ஞாயிறு அன்று தில்லி தமிழ் சங்கத்தில் பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் தமிழ்சங்கம் இணைந்து நடத்திய தமிழிசை நிகழ்ச்சி இருந்தது. சரி பத்து மணியிலிருந்து எட்டு மணிவரை இருக்கிறது . மகளை வகுப்பில் விட்டுவிட்டு பதினோறு மணியிலிருந்து கொஞ்சம் கேட்டுவரலாம் என்று சென்று இருந்தோம். பதினோரு மணிக்கு மன்றத்தலைவர் ராமதாஸ் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நாதஸ்வரம் மேளம் இசையுடன் அரங்கம் நுழைந்தார். தலைவர்களை எல்லாம் வாழ்த்தி வரவேற்று கலைஞர்களை மேடை ஏற்ற 12 மணியாகிவிட்டது.
இசை கேட்கத்தானே வந்தோம் கொஞ்சமாவது கேட்காமலே போவதா என்று மகளை திருப்பியும் வகுப்பு முடித்து அழைத்துக் கொண்டோம்.
வந்திருந்த கூட்டத்தில் இசையை கேட்க என்ற குறிக்கோளுடன் வந்தவர்கள் குறைவே.. பசுமைத்தாயகம் சௌம்யா பேசுகையில் இது போன்ற இசைக்கு தில்லியில் கூட்டம் கூடுவது குறைவே ஆனால் அரங்கம் நிறைந்திருக்கிறதே என்றார்.. கட்சிக்கரையை ராமதாஸ் அவர்கள் கண்டிப்பாக தடுத்திருந்தாராம்.. கட்சிக்காரர்கள் நடத்துவதான உணர்வு இல்லைதான்.
முதலில் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் தேவார இசை.. பாடல்களின் பண் களையும் அதன் ராகப்பெயர்களையும் பாடலுக்கான ஒரு சிறு அறிமுகம் கொடுத்து சிறப்பாக பாடினார்.. ஆனால் மக்கள் இங்கும் அங்குமாக அலைந்தபடி இருந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று அவர் உருகிப்பாடிக்கொண்டிருந்தார். பின்னால் ஒருவர் மணி எத்தனைங்க என்றார் அருகில் இருந்தவரிடம் , 3 மணிக்கு சாப்பாடு என்றார் பதிலுரைத்தவர். இன்னொரு கும்பல் "சனியனே நீ எல்லாம் ஏண்டி வந்தே" என்று சண்டையிட்டு கொண்டிருந்தனர். கீழே உணவு வழங்கப்பட ஆரம்பித்துவிட்டதா என்று அறிய ஆவலாக இருந்தனர் போலும். எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாக இருந்தது. அவர்கள் கவலை அவர்களுக்கு.
பின்னால் ஹைத்ராபாத் சிவா காவடிசிந்து பாடினார். துள்ளலான அந்த தாளகதிப்பாடல்கள் மக்களை பிறகு கட்டிப்போட்டுவிட்டது போலும் அரங்கம் அமைதியானது. "வள்ளிக்கலாபமயில் " ரசித்துப்பாடினார். இப்போதெல்லாம் இயல்பான விசயங்கள் பலவற்றை நாம் பாராட்டும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துவிட்டு தலைமை தாங்க வந்த ராமதாஸ் அவர்கள் நகராமல் உட்கார்ந்து ரசித்து கேட்டார்.
(நான் இருந்து கேட்டது 3 மணிவரை)
அதற்கு பிறகு கோடிலிங்கம் வைத்தியலிங்கம் இவர்கள் சித்தர்பாடல்களும் வரிப்பாடல்களும் என்று ஆரம்பித்தார் . கொடுக்கபட்ட நேரத்தில், என்னால், அவைகள் என்ன என்று கோடி காட்டமட்டும் தான் முடியும்.. இவைகள் ஒவ்வொன்றும் விரிவாக செய்யவேண்டிய விசயங்கள் என்றார்.. வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் பேராசிரியர் என்பதால்.. வரிப்பாடல்கள் என்றால் என்ன சிறிது தமிழ் வகுப்பும் நடத்தினார். என்ன என்று புரிந்தால் தாங்க நல்லா ரசிக்கமுடியும் என்றார்.
சிலப்பதிகாரத்திலிருந்து வரிப்பாடல்கள் பாடினார்.
"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!திங்களோ காணீர்! திமில்வாழ்நர் சீறூர்க்கேஅம்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே."
