December 17, 2006

காதலுக்கு பலியான தோழிகள்

கல்லூரியில் இதுதான் என் வட்டம் என்று இல்லாமல் எல்லாரையும் என்னுயிர் தோழியராய் பார்த்தவள் நான். யாரிடமும் உன் வட்டத்தில் எத்தனை பேர் என்றால் எல்லாருடைய வட்டத்திலும் என் பெயரிருக்கும். நாங்கள் கல்லூரி முடித்ததும் வருடத்திற்கு ஒருமுறை எல்லாரும் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் சில தோழிகள் இன்று நம்முடன் இல்லை என்பது மீண்டும் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

பருவத்தில் காதல் வரும். ஆனால் அது வாழ்க்கையை புரட்டி போடும் என்று சிலருக்கு தெரியாது. அவள் அதிர்ந்து பேசி யாரும் பார்த்தது இல்லை. கல்லூரியின் கடைசி நாள். யாரிடமும் சொல்லாமல் அவள் கிளம்பிய போது ஏதோ பிரியும் சங்கடம் என்று நினைத்தோம். ஆனால் அவள் அன்றே தன் காதலனை திருமணம் முடிக்க எண்ணி இருந்திருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. காதலுக்கு துணை போகும் எவரும் கல்யாணத்துக்கு தைரியம் தரமாட்டார்கள் என்று எண்ணி இருப்பாள். உண்மை தான் ..யாரும் துணை போயிருக்கமாட்டோம். சம்மதத்திற்கு காத்திருக்க சொல்லி இருப்போம், என்று அவளறிவாள்.


கல்யாணத்திற்கு பின் காதல், முன்பிருப்பது போல் நல்லவற்றை மட்டும் காட்டுவதில்லை. குடிபழக்கம் உடையவனாக இருந்திருக்கிறான். தன்னையே கதி என்று வந்தவள் சொல்வதை ஏன் கேட்க போகிறான் அவன். இவளும் தான் தற்கொலை செய்து கொள்வதாய் பலமுறை மிரட்டி இருக்கிறாள்.. பலனேதும் இல்லாத போது மனம் உடைந்து ஒரு நாள் தன் மீதே எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவள் எரிய, காப்பற்ற முயற்சித்த அவன் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டான்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் காத்திருந்து தன் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமோ அப்போதெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்தாள்.

தானே முடிவெடுத்து செய்து கொண்டோமே யாரிடம் சொல்லி தேற்றிக்கொள்வது என்று தன்னையே நொந்து கொண்டு போய்விட்டாள்.

காதலில் வெற்றி, கல்யாணத்தில் முடிந்தது.ஆனால் வாழ்க்கையில் தோல்வி.
யாராவது ஒரு பக்கத்து மனிதர்கள் துணையாவது இருந்தால் அவளுக்கு இப்படி நேர்ந்திருக்குமா?

காதலென்னும் வெறும் வார்த்தையினால் வாழ்க்கையிழந்தவரும் இருக்கிறார்கள். நட்புக்கும் காதலுக்கும் வேற்றுமை அறியாத பெற்றோரின் கேள்விக்கணைக்கு வெட்கப்பட்டு
வாழ்வதையே விரும்பாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் இன்னும் இருவர்..


பள்ளியிலோ கல்லூரியிலோ ஆண்களுடன் படிக்க விடுவதாலேயே நட்புடன் பழகுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்க முடிவதில்லை. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க பயந்தோ, இனி எப்படி இவர்கள் முகத்தில் விழிப்பது என்று வெட்கப்பட்டோ தன்னையே மாய்த்துக்கொண்டார்கள். மென்மையான குணம்கொண்ட அவர்கள் எப்படி இப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்தார்கள் என்று இன்றும் எனக்கு புரியவில்லை.

காதலை தவறு என்றும், அது அவர்கள் பெற்றோருக்கு செய்த துரோகமென்றும் சமூகம் நினைக்கும் வரை இவர்களைப் போல் இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்கவேண்டும் நாம்?

4 comments:

இரா.ஜெகன் மோகன் said...

//காதலை தவறு என்றும், அது அவர்கள் பெற்றோருக்கு செய்த துரோகமென்றும் சமூகம் நினைக்கும் வரை இவர்களைப் போல் இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்கவேண்டும் நாம்?
//

இந்நிலை மாற இன்னும் ஓரிரண்டு தலைமுறைகள் கடக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்!

சிறில் அலெக்ஸ் said...

நிதர்சனத்தை அசைபோட்டிருக்கிறீர்கள்.

நல்ல பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரா.ஜெகன்மோகன்,சிரில் அலெக்ஸ்
இருவர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Divya said...

\"கல்யாணத்திற்கு பின் காதல், முன்பிருப்பது போல் நல்லவற்றை மட்டும் காட்டுவதில்லை\"

யதார்த்தமான உண்மை, நல்ல பதிவு!