December 14, 2007

பொற்கோயில் அமிர்தசரஸ் ஸ்பெஷல்-5

அமிர்தசரஸ் சென்ற முக்கிய காரணம் பொற்கோயில் பார்ப்பது தான். சீக்கியர்களின் முக்கியமான புனிதத்தலம் . உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து போக நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு "குரு ராம் தாஸ்" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம். அந்த குளத்தின் நடுவில் தான் இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோயில் இருக்கிறது.
இக்கோயிலில் நுழையும் முன் ஆண்களும் பெண்களும் தலையை துணியால் மூடவேண்டும் என்பது அவர்கள் மத வழக்கம் என்பதால் பெண்கள் சேலையோ துப்பட்டாவோ கொண்டு முக்காடிட்டு கொள்வார்கள். ஆண்கள் அங்கே வாசலில் வைக்க்ப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு இருக்கும் பல வண்ணத் துணிகளால் தலையில் குல்லா போல கட்டிக்கொள்வார்கள். வாசல் பகுதியில் காலை சுத்தப்படுத்திக்கொள்ள தண்ணீர்
ஓடிக்கொண்டே இருக்கும் படி குழாய்கள் அமைத்திருக்கிறார்கள்..


உள்ளே புனித தீர்த்தகுளத்தில் குளிக்க வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றது.. குறைந்த வாடகையில்தங்கும் அறைகள் இருக்கின்றன.

இக்கோயிலை காலையில் ஒரு முறை யும் இரவில் ஒரு முறையும் பார்த்தால் தான் நிறைவாகத் தோன்றுகிறது எனக்கு.. காலையில் ஒரு முறை நின்று நிதானித்து கோயிலின் உள்ளே சென்று நடுநாயகமான பொற்கோயிலின் ஹர்மன்ந்திர் எனப்படும் இடத்தில் புனித புத்தகமான க்ரந்தசாஹிப் வாசிக்கப்படுவதை பார்த்துவிட்டு வரலாம். பின்னர் அங்கேயே தொடர்ந்து நடத்தப்படும் லங்கர் கானா எனும் இலவச உணவு அளிக்கும் அறைக்கு செல்லலாம்.


தட்டு , தண்ணீர் குடிக்க ஒரு கிண்ணம் தால் எடுக்க ஒரு ஸ்பூன் கையில் தந்து விடுவார்கள். உள்ளே தொடர்ந்து உணவு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.. இரு கையாலும் ஏந்தி தான் அவர்கள் தரும் ரொட்டியை வாங்கிக்கொள்ளவேண்டும் . தால் மிக அருமையாக இருக்கும். உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தால் தட்டுகளை கிண்ணங்களை கழுவ பெரிய ஹால் இருக்கும்.அங்கே இரும்பாலான பெரிய பெரிய சிங்க்குகள் ஒன்றில் சோப்பு நுரை இன்னொன்றில் தண்ணீர் அலச ..பின்னர் மீண்டும் மீண்டும் அலச வரிசையாக தண்ணீர் நிரப்பிய சிங்க்குகள். நாம் சாப்பிட்ட தட்டுகளை வண்டியில் போட்டு அவர்கள் அங்கே கொண்டு செல்வார்கள்.
விருப்பமிருப்பவர்கள் வேண்டுதலைப்போல அங்கே சென்று அந்த வேலையில் ஈடுபடுவார்கள். போன முறை நான் நினைத்துக்கொண்டேன் முடியவில்லை..இம்முறை போனபோது நானும் என் மகளும் அங்கே சென்று சிறிது நேரம் தட்டு கிண்ணங்களை அலசி எடுக்கும் பணியில் சேர்ந்து கொண்டோம். சமைக்கும் இடத்திலும் உதவி செய்யலாம் என அறிந்தேன்.


பின்னர் இரவில் ஒரு முறை கோயிலின் உள்ளே சென்று மேல் மாடிவரை சென்று மீண்டும் ஒரு முறை க்ரந்தம் வாசிப்பதை தரிசிக்கலாம். ஆங்காங்கே சிறு சிறு புத்தகங்களோடு ஜபித்தபடி இருப்ப்வர்களைக்காணலாம்.

குளத்தில் தண்ணீரை தெளித்துகொள்ள முற்படும் போது கீழே சிந்திவிடும் தன்ணீரை ஒரு துணிகொண்டு துடைத்தப்படி இருப்பார்கள். எல்லாம் வருகின்ற பக்தர்கள் தான்.. கோயில்பணி செய்து கடவுள் அருள் பெற நினைக்கிறார்கள்.

இரவில் குளத்தில் தகதகவென பிரதிபலிக்கும் பொற்கோயிலை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது மனதில் அப்படி ஒரு அமைதி வந்து சேருகிறது.


கிரந்த புக்கத்தை இரவில் வேறொரு அறை யில் கொண்டு சென்று வைத்துவிடுவார்கள் மீண்டும் காலையில் அது ஹர்மந்திருக்கு வரும். அந்த நிகழ்ச்சி நம் ஊரில் சாமியை பல்லாக்கில் கொண்டுசெல்வது போலவே இருக்கும்.. 9.45 இரவு வாத்திய இசையோடு பல்லாக்கில் புத்தகத்தை மூடி கொண்டு செல்வார்கள். பிறகு கதவு சாத்தப்படும்.

இத்தொடரை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

13 comments:

கண்மணி said...

