஒருவேளை மொழிபெயர்ப்பாய் இருக்குமோ என்று தோன்றியது.

ஆனா, நீங்களே எழுதிருக்கீங்களா, என்னா எழுத்துநடை.. க்ரேட்!!

//முடிவு மட்டும் எழுத வரல .//
:-)))

//பெண்ணை போகமாய் நினைப்பவர்க்கும் வீட்டில் தன் உடமையாய் நினைப்பதற்கும் எந்த வேறுபாடுமில்லை //
உண்மை!!

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ்க்கா. அடர்த்தியான எழுத்து. திரும்ப வாசிக்க வச்சுடுச்சி. மிகச்சாதாரண கதை வித்தியாசமான பார்வையிலும், எழுத்துகளாலும் அருமையா வந்திருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

மீதமிருந்த என் உயிருக்கான அவளின் மௌனவிரதம் புரிந்தது.//

உயிரைக் காப்பாற்ற மௌனவிரதம்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி கானா தலைப்பும் கதையில் இன்னும் கொஞ்சம் மாற்றமும்
முடியும்போது செய்து மீண்டும் பதிவு செய்கிறேன்.

ரத்னவேல் நன்றிங்க

நன்றி தனசேகரன்

நன்றி மீனாமுத்து

நன்றி கோமதிம்மா

நன்றி மலைநாடன்

நன்றி ஸாதிகா

நன்றி ஈஸ்வரன்

நன்றி ஆதி

நன்றி கவிதா

நன்றி பாசமலர்

நன்றி விட்டலன் முயற்சிக்கிறேன்

நன்றி ஹுசைனம்மா

நன்றி ஆதவன்
நன்றி ராஜராஜேஸ்வரி

எம்.ஏ.சுசீலா said...

தாமதமாகப் படித்ததற்கு வருந்துகிறேன்.மிகச் செறிவான நடையில் சிறப்பாக வந்திருக்கிறது.சிறுகதையின் குறுகத் தரித்த குணம் இதில் நயமாகக் கச்சிதமாகக் கூடி வந்திருக்கிறது.ஆனாலும் இன்னும் சற்று விரித்துப் பார்க்கலாம்.நீங்கள் சிறுகதைகள் நிறைய எழுதக் கட்டாயம் முயலலாம்..அதற்கான தகுதியை இப்படைப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுசீலாம்மா மிக்க நன்றி..

ezhil said...

வலைச்சரம் எம்.ஏ.சுசிலா அம்மாவின் பதிவின் மூலமாக உங்கள் கதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ”ரெமி அவளால் நிமிரமுடியாது உனக்காக பரிந்து பேசிய தினத்தில் அவள் கழுத்து முறிபட்டுவிட்டது’
மீதமிருந்த என் உயிருக்கான அவளின் மௌனவிரதம் புரிந்தது.

எங்கோ முறிகின்ற கழுத்துகளுக்கு நாமும் காரணமென்று சுற்றி இருந்தவர்க்கு புரியுமா தெரியவில்லை.
இன்னமும் பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது என சமுதாயத்திற்கு புரிய வைக்கும் கதை
என் முக நூலில் பகிர்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி எழில் .. :)