March 10, 2014

ஓவியம்போல் கவிதை போல் குறும்படங்கள்

10th IAWRT Asian Women's Film Festival
(The International Association of Women in Radio and Television )
 முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்விற்கு சென்றேன். குறும்படங்களின் சிறுகுறிப்பு என்னை இவற்றைப் பார்க்கத்தூண்டியது. நானும் இப்படி முயற்சி எல்லாம் முன்பு செய்திருக்கிறேன். பார்த்தப்படங்களைப்பற்றி ஒரு நினைவுக்குறிப்பு.

 Watermelon, fish and half ghost | payal kapadia - 11 நிமிடங்கள்

 ஒரு ச்சால் ந்னு சொல்கிற குடியிருப்பில் இருக்கிற பழக்கமான வாழ்க்கையைப் பற்றிய ஆரம்பம் எனக்கு மிகவும் பிடித்தது. நேரம் என்பதே அங்கே முக்கியத்துவமற்றது போல இருந்தது ஆனா நேரத்தைக் கணக்கில் கொண்டு செய்யும்  எந்திரத்தனமாக செயல்பாடுகளால் அவர்கள் வாழ்வதை உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு குரல் சன்னமாக பிண்ணனியில் ஒலிக்க படம் துவங்கியது.  காட்சி நகரும் இடங்களை எல்லாம் கவனிக்கும் ஒரு மனக்குரலின் பதிவு.

பாதியில்  ஐயர் மறந்து போன மந்திரத்தால் அரையுடல் ஆவியாக பாட்டிக்கு மட்டும் காட்சி தரும் தாத்தா . அதை நினைத்து பாட்டியின் தினப்படியான புலம்பல். பாதியில் நின்றுவிட்டது சிரார்த்தம். அவர் நிம்மதியற்றிருக்கிறார் அவர் நிம்மதியற்றிருக்கிறார்.  நிம்மதியற்று  இருப்பதெற்கென்றே இறந்த கணவர்  காரணமாக ஒரு கவலையை ஏற்றி வைத்திருப்பாரோ?  நிழல்கள் படம்  போல ஒரு இளங்காதல் ஜோடி. கீழ்வீட்டில் இளம்பெண். மாடியில் கவிதை வாசிக்கும் இளைஞன். அவளுக்கு திருமணம் ஆனதும் சோகமான கவிதை என்பது மட்டுமே மாற்றம். அவள் எப்போதும் அணியும் அதே சுகந்த மணம் வீசும் பூக்களிட்ட துப்பட்டாவில் குழந்தைக்கு தூளியாட்டுக்கிறாள்.  டைரக்ட் செய்தவங்க வரவில்லை என்பதால் அதைப்பற்றி எதும் கேள்வி வரவில்லை போலும்  நானும் ஒரு தொலைபேசிக்காக வெளியே சென்றிருந்தேன்.

படத்தைப்பற்றி அழைப்பிதழ் குறிப்பு- A fable about life in a chawl where superstitions, relationships, and crises create a unified communtiy


அடுத்த Haze |kanika gupta- Experimental 6 நிமிடங்கள்
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஒரே மழை  காரிலோ ரயிலிலோ அல்லது எதாவது ஜன்னலிருந்தோ முன் கண்ணாடியிலிருந்தோ  பக்கம் பார்க்கும் கண்ணாடியிலிருந்தோ மழையைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிகப்பு விளக்கில் வெகு நேரம் காத்திருக்கும் வண்டி.  ஒரு ஸ்க்ராப் பேப்பர் ஓவியம். அதும் சிகப்பு கலர்.  நடுவில் அடிக்கடி ஒரு உடைந்த கண்ணாடிக்கு பின் இருக்கும் ஒரு ஓவியம் . பிறகு நகரும் ரயிலிலிருந்து ஒரு தண்டவாளத்தின்  நகர்வையும் பின் அது கிளைத்து பரந்து பிரிகின்ற இவற்றைக் காட்சி படுத்தி முடிந்துவிட்டது.