\\"கயல் எழுதி வில்லெழுதி கார் எழுதி " என்று ஆரம்பித்து ஒன்னுமில்லைங்க.. குப்பத்து காதல், ஒருத்தன் பலநாளா ஒரு பெண்ணை விரும்பரானாம் சொல்ல பயமாம்.. கண் மை இட்டு புருவம் எழுதி தலைசீவி ஒரு பெண் குனிந்து மீன் காயவைக்கிறாளாம் ..அவள் நிலவோன்னு அவனுக்கு சந்தேகம். நிலவு ஏன் மீன் காயவைக்க வரனும்னு யோசிச்சானாம் காதலன்.. வேற ஒன்னும் இல்ல வானத்தில் ராகு கேதுன்னு பாம்பு இருக்கு அதற்கு பயந்து தான் இங்க வந்துருக்கும்ன்னு யோசிச்சானாம்.. காதலர்களுக்குத்தான் இப்படி தோனும்ங்க..// விளக்கம் இவ்வாறு சொல்லிவிட்டு பாடலைப்பாடினார்கள். பிறகென்ன மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
''தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால். ''
மான் தேருன்னா குதிரைப்பூட்டிய ரதம் தான் ... வரேன்னு சொல்லிப்போன தலைவர் வரலையே தோழி அவர் மறந்தால் பரவாயில்லை அந்த் குதிரையுமா மறக்கும் என்று சொன்னாளாம்.
சித்தர் பாடல்களில் இரண்டு பாடினார் .மூன்று மணியாகிவிட்டது . உணவு இடைவேளை . வரிசையில்நின்று தயிர்சாதம் சாம்பார்சாதம். கொஞ்சம் வத்தல் . மூன்றரைக்கு அடுத்த அமர்வு . ஆனால் மகளுக்கு பரிட்சை அடுத்த நாள் கொஞ்சமாவது கடைசி நேர தயாரிப்புகள் வேண்டும் . பின்பொரு சமயம் இவை எல்லாம் தனித்தனியாக நடைபெற்று அப்போது நாமும் ரசிக்க நேரம் அமையவேண்டும் என்று ஆசையோடு கிளம்பியாயிற்று. முழுதும் ரசிக்க முடியாத வருத்தம் மனதின் ஓரத்தில்.
10 comments:
மாறுபட்ட நிகழ்ச்சிதான்..ராகு, கேது, மீன் விளக்கங்கள் சுவாரசியமாக இருந்தது.
ஒரே நாளில் இரண்டு தமிழிசைப் பதிவுகள் படிச்சாச்சு... :)
நல்ல நிகழ்ச்சிதான்.ஒரேநாளில் முழுநேர இசை விருந்தாக இல்லாமல் இரண்டு/மூன்று மணி கச்சேரிகளாக நான்கு நாட்கள் இசைவிழா நடத்தியிருக்கலாம்.
ஆமா பாசமலர்..எல்லாரும் ரசிக்கும்படி இருந்தது..
--------------------
டிபிசிடி ... இது நேத்து நடந்ததுங்க....
-------------
உண்மைதான் மணியன்.. தேர்வு நேரமாகவேறு வந்துவிட்டது.. இல்லாவிட்டால் காலையிலிருந்து சாயங்காலம் கூட பிரச்சனை இல்லை.
\\"கயலெழுதி வில்லெழுதிக் \\
\\மான் தேருன்னா குதிரைப்பூட்டிய ரதம் தான் ... வரேன்னு சொல்லிப்போன தலைவர் வரலையே தோழி அவர் மறந்தால் பரவாயில்லை அந்த் குதிரையுமா மறக்கும் என்று சொன்னாளாம்.\\
அழகான விளக்கங்கள்...:)
சூப்பர் ;)
பேப்பர்ல பார்த்தேன்... பரவாயில்லை ராமதாஸ் அவ்வளோ நேரம் இருந்தாரா
கச்சேரி மட்டும் இது வரைக்கும் எனக்கு புரியாததாகவே இருக்குதுங்க. உங்களுடைய பதிவில் விஷயங்கள் நெறையா இருக்குதுங்க. குறிப்பா...
//வந்திருந்த கூட்டத்தில் இசையை கேட்க என்ற குறிக்கோளுடன் வந்தவர்கள் குறைவே.. //
//கட்சிக்காரர்கள் நடத்துவதான உணர்வு இல்லைதான்.
//
//கீழே உணவு வழங்கப்பட ஆரம்பித்துவிட்டதா என்று அறிய ஆவலாக இருந்தனர் போலும்//
//பிறகென்ன மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
//
தெளிவா எழுதுறீங்க மேடம்.
'தில்லிச்சலோ'ன்னு இருக்கேப்பா. இப்படியெல்லாம் செய்யுதா தமிழ்ச்சங்கம்?
நல்லா இருக்கணும்.
ரசிச்சுப் படிச்சேன்.
ச்சின்னப்புகையைப் பொருட்படுத்தாதீங்க:-))))
kayalvizhi,
Tamil isai sanga katturai nalla irunthuthu.
sindhu bhairavi padaththula suhaasinikku kachcheriyila nernthathu mathiri irunthuthu ungal situation.
C.N.Raj
/ என்ன என்று புரிந்தால் தாங்க நல்லா ரசிக்கமுடியும் என்றார்./
உண்மைதான???
கயலெழுதி வில்லெழுதி விளக்கம் நல்லாருந்தது. கொஞ்சம் நேரம்தான்னாலும் நல்ல இசைய ரசிச்சிருக்கீங்க
Post a Comment