இதென்ன பொற்கோவில் விசிட் பழசுதானே ஏன் இவ்ளோ லேட் பதிவு.
நானும் லீவுக்கு வேலூர் ஸ்ரீபுரம் [அரியூர்]போகிறேனாக்கும்.
தமிழ்நாட்டு பொற்கோவில் பதிவு போடுவேனே

முத்துலெட்சுமி said...

என்ன பண்றது கண்மணி அத்தனைக்கு பிசியா இருந்தேனாக்கும்... தள்ளி தள்ளிப்போட்டு முக்கியமான இடத்தை அமிர்தசரஸ் ஸ்பெஷலில் கடைசியா எழுத வேண்டியதா ஆகிடுச்சு.
தமிழ்நாட்டு பொற்கோயில் தானே போடுங்க போடுங்க ... :))நல்ல தரிசனம் பண்ணிட்டுவாங்க.

அருட்பெருங்கோ said...

பொற்கோயில் இரவுப் படம் அழகு.
இலவசமா சுற்றுலா கூட்டிட்டுப் போனதுக்கு நன்றிங்க்கா :)

ஆயில்யன் said...

போட்டோக்களும் பதிவும் நல்லாயிருக்குக்கா :)

துளசி கோபால் said...

இந்தத் தொடர் ரொம்பவே அருமையா இருந்துச்சு. ரசித்திப் படித்துப் பின் படித்தும் ரசித்தேன்.

சீக்கியர்கள் நம்ம தமிழ்க்காரர்களைப் போலத்தான். எங்கே போனாலும் ச்
'சாமி'யைக்கூடவே கொண்டு போயிருவாங்க.

நம்மூர்லே மாசம் ஒரு முறை( மூணாவது சனிக்கிழமை) 'பாட்' படிப்பாங்க.

'குரு க்ரந்த ஸாஹிப்' படிச்சு, சின்னப்பஜனைகள் பாடி அப்புறம்
லங்கர் உண்டு.

வர்றவங்க , வாசலில் விடும் செருப்பையும் அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு சேவை.

மக்களுக்குச் செய்யும் சேவை மகேசன் சேவை.

பாராட்டுக்கள் உங்களுக்கு.

காட்டாறு said...

அதானே.. கண்மணியக்கா சொன்ன மாதிரி இவ்ளோ லேட்டு.. பரவாயில்ல.. நாங்களும் டூர் அடிச்சிட்டோமில்ல.

இரவு புகைப்படம், டச்சப் இல்லாமலே அழகா இருக்குது. நீங்க எடுத்தீங்களா?

கோபிநாத் said...

நன்றாக சுற்றி காட்டி இருக்கிங்க...படங்கள் அழகாக இருக்கு..:))

முத்துலெட்சுமி said...

அருட்பெருங்கோ, ஆயில்யன்,கோபிநாத், காட்டாறு எல்லாருக்கும் நன்றி..
அந்த இரவுப்படம் நான் எடுத்தது இல்லை முதல் படம் தான் நான் எடுத்தது... நான் இரவில் எடுத்த போட்டோவில் இத்தனை தகதகப்பு இல்லை எழுத்துல போட்டுட்டு காண்பிக்கலன்னா எப்படின்னு நெட்ல சுட்டு போட்டுட்டேன்.. அதே மாத்ரி நடுவில் சீக் நெட் போட்டோஒன்னு இருக்கு பாருங்க உள்ள போய் போட்டோ எடுக்க்லாமோன்னு நான் எடுக்கலை அதையும் நெட்ல சுட்டு போட்டேன்.. வீடியோ நானே எடுத்தது போட்டேன் ஆனா ஒழுங்க லோட் ஆகலை.. பாக்காலாம் பின்னாடி சரி செய்யறேன்..

முத்துலெட்சுமி said...

உண்மை துளசி ரொம்ப பக்தி ஆச்சரியாமா இருந்தது சின்ன வயசுக்காரங்க தான் அதிகமா வரிசையில் நிக்கும் போது கூட படித்துக்கொண்டே இருந்தாங்க சாமி புத்தகத்தை..
இன்னோரு அதிசயம் முதல் முறை போனபோது கலாம் வந்திருந்தார் ஒரு வித்தியாசமும் இல்லாமல் சாதாரணமக்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் ... செக்கிங் பெரிசா இருக்கல.. ஆனா அதே ஊருல துர்கையானா கோயிலில் போட்டு படுத்திட்டாங்க அது கொண்டுபோகதீங்க இது கொண்டு போகாதீங்கன்னு ....

நாகை சிவா said...

போன இடத்துக்கு எல்லாம் எங்களையும் அழைத்து போயிட்டீங்க... :)

அடுத்த தடவையாச்சும் டில்லி வந்தால் சிறிது காலம் தங்கி அந்த பக்கம் ஒரு ரவுண்ட் அடிக்க முயற்சி பண்ணுறேன்.

:)

அரசு said...

பயனுள்ள அதே சமயம் அங்கே போகிறவர்களுக்கு உபயோகமான பதிவு.

நன்றி.

அரசு

Mangai said...

எங்கம்மா போயிட்டு வந்தப்ப கூட இவ்வளவு விவரமா எனக்குச் சொல்லலை.
எனக்கு அந்த பக்கமெல்லாம் போகும் சந்தர்ப்பம் எப்போ வருமோ?
நன்றி பகிர்ந்து கொண்டதற்கு

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2346.html