கேள்விபதில் நேரத்தில் அதை எடுத்த சிறுபெண் அது தன் முதல் முயற்சி என்றும் சில இடங்களை வெறும் மொபைல் கேமிராவில் எடுத்தேன் என்றும் உங்களால் இதை எப்படி விளங்கிக்கொள்ள முடியுமோ அப்படி புரிந்துகொள்ளுங்கள். என்னைப்பொறுத்தவரை இது என்வாழ்க்கையின் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது என்றாள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் தங்கள் தங்கள் எண்ணத்தை வெளியே வைத்த பின் அந்த ஓவியம் தனக்கு பிரியமான ஒன்று என்றும் அது உடைந்தது மற்றும் சிகப்பு குழப்பத்தையும் ,கண்ணாடியின் வழி காட்சி மறைக்கும் மழைதாரை  எதிலும் தெளிவின்மையையும், நகரும் தண்டவாளம் வாழ்வின் எந்த ஒரு ப்ரச்சனையாலும் நின்றுவிடாத ஓட்டத்தையும் குறிப்பதாக ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியத்தின் விளக்கம் போல பேசப்பட்டது எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. முதலில் இது என்ன படம் என்று சிரித்த சில முகங்களும் கூட தலையசைத்துக்கொண்டன.  நிட் ல படிச்சிட்டிருந்த பொண்ணுக்கு எதோ தோன்றி இப்படி படமெடுத்து அதையும் விளக்கி சொன்னாளே அது திறமை. ஒரு பெண் இதை உணர்ந்திருக்கிறேன் எனவே சரியாக விளங்கிக்கொள்ளமுடிகிறது என்று சொன்னபோது கனிகா நீங்கள் என்னைப்போலவே உணர்ந்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருந்துகிறேன் என்று சொன்னது அழகா இருந்தது.
படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு -  A journey from trying to find meaning in everything to a realm beyond meaning.

Bandish| Adwaita Das|Experimental -7 நிமிடங்கள்

அத்வைதா ஒரு கவிதாயினியாம். இப்போ தேடியபோது தெரிந்துகொண்டேன். பந்திஷ் என்பது ஒரு பாடலின் ஒரு ராகத்தின் ஒரு பகுதி மீண்டும் மீண்டும் சிறு வேறுபாடுகளுடன் இசைக்கப்படுவது . ஒரு பெண் தன்னுடைய கேமிராக்கண்களால் தன்னையும் தன் நாளையும் பார்த்துக்கொள்ளும் ஒரு படம். நடப்பது குளிப்பது காபி  , என காலையின் நிகழ்வுகளோடு கூட அவளுடைய உடலையும் அழகையும் உணர்வுகளையும் என எல்லாவற்றையும் வேறொரு கண்களால் பார்ப்பது போல தன் கேமிராவால் தானே படமெடுத்து இருக்கிறார். படம் முடிந்ததும் லீனா அதன் ஒலியமைப்பு சிறப்பாக இருந்ததாக் குறிப்பிட்டார். அத்வைதா அதை தனியாகப் பின்னால் தான் சேர்த்தோம் என்று கூறினார். அவர் நிறுத்தி நிதானமாக பேசுவதே கவிதை வாசிப்பது போல இருந்தது. இன்றைய தினத்தில் செல்ஃபி படமென்பதும் தொடர்ந்து தங்கள் உறவு நட்பு என அனைவருக்கும் படங்களால் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதும் ஆச்சரியமில்லை. அது நம் கையில் இருக்கும் ஒரு தூரிகையைப் போல பேனாவைப்போல அந்நேரத்தை அப்படியே அடுத்தவருக்கு கடத்துகிறது, அதனால் என்கையில் கிடைத்த மொபைலில் இது போன்ற ஒரு முயற்சியை செய்தேன் என்றார் அத்வைதா. முழுக்கமுழுக்க மொபைலில் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட திரைப்படம்.

படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு - A young woman observes herself through the camera seeking a deeper truth.

For you and me |Tanushree Das - 11 நிமிடங்கள்
இந்த படம் முழுவதும் காட்சியில் வருகிற இடங்களிலிருந்து எல்லாம் வேறெங்கோ இருக்கும் இன்னோருவருக்கு செய்தி தட்டச்சப்பட்டுக்கொண்டே இருக்கிறது. திரையின் மேல் ஒரு கர்சர் ஒளிர்ந்து வார்த்தைகள் தட்டச்சும் ஒலியுடன் வந்து விழுகிறது. "நினைவிலிருத்தி  என்னில் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டும் தான் இந்த தூரம் பிரித்திருக்கிறது .  என்னால் எல்லாவற்றையும் முழுமையாக வார்த்தைகளால் இசையால் சொல்லிவிடமுடியாது ஆனால் இவ்வார்த்தைகள் முயற்சிக்கின்றன. இவ்வார்த்தைகளே உனக்கான நான் .”

படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு - A flim of yearning and the struggle to sustain relationships in a society of technological proximity  and physical distances
Show less

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பகிர்வு அக்கா...
வாழ்த்துக்கள்.